- சு. குணேஸ்வரன்
அறிமுகம்
ஒரு இனக்குழுமத்தின் உயிர்ப்பின் அடையாளமாக இருப்பது மொழி. அது பண்பாட்டின் வழிவந்த ஊற்று. மொழியின்றேல் இனமில்லை. அந்த இனத்தின் தனித்துவ அடையாளங்கள் இல்லை. பல்பண்பாட்டுச் சூழலில் புலம்பெயர்ந்து, தமது பிள்ளைகளுக்கு தமிழ்மொழியைக் கற்பிப்பதற்கும் தமிழைப்பேச வைப்பதற்கும் தமிழினூடாகத் தமிழர் என்ற அடையாளத்தைக் கையளிப்பதற்கும் பல்வேறு செயற்பாடுகளை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் ஆற்றிவருகின்றனர்.
இவ்வகையில் அந்நாடுகளில் வாழ்கின்ற இரண்டாந் தலைமுறைத் தமிழ்ப்பிள்ளைகளின் தமிழ்க்கல்வி பற்றிய சிந்தனைக்குரியதாக இக்கட்டுரை அமைகிறது.
புலம்பெயர்ந்தவர்கள் - தலைமுறை
60 களில் இருந்தே இலங்கைத் தமிழரின் புலப்பெயர்வு ஆரம்பித்து விட்டதாயினும் அது பண்பாட்டு ரீதியில் பெருமாற்றத்தை ஏற்படுத்தியதென்று கூறமுடியாது. ‘மூளைசாலிகள் வெளியேற்றம்’, ‘தொழிலுக்கான புலப்பெயர்வு’ என்ற வகையிலேயே அவை அமைந்திருந்தன. ஆனால் 80 களில் இருந்தான புலப்பெயர்வே இங்கு முக்கியமாக கருத்திற்கொள்ளப்படுகிறது, அவ்வாறு புலம்பெயர்ந்தவர்களை ‘தலைமுறை’ என்று வகுத்துப்பார்த்தால் தற்போது இரண்டாந் தலைமுறை தாண்டி மூன்றாந் தலைமுறையும் உருவாகிவிட்டது.
தலைமுறை என்பதை மேலைத்தேயத்தவர்கள் சராசரி 35 வருடங்களைக் கொண்ட காலப்பகுதியாகக் கொள்வர். குறிப்பாக 1983 யூலைக்கலவரங்களின் பின்னர் ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய மூன்று கண்டங்களிலும் உள்ள நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து, ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களை இன்று முதலாந் தலைமுறையினர் என அழைக்கலாம். அதிகமும் இளைஞர்களே அப்போது புலம்பெயர்ந்தார்கள். அதற்கு பல்வேறு சமூக அரசியற்காரணங்கள் இருந்தன. அவர்களுள் வதிவிட அனுமதி கிடைத்தவர்கள் படிப்படியாகத் தமது சகோதரர்களை, தாய் தந்தையரை அழைத்தனர். பின்னர் தமக்கு மணப்பெண்களை அழைத்து திருமணமும் செய்து கொண்டனர்.
இரண்டாம் தலைமுறையினர் எனப்படுவோர் 80 களில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகள். அதாவது சிறுவர்களாக இருக்கும்போது புலம்பெயர்ந்தவர்கள். அல்லது அந்தந்த நாட்டில் பிறந்த பிள்ளைகள்.
இக்கட்டுரை இரண்டாம் தலைமுறையினரை மையப்படுத்தியதாகவே அமைகிறது.
இற்றைக்கு புலப்பெயர்வு ஏற்பட்டு கால்நூற்றாண்டு கடந்துவிட்டது. ஏறத்தாழ பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் வாழ்வதாகக் கணிக்கப்படுகிறது. இங்கு இரண்டாந் தலைமுறையினர் மத்தியில் தமிழ்மொழியைப் பேணுதலில் புலம்பெயர்ந்த தமிழர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அவர்கள் ‘தமிழ்மொழி’ யை இரண்டாம் மொழியாக அல்லது மூன்றாம் மொழியாகக் கற்கவேண்டிய கடப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்க்கல்வி பற்றிய சிந்தனை
புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் தமிழ்க்கல்வி தொடர்பான சிந்தனை 90 களின் பின்னர்தான் ஏற்படுகிறது. முதலில் படிப்படியாகத் தம்மை நிலை நிறுத்திக் கொள்கின்றனர். அகதி அந்தஸ்து அல்லது வதிவிட உரிமை, அந்நாட்டு மொழியைக் கற்றுக்கொள்ளல், தொழில் வாய்ப்பு, என்பன ஓரளவு வாய்த்தபின்னரே தமது குடும்பம் மற்றும் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கின்றனர்.
அதன் பின்னர் இலங்கையில் இருந்து அவர்களுக்கு மணப்பெண்களை அனுப்புதல் தொடர்கிறது. இதனால் அவர்கள் குடும்பமாகத் தம்மை புகலிட நாடுகளில் நிலைநிறுத்திக் கொள்ளும்போதுதான் தமது பிள்ளைகளின் தமிழ்க்கல்வி, தமிழ்ப்பண்பாடு பற்றிச் சிந்திக்கின்றனர்.
திணைக்கோட்பாட்டின் அடிப்படையில் புகலிட நாடுகள்.
இதுவரை தமிழர் புகலடைந்த நாடுகளில் இருந்து எழுதப்பட்ட படைப்புக்களை பொதுமைப்படுத்தியே அவை சுட்டுகின்ற பொருட்பரப்பு, மற்றும் உணர்வுநிலை ஆகியன பேசப்பட்டன. ஆனால் இனிவருங்காலங்களில் திணைகளுக்குரிய தனித்துவப் பண்புகள் போல புகலடைந்த நாடுகளின் அரசியல் பொருளாதார சூழலியல் அம்சங்களையும் கருத்திற் கொள்ளவேண்டியுள்ளது. ஏனெனில் ஒவ்வொரு நாடுகளுக்கும் தனித்துவமானமான கூறுகள் உள்ளன.
சங்க இலக்கியத்தின் ஐந்திணைகளுக்கு அடுத்ததாக தமிழர் புகலடைந்த நாடுகளை ‘ஆறாந்திணை’ என அழைக்கும் வழக்கம் உண்டு.
ஈழத்தமிழர் புகலடைந்த நாடுகள் தட்பவெட்ப மாற்றத்தாலும், பண்பாட்டாலும், மொழியாலும், அரசியல் மற்றும் பொருளாதார நிலமைகளாலும் முற்றிலும் வேறுபட்ட பண்புகளைக் கொண்டதாக அமைந்திருப்பதாலேயே ‘ஆறாந்திணை’ என அழைக்கின்றனர். இந்நிலையில் தமிழ்க்கல்வி பற்றி நோக்கும்போது இவ்வோறுபாடுகளை மனங்கொண்டுதான் பல செயற்பாடுகளை புலம்பெயர்ந்தவர்கள் ஆற்றவேண்டியுள்ளது.
முதலாவது மொழியினூடாகக் கட்டமைக்கப்பட்ட நாடுகள் என்றால், மறுபுறம் சூழல் சார்ந்த வகைப்பாடு முக்கியம் பெறுகிறது.
பிள்ளைகள் வாழும் சூழலைக் கருத்திற்கொள்ளாமல் இலங்கையில் அல்லது தமிழ்நாட்டில் பதிப்பிக்கப்படும் ஆரம்பக்கல்விசார்ந்த நூல்களைக் கொண்டு தமிழ் கற்பிக்கமுடியாது. (உதாரணம் - வண்டில், கிடுகு, அஸ்டலக்சுமி போன்ற சொற்கள்) இந்நிலையில் தான் தமிழ்க்கல்வி பற்றிச் சிந்திக்கவேண்டியுள்ளது.
புதிய தலைமுறையினர் தமிழை ஏன் கற்கவேண்டும்
புகலடைந்த நாடுகளில் தமிழரின் பிள்ளைகள் தமிழை ஏன் கற்க வேண்டும்? அதனால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் யாவை? அவர்களைத் தமிழ்க்கல்வி பயிலுமாறு பெற்றோர் கட்டாயப்படுத்த வேண்டியதற்கான தேவைகள் யாவை? என்பன முக்கியமான வினாக்களாகும். தமிழ்மொழியைப் புலம்பெயர்ந்த நாடுகளிலே இரண்டாந்தலைமுறையினர் ஏன் கற்கவேண்டும் என்பதற்குரிய முக்கியமான காரணம் ‘அடையாளம்’ தான்.
முற்றிலும் மாறுபட்ட பிரதேசத்தில் அந்நியப்பட்டு தம்மை கறுப்பராகவும் நாடற்றவராகவும் அகதிகளாகவும் உணரும்போது, தாயகம் பற்றியும் தம் உறவுகள் பற்றியும் தம் பண்பாடு பற்றியும் நினைக்கத் தலைப்படுகின்றனர். கனடா போன்று ஒட்டுமொத்தமாக அதிகளவில் தமிழர் வாழக்கூடிய நாட்டில் தமது தாயகத்தை மீளுருவாக்கம்செய்து கொள்வதன் ஊடாக தாயகம் பற்றிய நினைவை தற்காலிக நினைவாகவேனும் பேண முயல்கின்றனர். தாம் எப்போதாவது இலங்கைக்கு திரும்பிச்செல்லும்போது தமது பிள்ளைகள் தமிழ் பேசவேண்டும் என்ற குறைந்த பட்ச விருப்பம், மற்றும் அந்நிய நாட்டில் தமது ஊரவரை உறவினரைச் சந்திக்கும்போதும் விழாக்களில் பங்கெடுக்கும்போதும் தமிழ் பேசவேண்டும் தமிழராய் உணர வேண்டும் என்ற வேணவாதான் பிள்ளைகள் தமிழ் கற்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துகின்றது.
எல்லாவற்றுக்கும் மேலாக வேற்றுநாட்டு அடையாளம் முழுதாக தமிழைக் காவு கொள்ளும்முன்னர் உணர்வாலும் செயற்பாட்டாலும் தமிழராய் உணர்தல். இது புலம்பெயர்ந்த முதற்தலைமுறைக்கு பிரச்சினையல்ல. அவர்களின் இரண்டாந் தலைமுறையினருக்குரிய பிரச்சினை. எனவே மொழிவழியாகப் பண்பாட்டைக் கடத்துவதற்கு ஒரு முயற்சியாகத்தான் தமிழைக் கற்கவேண்டிய தேவையை வலியுறுத்துகின்றனர். நான் யார்? என் தாய்நாடு எது? எது என் தாய்மொழி? ஆகிய கேள்விகள் எழும்போதுதான் தாய்நாடு பற்றியும் தமது மொழி பற்றியும் தமது பண்பாடு பற்றியும் பெற்றோர் பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டிய நிலையும் தமது வேர்களைத் தேடவேண்டிய நிலையும் வருகிறது.
மொழி அடிப்படையிலான வேறுபாடு
தாய்மொழி, முதல்மொழி, சிந்தனைமொழி, கல்விமொழி ஆகிய பதங்கள் புலம்பெயர்ந்த இரண்டாந் தலைமுறையினரின் தமிழ்க்கல்வி பற்றிச் சிந்திக்கும்போது அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.
“ஒரு பிள்ளை எந்த மொழியைத் தனது கல்வி மொழியாகக் கொள்கிறதோ அந்த மொழியே அப்பிள்ளையின் சிந்திப்பு நடைபெறுவதற்குமான மொழியாகும்” (கா. சிவத்தம்பி, தமிழ் கற்பித்தல்)
தமிழர் அல்லாதோர் வாழும் ஓர் அந்நியச் சூழலில் அதுகாலவரையில் இல்லாத மொழியைப் பிள்ளைகள் பயிலுமிடத்து அது இரண்டாம் மொழியாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழரின் பிள்ளைகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு தமிழ் இரண்டாம்மொழியாக அல்லது மூன்றாம் மொழியாகவே அமைகின்றது.
தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளைப் பொதுப்படையாக மொழி சார்ந்து பார்ப்போமானால், ஆங்கிலம் பேசும் நாடுகள், ஆங்கிலம் அல்லாத ஏனைய மொழிபேசும் நாடுகள் என இரண்டாக வகுத்து நோக்கலாம்.
பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகியவை ஆங்கிலத்தை அரசமொழிகளாகக் கொண்ட நாடுகள். அங்கு கல்வி மொழியும் ஆங்கிலம்தான். அங்கு புலம்பெயரும்போது ஏற்கனவே இலங்கை காலனித்துவ ஆட்சிக்குள் இருந்தமையால் தமிழர்களை, அவர்களின் பண்பாட்டை ஆங்கிலேயர் ஓரளவு புரிந்து கொள்வதற்கு இடமிருக்கிறது. அதேபோல் புலம்பெயர்ந்தவர்களும் ஆங்கில மொழி அறிவுள்ளவர்களாக இருக்கும்போது அவர்களுக்குரிய தொழிலைப் பெற்றுக்கொள்வதற்குரிய வாய்ப்புக்களும் இருந்துள்ளன.
“கல்வி மட்டத்தில் தமிழ்மொழிப் பயில்வினை கல்விமொழி நிலைநின்று வகுக்கலாம். இந்த வகைப்பாட்டுக்குப் பெயரிடுவதிலேயே சிறியதொரு சிக்கலுண்டு. தமிழை ‘தாய்மொழி’ (mother – tougue) எனக்கொள்வதா அன்றேல் ‘முதல்மொழி’ (first language) எனக் கொள்வதா என்பதுவே அப்பிரச்சினையாகும். கல்விமொழி (educational medium) தமிழாக இல்லாதவிடத்துப் பாடசாலைச் சூழலிலேயே தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு குழந்தைப்பிள்ளை தமிழை அந்தக் கல்விச் சூழலில் இரண்டாவது மொழியாக (second language) அன்றேல் நோர்வே டென்மார்க்கில் நடப்பதுபோன்று மூன்றாவது மொழியாகவே (third language) பயிலவேண்டிய ஒரு நிலைமையுண்டு” (கா.சிவத்தம்பி, தமிழ் கற்பித்தல் ப8)
கனடா அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, ஆகிய நாடுகளில் அந்தந்த நாட்டு மொழிகள் (குறிப்பாக ஆங்கிலம்) பிள்ளைக்கு முதல்மொழியாகவும், தமிழ் இரண்டாம் மொழியாகவும் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
நோர்வே, பிரான்ஸ், சுவீடன், டென்மார்க், சுவிஸ், ஜேர்மனி போன்ற நாடுகளில் அந்தந்ந நாட்டு மொழிகள் முதன்மொழியாகவும் பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கிலம், இலத்தீன், டேனிஷ், சுவீடிஸ், உரோமன்ஸ் நொஸ்க் போன்ற மொழிகளில் ஏதாவது ஒன்று இரண்டாம் மொழியாகவும் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் ‘தமிழ்’ மூன்றாம் அல்லது நான்காம் நிலைக்கு தள்ளப்படும் நிலையே ஏற்படுகிறது. புலம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகள் அந்தந்த நாட்டு மொழியிலேலே கல்வி பயில்கின்றனர். பிள்ளைகளின் சிந்தனைமொழியாகவும் கல்விமொழியாகவும் அந்நாட்டு மொழிகளே முதன்மொழியாகவும் உள்ளன.
ஒரு பிள்ளை அந்நாட்டு மொழியிலேயே சிந்திக்கிறது. பேசுகிறது, கற்கிறது, பணி புரிகிறது. இந்நிலையில் மேலதிகமாக தமிழ் கற்க வேண்டிய தேவை ஏற்படும்போது ஆங்கிலம் பேசும் நாடுகளைக் கொண்ட பிள்ளைகளுக்கு தமிழ் இரண்டாவது மொழியாகவும். ஆங்கிலம் அல்லாத பிறமொழி பேசும் நாடுகளில் வாழும் பிள்ளைகளுக்கு தமிழ் மூன்றாவது மொழியாகவும் ஆகிவிடுகிறது. இது முடிந்த முடிபுமல்ல. சில பிள்ளைகளுக்கு தமிழ் இரண்டாவது மூன்றாவது மொழியாகக்கூட இல்லாத நிலையும் உள்ளது.
தமிழ்க்கல்வி கற்பதற்கான வாய்ப்புகள்
புலம்பெயர்ந்த முதற்தலைமுறையினர் அடையாளத்தைத் தக்க வைப்பதற்காக பல செயற்பாடுகளை ஆற்றிவருகிறார்கள். அவற்றில் பிரதானமாக தமிழ்க்கல்வி கற்பிப்பதற்காக தமிழ்ப்பாடசாலைகளை நடாத்துகிறார்கள். வார இறுதி நாள்கள் பிள்ளைகள் தமிழ் கற்பதற்காக ஒதுக்கப்படுகிறது. சனி அல்லது ஞாயிறு நாள்களில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. இதற்கு தனியாகவும் நிறுவன ரீதியாகவும் பலர் பங்களித்து வருகிறார்கள். அதிகமாக தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாம் இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
ஒருசில உதாரணங்களை நோக்கலாம். (பட்டியல் முழுமையானதல்ல)
ஜேர்மனியைப் பொறுத்தவரையில் 1990 இல் பேர்ன் நகரில் உலகத் தமிழர் இயக்கத்தால் ‘தமிழாலயம்’ என்ற பெயரில் தமிழ் கற்பதற்கான பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. 134 வது தமிழாலயம் கடந்த ஏப்ரல் 2011 இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழாலயம் இணையத்தினூடாக அறியப்படுகிறது. நிர்வாகக் கட்டமைப்புடன் 1ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்புவரை கல்வி கற்பிக்கிறார்கள்.
பிரான்சில் ‘தமிழ்ச்சோலை’ என்ற அமைப்பு தமிழ்ப்பள்ளிகளை நடத்தி வருகிறது.லாசாப்பலில் இதன் தலைமையகம் இயங்குகிறது. 63 தமிழ்ப்பள்ளிகள் இதுவரை இருப்பதாக அறியப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் தமிழ்மொழிக் கல்விக்கான முயற்சிகள் பலவகையில் மேற்கொள்ளப்படுகின்றன. விக்ரோறியா பண்பாட்டுக்கழகம் தமிழ்க்கல்வியை முன்னெடுத்து வருகிறது. அதேபோல 1994 இல் இருந்து ‘பாரதிபள்ளி’ அவுஸ்திரேலியாவில் தமிழ்மொழி வகுப்புக்களை நடத்தி வருகின்றது, இது நான்கு வளாகங்களைக் கொண்டுள்ளதாகவும் இதுபோல வேறுவேறு மொழிப்பாடசாலைகள் 50 வரையில் இயங்குவதாகவும் மாவை நித்தியானந்தன் குறிப்பிடுகின்றார்.
கலிபோர்ணியாவில் தமிழ்க்கழகம் கடந்த 12 வருடங்களாக தமிழ்பயிற்றுவித்து வருகிறது. (tamilhl.org)
“அறிவகம், தமிழ்க்கலை, தொழில்நுட்பக்கல்லூரி, அரச கல்விச் சபைகள், கத்தோலிக்கக் கல்விச் சபைகள், சிவனியக் கோயில்கள், தனியார் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தமிழ்மொழியைக் கற்பித்து வருகின்றன” (கதிர்வேலு சண்முகம், செம்மொழி மாநாட்டு மலர், கனடாவில் “தமிழ்க்கல்வியை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல்கள்”, ப. 282)
இவ்வாறான தகவல்களின் ஊடாக தமிழ்க்கல்விச் செயற்பாடு நடைபெறுவதனை அறியமுடிகிறது.
தமிழ்க்கல்வி கற்பித்தலில் குறைபாடுகள்
ஆரம்பத்தில் பல குறைபாடுகளுடன் தொடங்கிய தமிழ் கற்பித்தல் பலராலும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
1 போராளி அமைப்புக்களால் வழிநடத்தப்பட்ட தமிழ்ப்பாடசாலைகளில் தமிழ் கற்பித்தல் பல குறைபாடுகளைக் கொண்டிருந்தன.
2 பிள்ளைகள் வாழ்கின்ற பிரதேசம் மற்றும் வாழ்க்கைச்சூழல் என்பன கருத்திற் கொள்ளப்படாத தமிழ் கற்பித்தல்.
3 ஆசிரியர்களுக்கு போதியளவு பயிற்சி இன்மை.
4. பிள்ளைகளுக்கு சுமையைக் கொடுக்கக்கூடிய கல்விப்போதனை.
5 எல்லாத் தமிழ்ப்பிள்ளைகளும் தமிழ் கற்பதற்குரிய வாய்ப்புக்கள் இன்மை.
இவற்றோடு தமிழ் கற்றலில் பிள்ளைகள் ஆர்வம் காட்டாமைக்கு பின்வரும் காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன.
1. ஆங்கிலம் சார்ந்த நாடுகளில் இருக்கக்கூடிய ஆங்கிலமயச் சூழல் (கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா…)
2. பெற்றோர் ஆர்வம் இன்மை – ‘தமிழ்’ கற்பதை தரக்குறைவாகக் கருதுதல்.
3. தமிழ் கற்பது பிள்ளைகளுக்கு மேலதிக சுமையாக இருத்தல்.
4. பிள்ளைகள் வாழுகின்ற சூழலைக் கருத்திற்கொள்ளாத அந்நியமான சொற்பதங்கள்.
5. பாடத்திட்டம் மற்றும் உசாத்துணை நூல்கள் போதியளவு இன்மை.
6. தமிழ்மொழியைப் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவடைதல்.
“கனடா பாடத்திட்டத்தின் கீழ் இயல்பாகவே மாணவர்களுக்குப் பெரும் கல்விச்சுமை காணப்படுகிறது. இந்நிலையில் அதிகம் பயனில்லாத மேலுமொரு தமிழ்க் கல்விச் சுமையை ஏன் கூட்டவேண்டும் என்று எண்ணித் தமிழைக் கற்காமல் விடுகின்றனர், கனடாப் பெருநகர்ப் பகுதிகளில் மட்டுமே தமிழைக் கற்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. தொழில் கருதி நகர்களுக்கு வெளியே குடியேறி வாழும் தமிழ்மக்களது பிள்ளைகளுக்கு இந்த வாய்ப்பு இல்லை” (கதிர்வேலு சண்முகம், செம்மொழி மாநாட்டு மலர், “கனடாவில் தமிழ்க்கல்வியை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல்கள்”, ப. 282)
இவ்வாறாக தமிழ்மொழியைக் கற்பித்தலில் இருக்கக்கூடிய குறைபாடுகளும் பிள்ளைகள் தமிழ் கற்பதற்கு ஆர்வம் காட்டாமைக்குரிய காரணங்களும் புகலடைந்தவர்களாலேயே எடுத்துக் காட்டப்படுகின்றன.
மேலும் பொ. கருணாகரமூர்த்தியின் அண்மைக்காலக் கட்டுரை ஒன்று இக்குறைபாட்டை மேலும் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“1990 களில் பெர்லினிலுள்ள தமிழ்ப்பாடசாலை ஒன்றில் தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்து பிள்ளைகளின் கற்பித்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட அரிச்சுவடி அட்டையில் அ- அதிர்ஷ்டலஷ்மி, ஐ- ஐங்கரன், என்று இருந்தது. கண்ணால் காணமுடியாதவற்றைக் குழந்தைகள் எப்படித்தான் மனதில் காட்சிப்படுத்தும், இன்னும் கலைச்சொல்லாக்கம் என்கிற பெயரில் நடைமுறையில் இல்லாத புதிய புதிய சொற்களைப்போட்டு அன்றாடம் அவர்களை வருத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக குமுகாயம்(குழுமம்), ஈருருளி, குளிர்பதனி, பொத்தகம், வெதுப்பகம், ஏதண்டை (கப்போர்ட்), நூலேதண்டை, வரியழியம்(அழிப்பர்), தண்ணுமை, மென்முழவு(மிருதங்கம்), அப்பர்குச்சி (ஊதுவத்தி) என்பன அவைகளில் சில” (பொ. கருணாகரமூர்த்தி, உயிர்மை 100 வது இதழ், 2011, ப.197)
எனவே இவ்வாறான குறைபாடுகள் கருத்திற்கொள்ளப்பட்டு அவை நிவர்த்தி செய்வதற்கு ஏற்ற திட்டமிடலை புலம்பெயர்ந்தவர்களின் கல்வி சார்ந்த அமைப்புக்கள் முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளது.
குறைபாடுகளைக் களைவதற்கான முயற்சிகள்
மேலே குறிப்பிட்ட குறைபாடுகள் படிப்படியாக சீர்செய்யப்படுவதாக கட்டுரைகளின் ஊடாக அறியப்படுகிறது.
கல்விக் கொள்கை, ஆசிரியர்களுக்கான போதிய பயிற்சி, தகுந்த ஆலோசனை வழிகாட்டலில் உருவாக்கப்படும் பாடநூல்கள் ஆகியன இவற்றுள் முக்கியமானவை. மேலும் 90 களில் இருந்து ஈழத்திலிருந்து நூல்களைப் பெற்று கல்வி கற்பித்தவர்கள் 2000 ற்குப் பின்னர் பல்வேறு தமிழ்க்கல்வி நிறுவனங்களை ஒன்றிணைத்து ITEC என்ற அமைப்பை உருவாக்கி பாடநூல்களைத் தயாரிக்கவும், தேர்வுகளை நடாத்தவும், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சியை மேற்கொள்ளவும் வகை செய்திருக்கிறார்கள். (ஆதாரம் tbvgermany.com/tbv/)
இதுபோன்ற முயற்சிகள் அவுஸ்திரேலியாவில் அதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. (பார்க்க - கலாநிதி ஆ. கந்தையா ‘அவுஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல்’ )
மேலும் சில நாடுகளில் கல்வி சார்ந்த ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து பாடநூல்களை உருவாக்கியுள்ளார்கள். படைப்பாளிகள் மற்றும் தமிழ் அறிஞர்களும் இணைந்து பணியாற்றுகிறார்கள். இதற்கு உதாரணமாக சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கம் வருடந்தோறும் மாநாடுகளை நடாத்தி வருவதும் இக்குறைபாடுகள் களைவதற்குரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
மாவை நித்தியானந்தன், கவிஞர் அம்பி, மறைந்த கலாநிதி ஆ. கந்தையா போன்ற சிலரின் ஆரம்ப முயற்சிகள் இவ்வகையில் கவனத்திற் கொள்ளத்தக்கன. பாடநூல்கள், கதைப்புத்தகங்கள், ஒலி ஒளி நாடாக்கள் ஆகியவற்றையும் வெளியிட்டு வருகிறார்கள். புகலிடத்தில் வாழ்பவர்கள் இதுபற்றி விரிவாகப் பகுத்து எழுதி ஆவணப்படுத்த வேண்டியிருக்கிறது.
ஒரு பிள்ளை 30 கிறடிற் எடுத்தால்தான் பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சைக்குத் தோற்றமுடியும் என்ற விதிமுறை கனடாவில் உள்ளது. இதில் 3-4 கிறடிற் தமிழ்க்கல்வியில் பெற்றிருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் நடைமுறை இருக்கிறது. இந்நிலையில் ஒரு பிள்ளை தமிழ் கற்பதன் ஊடாக இவ்வாறான நன்மை கிடைக்க வழி இருக்கிறது. இந்த ஒரு காரணத்திற்காகவும் தரம் 1- முதல் 10 வரை தமிழ்க்கல்வியை ஒரு பிள்ளை பெறவேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள்.
முடிவுரை
ஆங்கிலம் பேசும் நாடுகளைப் பொறுத்தவரையில் வீட்டுமொழியாகக்கூட தமிழ் இல்லாத நிலையில் தமிழ் கற்பதற்கான வாய்ப்பு மிக அரிதாகவே உள்ளது. மாறாக ஐரோப்பிய நாடு ஒன்றில் கல்வி கற்கும் பிள்ளை முதல்மொழியாக அந்நாட்டு மொழியையும் இரண்டாம் மொழியாக சர்வதேச மொழியையும் கற்றுக்கொள்கிறது. மூன்றாம் மொழியாகத்தான் தமிழ் கற்கின்றது. இங்கு பிள்ளைக்கு தமிழ் சுமையாக அமைகின்றது.
இந்நிலையில் வீட்டுமொழியாக தமிழைப்பேச வைப்பதே இப்போது இருக்கக்கூடிய மாற்றுவழியாக இருக்கின்றது. இதனைத்தான் தமிழின் மீதும் தமிழ் அடையாளத்தின் மீதும் அக்கறையுள்ள பலரும் வலியுறுத்துகின்றனர்.
“தமிழ்மொழியின் இடம் என்ன, அதனைப் போதிப்பதன் முறையியல் என்ன? திணிப்பற்ற கல்வியாகத் தமிழ்மொழியை எப்படி ஊட்டுவது? என்கிற வகையில் அவற்றைத் திட்டமிடுவது அவசியம். தமிழ்மொழி ஊட்டப்படுவதன் அவசியம் என்ன என்பது குறித்த வரைவிலக்கணத்தை முதலில் புலம்பெயர்ந்த நாடுகளில் தெட்டத் தெளிவாகக் கொடுக்கப்படல் வேண்டும். (என். சரவணன் நோர்வே, நிலம்பெயர்ந்த தமிழர், ப231-232)
மாணவர்களிடம் தமிழ்பேசும் திறனை வளர்ப்பதற்குரிய ஆலோசனைகளாக பின்வருவனவற்றை தனது ஆய்வு முடிவுகளாக இரா வேல்முருகன் முன்வைக்கிறார். (நிலம் பெயர்ந்த தமிழர் ப.243)
1. தமிழ்ப்பற்றை வளர்த்தல்
2. சொற்களஞ்சியத்தைப் பெருக்குதல்
3. உரையாடுதல்
4. கதை சொல்லுதல்
5. பெற்றோர் பிள்ளைகளோடு அதிக நேரம் செலவிடுதல்
6. திரைப்படக்காட்சிகளை விளக்குதல்
தமிழ்ச்சூழல் ஒன்றில் வளரக்கூடிய தமிழ்ப்பிள்ளை பள்ளிக்கு வரமுன்னரே வீட்டிலே தமிழ்மொழியைக் கற்கத் தொடங்குகிறது. எனவே ஒரு பிள்ளை தமிழில் பேசுவதற்கான சரியான அடித்தளத்தை பெற்றோரால் இடமுடியும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது.
இதனால்த்தான் “வீட்டுமொழியாகக் தமிழை வைத்திருந்தாலே தமிழ் வளரும்” என்று பொன் பூலோகசிங்கம் (எழுத்தாளர் மாநாடு - மலர்: 2002 சிட்னி) குறிப்பிடுகின்றார்.
இன்றைக்கு தமிழர் செய்யக்கூடிய ஆகக்குறைந்த பட்ச முயற்சி இதுவாகத்தான் இருக்கும். இதற்கு உலகப்பரப்பில் எத்தனையோ உதாரணங்களை எடுத்துக்காட்டலாம்.
இறுதியாக எஸ்.பொ வின் கூற்று ஒன்று, வரலாற்றோடு தமிழையும் தமிழ்அடையாளத்தையும் இணைத்துப் பேசுவது எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பை வலியுறுத்தி நிற்கின்றது.
“சபிக்கப்பட்ட இனமாக, இரண்டாயிரம் ஆண்டுகளாக அகதிகளாக நாட்டுக்கு நாடு அல்லாடித் திரிந்த யூத இனத்திற்கு இன்று நாடு கிடைத்துவிட்டது. தமது எபிரேய மொழியை மீட்டெடுத்து அரசு மொழியாக்கியிருக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கற்றிருந்த மொழியை ஆட்சி மொழியாக்கி, அந்த மொழி பயிலப்பட்ட மண்ணிலே இஸ்ரேல் நாட்டினை தோற்றுவித்திருக்கிறார்கள். இதற்க்குக் காரணம் என்ன? யூதேய மதத்தினையும், யூத இனத்தின் தனித்துவத்தையும் அவர்கள் அகதிகளாக அலைந்த அனைத்து நாடுகளிலும் சுமந்து திரிந்தார்கள்.
புதிய வளங்களை அவர்கள் பெற்றிருந்தபோதிலும் புகுந்த நாடுகளிலே தங்களது தனித்துவ அடையாளங்களைக் கரைத்துக் கொள்ளாது அதனைத் தங்கள் உயிருடனும் உணர்வுடனும் சந்ததி சந்ததியாகப் பேணினார்கள். இப்பொழுது இஸ்ரேலிலும் பார்க்க அதிக யூதர்கள் ஐக்கிய அமெரிக்காவில் வாழ்கிறார்கள். அவர்களுடைய ஓர்மமும், பணமும், சாதுர்யமும் இஸ்ரேல் மலருவதற்கு பெரும் பங்கு வகித்தது.” (எஸ்.பொ வின் ஏற்புரை http://akkinikkunchu.com)
எனவே இன்று புலம்பெயர்ந்து வாழ்கின்ற முதலாம் தலைமுறையினர் தமிழ் பற்றியும் தமிழ் அடையாளம் பற்றியும் மேற்கொண்டு வருகின்ற செயற்பாடுகள் அறிவுபூர்மாக மேலும் முன்னெடுத்துச் செல்லப்படல் வேண்டும்.
தமிழ்ப்பண்பாடு என்பது புதிய தலைமுறையினரிடத்தில் மொழிவழியல்லாத அடையாளமாகப் பேணப்படும் நிலை தற்போது உணரப்படுகிறது. இது மிக ஆபத்தானதாக இருக்கும். தமிழ்ப்பெயருடன் வாழும் பிள்ளைக்கு தமிழ் தெரியாத நிலைபோலவும் நடனம் மற்றும் ஆற்றுகைக் கலைகளுக்குரிய பாடத்தை பிரெஞ்சிலோ அல்லது ஆங்கிலத்திலோ மனனம் செய்துவிட்டு அளிக்கை செய்வது போலவும் இருக்கும். இந்நிலைதான் இன்று மொரீசியசிலும் ரியூனியன் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆபத்துக்களைக் களைவதற்கு தமிழ் மொழிசார்ந்து முதலில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஆளுமைகள் சிந்திக்கவேண்டும். அவர்களிடம் இருந்துதான் எதனைப் பிள்ளைக்குப் போதிக்கலாம். அதற்கு எவ்வாறான ஒழுங்குமுறைகளை (அகராதிகள் உருவாக்குதல். சொற்களஞ்சியத்தை உருவாக்குதல், பொருத்தமான கற்பித்தல் முறைகள், பாடத்திட்டம், பாடநூல், ஆசிரியர் பயிற்சிகள்) செய்யலாம் ஆகிய திட்டங்கள் வரவேண்டும். இம்முயற்சியில் பலர் ஈடுபட்டு வருவதும் அறியப்படுகிறது.
எனவே தமிழ் அடையாளத்தை தமிழ் மொழிவழியூடாக புதிய தலைமுறைகளுக்குக் கடத்துவதே இன்று எமக்குள்ள ஒரு வழியாகும். அதனூடாகத்தான் தமிழ்மொழியையும் தமிழ்ப்பண்பாட்டையும் தமிழ் இனத்தையும் எதிர்காலத்தில் வாழவைக்கமுடியும்.
(கொழும்பு தமிழ்ச்சங்கம் நடாத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை – யூன் 2012)
---
ஆதாரமாக எழுத்தாளப்பட்ட நூல்கள் மற்றும் கட்டுரைகள்
1. சிவத்தம்பி. கா பேராசிரியர் :2007, தமிழ் கற்பித்தல், குமரன் புத்தக இல்லம், சென்னை.
2. நிலம் பெயர்ந்த தமிழர் – வேரும் விழுதும் : 2007, (பதிப்பாசிரியர்கள் - ப.கு சண்முகன், க.ப. அறவாணன், இரா. அறவேந்தன்), உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம், மலேசியா.
3. கந்தையா. ஆ. கலாநிதி : 1999, ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல், நான்காவது உலகத் தமிழாசிரியர் மாநாடு, சென்னை.
4. எழுத்தாளர் மாநாடு மலர்: 2002 சிட்னி.
5. கருணாகரமூர்த்தி. பொ: 2011, உயிர்மை 100 வது இதழ், ப.196-198)
6. எஸ்.பொ: 2006, பனிக்குள் நெருப்பு, மித்ர வெளியீடு, சென்னை.
7. இரயாகரன். பி: 2004, ‘புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்க்கல்வி’ தமிழ் அரங்கம்.கொம்.
8. சிவதாஸ் சிவலிங்கம் : ‘புகலிடத்து வாழ்நிலையில் தமிழ்மொழி’ http://www.nortamil.no
9. http://akkinikkunchu.com
10. www ta.wikipedia.com
11. புலம்பெயர்ந்தோரின் கல்விசார்ந்த அமைப்புக்களின் இணையத்தளங்கள்
---
நன்றி – உயிர்நிழல் (பிரான்ஸ்), இதழ் 35, 2012.