Thursday, March 20, 2014

ஆழியாளின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் ‘கருநாவு’ கவிதைத் தொகுதியை முன்வைத்து ஒரு குறிப்பு


- சு. குணேஸ்வரன்

கருநாக்கு என்ற சொற்றொடர் தமிழில் வழக்கத்தில் உள்ளது. அதாவது இயல்பாகவே சிறு கரும்புள்ளிகளை உடைய நாக்கு என்று பொருள்படும் இச்சொற்றொடரை கிராமிய வழக்கில் ‘கருநாவு’ என்று அழைப்பர். இதனால் அவர்கள் சொல்வது பலித்துவிடும் என்ற ‘நம்பிக்கை’ பொதுவாக இருக்கிறது. இதையே ஆழியாளின் கவிதைத் தொகுப்பு தலைப்பாகக் கொண்டுள்ளது. ஒரு பெண் கருநாக்கு உள்ளவளாக இருப்பாளாயின் மற்றவர் பார்வையில் அவள் வசைக்கு உரியவளாகவும் இருந்துவிடுவாள். ஆழியாளின் ஏற்கெனவே வந்த ‘உரத்துப்பேச’, ‘துவிதம்’ ஆகிய கவிதைத் தலைப்புகளும் இதுபோல்தான் அர்த்தம் பொதிந்தவையாக அமைந்துள்ளன.

இத்தொகுதியில் 7 மொழிபெயர்ப்புக்கவிதைகளுடன் மொத்தம் 32 கவிதைகள் உள்ளன. ஆழியாளின் ஏற்கெனவே வந்த தொகுப்புகளில் இருந்து சில வித்தியாசங்களையும் கவிதைகளின் இன்னொருகட்டப் பாய்ச்சலையும் இக்கவிதைகள் காட்டுகின்றன. இதற்குக் காரணம் இத்தொகுப்பில் துருத்திக் கொண்டு நிற்கும் மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தேர்வும் அவற்றின் உள்ளடக்கமும். மற்றையது ஒட்டுமொத்தமாக இக்கவிதைகள் கலைத்துவ நேர்த்தியுடன் அமைந்திருப்பது.

முதலில் ஆழியாள் மொழிபெயர்த்துள்ள கவிதைகளை நோக்கினால் தொகுப்பில் ஏழு கவிதைகள் உள்ளன. ஆங்கில மூலத்தில் அமைந்த அக்கவிதைகளை அவுஸ்திரேலியக் கவிஞர்களான ஜாக் டேவிஸ், கெவின் கில்பேர்ட், எலிசபெத் ஹொஜ்சன், ஜோன் லூயிஸ் கிளாக், பான்சி ரோஸ் நபல்ஜாரி ஆகியோர் எழுதியுள்ளனர்.

முதலில் மொழிபெயர்ப்புச் செய்த ஆழியாள் பற்றி நோக்கலாம். ஆழியாள் ஆங்கிலத்துறை விரிவுரையாளராக இலங்கையில் வவுனியா வளாகத்தில் 7 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார். அவுஸ்திரேலியாவில் மேற்பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். நவீன இலக்கிய ஈடுபாட்டோடு பெண்ணியச் சிந்தனைகளிலும் ஈடுபாடு உடையவர். கவிஞர், சமூகச் செயற்பாட்டாளர். இவரின் தனிப்பட்ட ஆளுமையும் கலையாற்றலும் அவர் சார்ந்த அரசியல் பார்வையும் இக்கவிதைகளில் செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றமையை அவதானிக்கமுடிகிறது.

இக்கவிதைகள் ஒவ்வொன்றும் உலகப் பொதுமையான பிரச்சினைகளைப் பேசுவதை கவனத்திற்கொள்ளவேண்டும். அவை தட்டிக்கழிக்கமுடியாத வகையில் எமது வாழ்வனுபவத்திற்கு மிக நெருக்கமாக அமைந்திருப்பதாலேயே ஆழியாளின் இம்மொழிபெயர்ப்புக் கவிதைகளை முக்கியமானதாகக் கருதுகிறேன்.

“பகல் விமானம்” என்ற கவிதை புலம்பெயரிகளின் தாயகம் பற்றிய நினைவினை மிக வித்தியாசமாக எடுத்துக்காட்டும் கவிதையாக அமைந்துள்ளது. அந்த நினைவுகள் புலம்பெயரும் ஒருவர் தனது நினைவுகளில் தாயகத்தைக் காவிச்செல்ல முற்படுபவதை காட்டுகிறது.

“ஒரு துண்டு வானத்தையும்
நீலப்பச்சைக் கடலின் பகுதியொன்றையும்
கையோடு கூட்டிச் செல்ல
அனுமதிப்பார்களா என்று
அருகில் வந்த பணிப்பெண்ணைக் கேட்டேன்? ”

இது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமே உரிய அனுபவம் அல்ல. இனம் மதம் மொழி கடந்து புலம்பெயர்ந்த ஒவ்வொருவரின் படைப்புக்களிலும் இருக்கக்கூடிய பொதுவான உணர்வுநிலை. ஜாக் டேவிஸ் அதனை நாடுவிட்டுப் பெயர்க்கப்பட்டு அகதியாக அலைந்து திரியும் மக்களின் பொதுவான அனுபவமாகத் தந்திருக்கிறார்.

“பால் பெல்போரா நடனம் முடிந்துவிட்டது” என்ற தலைப்பிலான கெவின் கில்பேர்ட்டின் கவிதை தமிழர் பிரதேசத்தில் நடந்து முடிந்துபோன, போருக்குப் பின்னர் எமக்கு ஏற்பட்டிருக்கும் அனுபவத்திற்கு மிக நெருக்கமான வருவதை உணரமுடிகிறது.

“…………………
……………….....
நெடிதுயர்ந்த நெடுஞ்சாலை மலைக்குன்றருகே
போராளி அவன் மடிந்து கிடக்கிறான்
தன் முறிந்த ஈட்டி வீழ்ந்த அதே இடத்தில்
நெடிதுயர்ந்த நெடுஞ்சாலை மலைக்குன்றருகே
போராளி அவன் மடிந்து கிடக்கிறான்.
………….
…………
குன்றுச் சரிவிலே
அவனின் பெட்டைத்துணை
ஊயிரற்றுக் கிடக்கிறாள்

ஏறி அவளை வன்புணர்ந்து தள்ளிய
இராணுவச் சிப்பாயிடம்
உயிருக்காய் நப்பாசையில் மன்றாடியவளை
அவளின்
கறுத்த குரல்வளையைச் சீவித்
தறித்தெறிந்தான் இராணுவச் சிப்பாய்.

அவள் பாலூட்டிய பிஞ்சு மகவோ
புற்களிடையே கிடக்கிறது
விறைத்த உருக்கு இரும்பால்
தலை பிளக்கப்பட்டு
சிதறிய மூளை மெல்லத் துடித்தபடி
………………
………………”

இதன் ஆங்கில மூலக்கவிதைக்குச் சொந்தக்காரர் ‘கெவின் கில்பேர்ட்’ சிறையிலேயே தனது காலத்தைக் கழித்தவர். அரசியல் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளராக இருந்துள்ளார். ஆதிக்குடிகளின் வரலாற்றை பல வழிகளில் ஆவணப்படுத்துவதிலும் அவர்களுக்கான அரசியல் உடன் படிக்கைகளை முன்னெடுப்பதிலும் பெரும் பங்காற்றியவர் என மூலக்கவிஞர் பற்றிய குறிப்பின் ஊடாக அறியமுடிகிறது.

அவுஸ்திரேலிய ஆதிக்குடிகள் தம் வாழ்வுக்கான போராட்டத்தை எடுத்துக்காட்டும் இக்கவிதை இன்று ஈழத்தவர்களின் உருக்குலைக்கப்பட்ட வாழ்வுக்கும் பொருத்தமாக இருக்கிறது.

“காக்கைச் சிறகுகள்” என்ற கவிதை நிலத்துக்கான போராட்டம் பற்றிக் கூறும் கவிதையாக உள்ளது. தாம் உயிர்வாழ தங்கள் பூர்வீக நிலங்களுக்காக அந்நியருடன் போராடவேண்டியுள்ளமையை அந்தக் கவிதை எடுத்துக்காட்டுகிறது.

“கலங்கல் நீரைப் போல
மண்; நிறத்தாலானது
என் அம்மம்மாவின் கைகள்

அவள் குழந்தைகளை அவர்கள் எடுத்துச் சென்றபோது
தன் மகனையும்,
கடைசி மகளையும்
ஒன்றாய் இழந்தாள்
……….
அந்நியப் படையெடுப்பைத் தடுக்கவென்றே
அப்பப்பா போருக்குப் போனார்
ஆனால் அதற்கு முன்னமே
அவர்கள்
நாட்டைச் சுற்றி வளைத்துப் பிடித்து
விட்டார்கள்.
……….
அவர்கள் போராடவேண்டியிருந்தது
ஒன்றாய்
உயிர் வாழவும்
காதல் செய்யவும்
சாவதற்கும் அவர்கள் போராட
வேண்டியிருந்தது
தங்களுக்குச் சொந்தமான
சொந்த மண்ணிலேயே!”

இக்கவிதையின் ஆங்கிலமூலம் ‘ஜோன் லூயிஸ் கிளாக்’ என்ற அவுஸ்திரேலியக் கவிஞருடையது. இக்கவிதை தங்கள் பூர்வீக நிலத்துக்காக அந்நியர்களுடனும் ஆக்கிரமிப்பாளர்களுடன் போராடிக் கொண்டிருக்கின்ற இனங்களின் உயிர்த்துடிப்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

இதேபோல தனது சுயத்தை தனது அடையாளத்தைத் தேடும் கவிதைகளில் ஒன்றாக “செந்தைல மரங்களும் நானும்” என்ற கவிதை அமைந்திருக்கிறது.

மனிதர்களின் வசவுகளுக்கும் அதற்கு பயந்து சாகும் கணங்களையும் மனித வடிவில் இருந்து அனுபவிக்க வேண்டியிருக்கின்ற சந்தர்ப்பத்தில் தனது உணர்வுகளை செந்தைல மரங்களிடம் முறையிடுவதாக அக்கவிதை அமைந்துள்ளது. அம்மரத்தின் செழிப்பு, குளிர்ந்து வீசும் இலைகளின் நளினம், அந்த மரம் மண்ணில் வேரூன்றியிருக்கும் உயிர்ப்பு… எல்லாமே கவிஞரை வசீகரிக்கின்றன. இதனாலேதான் ‘வெள்ளை’ நிறத்தைக் கழுவி நாம் எந்த நிலத்துக்கு உரித்தாக இருந்தோமோ அங்கே கொண்டு சேர்த்துவிடுங்கள் என்று மரங்களைக் கோருவதாய் அக்கவிதை அமைந்திருக்கிறது.

“செந்தைல மரங்களே
என் மூளையினூடே ஊடுருவி
வெளியேறுங்கள் மறுவழியாய்
எங்கு உரித்தாய் வாழ்ந்திருந்தோமோ
அங்கு கொண்டு சேர்த்து விடுங்கள்
எம் எல்லோரையும்.”

மேற்கூறிய கவிதையோடு சற்று இணைந்து வரக்கூடிய மற்றுமொரு கவிதை நிறவாதம் பற்றிப் பேசுகிறது. “கொடுத்து வைத்த குட்டிப்பெண்” என்ற இக்கவிதையில் ஒரு சிறுமி வெள்ளையாகப் பிறந்த காரணத்தால் மிக அதிக வசதிவாய்ப்புகள் கொடுக்கப்பட்டு கவனிக்கப்படவும் மற்றையோர் கறுப்பாய் பிறந்த காரணத்தால் ‘கறுப்பர்கள்’, ‘காட்டுமிராண்டிகள்’ என்று வசைபாடப்பட்டு எல்லாவகையிலும் ஒதுக்கப்படும் நிலையை எடுத்துக் காட்டுகிறது.

“ வெள்ளைத் தலைமயிர், வெள்ளைத் தோல் கொண்ட
கொடுத்துவைத்த குட்டிப்பெண்ணே
…………………
நீ எழுதப்படிக்கவும்
கொடிக்கு மரியாதை செலுத்தவும்
மேன்மை தங்கிய மகாராணியாரைக் கனம்பண்ணவும்
நாங்கள் உனக்குக் கற்றுத் தருவோம்.
……………….
விரைவில் உன் குடும்பத்தை
கம்பி வேலிகளுக்கு அப்பாற் தெரியும்
அக்கறுத்த மூஞ்சிகளை
நீ மறந்து விடுவாய்
கறுப்பு காட்டுமிராண்டி இனத்தை
வென்று வாகைசூடிய சமாதானம் பற்றி
நீ பள்ளிக்கூடத்தில் புதியதோர் வரலாறு படிப்பாய்.”

இறுதியாக எதிர்காலம் மற்றும் மனித சுதந்திரம் பற்றிய கனவை எடுத்துக்காட்டும் வகையில் இரண்டு கவிதைகள் அமைந்திருக்கின்றன.

காலமும் மனிதனும் ஒன்றுடன் ஒன்றாய் பிணைந்து வாழும்போது வாழ்வு வசப்படும் என்பதை ஜாக் டேவிஸ் இன் “வெளி பற்றிய கனவில்” என்ற கவிதை காட்டுகிறது. மற்றையது ‘கங்காரு’ என்ற கவிதை. அது பான்சி ரோஸ் நபல்ஜாரி என்ற கவிஞருடையது. அதில் கங்காருவின் பயமற்ற சந்தோசமான வாழ்வு சொல்லப்படுகிறது.

“துள்ளித் திரிந்ததில் களைப்புற்ற கங்காரு
ஓர் நிழலில் கால் நீட்டிக் சாய்ந்து கிடக்கிறது
நீரின் சலசலப்பைக் கவனித்தபடி
தண்ணீர் மெதுவாய் ஓடிக்கொண்டிருக்கிறது.

மிகச் சந்தோசமாயிருக்கிறது அது
குறிவைத்து ஈட்டி எறிய மனிதர் எவரும்
அங்கில்லை.
ஏகாந்தத்தில்,
சிவந்த மலர்களின் மணத்தை மோந்து
அனுபவித்து மிதந்து
களைப்பு மிக மேவ
அது நித்திரைக்குப் போகிறது மெல்ல.”

கங்காரு சுதந்திரமாக வாழ்கிறது. ஆனால் மனிதர்களின் அழகான வாழ்வு தொலைந்து வெகுகாலமாயிற்று என்பதனை இக்கவிதையின் ஊடாக உணரமுடிகிறது. யுத்தமும், அதிகாரமும், பணமும், இயற்கையும்கூட மனிதர்களை இருண்ட உலகத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்ற காலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய நிலையில் மேற்கூறிய இரண்டு கவிதைகளும் மனிதகுலத்தின் அமைதியான வாழ்வைத் தேடும் ஏக்கமாக அமைந்திருக்கின்றன.

ஒட்டுமொத்தமாக நோக்கினால் ஆழியாளின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் அவரது தனிப்பட்ட ரசனை வேறுபாட்டையும் ஆளுமை முதிர்ச்சியையும் காட்டுகின்றதாயினும் அதற்கும் அப்பால் இக்கவிதைகளுக்கு இருக்கக்கூடிய அரசியற்பார்வை என்பது மேலானது.

ஏற்கெனவே ஈழத்தில் இதுபோன்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எம். ஏ நுஃமான், சோ.பத்மநாதன் ஆகியோரின் மொழிபெயர்ப்பு முயற்சிகள் முக்கியமானவை. இவை தவிர தனித்தனியாக மேற்கொள்ளப்பட்டுள்ள மொழிபெயர்ப்புகளும் கவனத்திற் கொள்ளத்தக்கவை.

இந்த வகையில் ஆழியாளின் கருநாவு தொகுதிக்கு வலுச்சேர்ப்பதாகவே அவரது மொழிபெயர்ப்புக் கவிதைகள் அமைந்துள்ளன. அவை ஆழியாளுக்கு கவிதைகள் மீதுள்ள ஈடுபாட்டையும் அவரது மொழிபெயர்ப்பின் எளிமையையும் எடுத்துக்காட்டுவதுடன் அவற்றின் அரசியலையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. அவுஸ்திரேலியப் பழங்குடிகளின் வாழ்வைப் பதிவுசெய்வதே மூலக்கவிஞர்கள் நோக்கமாக இருந்திருந்தாலும் அவை இன்றும்கூட தம் நிலத்தையும் உரிமையையும் வாழ்வையும் இழந்து உலகமெல்லாம் அலைந்துதிரியும் பூர்வீகமக்களுக்கும் அதிகாரத்தின் கைகளுக்குள் அகப்பட்டு நசிபடும் மானுட இனத்துக்கும் பொருந்துவனவாக அமைந்திருக்கின்றன. இந்த வகையில் ஆழியாளின் இந்த மொழிபெயர்ப்பு முயற்சி அவரின் கவிதைப் பயணத்தில் ஒரு அங்கமாக கவனத்திற்குரியதாக அமைந்திருக்கின்றது.

---
மேற்படி 7 கவிதைகளிலிருந்து கெவின் கில்பேர்ட், ஜாக் டேவிஸ் ஆகியோரின் மூலக்கவிதைகளும் அவற்றுக்கு ஆழியாளின் மொழிபெயர்ப்பும் முழுமையாகத் தரப்பட்டுள்ளன.

BAAL BELBORA - THE DANCING HAS ENDED

Baal Belbora
Baal Belbora
the end the dancing has stopped
The warrior lies dead where his broken spear fell
beside the highway pinnacle rock


Baal Belbora
Baal Belbora
his lubra lies dead on the slope
the mounted trooper who mounted and raped her
has slashed her black throat when she pleaded with hope
the child that she suckled
lies dead on the grass
The grey quivering brains smashed out with cold steel

Baal Belbora
Baal Belbora
the dancing has ended
Now ask me white man
How do I feel

- Kevin Gilbert

பால் பெல்போரா – நடனம் முடிந்துவிட்டது

“பால் பெல்போரா
பால் பெல்போரா
முடிந்துவிட்டது நடனம்
நடனம் முடிந்துவிட்டது
இறுதியில் நடனம் நின்று போய்விட்டது.

நெடிதுயர்ந்த நெடுஞ்சாலை மலைக்குன்றருகே
போராளி அவன் மடிந்து கிடக்கிறான்
தன் முறிந்த ஈட்டி வீழ்ந்த அதே இடத்தில்
நெடிதுயர்ந்த நெடுஞ்சாலை மலைக்குன்றருகே
போராளி அவன் மடிந்து கிடக்கிறான்.

“பால் பெல்போரா
பால் பெல்போரா
முடிந்துவிட்டது நடனம்
நடனம் முடிந்துவிட்டது.

குன்றுச் சரிவிலே
அவனின் பெட்டைத்துணை
ஊயிரற்றுக் கிடக்கிறாள்
ஏறி அவளை வன்புணர்ந்து தள்ளிய
இராணுவச் சிப்பாயிடம்
உயிருக்காய் நப்பாசையில் மன்றாடியவளை
அவளின்
கறுத்த குரல்வளையைச் சீவித்
தறித்தெறிந்தான் இராணுவச் சிப்பாய்.

அவள் பாலூட்டிய பிஞ்சு மகவோ
புற்களிடையே கிடக்கிறது
விறைத்த உருக்கு இரும்பால்
தலை பிளக்கப்பட்டு
சிதறிய மூளை மெல்லத் துடித்தபடி

“பால் பெல்போரா
பால் பெல்போரா
நடனம் முடிந்துவிட்டது
அட வெள்ளைக்காரா!
இப்போது என்னை வினவிக் கேள்
என் மனநிலை எப்படி இருக்கிறதென்று
என்னைக் கேள்.

தமிழில் – ஆழியாள்


Day Flight

I closed my eyes as I sat in the jet
And asked the hostess if she would let
Me take on board a patch of sky
And a dash of the blue-green sea.

Far down below my country gleamed
In thin dry rivers and blue-white lakes
And most I longed for, there as I dreamed,
A square of the desert, stark and red,
To mould a pillow for a sleepy head
And a cloak to cover me.
-- Jack Davis


பகல் விமானம்

“கண்களை மூடினேன்.
விமானத்தில் அமர்ந்து.

ஒரு துண்டு வானத்தையும்
நீலப்பச்சைக் கடலின் பகுதியொன்றையும்
கையோடு கூட்டிச் செல்ல
அனுமதிப்பார்களா என்று
அருகில் வந்த பணிப்பெண்ணைக் கேட்டேன்?

கீழே
மிக ஆழத்தில்
காய்ந்து நெடிந்த ஆறுகளுடன்
வெண் நீல ஓடைகளுடனும்
எனது நாடு ஜொலித்துக் கொண்டிருக்க
செக்கச் சிவந்த பாலைவனச் சதுரமொன்று
துவளும் என் தலைக்கு அணையாகி
போர்வையாய் எனை மூடுவதாய்

ஏக்கக் கனவொன்றில் ஆழ்ந்து போனேன்”

தமிழில் - ஆழியாள்

---
(நன்றி : ஊடறு, மார்ச் 2014)