Saturday, March 28, 2009

சுமதிரூபனின் யாதுமாகி நின்றாள்









சு.குணேஸ்வரன்..................................

நவீன தமிழ் இலக்கியத்தின் இன்னுமொரு வீச்சுமிக்க எழுத்தாக பெண்ணிய எழுத்துக்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. பெண் தனிமனித வாழ்விலும் குடும்ப மற்றும் சமூக வாழ்விலும் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு ஆளாதலும் அந்த ஒடுக்குமுறைகளில் இருந்து விடுபட்டு தனித்தன்மையுடன் வாழத் தலைப்படும் சிந்தனையையும் அதிகமான பெண் படைப்புக்கள் எடுத்துக் காட்டுகின்றன.

புலம்பெயர்ந்து வாழும் பெண் படைப்பாளிகளில் ஒருவராக அறியப்படும் சுமதிரூபன்> 1983இல் புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வாழ்ந்து வருகின்றார். இவரின் யாதுமாகி நின்றாள் என்ற சிறுகதைத் தொகுப்பு 13 கதைகளைத் தாங்கி அவுஸ்திரேலிய மித்ர வெளியீடாக வந்துள்ளது.

இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் பெண்களின் ஒவ்வொரு பிரச்சினையை முன்வைக்கின்றது. சிறுவயதில் இருந்து பெண் என்ற காரணத்தினால் ஆணாதிக்க சமூகத்தின் ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பல பெண்களை கதைகளில் இனங்காண முடிகின்றது.

1. பயண இடைவெளியின்போது உடலும் உளமும் சிதைக்கப்பட்ட பெண்.

2. தமிழ்ச் சமூக மரபிலே தனது தனித்தன்மைகளை இழந்த பெண்.

3. தனிமனித, குடும்ப மற்றும் சமூக வாழ்வில் ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பெண்.

4. சமூகத் தடைகளை உடைத்து வெளியேறும் பெண்.

ஆகியோர் சுமதிரூபனின் கதைகளிலே தம் உணர்வுகளைக் கொட்டிக் கதை சொல்கின்றனர். மேலைத்தேய கலாசார வாழ்வின் ஒருபாலியல் குறித்த கதைகளும் புதிய கருத்துக்களை முன்வைக்கின்றன.

தமிழ் புலம்பெயர் படைப்புலகில் இதுவரை பேசப்படாத பிரச்சனை ஒன்று இந்தத் தொகுப்பின் ஊடாகத்தான் முதல் முதல் முன்வைக்கப்படுகிறது. இது இலக்கிய உலகில் இதுவரை அதிகம் பேசப்படாத ஒரு பிரச்சனை. அதாவது ‘பயண இடைவெளியின்போது பெண் உடல் சிதைக்கப்படல்’ இதுவரை நான் அறிந்தவரையில் வேறு தொகுப்பில் இப்பிரச்சனை எழுதப்பட்டதாகத் தொpயவில்லை. அதனை சுமதிரூபன் துணிந்து முன்வைக்கின்றார்.

பெண் உடல் பயண இடைவெளிகளில் சிதைக்கப்படல் எழுத்தி;ல வந்தமை மிகக்குறைவு. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பாரிஸ் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பில் கி. பி. அரவிந்தனின் கூற்று ஒன்று இதனை மேலும் வலுவாக்குவதனை எடுத்துக்காட்டலாம் என்று கருதுகிறேன்.

“ தாயகம் துறந்து தொடங்கப்படும் பயணமானது தங்கள்; இலக்கான ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய வலயங்களுக்குள் நுழையும் வரையான காலது}ர இடைவெளியானது துன்பியல் மிகுந்த பெருங் கதையாகும். இந்தப் பயணகால இடைவெளியில்தான் நமது பெறுமானங்கள், ஏன் பவுத்திரங்கள் எல்லாமே உடைந்து நொறுங்கிப் போகின்றன. இப்பெருங்கதை இதுவரை சொல்லப்படவில்லை.” (பாரிஸ் கதைகள் முன்னுரையில் )

ஆனால்> சுமதிரூபனின் யாதுமாகி நின்றாள் என்ற தலைப்புக்கதை இதனை சொல்லத் தொடங்கியுள்ளது. பயண இடைவெளியில் ஏஜென்சியின் பயமுறுத்தலுக்கு ஆளாகிச் சிதைபடும் பெண் உடல் குறித்த கதை தொகுப்பில் வலிமையான கருத்தினை முன்வைக்கின்றது.

“ஓ… உன்னைப் பற்றித்தான் எனக்கு நல்லாத் தொயுமே. ஷீப்பா ஆக்களைக் கூட்டிக் கொண்டு வாறன். எங்கட ஆக்களுக்கு ஹெல்ப் பண்ணவேணும் எண்டு சொல்லிப் போட்டு தொpயாத இடங்களுக்கு பொம்பிளைகளைக் கூட்டிக் கொண்டு போய் உன்ரை ஆசைக்கு கட்டுப்பட வேணும் இல்லாட்டி அங்கேயே விட்டிட்டுப் போயிடுவன் எண்டு பொம்பிளையளைப் பலி போடுற ஆசாமி நீ. எத்தினை எத்தினை பொம்பிளையள் பயத்தால உன்ர ஆசைக்கு பலியாச்சினம். கலியாணம் செய்தவரைக்கூட நீ விட்டு வைக்கேலை. உன்னால மனம் பாதிச்சு தற்கொலை செய்தாக்களைக் கூட எனக்குத் தொpயும். உன்ர விளையாட்டு எல்லாரிட்டையும் சாpவராது.

இந்த ஆர்த்தியைப் போலவும் சில ஆக்கள் இருக்கத்தான் செய்யினம். அப்ப உன்னட்டை அம்பிட்டுப் பயத்திலை பலியாகிப் போனது உண்மைதான் ஆனால் நீ இப்ப பாக்கிற ஆர்த்தி வேற. நான் எதுக்கும் துணிஞ்சிட்டன். உன்ர குடும்பத்தைப் பழிவாங்க வேணும் எண்டுதான் உன்ர தம்பியைக் கலைச்சுக் கலைச்சு காதலிச்சன். பிறகுதான் தொpஞ்சுது உன்னட்ட இருக்கிற எந்தப் கெட்ட குணமும் ராகுலிட்ட இல்லை. எனக்கு அவர்தான் புருஷன்.” (யாதுமாகி நின்றாள்)

திருமணத்தின் பின்னர் பெண்கள் தமது தனித் தன்மைகளை இழந்து விடுவதை உணர்த்தும் ‘அம்மா இது உன் உலகம்’ என்ற கதையும்> குடும்பத்திலும் சமூகத்திலும் ஆணின் வன்முறைக்கும் பாலியல் வக்கிரத்துக்கும் ஆளாகி சமூகத் தளைகளை மீறி வெளியே வரமுடியாத நிலையில் பெண்களி;ன் உணர்வுகள் முடங்கிப் போதலை உணர்;த்தும் அகச்சுவருக்குள் மீண்டும்> வடு> பவர்கட்> ஆகிய கதைகளும் பெண்> உடல் உள ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாதலைச் சித்தாpக்கும் கதைகளாக அமைகி;ன்றன. இதனாலேதான்>

“ வாழ்வு குறித்த கேள்விகளை மட்டுமல்ல பல்வேறு பெண்நிலை நோக்கினுள் விளையும் மோதல்களினதும் பாலியல் உணர்ச்சிகளினதும் சுய கேள்விகளையும் நாம் சுமதிரூபனின் கதைகளில் காணமுடியும்.”

என சுவிஸ் றஞ்சி குறிப்பிடுகிறார்.

துணிச்சலான பெண் இந்த ஒடுக்குமுறைகளுள் இருந்து வெளியே வந்து விடுகிறாள். அவளுக்கு படிப்பும் தொழில் புரிந்து சம்பாதிக்கும் மனோதிடமும் வந்து விடுகின்ற போது குடும்பம் என்ற அமைப்பில் இருந்து கூட வெளியேறிவிடுகின்றாள். இந்நிலையில் பெண்@ சமூகத்தில் பல எதிர்ப்புகளையும் சம்பாதித்துக் கொள்கிறாள். இதனையே ‘ஆதலினால் நாம்’ என்ற கதை உணர்த்துகின்றது.

தனித்தனியே திருமணமான இரண்டு பெண்கள். இருவரும் பிள்ளைகள் உள்ளவர்கள். குடும்பத்தில் கணவன்மாரின் வன்முறையில் இருந்து விடுபட்டு வீட்டை விட்டு வெளியேறி இரு பெண்களும் பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வாழ்கின்றனர். ஒரு பாலியல் உறவு குறித்த கதையாக உள்ள இக்கதை மேலைத்தேய வாழ்முறையின் தாக்கத்தை பிரதிபலிக்கின்றது. இது எமது தமிழ்ச் சமுகத்தைப் பொறுத்தவரையில் சாத்தியமானது அல்ல. ஆனால் புலம்பெயர் வாழ்வுச் சூழல் தவிர்க்கமுடியாத வகையி;ல் இந்நிலையை ஏற்படுத்திவிடுகின்றது.

குறிப்பாக 70 களின் பின்னர் தோற்றம் பெற்ற தீவிரவாதப் பெண்ணியவாதிகள் குடும்ப அமைப்பையும்> சமூக அமைப்பையும் ஆணின் மேலாதிக்கத்தையும் புறக்கணித்து வாழத் தலைப்பட்டவர்கள். பாலியல் உரிமையும்> தன்னின அனுபவமும் குழந்தைகளின் கூட்டுப் பாதுகாப்பும் இவர்களின் செயற்பாடுகளில் சிலவாகும். இந்நிலையில் சுமதிரூபனின் சில பாத்திரங்கள் குடும்ப அமைப்பைப் புறக்கணித்துத் தனித்தன்மையுடன் வாழத் தலைப்படும் தீவிரவாதப் பெண்ணியத்தின் இயல்புகளைக் கொண்டிருக்கிறது.

‘அவன் அப்படித்தான்’ என்ற கதையும் ஒருபாலியல் உறவு குறித்த கதைதான். சத்தியனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்புகின்றனர். ஆனால் அவன் தனது நண்பனுடன் கொண்ட உறவின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றான். மேலைத்தேய கலாசார சூழலில் ஏற்பட்டு வந்துள்ள இந்த மாற்றம் சியாம் செல்வதுரையின் Funny Boy நாவலை தழுவி எழுதப்பட்ட கதையாக அமைகின்றது. தனிமனிதனின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும் என்பதை கதை குறித்து நிற்கின்றது.

சோதனை முயற்சியாக எழுதப்பட்ட கட்டிடக் காட்டுக்குள் என்ற குறியீட்டுக் கதையில் கூறப்படும் கருத்தில் தெளிவு போதாமை தொpகிறது. பெண்ணிலைவாத சிந்தனைகளை முன்வைத்து எழுதப்பட்ட கதைகளிலும் ஏனையவற்றிலும் யதார்த்தம் பேணப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழ்ச் சூழலில் சில கதைகள் பலத்த விமர்சனங்களை முன்வைக்க களம் அமைத்துள்ளன.

இவ்வகையில் புலம்பெயர் வாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை முன்வைத்துள்ள இத்தொகுப்பில் இதுவரை பேசப்படாத பிரச்சனைைகளின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மேலைத்தேய வாழ்வியற் சூழல் இவ்வாறான கருத்துக்களை சமூகத்திற்கு எடுத்துச் சொல்வதற்கு துணிச்சலைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் புலம்பெயர் பெண் படைப்புலகிற்கு வலுச்சேர்க்கும் படைப்பாக ‘யாதுமாகி நின்றாள்’ திகழ்கின்றது எனலாம்.

நன்றி :- தினகரன் வாரமலர்

1 comment:

  1. புலம் பெயர் வாழ்வின் பக்கங்களை
    பெண்களின் பிரச்சனைகளை
    கூறும் நூல் பற்றி
    நல்ல விமர்சனம் தந்திருக்கிறீர்கள்.
    நன்றி

    ReplyDelete