Tuesday, July 5, 2011

எண்பதுகளில் புகலிடப் புனைகதைகள் -பார்த்திபனின் படைப்புக்களை மையமாகக் கொண்ட பார்வை-


சு. குணேஸ்வரன்
அறிமுகம்
பார்த்திபன் 1984 செப்டம்பரில் இலங்கையிலிருந்து ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தவர். புகலிடத்திலிருந்து எழுதிய ஆரம்பகாலப் படைப்பாளிகளில் முதன்மையானவர். இவர் எழுதிய நாவல்களையோ சிறுகதைகளையோ படைப்புக்கள் சார்ந்த கூற்றுக்களையோ ஈழத்தில் மிகச் சாதாரணமாகப் பெற்றுவிடமுடியாத நிலையே தற்போது பார்த்திபனைப் பொறுத்தவரையில் உள்ளது.

இதுவரை பார்த்திபனின் படைப்புக்களுக்கு எழுதப்பட்ட விமர்சனங்களில் 14 சிறுகதைகளை மையமாகக் கொண்டு யமுனா ராஜேந்திரன் ‘கிழக்கும் மேற்கும்’ மலரில் எழுதியதே ஓரளவு விரிவான பதிவாக இருந்தது. மேலைத்தேயப் படைப்பாளிகளில் நைஜீரிய எழுத்தாளர் பென் ஒக்ரி, குர்திஸ் எழுத்தாளரான ஸோரக்லி போன்றோரின் படைப்புக்களின் கருத்துலகமும் பார்த்திபனின் கருத்துலகமும் ஒன்றுதான் என ஒப்பிட்டுக் கூறுமளவுக்கு அவரது சிறுகதைகளின் பேசுபொருள் இருக்கின்ற நிலையில் பார்த்திபனைத் தேடவேண்டும் என்ற சிந்தனை உதித்தது.

இந்த வகையில் இக்கட்டுரையானது அவரது முழுப்படைப்புக்களையும் ஒரு வாசகனுக்கோ ஆய்வாளனுக்கோ தமிழ்ச்சூழலில் அறிமுகம் செய்தவற்கான ஆரம்ப நிலையாகவே அமைந்துள்ளது.

பார்த்திபனின் படைப்புக்கள்

நாவல்/குறுநாவல்

நாவல்/குறுநாவல் என்ற அடிப்படையில் ஐந்து படைப்புக்களைப் பார்த்திபன் எழுதியுள்ளமை அறியப்படுகிறது. அவற்றுள்;

1. வித்தியாசப்படும் வித்தியாசங்கள் (1987, தென்னாசிய நிறுவனம், மேற்கு ஜேர்மனி - 3வது வெளியீடு)
2. பாதி உறவு (1987, தென்னாசிய நிறுவனம், மேற்கு ஜேர்மனி - 4வது வெளியீடு)
3. ஆண்கள் விற்பனைக்கு (1988, தென்னாசிய நிறுவனம், மேற்கு ஜேர்மனி - 5வது வெளியீடு)
4. கனவை மிதித்தவன் (1988-1993 வரை வெளிவந்த தூண்டில் சஞ்சிகையில் 58 தொடர்களுடன் முற்றுப்பெறாத நாவல்)
5. சித்திரா - பெண் (நமது குரல் சஞ்சிகையில் தொடர்கதையாக வந்துள்ளது. ஆதாரம் :- மங்களேஸ்வரி தூண்டில் - இதழ் 30, ஜூன் 1990)

சிறுகதைத் தொகுப்புகள்

1. நிஜங்கள் (1986, தென்னாசிய நிறுவனம், மேற்கு ஜேர்மனி 1வது வெளியீடு)
2. ஜனனம் (தென்னாசிய நிறுவனம், மேற்கு ஜேர்மனி 2வது வெளியீடு)

தேடிப் பெற்ற தகவல்களின்படி பார்த்திபனின் 25 கதைகள் கிடைத்துள்ளன. அவற்றுள் நிஜங்கள், குற்றமில்லாத கொலைகள், ஒரே ஒரு ஊரிலே, உயரம் பறக்கும் பறவைகள் ஆகிய நான்கும் ‘நிஜங்கள்’ தொகுப்பில் வந்துள்ளன. ‘ஜனனம்’ தொகுப்பில் வந்த கதைகள் பற்றி அறியமுடியவில்லை. ஏனையவை கல்லான கணவன், மனைவி இறக்குமதி, விபத்தை மறந்துவிடு, ஒரு காதல் நிராகரிக்கப்படுகிறது, தெரியவராதது, ஒரு அம்மாவும் அரசியலும், அத்திவாரமில்லாத கட்டிடங்கள், ஒரு தொழிலாளியும் ஒரு தொழிலாளியும், அம்பது டொலர் பெண்ணே, வந்தவள் வராமல் வந்தாள், மேற்கின் ஒரு பக்கம், தூள், பனி பெய்யும் காலம், உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், அம்மா பாவம், பசி, ராதா பெரிசான பின், ஒரு நாள், ஒரு பிரஜை ஒரு நாடு, பலமா, தீவுமனிதன் ஆகியனவாகும்.




நாவல்/குறுநாவல்

புலம்பெயர் நாவல்களில் 1980 களின் இறுதிவரை வெளிவந்த படைப்புக்களில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைத்து நாவல்கள் படைக்கும் நிலை இருந்துள்ளது. பார்த்திபன், ஆதவன், ஆகியோர் இவ்வகை நாவல்களைத் தந்துள்ளனர். சீதனப் பிரச்சினை, சாதிப் பிரச்சினை ஆகியவற்றை மையப்படுத்திய படைப்புக்களாகவே அவை அமைந்திருந்தன.

1. வித்தியாசப்படும் வித்தியாசங்கள்

83 இன் பின்னர் புலம்பெயர்ந்த படைப்பாளிகளின் நவீனங்களில் முதலில் வெளிவந்ததாக ‘வித்தியாசப்படும் வித்தியாசங்கள்’ என்ற குறுநாவலைக் கருதமுடியும். இது முழுமையாக சாதியத்தையே மையமாகக் கொண்டது.

கிருபைராசா வைத்தியசாலையில் மலசலகூடம் சுத்தம் செய்யும் தொழிலாளி. அவரது மகன் ரவியும் அதே ஊரில் பாடசாலை அதிபராக இருக்கும் ராமலிங்கத்தின் மகன் சுகுமாரும் இணைபிரியாத நண்பர்கள். இது சுகுமாரின் தாயாருக்கோ சகோத ரிக்கோ அவளின் சிநேகிதிகளுக்கோ பிடிக்கவில்லை. வெளிப்படையாகத் தாய் பேசியும்கூட சுகுமார் அதைப் பொருட்படுத்தியதில்லை.



கிருபைராசா தன் மகன் படிக்கவேண்டும் தன்னைப் போல் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக மேலதிக வேலைகளுக்கும் போகிறான். ஒருநாள் வைத்தியசாலை ஓவசியர் வீட்டில் பெரிய வேலை ஒன்றை முடித்தபின்னர் தனக்கு வீட்டுக்கு வெளியில் வைத்து வழங்கப்படும் சாப்பாட்டை ஓவசியரின் வீட்டுநாய் சாப்பிடும் நிலைக்கு ஒப்பிட்டுப் பார்க்கிறான்.

அப்போது நாட்டில் பிரச்சினை. ஷெல் வீச்சு அகோரமாக நடத்தப்பட்டபோது வைத்தியசாலையில் ஓவசியரும் குண்டடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். வைத்தியசாலையைச் சுத்தம் செய்யும் பணியில் இருந்த கிருபைராசா நிலைமையை உணர்ந்து ஓவசியருக்கு இரத்தம் கொடுத்து அவர் உயிர் பிழைக்க உதவுகிறான்.

மறுபுறம் ரவிக்கு மட்டும் சொல்லிவிட்டு இரவோடு இரவாக சுகுமார் இயக்கத்துக்குப் போய்விடுகிறான். இதுதான் ‘வித்தியாசப்படும் வித்தியாசங்கள்’ வெளிப்படுத்தும் கதை.

இக்குறுநாவலில் கிருபைராசாவின் பாத்திரத்துக்கு முதன்மை கொடுக்கப்படுகிறது. மறுபுறத்தில் சுகுமார் என்ற பாத்திரம்தான் முக்கியம் பெறுகின்றது. ஆனால் எந்தவொரு பாத்திரமும் இக்குறுநாவலில் அழுத்தமும் முழுமையும் பெறவில்லை என்பது மிகப்பெரிய குறைபாடாக இருக்கின்றது. இரண்டு வர்க்கப் பிரதிநிதிகளை கதையில் உலாவ வைத்து இருவரும் செய்கின்ற தியாகங்கள் சாதிவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதனை உணர்த்துவதே முதன்மையான கருத்தியலாக அமைந்துள்ளது. இதனாலேயே செ.யோகராசா அவர்கள்

“இலங்கைத் தமிழர் மத்தியில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுள் அண்மைக்காலம் வரையும் சாதிப்பிரச்சனை முக்கியம் பெற்று வந்துள்ளது. தற்போது இலங்கையில் இப்பிரச்சனை கணிசமான அளவு குறைந்துள்ளதாயினும் நாட்டுத் தமிழர் மத்தியில் குறைந்து போகவில்லை. ....... இப்பொருள் பற்றி ஏலவே பல நாவல்கள் இலங்கையிலிருந்து வந்துள்ளன. இவ்வித நாவல்கள் எழுதிய டானியல், செ. கணேசலிங்கம். ஆகியோர் நன்கறியப்பட்டவர்களே. இவர்களது நாவல்கள் போன்றே இந் நாவலும் மார்க்சிச நோக்கில் போராட்ட வடிவில் அமைந்துள்ளது. ஆயினும் ஆசிரியரது மார்க்சிசப் பார்வை தெளிவற்றமை கவனத்திற்குரியது. எனினும் இளந்தலைமுறை எழுத்தாளரொருவர் சாதிப் பிரச்சனையுடன் (விடுதலை இயக்கப் பின்னணி) அது தொடர்பு பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதே”(1)

என்று எழுதுகின்றார்.

2. பாதி உறவு

பார்த்திபனின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த ஏனைய நாவல்கள் போல் ‘பாதி உறவு’ என்ற நாவல் புகலிடத்தில் குழந்தை வளர்ப்புப் பற்றிய கருத்தினை வெளிப்படுத்துவதாக அறிய முடிகின்றது. (இக்குறுநாவல் கட்டுரையாளருக்கு கிடைக்கவில்லை) ‘ஆண்கள் விற்பனைக்கு’ நாவலின் இறுதிப்பகுதியில் உள்ள பாதி உறவு பற்றிய விபரமும் அந்நாவல் பற்றிய வாசகர் கடிதங்களும் இணைந்திருப்பதால் இந்நாவல் வெளிவந்துள்ளமை உறுதி செய்யப்படுகிறது.

“பெற்றோரின் கவனக்குறைவால் பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள் அவர்களின் மனதில் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை இந்தக் கதையில் நன்றாக சித்தி ரிக்கிறீர்கள் ”(2)

என்று மேற்கு ஜேர்மனியில் இருந்து நா.நிருபா பார்த்திபனின் நூலில் குறிப்பிடுகின்றார். செ. யோகராசாவும் இந்நாவலை உள்ளடக்கப்புதுமையும் உளவியற் பாங்கும் கொண்டமைந்தது எனவும் இலங்கை நாவலாசிரியர் எவரும் தொட்டிராத பிரச்சினையைக் கூறுவதாகவும் குறிப்பிடுகின்றார்.

“குழந்தைகளுடன் அவர்களின் மனங்களும் படிப்படியான அனுபவங்களினாலும் படிப்பினாலும் தான் வளர்ச்சியடைகின்றன. திடீரென அவர்கள் பெரியவர்களாகி விடுவதில்லை. குழந்தைப் பருவத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள்தான் அதன் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. குழந்தைகளைப் பெற்றோர்களுடன் சூழ்நிலைகளும் சேர்ந்தே வளர்க்கின்றன. தமது பிள்ளைகள் தீயவர்களாக வளரவேண்டும் என எந்தப் பெற்றோரும் திட்டம் போட்டு வளர்க்காவிடினும் தங்களது கவனக் குறைவால் பிள்ளைகளை அழிவுப் பாதையில் செல்ல அனுமதித்து விடுகிறார்கள் இதைத் தடுக்க முடியாதா? முடியும் என்பதனை, ரவீந்திரன் நந்தினி குடும்ப வாழ்க்கையூடாக வெளிப்படுத்துகின்றார் நாவலாசிரியர்.”(3)

குழந்தை வளர்ப்பு என்ற பொருட்பரப்பில் உள்ள இந்நாவலை புகலிடத்திலிருந்து பார்த்திபனே முதலில் எழுதியுள்ளார். இது உள்ளடக்க மற்றும் அழகியற்பார்வை என்ற வகையில் பல குறைபாடுகள் உள்ளனவாயினும், புலம்பெயர் நாவல் இலக்கிய உலகின் முதன்முயற்சி என்ற வகையில் கவனிக்கத்தக்கது.

1. ஆண்கள் விற்பனைக்கு

சீதனப்பிரச்சனையை எடுத்துக் காட்டும் நாவல்கள் புகலிடத்திலிருந்து வெளிவந்தவை மிக அரிது. என்றாலும் பார்த்திபனின் ‘ஆண்கள் விற்பனைக்கு’ என்ற நாவல் இப்பிரச்சினையைக் கருவாகக் கொண்டு அங்கிருந்து முதலில் வெளியாகியுள்ளது.


யாழ்ப்பாணத்துக் கிராமம் ஒன்றில் வாழும் இரு இளம் பெண்களின் கதையாக நாவல் விரிகின்றது. பத்மா, உமா என்ற இரண்டு பெண்கள். பத்மா அறிவிலும் அநுபவத்திலும் உமாவை விடவும் முதிர்ச்சியானவள். பத்மா விரும்பும் வாலிபன் தன் தங்கையின் திருமணத்தைக் காரணம் காட்டி சீதனம் வாங்கி வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புகிறான்.

மறுபுறத்தில் உமா பள்ளிப்பருவ வயதில் நிரஞ்சன் என்ற வாலிபனுடன் கொண்ட காதல் உமாவிடம் வசதியி;ல்லாத காரணத்தால் அவனால் நிராகரிக்கப்படுகிறது. அவன் கொழுத்த சீதனம் வாங்கி வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய பெற்றோரால் நிர்ப்பந்திக்கப்படுகிறான்.

இந்நாவலில் வரும் இரண்டு ஆண்களும் தாம் சீதனம் வாங்கித் திருமணம் செய்வதற்காக தமக்கேற்றவகையில் நியாயம் கற்பிக்கின்றனர். இருவருமே தாம் காதலித்த பெண்களை நிராகரித்தும் விடுகின்றனர். இறுதியில் பத்மாவின் கூற்றானது பின்வருமாறு அமைகிறது.

“எப்பவாவது உண்மையான ஆம்பிளை ஆராவது எங்களைச் சந்திக்கும்மட்டும் இப்பிடியே இருப்பம். சந்திச்சா கலியாணத்தைப் பற்றி யோசிப்பம் அப்பிடி சந்திக்கவில்லை யெண்டாலும் பிரச்சனையில்லை. இப்பிடி நாங்கள் இருக்கிறதுதான் வாழ்க்கை.” (ஆண்கள் விற்பனைக்கு)

பார்த்திபனின் இந்நாவல் புலம்பெயர் நாவல்களின் ஆரம்பகால நாவல் என்ற வகையில் முக்கியத்துவம் பெற்றாலும்; மனித உறவுகளின் உணர்வுகளை விடவும் அது எடுத்துக் கொண்ட கருத்திற்கு, குறிப்பாகச் சமூக சீர்திருத்தத்திற்கே முதன்மையளித்துள்ளது. இதனை குப்பிளான் ஐ. சண்முகன் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார்.

“பொதுவாக இவரது படைப்புக்கள் சமூக சீர்திருத்தக் கருத்துக்களுக்காகவே உருவாக்கப்பட்டவையாகும். கருத்துக்களை மையமாக வைத்தே கதைகள் கட்டியெழுப்பப்படுகின்றன. இதனால் மனித உணர்வுகளை அவை கவனமாக சித்திரிக்க முயலப்பட்டபோதும் இரண்டாமிடத்திற்கே போய் விடுகின்றன. உன்னதமான படைப்புக்கள் மனிதனையே சித்திரிக்கின்றன. அவனது எழுச்சி வீழ்ச்சிகளுடன் மகிழ்ச்சி துயரங்களுடனும் குறை நிறைகளுடனும் பலவீனம் உன்னதங்களுடனும் அவனே சித்திரிக்கப்படுகின்றான். பார்த்திபனின் படைப்புக்கள் இந்த இடத்தில் பலவீனப்படுகின்றன. கருத்துக்களுக்கும் மனித உணர்வுகளுக்கும் இடையிலான இந்தச் சமனின்மை நிரவப்படுமானால் இவரின் படைப்புக்கள் உயர்ந்ததோர் தளத்திற்கு செல்லலாம். பார்த்திபனின் அடுத்த கட்டப் பாய்ச்சல் அவ்வாறே அமையும் என்ற நம்பிக்கையை ‘ஆண்கள் விற்பனைக்கு’ என்ற இந்த நாவல் ஏற்படுத்துகின்றது.”(5)

ஈழத்தமிழர்களிடையே பாரம்பரியமாக ஆண்களுக்குச் சீதனம் கொடுத்து பெண்வீட்டார் திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. ஆனால் அப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டு திருமண பந்தமே இல்லாமல் ஏங்குகின்ற எத்தனையோ இளம்பெண்களின் வாழ்வும், சீதனத்திற்காகவே தம்மை வருத்தி சிறுகச் சிறுகச் சேகரித்து வரும் பெற்றோரும் கூட, தம் வாழ்வின் பெரும் பகுதியை பெண்பிள்ளைகளைக் கரையேற்றுவதற்காகவே செலவழிக்கின்றனர்.

பார்த்திபனின் ‘ஆண்கள் விற்பனைக்கு’ நாவலின் முன்னுரையில் குறிப்பிடப்படும் கருத்து இந்நாவலுக்கு அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றது.
“சீதனம் என்பது இப்போது பெரிய பிரச்சனை அல்ல என்பதுபோல பலர் பேசிக்கொள்கிறர்கள்; அது தவறானது என்பதை என்னால் நேரடியாகக் கண்டுகொள்ள முடிந்தது. சகோதரிகளுக்கு பன்னிரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக ‘காச்’ சம்பளத்தில் அடுப்பு வெக்கைக்கு முன்னால் வெந்து கொண்டிருக்கும் சகோதரர்களைச் சந்தித்தபோதும் அட்டகாசமான திருமணக் கொண்டாட்டங்களில் பங்கு பற்றும் பலர் தங்களுக்குள் மணமக்களைப் பற்றிக் கதைத்துக் கொள்ளும் போதும் அரசினால் தஞ்சம் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் வேலை செய்பவர்கள் குடியேற்ற அந்தஸ்து கிடைத்தவர்கள் தங்களுடைய விலை கூடிவிட்டதாக அறிவிக்கும்போதும் ஊரிலுள்ள ஆதனங்களை விற்று கூடவே குடும்பத்தையும் கடனாளியாக்கி விட்டு சீதனப் பொதியுடன் பிராங்போர்ட் விமான நிலையத்தில் வந்து குவியும் தமிழ்ப் பெண்களைப் பார்த்தபோதும் சீதனம் என்பதன் பாதிப்பு தெளிவாகவே புரிந்தது.”(4)

என்று குறிப்பிடும் பார்த்திபனின் கருத்து முக்கியமானது. ஒரு வகையில் ஆண் சகோதரர்கள் தமது சகோதரிகளுக்காக தம்மை உருக்கிக் கொண்டிருப்பவர்கள் தான். இதுவே இவ்வாறான படைப்பை உருவாக்க காரணமாக இருந்திருக்கலாம்.

தமிழர் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சீதனப்பிரச்சினையை முன்வைத்து ஈழத்தில் பல படைப்புக்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. எனினும் இதனை புலம்பெயர்ந்த பின்னரும் படைப்பாளிகள் தொடர்ந்து எழுதியிருப்பது சீதனம் எமது தமிழர் சமூகத்தில் இன்னமும் தீராத ஒரு பிரச்சினை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

பார்த்திபனின் முற்றுப்பெறாத நாவலாகிய ‘கனவை மிதித்தவன்’ மற்றும் தொடர்கதையென அறியப்படும் ‘சித்திரா - பெண்’ ஆகியவை முழுமையாக கட்டுரையாளனுக்குக் கிடைக்காதபடியால் அவை பற்றிய கருத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன.

சிறுகதைகள்

பார்த்திபனின் நாவல்களைவிட சிறுகதைகளிலேயே அவரின் எழுத்தின் வீச்சும் தொடர்ச்சியான வளர்ச்சியும் வெளிப்படுகிறது. இன்று புகலிட எழுத்துக்கள் என அடையாளப்படுத்தப்பட்ட சிறுகதைகளைத் தேடுவோமாயின் நிச்சயமாக அதில் பார்த்திபனுக்கும் ஓரிடம் இருக்கும். அந்த வகையில் அவரது சிறுகதைகளை நோக்குவோம்.

இவரின் கதைகள் ஈழத்தமிழரின் வாழ்வனுபம் என்பதையும் தாண்டி உலகில் அகதியாக அலைந்து திரியும் பல்கலாசார மாந்தர்களை நோக்கியும் நகர்கின்றது. இவர் எழுதிய சிறுகதைகளில் எனது வாசிப்புக்கு எட்டியவகையில் ‘தெரியவராதது, வந்தவள் வராமல் வந்தாள், ஒரு அம்மாவும் அரசியலும், ஐம்பது டொலர்ப் பெண்ணே, தீவு மனிதன்’ ஆகியவற்றை அவரின் படைப்புக்களில் முக்கியமானவையாகக் கருதுகிறேன்.

இக்கதைகள் தாய்நாட்டுத் துன்பங்களையும் துரோகங்களையும் சுமந்து வருகின்ற அதேவேளை புலம்பெயர்ந்த அகதியாக, வெளிநாட்டவரால் தீண்டத்தகாதவர்களாக, ஒதுக்கப்படுபவர்களாக கிடந்து உழலுகின்ற ஒரு சாதாரண புலம்பெயர்ந்த அகதி மனிதனின் மனப்போராட்டங்களையும் வெளிப்படுத்துகின்றன.

இங்கு பார்த்திபனின் கதைகள் ஒவ்வொன்றும் எடுத்துக்கொள்ளும் கதைக்களங்கள் மிக முக்கியமானவை. அவர் அக்கதைகளுக்குத் தேர்ந்து கொள்ளும் மொழி மிகச் சாதாரணமானது. கதைகளில் அழகியலைத் தேடிக்கொண்டிருக்க முடியாது. மொத்தத்தில் எல்லாக் கதைகளிலும் பார்த்திபனின் ஆத்மா கிடந்து தத்தளிப்பதைக் கண்டு கொள்ளலாம்.


இவரின் கதைகளில் இருந்து சில பகுதிகளை இங்கு எடுத்துக் காட்டுதல் பொருத்தமென எண்ணுகிறேன்.

ஊரில் அக்கா தங்கையுடன் நிறையப் பொறுப்புக்களுடன் ஜேர்மனி வந்து, அங்கு அகதி அந்தஸ்து கிடைக்காத நிலையில், கூடுதல் வருமானம் பெற, யாருக்கும் தெரியாமல் கனடாவுக்கு விமானத்தில் பயணம் செய்யும்போது விமானம் நடுவானில் வெடித்து சிதறி விடுகிறது. இந்நிலையில் அவனின் மரணம் யாருக்கும் தெரியவராத நிலையினை, மனித மனங்களை உலுப்பிவிடும் வகையில் பார்த்திபனின் ‘தெரியவராதது’ என்ற சிறுகதை எடுத்துக்காட்டுகிறது.

“அமெரிக்காவில் சீவிக்கும் ஒரு கறுப்பனின் பாஸ்போர்ட் எப்படியோ தனக்குரிய வழிகளில் கிடைத்தது. முகம் சுமாராய் பாலுவைப் போலவே. தலைமயிர்கூட சுருட்டத் தேவையில்லை. சென்ற குறையின் பாக்கி இருந்தது. மொத்தத்தில் மாறுவேடம் இல்லாமல் அப்படியே போக இயலக் கூடியதாக இருந்தது………..தெரிஞ்ச பொடியனிட்ட வேற சிற்றிக்குப் போறன் சிலவேளை அங்கயிருந்து ஸ்சுவிசுக்குப் போனாலும் போவன். போனா போன் பண்ணிறன்.” என்று சிவகுமாருக்கும் பொய் சொல்லி வைத்தான். விமானம் இலண்டன் விமான நிலையத்தில் தரித்து சிறிது இளைப்பாறி மீண்டும் பறந்து பல நிமிடங்களின் பின் வானத்தில் வெடித்துச் சிதறி சிதையல்கள் ‘லொக்கபே’ எனும் இடத்தில் வீழ்ந்தன. ………………இரவுமுழுவதும் போதைவஸ்தும் கும்மாளமுமாய் இருந்து நேரம் கழித்து வந்து படுத்து இன்னும் எழும்பாமல் இருக்கும் ‘கிறிஸ்டோபர் பீலி’யை திட்டியபடி வாசலுக்கு வந்த அம்மா ‘லொக்பே’ விமான நிலையத்தில் கிறிஸ்டோபர் பீலி இறந்து விட்ட செய்தியை ஆழ்ந்த கவலையுடன் தெரிவிப்பதாக வந்த தந்தியை வாங்கி வைத்துக் கொண்டு ஒன்றும் புரியாமல் குழம்ப, பாலகிருஸ்ணன் எங்கே என்ற உண்மை தெரியாமல் அவன் சுவிஸ் போய்விட்டதாக ஜேர்மனியில் இருந்த நண்பர்கள் நினைத்துக் கொள்ள, இலங்கையில் நடுமூலையில் உழைத்துத் தளர்ந்து போன அப்பாவும் ஓளவையாராகி கொண்டிருக்கும் அக்காவும், துப்பாக்கிகளுக்குப் பயப்பிடும் அண்ணாவும் எதிர்காலக் கனவுகள் பற்றிய ஆரம்பங்களுடன் தம்பி தங்கைகளும் பாலுவின் கடிதம் பணத்திற்காக காத்திருந்தார்கள். காத்திருப்பார்கள்” (தெரியவராதது)

இவரின் ஏனைய கதைகளான ‘அம்மாவும் அரசியலும், இழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், வந்தவள் வராமல் வந்தாள்’ ஆகியவற்றிலும் அகதி வாழ்வின் பல பிரச்சனைகள் எடுத்துக் காட்டப்படுகின்றன.

‘அம்மாவும் அரசியலும்’ என்ற சிறுகதையில் இரண்டு தாய்மார்களின் அப்பாவித்தனமாக சித்திரிப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர்களின் கண்மூடித்தனமான போக்கும் நன்றாகப் பதிவாகியுள்ளன.

“நாசமாய்ப்போன அரசியல், கோதாரி விழுந்த அரசியல் ஐயோ என்ர பிள்ளையை கொண்டு போட்டாங்களே”

என்று தன் மகனின் பிணத்தைக் கட்டிப்பிடித்து வயிற்றில் அடித்துக்கொண்டு மண்ணில் புரண்டு அழுகின்ற அந்த நிலையை நினைத்துப் பார்க்கும்போது மனம் பேதலித்துப் போகின்றது.

பார்த்திபனின் ‘தீவு மனிதன்’ சிறுகதையும் தனிமை அநுபவத்தினைக் கொண்டமைந்த கதைதான். துயர் மிகுந்த வாழ்விலே தூக்கி எறியப்பட்டு தனிமையில் வாழும் மனிதன் சமூகத்துடன் இணைந்து வாழ முற்படும் போது, வரையறுத்த கட்டுப்பாட்டுக்குள் இயைந்து செல்லவேண்டியவன் ஆகின்றான். புலம்பெயர் தேசத்தில் ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் தனிமைத் துயருக்கு சிறந்ததோர் எடுத்துக் காட்டாக தீவுமனிதனைக் குறிப்பிடலாம் ‘இச்சிறுகதை ஏ.ஜே. கனகரத்தினா அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, டெல்லியில் இருந்து வெளிவரும் ‘The little magazine’ என்ற இலக்கியச் சஞ்சிகையின் பூகோளமயமாதல் சிறப்பிதழில் (தொகுதி v இதழ் 4+5> 2004) வெளிவந்துள்ளதாக அறியமுடிகின்றது’ (ஆதாரம்:- அ. யேசுராசா, 2005 வைகாசி – ஆனி, தெரிதல் இதழ்-9) இதுவும் இச்சிறுகதையின் சிறப்புக்கு இன்னோர் அடையாளமாகும்.

“எனது தீவு நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்டது. இந்தத் தீவில் என்னுடன் சேர்ந்து உடனிருந்தவை ஒரு புத்தக அலுமாரி, ஒரு கசற் றெக்கோடர், ஒரு செற்றி, ஒரு யன்னல் மட்டும்தான்……….. எனது தீவில் மட்டும் தான் நான் அழுவேன். இந்தத் தீவில் இருக்கின்றபோது அடிக்கடி அழுகை வருகிறது. வெளியே போகின்றபோதெல்லாம் அணிந்து செல்கின்ற சிரிப்பை கழட்டி எறிந்து விட்டு சுதந்திரமாக அழுவேன். யன்னலுக்கு இது வடிவாகத் தெரியும்” (தீவுமனிதன்)

புகலிடப் படைப்புக்களில் தொழிற்தளத்தை மையப்படுத்திய பலசிறுகதைகளிலும் இந்த அநுபவத்தைக் கண்டுகொள்ள முடியும். புலம்பெயர்ந்த நாடுகளிலே அகதிகளாக வாழும் நிலையிலே நிர்வாக கெடுபிடிகளுக்கும் மிகுந்த மன உழைச்சலுக்கும் மத்தியில் தொழில் புரிந்து வரும் இளைஞர்கள் மத்தியில் இருந்துதான் இந்த அநுபவம் அதிகமாக வந்துள்ளது.

இவரின் சிறுகதைகள் நமக்குத் தருகின்ற அநுபவங்கள் சில புதியவை அவை வட்டாரம் கடந்து நாடு கடந்து தேசம் தாண்டிச் செல்லக்கூடியவை யமுனா ராஜேந்திரனின் கூற்று இதனை வலுப்படுத்துகின்றது.

“ பார்த்திபன் தேர்ந்து கொள்ளும் புலம்பெயர் வாழ்வின் பிரச்சனைகள், இங்கு வாழ நேர்ந்த புலம்பெயர் மனிதர்கள் அனைவருமே எதிர்கொள்ளும் பிரச்சனைகள். நான் வாசித்த பெரும்பாலான பிறமொழி எழுத்தாளர்களின் படைப்புலகமும் பார்த்திபனின் படைப்புலகமும் ஒன்றுதான் என்கிற அவதானிப்பைப் பெற்றேன். ….இங்கு எடுத்துக் கொண்டுள்ள பார்த்திபனின் பதினான்கு கதைகளில் 1. இந்த நாடுகளுக்கு வந்து சேருவதற்கான பயணகால இடைவெளியில் நேரும் அனுபவங்களைக் குறித்த விசாரணை இருக்கிறது. 2. மேற்கத்தைய சூழலில் வாழ நேர்ந்தாலும் கூட தமது அசிங்கமான நிராக ரி க்கத்தக்க மரபுகளைத் தொடர்ந்து பேணுதல் பற்றிய கோபமான விசாரணை இருக்கிறது. 3. மேற்கின் விடுதலை பெற்ற பாலுறவு பழக்கங்களும் எமது பாலியல்பு வக்கிரங்களுக்கும் இடையிலான தொடர்பு விசாரிக்கப்படுகிறது.”(6)

என்று குறிப்பிடுகின்றார். இவரின் சிறுகதைகளில், வெளிநாட்டவருக்கு மத்தியில் தம்மை அந்நியராய் உணரும் அடையாளப் பிரச்சனையை எடுத்துக் காட்டும் ‘ஐம்பது டொலர்ப் பெண்ணே, அத்திவாரமில்லாத கட்டிடங்கள் ’ஆகிய கதைகளும்; வேலை செய்து கொஞ்சம் பணம் அனுப்பும் ஆசையோடு பயணித்தபோது நடுவானில் விமானம் வெடித்துச் சிதறி யாருக்கும் தெரியவராது போன பாலுவின் மரணத்தை காட்டும் ‘தெ ரி யவராதது, ’மற்றும் பயண வெளியிலே பெண் உடல் சிதைக்கப்படும் கதையைக் கூறும் ‘வந்தவள் வராமல் வந்தாள்’ ஆகிய சிறுகதைகளை மீளவும் மீளவும் படிக்கின்றபோது இன்னும் பல வெளிச்சங்கள் புலப்படும்.

‘இழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற சிறுகதையிலே மாஸ்கோ தெருவில் அநாதையாக செத்துக் கிடக்கும் புனிதாவின் கதை பயண வெளிகளின் தெரியாதுபோன எத்தனையோ மரணங்களை ஞாபகப்படுத்தும் கதையாக அமைந்து விடுகிறது. இக்கதையில் இருந்து மனதை உலுக்கிவிடக்கூடிய ஒரு உரையாடல் பின்வருமாறு.

“ஆர்?

அது நான் சிவா கதைக்கிறன்.

எந்தச் சிவா?

ராங்கி சிவா. இஞ்சை மொஸ்கோவிலை நிக்கிறன்.

என்ன புதினம்?

கேட்ட காசு தராததாலை புனிதாவை கோட்டல்லை விட்டிட்டு
வந்தனாங்களெல்லோ?

அவளுக்கென்ன? றெட்லைட் ஏரியாவிலை கொண்டுபோய் விட்டிட்டாங்களே?

அவன் செத்துப் போனாள். ஒரு குறுக்கு றோட்டிலை கிடந்து பொலிஸ்
சவத்தைக் கண்டெடுத்திருக்கு.

ஏதேன் டொக்குமென்ற்ஸ் அம்பிட்டிட்டுதோ?

என்னெண்டு. அதுதான் ஐடென்ரிக்காட்டிலையிருந்து எல்லாத்தையும் வாங்கி
வேற ஆளுக்கு வித்தாச்சே. ஆள் ஆர், எந்த நாடு எண்டு கண்டுபிடிக்கக்
கூடிய எந்த டொக்குமென்ற்சும் இல்லை. இதைவிட மினைக்கெடுறளவுக்கு
ரஷ்யப் பொலிசும் இல்லை.

அப்பாடா. அது சரி இப்ப என்னத்துக்கு எடுத்தனி?

இல்லை. என்ன இருந்தாலும் அவள் எங்கடை ஊர்க்காரி.
கடைசி நாங்கள் ஆரெண்டு சொல்லாமல் அவளின்ரை
சொந்தக்காரருக்கெண்டாலும் அடிச்சுச் சொல்லுவமோ?

பேப்…மண்டைக்கை ஒரு கொட்டையும் இல்லை. ஒண்டையும் நாத்தாம
உன்ரை அலுவலைப் பார்.”
(இழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்)

என்றவாறு அமைகின்ற இக்கதை கடலிலும் பனிவெளிகளிலும் மலை இடுக்குகளிலும் யாருக்கும் தெரியாமலே காணாமற் போன எமது ஈழத்தமிழர்களின் கதைகளுக்கு ஆதாரமாக அமைகின்றது. மேலும்,

“ பார்த்திபனின் கதைகளில் புராணீகங்களும் தொல் மரபுகளும் இசையும் நளினங்களும் இடம்பெறுவதில்லை. சந்தோசத்தில் வீசுகிற சொற்கள் பார்த்திபனுக்கு அன்னியமானது. மலம் போன்ற சொற்கள் மனதின் வெக்கையை வெளிப்படுத்த தலித் கலை வெளிப்பாடுகளில் எடுத்துக் கொள்கிற இடத்தை இங்கு பார்த்திபனின் கெட்ட வார்த்தைகளும் துக்கம் பீறிடும் உணர்ச்சிகளும் எள்ளலும் கோபமும் எடுத்துக் கொள்கின்றன. …….புலம்பெயர் தமிழ் இலக்கியம் உலகின் புலம்பெயர் இலக்கியத்தின் ஒரு பகுதிதான் அவ்வகையில் பார்த்திபன் காட்டும் தமிழ் மனிதனின் உலகம் சர்வதேச புலம்பெயர் இலக்கியத்தின் படைப்புலகுக்குள் நிச்சயமாகவே நுழைந்து விட்டது.” (7)

என்று யமுனா ராஜேந்திரன் கூறுவதற்கு பல சிறுகதைகள் உதாரணமாகவே இருக்கின்றன.


தொகுப்பாக

பார்த்திபன் கவனிக்கப்படவேண்டிய படைப்பாளி. அண்மையில் ‘ஜேர்மனியில் தடம்பதித்த தமிழர்கள்’ என்ற நூலினைப் பார்க்கக் கிடைத்தது. அதில் இப்பொழுது எழுதிப் பழகிக்கொண்டிருக்கும் படைப்பாளிகள் பற்றிப் புகழ் பாடப்படுகின்ற பக்கங்களில் புலம்பெயர்ந்த ஆரம்பகால ஈழப்படைப்பாளிகளில் ஒருவராகிய பார்த்திபன் தொகுப்பாளர்களின் கண்ணுக்குத் தென்படாமற் போனது துரதிஷ்டமானதே. இலக்கியம், வளர்ந்து வந்த வரலாறே தெரியாத இன்றைய ‘டவுண்லோட்’ படைப்பாளிகளும் அவர்களைத் தூக்கிப் பிடித்து முதுகுசொறிகின்ற இலக்கியவாதிகளும் இப்படித்தான் தலையை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கின்ற கதையாக தமிழ்ச்சூழலில் மேலோங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கு பார்த்திபனுக்கு நேர்ந்த அவலம் என்னவென்றால்

1. வெளிவந்த தொகுப்புக்கள்கூட மிகக் கடினப்பட்டு அச்சடிக்கப்பட்ட பிரதிகளாகவே இருந்துள்ளன. அவை தட்டச்சு செய்யப்பட்டு சாதாரண தரத்தில் பிரதி எடுக்கப்பட்டவை. அவற்றில் சில பிரதிகளே ஈழச்சூழலுக்குக் கிடைத்துள்ளன.

2. பார்த்திபனின் எழுத்துக்களை பார்த்திபனிடமே பெறமுடியாத நிலையில் அவரின் தொடர்புநிலை இருக்கின்றது (ஒருவிதத்தில் எழுத்துலகத்தில் இருந்து ஒதுங்குதல் மற்றும் தொடர்பு இல்லாமை)

3. புகலிடத்தில் இருந்தவர்களிற்கூட குறிப்பிட்ட சிலரைத்தவிர பார்த்திபனின் எழுத்துக்களுக்கு முறையான விமர்சனத்தினை முன்வைக்கவில்லை.

இவையெல்லாம் பார்த்திபனின் படைப்புக்கள் மீள் பதிப்புப் பெறவேண்டிய தேவையை வலியுறுத்துகின்றன.

கதைகளின் மொழிநடை ஈழத்திற்கே உரிய இயல்பான நடை. அதிலும் ஈழத்து மாந்தர்களின் உரையாடல்களில் வரும் மொழி இயல்பானது. பாத்திரவார்ப்பிற்கு ஏற்ப மொழியைச் செதுக்கியிருப்பது சிறுகதைகளில் முதன்மை பெறுகின்றது. இதன் உச்சமாக ‘தீவுமனிதன்’ சிறுகதை அமைந்திருக்கின்றது. நாவல் குறுநாவல்களில் குறைபாடுகள் இருப்பினும் சிறுகதைகளே பார்த்திபனின் படைப்புக்களைத் தூக்கி நிறுத்த வல்லவையாக உள்ளன.

மேலைத்தேயப் படைப்பாளிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படவேண்டிய அளவுக்கு அவரின் சிறுகதைகளின் கருத்தியல் அமைந்திருத்தல் அடுத்து கவனிக்க வேண்டியதாகும்.



இன்று உலக அளவில் அதிகாரத்தாலும் ஆயுதத்தாலும் ஒடுக்கப்படுகின்ற மனிதக்குழுமம் நாடோடி வாழ்வுக்கும் மனிதகுல அழிவுக்கும் அடையாள இழப்பிற்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறது. அந்தத் துயரங்களை எல்லாம் கடந்து செல்லக்கூடிய சில படைப்புக்கள் பார்த்திபனிடம் வந்து சேர்ந்துள்ளமை புலம்பெயர் படைப்புக்களின் வலிமையாகக் கொள்ள முடியும். எனவே 80 களில் இருந்தான ஈழத்தமிழரின் புலம்பெயர் படைப்புக்களின் செல்நெறியைக் கண்டுகொள்வதற்கு பார்த்திபனின் படைப்புக்கள் ஆதாரமாக இருக்கின்றமையை அவரின் படைப்புக்களை ஆழ்ந்து வாசிப்போர் புரிந்து கொள்வர். இதுவே அவரின் படைப்புக்களின் வலிமையுமாகும்.
---
அடிக்குறிப்புக்கள்

1. யோகராசா. செ. கலாநிதி: 2004 ஜூலை, ‘இலங்கைப் புகலிட நாவல்கள்’. சிந்தனை இதழ் 2, தொகுதி XIV, திருநெல்வேலி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கலைப்பீடம் ப.35
2. நிருபா. நா: 1998, ஆண்கள் விற்பனைக்கு (வாசகர் கடிதத்தில்), மேற்கு ஜேர்மனி, தென்னாசிய நிறுவனம், ப.126
3. யோகராசா. செ. கலாநிதி: மேலது 1, ப.35
4. பார்த்தீபன்: 1998, ஆண்கள் விற்பனைக்கு, மேற்கு ஜேர்மனி, தென்னாசிய நிறுவனம், ப.5
5. சண்முகன். ஐ. குப்பிழான்: 2003, அறிமுகங்கள் விமர்சனங்கள் குறிப்புக்கள், கொழும்பு, நிகரி வெளியீடு, ப.41
6. யமுனா ராஜேந்திரன்: 1997, ‘பார்த்திபனின் பதின்னான்கு சிறுகதைகளை முன்வைத்து புலம்பெயர் இலக்கியம் குறித்து’, கிழக்கும் மேற்கும், (தொகுப்பாசிரியர் - பத்மநாதஐயர்) லண்டன், தமிழர் நலன்புரிச்சங்கம் ஐ. இ, ப.24
7. யமுனா ராஜேந்திரன்: மேலது 6

உசாவியவை


1. மார்க்ஸ். அ: 1997, வெள்ளைத்திமிர், ‘பழைய ஞாபகங்களில் எங்கள் சீவியங்கள் கழிகின்றன’ புலம்பெயர்ந்த தமிழர் பார்த்திபனுடன் ஓரு நேர்காணல், கோவை, விடியல் பதிப்பகம்.
2. குணேஸ்வரன். சு: 2006, “இருபதாம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் கவிதை புனைகதைகள் பற்றிய ஆய்வு” (பதிப்பிக்கப்படாத முதுதத்துவமாணி ஆய்வேடு) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், உயர்பட்டப் படிப்புகள் பீடம்.
3. தூண்டில் சஞ்சிகைகள் 1-58
4. மங்களேஸ்வரி: 1990, ‘மேற்கு ஜேர்மன் தமிழ்ச் சஞ்சிகைகள் ஆக்கங்களில் பெண்நிலைவாதக் கருத்துக்கள்’, மேற்கு ஜேர்மனி, தூண்டில்.
5. சிறீரங்கன். ப. வி: 1990, ‘ஆண்கள் விற்பனைக்கு - ஒரு விமர்சனம்’, மேற்கு ஜேர்மனி, சிந்தனை.
6. www.noolaham.org

நன்றி – கலைமுகம் இதழ் 51, ஏப்ரல் யூன் 2011




Monday, January 10, 2011

இலத்திரனியற் சூழலில் புகலிடச் சிற்றிதழ்கள்



-சு. குணேஸ்வரன்
1.0 அறிமுகம்

புகலிடச் சிற்றிதழ்கள் கடந்த 1983 இன் பின்னர் ஈழத்தமிழர் புகலடைந்த நாடுகளில் இருந்து வெளிவந்துள்ளன. ஏறத்தாழ 150 ற்கும் மேற்பட்ட இதழ்கள் இதுகாலவரையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வட அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்தும் வெளிவந்துள்ளன. 90 களின் பிற்பகுதியில் இருந்து இலத்திரனியற் சூழலை தமிழ்ப் படைப்புலகு தமது எழுத்துக்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கியது. இந்நிலையில் புகலிடச் சிற்றிதழ்ச் செயற்பாட்டை நோக்குவதே இக்கட்டுரையின் பணியாக அமைகின்றது.

2.0 இலத்திரனியற் சூழலில் சிற்றிதழ்கள்

கலை இலக்கியம் சார்ந்து வெளிவரும் இதழ்களை இலக்கியச் சிற்றிதழ்கள் (Little Magazines) என்று அழைப்பர். 1914 இல் அமெரிக்காவில் வெளியாகிய The Little Review என்ற இதழுடன் சிற்றிதழ் என்ற சொற்பிரயோகம் வழக்கத்திற்கு வருகிறது. (தமிழகத்தில் 1933 இல் வெளிவந்த ‘மணிக்கொடி’யும்> ஈழத்தில் 1946 ஜனவரி வெளிவந்த ‘பாரதி’ யும் முதல் இதழ்களாக வெளிவந்தபோதிலும்) தமிழில் 1959 இல் தோற்றங்கொண்ட ‘எழுத்து’ இதழே முதல் இலக்கியச் சிற்றிதழாக அமைகின்றது. ஈழத்தில் 1946 இல் வெளிவந்த மறுமலர்ச்சியும்> புகலிடத்தில் 1985 இல் மேற்கு ஜேர்மனியில் இருந்து வெளிவந்த தூண்டிலும் முதலில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ்களாக அமைந்துள்ளன. சிற்றிதழ் என்பதற்கு

“கவிதைகள் புனைகதைகள் விமர்சனக் கட்டுரைகள் முதலியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு குறைந்த எண்ணிக்கைப் பிரதிகளை வெளியிடும் இதழ்கள். நீடித்த ஆயுளைக் கொண்டிராதவையுங்கூட.” (1)

என வல்லிக்கண்ணன் விளக்கம் கொடுக்கின்றார். வெளிவந்த அதிகமான சிற்றிதழ்கள் நின்று விட நிலையிலே கலை இலக்கியத்தில் தம்மைத் தக்கவைக்கும் நோக்குடன் புகலிடத்திலிருந்து தற்போது வெளிவந்து கொண்டிருப்பனவாக உயிர்நிழல்> காலம்> எதுவரை> தேசம்> மண்> கலப்பை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். கடந்த ஓரிரு ஆண்டுகள் வரை வெளிவந்து நின்றுபோனவை இவற்றைவிட அதிகம். அச்சுப்பிரதிகளாக வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களோடு இன்றைய இலத்திரனியற் சூழலும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும். இவ்வகையில் புகலிடச் சிற்றிதழ்ச் செயற்பாட்டைப் பின்வருமாறு நோக்கலாம்.

1 அச்சிதழ்கள் (Print magazines)
2. அச்சிதழ்களும் இணைய இதழ்களும் (Print magazines and net magazines)
3. இணைய இதழ்கள்/மின்னிதழ்கள் (e- journals /e-zines)
4. இணையத்தளம் மற்றும் வலைப்பூ (Website and blogspot)

2.1 அச்சிதழ்கள் (Print magazines)

ஒரே காலப்பகுதியில் ஏறத்தாழ 40 வரையான சிற்றிதழ்கள் வெளிவந்த வரலாறு புகலிடச் சூழலில் உண்டு. அது அருகி கடந்த காலம் வரை 10 -15 வரையான இதழ்களே வந்துள்ளன. தற்போது 10 ற்கும் குறைவான இதழ்களே கலை இலக்கியம் சார்ந்து தொடர்ந்து வெளிவருவதைக் கட்டுரையாளரால் இனங்காண முடிந்துள்ளது.

பிரான்சில் இருந்து வெளிவரும் உயிர்நிழல் என்ற சஞ்சிகை (1999 ஜனவரியில் முதல் இதழ் வெளிவந்துள்ளது) இடையில் வெளிவராதிருந்து கலைச்செல்வனின் மறைவுக்குப் பின்னர். லஷ்மியால் முன்னெடுக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து வருகிறது. உயிர்நிழல் நவீன இலக்கியத்தின் மீதான அக்கறையை> குறிப்பாக பின்நவீனத்துவம்> பெண்ணியம்> தலித்தியம் எதிர்ப்பிலக்கியம் ஆகியவை குறித்த இலக்கிய அரசியலில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றது. இவ்விதழின் உள்ளடக்கம்; இலக்கியம் மற்றும் அரசியல் சார்ந்தது மட்டுமல்லாமல் சினிமா அல்லது குறும்படம் குறித்தும் முக்கிய படைப்புக்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

கனடாவில் இருந்து காலம் என்ற இதழ் கடந்த 1990 ஜூலை முதல் வெளிவருகிறது. இதழ் தொடங்கிய காலம் முதல் செல்வம் ஆசிரியராக இருக்கின்றார். இன்றுவரை 35 இதழ்கள் வந்துள்ளன. இவ்விதழின் சிறப்பம்சமாக தமிழ்ப் படைப்பிலக்கியச் சூழலின் ஆளுமைகளை இனங்கண்டு அவர்களின் படைப்புக்கள் பற்றிய உரையாடலை முன்னெடுக்கும் சிறப்பிதழ்களா அமைந்திருத்தலைக் குறிப்பிடலாம். சுந்தரராமசாமி அ. முத்துலிங்கம்> தெணியான்> ஏ.ஜே கனகரட்னா> கே.கணேஷ் மற்றும் கலைத்துறைக்குப் பணியாற்றியவர்களையும் வெளிக் கொண்டு வரும் இதழாக காலம் இதழ்கள் அமைந்துள்ளன.

இலங்கையில் இருந்து வெளியாகிய மூன்றாவது மனிதன் சிற்றிதழின் ஆசிரியாகிய எம் பெளசர் 2009 ஏப்ரல் முதல் லண்டனில் இருந்து எதுவரை என்ற சிற்றிதழைக் கொண்;டு வருகிறார். இதுவரை 4 இதழ்கள் வந்துள்ளன. இவ்விதழ் புகலிட எழுத்துச் சூழல் ஈழ அரசியற்சூழல் குறித்த படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றது.

மண் சஞ்சிகை 20 வருடமாகத் தொடர்ந்து வருகிறது. இதில் வியப்பு என்னவென்றால் இந்த இதழுடன் சமகாலத்தில் பெருந் தொகையாக வெளிவந்த இதழ்கள் நின்று போன பின்னரும் கூட இந்த இதழ் கடந்த ஏப்ரல் 2010 இல் 20ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியுள்ளது. (2) சிறுவர்களை மனங்கொண்டு தமிழ்மொழி> தமிழ் இலக்கியம்> இளையவர்களின் எழுத்தாற்றலை வளர்த்தல் ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து வருகின்றது.

கலை இலக்கியம் தொடர்பான ஆண்டிதழ்களும் வேறு இதழ்களும் வருகின்றன. தமிழ்ச் சூழலில் ஓரளவு வாசிப்புக்குக் கிடைக்கக்கூடிய இதழ்களையே மேலே குறிப்பிட்டேன். இவை தவிர கலை இலக்கியம் சாராத விளம்பர இதழ்களும் மற்றும் அமைப்புக்கள் நிறுவனங்கள் சார்பான இதழ்களும் வெளிவருகின்றன. அவை இக்கட்டுரையில் கவனத்திற் கொள்ளப்படவில்லை.

2.2 அச்சிதழ்களும் இணைய இதழ்களும் (Print magazines and net magazines)

தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற காலச்சுவடு உயிர்மை ஆகியன இவ்வகைப்பாட்டுக்கு நல்ல உதாரணமாகும். இதேபோல் அச்சில் வெளிவருகின்ற எதுவரை> உயிர்நிழல்> காலம் ஆகியவற்றை இணையத்திலும் வாசிக்க முடிகின்றது.

லண்டனில் இருந்து முல்லை அமுதனின் முயற்சியால் காற்றுவெளி என்ற இதழ் வெளிவந்தது. இதுவரை 16 இதழ்கள் அச்சில் வந்துள்ளன. ஈழ> தமிழகப் படைப்பாளிகளும் இதில் எழுதுகிறார்கள். நல்ல படைப்புக்களை மீள்பிரசுரமாகவேனும் தொடர்ந்த இச்சஞ்சிகை இவ்வருடம் யூலை மாதம் முதல் மாதாந்தம் மின்னிதழாக வெளிவருகின்றது.

த. ஜெயபாலனை ஆசிரியராகக் கொண்டு லண்டனில் இருந்து வெளிவந்த ‘தேசம்’> தேவதாசனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘வடு’ ஆகியனவும் மின்னிதழ்களாகவே வாசிக்கக் கிடைக்கின்றன.

“இன்றைய நிலையில் தரமானதோர் அச்சிதழாக வரும் ஒன்று நீடித்து எதிர்காலத்திலும் தொடர்வதோடு நிலையாகவும் இருக்கவேண்டும் என்றால்> மின்வெளியில் (Cyber Space) நுழைந்து இணைய இதழாகவும் திகழ வேண்டும்” (3)

இது புகலிடச் சூழலில் இன்று சாத்தியமாகி வருகின்றது. இவையெல்லாம் இன்றைய வாசிப்பு சாதாரண அச்சுநிலையைத் தாண்டி இணையத்தின் தேவையை வலியுறுத்துவனவாகவே அமைந்துள்ளன.

2.3 இணைய இதழ்கள்/மின்னிதழ்கள் (e- journals /e-zines)

இணையத்தில் மட்டுமே வெளிவரக்கூடிய இதழ்களை இணைய இதழ்கள் என்று குறிப்பிடுவர். இவை அச்சிதழ்களாக அல்லாமல் தொடர்ந்தும் இணையத்திலேயே குறிப்பிட்ட கால ஒழுங்கில் புதுப்பிக்கப்படுகின்றன. படைப்புக்களைப் பெறுவதுமுதல் அதன் செம்மையாக்கம்> வடிவமைப்பு இடுகை> பின்னூட்டம் என்பனவெல்லாம் இணையத்திலேயே நிகழ்கின்றன. தேவைப்படும் படைப்புக்களின் பக்கங்களைப் பிரதி எடுக்கக்கூடிய வசதிகளும் மற்றவர்களுக்கு அந்தப் பக்கங்களை அனுப்பக்கூடிய வசதிகளும்> வாசிப்பதற்கு இணைப்புக் கொடுக்கக்கூடிய வசதிகளும் இந்த இதழ்களின் எளிமையான வழிமுறைகளாக உள்ளன.

தமிழிலே பிரபலமான இணைய இதழ்களாகவும் அதிக வாசகர்களைக் கொண்டவையாகவும் திண்ணை> பதிவுகள்> வார்ப்பு> நிலாச்சாரல்> தமிழோவியம்> வரலாறு. கொம்> முத்துக்கமலம்> அம்பலம்> திசைகள்> ஊடறு> ஆறாம்திணை மரத்தடி> வெப். உலகம்> தமிழ் சிபி> தோழி.கொம்> ஆகியன உள்ளன.

இவற்றில் புகலிடத்தைப் பொறுத்தவரையில் புகலிடத்தமிழர்களால் கொண்டு வரப்படும் இணைய இதழ்களாக பதிவுகள்> அப்பால் தமிழ்> ஊடறு> லும்பினி> நிலாச்சாரல்> தமிழோவியம்> தமிழமுதம்> நெய்தல்> வார்ப்பு> புகலி> ஈழம்.நெட்> தூ, இனி> ஆகியவை முக்கியமானவை.
கனடாவில் இருந்து எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக் கொண்டு 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளிவருகின்ற ‘பதிவுகள்’ தமிழ்ச் சூழலில் மிகுந்த கவனத்திற்குரிய இணைய இதழாகும்.

‘அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்’ என்ற மகுட வாக்கியத்துடன் கலை இலக்கியம் மட்டுமல்லாமல் ஏனைய அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இணையத்தைத் தமிழ்ச் சூழல் பயன்படுத்தத் தொடங்கியவுடனே ஆரம்ப காலங்களில் வெளிவந்த திண்ணை அம்பலம் ஆறாம்திணை ஆகிய இதழ்களுடன் பேசப்படக்கூடியதாக ‘பதிவுகள்’ இணைய இதழும் அமைந்திருந்தது.

தமிழ் இலக்கியம் சார்ந்த எழுத்துக்களையும்> தரவுகளையும்> இணைப்புக்களையும்> ஆய்வுக் கட்டுரைகளையும் கொண்டுள்ளதோடு: ஆங்கிலக் கட்டுரைகள்> மொழியாக்கக் கட்டுரைகள் ஆகியவற்றையும் பதிவுகள் தாங்கி வருகின்றது. குறிப்பாகப் புகலிட எழுத்துக்களை இணையத்தில் கொண்டு வந்த இதழ்களுள் முதன்மையானதாக பதிவுகளைக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

றஞ்சி> தேவா ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு ஊடறு என்ற இணைய இதழ் 2005 ஜூனில் இருந்து வெளிவருகின்றது. 2009 இல் இருந்து உமா> ஆழியாள் ஆகியோரும் இணையாசிரியர்களாகச் செயற்படுகின்றனர். பெண்களின் எழுத்துக்களைக் கொண்டு வருவதற்கான ஒரு களமாக இது அமைந்துள்ளது. ‘அதிகாரவெளியினை ஊடறுக்கும் பெண்குரல். என்பதை மகுட வாக்கியமாகக் கொண்டு அரங்கியல்> அறிவிப்பு> இதழியல்> உரையாடல்> கட்டுரை> கவிதை> சினிமா> குறும்படம்> சிறுகதை> செவ்வி> பதிவு> மடல்> விமர்சனம்> வேண்டுகோள் ஆகியவற்றைப் பிரிவுகளாகக் கொண்டுள்ளது.

பெண்களின் படைப்புக்களை வெளிக்கொண்டு வரும் சிற்றிதழ்களாக இருந்த சக்தி> கண்> ஊதா மற்றும் ஊடறு> பெண்கள் சந்திப்பு மலர்கள் ஆகியவற்றில் எழுதிய பெண்படைப்பாளிகள் ஊடறு இணையசஞ்சிகையில் இணைந்து எழுதுகிறார்கள். வெளிவந்த பெண்சஞ்சிகைகள் நின்றுவிட்ட நிலையிலே பெண்களின் எழுத்துக்களை ஒருமுகப்படுத்தும் பணியினை ஊடறு செய்து வருகின்றது. வருடாந்தம் நடைபெறும் பெண்கள் சந்திப்பு மலர்கள் பற்றிய செய்திகள் தகவல்கள் வெளிவருதல் இதன் சிறப்பசமாகும். புகலிட ஈழ தமிழகச் சூழலில் பெண்கள்> அவர்களின் பிரச்சினைகள்> அவை சார்ந்த உரையாடல்கள்> பெண் அமைப்புக்களின் செயற்பாடுகள்> என்பவற்றை வெளிக்கொண்டு வருகின்றது. பெண்ணியம் சார்ந்த உரையாடலுக்கான சிறந்த களமாகவும் தன்னை வளர்த்து வருவதோடு சமூக நல செயற்பாட்டிலும் பெண்படைப்பாளிகள் இணைந்து செயற்படுவது அறியமுடிகிறது.

அப்பால் தமிழ் (பிரான்ஸ்) இதுவும் ஒரு இணைய இதழாகும்.

“அப்பாலும் விரிகின்றது வேற்றுமைச் சூழல்
அணையாமல் எரிகின்றது நெஞ்சினில் தழல்
ஆற்றுப்படுத்தட்டும் அப்பால் எழும் தமிழ்”

என்பதை மகுட வாக்கியமாகக் கொண்டு 2002 இல் இருந்து வெளியாகின்றது. 1993 இல் வெளியாகிய ‘மெளனம்’ என்ற காலாண்டிதழில் (6 இதழ்கள் வெளிவந்தது) பங்கேற்றவர்கள் அப்பால் தமிழில் இணைந்து செயற்படுகிறார்கள். மட்டுப்படுத்தப்பட்ட பொது நோக்குக் கொண்ட கூட்டுறவு நிறுவனமாகவும் அப்பால் தமிழ் இணையத்தளத்துடன் அப்பால் தமிழ் நூல்வெளியீட்டு பதிப்பகமாகவும் இது செயற்படுகின்றது. சமூகம் கலை இலக்கியம் வரலாறு தத்துவம் அரசியல் பொருளியல் ஆகிய துறைகளில் அக்கறை காட்டுவதோடு குறுநாவல்கள் குறும்படங்கள்> ஒளிப்படங்கள் ஆகியவற்றையும் தாங்கி வருகிறது.

2.4 இணையத்தளம் மற்றும் வலைப்பூ (Website and blogspot)

புகலிடத்திலிருந்து வருகின்ற தனிநபர் இணையப்பக்கங்களையும் வலைப்பூக்களையும் (வலைப்பதிவுகள்) ஒன்றாக நோக்கலாம். இவையே இன்றைய புகலிட எழுத்துலகை அதிகமாகக் கொண்டு செல்பவை.
இணையத்தளம் என்பது ஒரு நிறுவனமோ> அமைப்போ தனிநபரோ தம்மைப் பற்றிய தரவுகளையும் தகவல்களையும் தமது செயற்பாடுகளையும் வெளிப்படுத்தப் பயன்படுத்தும் ஓர் ஊடகமாகும். இதில் தனியே எழுத்துத் தகவல்கள் மட்டுமல்லாமல் ஒலி ஒளி தகவல்களையும் இணைப்பதற்குக் கூடுதல் வசதி செய்து தரப்பட்டுள்ளது. தரவுத்தளங்கள்> செய்தித்தளங்கள்> இணையத்திரட்டிகள் இவற்றில் முக்கியமானவை. புகலிடப் படைப்பாளிகள் தனிநபராகவோ கூட்டாகவோ தமது படைப்புக்களைப் பதிவேற்றி அனைவருக்கும் பகிர்ந்துள்ளார்கள். தமிழில் மட்டும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட வலைப்பக்கங்கள் உள்ளதாக எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிடுகின்றார் (இணைய எழுத்து> pathivukal.com)

இணையத்தின் கட்டற்ற வெளியைப் பயன்படுத்துவதில் இன்று இணையத்தளங்களுக்கு அடுத்ததாகப் பேசப்படுவன வலைப்பதிவுகளே ஆகும்.
வலைப்பதிவுகள் 1997 இல் இருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதனை ஆங்கிலத்தில் Blog என்றும் தமிழில் ‘வலைப்பூ’ என்று அழைப்பர். இந்த வலைப்பூக்களில் தமது பதிவுகளைச் செய்வோர் வலைப்பதிவர் என்று அழைக்கப்படுவர். எல்லா வலைப்பதிவுகளையும் ஒருங்கிணைக்கும் இணையத்தளங்களும் உள்ளன. (இலவசமாக பதிவிடும் வசதியை வழங்குபவற்றில் blogger.com, wordprees.com ஆகியன பிரபலமானவை) வலைப்பதிவுகளைத் திரட்டிக் கொடுக்கும் பிரபல்யமான திரட்டிகளாக தமிழ்மணம்> திரட்டி>கொம்> தமிழ் 10.கொம்> தமிழிஷ்> தமிழ்வெளி தமிழ்ப்புள்ளி மற்றும் இலங்கையில் யாழ்தேவி ஆகியன உள்ளன.

“வலைப்பதிவு என்பது அடிக்கடி இற்றைப்படுத்துவதற்கும் கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்துவதற்கும் என சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப் படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் வலைப்பதிவுகளில் ஊடாடுவதற்குமான வழிமுறைகள் வலைத்தளங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்” (4)

சிற்றிதழ்கள் போலவே வாசிக்கக்கூடிய மிகக் கனதியான படைப்புக்கள் வலைத்தளங்களிலும் வலைப்பதிவுகளிலும் கிடைக்கின்றன. மிகப் பிரபல்யமான படைப்பாளிகள் முதல் புதியவர்கள் வரை தத்தமக்கென பக்கங்களை உருவாக்கி எழுதி வருகின்றார்கள்.

அ. முத்துலிங்கம்> எஸ். பொ> பொ. கருணாகரமூர்த்தி> ஷோபாசக்தி> றயாகரன்> வ.ந.கிரிதரன்> இளைய அப்துல்லா> டி.செ.தமிழன்> ப.வி சிறீரங்கன்> கறுப்பி> முல்லை அமுதன்> சந்திரவதனா செல்வக்குமரன்> சந்திரா ரவீந்திரன்> செங்கள்ளுச்சித்தன்> நளாயினி தாமரைச் செல்வன்> பெட்டை> சுகன்> ரமணிதரன்> பொறுக்கி> தேவகாந்தன் ஆகியோர் தொடர்ந்து எழுதுகிறார்கள்.

இவர்களுள் பொ. கருணாகரமூர்த்தி (karunah.blogspot.com) 2003 செப்ரெம்பரில் இருந்து பதிவிடத் தொடங்கியதே புகலிடத்தில் ஆக முதலில் வெளியாகிய வலைப்பதிவாக கட்டுரையாளரால் இனங்காண முடிந்துள்ளது. அதிகமானவர்கள் 2004 - 2005 காலத்திலிருந்தே பதிவிடலைச் செய்திருக்கின்றார்கள். ஆழியாள்> சாந்தி ரமேஷ் வவுனியன்> தான்யா> நட்சத்திரன் செவ்விந்தியன் இன்னும் பலரின் ஏற்கனவே பதிவிட்ட வலைப்பதிவுகள் பார்க்கக் கிடைக்கின்றன.

அன்றாடம் நாட்குறிப்பு எழுதுவது போலவும் எழுதமுடியும். எழுதும் படைப்புக்களுக்கு உடனுக்குடன் பின்னூட்டங்களைப் பெறமுடியும். இன்னொரு அம்சம் சுதந்திரமான வெளி. சஞ்சிகைகள்> பத்திரிகைகளில் தணிக்கைக்கு உட்படக் கூடியவற்றை எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி பதிவு செய்யலாம். ஒலிஒளிக் காட்சிகளை இணைக்கும் வசதியும் உண்டு. இதனாலேயே இன்று உலக அளவில் பேசப்படும் மிக முக்கிய ஊடகவெளியாக வலைப்பதிவுகளும் இணையத்தளங்களும் உள்ளன.

ஊடகவெளி மாற்றம்

80 களின் இருந்து ஒரு அலையாக பெருமளவிலான சஞ்சிகைகளில் புகலிடப் படைப்பாளிகள் எவ்வாறு எழுத ஆரம்பித்தார்களோ அந்த அலை 90 களின் நடுப்பகுதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைவடைய ஆரம்பித்தது.
இதற்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தியமையை அவதானிக்கலாம். ஈழத்திலிருந்து இனப்போராட்டத்தின் காரணமாக அதிகமான இளைஞர்கள் புலம்பெயர்ந்தனர். அந்தப் புலப்பெயர்வுக்கு பல காரணங்கள் இருந்தன. அவை இந்த சஞ்சிகை வெளியீட்டுக்கு செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தன. காலத்துக்குக் காலம் ஈழத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள்> அடக்குமுறையின் வடிவங்கள்> என்பன புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டன. அது 90 களின் நடுப்பகுதி வரை தொடர்ந்தது.

என்றாலும் அவர்கள் அரசியல் ரீதியாக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைப்பது கண்காணிப்புக்கு உள்ளாகியது. இதனால் சஞ்சிகைகளில் தொடர்ந்து இயங்குவதும் அச்சுறுத்தலாக அமைந்தது. இலக்கியச் செயற்பாட்டிலிருந்து ஒதுங்குவதும் தொடர்ந்து இயங்குவதும் மாற்றம் கண்டது.

இக்காலகட்டத்தில் உலகமயமாக்கலின் விளைவான இணையத்தின் செல்வாக்கும்> புலம்பெயர்ந்தவர்களின் பல்கலாசார சூழலும் இணையத்தினினூடாக அவர்களின் எழுத்துக்களைக் கொண்டு வருவதற்கு சாத்தியங்களை ஏற்படுத்தின. இணையம் என்ற கட்டற்ற வெளி கதையாடலுக்கான வெளியாக மாறியது. ஓரளவு கணனி அறிவு பெற்றவர்கள் படிப்படியாகத் தமது விமர்சனங்களையும் படைப்புக்களையும் இந்த வெளியில் வைப்பதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.

குறிப்பாக இணைய இதழ்களின் வருகையே இங்கு முக்கியமாக அமைந்தன. அதனோடு இணைந்த தமிழகத் தொடர்புகள்> தமிழகத்தில் பதிப்பகங்களின் வாய்ப்புக்கள் இன்னும் இந்த எழுத்துக்களை நூலாக்குவதற்கு ஏற்ற வாய்ப்பைக் கொடுத்தன. அதிகமான புகலிடப் படைப்புக்கள் 90 இன் பிற்பகுதியிலிருந்து நூலுருப்பெறுவதையும் இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.

எனவே> இந்த மாற்றங்கள் ஈழ அரசியலோடு மட்டும் தொடர்புடையனவல்ல. புலம்பெயர் தமிழர்களின் பல்கலாசார சூழலும் இதில் செல்வாக்குச் செலுத்தியிருப்பதை அவதானிக்கவேண்டும். இது புகலிடச் சஞ்சிகைச் சூழலில் வீழ்ச்சி எனக் கருதுவதற்குப் பதிலாக அவர்களின் எழுத்துக்கள் இன்னொரு தளத்திற்கு நகர்ந்துள்ளன எனக் கருதுவதே பொருத்தமாக இருக்கும். அந்த எழுத்துக்களே இணையம் என்ற கட்டற்ற வெளியில் இன்று தொடர்கின்றன.

அடுத்த கட்ட நகர்வு

“பெரும்பான்மையான இணைய இதழ்களின் பொது உள்ளடக்கம் சிற்றிதழ் ஒன்றின் வடிவம் போலவே உள்ளது. கதை கவிதை கட்டுரை ஒரு சினிமா பத்தி> கொஞ்சம் அரசியல் அல்லது விஞ்ஞானம் என்ற மரபான சிறுபத்திரிக்கை வடிவமே இன்றும் இணையத்தில் அதிகம் காணப்படுகிறது. இதை ஒரு குறையாகவே கருதுகிறேன். இணையத்தின் முழுமையான பலத்தை அறிந்து கொள்ளாமலே தான் இவை செயல்படுகின்றன.
வீடியோ> ஆடியோ மற்றும் ஓவியங்கள்> கூடுதல் தரவுகளுக்கான இணைப்புகள்> நேர்காணல்களின் தரவிறக்க வசதி> நேரடியாக எழுத்தாளருடன் தொடர்பு கொண்டு உரையாடுதல் என்று இணையத்தின் முக்கிய வசதிகள் இன்றும் இலக்கிய முயற்சிகளுக்காக மேற்கொள்ளப்படவில்லை” (5)

என்ற எஸ். ராமகிருஷ்ணனின் கூற்று இணைய எழுத்துக்களின் அடுத்த கட்ட நகர்வு பற்றிய சிந்தனையை முன்வைக்கின்றது.

இணையவெளியின் வாய்ப்பை எல்லாப் படைப்பாளிகளும் சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்ற கேள்வி முதலில் முக்கியமானது. புகலிட வாழ்க்கைச் சூழலைப் பிரதிபலிக்கக் கூடியதும் அனைத்துலகத் தளத்திற்கு எடுத்துச் செல்லக்;கூடியதுமான எழுத்து வகையறாக்கள் எவ்வளவு து}ரம் சாத்தியமாகியுள்ளன என்பது கவனத்திற் கொள்ளப்படவேண்டும். ‘நானும் இணையத்தில் எழுதுகிறேன்’ என்று சொல்வதற்காக எழுதும் எழுத்துக்களையும் ‘கட்டற்ற வெளியில் எதையும் எழுதலாம்’ என்ற எழுத்துக்களையும் கணக்கில் எடுக்கமுடியாது.

அடுத்து இணைய வெளியில் யுனிக்கோட் எழுத்துருக்களைப் பயன்படுத்துதல்> தேடு பொறிகளில் படைப்புக்களைப் பெறமுடியுமாறு பதிவேற்றுதல்> பழைய சிற்றிதழ்களை pdf கோவைகளாக மாற்றி ஆவணப்படுத்துதல்> அச்சில் வரும் இதழ்களை இணையத்திலும் வாசிப்பதற்கு வழிசெய்தல்> படைப்பாளிகள் மற்றும் படைப்புக்கள் பற்றிய விபரங்களை ஆவணப்படுத்துதல் ஆகியன இணையவெளியில் கவனத்திற் கொள்ளவேண்டிய ஏனைய முக்கிய அம்சங்களாகும்.


தொகுப்பு

இலத்திரனியல் உலகத்தில் தினந்தோறும் புதிய மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. அந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து எமது இருப்பை நிலைநிறுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உரியது. இந்த வகையில் தமிழ்ச் சூழலில் புகலிடச் சிற்றிதழ்களுக்கு இருக்கும் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. அவை இன்றைய உலகப் போக்குக்கு ஏற்ப மாற்றம் கண்டுள்ளன. சில பிரதிகள் மட்டுமே அச்சாகி சிலரின் கைகளிலேயே முடங்கிப் போயிருந்த படைப்புக்கள் மற்றும் கருத்துக்கள் இன்று உலகின் பார்வைக்கு கிடைத்து வருகின்றது.

புகலிடத் தமிழரது வாழ்வு> அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்> பல்கலாசார சூழலில் அவர்களின் இடம்> தமிழ்மொழி - தமிழ்ப்பண்பாடு ஆகியவற்றின் எதிர்காலம் என்பன பற்றியெல்லாம் ஆவணப்படுத்துவதற்கும் ஆராய்வதற்கும் அடுத்த கட்டம் நோக்கிச் சிந்தித்துச் செயற்படுவதற்கும் இவற்றில் வெளிவரும் படைப்புக்கள் முக்கியமாக அமைந்துள்ளன.
எனவே> புகலிடச் சிற்றிதழ்களும் அவற்றில் வெளிவந்த படைப்புக்களும் இன்று இணைய வெளியில் உலாவரும் காத்திரமான படைப்புக்களும் நூலுருப்பெறும்போது அவற்றின் பெறுமதியை தமிழ்ச் சூழல் கணித்துக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இந்தச் சிற்றிதழ்கள் அச்சில் வெளிவந்தாலும் இன்றைய உலகப் போக்கைக் கருத்திற்கொண்டு மின்னிதழ்களாகவும் தொடரவேண்டிய தேவையை இன்றைய இலத்திரனியற் சூழல் வலியுறுத்தி நிற்கின்றது. இதன் மூலம் படைப்புக்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளவும் அது சார்ந்த உரையாடல்களை நிகழ்த்தவும் அனைத்துலகத் தளத்திற்கு அவற்றை எடுத்துச் செல்வதற்குரிய வாய்ப்புக்கள் பற்றியும் சிந்திக்க முடியும். அது சாத்தியமாகி வருகின்றது என்பதையே இன்றைய சிற்றிதழ்ச் செயற்பாடுகள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

(கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் 08.01.2011 அன்று சிற்றிதழ் அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
-----
அடிக்குறிப்புகள்
(1) வல்லிக்கண்ணன்> ‘இலக்கியச் சிற்றிதழ்கள்’ http://www.encyclopediatamilcriticism.com/little_magazines.php
(2) கவிஞர் ப. பசுபதிராஜா> ஜேர்மனி>
http://tamilamutham.net/home/index.php?option=com_content&view=article&id=395:-20-&catid=55:germany&Itemid=415
(3) பேராசிரியர் அ. பசுபதி (தேவமைந்தன்)> ‘இணைய இதழா அச்சிதழா எது நீடிக்கும்’>
http://www.pathivukal.com/

(4) http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81

(5) எஸ். ராமகிருஷ்ணன்> ‘இணைய எழுத்து’> http://www.geotamil.com/pathivukal/s_ramakrushnan_on_internet_writing.htm

உசாவியவை
1. குணேஸ்வரன். சு : “புலம்பெயர் சஞ்சிகைகள் - ஆய்வுக்கான ஓர் அறிமுகம்”>
கலைமுகம்> ஜனவரி-ஜீன் 2008> இதழ் 47> ப3-7
2. குணேஸ்வரன். சு : “புலம்பெயர் சிற்றிதழ்களின் அரசியல்” 2010 ஆய்வரங்கச் சிறப்பு
மலர்> உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு> கோவை ப.325
(பின்வரும் சுட்டியினூடாக கட்டுரையை முழுவதும் வாசிக்கலாம் http://vallaivelie.blogspot.com/ அல்லது
http://kathiyaalkal.blogspot.com/2010_08_01_archive.html)
3. தீபச்செல்வன் : “இணையம் : அளவுகளையும் தாமதங்களையும் அகற்றிய
கட்டுப்பாடற்ற வெளி”> கலைமுகம்> 50 வது சிறப்பிதழ்> 2010>
ப225-228
4. ஹரன் : “இணையம்: கதையாடல்களுக்கான புதிய வெளி”> கலைமுகம்>
ஜீலை-டிசம்பர் 2007> இதழ் 46> ப3-9
5. http://www.google.com : இணைய இதழ்கள் மற்றும் வலைப்பதிவுகள்
6. http://www.noolaham.org
7. http://www.pathivukal.com/ : கணித்தமிழ் பிரிவில் உள்ள கட்டுரைகள்
8. http://www.tamilcircle.net
9. http://www.tamilmanam.net/
-----