Wednesday, August 11, 2010

புலம்பெயர் சிற்றிதழ்களின் அரசியல்
சுப்பிரமணியம் குணேஸ்வரன்
அறிமுகம்
இலங்கையில் 1980 களிலிருந்து முனைப்புப் பெற்ற இனப்போராட்ட சூழலின் தாக்கத்தினால் வடக்கு கிழக்குப் பிரதேசம் உள்ளிட்ட பெருமளவான ஈழத்தமிழர்கள் மேற்குலக ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனால் ‘புலம்பெயர் இலக்கியம்’ என்ற புதியதொரு வகைப்பாடு தமிழ் இலக்கியத்தில் கவனம் பெற்றது.

புலம்பெயர் இலக்கியச் செயற்பாடுகள் 80 களிலிருந்து முன்னெடுக்கப்படுவதற்கு அங்கிருந்து வெளிவந்த சிற்றிதழ்கள் அடிப்படையாக அமைந்திருந்தன. இன்றுவரையான கணக்கெடுப்பின்படி 150 ற்கும் மேற்பட்ட பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் வெளிவந்துள்ளமை ஆய்வுகளினூடாக(1) அறியப்படுகிறது. அவற்றுள் சிற்றிதழ்களின் அரசியலை உசாவுதலே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
/செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைசெம்மொழி மாநாட்டு உரையை நேரடியாக செவிமடுக்க இங்கே அழுத்துங்கள்!
சிற்றிதழ்களும் வெளியீட்டாளர்களும்
புகலிடச் சிற்றிதழ்களின் வெளியீட்டுக்கு முற்றிலும் தனிநபர் சார்ந்த செல்வாக்கு மட்டுமல்லாது அரசியல், சூழலியல், பண்பாடு ஆகியனவும் காரணமாக அமைந்தன.
புகலிட மண்ணில் வாழ்ந்த ஈழத்தமிழர்கள் தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்வதற்கு ஓர் ஊடகம் தேவைப்பட்டது. அவர்கள் சிறுசிறு குழுக்களாகவும் அமைப்புக்களாகவும் இணைந்து இலக்கியச் சந்திப்புக்களை நடத்தியுள்ளனர். அவற்றின் அடிப்படையில் சிற்றிதழ்களைக் கொண்டு வந்து அவற்றினூடாகத் தாயகம் பற்றியும் புகலிடம் பற்றியும் தமது வாழ்வு பற்றியும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எவ்வாறான தகுதிநிலையில் இருந்தார்கள் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. புகலிடச் சிற்றிதழ்களை நடத்தியவர்கள் எல்லாம் இதழியலை ஒரு கற்கை நெறியை முறையாகக் கற்றுக் கொண்டு வந்தவர்கள் அல்லர். எழுத்துலக அனுபவமும் பத்திரிகை அனுபவமும் பெற்ற சிறிய வகுப்பினரே இவர்களுள் இருந்துள்ளார்கள். இவர்கள் தாம் சார்ந்த அரசியல் தளத்தைத் சேர்ந்தவர்களை இனங்கண்டு குழுவாகவே இயங்கத் தொடங்கினர்.

1.ஆயுதப் போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள்.
2.இலங்கை அரச படைகளின் அச்சுறுத்தலுக்கு ஆளானவர்கள்
3.தமிழ்ப் போராளி இயக்கங்களின் முரண்பாடுகளில் சிக்கித் தப்பியவர்கள்.

இதனாலேதான் சிற்றிதழ்களை நடாத்தியவர்களில் அதிகமானவர்கள் அரசியலுடன் தொடர்புபட்டவர்களாக இருந்துள்ளார்கள். இவர்களுக்கு உயிரைக் காத்துக் கொள்வதே அப்போது முதற் தேவையாக இருந்தது. உழைப்புக்காகப் புலம்பெயர்தல் என்பது அடுத்தகட்டமாகவே இருந்தது. இந்தநிலையில்தான் இலக்கியமும் அரசியலும் தொடர்புபடலாயிற்று.

சிற்றிதழ்களின் உள்ளடக்கமும் வடிவமும்
1985 இல் மேற்கு ஜேர்மனியில் இருந்து வெளிவந்த ‘தூண்டில்’ என்ற சஞ்சிகையே புலம்பெயர் படைப்பாளிகளிடம் இருந்து வெளிவந்த முதலாவது சஞ்சிகையாகக் கருதப்படுகின்றது. கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், நூல் அறிமுகம், நிகழ்வுகளின் பதிவுகள், நாடகம், சினிமா, கேலிச்சித்திரம், ஓவியம், வாசகர் கருத்து ஆகிய இலக்கிய வடிவங்களையும் வகைப்பாடுகளையும் புகலிடச் சிற்றிதழ்கள் உள்ளடக்கமாகக் கொண்டிருந்தன.

சிற்றிதழ்கள் தமக்கெனத் தனித்துவமான வடிவத்தையும் கொண்டிருப்பது முறையான ஒர் ஒழுங்காகும். புகலிடத்திலிருந்து வெளிவந்தவற்றுள் முதலாவது அதனை வெளியிடுபவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது. தனிச்சுற்றுக்கு விடப்படும் இதழ்களாக அவை ஆரம்பத்தில் அமைந்திருந்தன. நிறுவனம் சார்ந்த பங்களிப்புடன் சில இதழ்கள் வெளிவந்துள்ளன. (2) மற்றும் தனிநபர்களாலும் குழுக்களாலும் கொண்டு வரப்பட்டவையே அதிகம். இவை அச்சுவடிவம் பெறுவதற்கு படிப்படியாக எடுத்த முயற்சிகள் கவனத்திற் கொள்ளவேண்டிவையாகும்.

(1)கையெழுத்துப் பிரதியாக (Hand Writing) எழுதப்பட்டு பின்னர் அவை பல பிரதிகளாகப் (Photo Copy) படியெடுக்கப்பட்டன. (உ+ம் :- தூண்டில், அ ஆ இ, புதுமை)
(2)தட்டச்சுச் செய்யப்பட்டு (Typing) பின்னர் பல பிரதிகளாகப் படியெடுக்கப்பட்டன. (உ+ம் :- தேனீ, சுவடுகள்)
(3) ஏற்கனவே அச்சில் (print) வெளிவந்தவை தெரிவு செய்து வெட்டியெடுக்கப்பட்டு ஒரே அளவில் பிரதிசெய்யப்பட்டன. (உ+ம் :- இரவல் தூண்டில்)
(4)அச்சு வடிவம் பெற்றவை (உ+ம் :- 90 களில் வெளிவந்த ‘காலம்’)
(5) கணனியில் தட்டச்சுச் செய்யப்பட்டு பிரதியெடுக்கப்பட்டன (உ+ம் :- 90 களில் வெளிவந்த பல சஞ்சிகைகள்)
(6) கணனிப் பதிப்பு - தற்போது வெளிவரும் சஞ்சிகைகள் எல்லாம் (உ+ம் :- யுகமாயினி, உயிர்நிழல், காற்றுவெளி, காலம், எதுவரை)

சிற்றிதழ்களின் அரசியல்
சிற்றிதழில் வெளியாகும் ஆசிரியர் தலையங்கம் அவற்றின் அரசியலை வெளிப்படுத்தப் போதுமானதாக இருப்பதைக் கண்டு கொள்ளலாம். புகலிடத்திலிருந்து வெளிவந்த தேனீ, உயிர்ப்பு, கலப்பை ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர் தலையங்கத்திலிருந்து ஒரு பகுதி பின்வருமாறு அமைந்துள்ளது.

“நாள்தோறும் யுத்த சூழ்நிலைகளில் மரணத்துடனும், பட்டினியுடனும் போராடிக் கொண்டும், அகதிகளாக அலைந்தபடியும், தமது கருத்துச் சுதந்திரத்தையும் முற்றாகப் பறிகொடுத்தும் இருக்கும் வடக்குகிழக்கு சாதாரண மக்களிடையே வெளிப்படையான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளுவது கடினமாகவே இருக்கின்றது. மாற்றுக் கருத்து தெரிவிப்பதற்கான உரிமை அங்கு முற்றாக இல்லாத நிலை விஸ்வரூபம் எடுத்துள்ளது. எனினும் இந்த நிமிடம் வரை அரசின் ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருக்கும் மக்களிடையே அரசிற்கெதிரான எதிர்ப்புணர்வு என்பது ஒன்றும் புதிதாகக் காட்டப்படவேண்டிய ஒன்றல்ல. ஆனால் அதை சரியான திசை வழியில் அணுக முடியாத வகையில் இன்றைய யதார்த்த நிலை அமைந்துள்ளது”(3)

“தமிழ் மக்களது தேசிய விடுதலைப் போராட்டத்தில் தோன்றியுள்ள இன்றைய தேக்க நிலையைக் களைந்து போராட்டத்தை புரட்சிகரமாக முன்னெடுக்க வேண்டும் என்ற அக்கறை தமிழ் மக்கள் மத்தியிலுள்ள முன்னேறிய பிரிவினரிடையே பரவலாகக் காணப்படுகின்றது. இன்றைய பாசிச தலைமைக்குப் பதிலாக உண்மையான புரட்சிகர மாற்றை (Real Revolutionary Alternative) உருவாக்குவது பற்றியும் அதிகம் பேசப்படுகிறது”(4)

“அவுஸ்திரேலியா போன்ற பல்லின மக்கள் வாழ்கின்ற நாடுகளில் ஒவ்வொரு இனமும் தனித்துவத்துடனும் தமது அடையாளத்தைப் பேணியும் வாழ்வது கடினமானது. இது கடலில் எதிர்நீச்சல் போடுவது போன்றது. புகுந்த புதிய இனத்தினர், குறிப்பாக இளையோர் புகுந்த நாட்டின் பழக்கவழக்கங்களில் ஊறிப் போவதும் அவர்கள் அவுஸ்திரேலியராக தம்மை நினைப்பதும் மாற்றிக் கொள்வதும் இயல்பு. தமிழர்களை தமது அடையாளத்துடனும் தமிழ் உணர்வுடனும் இங்கு வாழ வழிசெய்ய பல அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் உதவி வருகின்றன. ஆனால் எல்லாமே எமது வீடுகளிலிருந்தே ஆரம்பிக்கின்றன என்பது உண்மை. நாம் நமது கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும்”(5)

இவற்றைக் கவனத்திற் கொள்ளும்போது சிற்றிதழ்களின் அரசியல், காலம், ஈழச்சூழல் என்பன தெளிவாகப் புலப்படுகின்றன. பொதுவாக வெளிவந்த எல்லாச் சிற்றிதழ்களும் முன்வைத்த பொருட்பரப்பை பின்வருமாறு வகைப்படுத்திப் பார்க்கலாம்.
1.தமிழ்ப் போராளிகளின் அரசியல் நிலைப்பாடு
2.தமிழ்ப் போராளிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலை
3.இலங்கைஅரச படைகள் தமிழ் மக்கள் மீது நடத்திய வன்முறைகள்
4.இந்தியப் படைகள் தமிழ் மக்கள் மீது நடத்திய வன்முறைகள்
5.தமிழர்களுக்கான அரசியல் அதிகாரம்
6.தமிழ்மொழி தமிழ்ப்பண்பாடுப் பேணுகை
7.சாதிய மேலாதிக்கம்
8.புகலிடச் சூழலில் ஈழத்தமிழர்கள் எதிர்கொண்ட நிறவாத இனவாத வன்முறைகள்
9.மூன்றாம் உலக நாடுகள் மீது வல்லரசுகளின் ஆதிக்கம்
10.குடும்பத்திலும் வெளியிலும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள்
11.நவீன கதைசொல்லல் முறை
12. இலக்கியத்தில் புதிய வடிவங்களைப் பரீட்சித்தல்

ஆகியவற்றை புகலிடச் சிற்றிதழ்கள் முதன்மையாக முன்வைத்தன. இவற்றினை மையமாகக் கொண்டே அதிகமான படைப்புக்கள் வெளிப்பட்டன.

எதிர்ப்புக்கூறு
சிற்றிதழ்களில் வெளியாகும் படைப்புக்களைப் பொறுத்தவரையில் அவை அரசியல் ரீதியில் வைத்துப் பார்க்கவேண்டியவை. படைப்புக்களில் அரசியலுக்கு முதன்மை கொடுக்கும் போக்கு 80 களில் இருந்து தொடர்கிறது. சிற்றிதழ்க் குழுக்களின் தெரிவு சிறுகதையாகவோ கவிதையாகவோ கட்டுரையாகவோ ஓவியமாககவோ இருந்தாலும் அது அரசியல் ரீதியில் முதன்மை பெறவேண்டும் என்பதே.
அரசியல் விமர்சனம் அதிகமும் உயிர்ப்பு, தூண்டில், சமர், ஆகியவற்றில் முன்வைக்கப்பட்டன. அவற்றில் இலங்கை அரச படைகளின் மீதானதும் அரச ஆட்சியாளர்கள் மீதானதும் ஒருபுறமெனில் மறுபுறம் ஈழத் தமிழ்ப் போராளிகள் மீதானதாக இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் போராளிகள் தமக்குள்ளேயே முரண்பட்டுக் கொண்டமையும் மோதத் தொடங்கியமையும் இயக்கங்களின் மீதான அதிருப்திக்குக் காரணமாக அமையலாயின.

இவற்றுக்கு அப்பால் 90 களில் இந்தியப்படைகள் மீதான விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. மேலும் ஒரு பகுதியாக மூன்றாம் உலக நாடுகளின் மீது அடக்குமுறையையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்தும் வல்லரசுகளை நோக்கிய விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, சக தமிழ்ப் போராளிக் குழுக்கள் மீது அடக்குமுறையை வெளிப்படுத்தியமை என்பவற்றுக்காக கால் நூற்றாண்டுக்கு மேல் ஈழத்தில் முதன்மை பெற்றிருந்த விடுதலை அமைப்பே அதிகமும் புலம்பெயர்ந்தவர்களின் சிற்றிதழ்களில் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. இந்த அடிப்படையிலான எதிர்ப்பு அரசியலை முன்னிறுத்தி கணிசமான புகலிடச் சஞ்சிகைகள் வெளிவந்துள்ளன. அவற்றுள் தூண்டில், இரவல் தூண்டில், சமர், புதுமை, உயிர்ப்பு என்பன முக்கியமானவை.

பெண்ணிய எழுத்துக்கள்
மேற்குலகில் பேசப்பட்ட பெண்ணிய அரசியல் தமிழ்நாட்டிலும் புகலிடத்திலும் மேலும் முன்னெடுக்கப்பட்டபோது பெண்கள் தங்கள் பிரச்சனைகள் பற்றித் தாமே பேசவும், தமக்கெதிரான வன்முறைகளை எதிர்க்கவும், இலக்கியத்தில் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்தவும் தலைப்பட்டனர் இதற்கு புகலிடத்திலிருந்து வெளிவந்த சிற்றிதழ்கள் அவர்களின் கருத்துக்களைச் சுமந்து செல்வதற்கான ஊடகமாக இருந்துள்ளன.

ஆரம்பத்தில் வெளிவந்த சஞ்சிகைகளில் ஆண்களே எழுதி வந்தாலும் அவர்கள் இயக்க செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என்பதனால் இயல்பாகவே பெண்கள் தொடர்பாக முற்போக்குப் பார்வையுடன் தமது கருத்துக்களை முன்வைத்தனர். ஆனால் அவை ஆணாதிக்க மனோநிலையுடன் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்ப்பது பெண் எழுத்துக்களின் முதற்கட்டமாக இருந்தது. மறுபுறம் ஆணாதிக்க கருத்தியல் மனோபாவத்துடன் எழுத்துக்களை மறுத்து பெண்ணிய அரசியலை முன்வைக்கும் படைப்புக்களை எழுதுவது என்பது அதன் இரண்டாவது கட்டமாக இருந்தது. இதனாலேயே பெண்ணிய எழுத்துக்கள் பெண்களிடம் இருந்தே வரவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இந்த அடிப்படையில் வெளிவந்த சிற்றிதழ்களுள் கண், சக்தி, ஊதா, ஆகியனவும் ஊடறு, பெண்கள் சந்திப்பு மலர், ஆகிய மலர் வெளியீடுகளும் கவனத்திற் கொள்ளத்தக்கவையாகும்.

புதிய கதைகளும் புதிய வடிவங்களும்
மாற்றுக் கருத்துள்ளவர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடியவாறு சில சஞ்சிகைகளில் வெளிவந்த படைப்புக்கள் அமைந்திருந்தன. அவற்றின் நோக்கம் தனியே அரசியலை முன்னெடுப்பது மட்டுமல்ல. நவீன இலக்கியத்தின் அண்மைக்காலப் போக்குகளையும் முன்னெடுப்பாதாகும். அம்மா, உயிர்நிழல், எக்ஸில், காலம், ஆகிய சிற்றிதழ்கள் தொடர்ந்து இப்பணியைச் செய்துள்ளன.

ஆக்க இலக்கியங்களாகிய கவிதை, சிறுகதைகளில் வித்தியாசமானவற்றை முன்வைத்ததோடு வடிவம் சார்ந்த மீறல்களையும் நிகழ்த்த இச்சிற்றிதழ்கள் இடங்கொடுத்தன. அம்மா, உயிர்நிழல், எக்ஸில் ஆகியவற்றில் வெளிவந்த சிறுகதைகளிற் சில புதிய வடிவங்களையும் புதிய கதைகளையும் முன்வைத்ததோடு சில கதைகள் தொடர்ச்சியான விமர்சனத்துக்கும் உள்ளாகின. கலாமோகன், அரவிந் அப்பாத்துரை, நா. கண்ணன், ஷோபாசக்தி, ஆகியோரின் கதைகள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டமைக்கு அவை எடுத்துக் கொண்ட புதிய கதைகளும் வடிவமும் காரணமாயின. இதேபோல் கவிதைகளும் கவனத்திற் கொள்ளப்பட்டன.
பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம், எதிர்ப்பிலக்கியம் ஆகியவற்றில் மிகக் கூடிய கவனம் செலுத்தியமையால் தமிழ்நாட்டு சிற்றிதழ்களுக்கு இணையாக இவை மதிப்பிடப்பட்டன.

முடிவுரை
புலம்பெயர் இலக்கியம் அனைத்து மட்டத்திற்கும் முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கு சிற்றிதழ்கள் அளப்பரிய பணியினை ஆற்றியுள்ளன. இன்று புலம்பெயர் இலக்கியம் என்ற அடையாளத்தைத் தாங்கி வந்துள்ள பல தொகுப்புக்கள்(6) சிற்றிதழ்களிலேயே ஆரம்பத்தில் வெளிவந்துள்ளன. தொடர்ச்சியாக அந்த இதழ்களில் வெளிவந்த புனைவு சாரா எழுத்துக்கள் தொகுப்பு வடிவமாக்கப்படும்போது புலம்பெயர் சிற்றிதழ்களின் அரசியலை மேலும் நுண்மையாக நோக்குவதற்கு வாய்ப்பு ஏற்படும். இந்த வகையில் புகலிட இலக்கியப் பரப்பில் தட்டிக்கழிக்க முடியாத ஆய்வுக்குரிய மூலாதாரங்களாக புலம்பெயர் சிற்றிதழ்கள் அமைந்துள்ளன எனலாம்.

(கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை)


அடிக்குறிப்புகள்
(1) குணேஸ்வரன். சு, 2008, அலைவும் உலைவும் - யாழ்ப்பாணம், தினைப்புனம்
வெளியீடு. ப.45 / (இது பற்றி முனைவர் மு. செல்வக்குமாரன் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்
பன்முக வாசிப்பு’ 2008, காவ்யா வெளியீடு, நூலில் 60 ற்கு மேற்பட்ட சஞ்சிகைகள்
வெளிவந்ததாகக் குறிப்பிட்டுள்ளார் ப.18)
(2) தென்னாசிய நிறுவத்தின் பங்களிப்புடன் மேற்கு ஜேர்மனியிலிருந்து வெளிவந்த தூண்டில்
சிற்றிதழ்.
(3) ஆசிரிய தலையங்கம் : தேனீ, யூலை 1991, ஜேர்மனி.
(4) ஆசிரிய தலையங்கம் : உயிர்ப்பு 3, 1993, லண்டன்
(5) ஆசிரிய தலையங்கம் : கலப்பை 50 வது இதழ், ஐப்பசி 2006 அவுஸ்திரேலியா.
(6) எஸ். பொ இந்திரா பார்த்தசாரதி தொகுப்பில் வெளிவந்த ‘பனியும் பனையும்’ மு. திருநாவுக்கரசு
தொகுத்த ‘புலம்பெயர்ந்தோர் கவிதைகள்’ திருச்சியிலிருந்து வெளியிடப்பட்ட புலம்பெயர்ந்தோர்
மாநாட்டு மலர், அ ஆ இ சஞ்சிகையினர் தொகுத்த சிறுகதைச் சிறப்பிதழ் என்பன
இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.
நன்றி :- வலம்புரி - யாழ்ப்பாணம்/ காற்றுவெளி (இணைய இதழ்) லண்டன்.
---