Sunday, October 24, 2010

புகலிட இலக்கியமும் பண்பாடும்
-சு. குணேஸ்வரன்
அறிமுகம்

ஈழத்திலக்கியத்தின் அறாத்தொடர்ச்சியாக புகலிட இலக்கியம் கடந்த 80 களிலிருந்து வளர்ச்சியடைந்து வருகின்றது. 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் மேற்குலக நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் வாழ்வு பல்கலாசார சூழலுக்குள் பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வகையில் புகலிடத்திலிருந்து எழுதப்படுகின்ற கவிதை சிறுகதைகளை ஆதாரமாகக் கொண்டு புகலிடத்தமிழர்கள் மத்தியில் பண்பாடு பற்றி நோக்குகின்றது இக்கட்டுரை.

பண்பாடு

இனத்தாலும் மொழியாலும் பிறவற்றாலும் முற்றிலும் வேறுபட்ட சூழலில் புலம்பெயர்ந்;த ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதனாலே> அப்பண்பாட்டுச் சூழலின் தாக்கம் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்விலும் செல்வாக்குச் செலுத்த ஆரம்பிக்கின்றது.
புகழ்பெற்ற மானிடவியலாளரான ‘எட்வர்ட் பர்னட் டைலர்’ பண்பாடு என்பதற்கு பின்வருமாறு வரைவிலக்கணம் தருகிறார்.
“பண்பாடு என்பது அறிவு> நம்பிக்கை> கலை> ஒழுக்கநெறிகள்> சட்டம்> வழக்கம் முதலானவையும்> மனிதன் சமுதாயத்தில் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற திறமைகளும் பழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதியாகும்.”(பண்பாட்டு மானிடவியல்)
தமிழர் சமுகம் தன் இனக்குழுமத்துடன் தன் சொந்த நாட்டில் வாழ்ந்தால் இந்த முழுமைத் தொகுதியைக் கற்றுக் கொள்வதில் எந்தச் சிக்கல்களும் இல்லை. ஆனால்> புவிப்பரப்பிலிருந்து சிந்தனைவயப்பட்ட நிலை வரை எமது தமிழ்ப்பண்பாட்டோடு ஒப்புமை காண முடியாத சூழலில் அவர்கள் வாழ்கின்ற போது புதிய பிரச்சனைகளும் முரண்பாடுகளும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

புலம்பெயர்ந்தோர் கவிதையில் பண்பாடு

பண்பாடு பற்றிய சிந்தனை புலம்பெயர்ந்தவர்களில் எழுத்துக்களில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதற்கு ஆதாரமாக முதலில் கவிதைகளை நோக்குவோம்.
பண்பாட்டு மாற்றம் என்பது (culture change) புலம்பெயர்ந்தவர்களின் தொழில் முறையாலும் அவர்களின் அன்றாட நடைமுறைத் தேவைகளாலும் ஏற்பட்டு விடுகின்றன. இது கவிதைகளில் எப்படி முரணாக வருகின்றது என்பதைப் பார்ப்போம்.

“…………………………….
இன்று ஒரு தமிழ்த் திருமண நாள்
கோட்
அதற்கு மட்டுமான ரவுசர்
பொருத்தமான சப்பாத்து
ஒரு அவன்!
அவளோ எமது கலாசாரத்தைக் காவ வேண்டும்
குளிரோ வெயிலோ
கூனியோ குறுகியோ!
காவினாள்.
சாறி
தலையில் கனகாம்பரம்
நெற்றியில் பொட்டு
கழுத்தில்தாலி
போதாததிற்குஅணிகலன்கள்.
அதேஅவள்!
………………………
நாமோ வேட்டியைக் கொன்றவர்கள்.
சரத்தை எம் வீட்டுக் கதவுவரை மட்டும்
உலவ சுதந்திரம் கொடுத்தவர்கள்.
ஆனாலும் கோட் ரை உடன் மேடை ஏறி
எமது கலாசாரம் வேண்டி முழங்குவதிலும்
வெட்கம் கெட்டவர்கள்.
எங்களுக்கு வேண்டும் எங்கள் கலாசாரம்.
அச்சடித்தபடி!
அதைக் காவுவதற்கு பெண்களும் வேண்டும்.
தூ …!” (ரவி – சுவிஸ்)
இன்னொரு கவிதையில்;

“ புலம்பெயர்ந்து வந்ததனால்-நாம்
பொன் கொண்டோம் பொருள் கொண்டோம்
பெருந்தொகையில் கார் கொண்டோம்
தங்கத்தால் கத்தி செய்து பிள்ளைக்குத்தான் கேக்கு
வெட்டிவிட்டோம் …இதுபோல
குங்குமத்தின் மகிமைதனை
குலமகளும் மறந்துவிட்டாள்.
கரிய நெடுங்கூந்தல் கரைச்சலென்று
கன்னியரும் அறுத்துவிட்டார்- சூழ்நிலையால்
சீரான பட்டுச்சேலை பாரமென்று கிழவியரும்
ஜீன்சுக்குள் புகுந்துவிட்டார்.
புலம்பெயர்ந்து வந்ததனால் புதிய பெயர் கொண்டோம்
சுதந்திரமாய் பறந்தவெம்மை
ஒரு கூட்டுக்குள் தானடைத்தோம்
ஊருக்காய் உறவுக்காய் ஒருகணமும்
ஊராலும் உறவாலும் மறுகணமும்
உள்ளம் தானுடைந்து உருக்குலைந்து போகின்றோம்..”(அம்பி)

இந்த இரண்டு கவிதைகளின் அர்த்தப்படுத்தலுக்கும் கவிஞர்களின் காலத்திற்கும் இடையில் உள்ள தலைமுறை இடைவெளியை புரிந்துகொள்ள வேண்டும்.
நம்பிக்கைகள்> கருத்துக்கள்> வழக்காறுகள் ஆகிய அறிதல்சார்கூறுகளும் விழுமியங்கள்> நெறிமுறைகள்> விதிகள்> குடிவழக்குகள்> வழக்கடிபாடுகள்> மரபாண்மைகள்> அன்பளிப்புகள்> வழக்கங்கள்> பழக்கங்கள் ஆகிய நெறியியல் சார்கூறுகளும் எமது தமிழ்ச் சூழலில் இருந்து மெல்லமெல்ல விலகி> புதிய பண்பாட்டுச் சூழலில் பண்பாட்டு மாற்றத்தையும் (culture change)> பண்பாட்டுக் கலவையையும்; (culture comlex) ஏற்படுத்தும்போது அது பாரதூரமான தாக்கத்தை புலம்பெயர்ந்த தமிழரிடம் கொண்டுவருகிறது.

அவர்கள் பேசும்மொழி> பழக்கவழக்கங்கள்> எமது இளம் தலைமுறைகளுக்கு கிடைக்கின்ற கல்விச்சூழல்> அவர்களின் பிறநாட்டு நண்பர்களின் தொடர்புகள்> உறவுநிலைகள்> எமது மரபுகளை ஏற்றுக் கொள்வதில் காட்டும் தயக்கங்கள் எனப் பல விடயங்களைக் கூறலாம்.

குறிப்பாக மொழி நுண்மையான ஆய்வுக்குரியது. இது புலம்பெயர்ந்து வாழும் தலைமுறை இடைவெளிகளை மனங்கொண்டே கூறமுடியும். மொழியாயினும் சரி > அந்நாட்டுக் கலாசாரத்திற்கு ஏற்ற வாழ்வு முறையாயினும் சரி எமது தமிழ்ப்பண்பாட்டின் பார்வையில் முரண்பாட்டுக்கும் சிக்கலுக்கும் உரியதே.

பின்வரும் கவிஞர்களின் கவிதைவரிகளைப் பார்ப்போம்.
“ தமிழ் பேசி
கவி பாடி
கருத்துக்கள் கக்கிய
உதடுகள்
முரண்பாடு கொண்டு
சிக்கித் தவிக்கின்றன.
சிந்தனையும் தான்”(நிருபா)

“சூழல் மொழியே வாழும் மொழியாய்ச்
சுவைபட வளர்கிறது.
வாழும் மொழியாய் வளரும் மொழியாய்
வாயில் தவழ்கிறது.
நாளும் பொழுதும் நாவிலும் மொழியே
நமதாய் வருகிறது.
ஆளும் மொழியாய் நாளும் அதுவே
நாவில் திரிகிறது.”(அம்பி)

“இழந்தோம்
நாட்களை இழந்தோம்
உறவுகளை இழந்தோம்
பதிவுகளை இழந்தோம்
தேசத்தையும் மண்ணையும்
மொழியையும் மறந்து
புதிய தலைமுறை வாழ்கிறது”(செழியன்)

அச்சூழலில் பிறந்து கல்வி கற்று வாழும் மூன்றாவது தலைமுறைப் பிள்ளைகள் பிறப்பால் தமிழ்ப் பிள்ளைகளாக இருந்தபோதிலும், அவர்கள் வேற்றுமொழி பேசுபவர்களாக வளரவேண்டிய சாத்தியப்பாடுகள் தான் அதிகம்.

இங்கு பிரச்சனை மூன்றாவது தலைமுறையினருக்குத் தான். அவர்களிடம் எமது இனத்தின் அடையாளத்தை எவ்வாறு கையளிப்பது என்ற பிரச்சனை வருகிறது. இந்நிலையில் இன்று புலம்பெயர்ந்த பெரியவர்கள் எல்லாம் முன்நின்று கோயில்கள் சங்கங்கள் தமிழ் விழாக்கள் என்று சொல்லிக் கொண்டாலும் எமது அடையாளமாக மிஞ்சப் போவது தமிழில் அல்லாத பண்பாட்டுப் பேணுகைதான்.

“தமிழை தமிழ்ப் பண்பாட்டுக்கு அப்பாலே கொண்டு செல்லுகின்ற பொழுது> தமிழின் பண்பாட்டுப் படிமங்களிடையே தமிழைப் பேணுவது என்பது ஒரு முக்கிய பிரச்சனையாக இன்னுமொரு பத்தாண்டில் மேற்கிளம்பப் போகின்றது. அப்பொழுது தமிழ்த் தன்மையின் சாரம் என்ன என்ற கேள்வி மேலெழும்பும்”(பேரா கா.சிவத்தம்பி)
என்று பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களிள் கூற்று இன்னமும் பொருத்தமாகவே இருக்கின்றது.

நெறிமுறைகள் என்று வரும்போது மொழியை விடவும் மிகப் பாரதூரமான விளைவுகளை அந்நியக் கலாசாரம் எமது தமிழ்ப் பண்பாட்டுக்குள் ஏற்படுத்துகின்றது. தமிழர்களின் உறவுநிலைகளில் இந்த மாற்றம் நிகழ்தலை விரும்பியோ விரும்பாமலோ மறுத்தாக வேண்டிய கடப்பாடு எமது தமிழ் வாழ்வு நிலைக் கூடாக ஏற்படுகின்றது.

“நாளை உன் மகன்
எங்காவது ஒரு Bar இல் Disco வில் உரசக்கூடும்;
உறவு காதலாகக் கூடும்
எமக்கொரு பேரன்
கறுப்பு வெள்ளை அல்லது கலர்களில்
பிறக்கக் கூடும்.”(ஆதவன்)

“ ……………………………..
நான் அழகானவளா?
என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா?
பெண்ணே
நீ அழகானவள் என்பதில் எந்தப் பொய்யுமே இல்லை.
உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.” (கொய்யன்)

“ஆண்மோகம் பெண்போகம் காரணமாய்
வந்த நோய்க் கலப்பே.
ஆனாலும் இன்று அதிகம் பலியாவது
அப்பாவிக் குழந்தைகளே!” (மகேஸ்வரி)

உதாரணத்திற்காக மேலே குறிப்பிட்ட மூன்று கவிதைகளிலும் ஓடுகின்ற கவிதைச்சரடு யாதெனில்; ஒழுக்கவியலானது அந்நிய கலாசார வாழ்வுக்குள் கேள்விக்கு உள்ளாவதேயாகும். தனிமனித உணர்வுகள்> விருப்பு வெறுப்புக்கள்> பாலியற் தேவைகள்> உறவுநிலைகள் என்பவற்றில் இந்தக் கேள்வி அந்நிய கலாசார சூழலிலே தமிழ்ப் பண்பாட்டை கைக்கொள்ளல் என்ற வகையில் ஏற்படுகின்றது.
“1950 60 களில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் அமெரிக்காவை சொர்க்கம் என நம்பினார்கள். அவர்களின் பிள்ளைகள் 13>14 வயது வந்தவுடன் ‘டேற்றிங்’ போதைப் பொருள் பாவனை> ஆபாச தொலைக்காட்சி என்பவற்றிற்கு அடிமையாகி சிதைந்ததை தம் கண்ணெதிரே கண்டார்கள். இதேபோல் இங்கிருந்து புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் பணம் ஈட்டும் சுயநலத்தினால் தங்கள் பரம்பரைகளை மட்டுமல்ல அவர்களது அந்நியச் செலாவாணியின் முறையற்ற செல்வாக்கின் காரணத்தால் எங்கள் எதிர்காலப் பரம்பரையையும் சிதைக்கத் தான் போகிறார்கள்” (பேரா.கா.சிவத்தம்பி)
என்ற கருத்து சிந்தனைக்குரியது. மேலே குறிப்பிட்ட இக்கூற்றுக்கு பொருந்துமாற்போல் கவிதைகளை விட சிறுகதைகளையே எடுத்துக் காட்டலாம்

ஏனெனில் பண்பாடு என்பது ஓடுகின்ற நீரோடைபோல். காலத்திற்கும் மனித வாழ்வு நெருக்குவாரங்களுக்கும் ஏற்ப அடிப்படையை மாற்றாமல் சிலவற்றையே மாற்றுகின்றது. ஆனால் அந்நிய கலாசாரத்தில் இது பலத்த சிந்தனைக்கு உரியதாகும்.

“பண்பாட்டு மாற்றம் ஒரு சிக்கலான நிகழ்வாகும். இதைப் பல காரணிகள் இயக்குகின்றன. அவற்றுள் கண்டுபிடிப்புக்கள் வெளிப்படுத்துதல்கள்> பரவல்> பண்பாட்டுப் பேறு> ஓரினமாதல்> நவீனமயமாதல்> தொழில்மயமாதல்> நகரமயமாதல்> புரட்சி போன்றவை முதன்மையாகச் செயல்படுகின்றன.”(பக்தவத்சலபாரதி- பண்பாட்டு மானிடவியல்)

இந்தவகையில்> சிற்சில மாற்றங்களை புலம்பெயர்ந்த தமிழர் வாழ்வில் அந்நிய கலாசார சூழல் ஏற்படுத்துதல் தவிர்க்க முடியாது. இவ்விடத்தில் எமது தமிழர் சமுகம் பேணிவரும் மீளுருவாக்கம் பற்றியும் சிந்தித்தல் வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்டது போல் விழாக்கள்> சடங்குகள் முதலியனவற்றை புலம்பெயர்ந்த தேசத்திலும் நடவு செய்கின்றபோது எமது சமுக அடுக்குகளில் புரையோடிப் போயிருக்கும் அதிகாரம்> சாதி> வர்க்கம் என்பன மீண்டும் அங்கு முளைகொள்ளத் தொடங்குகின்றன. தமிழ்வாழ்வு> மேலைத்தேயவாழ்வு இரண்டிற்குள்ளும் மூச்சுத் திணறி வாழும் இரட்டை வாழ்வே இறுதியில் மிஞ்சிப்போகின்றது.

“சிரிக்க முயன்றும் தோற்றுப் போகிற
இயந்திர மனிதன் நான்.
இறால் போட்டு சுறா பிடிப்பவர்க்கிடையில்
அகப்பட்டதென்னவோ
தலைவிதிதான்.
எத்தனை நாளைக்குத் தானம்மா
சவாரி மாடென நிற்பது?
நுகத்தடி கண்டிய காயங்கள்
கழுத்தில் மாலை போல்.
ஊர் நினைப்பும் உற்றார் உறவினர் பற்றிய
துடிப்பும்/எப்போதாவது ஒரு நாள்
மண்ணுக்குத் திரும்பி வருகிறதான
கனவும் நினைவும்
நிழலாய்த் தொடரும் இரட்டை வாழ்க்கை.
குளத்து நீரில் தாமரை இலைபோல்
ஓட்டவும் முடியாது> வெட்டவும் முடியாது
தவிக்கிற மனது” (பாலகணேசன்)

என்று கூறுகின்ற குரல் தான் இன்றைய புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இரட்டை வாழ்வுக்கு பொதுமையான குரலாக ஆகிவிடுகின்றது.
“இந்தத் தமிழர்கள் செய்யவேண்டிய பணிகள் பல உள்ளன. அவற்றுள் முதலாவது தமக்குப் பின் வரும் சந்ததியின் தமிழ்த்தன்மையை (அடையாளத்தை) உறுதிப்படுத்திக் கொள்வதாகும். யாழ்;ப்பாணத்தையும் மட்டக்களப்பையும் நோர்வேயிலும்> கனடாவிலும் நாற்று நடவு செய்ய முனையாது அவ்வவ் நாடுகளின் பண்பாடுகளோடு எவ்வாறு இணைந்து கொள்வது என்பது பற்றிச் சிந்தித்து அடிப்படைத் தமிழ்ப் பிரக்ஞையை பேணிக் கையளிப்பதற்கான வழிமுறையை அறிவுபூர்வமாக மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் மொரிஷியசிலும் றெயூனியோவிலும் தமிழுக்கும்> தமிழருக்கும் ஏற்பட்ட கதிதான் இவர்களுக்கும் ஏற்படும்.” (‘புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஓர் அறைகூவல்’ என்ற டாக்டர் க. இந்திரகுமரின் நூலுக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் எழுதிய அணிந்துரையில்)

ஈழத்து நவீன கவிதையின் ஓட்டத்திற்கூடாகவே தடம் பதித்துச் செல்கின்ற புலம்பெயர் கவிதைகள் அதற்குள்ளேயே சில விலகலையும் நிகழ்த்தியிருக்கின்றன. அந்த விலகல் தமிழ்ப் பண்பாட்டால் பண்பட்ட மனங்களுக்கு கொஞ்சமும் பரிட்சயமில்லாத அந்நிய கலாசார வாழ்வுச் சூழலியே நிகழுகின்றது.

1. புதிய நிலவமைப்பு> அதற்கேற்ப இயற்கைச்சூழல்.
2. பல்கலாசார வாழ்வுப் பின்னணி.
3. மொழி வேறுபாடு.
4. வளர்ச்சியடைந்த சமூகம்.
என்பவற்றைக் கருத்திற் கொள்ளும்போது இவர்களின் படைப்புக்களையும் படைப்பு
மனோபாவங்களையும் புரிந்து கொள்ள முடியும். இதுவே ஈழத்து தமிழ் இலக்கியச் சூழலில் அதிகமும் பேசப்படாத அந்நியம்> தனிமை> நிறவாதம்> பாலியற்பிரச்சனை என்பவற்றை பொருளாகக் கொண்ட கவிதைகள் அங்கிருந்து வெளிவருவதற்கும் காரணமாக அமைந்துள்ளன. இவை அடிப்படையில் அவர்களின் படைப்புக்களில் புதிய உணர்வு உள்வாங்கல்களுக்கு இடங்கொடுத்து வெளிப்படுவதைக் கண்டுகொள்ளலாம்.

எமது மரபின்படி ‘தனித்திருத்தல்’ என்பது அதிகம் இல்லை. சங்க இலக்கியங்களும் கூட தலைவன் வேறு இடத்திற்கு தொழில் நிமிர்த்தம் சென்றாலும் குறிப்பிட்ட பருவ காலத்திற்கு இடையில் திரும்பி வருவேன் என்று வாக்குக் கொடுத்து விட்டே செல்கின்றான். பாலைநில ஒழுக்கமும் தலைவனுடன் தலைவி உடன்செல்லலையே குறிப்பிடுகின்றது. எமது மரபின்படி திருமணம் முடித்த பெண்; கணவன் வெளியூர் சென்றவிடத்து அவளின் தாய் தகப்பன் வீட்டில் தங்க வைக்கப்படுகின்றாள். ஆரம்பத்தில் இருந்த தாய்வழிச் சமூக அமைப்பும்> கூட்டுக்குடும்ப அமைப்புக்களும் கூட எப்போதும் தனித்திருத்தலை விரும்பியனவாக இல்லை. கூட்டுக்குடும்பம் பின்னர் உடைந்து கருக்குடும்பமாகியபோதும்> எமது உறவுமுறைகளும் தொடர்புகளும் பாரம்பரிய சடங்குகளிலும்> விழாக்களிலும்> நிகழ்வுகளிலும் தொடர்ந்து வாழ்ந்து வந்தன.
தனிமை வாழ்வும் உலகமயமாக்கல் கலாசாரத்திற்கு உள்ளே அமிழ்ந்து போன நிலையில் தனிமனிதனின் உணர்வுகள் ஒரு பொருட்;டாக கருதப்படவில்லை. எல்லாமே பிம்பங்களாகவும்> மாயைகளாகவும் மாறிப்போய் விடுகின்ற நிலையிலே மனிதனுக்கு அப்பாற்பட்ட சடப்பொருட்களும் உள் உணர்வுகளும் கவிதையாவதைக் கண்டுகொள்ளலாம்.

இன்றைய உலகமயமாக்கல் இதனை இன்னமும் வேகமாக்கியிருக்கின்றது. உலகமயமாக்கல்@ ‘கலாசாரத்தை’ பண்டமாகவும் பொருளாகவும் பார்க்கத் தொடங்கி விட்டதால் மனித உறவுகளும் உணர்வுகளும் பின்தள்ளப்பட்டு எல்லாமே இலாப நட்டக் கணக்காகி விடுகின்றன. இந்த கலாசாரத்துள் சிக்குண்டு போனமையைத்தான் இந்த புலம்பெயர் படைப்புக்களில் உள்ளடங்கியுள்ள சில கவிதைகள் எமக்குக் காட்டுகின்றன.


புலம்பெயர்ந்தோரின் சிறுகதைகளில் பண்பாடு

புலம்பெயர் கவிதைகளை விடவும் சிறுகதைகளில் தமிழர்தம் பண்பாட்டுப் பெறுமானத்தை மேலும் இலகுவாக அறிந்து கொள்ளமுடியும். புகலிடச் சூழலை மையப்படுத்திய தேர்ந்தெடுத்த சிறுகதைகளிலிருந்து இதனை ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டலாம்.
பண்பாட்டைப் பிரதிபளிக்கும் தனித் தொகுப்பு என்று அல்லாமல் அச்சூழலிலிருந்து எழுகின்ற படைப்பாளிகளின் சில கதைகளாவது இதனை வெளிப்படுத்தத் தவறுதில்லை.

வழிவழியாக எமது மூத்த தலைமுறைகள் மண்ணில் கைக்கொண்;ட மரபுகள் பழக்கவழக்கங்களை கைவிட முடியாத நிலையும்> அந்நிய கலாசாரத்துக்குள் தம்மை உடனடியாக மாற்றிக்கொள்ள முடியாத நிலையும் இங்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏற்படுகிறது. இளைஞர் யுவதிகளாக சென்றோர் இரண்டு கலாசாரத்துக்குள்ளும் ஒத்துப்போகவேண்டியோராய் உள்ளனர். புதிய தலைமுறைகள் பிறப்பால் தமிழராக இருந்தாலும் அவர்களின் மொழி> பழக்கவழக்கம் அந்தந்த நாட்டு கலாசாரத்திற்கு உட்பட்டதாகவே அமைந்து விடும் நிலை ஏற்படுகிறது.
இது குறிப்பாக இளைஞர் யுவதிகளின் செயற்பாடுகள் பெற்றோருக்கு பலவித நெருக்கடிகளை தோற்றுவித்து விடுகின்றது.

“அங்கு ஏற்படுகிற சமூக> உளவியல் மாற்றங்களால் எங்களுடைய ஆடைமுறைமை மாறுகிறது. வாழ்க்;கை முறைமை மாறுகிறது. அங்குள்ள சீதோசன நிலைகளால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். அங்குள்ள பாடசாலைகளில் கல்வி கற்கப்போகின்ற பிள்ளைகள் பிற பண்பாடுகளுக்கு பரிச்சயமாகி விடுகிறார்கள். அவர்கள் மற்றைய பண்பாடுகளின் அம்சங்களை நன்கு அறிந்தவர்களாக வருகிறார்கள். அந்தப்பண்பாட்டின் நியமங்கள் எங்கள் வீடுகளுக்குள் வருகிறது. இதனால் இரு வேறுபட்ட மனோநிலை வீடுகளில் ஏற்படுகிறது. பெற்றோர்கள் சடங்குகளை தமிழ்ப் பண்பாட்டைக் கொண்டவர்களாகவும்> பிள்ளைகள் அதை விரும்பாதவர்களாகவும் வளர்க்கப்படுகின்றனர். பெற்றோர்கள் இச்சடங்குகளை விரும்பக் காரணம் இந்தச் சடங்குகள்தான் அவர்களின் சமூக ஒருமைப்பாட்டிற்கான தளமாகும்” (பேரா.கா.சிவத்தம்பி)
என்ற கூற்று அங்கு வாழும் புதிய தலைமுறை பற்றி தெரிந்து கொள்ள உதவுகின்றது. மொழி புரியாமை மிக முக்கியமான பிரச்சனையாக உள்ளது. உடையில் இருந்து உறவுமுறைகள் வரை வித்தியாசமான வாழ்வுச் சூழலாக உள்ளபோது பண்பாட்டு நெருக்கடிகள் தமிழரை முரண்பட வைக்கின்றது.
சக்கரவர்த்தியின் ‘மனசு’>அ. முத்துலிங்கத்தின் ‘கொம்புளானா’> அளவெட்டி சிறிசுக்காந்தராசாவின் ‘மரபுகளும் உறவுகளும்’ > கலைச்செல்வனின் ‘கூடுகளும்’> ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘அரங்கேற்றங்கள’;> ரதியின் ‘நிறமில்லை’> >ஷோபாசக்தியின் ‘பகுத்தறிவு பெற்ற நாள்> தனது மற்றது நான்காம் பிரஜை>’ கோவிலூர் செல்வராஜனின் ‘புதிய தலைமுறை’> ஆசி. கந்தராஜாவின் ‘ஒட்டுக்கன்றுகளின் காலம்> முன்னிரவு மயக்கங்கள்’> ஆகிய சிறுகதைகளை உதாரணமாகச் சுட்டலாம்.

பொ. கருணாகரமூர்த்தியின் சிறுகதைகளில் ‘ஒரு கிண்டர்கார்டன் குழந்தையின் ஆத்ம விசாரங்கள் > விண்ணின்று மீளினும் > வண்ணத்துப் பூச்சியுடன் வாழ முற்படல்’> ஆகிய கதைகளில் இந்தப் பண்பாட்டு நெருக்கீட்டை அறிந்து கொள்ளமுடிகின்றது.

புலம்பெயர் தமிழர்களின் புதிய தலைமுறைகளுக்கு ஏற்படும் குழப்பங்களை ஒரு குழந்தையின் கேள்விகளிலும்> தந்தையின் பதிலுக்கூடாகவும்>பொ. கருணாகரமூர்த்தி எடுத்துக் காட்டுகின்றார். கடவுள் நம்பிக்கையும்> தத்துவமும் எமது அறிவார்ந்த செயற்பாடுகளுடன் ஒப்பிடப்படும்; போது ஒன்றுக்கொன்று முரணாக அமைகின்றது. இது புதிய தலைமுறைக் குழந்;தைகளின் மனங்களின் விசாரணையாக விரியும்போது விடைகூறமுடியாத நிலை தமிழ்ப்பண்பாட்டால் கட்டமைக்கப்பட்ட தலைமுறைகளுக்கு ஏற்படுகின்றது.

ஜேர்மனியில் வாழும் ஒரு தமிழ் இளைஞன் தாய்லாந்துப் பெண் ஒருத்தியுடன் வாழ முற்படும்போது அவனுக்குள் ஏற்படும் முரண்பாடுகளை வெளிப்படுத்துவதோடு> அவனைச் சூழ்ந்த தமிழ்ச்சமூகத்தின் ஒதுக்குதலுக்கு அவன் ஆளாவதையும் ‘வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்’ என்ற சிறுகதை சித்திரிக்கின்றது.

“சித்தார்த்தன் என்னைப் பாருங்கள் நல்ல தாம்பத்தியம் என்பது வெறும் மோகங்களாலோ செக்சினாலோ அமைந்து விடுவதில்லை. அங்கே ரசனைக்கலப்புகளும் கருத்துப் பரிமாற்றங்கள் இதெல்லாம் இருக்கவேணும். அப்போதுதான் அது சுவைபடும். எங்களுடைய வாழ்க்கையைப் பாருங்கள் குறைந்தபட்சம் எங்கள் சாப்பாட்டு ரசனையாவது ஒத்துப் போகின்றதாவென்று ……நான் கிராமத்தில் பிறந்து நாகரிகம் தெரியாமல் வாழ்ந்துவிட்ட ஒரு பட்டிக்காட்டுப் பெண். உங்கள் கவிதையிலும் இலக்கியத்திலும் தத்துவத்திலும் எனக்கு எக்காலத்திலும் ஈடுபாடு வரப் போவதேயில்லை. எனக்காக நீங்கள் உங்களின் எத்தனையோ உறவுகளையும் நண்பர்களையும் இழந்துவிட்டீர்கள். எதிர்காலம் பற்றி எனக்குத் தெரிகின்ற காட்சிகளையும் கோலங்களையும் இரண்டாவது மொழி ஒன்றில் எடுத்துச் சொல்ல எனக்குத் திறமை இல்லாமலிருக்கு வருந்துகிறேன். இது நானே எடுத்துக் கொண்ட தீர்க்கமான முடிவுதான்” (வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்)
என்று கூறும் தாய்லாந்துப் பெண்; சில நாட்களிலேயே பிரிந்து சென்றுவிடுகிறாள். இதனூடாக வேற்றுநாட்டுப் பெண்ணை திருமணம் செய்து வாழ்தல்; என்பது தமிழரைப் பொறுத்தவரையில் கடினம் என்பதே இக்கதையில் உணர்த்தப்படுகின்றது. இதுபோன்ற இளைஞர்களின் பிரச்சனைகளை உணர்த்தும் சிறுகதைகள் பல உள்ளன.
கலாமோகனின் அதிகமான சிறுகதைகள் பண்பாட்டு நெருக்கீட்டை ஐரோப்பிய கலாசாரப் பின்னணியில் மிக அருகருகாக வைத்துப் பார்க்கின்றன. இவரின் கதைகளில் தமிழ்ப்பண்பாட்டு ஒழுக்கவியல் மரபின் தகர்வை மிக நுண்மையாக அவதானிக்கமுடியும். தனிமை> இழப்பு> பாலியல் நெருக்கீடு> ஒழுக்கவியல் மரபின் தகர்வு அல்லது படிப்படியான வீழ்ச்சி என்பவற்றை இவரின் கதைகள் கூறுகின்றன.
கலாமோகனின் ‘நிஷ்டை’ தொகுப்பிலுள்ள ‘இரா>கனி> இழப்பு>ஈரம்> தெரு>’ மற்றும் உதிரியாக வெளிவந்த ‘புகார்> பாம்பு> 20 ஈரோ’ ஆகிய சிறுகதைகளையும் இதற்கு சான்றாக காட்டலாம். எம். வேதசகாயகுமார் ஈழத்தமிழ்ச் சிறுகதைகள் என்ற நீண்டதொரு கட்டுரையில் கலாமோகனின் படைப்புப் பற்றிக் கூறும்போது

“ஈழத்தமிழ் ஒழுக்கவியல் மரபின் மீது கலாமோகனின் படைப்புலகம் நிகழ்த்தும் கலகங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். ஈழத்தமிழ் ஆண்களோடு உலகின் வெவ்வேறு இனப் பெண்கள் உடலுறவு கொள்ள இச்சை கொள்கின்றனர். தயக்கமின்றி இவர்களால் உடன்படவும் முடிகிறது. ஒழுக்கவியல் மரபின் தகர்வை> கலாசார இழப்பை இவை உறுதி செய்கின்றன. ஆனால் இச்சுதந்திரம் ஈழத்தமிழ்ப் பெண்களுக்கு இவர் படைப்புலகில் மறுக்கப்படுகின்றது. இவர்களும் ஒழுக்கநெறி பிறழலாம். ஆனால் ஈழத் தமிழ் ஆண்களோடுதான். இந்த இரட்டை நிலைப்பாடு இவர்கள் படைப்புலக நேர்மையைக் குறித்த ஐயங்களைத் தோற்றுவிக்கின்றன.”
(வேதசகாயகுமார்)
பலத்த விவாதங்களை ஏற்படுத்திய நா. கண்ணனின் ‘நெஞ்சு நிறைய’> அரவிந் அப்பாத்துரையின் ‘அனுபவம் தனிமை’ என்பவற்றை சாருநிவேதிதாவின் ‘உன்னத சங்கீதம்’ கதையின் அருகருகாக வைத்துப் பார்க்கும்போதுதான் இந்த கலாசார நெருக்கீடு அல்லது ஒழுக்கவியல் மரபின் தகர்வு தொpய வருகின்றது ஆனால் கலாமோகனும்> ஷோபாசக்தியும் கருணாகரமூர்த்தியும் முன்வைக்கும் இந்நெருக்கீட்டை மேலே குறிப்பிட்ட மூவரின் படைப்புக்களுடனும் வைத்துப் பார்க்க முடியாது. ஆனால் கோட்பாட்டு ரீதியாக கருணாகரமூர்த்தியை தவிர்த்து மற்றவர்களின் படைப்புக்கள் ஒரே கோட்டில் வரக்கூடியவை.
கல்வி கற்கும் மாணவர்களின் நிலையோ வேறாக இருக்கிறது. தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு இடையிலான அவர்களின் புரிந்துணர்வில் தமிழ் - பிரெஞ்சு கலாசாரம் செல்வாக்குச் செலுத்துவதால்; முரண்பாடுகளுக்கு வழிவகுக்கின்றது. இதனை ரமேஸ் சிவரூபனின் ‘மலர்வு’ என்ற சிறுகதையில் நோக்கும்போது>
“எல்லாவற்றுக்கும் உச்சக் கட்டம்போல் அந்தச் சம்பவம் நடந்தது. அன்று வதனிக்கும் நீச்சல் வகுப்பு இருந்தது மாலையில் நான் அவர்கள் வீட்டிற்குப் போனபோது மிகவும் சோர்வாகக் கண்களெல்லாம் சிவந்து கட்டிலில் படுத்திருந்தாள். ஏன்? என்ன நடந்தது? எனக் கேட்டபோது> நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருக்கும்போது சக வகுப்பு மாணவனாகிய ஆப்பிரிக்க இளைஞனொருவன் என்னை நீருக்கடியில் அமிழ்த்தி கட்டிப்பிடித்தபடி நிறைய நேரம் வைத்திருந்தான். அதனால் மூச்சுத் திணறி களைத்து விட்டேன் என்றாள். எனக்குக் கோபம் வந்தது. இனிமேல் நீ நீச்சல் வகுப்பிற்குப் போகக் கூடாது.அந்த நாளில் மெடிக்கல் எடுத்துக் கொடுத்துவிடு என்றேன்………..ஏன் போகக்கூடாது? அவன் விளையாட்டாகத்தான் செய்தான். இது சாதாரணம். எல்லோரும் இப்படி அடிக்கடி விளையாடுவோம் என்றாள் வதனி. ………இல்லை இனிமேல் நீ போகவேண்டாம் என்றேன்.…………அவன் என்னை என்ன கெடுத்தா விட்டான்? நீ இப்போதெல்லாம் என் மீது சந்தேகப்படுகிறாய். நீ ஒரு சந்தேகம் பிடித்;த பிராணி. என்று கத்தினாள் வதனி. இது என் கோபத்தை அதிகாpத்தது. நிதானமிழந்து அவள் கன்னத்தில் அடித்து விட்டேன். என்னை அடிக்க நீ ஆர்? உன்னை எனக்குப் பிடிக்கவில்லை. உடனடியாக வெளியே போ இனிமேல் இந்த வீட்டுப் பக்கம் வராதே! எனப் பிரெஞ்சில் கத்தினாள் வதனி. எனக்கு வந்த கோபத்தில் அவளைத் தரக்குறைவாக ஏசிவிட்டு வெளியேறினேன். அவள் கொஞ்சம் து}ரத்தில் இருந்தபோது அவளுக்கிருந்த உரிமைகளைப் பற்றிப் பேசிய நான் அவள் எனக்குரியவளாகப் போகிறாள் என்ற நிலை ஏற்பட்டு மிக அண்மைக்கு வந்தபோது சந்தேகம் கொண்ட சாதாரண மனிதனாகிப் போனதை தாமதமாகவே உணர்ந்து கொண்டேன்.”(ரமேஷ் சிவரூபன்)
இந்தப்பண்பாட்டு நெருக்கடியை புரிந்து கொள்வதற்கு
1. இளைஞர்கள் தமிழர் அல்லாத பிற நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்தல்.
2. தாய் தந்தையரின் விருப்புக்கு மாறாக தமிழ் இளைஞர் யுவதிகள் பிறநாட்டு இளைஞர் யுவதிகளை நண்பர்களாக ஏற்றுக் கொள்ளல்.
3. பிறநாட்டுச் சூழலின் மத்தியில் அந்நாட்டுக் கலாசாரத்தையே கைக்கொள்ளல்.
ஆகிய நிலைமைகளின் ஊடாகவே இப் பண்பாட்டு நெருக்கடியை விளங்கிக் கொள்ளமுடியும். இது@ திருமணம்> நட்பு> உறவு> என்பவற்றுள் ஏற்படும் பண்பாட்டு மாற்றம் என்பதற்கு மட்டும் பொருந்தக் கூடியது. ஷோபாசக்தியின் ‘ரவுடி ரதி’ என்ற சிறுகதையில் முற்றிலும் பிரெஞ்சு கலாசாரத்துக்குள் மாறிவிட்ட யுவதி ஒருவரின் நடத்தைக் கோலங்கள் பெற்றோருக்கு பெரும் பிரச்சனையாகத் தோன்றுவதும் எடுத்துக் காட்டப்படுகிறது. இதேபோல்>
“தாங்கள் ஒழுக்கந் தவறி நடந்து கொண்டே தங்கள் சமூகப் பெண்பாலரிடம் தமிழ்ப் பண்பாட்டை கட்டிக் காக்க விழையும் ஆண் வர்க்கத்தினரின் முகத்திரைகளை ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் அரங்கேற்றங்கள்> சந்திராதேவியின் கலாசாரங்கள் ஆகிய கதைகள் கிழித்தெறிகின்றன.”( கலாநிதி நா. சுப்பிரமணியம்)

மனைவி பிள்ளைகளை ஈழத்தில் விட்டுவிட்டு வந்திருக்கும் ஒரு ஆணுக்கு அந்நிய நாட்டுப் பெண்ணுடன் ஏற்பட்ட நட்பு உடலுறவு வரை செல்ல முனையும்போது>
“வாயை மூடு அஞ்ஜெலா . நான்காண்டுகளுக்கு மேலாக என் ஸ்பரிசம் இன்றி எனது உடல் சுகம் கிட்டாமல் துப்பாக்கி வேட்டுக்களுக்கும் செல் அடிகளுக்கும் பயந்து கொண்டு என் மனைவி என் செல்வங்களுடன் உயிரைப் பாதுகாக்க அங்கே போராடிக் கொண்டிருக்கிறாள். உனது வாதம் வேண்டுகோள் நியாயமாகப் பட்டால் என் மனைவியும் அங்கே இந்த சுகத்திற்காக உன்னைப்போல் ஒருவனைத் தேடிப்போயிருக்கலாம்” (முருகபூபதி)
என்று லெ.முருகபூபதி ‘மழை’ சிறுகதையில் எழுதுவது> ஒருவகையில் புலம்பெயர்ந்த மண்ணில் பாலியல் ரீதியான தவறிழைத்தல்களை எடுத்துக்காட்டவும்> மறுபுறத்தில் அவர்களை சாpயான பாதையில் நெறிப்படுத்தலுக்காகவும் என்று கூறலாம்.
கருணாகரமூர்த்தியின் ‘வண்ணத்துப் பூச்சியுடன் வாழ முற்படல்> சுண்டெலி> கலைஞன்> தரையில் ஒரு நட்சத்திரம்> ஆகிய சிறுகதைகளும்> பார்த்திபனி;ன் ‘ஐம்பது டொலர்ப் பெண்ணே> தொpய வராதது> இழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ ஆகிய சிறுகதைகளிலும் இந்த உலகளாவிய மானிய நேயம் படைப்புக்களில் ஒன்றுபடுவதைக் கண்டுகொள்ளலாம்.
பார்த்திபனையும் கருணாகரமூர்த்தியையும் பொறுத்தவரையில்
1. புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்களின் செயற்பாடுகள்;.
2. அந்நிய கலாசார சூழலில் தமிழ்ப்பண்பாட்டு மனம் எதிர்கொள்ளும் மானிட அவலங்கள்.
3. பெண்கள் எதிர்கொள்ளும் உடல் உள சிதைவுகள்
ஆகியவற்றை தமது கதைகளில் வெளிப்படுத்துகின்றனர். மிகுந்த துயருடனும் கழிவிரக்கத்துடனும் வாசக மனங்களில் இரண்டு படைப்பாளிகளும் ஏற்றியும் விடுகின்றனர். நடுவானில் விமானம் வெடித்துச் சிதறியபோது யாருக்கும் தொpயாது செத்துப்போன பாலுவும்> கேட்ட காசு கொடுக்காததால் ஏதோ ஒரு நாட்டில் தெருவில் விட்டுவிட்டு வந்தபோது செத்துப் போன புனிதாவும்> பார்த்திபனின் கதைகளில் இந்த நூற்றாண்டை உலுக்கி விடக்கூடிய துயரக்கதைகளின் பட்டியலில் சேரக்கூடியவர்கள். ஆனால் பார்த்திபனிடத்தில் வெளிப்படும் துயர் கவிந்த கதைகள் கருணாகரமூர்த்தியிடம் மிக அடங்கிய குரலில் வெளிப்படுவதனையும் கண்டு கொள்ளலாம்.
இன்றைய புலம்பெயர்ந்த இளைஞர்களின்> புலம்பெயர்ந்தவர்களின் உண்மையான முகத்தைக் காட்டக்கூடிய கதைகளாக அவை இருக்கின்றன.
புலம்பெயர் வாழ்பனுபவத்தினூடாக சில முக்கியமான படைப்புக்களைத் தருபவர்களில் அடுத்து குறிப்பிட வேண்டியவர்கள் கலாமோகனும்> ஷோபாசக்தியும். இருவரிடமும் கதை> கதைமொழி> கதைக்குரிய வடிவம் என்பவற்றில் அதிக ஒற்றுமை காணக் கிடைக்கி;ன்றது.
1. நவீன எழுத்து வடிவம் சார்ந்த பிரக்ஞை.
2. தமிழர் ஒழுக்கவியல் மரபின் சரிவுகளை படைப்பில் கொண்டு வருதல்.
தமிழ்ப் பண்பாட்டால் கட்டமைக்கப்பட்ட மாந்தர்களின் ஒழுக்கவியல் மரபினை உலுக்கிவிடக்கூடியவையே இவரது சிறுகதைகள். ஆண்-பெண் உறவுநிலை குறித்தும்> சமூகத்தில் மறைந்திருக்கும் பிறழ்வான நடத்தைகள் குறித்தும்> இவரின் கதைகள் கேள்வி எழுப்புகின்றன. அவற்றை எந்தவித விமர்சனமுமின்றி> பூடகமுமின்றி சமூகத்தின் முன் வைக்கும் கலாமோகன@;; பலத்த விவாதங்களுக்குரிய களங்களையும் தோற்றுவித்திருக்கின்றார். இவரின் ‘கனி’ என்ற கதை தமிழ்நாட்டில் மிகுந்த விவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட கதை. ‘ஈரம்> கனி> இழப்பு> 20 ஈரோ> ஆகிய கதைகளை இவ்வாறு குறிப்பிடலாம்.
‘ஜெயந்தீசன் கதைகள்’ தொகுப்பில் சமூகத்தின் மீது கலாமோகன் வைக்கும் குற்றச்சாட்டுகள் பல. போலி> ஆடம்பரம்> சாதி> சீதனம்> கண்மூடித்தனமான மரபுப் பேணுகை என்பவற்றை ஜனரஞ்சக ஊடகத்திற்குரிய மொழி நடையில் முன்வைக்கின்றார். தமிழரின் தற்கால வாழ்வின் மீதான கேள்வியாக அமையும் இக்கதைகள் புலம்பெயர் படைப்புலகில் இன்னொரு தளத்தில் முக்கியமானவை.
ஏற்கனவே கலாமோகனுடன் ஒப்பிட்டவாறு தமிழ்ப்பண்பாட்டின் சரிவுகளை வெளிப்படு;த்தும் பல கதைகள் ஷோபாசக்தியிடமும் உள்ளமை உள்ளார்ந்து நோக்கும்போது புலப்படும். ‘பகுத்தறிவு பெற்ற நாள்> பத்துக் கட்டளைகள்> காய்தல்’ ஆகியன இவ்வகையில் ஆய்வுக்குரியன.

முதல்முதலில் ‘பயண இடைவெளியில்’ பெண் உடலும் உளமும் சிதைக்கப்படல் மிகத் தாமதமாகவே புலம்பெயர் படைப்புலகில் வெளிப்படுகிறது. அந்த வெளிப்பாடுகளில் மூன்று கதைகள் மாத்திரம் இதுவரை கிடைத்துள்ளன. ஒன்று ஷோபாசக்தியின் ‘தனது மற்றது நான்காம் பிரஜை’> ஏனையவற்றுள் சுமதிரூபனின் ‘யாதுமாகி நின்றாள்’> பார்த்திபனின் ‘வந்தவள் வராமல் வந்தாள்’ ஆகியவை. இந்த அனுபவம் முதல் முதலில் இவர்களிடமே பதிவாகின்றது.

தொகுப்பு
புலம்பெயர்ந்த தமிழரின் வாழ்க்கை இன்று பல்வேறுவிதமான நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. அது மொழியிலும்> குடும்ப உறவுநிலைகளிலும்> இனம் சார்ந்த மரபுவழிப்பட்ட பேணுகையிலும் பலத்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
ஆனாலும் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் (கனடா - ரொரன்ரோ) தமிழர்கள் குவிந்து வாழ்கின்ற சூழல் இன்று ஏற்பட்டிருப்பதனால் மொரீசியஸில் தமிழுக்கும் தமிழ்ப்பண்பாட்டுக்கும் நேர்ந்த அவலம் போல அச்சப்படவேண்டிய அவசியம் இப்போது இல்லை.
சில தலைமுறைகளுக்குப் பின்னர் தமிழ்ப்பண்பாடு அதன் அடையாளமாகப் பேணுவது தொடரக்கூடும். அது தமிழ் மொழியினூடாக அல்லாத அந்தந்த நாட்டு மொழி உணர்வுக்கூடாகவே தொடர வாய்ப்புண்டு. இந்த நிலையில் எமது அடையாளத்தைப் பல விதத்திலும் கட்டிக்காக்க வேண்டிய தேவை தாய்ச்சமூகத்திற்கும் புலம்பெயர்ந்த சமூகத்திற்கும் பொறுப்பான கடமைகளாகவுள்ளன. இதனை இலக்கியத்திற்கு ஊடாக மட்டுமன்றி சமூகவியல் மொழியில் பண்பாட்டு ஆய்வுகளினூடாகவும் நோக்கினால் மேலும் பல உண்மைகள் வெளிவர இடமுண்டு.
(இலங்கை திருகோணமலையில் கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் காணி காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய தமிழ் இலக்கிய விழா 2010 ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
---
உசாத்துணை

1. பக்தவத்சலபாரதி ; 1999> பண்பாட்டு மானிடவியல்> சென்னை> மணிவாசகர் பதிப்பகம்.
2. சிவத்தம்பி கா. பேராசிரியர் ;1988> தமிழ்ப்பண்பாட்டின் மீள்கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும். கொழும்பு.
3. நித்தியானந்தம். வி கலாநிதி ;2002> புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழாpன் பண்பாட்டுத் தனித்துவம்- சில அவதானிப்புகள்> கொழும்பு தமிழ்ச் சங்கம்.
4. குணேஸ்வரன். சு : 2006> “இருபதாம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் கவிதை புனைகதைகள் பற்றிய ஆய்வு” (பதிப்பிக்கப்படாத முதுதத்துவமாணி ஆய்வேடு) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்> உயர்பட்டப் படிப்புகள் பீடம்.
5. புலம்பெயர்ந்தோர் கவிதைகள் (தேர்ந்தெடுத்தவை)
6. புலம்பெயர்ந்தோர் சிறுகதைகள் (தேந்தெடுத்தவை)
---Wednesday, August 11, 2010

புலம்பெயர் சிற்றிதழ்களின் அரசியல்
சுப்பிரமணியம் குணேஸ்வரன்
அறிமுகம்
இலங்கையில் 1980 களிலிருந்து முனைப்புப் பெற்ற இனப்போராட்ட சூழலின் தாக்கத்தினால் வடக்கு கிழக்குப் பிரதேசம் உள்ளிட்ட பெருமளவான ஈழத்தமிழர்கள் மேற்குலக ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனால் ‘புலம்பெயர் இலக்கியம்’ என்ற புதியதொரு வகைப்பாடு தமிழ் இலக்கியத்தில் கவனம் பெற்றது.

புலம்பெயர் இலக்கியச் செயற்பாடுகள் 80 களிலிருந்து முன்னெடுக்கப்படுவதற்கு அங்கிருந்து வெளிவந்த சிற்றிதழ்கள் அடிப்படையாக அமைந்திருந்தன. இன்றுவரையான கணக்கெடுப்பின்படி 150 ற்கும் மேற்பட்ட பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் வெளிவந்துள்ளமை ஆய்வுகளினூடாக(1) அறியப்படுகிறது. அவற்றுள் சிற்றிதழ்களின் அரசியலை உசாவுதலே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
/செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைசெம்மொழி மாநாட்டு உரையை நேரடியாக செவிமடுக்க இங்கே அழுத்துங்கள்!
சிற்றிதழ்களும் வெளியீட்டாளர்களும்
புகலிடச் சிற்றிதழ்களின் வெளியீட்டுக்கு முற்றிலும் தனிநபர் சார்ந்த செல்வாக்கு மட்டுமல்லாது அரசியல், சூழலியல், பண்பாடு ஆகியனவும் காரணமாக அமைந்தன.
புகலிட மண்ணில் வாழ்ந்த ஈழத்தமிழர்கள் தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்வதற்கு ஓர் ஊடகம் தேவைப்பட்டது. அவர்கள் சிறுசிறு குழுக்களாகவும் அமைப்புக்களாகவும் இணைந்து இலக்கியச் சந்திப்புக்களை நடத்தியுள்ளனர். அவற்றின் அடிப்படையில் சிற்றிதழ்களைக் கொண்டு வந்து அவற்றினூடாகத் தாயகம் பற்றியும் புகலிடம் பற்றியும் தமது வாழ்வு பற்றியும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எவ்வாறான தகுதிநிலையில் இருந்தார்கள் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. புகலிடச் சிற்றிதழ்களை நடத்தியவர்கள் எல்லாம் இதழியலை ஒரு கற்கை நெறியை முறையாகக் கற்றுக் கொண்டு வந்தவர்கள் அல்லர். எழுத்துலக அனுபவமும் பத்திரிகை அனுபவமும் பெற்ற சிறிய வகுப்பினரே இவர்களுள் இருந்துள்ளார்கள். இவர்கள் தாம் சார்ந்த அரசியல் தளத்தைத் சேர்ந்தவர்களை இனங்கண்டு குழுவாகவே இயங்கத் தொடங்கினர்.

1.ஆயுதப் போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள்.
2.இலங்கை அரச படைகளின் அச்சுறுத்தலுக்கு ஆளானவர்கள்
3.தமிழ்ப் போராளி இயக்கங்களின் முரண்பாடுகளில் சிக்கித் தப்பியவர்கள்.

இதனாலேதான் சிற்றிதழ்களை நடாத்தியவர்களில் அதிகமானவர்கள் அரசியலுடன் தொடர்புபட்டவர்களாக இருந்துள்ளார்கள். இவர்களுக்கு உயிரைக் காத்துக் கொள்வதே அப்போது முதற் தேவையாக இருந்தது. உழைப்புக்காகப் புலம்பெயர்தல் என்பது அடுத்தகட்டமாகவே இருந்தது. இந்தநிலையில்தான் இலக்கியமும் அரசியலும் தொடர்புபடலாயிற்று.

சிற்றிதழ்களின் உள்ளடக்கமும் வடிவமும்
1985 இல் மேற்கு ஜேர்மனியில் இருந்து வெளிவந்த ‘தூண்டில்’ என்ற சஞ்சிகையே புலம்பெயர் படைப்பாளிகளிடம் இருந்து வெளிவந்த முதலாவது சஞ்சிகையாகக் கருதப்படுகின்றது. கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், நூல் அறிமுகம், நிகழ்வுகளின் பதிவுகள், நாடகம், சினிமா, கேலிச்சித்திரம், ஓவியம், வாசகர் கருத்து ஆகிய இலக்கிய வடிவங்களையும் வகைப்பாடுகளையும் புகலிடச் சிற்றிதழ்கள் உள்ளடக்கமாகக் கொண்டிருந்தன.

சிற்றிதழ்கள் தமக்கெனத் தனித்துவமான வடிவத்தையும் கொண்டிருப்பது முறையான ஒர் ஒழுங்காகும். புகலிடத்திலிருந்து வெளிவந்தவற்றுள் முதலாவது அதனை வெளியிடுபவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது. தனிச்சுற்றுக்கு விடப்படும் இதழ்களாக அவை ஆரம்பத்தில் அமைந்திருந்தன. நிறுவனம் சார்ந்த பங்களிப்புடன் சில இதழ்கள் வெளிவந்துள்ளன. (2) மற்றும் தனிநபர்களாலும் குழுக்களாலும் கொண்டு வரப்பட்டவையே அதிகம். இவை அச்சுவடிவம் பெறுவதற்கு படிப்படியாக எடுத்த முயற்சிகள் கவனத்திற் கொள்ளவேண்டிவையாகும்.

(1)கையெழுத்துப் பிரதியாக (Hand Writing) எழுதப்பட்டு பின்னர் அவை பல பிரதிகளாகப் (Photo Copy) படியெடுக்கப்பட்டன. (உ+ம் :- தூண்டில், அ ஆ இ, புதுமை)
(2)தட்டச்சுச் செய்யப்பட்டு (Typing) பின்னர் பல பிரதிகளாகப் படியெடுக்கப்பட்டன. (உ+ம் :- தேனீ, சுவடுகள்)
(3) ஏற்கனவே அச்சில் (print) வெளிவந்தவை தெரிவு செய்து வெட்டியெடுக்கப்பட்டு ஒரே அளவில் பிரதிசெய்யப்பட்டன. (உ+ம் :- இரவல் தூண்டில்)
(4)அச்சு வடிவம் பெற்றவை (உ+ம் :- 90 களில் வெளிவந்த ‘காலம்’)
(5) கணனியில் தட்டச்சுச் செய்யப்பட்டு பிரதியெடுக்கப்பட்டன (உ+ம் :- 90 களில் வெளிவந்த பல சஞ்சிகைகள்)
(6) கணனிப் பதிப்பு - தற்போது வெளிவரும் சஞ்சிகைகள் எல்லாம் (உ+ம் :- யுகமாயினி, உயிர்நிழல், காற்றுவெளி, காலம், எதுவரை)

சிற்றிதழ்களின் அரசியல்
சிற்றிதழில் வெளியாகும் ஆசிரியர் தலையங்கம் அவற்றின் அரசியலை வெளிப்படுத்தப் போதுமானதாக இருப்பதைக் கண்டு கொள்ளலாம். புகலிடத்திலிருந்து வெளிவந்த தேனீ, உயிர்ப்பு, கலப்பை ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர் தலையங்கத்திலிருந்து ஒரு பகுதி பின்வருமாறு அமைந்துள்ளது.

“நாள்தோறும் யுத்த சூழ்நிலைகளில் மரணத்துடனும், பட்டினியுடனும் போராடிக் கொண்டும், அகதிகளாக அலைந்தபடியும், தமது கருத்துச் சுதந்திரத்தையும் முற்றாகப் பறிகொடுத்தும் இருக்கும் வடக்குகிழக்கு சாதாரண மக்களிடையே வெளிப்படையான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளுவது கடினமாகவே இருக்கின்றது. மாற்றுக் கருத்து தெரிவிப்பதற்கான உரிமை அங்கு முற்றாக இல்லாத நிலை விஸ்வரூபம் எடுத்துள்ளது. எனினும் இந்த நிமிடம் வரை அரசின் ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருக்கும் மக்களிடையே அரசிற்கெதிரான எதிர்ப்புணர்வு என்பது ஒன்றும் புதிதாகக் காட்டப்படவேண்டிய ஒன்றல்ல. ஆனால் அதை சரியான திசை வழியில் அணுக முடியாத வகையில் இன்றைய யதார்த்த நிலை அமைந்துள்ளது”(3)

“தமிழ் மக்களது தேசிய விடுதலைப் போராட்டத்தில் தோன்றியுள்ள இன்றைய தேக்க நிலையைக் களைந்து போராட்டத்தை புரட்சிகரமாக முன்னெடுக்க வேண்டும் என்ற அக்கறை தமிழ் மக்கள் மத்தியிலுள்ள முன்னேறிய பிரிவினரிடையே பரவலாகக் காணப்படுகின்றது. இன்றைய பாசிச தலைமைக்குப் பதிலாக உண்மையான புரட்சிகர மாற்றை (Real Revolutionary Alternative) உருவாக்குவது பற்றியும் அதிகம் பேசப்படுகிறது”(4)

“அவுஸ்திரேலியா போன்ற பல்லின மக்கள் வாழ்கின்ற நாடுகளில் ஒவ்வொரு இனமும் தனித்துவத்துடனும் தமது அடையாளத்தைப் பேணியும் வாழ்வது கடினமானது. இது கடலில் எதிர்நீச்சல் போடுவது போன்றது. புகுந்த புதிய இனத்தினர், குறிப்பாக இளையோர் புகுந்த நாட்டின் பழக்கவழக்கங்களில் ஊறிப் போவதும் அவர்கள் அவுஸ்திரேலியராக தம்மை நினைப்பதும் மாற்றிக் கொள்வதும் இயல்பு. தமிழர்களை தமது அடையாளத்துடனும் தமிழ் உணர்வுடனும் இங்கு வாழ வழிசெய்ய பல அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் உதவி வருகின்றன. ஆனால் எல்லாமே எமது வீடுகளிலிருந்தே ஆரம்பிக்கின்றன என்பது உண்மை. நாம் நமது கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும்”(5)

இவற்றைக் கவனத்திற் கொள்ளும்போது சிற்றிதழ்களின் அரசியல், காலம், ஈழச்சூழல் என்பன தெளிவாகப் புலப்படுகின்றன. பொதுவாக வெளிவந்த எல்லாச் சிற்றிதழ்களும் முன்வைத்த பொருட்பரப்பை பின்வருமாறு வகைப்படுத்திப் பார்க்கலாம்.
1.தமிழ்ப் போராளிகளின் அரசியல் நிலைப்பாடு
2.தமிழ்ப் போராளிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலை
3.இலங்கைஅரச படைகள் தமிழ் மக்கள் மீது நடத்திய வன்முறைகள்
4.இந்தியப் படைகள் தமிழ் மக்கள் மீது நடத்திய வன்முறைகள்
5.தமிழர்களுக்கான அரசியல் அதிகாரம்
6.தமிழ்மொழி தமிழ்ப்பண்பாடுப் பேணுகை
7.சாதிய மேலாதிக்கம்
8.புகலிடச் சூழலில் ஈழத்தமிழர்கள் எதிர்கொண்ட நிறவாத இனவாத வன்முறைகள்
9.மூன்றாம் உலக நாடுகள் மீது வல்லரசுகளின் ஆதிக்கம்
10.குடும்பத்திலும் வெளியிலும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள்
11.நவீன கதைசொல்லல் முறை
12. இலக்கியத்தில் புதிய வடிவங்களைப் பரீட்சித்தல்

ஆகியவற்றை புகலிடச் சிற்றிதழ்கள் முதன்மையாக முன்வைத்தன. இவற்றினை மையமாகக் கொண்டே அதிகமான படைப்புக்கள் வெளிப்பட்டன.

எதிர்ப்புக்கூறு
சிற்றிதழ்களில் வெளியாகும் படைப்புக்களைப் பொறுத்தவரையில் அவை அரசியல் ரீதியில் வைத்துப் பார்க்கவேண்டியவை. படைப்புக்களில் அரசியலுக்கு முதன்மை கொடுக்கும் போக்கு 80 களில் இருந்து தொடர்கிறது. சிற்றிதழ்க் குழுக்களின் தெரிவு சிறுகதையாகவோ கவிதையாகவோ கட்டுரையாகவோ ஓவியமாககவோ இருந்தாலும் அது அரசியல் ரீதியில் முதன்மை பெறவேண்டும் என்பதே.
அரசியல் விமர்சனம் அதிகமும் உயிர்ப்பு, தூண்டில், சமர், ஆகியவற்றில் முன்வைக்கப்பட்டன. அவற்றில் இலங்கை அரச படைகளின் மீதானதும் அரச ஆட்சியாளர்கள் மீதானதும் ஒருபுறமெனில் மறுபுறம் ஈழத் தமிழ்ப் போராளிகள் மீதானதாக இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் போராளிகள் தமக்குள்ளேயே முரண்பட்டுக் கொண்டமையும் மோதத் தொடங்கியமையும் இயக்கங்களின் மீதான அதிருப்திக்குக் காரணமாக அமையலாயின.

இவற்றுக்கு அப்பால் 90 களில் இந்தியப்படைகள் மீதான விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. மேலும் ஒரு பகுதியாக மூன்றாம் உலக நாடுகளின் மீது அடக்குமுறையையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்தும் வல்லரசுகளை நோக்கிய விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, சக தமிழ்ப் போராளிக் குழுக்கள் மீது அடக்குமுறையை வெளிப்படுத்தியமை என்பவற்றுக்காக கால் நூற்றாண்டுக்கு மேல் ஈழத்தில் முதன்மை பெற்றிருந்த விடுதலை அமைப்பே அதிகமும் புலம்பெயர்ந்தவர்களின் சிற்றிதழ்களில் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. இந்த அடிப்படையிலான எதிர்ப்பு அரசியலை முன்னிறுத்தி கணிசமான புகலிடச் சஞ்சிகைகள் வெளிவந்துள்ளன. அவற்றுள் தூண்டில், இரவல் தூண்டில், சமர், புதுமை, உயிர்ப்பு என்பன முக்கியமானவை.

பெண்ணிய எழுத்துக்கள்
மேற்குலகில் பேசப்பட்ட பெண்ணிய அரசியல் தமிழ்நாட்டிலும் புகலிடத்திலும் மேலும் முன்னெடுக்கப்பட்டபோது பெண்கள் தங்கள் பிரச்சனைகள் பற்றித் தாமே பேசவும், தமக்கெதிரான வன்முறைகளை எதிர்க்கவும், இலக்கியத்தில் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்தவும் தலைப்பட்டனர் இதற்கு புகலிடத்திலிருந்து வெளிவந்த சிற்றிதழ்கள் அவர்களின் கருத்துக்களைச் சுமந்து செல்வதற்கான ஊடகமாக இருந்துள்ளன.

ஆரம்பத்தில் வெளிவந்த சஞ்சிகைகளில் ஆண்களே எழுதி வந்தாலும் அவர்கள் இயக்க செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என்பதனால் இயல்பாகவே பெண்கள் தொடர்பாக முற்போக்குப் பார்வையுடன் தமது கருத்துக்களை முன்வைத்தனர். ஆனால் அவை ஆணாதிக்க மனோநிலையுடன் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்ப்பது பெண் எழுத்துக்களின் முதற்கட்டமாக இருந்தது. மறுபுறம் ஆணாதிக்க கருத்தியல் மனோபாவத்துடன் எழுத்துக்களை மறுத்து பெண்ணிய அரசியலை முன்வைக்கும் படைப்புக்களை எழுதுவது என்பது அதன் இரண்டாவது கட்டமாக இருந்தது. இதனாலேயே பெண்ணிய எழுத்துக்கள் பெண்களிடம் இருந்தே வரவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இந்த அடிப்படையில் வெளிவந்த சிற்றிதழ்களுள் கண், சக்தி, ஊதா, ஆகியனவும் ஊடறு, பெண்கள் சந்திப்பு மலர், ஆகிய மலர் வெளியீடுகளும் கவனத்திற் கொள்ளத்தக்கவையாகும்.

புதிய கதைகளும் புதிய வடிவங்களும்
மாற்றுக் கருத்துள்ளவர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடியவாறு சில சஞ்சிகைகளில் வெளிவந்த படைப்புக்கள் அமைந்திருந்தன. அவற்றின் நோக்கம் தனியே அரசியலை முன்னெடுப்பது மட்டுமல்ல. நவீன இலக்கியத்தின் அண்மைக்காலப் போக்குகளையும் முன்னெடுப்பாதாகும். அம்மா, உயிர்நிழல், எக்ஸில், காலம், ஆகிய சிற்றிதழ்கள் தொடர்ந்து இப்பணியைச் செய்துள்ளன.

ஆக்க இலக்கியங்களாகிய கவிதை, சிறுகதைகளில் வித்தியாசமானவற்றை முன்வைத்ததோடு வடிவம் சார்ந்த மீறல்களையும் நிகழ்த்த இச்சிற்றிதழ்கள் இடங்கொடுத்தன. அம்மா, உயிர்நிழல், எக்ஸில் ஆகியவற்றில் வெளிவந்த சிறுகதைகளிற் சில புதிய வடிவங்களையும் புதிய கதைகளையும் முன்வைத்ததோடு சில கதைகள் தொடர்ச்சியான விமர்சனத்துக்கும் உள்ளாகின. கலாமோகன், அரவிந் அப்பாத்துரை, நா. கண்ணன், ஷோபாசக்தி, ஆகியோரின் கதைகள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டமைக்கு அவை எடுத்துக் கொண்ட புதிய கதைகளும் வடிவமும் காரணமாயின. இதேபோல் கவிதைகளும் கவனத்திற் கொள்ளப்பட்டன.
பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம், எதிர்ப்பிலக்கியம் ஆகியவற்றில் மிகக் கூடிய கவனம் செலுத்தியமையால் தமிழ்நாட்டு சிற்றிதழ்களுக்கு இணையாக இவை மதிப்பிடப்பட்டன.

முடிவுரை
புலம்பெயர் இலக்கியம் அனைத்து மட்டத்திற்கும் முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கு சிற்றிதழ்கள் அளப்பரிய பணியினை ஆற்றியுள்ளன. இன்று புலம்பெயர் இலக்கியம் என்ற அடையாளத்தைத் தாங்கி வந்துள்ள பல தொகுப்புக்கள்(6) சிற்றிதழ்களிலேயே ஆரம்பத்தில் வெளிவந்துள்ளன. தொடர்ச்சியாக அந்த இதழ்களில் வெளிவந்த புனைவு சாரா எழுத்துக்கள் தொகுப்பு வடிவமாக்கப்படும்போது புலம்பெயர் சிற்றிதழ்களின் அரசியலை மேலும் நுண்மையாக நோக்குவதற்கு வாய்ப்பு ஏற்படும். இந்த வகையில் புகலிட இலக்கியப் பரப்பில் தட்டிக்கழிக்க முடியாத ஆய்வுக்குரிய மூலாதாரங்களாக புலம்பெயர் சிற்றிதழ்கள் அமைந்துள்ளன எனலாம்.

(கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை)


அடிக்குறிப்புகள்
(1) குணேஸ்வரன். சு, 2008, அலைவும் உலைவும் - யாழ்ப்பாணம், தினைப்புனம்
வெளியீடு. ப.45 / (இது பற்றி முனைவர் மு. செல்வக்குமாரன் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்
பன்முக வாசிப்பு’ 2008, காவ்யா வெளியீடு, நூலில் 60 ற்கு மேற்பட்ட சஞ்சிகைகள்
வெளிவந்ததாகக் குறிப்பிட்டுள்ளார் ப.18)
(2) தென்னாசிய நிறுவத்தின் பங்களிப்புடன் மேற்கு ஜேர்மனியிலிருந்து வெளிவந்த தூண்டில்
சிற்றிதழ்.
(3) ஆசிரிய தலையங்கம் : தேனீ, யூலை 1991, ஜேர்மனி.
(4) ஆசிரிய தலையங்கம் : உயிர்ப்பு 3, 1993, லண்டன்
(5) ஆசிரிய தலையங்கம் : கலப்பை 50 வது இதழ், ஐப்பசி 2006 அவுஸ்திரேலியா.
(6) எஸ். பொ இந்திரா பார்த்தசாரதி தொகுப்பில் வெளிவந்த ‘பனியும் பனையும்’ மு. திருநாவுக்கரசு
தொகுத்த ‘புலம்பெயர்ந்தோர் கவிதைகள்’ திருச்சியிலிருந்து வெளியிடப்பட்ட புலம்பெயர்ந்தோர்
மாநாட்டு மலர், அ ஆ இ சஞ்சிகையினர் தொகுத்த சிறுகதைச் சிறப்பிதழ் என்பன
இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.
நன்றி :- வலம்புரி - யாழ்ப்பாணம்/ காற்றுவெளி (இணைய இதழ்) லண்டன்.
---

Sunday, May 9, 2010

என். எஸ். எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து
-சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்புகள்
சு. குணேஸ்வரன்-அறிமுகம்
ஒரு கூடைக்கொழுந்து இலங்கையின் மலையகப் பிரதேசத்துச் சிறுகதையாகும். தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும் ஏழைத்தொழிலாளர் வாழ்வையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் எடுத்துக்காட்டுவதாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட ஏழைத் தொழிலாளர்களின் பரம்பரையினரே இன்றும் மலையகப் பிரதேசத்தில் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
தேயிலைத் தோட்டத்தில் வேலைசெய்யும் இளம்பெண் லட்சுமியே இச்சிறுகதையின் பிரதான பாத்திரம். லட்சுமியைச் சுற்றியே கதையும் கதை நிகழ்வுகளும் கட்டமைக்கப்பட்டுள்ளன.

கதைச்சுருக்கம்
அன்றையதினம் வேலைக்குச் சற்றுத் தாமதமாக வந்து சேர்கிறாள் லட்சுமி. வழக்கமாக அவள் கொழுந்தெடுக்க வருகின்றபோதெல்லாம் கலகலப்பாக உரையாடும் அவளின் தோழிப் பெண்களும் மற்றவர்களும் எதுவும் பேசாமல் மெளனமாகவும் அவளை எரிச்சலோடு பார்ப்பவர்களாகவும் இருப்பதைக்கண்டு இன்று இவர்களுக்கு எல்லாம் என்ன நடந்தது என்று எண்ணுகிறாள்.

தன் இரண்டு முன்பற்களும் தெரியச் சிரித்துக்கதைகூறும் கங்காணிக் கிழவனும் எதுவும் பேசாமல் நிற்கிறான். தனக்குரிய நிறை எதுவென கங்காணிக் கிழவனிடம் கேட்டபோது. பிந்தி வந்ததற்காக லட்சுமியின் மீது எரிந்து விழுகிறான். வழக்கமாகக் கொழுந்தெடுக்கும் இடத்தை விட்டு கடைசி மலையில் சென்று எடுக்குமாறு வேண்டா வெறுப்பாகக் கூறுகிறான்.
முதல் வரிசையிலோ அல்லது கடைசி வரிசையிலோ கொழுந்தெடுக்க பலர் விரும்புவதில்லை. காரணம் அங்கு அதிகமான கொழுந்து எடுக்க முடியாது. ஆனால் லட்சுமி அன்றையதினம் கடைசி வரிசைக்குச் செல்கிறாள். இவளின் அருகே வயதான கிழவி தன் நடுங்கும் கரங்களால் கொழுந்து எடுக்கிறாள். ‘என்னடி ஆயா இந்தப் பக்கம்’ என்று அவள் விசாரிக்கிறாள்.
முதற்கொழுந்து எடுத்து கூடைக்குள் போடும் போது ‘பொலி’ சொல்லுமாறு கிழவியைக் கேட்க கிழவி பொலி சொல்லுகிறாள். மாலையில் கொழுந்து எடுத்து முடித்து நிறுவைக்கு மற்றையவர்களும் செல்கின்றனர். அங்கு நிறுவைக்காக எல்லாப் பெண்களும் தங்கள் தங்கள் நிறையுடன் காத்திருக்கிறார்கள்.
நிறுவைத் தராசு தூக்கவும், கொழுந்துகளைத் தூக்கிப் படங்குகளில் கொட்டவும் வேலையாட்கள் தயாராக நிற்கின்றனர். கங்காணி, கணக்கப்பிள்ளையை அழைத்து வருகிறார். கூடையுடன் வரிசையாக நிற்கும் பெண்களை கணக்குப்பிள்ளை பார்க்கிறார். அவரின் பார்வை அந்த வரிசையில் நிற்கும் லட்சுமியில் தரித்து நிற்கிறது. லட்சுமியை அருகே வருமாறு அழைக்கிறார்.
லட்சுமி சில நாள்களுக்கு முன்னர் 25 ஆம் நம்பர் மலையில் எடுத்த 57 றாத்தல் கொழுந்து தொடர்பாக வினாக்களை அடுக்குகிறார். அந்த மலையில் பல வருடம் அனுபவம் உள்ளவர்கள் கூட 57 றாத்தல் எடையுள்ள தேயிலைக்கொழுந்தை இதுவரை எடுத்தது கிடையாது. அப்படியிருக்க லட்சுமி எடுத்த கொழுந்து நிறை மற்றவர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டதாகக் கூறுகிறார். இது லட்சுமிக்கு அதிர்ச்சியாக உள்ளது. தன் தொழிலின் மீதும் தன் கண்ணியத்தின் மீதும் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நினைத்து மனம் குமுறுகிறாள்.
கணக்குப் பிள்ளை எல்லோருக்கும் கேட்கத்தக்கதாக தொடர்ந்து பேசுகிறார். லட்சுமி சொந்தக்காரப் பெண்ணாக இருப்பதால்தான் கணக்கைக் கூட்டி எழுதிவிட்டதாக மற்றவர்கள் சந்தேகப்படுவதாகவும், கணக்குப் பிள்ளைகளுக்கு பொம்பிளைக் கேஸ் பிரச்சனைக்குரியது என்பதும், மற்றவர்களின் சந்தேகப் பார்வைக்கு தான் ஆட்படக் கூடாது என்பதற்காகவும் அவள் எடுத்த 57 றாத்தல் கொழுந்தை இன்னொரு முறை எடுத்துக் காட்டவேண்டும் என்று லட்சுமியிடம் கட்டளையிடுகிறார்.
லட்சுமிக்கு ஏற்பட்;ட அதிர்ச்சியோடு அந்தக் கட்டளையை மனவைராக்கியத்துடன் ஏற்றுக் கொள்கிறாள். தன்னால் மீண்டும் ஒருமுறை அவ்வாறு கொழுந்தெடுத்து நிரூபிக்க முடியுமென கூறுகிறாள்.
இதன் பின்னர் மாலை லட்சுமியின் வீட்டில் அவளின் வருங்காலக் கணவன் ஆறுமுகம் இது சம்பந்தமாக அவளுடன் உரையாடுகிறான். 57 றாத்தல் கொழுந்தெடுத்த அன்றையதினம் ஆறுமுகம் சாப்பாட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது லட்சுமி தனியாக நின்றதைக் கண்டு அவளுடன் உரையாடியபடி அவனும் கொஞ்சம் கொழுந்தெடுத்து அவளின் கூடையில் போட்டான். அதுதான் இன்று 57 இறாத்தல் பிரச்சனையைக் கிளப்பி விட்டிருந்தது. அதனால் கணக்குப்பிள்ளையிடம் மன்னிப்புக் கேட்டு உண்மையைக் கூறிவிடலாம் என்கிறான் ஆறுமுகம். ஆனால் அதனை லட்சுமி ஏற்றுக் கொள்ளவில்லை. அது எதிர்பாராமல் நடந்தது. அவர்கள் தன் தொழிலில் சந்தேகப்பட்டதனால் தன்னால் முடிந்தவரை எடுத்துக் காட்டப் போவதாகவும் முடியாவிட்டால் மற்ற மலைக்கு போய் இலை பொறுக்கப் போவதாகவும் கூறுகிறாள்.
மீண்டும் நான்கு பேர் சாட்சியாக கங்காணி முன்னிலையில் காலை 9 மணியிலிருந்து மாலைக்கிடையில் கொழுந்து எடுக்கிறாள். எடுத்த கொழுந்து நிறுக்கப்;படுகிறது. 61 இறாத்தல் நிறை. எதிர்பார்த்ததை விட 4 றாத்தல் அதிகம். கணக்குப்பிள்ளை எல்லோருக்கும் கேட்கத்தக்கதாக நிறையைக் கூறி விட்டுக் கொட்டச் சொல்லுகிறார்.

தன் கையால் கொழுந்துகளை அள்ளிப் பார்த்த கணக்குப்பிள்ளை முற்றல் இலையும் மொட்டைப் புடுங்குமாக அதிகமான பழுதுடன் கொழுந்து இருப்பதாகவும் எடையிலிருந்து 20 றாத்தல் கழிக்கப்போவதாகவும் எரிச்சலுடன் கூறுகிறார்.
லட்சுமிக்கு மீண்டும் அது அதிர்ச்சியாக உள்ளது. சவாலை ஏற்றுக் கொண்டு காலையிலிருந்து கஷ்டப்பட்டுக் கொழுந்தெடுத்தும் இறுதியில் 20 இறாத்தல் கழிப்பதாயின்
என்று அவள் எண்ணுவதற்கிடையில் கங்காணிக் கிழவன் முன்னே வந்து ஆத்திரம் மேலிட லட்சுமியின் வலகை ஆட்காட்டி விரலைப் பிடித்து கணக்குப் பிள்ளையிடம் காட்டி
ஆவோசத்துடன் பேசுகிறார்.
“ஐயா, இதைப்பார்த்து விட்டுப் பேசுங்கள் ஐயா, இது நல்ல கொழுந்தோ கெட்ட கொழுந்தோ, இவ்வளவையும் எடுத்தது இந்தக் கையி! இந்த றாத்தலைத் தரமாட்டேன்னு சொல்றீங்க?”
என்று கங்காணிக்கிழவன் நியாயத்திற்காக வாதிடுகிறார். லெட்சுமியின் வலதுகை ஆட்காட்டி விரலின் ஓரப்பகுதிகள் இரண்டும் தோல் கிழிந்து இரத்தம் கசிந்து உறைந்து போயிருந்தது. அவளின் கைகளைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்ட கணக்குப்பிள்ளை ஒரு கதையும் இல்லாமல் துண்டை வாங்கி திரும்பவும் காலைக் கொழுந்துடன் 61 இறாத்தலையும் பதிந்து கொடுக்கிறார்.
தன் சபதம் நிறைவேறாவிட்டால் வேறு மலைக்குச்சென்று இலை பொறுக்கப் போவதாக தனது எதிர்காலக் கணவன் ஆறுமுகத்துடன் வீட்டில் உரையாடிய போது கூறிய லட்சுமி சபதம் நிறைவேறியபோதும் தொடர்ந்தும் அந்த மலையில் நின்று வேலை செய்ய விரும்பாது வேறு மலைக்குச் சென்று விடுகிறாள். இதுவே ‘ஒரு கூடைக் கொழுந்து’ சிறுகதையின் கதைச்சுருக்கம் ஆகும்.


கதைக்களம்
இச் சிறுகதை மலையகப் பிரதேசத்தின் தேயிலைத் தோட்டத்தைக் களமாகக் கொண்டது. கதை தேயிலைத் தோட்ட மலைப் பிரதேசத்தைச் சுற்றியும் கொழுத்தெடுத்த பின்னர் அவர்கள் நிறைபார்க்கும் ஸ்டோர் எனப்படும் இடத்தைச் சுற்றியும் இடம்பெறுகிறது. தோட்டத் தொழிலாளர்கள் வாழும் லயம் என்று சொல்லப்படும் குடியிருப்பில் மிகுதிக் கதைச் சம்பவம் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து எடுக்கும் இடமும் தேயிலை நிறை பார்க்கும் இடமும் கதையின் முற்பகுதியாகவும் அப்பிரதேசத்தில் அவர்கள் வாழும் லயம் கதையின் பிற்பகுதியாகவும் இடம்பெறுகிறது. என் எஸ் எம் இராமையா 20 வரையான சிறுகதைகளே எழுதியிருந்தாலும் அவை அனைத்துமே தேயிலைத் தோட்டத் தொழிலாளரின் பிரச்சினைகளையே மையமாகக் கொண்டவை என்று கூறப்படுகின்றது.

பாத்திரத் சித்திரிப்பு
ஒரு கூடைக் கொழுந்தின் பிரதான கதாபாத்திரமாக லட்சுமி சித்திரிக்கப்படுகின்றாள். அடுத்து முக்கியம் பெறும் பாத்திரங்களாக கங்காணிக்கிழவன், கணக்குப்பிள்ளை மற்றும் கதையோட்டத்திற்கு இணையாக உதிரியாக வரும் பாத்திரங்களாக ஆறுமுகம், லட்சுமியின் தாய், கொழுந்தெடுக்கும் பெண்கள், வயதான கிழவி ஆகிய பாத்திரங்களையும் கூறலாம்.

லட்சுமி

ஒரு கூடைக்கொழுந்தின் பிரதான பாத்திரமாக லட்சுமி சித்திரிக்கப்பட்டுள்ளாள். லட்சுமி இயல்பிலேயே கலகலப்பானவளாகவும், எல்லோருடனும் சகஜமாகப் பழகுபவளாகவும் உள்ளாள். தன் வேலையில் கண்ணியம் மிக்கவளாகவும் இலட்சியத்தை அடைவதற்காக கடுமையாக உழைப்பவளாகவும் காட்டப்பட்டுள்ளாள். இரண்டாம் தடவை அவள் அதிக நிறை எடுத்து நிரூபிக்க வேண்டிய சந்தர்ப்பத்திலே தன்னில் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக, தன் உண்மையான உழைப்பை நிரூபிப்பதற்காக தயங்காமல் முன்வருகின்றாள்.
அதனால்தான், தனது உழைப்பை நிரூபித்ததன் பின்பும் தனக்கு ஒரு கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காகவும் வரப்போகின்ற பிரச்சனைகளில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் வேறு மலைக்குச் செல்வதாகக் கருதக்கூடியதாக உள்ளது.
அதுமாத்திரமன்றி வருங்காலத்தில் திருமணம் செய்யவிருக்கும் ஆறுமுகம் அவளின் குடும்பத்தினருடன் அந்நியோன்யமாக தொடர்புகொண்டிருப்பது கதையோட்டத்தில் எடுத்துக் காட்டப்படுகிறது. 57 றாத்தல் பிரச்சினைக்கு ஆறுமுகமும் காரணமாக இருந்து விட்டால் அவனுக்கு வேலை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதாலும் அதனைக் காட்டிக் கொடுக்காமல் தற்துணிவுடன் செயற்படுகிறாள்.
அவர்களின் சந்தேகம் தீர்ந்த பின்னரும் கூட தொடர்ந்தும் அந்த மலையில் நின்று வேலை செய்யாது வேறு மலைக்கு மாறிப் போக விரும்புவது தனது காதலைக் காப்பாற்றுவதற்கும் தனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் ஆகும். இவ்வாறாக லட்சுமி என்ற பாத்திரம் கதையோட்டத்திற்கு ஏற்ப மிக யதார்த்தமாகவும் முற்போக்காகவும் படைக்கப்பட்டுள்ளது.

கணக்குப் பிள்ளை

தோட்டத் தொழிலாளர்கள் கங்காணிக்குக் கட்டுப்பட்டவர்கள். கங்காணி கணக்குப் பிள்ளைக்குக் கட்டுப்பட்டவர். கணக்குப் பிள்ளை தனக்கு மேல்நிலையில் இருக்கும் தோட்ட முதலாளிக்குக் கட்டுப்பட்டவர். இந்த அதிகாரநிலையில் தன் வேலையில் தனது கடமையை நிரூபிக்கவேண்டிய கடப்பாடு கணக்குப்பிள்ளைக்குரியது.
தெரிந்தவர் அல்லது உறவினர் என்று கூடுதல் கணக்கெழுத முடியாது. அது அவரது வேலைக்கு ஆபத்தைத் தேடித்தரும். அதனாலேயே லட்சுமி எடுத்த அதிக நிறையை நிரூபிக்க வேண்டிய சங்கடம் கணக்குப் பிள்ளைக்கு ஏற்படுகின்றது. தனது தோட்ட முதலாளிக்கு தன்னை உண்மையானவனாகவும் நேர்மையானவனாகவும் நிரூபிப்பதற்காக லட்சுமியை வருத்தி மீண்டும் 57 றாத்தல் கொழுந்தெடுக்க வைக்கிறார் கணக்குப்பிள்ளை.
மற்றவர்களின் பழிச்சொல்லுக்கு தான் ஆளாகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுணர்வு இவரிடம் மிகுந்திருப்பதைக் காணலாம். இதனை மலையில் இருக்கும் மற்றவர்கள் ஆங்காங்கு கதைப்பதில் இருந்தும் எல்லாத் தொழிலாளர் முன்னிலையில் லட்சுமியின் பிரச்சனையைக் கூறுவதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
நான்குபேர் முன்னிலையில் திரும்பவும் லட்சுமியின் உழைப்பு உண்மையானது என்று நிரூபிக்கப்பட்டதும் கணக்குப்பிள்ளைக்கு அவளில் உண்மையான விருப்பம் ஏற்படுகின்றது. ஆனால் அந்த விருப்பம் அவரின் மனதளவில் மட்டுமே சம்பந்தப்பட்டது. லட்சுமிக்கோ மற்றவர்களுக்கோ இது தெரிய வாய்ப்பில்லை. இதை லட்சுமியும் கூட அறியாதவளே.
இவ்வாறாக கணக்குப்பிள்ளை என்ற பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.

கங்காணிக்கிழவன்

இச்சிறுகதையில் தொடக்கமும் முடிவும் ஒரு வகையில் கங்காணிக் கிழவனுடன் சம்பந்தப்பட்டதாகவே உள்ளது. ஆரம்பத்தில் கங்காணிக்கிழவன் பற்றிய மனப்பதிவு ஆத்திரத்தைத் தரத்தக்கதாகவும் சிறுகதையின் இறுதியில் கங்காணிக்கிழவன் தன்னை நியாயத்திற்காக குரல் கொடுப்பவராக வெளிக்காட்டும் போதும், ஆரம்பத்தில் இருந்ததை விட கங்காணிக் கிழவன் பாத்திரத்தில் ஒரு விருப்பம் ஏற்படுகிறது.
வேலைக்கு நேரம் கழித்து லட்சுமி வந்தபோது அவள் அதிக நிறையுள்ள கொழுந்தை எடுத்தாள் என்பதற்காக கோபமாகவும் எரிச்சலாகவும் வேண்டாவெறுப்பாகவும் பேசும் கங்காணிக் கிழவன், அதிகார வர்க்கத்தோடு சேர்ந்து தன்னையும் அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியாகக் காட்டிக் கொள்கிறார். லட்சுமியின் உண்மையான உழைப்பையும் நேர்மையையும் அறிந்த பின்னர் கங்காணிக்கிழவரும் இறுதியில் தொழிலாளரின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கக் கூடியவராகத் தன்னை வெளிக்காட்டுகின்றார். இது அவருடைய நேர்மையினையும், மனிதாபிமான உணர்வினையும் எடுத்துக் காட்டுகின்றது.
நகைச்சுவையாக உரையாடக்கூடியவராகவும் எல்லோரும் விருப்புக் கொள்ளக்கூடிய பாத்திரமாகவும் வருகின்ற கங்காணிக்கிழவன் தன் வேலையில் மிக்க கண்ணியமானவராகவும் தன் கடமையினை செவ்வனே நிறைவேற்றுபவராகவும் இருக்கின்றார்.
கதையில் இறுதியில் வருகின்ற ‘இதைபார்த்து விட்டுப் பேசுங்கள் ஐயா நல்ல கொழுந்தோ கூடாத கொழுந்தோ எல்லாவற்றையும் எடுத்தது இந்தக் கையி’ என்ற கூற்று உயிர்ப்பு மிகுந்த வரிகள். இந்த வரிகளே கங்காணிக் கிழவனை நிலைநிறுத்தப் போதுமானவையாகும்.

உதிரிப் பாத்திரங்கள்

ஆறுமுகம்
லட்சுமியின் எதிர்காலக் கணவன் ஆறுமுகம். லட்சுமி வேலை முடிந்து வந்த அந்தி நேரம் அவளின் வீட்டில் அன்றைய பிரச்சனை பற்றி அக்கறையாக உரையாடுகிறான். லட்சுமியின் வேலைக்கு ஆபத்து ஏற்படுமோ என்று எண்ணுகிறான். 57 றாத்தல் பிரச்சனைக்கு தானும் ஒரு காரணம் என்பதனால் கணக்குப் பிள்ளையிடம் உண்மையைக் கூறி மன்னிப்புக் கேட்டுவிடலாம் என்றும் யோசனை கூறுகிறான்.
அவன் அன்றையதினம் சாப்பாட்டுக்கு வரும் வழியில் லட்சுமி தனியாக நின்று கொழுந்து எடுத்தபோது சற்றுநேரம் அவளுடன் உரையாடியபடி எடுத்த கொழுந்தே இந்தப் பிரச்சினையை இப்போது கிளப்பி விட்டிருந்தது. இதிலிருந்து ஆறுமுகம் என்ற பாத்திரம் லட்சுமியில் அக்கறை உள்ள பாத்திரமாகவும் உழைப்பு மிகுந்த பாத்திரமாகவும் அவளின் பிரச்சினை தனக்கு ஏற்பட்ட பிரச்சினையாகவும் அதிலிருந்து விடுபடுவதற்கு ஏற்ற யோசனையை கூறும் பாத்திரமாகவும் ஆசிரியர் ஆறுமுகம் என்ற பாத்திரத்தைச் சித்திரித்துள்ளார்.
எதிர்காலத்தில் லட்சுமியைத் திருமணம் செய்ய இருக்கின்றவன் என்பதனால் அவன் காதல் மற்றும் தனிப்பட்ட பிரச்சினையைக் கதைக்காமல் லட்சுமியின் தாய் தந்தையருடன் பொதுவாக உரையாடிவிட்டு லட்சுமியுடனும் உரையாடுவான். இதிலிருந்து தன்னை பொறுப்புள்ள ஓர் ஆடவனாகக் காட்டிக்கொள்கிறான்.

லட்சுமியின் தாய்
லட்சுமியின் தாய் தன் மகளிலும் அவளின் எதிர்காலக் கணவன் ஆறுமுகத்திலும் மிகுந்த அன்புடையவளாகச் சித்திரிக்கப்பட்டுள்ளாள். சிறுகதையில் ஓரிடத்தில் மட்டும் ‘ஆயி அத்தானுக்கு தேத்தண்ணி ஊத்திக் கொடுத்தியா?” என்று கேட்பதாக ஒர் உரையாடல் வருகிறது. தன் மகளுக்கு வரப்போகின்ற மருமகனிடம் மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்ட நிலை இதனூடாகத் தொpகிறது. ஆறுமுகம் வேலை முடிந்த பின்னர் சற்று ஆறுதலாக லட்சுமியுடன் வந்து உரையாடுவது வழக்கம். அது போன்ற நேரங்களில் மரியாதையாக லட்சுமியின் தாயும் தகப்பனும் சற்று ஒதுங்கிக் கொள்வார்கள்.

தோழிப்பெண்கள்
தோழிப்பெண்கள் லட்சுமியுடன் கலகலப்பாக உரையாடுபவர்களாக சித்திரிக்கப்பட்டுள்ளனர். அவள் வழக்கமாகக் கொழுந்தெடுக்க வரும்போதே லட்சுமிக்காக நிறைபிடித்து வைத்திருந்தும் தங்களுக்கு பக்கத்தில் நிறை பிடிக்க வேண்டும் என்றும் விருப்பப்படுபவர்கள் லட்சுமியின் தோழிப்பெண்கள். அவளுடன் குழந்தைகள் போல் உரையாடுவது கதையோட்டத்தில் தெரிகிறது.
“இங்கே வாடி லெட்சுமி! ஏன்கிட்டே நிறைதாரேன்” என்று கூறுவதும்,
“ஐயோ! லெட்சுமிக்குட்டி! என்கிட்டே நிற்கட்டுண்டி”
என்றும் குழையக் குழையக் கதைப்பவர்கள். அதேபோல் லட்சுமியும் அவர்களை முறை சொல்லி ‘அக்கா எனக்கு எது நெறை’ என்று கேட்பதிலிருந்தும் தெரிகிறது.
ஆனால் முதற்சம்பளம் வாங்குபவளை எரிச்சலுடன் பார்ப்பவர்கள்போல் லட்சுமியுடன் கதைக்காது முகத்தைத் திருப்பிக் கொள்வதிலிருந்து மற்றவரின் உயர்வில் எரிச்சற்படுகின்ற மனிதஇயல்பு அந்தத் தோழிப்பெண்களுக்கு ஊடாக வெளிப்படுகின்றது. அந்த வகையில் மனிதர்களுக்கு இருக்கவேண்டிய இயல்பான உணர்வுகளுடன் ஆசிரியர் தோழிப்பெண்களைப் படைத்திருக்கின்றார்.

கிழவி

லட்சுமியின் அருகில் கொழுந்தெடுத்துக் கொண்டிருக்கும் பொக்கைவாய்க் கிழவி லட்சுமியுடன் உரையாடும் சந்தர்ப்பம் ஒன்று கதையில் வருகின்றது. கடைசி நிறையிலே நின்று தான் தளர்ந்து போனபோதும் கூட பனிக்குளிரில் நடுங்கும் கைகளால் கொழுந்தெடுத்து உழைத்து, தன் வாழ்வை ஓட்ட வேண்டிய வயதான நிலை இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது.
அதிசயமாகவும் ஆதரவாகவும் அன்பாகவும் கதைகேட்கும் பண்பினை கிழவியிடம் அவதானிக்க முடிகின்றது. அத்துடன் லட்சுமி தான் எடுத்த முதற்பிடிக் கொழுந்தைக் கூடைக்குள் போடும் போது “அம்மாயி! பொலி சொல்றியா, கொழுந்தைப் போட்டுக்கிர்றேன்” என்று லட்சுமி கேட்ட போது “போடு அப்பனே, சம்முகா! பொலியோ…பொலி – பொலி – பொலி” என்று அன்பாகவும் பக்தியுணர்வோடும் அனுபவத்தோடும் கூறுகிறாள்.
உண்மையில் ஒரு சிறிய பாத்திரத்தைப் படைத்தாலும் மிக நுட்பமாக அப்பாத்திரத்தை பண்பாட்டு மரபுகளோடு படைத்துள்ளமை ஆசிரியரின் கதை கூறும் சிறப்பினை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

மலையக மக்களின் வாழ்க்கை அம்சம்
இச்சிறுகதையூடாக மலையக மக்களின் வாழ்க்கையின் ஒரு குறுக்குவெட்டு முகத்தை மிக கனகச்சிதமாக ஆசிரியர் வாசகர் மனக்கண்முன் கொண்டு வருகின்றார். லட்சுமியின் ஒருநாள் வாழ்வு சொல்லப்படுவதனூடாக இந்தப் போக்கை அறிந்து கொள்ள முடிகின்றது.
காலையில் கொழுந்தெடுக்கச் செல்லுதல், அங்கு கங்காணிமாரின் மேற்பார்வையில் வேலை செய்தல், பின்னர் நிறுவைக்காக ஸ்டோர் முன் எடுத்த கொழுந்துக் கூடைகளுடன் காத்திருத்தல், பின்னர் கணக்குப்பிள்ளை நிறை பார்த்தல், காலைமுதல் மாலை வரை கஷ்டப்பட்டு எடுத்த கொழுந்தில் பழுது கண்டுபிடித்து நிறைவெட்டுவேன் என அவர்களை ஏங்க வைத்தல், அதன் பின்னர்தான் தமது லயன்களுக்குச் சென்று சாப்பாடு மற்றும் தமது வீட்டு வேலைகளைச் செய்தல் என்பன கதையோட்டத்திற்கு ஊடாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.

சிறுகதையின் சிறப்புக் கூறுகள்
1. தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகளை வெளிப்படுத்துதல்
தோட்டத் தொழிலாளர்கள் தமது ஒவ்வொரு நாள் வாழ்வையும் கழிப்பதற்குப் படும் பாடுகள் மிக நுட்பமாக கதையில் சித்திரிக்கப்பட்டுள்ளன. நாட்கூலிக்கு வேலைசெய்யும் அவர்கள் தமது தொழிலில் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் கூறப்படுகின்றன. கொழுந்தெடுப்பதில் இருக்கும் சிரமம், தொழிலின் நிச்சயமற்ற தன்மை, மேலதிகாரிகளின் கண்காணிப்பிற்கும் அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டு வேலைசெய்ய வேண்டிய நிலை ஆகியன கூறப்படுகின்றன.
கொழுந்தெடுத்தல் மற்றைய வேலைகள் போல் இலகுவான தொழிலல்ல. நிறை பிடித்தல், கொழுந்தெடுப்பதற்குரிய ஆயத்தங்கள் செய்தல், படங்குச்சாக்கை இடுப்பைச் சுற்றிக் கட்டுதல், கூடையின் கயிற்றை தலைக்கூடாக மாட்டுதல், கொழுந்தெடுத்தல், முற்றல் இலைகளைத் தவிர்த்தல், எடுத்த கொழுந்தை நிறைபார்ப்பதற்கு கொண்டு செல்லல், அங்கு காத்திருந்து அதன் பின்னர் நிறைக்குரிய துண்டைப்பெற்றுக் கொண்டு செல்லல், ஆகியன இந்தத் தொழிலின் படிநிலை அம்சங்களாகச் சுட்டப்படுகின்றன.
எப்படித்தான் கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் மேலதிகாரிகளின் கழுகுக் கண்களுக்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தம் உண்மையான உழைப்பை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

மற்றும் இவ்வேலையில் இருக்கும் நிச்சயமற்ற தன்மை எடுத்துக் காட்டப்படுகின்றது. தமது வேலையில்; அதிகாரிகள் பிழை பிடித்துவிட்டால் தாம் வேலையில் இருந்து நீக்கப்பட்டு விடுவோம் என்ற அந்தர நிலையும் தொழிலாளர்களுக்கு ஏற்படுகிறது.
வயதானவர்கள், பிள்ளைக்காரிகள்கூட அன்றாடம் தொழில் செய்தாலே தம் வயிற்றுப் பாட்டைப் பார்க்க முடியும் என்ற நிலையும் தெரிகிறது.
எனவே, உழைக்கும் வர்க்கம் தொடர்ந்து சுரண்டப்படுவதும் அவர்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைப்பதென்பதும் வெறும் கானல் நீராகவே இருப்பது இக்கதையூடாக வெளிப்படுகின்றது.

2. பிரதேசப் பண்பாட்டை வெளிப்படுத்துதல்
இச்சிறுகதையூடாக மலையக மக்களின் பிரதேசப் பண்பாடு வெளிப்படுகின்றது. எந்தவொரு தொழிலானாலும் கடவுளைத் தொழுதே எல்லோரும் செய்வது வழக்கம். இது மரபாகவும் கைக்கொள்ளப்படுகின்றது. லட்சுமி கொழுந்தெடுக்க ஆரம்பிக்கும்போது தேயிலைச்செடியைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு கொழுந்துகளைக் கிள்ளத் தொடங்குகின்றாள். அதேநேரம் முதற்கொழுந்தைக் கூடைக்குள் போடும் போது அருகில் நிற்பவர்கள் ‘பொலி’ சொல்வது வழக்கம் அந்த மரபு இங்கும் கைக்கொள்ளப்படுவது தெரிகின்றது.
இந்த வகையில் கிராமிய நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக ‘பொலி’ சொல்லும் மரபினையும் ‘ஒப்புராணை’ என்ற சத்தியம் செய்யும் நம்பிக்கையினையும் கருத முடிகின்றது.
உறவு நிலைத் தொடர்புகள் மிக நாகரிகமாகப் பேணப்படுவதும் இக்கதையில் வெளிக்காட்டப்படுகின்றது. லட்சுமியும் ஆறுமுகமும் வீட்டில் உரையாடும் போது லட்சுமியின் தாயும் தந்தையும் மரியாதையாக ஒதுங்கிக் கொள்வது கதையின் போக்கினூடே எடுத்துச் சொல்லப்படுகின்றது.

உறவினர் அயலவர் தெரிந்தவர் ஆகியோரை முறை சொல்லி அழைக்கும் வழக்கம் இக்கதையில் இழையோடுகின்றது. வயதானவர்களை அப்பச்சி, அம்மாயி என்று அழைப்பதும், இளம்பெண்களை ஆயி என்று பெரியவர்கள் அழைப்பதும்; இளம்பெண்கள் தங்கள் சகபாடிகளை குட்டி, பொட்டைச்சி, செட்டுகள் என்று அழைப்பதும் இது அவர்களின் உரையாடலைப் பொறுத்தும் உரையாடுபவரின் மனநிலைக்கு ஏற்ப மாறுவதும் அவதானிக்கத் தக்கது.

3. தொழில் சார்ந்த நுணுக்கத்தை வெளிப்படுத்துதல்
தேயிலைத் தோட்டத்தொழிலைப் பொறுத்த வரையில் கொழுந்தெடுத்தல் இங்கு பிரதானமான தொழிலாக உள்ளது. என்றாலும் தேயிலைத் தோட்டங்களில் இதனுடன் இணைந்த வேறு வேலைகளும் செய்யப்படுவதுண்டு. புல்வெட்டுதல், கவ்வாத்து வெட்டுதல், முள்ளுக் குத்துதல், கான் வெட்டுதல், உரம் போடுதல், மருந்தடித்தல், பழைய தேயிலையை பிடுங்கி விட்டு நிலத்தைப் பண்படுத்தி புதிய கன்றுகளை நாட்டுதல் ஆகிய பாரம்பரியத் தோட்டச் சில்லறை வேலைகளும் மலையக தோட்டங்களில் செய்யப்படுவதுண்டு.
இச்சிறுகதையில் கொழுந்தெடுத்தல், இலை பொறுக்குதல் ஆகியனவே சுட்டிக்காட்டப்படுகின்றன. கொழுந்தெடுக்கும்போது அது முறையாகச் செய்யப்படும் வேலையாகவும் கொழுந்தெடுப்பதற்கு முன்னர் அவர்களின் ஆயத்தமும் கதையில் புலப்படுகின்றது. அதிலிருந்து சில பகுதிளை எடுத்துக் காட்டலாம்.
“கூடையை இறக்கி வைத்து இடையில் கட்டியிருந்த படங்குச் சாக்கை அவிழ்த்து, சேலையைச் சற்று முழங்காலுக்கு மேலே தூக்கி - இல்லாவிடில் தேயிலைச்செடி கிழித்து விடுமே! மீண்டும் படங்கைச் சுற்றிக் கட்டினாள். கறுப்புநிறக் கயிறு அரைஞாண் மாதிரி இடுப்பைச் சுற்றி வளைத்தது. கூடைக்குள் இருந்த தலைத்துண்டை உதறி, ….தலையில் போட்டுக்கொண்ட கூடைக் கயிற்றையும் தலையில் மாட்டிக் கொண்டாள். கடைசியாகப் பக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்த தலைத்துண்டின் பகுதிகளைக் கயிற்றை மறைப்பதுபோல் மடித்துக் கயிற்றுமேல் போட்டுக் கொண்டாள்.”
“மெளனமாகத் தேயிலைச் செடியைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு, பனியில் நனைந்து நின்ற கொழுந்துகளைக் கிள்ளத் தொடங்கினாள் லெட்சுமி. இரண்டு வீச்சிலே இரண்டு கையும் நிறைந்து விட்டது. காம்புப் பகுதியைத் திருப்பிப் பார்த்தாள். பரவாயில்லை. எல்லாம் பிஞ்சுக் காம்புதான்! ‘நார்க்குச்சி’ ஒன்றுகூட இல்லை…இளந்தளிர்கள் ‘சடசட’ வென ஒடிந்து கொண்டிருந்தன.”
பொதுவாக அதிக கொழுந்தெடுத்து எடை போட விரும்புபவர்கள் முதற்தொங்கலுக்கோ அல்லது கடைசித் தொங்கலுக்கோ போக விரும்புவதில்லை. காரணம் முதற்தொங்கல் என்றால் ஒழுங்கான நிறை கிடையாது. எல்லாம் குறைநிறைகளாகவே இருக்கும். அதிக தடவைகள் ஏறி இறங்க வேண்டியிருக்கும்.
அதேபோல் கடைசித் தொங்கல் என்றால் வயதானவர்களுடனும் பிள்ளைக்காரிகளுடனும் கொழுந்தெடுக்க வேண்டியிருக்கும். பிள்ளைக்காரிகள் ஆடி அசைந்து நேரம் கழித்து வந்து சில மணிநேரம் எடுத்து விட்டு லயத்திற்கோ பிள்ளைக் காம்பிராவுக்கோ போய்விடுவார்கள். அத்தோடு அவர்களின் நிறையையும் சேர்த்து எடுத்துக் கொள்வதோடு அவர்களின் கூடையையும் தூக்கிச்சென்று எடை பார்க்க வேண்டும்.
நல்ல கொழுந்து உள்ள மலையெனில் சாப்பிடக்கூடப் போகாமல் கொழுந்தெடுப்பார்கள். ஒவ்வொருவரும் நாற்பது ஐம்பது றாத்தல் என எடுப்பார்கள்.
இவ்வாறாக வேலை தொடர்பான நுணுக்கமான பார்வைகளைக் கொண்டதாக இக்கதை அமைந்துள்ளது.


4. மொழிப்பயன்பாடு
ஒரு கூடைக் கொழுந்து சிறுகதையில் விரவியிருக்கும் மொழிப்பயன்பாடு பற்றித் தனியாக எழுதலாம். அந்த அளவுக்கு அதிகமான மலையகப் பிரதேச மொழிச்சொற்கள் கையாளப்பட்டுள்ளன. மலையகப் பிரதேச வழக்குச் சொற்களை பேச்சு வழக்குச் சொற்கள், உறவுநிலைச் சொற்றொடர்கள், பிறமொழிச் சொற்கள் என மூன்றாக வகுத்து நோக்கலாம். அத்தோடு தொழில்சார் சொற்றொடர்களும் தனித்துவமான சொற்பயன்பாட்டை உடையனவாக உள்ளன. இவையெல்லாம் சேர்ந்து இக்கதைக்கு ஒரு தனித்துவத்தைக் கொடுக்கின்றன.

(அ) மலையகப் பிரதேச வழக்குச் சொற்கள்
1. பேச்சுவழக்குச் சொற்கள்:-
நெறை, கொந்தரப்பு, சுணங்கி, ஒப்புரணை, செட்டு, வதிலு, மொகறை, ஆவுது, பிள்ளைக்காம்பிறா, ஆளுக, பேரு, குத்தம், ஒப்புராணை, எழவு, ஊடே, நெசம்னு, வெனை, அவுகளை, மொறைக்கிறே, பேசிடாப்புலே, போறாக, பொறகு, சாச்சி, கையி, பொடசக்காரி, ஒனக்கு, நெனச்சேன்

2. உறவுநிலைச் சொல்/சொற்றொடர்
அம்மா, அம்மாயி, அப்பச்சி, அய்யா, அப்பன், ஆயி, ஆயா, ஆயான், ஆத்தா, ஜயா, கங்காணி, கணக்குப்பிள்ளை, கிழவி, குட்டிக, தொரைச்சாணி, ஙொப்பன், சாக்குக்காரன், பிள்ளைக்காரிகள், பொட்டைச்சி, விடலைப்பிள்ளை, பொம்புளை, புள்ளே, வயசுப்பெண்கள்

3. பிறமொழிச்சொற்கள்
கிராக்கி, றாத்தல், செக்ரோல், லேபர், ஸ்டோர், டமில், கண்ட்றி, ஜபர்தஸ்து, சர்வீசு, மப்ளர், இஸ்டோர், கேஸ், பப்ளிக்கா, ஆசாமி, மாமுல்படி, லயம், ஜூவாலை.

(ஆ) தொழில்சார் சொற்றொடர்கள்
தலைக்கயிறு, கறுப்புநிறக்கயிறு, படங்குச்சாக்கு, தலைத்துண்டு, கூடைக்கயிறு, காம்புப் பகுதி, பிஞ்சுக்காம்பு, நார்க்குச்சி, இளந்தளிர், அந்திக்கொழுந்து, ஒருமணிக்கொழுந்து, சங்கு ஊதுதல், தராசுமரம், தட்டுக்கூடை, தட்டுக்கொட்டுதல், தேயிலை மிலாருக் குவியல், ரப்பு, எல பொறுக்குதல், முற்றல் இலை, பொலி, எடுவைக்காரிகள், குறைநிறை

5. அணிச்சிறப்பு
கதையின் போக்கிற்கு ஏற்ப இயல்பாகவே அணிநலன்கள் கையாளப்பட்டிருத்தல் இச்சிறுகதையின் இன்னொரு சிறப்புக் கூறாக உள்ளது. வர்ணனை, உவமை, உருவகம், மரபுத் தொடர் ஆகியன குறிப்பிடத்தக்கன.
வர்ணனைகளுள் தேயிலைத் தோட்ட வர்ணனையும் லட்சுமி குடியிருக்கும் லயன் வர்ணனையும் எடுத்துக்காட்டத்தக்கவை.
“பங்குனிமாதப் பச்சை பார்ப்பதற்கே ஓர் அழகு. எடுத்து வெற்றி கண்டவர்களுக்கோ, அது ஓர் இன்பப் போதைதரும் விளையாட்டு. இளந்தளிர்கள் ‘சடசட’வென ஒடிந்து கொண்டிருந்தன. ஆனால் இன்பப் போதையோடு அல்ல! மனதுக்குள்ளே சிநேகிதிகளின் பாராமுகம் வண்டாக அரித்துக் கொண்டிருந்தது”
என்று தேயிலைத் தோட்டத்தையும்

“சின்னதொரு தகரலாம்பு மினுக்மினுக்கென்று எரிந்து கொண்டிருந்தது. அடுப்பில் சாம்பல் பூத்துக் கிடந்த நெருப்பைக் குனிந்து ஊதி விட்டான் ஆறுமுகம். நெருப்பு இலேசாகக் கனன்றது. பக்கத்தில் கட்டிக்கிடந்த தேயிலை மிலாருக் குவியலில் இரண்டொரு குச்சியை இழுத்து ‘படக் படக்’ கென்று ஒடித்து, அடுப்பில் வைத்து ஊதினான். குப்பென்று தீப்பிடித்தது. குளிருக்கு அடக்கமாக கைகளை நெருப்பருகே காட்டியவாறு ஏறிட்டு லெட்சுமியைப் பார்த்தான். அவளும், அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதைத்தான் எதிர்பார்ப்பதுபோல் அவனையே கவனித்துக் கொண்டிருந்தாள். அடுப்பருகே சற்று நெருங்கி உட்கார்ந்தவாறு ஆறுமுகம் கேட்டான். ‘ஆமா அப்ப என்னதான் செய்யப்போறே?’ கனன்று எரிந்த தீயின் மஞ்சளும் சிவப்பும் கலந்த ஜூவாலை ஒளி அவன்மீது வர்ணப் பூச்சு செய்து கொண்டிருந்தது”
என்று லட்சுமியும் ஆறுமுகமும் லயத்தில் இருந்து கதைக்கும் அழகினையும் நுட்பமாக வர்ணித்துள்ளார்.
உவமை உருவகங்கள் கதையின் போக்குக்கு ஏற்ப கையாளப்பட்டிருந்தல் கவனிக்கத்தக்கது. இங்கு உவமைத் தொடர்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றை விரித்து உவமையணியாகக் கொள்ள முடியும்.

உவமை:-
காலால் மிதித்து அமுக்கப்பட்ட கொழுந்து சீமெந்து மாதிரி இறுகிப் போயிருந்தது
உவமைத்தொடர்கள் :-
முதல் சம்பளம் வாங்குபவளை எரிச்சலோடு பார்க்கும் பிள்ளைக்காரிகள் மாதிரி
ஆடி அசைந்து அம்மன் பவனி வருவது போல
மேட்டிலிருந்து பள்ளத்துக்குச் சரேலென இறங்கும் சாரைப்பாம்பு மாதிரி

உருவகம்:-
லெட்சுமியின் புருவங்கள் கேள்விக் குறியாக வளைந்தன
றாத்தல் விஷமாக ஏறிக் கொண்டிருந்தது
அரிசிப்பல் தெரியச் சிரித்தாள்
வெளிக்குப் பசுவாக நின்று கொண்டிருந்தார்கள்
கல்லாகக் கனத்தது
சிநேகிதிகளின் பாராமுகம் வண்டாக அரித்துக் கொண்டிருந்தது
கட்டி மண்ணாக பொல பொலவென்று உதிர்ந்து கொண்டிருந்தது

மரபுத்தொடர்கள்:-
பல்லைக் காட்டுதல், சூழ்கொட்டுதல், மாரடித்தல் (மாரடிக்க) ஆகிய மரபுத் தொடர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இவ்வாறாக கதையின் நகர்வுக்கு ஏற்ப அணிநலன்கள் கையாளப்பட்டிருத்தல் இச்சிறுகதைக்கு ஓர் இலக்கியச் சிறப்பை வழங்குகின்றது.

6. கதைகூறும் உத்தி

ஒரு கூடைக் கொழுந்து யதார்த்தமான கதைப் போக்கினைக் கொண்டது. கதைச்சம்பவங்கள் நிகழ்வுகளுக்கு ஊடாக கதை நகர்த்தப்படுகின்றது. ஒரு சிறுகதைக்கேயுரிய தொடக்கம் வளர்ச்சி முடிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
லெட்சுமி எடுத்த 57 றாத்தல் கொழுந்து பற்றிய விசாரணையில் அதேபோல் மீளவும் கொழுந்து எடுத்துக் காட்டவேண்டும் என்று கணக்குப் பிள்ளை கூறுகின்ற கதைப்பகுதியும், லெட்சுமி பின்னர் எடுத்த 61 றாத்தல் கொழுந்து நிறையில் 20 றாத்தல் கழிப்பேன் எனக் கூறுகின்ற நிலையிலே கங்காணிக்கிழவன் லெட்சுமியின் விரலைக்காட்டி நியாயம் கேட்பதுமாகிய இரண்டு சம்பவங்களும் இச்சிறுகதையின் மிக முக்கியமாக கதைக்கூறுகள் ஆகும்.
பிரதேச மொழிவழக்கினை அதிகமாகக் கையாண்டு இயல்பாகவே எந்தவொரு செயற்கைத்தனமும் இல்லாது கதைகூறும் உத்திமுறை கவனிக்கத்தக்கது. இது பிரதேச இலக்கியங்களுக்கு உள்ள சிறப்பம்சங்களில் முக்கியமானது. ஒரு கூடைக் கொழுந்து அதிகமான மலையகப் பிரதேச வழக்குச்சொற்களுக்கு ஊடாக கதை கூறினாலும் மிக எளிமையான சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு பொருத்தமான இடங்களில் வர்ணணையும் இடம்பெற்றுள்ளது.
கதையின் சில இடங்களில் எள்ளல் தொனிக்கின்றது. கங்காணியையும், கணக்குப் பிள்ளையையும் எள்ளலாக குறிப்பிடும்போது
“ஐயா ஒதுங்கி ஆட்களுக்கு முன்னால் வந்து நின்றார்.அவர் அரைந்து வந்த தோரணையும், ஆட்களைப் பார்த்த விதமும், ஏதோ தவறுதலாகக் கறுப்பாகப் பிறந்து விட்ட வெள்ளைக்காரனைப் போலிருந்தது. பேச்சும்கூடச் சுத்தத் தமிழாக இருக்காது. வெள்ளைத்துரை ஒருவன் சிரமப்பட்டு ‘டமில்’ பேசுவது போலிருக்கும். நாமாக இருந்தால் சிரித்திருப்போம். ‘அது’கள் ‘லேபர்’ கூட்டந்தானே? என்ன தெரியும் அந்தக் ‘கண்ட்றி’ களுக்கு? ‘அது’ களுக்கு முன்னால் இப்படி ஜபர்தஸ்து பண்ணுவதில் ஒருசில விடலைப் பிள்ளைகளுக்கு என்னமோ ஓர் இது!”

என்று கணக்குப் பிள்ளையின் செயற்பாட்டை எள்ளல் தொனிக்க ஆசிரியர் விபரிக்கிறார். அதேபோல் கங்காணியையும்,
“….அவரின் செயல்களைக் கவனித்துக் கொண்டு என்னவோ ஏதோவென்று நின்ற கங்காணி ஓடிவந்து ‘ஐயா’ என்றான். இந்த ஐயாப்பட்டம் போடும்போது ஏன்தான் முதுகு கூனுகிறதோ?”
என்று கிண்டல் செய்கிறார்.

தொகுப்பாக
என். எஸ். எம். இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து என்ற இச்சிறுகதையானது இலங்கையின் மலையகப் பிரதேச மக்களின் குறிப்பாக தேயிலைத் தோட்டத்தில் வாழும் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் கதையாக உள்ளது. தோட்ட நிர்வாகத்தினால் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதனையும் அவர்களின் வாழ்க்கை முறையின் சில அம்சங்களையும் ஒரு குறுக்குவெட்டுமுகப் பார்வையாக இக்கதை முன்வைக்கின்றது.
இங்கு மக்களின் தொழில்முறை சார்ந்த பிரச்சினைகளே முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கு ஊடாகவே மலையக மக்களின் வாழ்க்கையின் சில கூறுகள் வெளிப்படுவதனையும் கண்டு கொள்ளலாம். இலங்கையில் மலையக மக்கள் இதுபோன்ற இன்னும் சொல்லமுடியாத பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதனை விளங்கிக் கொள்வதற்கான முதற்படியாக இக்கதையைக் கொள்ளலாம். அம்மக்களின் உயிர்த்துடிப்பான வாழ்வை யதார்த்தமாக தனது மொழியினூடே கொண்டு வந்து எம் மனக்கண்முன் நிறுத்தும் பாங்கு சிறுகதையாசிரியரின் வெற்றி என்றே கூறலாம்.
நன்றி :- ஜீவநதி, வைகாசி, 2010
---