Wednesday, November 20, 2013

ஷோபாசக்தியின் நாவல்கள் 'கொரில்லா, ம் குறித்து...'



சு. குணேஸ்வரன்
 

Abstract: Shobasakthi’s both Novels ‘Gorilla’ and ‘Im’ (auto-fiction) focus on Ealam Struggle and its politics as a common feature. These creative works are based on historical aspects written in a fictions form with unusual technique and style. As far as the Diaspora literature is concerned particularly in the sphere of novels they are quite different in form, content and treatment. A striking feature is the satirical language in its highest creative form with sharp and purgent comments by the one time militant turned. A gifted writer. Gorilla portrays the part of the “early phase” of the Ealam struggle. Through the real characters’ in flesh and blood it speaks about the Tamil militants’ initial activities and the growing contradictions and the rivalry existed among the militant groups. ‘im’ too in a way speaks about this sense of lots, disillusionment and their tendency finally lead to downfall. Both novels are events or happenings full of craving for power, betrayal and the deceit. The element of satire is handled superbly with vigour and vitality with maturity. The unique and the redeeming aspect is that the both these novels have completely rejected the usual narrative style. As novels highlighting the Ealam struggles they not only draw the attention and concern of the Tamil reading public, but also demand a comprehensive study or research because of their high potentialities.
Keywords: Diaspora novels, Political novels.


ஆய்வுச்சுருக்கம்:

ஷோபாசக்தியின் ‘கொரில்லா’, ‘ம்’ ஆகிய நாவல்கள் ஈழப்போராட்ட அரசியல் வரலாற்றைப் புனைவாக்கிய படைப்புக்களாகும். புகலிடத்தில் இருந்து வெளிவந்தவற்றுள் உள்ளடக்கத்தாலும் உருவத்தாலும் புனைவுமொழியாலும் வித்தியாசங்களைக் கொண்டவை. ‘கொரில்லா’ ஈழப்போராட்டம் தொடங்கிய வரலாற்று ஓட்டத்தை ஒரு பகுதியாகச் சித்திரிக்கிறது. தமிழ்ப் போராளி அமைப்புக்களின் ஆரம்ப காலச் செயற்பாடுகள், அவற்றுக்கிடையிலான முரண்பாடுகள் ஆகியவற்றை நிஜ மாந்தர்களின் கதைகளின் ஊடாகச் சொல்கிறது. ‘ம்’ நாவலும் இந்தப் போராட்ட அரசியலின் தொடர்ச்சியான வீழ்ச்சியினைப் பேசுகிறது. நாவல்கள் இரண்டிலும் அதிகாரமும் துரோகமும் தப்பித்தலும் இயலாமையும் நிறைந்திருப்பதைக் காணலாம். இவற்றில் வெளிப்படும் எள்ளலுக்கூடாக ஈழ அரசியல் பற்றிய விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. இரண்டு நாவல்களும் மரபுமுறையான கதை சொல்லும் உத்தியை நிராகரிக்கின்றன. முதலில் ஒரு போராளியாக இருந்து பின்னர் எழுத்தாளரான சோபாசக்திக்கு போராட்டச்சூழல் அன்னியமானதல்ல என்பதும் இங்கு குறிப்பிடவேண்டும். இவ்வகையில், ஈழப் போராட்ட வரலாற்றைப் புனைவாக்கிய புகலிட நாவல்கள் என்றவகையில் தமிழ்ச்சூழலில் கவனத்திற்குரியனவாகவும் விரிவான ஆய்விற்குரியனவாகவும் அமைந்துள்ளன.

அறிமுகம்

மேற்குலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற இலங்கைப் படைப்பாளிகளில் ஷோபாசக்தி கவனத்திற்குரியவர். ஷோபாசக்தி பிரான்சில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். இவரின் ‘கொரில்லா’, ‘ம்’ ஆகிய நாவல்களும், ‘தேசத்துரோகி’, ‘எம்ஜிஆர் கொலைவழக்கு’ ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் புனைவிலக்கியங்களாக வந்துள்ளள.

ஷோபாசக்தியின் ‘கொரில்லா’, ‘ம்’ ஆகிய இரண்டு நாவல்களும் தமது கதைகளுக்கு அடிப்படையாக இனப்போராட்ட சூழலை எடுத்துக் கொள்கின்றன. கொரில்லா ஈழப்போராட்ட அரசியலை மையப்படுத்திய நாவல். அதேபோல ‘ம்’ நாவலிலும் பேரினவாத ஒடுக்குமுறையின் விளைவுகளில் ஒன்றான வெலிக்கடைப் படுகொலைச் சம்பவங்களும், தமிழர்கள் மீதான இனவெறித் தாக்குதல்களும்
விரிவாகப் பதிவாகியுள்ளன.

இந்த வகையில் ஷோபாசக்தியின் புனைவுகளான கொரில்லா, ம், ஆகிய இரண்டு நாவல்களையும் மையமாகக் கொண்டதாக இக்கட்டுரை அமைந்துள்ளது

‘கொரில்லா’ நாவல்

‘கொரில்லா’ நாவல் ஈழப் போராட்ட அரசியலைப் புனைவாக்கிய வித்தியாசமான படைப்பு. அகதியாகப் பிரான்சில் தஞ்சம் கோரும் யாக்கோபு அந்தோணிதாசன் என்ற இளைஞனின் அகதி விண்ணப்பத்துடன் இந்நாவல் தொடங்குகின்றது.

இலங்கையில் உயிர்வாழ முடியாத நிலையிலே அங்கிருந்து தப்பி, பிரான்சுக்கு உள் நுழைந்து அகதியாக ஏற்றுக்கொள்ளுமாறு கோருகிறார். பிரான்சில் இவரின் அகதி விண்ணப்பம் மூன்று முறையும் நிராகரிக்கப்பட்டு உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டபோதும் மேன்முறையீடு செய்வதாக அமைகின்ற கடிதத்தில் ஒருபகுதியுடன் நாவல் தொடங்குகின்றது.

“எனது தாய்நாட்டில் எனக்கும் குடும்பத்தினருக்கும் இலங்கை - இந்திய இராணுவத்தினராலும் தமிழ்ப் போராளிக் குழுக்களினாலும் ஏற்பட்ட கொடுமைகளால் எனது உடல் மனநிலைகள் சிதைவடைந்த நிலையிலும் இரண்டு வருட சிறைவாசத்தின் பின்பும் எனது உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு சிறிலங்காவில் இருந்து தப்பி வந்து தங்கள் நாட்டில் அரசியல் தஞ்சத்தைக் கோரினேன். ஆனால் எனது தஞ்சக் கோரிக்கையை நீங்கள் மூன்று தடவைகள் நிராகரித்து விட்டீர்கள். என்னை பிரான்ஸை விட்டு உடனே வெளியேறுமாறு பொலிசார் கட்டளைக்கடிதம் அனுப்பியுள்ளார்கள். நான் வெளியேறி எங்கே செல்வது? எனது தாய் நாட்டில் எனக்கு நடந்த கொடுமைகளையும் ஏற்பட்ட உயிர் அபாயத்தையும் நான் விபரமாக தங்களுக்குத் தெரிவித்திருந்துங்கூட நீங்கள் ‘25 ஜூலை 1952 ஜெனிவாச் சட்டத்தின் இரண்டாவது பிரிவின்’ கீழ் மூன்று தடவைகளும் எனக்கு அரசியல் தஞ்சத்தை நிராகரித்துள்ளீர்கள். ” (1)

என்றவாறு அமைகின்ற இந்நாவலின் தொடக்கம் அகதியாக தஞ்சம் கோருவதாக அமைந்துள்ளது. ஏனைய பகுதிகள் ஈழப்போராட்ட அரசியல் பற்றி போராளிகளின் செயற்பாடுகள் பற்றி, மக்களின் நிலை பற்றி எள்ளலும் துயரமும் ததும்ப வெளிப்படுத்துகின்றது.

யாழ்ப்பாணத்தில் தமிழ்ப்போராளி அமைப்பிலிருந்து விலகி, இலங்கை அரசாங்க படைகளினால் சித்திரவதைப்பட்டு அங்கிருந்து கொழும்பு வந்து பிடிபட்டு பின்னர் அங்கிருந்து தப்பிப் பிரான்சில் அகதியாக தஞ்சம் கோருவது வரையிலான பல கதைகள் இந்நாவலில் சொல்லப்படுகின்றன.

போராளி அமைப்புக்களின் செயற்பாடுகள், அவற்றின் முரண்பாடுகள், மக்களின் பங்களிப்புகள், இராணுவத்தினரின் நடவடிக்கைகள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் , தமிழர்களின் உள்ளுர் அரசியல் எனப் பல சம்பவங்களை புனைவாக்குகின்றது கொரில்லா.

இந்நாவலில் இராணுவத்தினரிடம் பிடிபட்டவர்களின் நிலை பற்றி வரும் ஒரு சித்திரிப்பு பின்வருமாறு அமைகிறது.

“இராணுவத்தினரது வாகனத்துக்குள் தூக்கியெறியப்பட்டு விழுந்த என்னை ஒரு இராணுவத்தினன் மிகுந்த ஆதரவோடு தூக்கி இருக்கையில் உட்கார வைத்தான். நான் இரத்தத்தால் தோய்ந்த ஒரு இருக்கையில் உட்கார வைக்கப்பட்டிருப்பதைக் கவனித்தேன். என் அருகே இரத்தத்தில் தோய்ந்த ஒரு பெரிய சட்டிப் பனங்காய் அளவான பொதி இருப்பதையும் கண்டேன். என்னை ஆதரவோடு தூக்கிய அந்த இராணுவத்தினன் அந்தப் பொதியை எடுத்து என் மடியில் வைத்திருக்குமாறு இளித்துக் கொண்டே சொன்னான். மெள்ள பொதியை எடுத்து மடியில் வைக்கும்போதுதான் அது ஒரு உரச்சாக்கிலே பொதியப்பட்டிருக்கும் மனிதத் தலை என்பதை உணர்ந்து கொண்டேன். எனக்காகவும் இவர்கள் ஒரு உரச்சாக்கை வைத்திருக்கிறார்கள் என நம்பத் தொடங்கினேன்." (2)

இவ்வாறான அதிர்ச்சி நிரம்பிய பகுதிகள் இந்நாவலில் மிகச் சாதாரணமாக தொடர்ச்சியாக சொல்லப்படுவதைக் கண்டுகொள்ளலாம்.

ஈழப்போராட்ட அரசியலை மையப்படுத்திய நாவலென்றாலும்; அதில் மக்கள் இலங்கை அரசினால் பட்ட துயரச்சம்பவங்களும் எடுத்துக் காட்டப்படுகின்றன.

தமிழர்கள் கைது செய்யப்படுதல், மக்கள் மீதும் குடியிருப்புகள் மீதும் தாக்குதல்கள் செய்வது, நெடுந்தீவு குமுதினிப் படுகொலைச் சம்பவம், யாழ். கோட்டை சம்பவங்கள் என்பன எல்லாம் இந்நாவலில் பேரினவாத ஒடுக்குமுறையின் பதிவுகளாகவுள்ளன.

‘ம்’ நாவல்

ஷோபாசக்தியின் மற்றொரு நாவல்தான் ‘ம்’. இதுவும் ஈழப்போராட்ட அரசியலின் இன்னொரு புனைவு. ஆனால் கொரில்லா ஏற்படுத்திய பாதிப்பினை ‘ம்’ ஏற்படுத்தியதா என்பது கேள்விக்குரியது. ‘ம்’ நாவலிலும் பேரினவாத ஒடுக்குமுறையின் விளைவுகளில் ஒன்றான வெலிக்கடைப் படுகொலைச் சம்பவங்களும், தமிழர்களின் மீதான இனவெறித் தாக்குதல்களும் விரிவாகப் பதிவாகியுள்ளன.

‘ம்’ என்ற நாவல் உண்மைச்சம்பவங்களும் புனைவும் கலந்த படைப்பு. தன் மகளின் கர்ப்பத்திற்குக் காரணமான நேசகுமாரனின் கதையுடன் நாவல் தொடங்குகிறது. ஈழத்தில் போராளி அமைப்புக்களுடன் தொடர்புட்ட காரணங்களால் இலங்கை அரச படைகளினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைப்படுதல் பின்னர் சிறையிலிருந்து தப்புதல், போராளிகளிடம் பிடிபடுதல் என்று தொடங்கிய கதை இறுதியில் புகலிடத்தில் இன்னொரு இளைஞர் கூட்டத்தினரிடம் அகப்பட்டு சித்திரவதைப்படுதலோடு முற்றுப்பெறுகிறது.

நாவலின் தொடக்கம் மற்றும் இறுதிப்பகுதிகளைத் தவிர ஏனையவற்றில் ஈழத்தின் அரசியல் வரலாறு சொல்லப்படுகிறது. ஈழப்போராட்டம் ஆரம்பித்தபோது இருந்த இளைஞர்களின் செயற்பாடுகள், கைதுகள், சித்திரவதைகள், காட்டிக்கொடுப்புக்கள், தண்டனைகள், சகோதரப்படுகொலைகள் என்பவற்றின் ஒரு குறுக்கு வெட்டுமுகமாக இந்நாவல் அமைந்துள்ளது.

இந்நாவலில் வரும் நேசகுமாரன் என்ற பாத்திரம் முற்றிலும் வன்முறையும் துரோகமும் இயலாமையும் நிறைந்த பாத்திரமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் போராளி அமைப்புடன் இணைந்து செயற்படுகின்றமை. பின்னர் கைது செய்யப்பட்டபின்னர் தான் தப்பிக்கொள்வதற்காக தனக்கு உதவியவர்களைக் காட்டிக்கொடுத்தல் என யதார்த்தமும் இயலாமையும் நிறைந்த பாத்திரமாக அமைந்துள்ளது.

இந்நாவலில் இழையோடும் முக்கியமாக இரண்டு அம்சங்களை குறிப்பிடலாம். ஒன்று அவலமும் இயலாமையும் துரோகத்தனமும் நிறைந்த கதைக்கூறுகள். மற்றையது போராளிகளின் போராட்டம் சார்ந்த எள்ளல் நிறைந்த கதைக்கூறுகள்.

இதில் முதலாவது அம்சமே நாவல் முழுவதும் விரவியுள்ளது. நேசகுமாரன் இராணுவத்தினரிடம் கைது செய்யப்பட்டதுமுதல் இதை அவதானிக்கலாம்.

கைது செய்யப்பட்டு சித்திரவதைப்படுதல், சிறிகாந்தமலர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்படுதல், கலைச்செல்வன் தப்பியோடும் சந்தர்ப்பத்தில் பெற்றோர் முன்பாகவே சுட்டுக் கொல்லப்படுதல், வெலிக்கடைச் சிறையில் கண்முன்னாலே மனிதர்கள் கோடரியாலும் பிற ஆயுதங்களாலும் வெட்டியும் சுட்டும் அடித்தும் கொல்லப்படுதல். பிடித்துவைக்கப்பட்டிருந்த சக போராளிகள் இன்னொரு போராளி அமைப்பால் கூட்டாகக் கொலை செய்யப்படுதல் ஆகிய சம்பத்திரட்டுக்கள் இந்நாவலில் பதிவுபெற்றுள்ளன.

“இது எமது வாழ்வு. இதுவரை நாம் அநுபவித்த துயரக் கொடுமையை, துன்பக் கொடுமையை-வாழ்வியல் அழிவுகளை, சமூகச் சிதறலை- சமூகசீவியத்தின் உடைவைச் சொல்கின்றவொரு படைப்பாக, நாம் வாழ்ந்த-வாழும் வாழ்வை, அதன் நிசத் தன்மையோடு, குரூரம் நிறைந்த போராட்ட வாழ்வை, தோழமையைத் துண்டமாகத் தறித்த கோழைத் தனத்தை, அதன் மொழியூடே மனித அழிவைச் சொல்லுதல் 'ம்'இனது மனிதக் கோசமாகவும், கலைப் பண்பாகவும் எம் முன் விரிந்து காட்சிப்படுத்துகிறதென்று கூறிக் கொள்வதுதாம் என்னைப் பொருத்தவரை சாத்தியம்.” (3)


மறுபுறம் எள்ளல் நிறைந்த கதைக்கூறுகள் ஈழப்போராட்டம் சம்பந்தப்பட்டவையாக உள்ளன.

முதற்தாக்குதலுக்கு செல்லும் நேரம் பதற்றத்தைத் தவிர்ப்பதற்கு கள்ளுக் குடித்துவிட்டு வந்ததாகச் சொல்லும் கலைச்செல்வனுக்கு நேசகுமாரன் தண்டனை கொடுக்கும் பகுதியொன்று நாவலில் வருகிறது.

“ஒரு பனையைக் கட்டிப்பிடிக்குமாறு நேசகுமாரன் உத்தரவிட்டான். கலைச்செல்வன் கட்டிப்பிடித்தான். நேசகுமாரன் இடுப்பு பெல்டை அவிழ்த்துக் கலைச்செல்வனின் முதுகில் வீசினான். இரண்டு மூன்று அடிகள் அடித்தவன் நிறுத்திவிட்டு தோழர் நான் செய்வது சரிதானே என்று கலைச்செல்வனிடம் கேட்டான்.” (4)

இயக்கங்கள் தொடர்பான இந்த எள்ளல் இந்நாவலில் பல இடங்களில் தொடர்கிறது. நேசகுமாரன் பிடிபட்டபோது அவனின் தகப்பன் எப்போதோ வீட்டைவிட்டு ஓடிப்போன தோட்டப்புறச்சிறுவனின் மரணத்தைக் காரணம் காட்டி நாங்களும் மாவீரர் குடும்பம் என நடித்தல், சிறையில் மூலைக்கு மூலை இயக்கங்களாக பிரிந்திருத்தல், கொள்ளைச்சம்பவத்தில் பிடிபட்டவர்கள் மீதான கேள்விகள், கலை நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பொது அறிவுப் போட்டிகள்… இவ்வாறாக பல சம்பவங்களை இந் நாவலின் எள்ளலுக்கு எடுத்துக்காட்டுக்களாக குறிப்பிடலாம்.

மதிப்பீடு

உள்ளடக்கத்தில் மட்டுமல்லாமல் உருவத்திலும் நவீன இலக்கியத்தின் சில எத்தனங்களை இரண்டு புனைவுகளும் காட்டி நிற்கின்றன.

நாவல்கள் இரண்டும் நேர்கோட்டிலான கதைசொல்லலைச் சிதைக்கின்றன. ஷோபாசக்தியிடம் இந்த வடிவமாற்றம் அவரது இப்புனைகதைகளில் மிக வலுவாகத் தெரிகின்றது அதேபோல் சிறுகதைகளிலும் பின்நவீனத்துவ உத்தியில் இந்த வடிவச் சிதைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வடிவமாற்றத்தை புறநிலையிலும் அகநிலையிலும் கண்டுகொள்ள முடியும்.

ஈழத்தமிழ்ப் படைப்புக்களிலேயே கொரில்லாவின் சித்தரிப்பு வித்தியாசமானது. கடிதம், கவிதை, அடிக்குறிப்பு, உண்மைச் சம்பவங்கள், பந்தி பிரிக்கப்பட்டு இலக்கங்கள் இடப்பட்டு கதை கூறுதல், என மரபின் சாத்தியங்களை நிராகரித்து புதியதொரு புனைவாக காட்சிதருகிறது.

இதனை ‘நுண் சித்தரிப்புகள் கூறும் மாற்று வரலாறு’ என்று ஜெயமோகன் குறிப்பிடுகின்றார். அவர் மேலும் ,

….வரலாறு என்ற விசித்திரமான, குரூரமான அபத்தமான, நுரைபோல உடைந்தழிந்தபடியே இருக்கும் ‘கதை’ குறித்து நம்மிடம் சொன்னபடியே இருக்கிறது…….நடை, உதிரிச் சித்தரிப்புகளின் கூட்டமாக உள்ள கட்டமைப்பு, அங்கதம் நிரம்பிய வரலாற்றுத் தரிசனம் ஆகியவற்றில் இந்நாவலுக்குச் சமானமாகச் சொல்ல தமிழிலக்கியத்தில் ஒரே ஒரு நூல்தான் உள்ளது. ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’…..” (5)

என்று எழுதுகின்றார்.

அதேபோல ‘ம்’ நாவலின் தொடக்கத்திலும் இறுதியிலும் வருகின்ற கதைகள் நாவலின் இறுதிப்பகுதியில் வருகின்ற குதிரைவண்டி பற்றிய குட்டிக்கதை என்பன உள்ளீடாக குறியீடாகக் கருதுவதற்கு வாய்ப்புண்டு. இந்நாவலிலும் கொரில்லா போன்று சிறுசிறு தலைப்புக்கொடுத்து கதை சொல்லப்படுகின்ற அமைப்பு காணமுடிகிறது. முன் பின் பகுதிகளைத் தனியே பிரித்தெடுத்தால் ஏனையவை கட்டுரைகள் போல தோற்றம் கொள்ளக்கூடிய நிலை உண்டு. ஆனாலும் ஷோபாசக்தியின் புனைவுமொழி அதனை வெற்றிகரமான படைப்பாக்கி விடுகின்றது.

இவ்வாறாக ஷோபாசக்தியின் புனைவுகளில் அவை எடுத்துக் கொண்ட பொருட்பரப்பு, அவற்றைச் சொல்வதற்குக் கைகொடுக்கும் பின்நவீனத்துவ இலக்கிய நெறி, அதற்கேற்ற சொல்லாடல் என்பவற்றைக் குறிப்பிடலாம். புலம்பெயர்ந்தோரின் தமிழ்ப்புனைவுகளில் அதன் அரசியலாலும் அழகியலாலும் பெரிதும் வித்தியாசப்பட்டிருக்கும் ஷோபாசக்தியின் புனைவுகள் மிக நுண்மையான ஆய்வினை வேண்டி நிற்கின்றன.

அடிக்குறிப்புகள்
(1) ஷோபாசக்தி; (2001), கொரில்லா, சென்னை, அடையாளம், பக்.13
(2) ஷோபாசக்தி; (2001), கொரில்லா, சென்னை, அடையாளம், பக்.45
(3) ப.வி சிறீரங்கன்; (2006), மூன்றாவது மனிதன், இதழ் 17,. கொழும்பு, பக்.102
(4) ஷோபாசக்தி; (2004), ம், சென்னை, கறுப்புப்பிரதிகள், பக். 38
(5) ஜெயமோகன்; காலம், கனடா, இதழ் 16

(இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 2013 யூலை 6 -7 ஆந்திகதிகளில் நிகழ்த்திய 3வது சர்வதேச ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

நன்றி - கலைமுகம், யாழ்ப்பாணம், இதழ் 56, ஒக்-டிசம் 2013

Saturday, September 7, 2013

இலக்கியமும் இரசனையும் : இலங்கைத் தமிழ் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு பார்வை




- சு. குணேஸ்வரன்


இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நாவல் இலக்கியம் பற்றிய ஆரம்பநிலை ஆய்வுகள் கணிசமான அளவு மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில்லையூர் செல்வராசனில் இருந்து கலாநிதி செ. யோகராசா வரை இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள் ஈழத்து நாவல் இலக்கியம் பற்றிய பருமட்டான ஒரு வரைபை மேற்கொள்வதற்கு சான்றாக அமைந்துள்ளன.

இவ்வகையில் ஈழத்தில் தோன்றிய முதல் நாவல் தொடக்கம் அண்மைக்கால நாவல்கள் வரை எழுதப்பட்ட விமர்சனங்களையும், கட்டுரைகளையும், பல்கலைக்கழக மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நாவல்கள் தொடர்பான ஆய்வுகளையும் கவனத்தில் எடுக்கும்போது நாவல்களின் போக்கையும் அவை குறிக்கும் சமூக பண்பாட்டு அம்சங்களையும் கண்டுகொள்ள முடியும்.

இந்த அடிப்படையை வைத்துக்கொண்டு இலக்கியமும் இரசனையும் என்ற பொருளில் சில சிந்தனைகளை இவ்விடத்தில் குறித்துரைக்கலாம்.

வாசிப்புக்குப் பல்வேறு படிநிலைகள் உள்ளன. நாளாந்தச் செய்திப் பத்திரிகை வாசிப்பதிலிருந்து ஆய்வேடுகளை வாசிப்பது வரையில் இந்தப் படிநிலைகள் வேறுபட்டுச் செல்கின்றன. இலக்கிய வாசிப்பும் இந்தப் படிநிலைகளில் ஒன்றுதான். தொடர்ச்சியான வாசகன் ஓன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவுவதுபோல இந்தப் படிநிலைகளைத் தாண்டிச் சென்றுகொண்டேயிருப்பான்.

வெகுஜன வாசிப்பில் இருந்து தீவிர வாசிப்புக்கு வரும்போது பொழுதுபோக்கு என்பதில் இருந்து வாழ்க்கையை, அதன் ஏற்ற இறக்கங்களை, அதன் மானிட வரலாற்றை, சகமனிதர்களைப் புரிந்து கொள்ளும் நிலைக்கு வாசகன் கடந்தேறி வருவான். அதிகமான சந்தர்ப்பங்களில் எமது வரலாற்று ஓட்டங்களையும் இலக்கியத்திற்கு ஊடாகவே ஒரு வாசகன் கண்டு கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இங்குதான் இலக்கியம் என்பதன் பெறுமானம் என்ன? என்பதற்கான விடை கிடைக்கக்கூடும். இங்கு ரசனை என்பதும் வாசிப்பின் மூலமே உருவாகின்றது.

மேற்குறித்த நிலையை ஈழத்தில் வெளிவந்த நாவல்கள் தக்கவைத்திருக்கின்றனவா என்று ஆராய்ந்து பார்த்தல் வேண்டும்.

பொழுதுபோக்கு என்பதற்கும் அப்பால் இந்த மாந்தர்கள் கடந்து வந்த காலங்களை, வாழ்க்கைப் போராட்டங்களை, வரலாறுகளை அவை பொதிந்து வைத்துள்ளன. ஈழத்தில் வெளிவந்த பல நாவல்களில் இந்த அம்சங்களை எடுத்துக்காட்டமுடியும்.

மங்களநாயகம் தம்பையாவின் - நொறுங்குண்ட இருதயம், டானியலின் - பஞ்சமர், பாலமனோகரனின் - நிலக்கிளி, அருள் சுப்பிரமணியத்தின் - அவர்களுக்கு வயது வந்துவிட்டது, மு. தளையசிங்கத்தின் - ஒரு தனி வீடு, கணேசலிங்கனின் - நீண்ட பயணம், தெணியானின் - மரக்கொக்கு, செங்கை ஆழியானின் - காட்டாறு, அருளரின் - லங்காராணி, கோவிந்தனின் - புதியதோர் உலகம், தாமரைச் செல்வியின் - பச்சை வயல் கனவு, தேவகாந்தனின் - கனவுச்சிறை, ஷோபாசக்தியின் - கொரில்லா, நௌசாத்தின் - நட்டுமை, விமல் குழந்தைவேலின் - கசகரணம் என்று கவனத்திற் கொள்ளத்தக்க படைப்புக்களை ஈழத்து நாவல் இலக்கியத்தில் இருந்து வகைமாதிரிக்கு எடுத்துக் காட்டமுடியும்.

எமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களின்படி 1885 இல் அறிஞர் சித்திலெவ்வை மரைக்கார் எழுதிய ‘அஸன்பேயுடைய கதை’ என்ற நாவலுடனேயே ஈழத்து நாவல் வரலாறு தொடங்குகிறது என்பதில் ஆய்வாளர்கள் மத்தியில் வேறுபட்ட கருத்து இருக்கமுடியாது. கொழும்பு முஸ்லிம் நண்பன் அச்சகம் இதன் முதற்பதிப்பை வெளியிட்டது. (‘அஸன்பேயுடைய சரித்திரம்’ என்ற தலைப்பில் 1890 இல் இரண்டாம் பதிப்பு அர்ச். சூசையப்பர் அச்சுக்கூடத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது) இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஏன் முதல் நாவல் எழவில்லை என்று கேட்பதும் ‘அசன்பேயுடைய கதை’ நாவலை இருட்டடிப்புச் செய்யும் முயற்சிகளும் அவசியமில்லாத செயற்பாடுகள் எனலாம்.

இது ஒருபுறம் இருக்க ஈழத்தின் முதல் நாவல் 1856 இல் வெளிவந்த ‘காவலப்பன் கதை’ (‘Parley the Porter’ என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே ‘காவலப்பன் கதை’ என்பர்) என்று மு. கணபதிப்பிள்ளை சில்லையூர் செல்வராசனின் நூலில் எழுதுகிறார். ஆனால் அதற்குரிய சான்றாதாரங்களை கணபதிப்பிள்ளையோ பின்வந்தவர்களோ சரிவர நிறுவவில்லை. அத்தோடு இந்நூற் பிரதிகளும்கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் “கைக்குக் கிடைக்காத நூல் ஒன்றினை நாவலா நாவலில்லையா என்று எப்படிக் கூறலாம்” (1) என்று பேராசிரியர் அ. சண்முகதாஸ் கட்டுரையொன்றில் எழுதுகிறார். இந்நிலையில் ‘அஸன்பேயுடைய கதை’ யே ஈழத்தில் முதல் நாவல் என்ற கருத்து இன்றுவரை நிலைபெற்றதாக உள்ளது.

அசன்பேயுடைய கதை நாவலைத் தொடர்ந்து, 1891 இல் வெளிவந்த இன்னாசித்தம்பியின் ‘ஊசோன் பாலந்தை கதை’, 1895 இல் வந்த தி. த சரவணமுத்துப்பிள்ளையின் ‘மோகனாங்கி’ ஆகியவை முதற்கட்ட நாவல்களில் முக்கியமானவை.

1905 வரை வெளிவந்த நாவல்களை கதை நிகழிடங்கள் பிற நாடுகளைத் தழுவியது அல்லது சார்ந்தது என்றே கருதமுடிகிறது. காரணம் அந்நியர் ஆட்சிகாலமாக இருந்த காரணத்தால் அந்தக் காலத்தின் தேவைக்கு ஏற்ப இந்நாவல்கள் முதன்முயற்சியாக எழுந்துள்ளன. இந்நிலையில் இந்நாவல்கள் ஈழம் என்ற களத்தைப் பிரதிபலிக்கவில்லை என்று ஒதுக்குதல் அறிவுடைய செயலாக கருதமுடியாது. காரணம் இந்நாவல்கள் இவ்வாறு எழுந்தமைக்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளமையை வரலாற்றின் ஊடாகக் கண்டுகொள்ளலாம்.

1. குறித்த காலமும் அக்கால அரசியல் நிலையும்
2. ஆங்கிலக் கல்வியின் தாக்கம்
3. மேலைத்தேய இலக்கியமான நாவல் என்ற இலக்கிய வடிவத்தின் வரவு
4. மொழி, சமயம், பண்பாட்டு அம்சங்கள்

இவற்றை மனங்கொண்டு பார்ப்போமானால் அக்காலத்தில் எழுந்த ஆரம்ப கால நாவல்கள் ஈழம் என்ற களத்திற்கு அந்நியமான கதைகளையும் கதைக்களங்களையும் பாத்திரங்களையும் கொண்டமைந்தமையை அறிந்து கொள்ளமுடியும்.

இங்குதான் நாவல் இலக்கியத்தையும் அதன் ரசனையையும் ஒருவாறு அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. கல்வி கற்ற உயர் வர்க்க அல்லது கற்ற நடுத்தர வர்க்கத்தினரின் தேவையை நிறைவு செய்வனவாக இக்கால நாவல்களின் வரவு அமைந்திருந்தமை தெளிவாகின்றது. இது தமிழகச் சூழலில் வெளிவந்த ஆரம்ப நாவல்களுக்கும் பொருந்தும்.

‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற தமிழின் முதல் நாவலை எழுதிய வேதநாயகம்பிள்ளை அதன் முன்னுரையில் குறிப்பிடும் கருத்து இங்கு கவனத்திற் கொள்ளத்தக்கது.

“தமிழில் இம்மாதிரி உரைநடை நவீனம் பொதுமக்களுக்கு இதுவரை அளிக்கப்படவில்லை. ஆகையால் இந்நூல் வாசகர்களுக்கு ரசமாகவும் போதனை நிறைந்ததாகவும் இருக்கலாம் எனப் பெருமை கொள்கிறேன். இம்மாதிரிப் புதிய முயற்சியில் ஏதாவது குற்றங்குறைகள் இருப்பின் பொறுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” (2)

இதிலிருந்து நாவலை ‘நவீனம்’ என அழைக்கவும், அது ரசமாகவும் (ரசனை மிகுந்ததாக) போதனை நிறைந்ததாகவும் இருக்கவேண்டும் என்ற எண்ணமும் வேதநாயகம்பிள்ளையிடம் இருந்தமை தெளிவாகின்றது.

1905 ற்குப் பின்னர் ஈழத்தைக் களமாகக் கொண்ட நாவல்கள் வெளிவரத் தொடங்குகின்றன. (சி. வை சின்னப்பபிள்ளையின் ‘வீரசிங்கன்கதை அல்லது சன்மார்க்கஜயம்’) ஒருவிதத்தில் ‘போலச் செய்தல்’ என்பதும் இங்கும் தொடர்கிறது. ஈழப்படைப்பாளிகள் ஏற்கெனவே ஆங்கிலத்தில் இருந்த நாவலுக்குரிய வடிவத்தைப் பயன்படுத்தி தமது கதையை சொல்லத் தொடங்குகிறார்கள். இதற்கு எமது தமிழ் மரபில் நன்கு ஊறிப்போன காவியமரபு கைகொடுக்கிறது. இக்காலத்திற்குப் பின்னர் வருகின்ற நாவல்கள் ஈழத்தைக் களமாகக் கொண்டிருந்தாலும் கற்பனையும் மர்மமும் திருப்பங்களும் நிறைந்தவையாக வந்துள்ளன.

இங்கும்கூட அடுத்தகட்ட ரசனை எவ்வாறு வருகின்றது என்பது நோக்கவேண்டியுள்ளது.

“கதைகூறும் நோக்கமும் சில இலட்சியப் பாத்திரங்களை படைத்துக் காட்டும் நோக்கமும் ஆரம்ப காலத்தில் நாவலாசிரியர்களிடையில் நிலவியமை அடுத்து வரும் காலப்பகுதியில் அற்புதச் சம்பவங்களைச் சுவைபட பெருக்கிக் கூறவும் வீரசாகசத் துப்பறியும் சிங்கங்களைப் படைத்து மர்மப்பண்பு, வரலாற்றுக் கற்பனை, தத்துவச் சார்பு, சமூகப்பார்வை, முதலான பல்வேறு பண்புகளிலும் நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆங்கிலம் முதலிய பிற மொழிகளில் உள்ள கதைகளைத் தழுவியும் தமிழாக்கியும் எழுதும் வழக்கமும் தோன்றிவிட்டது, இவற்றுள் சமூகப்பார்வையும் தத்துவச் சார்புமே தரமான படைப்புக்களைத் தந்தன. எனினும் அன்றைய கால வாசகர் மத்தியில் சம்பவச் சுவையுடன் கூடியனவும் மர்மப் பண்புடையவுமான கதைகளுக்குப் பெரு வரவேற்பிருந்ததாக ஊகிக்க முடிகிறது” (3)

உண்மையில் சமூகத்துடன் தொடர்புபட்ட நடப்பியல்புகளோடு ஒட்டி எழுந்த ஈழத்து நாவல் என்பது ‘நொறுங்குண்ட இருதயம்’ (1914) நாவலுடனே தொடங்குகிறது. இங்கு மங்களநாயகம் தம்பையாவின் நாவலுக்கு பல முக்கியத்துவங்கள் இருப்பதை அவதானிக்கலாம்.

1. சமூகத்தின் நடப்பியல்போடு தொடர்புபட்ட படைப்பு
2. முதற்பெண் நாவலாசிரியை மங்களநாயகம் தம்பையா என்ற வரலாற்றுப் பதிவு
3. காலமாற்றம், சமூக மாற்றத்தை எதிர்கொள்ளுதல்

ஆகிய பண்புகளால் நொறுங்குண்ட இருதயம் நாவலுக்கு முக்கியத்துவம் உண்டு. இந்த ஓட்டம் ஏறத்தாழ 1940 கள் வரை ஈழத்தில் தொடர்கிறது. காவியத்தின் தொடர்ச்சியான பண்பினைக் கொண்டிருந்த இந்நாவல்களின் உள்ளடக்கம் காதல், வீரசாகசம், வரலாறு, துப்பறிதல், மர்மம், சமூகக் குறைபாடு, என அமைந்திருந்தாலும் ஏறத்தாழ 1940 கள் வரை ஈழத்தில் எழுந்த நாவல்கள் அறப்போதனை செய்வதையே முதன்மையாகக் கொண்டிருந்தன என கலாநிதி செ.யோகராசா (ஈழத்துத் தமிழ் நாவல் வளமும் வளர்ச்சியும், 2008) குறிப்பிடுவார்.

இந்நிலையில் 40 களின் பின்னரே முக்கியமான மாற்றங்கள் ஈழத்து நாவல்களில் எழத் தொடங்குகின்றன. குறிப்பாக பிரதேசப் பண்பாட்டை நோக்கி பல நாவல்கள் வரத்தொடங்குகின்றன. இது 1950 முதல் 70 வரையும் யதார்த்தபூர்மான சமூக அரசியல் பிரச்சினைகளை ஆழமாக நோக்கும் பண்புடைய நாவல்கள் வரை நகர்கின்றன. இக்காலத்தில் எழுந்த நாவல்களை

“சமுதாய உணர்வு மேலோங்கியும் அரசியல் பொருளாதாரப் பார்வை சிறந்தும் காணப்படும் நாவல்கள் பல தோன்றிய இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி ஈழத்தமிழ் நாவலிலக்கிய வரலாற்றில் புதுயுகம்” (4) என சி. தில்லைநாதன் குறிப்பிடுவார்.

1. அரசியல் பொருளாதாரப் பார்வை தொடர்பானவை - இளங்கீரன், கணேசலிங்கன்
2. சாதியம் தொடர்பான பிரச்சினைகளை சித்திரித்தவை – எஸ். அகஸ்தியர், செ. கணேசலிங்கம், டானியல்
3. மலையக மக்களின் வாழ்வை சித்திரித்தவை. – கோகிலம் சுப்பையா, நந்தி, தெளிவத்தை ஜோசப்
4. பிரதேச பண்புடையவை – பாலமனோகரன், அருள் சுப்பிரமணியம், எஸ்.பொ,
5. வரலாற்றுப் பண்புடையவை – வ.அ. இராசரத்தினம்
6. பொழுதுபோக்கு மற்றும் குடும்ப நாவல்கள் - அதாவது சமூகப் பிரக்ஞையின்றியும் ஆசிரியரின்ஆளுமையின்றியும் வெளிவந்த நாவல்கள்.

(மேற்குறிப்பிட்ட வகைப்பாடு சி. தில்லைநாதனின் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது)

இவ்விடத்தில் குறிப்பிடவேண்டிய மற்றொரு அம்சம் இந்நாவல்கள் எழுவதற்கு களம் அமைத்த வெளியீட்டு முயற்சிகள். குறிப்பாக 1971 இல் தென்னிந்திய சஞ்சிகைகள் மற்றும் நூல்கள் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை அடுத்து அதற்கு மாற்றாக ஒரு பதிப்புச் சூழலை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. வீரகேசரிப் பிரசுரம் (1972 இல் தொடங்குகிறது) ஜனமித்திரன் பிரசுரம் ஆகியவற்றுக்கு ஊடாக ஒரு எழுத்துச்சூழல் ஊக்குவிக்கப்படுவதோடு பதிப்புச்சூழலும் கட்டியெழுப்பப்படுகிறது. இதனூடாகவே சமூகத்தில் வாசிப்பைப் பரவலாக்கும் முயற்சியும் வரத்தொடங்குகிறது.

ஈழத்து நாவல் வரலாற்றில் 70 களில் இந்த மாற்றம் இரண்டு விதமான ரசனை வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் பொழுதுபோக்கு நிறைந்த வெகுஜன வாசிப்புக் கலாசாரத்தை ஏற்படுத்துகின்றது. (50 களின் பின் வருகின்ற கல்கியின் செல்வாக்கு முக்கியமானது) மறுபுறம் சமூக நோக்குடைய யதார்த்தபாணி நாவல்களை நோக்கிய ரசனை வேறுபாட்டை நோக்கியும் வாசகர்களை நகர்த்துகின்றது. இங்குதான் மேற்குறிப்பிட்ட மண்வாசனை மற்றும் பிரதேசப் பண்பாட்டை வலியுறுத்தும் நாவல்கள் வந்து சேர்கின்றன. பாலமனோகரனின் ‘நிலக்கிளி’ தண்ணீரூற்றுப் பிரதேசத்தையும், செங்கையாழியானின் ‘வாடைக்காற்று’ நெடுந்தீவுப் பிரதேசத்தையும் , வ. அ. இராசரத்தினத்தினத்தின் ‘ஒரு வெண்மணற்கிராமம் காத்துக்கொண்டிருக்கிறது’ ஆலங்கேணிப் பிரதேசத்தையும் , தெணியானின் ‘விடிவை நோக்கி’ வடமராட்சிப் பிரதேசத்தையும், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘தில்லையாற்றங்கரை’ அக்கரைப்பற்றுப் பிரதேசத்தையும், எஸ். ஏ. உதயனின் ‘வாசாப்பு’ மன்னார்ப் பிரதேசத்தையும் பதிவுசெய்து வைத்துள்ளன.

மேற்குறிப்பிட்ட பிரசுர வாய்ப்பு ஈழத்து நாவலிலக்கிய வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது (வீரகேசரி, ஜனமித்திரன் வெளியீடுகள் பற்றிய மாறுபட்ட கருத்துக்களும் உள்ளன) என்பதை இன்று நுண்மையாக நோக்கும்போது புரிந்து கொள்ளமுடிகிறது. பொழுதுபோக்கில் இருந்து தீவிர வாசிப்புக்குரிய களத்தினை இவ்வெளியீட்டு முயற்சிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

1980 கள் முதல் இன்றுவரை ஈழத்து நாவல் இலக்கியம் இன்னொரு தளத்தில் பயணிப்பதாக கூறலாம். இக்காலம் முன்னைய காலங்களைவிடவும் அரசியல் ரீதியாகவும் சமூகரீதியாகவும் பல மாற்றங்களை எதிர்கொண்ட காலமாக விளங்குகின்றது. விடுதலைப்போராட்ட உணர்வும் அது தொடர்பான எழுச்சியும் வீழ்ச்சியும் நிறைந்த காலங்களைப் பதிவுசெய்த காலமாக கடந்த 30 வருடகாலம் விளங்குகின்றது. இங்கு எழுந்த நாவல்கள் குறிப்பாக தேசிய இனப்பிரச்சினை, பெண்ணிலைவாதம், புகலிட வாழ்வனுபவம், ஆகியவற்றை முதன்மையாகப் பேசிய காலமாக விளங்குகின்றன.

இக்காலத்தில் எழுந்த கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’, செழியனின் ‘ஒரு மனிதனின் நாட்குறிப்பு’, மலரவனின் ‘போருலா’ ஆகிய படைப்புக்கள் தனித்து நோக்கவேண்டியனவாகும். இக்காலத்தில் எழுந்த ஏனைய நாவல்களில் இருந்து இவை வேறுபட்டன. இங்கு நாவல், கலையாக நோக்கப்படாமல் வாழ்வை எழுதுதலாக நோக்கப்பட்டது. உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் காலத்தையும் நெருக்கடியையும் பதிவு செய்தலே இங்கு முக்கியமானதாக இருந்துள்ளது.

இந்த நெருக்கடிகளுக்கு அப்பால் குறித்த காலங்களும் மக்களின் இக்கட்டுக்களும் மிகுந்த கலைநயத்துடன் பதிவு செய்த வரலாறுகளும் உள்ளன. அவை தனித்து நோக்கவேண்டியவை. குறிப்பாக 80 களின் பின்னரான நாவல்களின் பண்புகளையும் அவற்றின் புதிய போக்குகளையும் பற்றிய ஆரம்ப வரைபை செ. யோகராசா செய்துள்ளார்.

எடுத்துக்காட்டாக 2000 இல் வெளிவந்த முல்லைமணியின் ‘கமுகஞ்சோலை’ பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஆங்கிலேயரின் நிர்வாகத்திற்கு எதிராக குரலெழுப்பிய முல்லைத்தீவின் தண்ணீரூற்றுப் பிரதேச மக்களது வாழ்க்கை பற்றிச் சித்திரிக்கின்றது. இது சமூக வரலாற்று நாவலாக அமைந்துள்ளது என செ. யோ குறிப்பிடுவார்.

இதேபோல புகலிட நாவல்கள் வித்தியாசமான வாழ்நிலை அம்சங்களை அழகாக எடுத்துக்காட்டுகின்றன. தாயக வாழ்வனுபவம், புகலிட வாழ்வனுபவம், வித்தியாசமான பண்பாடு, அந்நியமாதல், நிறவாதம் என ஈழத்து நாவல்களில் இருந்து சற்று மாறுபட்ட கதையம்சங்களை முன்வைக்கின்றன.

ஒரு இலக்கியப் படைப்பு எவ்வாறு ஒரு சமூகத்தைப் பாதிக்கின்றது என்பதையும் அச்சமூக மாந்தர்களின் சிந்தனையிலும் ஆழ்மனத்திலும் அழுத்தமான பாதிப்பை அது எவ்வாறு ஏற்படுத்துகின்றது என்பதையும் பார்ப்போமானால்

“இலக்கிய வாசகர்கள் சமூகத்தில் அறிவார்ந்த மையத்தில் இருப்பவர்கள் சமூகத்தின் பற்பல தளங்களைச் சார்ந்து சிந்திப்பவர்கள். செயற்படுபவர்கள் அவர்களைப் பாதிக்கும் இலக்கியம் அவர்கள் வழியாக சமூகம் நோக்கி விரிகிறது. அந்நிலையில் தன் வாசகர்களில் ஆழமான பாதிப்பை உருவாக்கும் படைப்பே சிறந்த சமூகப் பங்களிப்பை செலுத்த இயலும். சிறந்த கலைப்படைப்புகளின் பாதிப்புதான் ஆழமானதாகவும் நீடித்ததாகவும் இருக்கும்.” (5)

இந்த வகையில் அறிவுத்துறைகளை விடவும் ஆக்க இலக்கியத்துறையாகிய நாவல் இலக்கியம் உலக வரலாற்றையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாக விளங்கியுள்ளதையும் வரலாற்றில் நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். ஏனெனில் அறிவுத்துறை மூளையால் இயங்க ஆக்க இலக்கியத் துறை உணர்ச்சியால் இயங்குகின்றது. இவ்வகையில் ஒரு மனிதனின் மனத்தை நல்ல வழியில் செலுத்துவதற்கு இலக்கியம் உதவுகிறது என்று கூறலாம். அது மனிதகுல வாழ்க்கையையே நல்ல வழியில் மாற்றியமைப்பதற்கு முக்கிய பங்காற்றுகின்றது. இங்குதான் இலக்கியம் என்பதும் அதன் ரசனை என்பதும் அதன் பெறுமானம் என்ன என்பதும் ஒன்றுபடுகின்றன.

எனவே தொகுத்து நோக்கினால் ஈழத்து நாவல்கள் காலத்துக்குக் காலம் ஏற்பட்ட அரசியல் சமூக பண்பாட்டு மாறுதல்களுக்கு ஏற்ப அந்தக் காலங்களையும் வாழ்வையும் பதிவுசெய்து வைத்துள்ளன. அந்தப் பதிவுகள் மாறுகின்ற காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டிருந்த மாந்தர்களின் இரசனை வேறுபாட்டையும் எடுத்துக்காட்டுவனவாக அமைந்துள்ளன.

(02.09.2013 இல் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் இடம்பெற்ற வடமாகாண தமிழ் இலக்கியப் பெருவிழா ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
---

அடிக்குறிப்புகள்
1) சண்முகதாஸ். அ : 2008, ‘சித்திலெவ்வை மரைக்காரின் அஸன்பே சரித்திரம்’,
தமிழ் நாவல்கள் ஒரு மீள்பார்வை, கொழும்பு, லங்கா புத்தகசாலை, ப 81.
2) வேதநாயகம்பிள்ளை : பிரதாப முதலியார் சரித்திரம், முன்னுரை.
3) சுப்பிரமணியன். நா : 1977, “ஆரம்பகாலத் தமிழ் நாவல்கள்”, தமிழ்நாவல்
நூற்றாண்டு விழா ஆய்வரங்கு, தட்டச்சுப்பிரதி, யாழ்ப்பாணம், இலங்கைப்
பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம். ப 8
4) தில்லைநாதன். சி : 1977, “ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் - ஒரு பொதுமதிப்பீடு”, தமிழ்நாவல் நூற்றாண்டு விழா ஆய்வரங்கு, தட்டச்சுப்பிரதி, யாழ்ப்பாணம், இலங்கைப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம்.
5) ஜெயமோகன் : நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், சென்னை, உயிர்மை பதிப்பகம், ப 82.


உசாவியவை
1. இரகுநாதன் மயில்வாகனம் கலாநிதி: 2004, ஈழத்துத் தமிழ் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள், கொழும்பு, தென்றல் பப்ளிக்கேஷன்.
2. சுப்பிரமணியம் நா : 1978, தமிழ் நாவல் இலக்கியம், யாழ்ப்பாணம், முத்தமிழ் வெளியீட்டுக் கழகம்.
3. செல்வராசன் சில்லையூர் : 2009 இரண்டாம் பதிப்பு, ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி, சென்னை, குமரன் புத்தக இல்லம்.
4. மௌனகுரு, சித்திரலேகா, நுஃமான் : 1979, இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம், கல்முனை, வாசகர் சங்கம்.
5. யோகராசா. செ கலாநிதி : 2008, ஈழத்துத்தமிழ் நாவல் வளமும் வளர்ச்சியும், சென்னை, குமரன் புத்தக இல்லம்.
6. ஜெயமோகன் : 2007, நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், சென்னை, உயிர்மை பதிப்பகம்.
7. ………………: 1977, தமிழ்நாவல் நூற்றாண்டு விழா ஆய்வரங்கு, தட்டச்சுப்பிரதி, யாழ்ப்பாணம், இலங்கைப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம்.

நன்றி - பதிவுகள்

Monday, July 29, 2013

ஒரு சதவீதம் கற்பனை இருந்தாலும் அது புனைவுதான் அ. முத்துலிங்கத்தின் "உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புனைவை முன்வைத்து…


- சு. குணேஸ்வரன்



அறிமுகம்

அ. முத்துலிங்கம் 80 களுக்கு முன்னர் ஈழத்தில் இருந்து தொழிலின் நிமிர்த்தம் புலம்பெயர்ந்து சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர். உலக வங்கியிலும் ஐ.நா சபையிலும் பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது கனடாவில் வாழ்ந்து வருகிறார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோற்றம் பெற்ற காலத்தில் கைலாசபதியால் எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். அக்காலத்தில் எழுதிய சிறுகதைகள் 1964 இல் ‘அக்கா’ என்ற தொகுதியாக வெளிவந்தது. பின்னர் ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல பாகங்களிலும் உள்ள நாடுகளுக்கு பயணப்பட்டு வாழ்ந்தவர்.

ஏறத்தாழ 25 வருடம் எழுத்திலிருந்து ஒதுங்கியிருந்து பின்னர் 1995 இல் இரண்டாங் கட்டமாக தமிழ்ப்படைப்புலகில் நுழைந்தார். காலம், அம்மா போன்ற புகலிடச்சஞ்சிகைகள் ஊடாகவும், தமிழகச் சஞ்சிகைகள் ஊடாகவும் சிறுகதைகளை எழுதியபோது தமிழ்நாட்டில் நன்கு அடையாளம் காணப்பட்டார். அதன்பின்னரே திகடசக்கரம், வம்சவிருத்தி, வடக்கு வீதி ஆகிய சிறுகதைத்தொகுதிகள் வெளிவருகின்றன.

முத்துலிங்கம் உலக அனுபவங்கள் ஊடாக கதை சொல்பவர்களில் முதன்மையானவர். இவரிடம் தாயக வாழ்வு பற்றிய ஏக்கத்தையோ, கழிவிரக்கத்துடன் கூடிய புலம்பெயர் வாழ்வையோ எதிர் பார்க்கமுடியாது. ஆனால், தனது தொழில் காரணமாக உலகமெல்லாம் பயணப்படும் முத்துலிங்கம் எமக்குக் காட்டும் உலகம் தமிழ் இலக்கியத்துக்குப் புதியது. வித்தியாசமான நிலவமைப்புடைய நாடுகளின் அனுபவங்களை, வெவ்வேறுபட்ட இனத்தவர்களின் வாழ்க்கை முறைகளை, அவர்களின் பண்பாட்டை தனது கதைகளில் கொண்டு வருகின்றார்.

இவ்வகையில் முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்ற நாவல் பற்றி இக்கட்டுரை நோக்குகிறது.

வடிவம் பற்றிய சர்ச்சை




‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ நூலை நாவல் என அ. முத்துலிங்கம் குறிப்பிடுகிறார். ஆனால் அவை தனித்தனியே 46 சிறுகதைகளைக் கொண்ட தொகுதி போல தோற்றந்தருகிறது. இத்தொகுப்பை நாவல் அல்ல என பலர் மறுக்கிறார்கள். இது தனித்தனியே எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுதி எனவும் கட்டுரைத்தன்மையானது எனவும் தன்னனுபவம் சார்ந்தது எனவும் பலவாறான விமர்சனங்கள் தமிழ்ச்சூழலில் எழுப்பப்பட்டுள்ளன.

எனவே இக்கட்டுரையில் உண்மை கலந்த நாட்குறிப்புக்களில் நாவலுக்குரிய அம்சம் உள்ளதா என்பது பற்றியும் இந்நாவல் தமிழ்ச்சூழலில் பெறும் முக்கியத்துவம் பற்றியும் ஆராயப்படுகிறது.

“உண்மை கலந்த நாட்குறிப்புகள் நாவல் இல்லை என்பவர்கள் சொல்லும் கருத்து, நாவலுக்குரிய இயல்புகளான சம்பவங்களின் தொடர்ச்சி, பாத்திரங்களின் தொடர்ச்சி, நிலத்தின் தொடர்ச்சி என்பன இதில் இல்லை என்பது. இதற்கு பொ. கருணாகரமூர்த்தி கி.ரா வின் கோபல்லபுரத்து மக்களிலும் இந்த தொடர்ச்சிகள் இல்லை என்றார். ஆனால் அதில் நிலத்தின் தொடர்ச்சி, சம்பவங்களின் தொடர்ச்சி இருந்தன. மேலும் ஒரு வாதத்துக்கு உண்மை கலந்த நாட்குறிப்புகள் ஒரு நாவல் என்று எடுத்தால் 80 கள் முதல் 2008 வரை சுஜாதா அவ்வப்போது எழுதிய ஸ்ரீரங்கத்து கதைகளைத் தொகுத்து உயிர்மை பதிப்பகம் “ஸ்ரீரங்கத்து தேவதைகள்” என்று ஒரு புத்தகமாக வெளியிட்டதே அதுவும் நாவலா?” (1)

என்று வினாவெழுப்புகிறார் அருண்மொழிவர்மன்.

தமிழ்ச்சூழலில் மரபுவழியாக வந்த நாவல்களில் இருந்து வித்தியாசப்படும் புனைவாக இது இருக்கின்றது. அதாவது நாவலில் அறுபடாத் தொடர்ச்சியுடன் பாத்திர வார்ப்போ அல்லது கதைத் தொடர்ச்சியோ இல்லை. களத்தொடர்ச்சியும் இல்லை. இதனால்த்தான் இந்நாவல் பற்றி வினாவெழுப்பவேண்டியிருக்கிறது. ஆனால் பாமாவின் ‘கருக்கு’ நாவலிலும் இவ்வாறான தொடர்ச்சியில்லாதபோதும் அது தலித்திய நாவலாகக் கொள்ளப்பட்டது. இதற்கு முத்துலிங்கத்தின் வாக்குமூலத்தையே நாம் கருத்திற்கொண்டால் உண்மை புலப்படும்.

“சுயசரிதைத் தன்மையான நாவல் என்று அழைப்பதுதான் பொருத்தம். நீங்கள் சொல்வதுபோல ஒரு சதவீதம் கற்பனை இருந்தாலும் அது புனைவுதான் என்று ஆகிவிடுகிறது. எழுதும்போது எனக்கே பல சமயங்களில் எங்கே புனைவு முடிகிறது எங்கே உண்மை தொடங்குகிறது என்பதில் சந்தேகம் தோன்றிவிடும். இந்த நாவல் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியைத் துண்டு துண்டாக உடைத்துவிட்டு மீண்டும் திருப்பி ஒட்டிவைத்ததுபோல என்று சொல்லலாம். சில துண்டுகள் கிடைக்கவில்லை ஆனாலும் முழுக்கண்ணாடி போன்ற ஒரு தோற்றம் கிடைக்கும். நீங்கள் பார்க்கும்போது அதில் உங்களுடைய முகம்தான் தெரியவேண்டும். என்னுடையது அல்ல” (2)

“சில வருடங்களுக்கு முன்னர் சிறுகதைகள், நாவல்கள் என்று எழுதிப் புகழ்பெற்ற ஓர் எழுத்தாளருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் ஒன்றைச் சொன்னார். “சிறுகதை என்றால் வசனங்களை அழகாகச் செதுக்கிச் செதுக்கி அமைக்கலாம். நாவல் பெரிய பரப்பு, வசனத்தில் கவனம் செலுத்தமுடியாது.” ஆங்கிலத்தில் இருப்பதுபோல சுயசரிதை நாவல் ஒன்று எழுத எனக்கு விருப்பம். அத்துடன் எழுத்தாளர் சொன்னதுக்கு மாறாக செதுக்கியதுபோல வசன அமைப்பும் நாவலில் வரவேண்டும் என விரும்பினேன். நாவல் என்றால் இறுதியில் ஓர் உச்சக்கட்டம் இருக்கும். அது செயற்கையானது. உண்மை வாழ்க்கையில் அலைபோல உச்சக் கட்டம் அவ்வப்போது வந்து போகும். அதன் விளைவுதான் இந்த நாவல். இதை ஆரம்பத்தில் இருந்து வாசிக்கத் தேவையில்லை. எங்கேயிருந்தும் தொடங்கலாம். ஒவ்வொரு அத்தியாயமும் தனியாகவும் நிற்கும், சேர்ந்தும் இருக்கும். நாவலை வாசித்த சில நண்பர்கள் இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம் என்றார்கள். 'இதைச் சேர்த்திருக்கலாமே, இதை விட்டுவிட்டீர்களே' என்றார்கள் சிலர். அவர்களிடம் நான் எப்படி சொல்வேன் 600 பக்க நாவலை 287 பக்கங்களாக சுருக்கியிருக்கிறேன் என்று. இன்னும் கொஞ்சம் வேண்டும் என்னும்போது நாவலை நிறுத்திவிடுவதுதானே புத்தி. பெஞ்சமின் டிஸ்ரேலி என்ற புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் இருந்தார். அவர் தனக்கு பிடித்த நாவல் ஒன்றை படிக்க விரும்பினால் அவரே ஒன்றை எழுதிவிடுவாராம். நண்பர்களிடம் அப்படிச் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்” (3)

முத்துலிங்கத்தின் மேற்கூறிய கூற்றுக்களின் ஊடாக ஆங்கிலத்தில் இருப்பதுபோல ஒரு சுயசரிதை நாவல் எழுதவேண்டும் என்பதும், அது இயல்பாக வரவேண்டும் என்பதும் அவரது விருப்பமாக இருந்துள்ளது. எனவேதான் பொதுவான வாசிப்புத்தளத்தில் உள்ள ஒரு நாவலுக்குரிய பண்போ வடிவமோ இதில் வெளிப்படையாக இல்லை என்பது தெளிவானது. மேலும், முத்துலிங்கம் நேர்காணல் ஒன்றில் இன்றைய உலக இலக்கியங்கள் புனைவுக்கும் புனைவுசாரா எழுத்துக்களுக்கும் இடையேயுள்ள இடைவெளியை அழித்துக்கொண்டு வருகின்றன என்ற கருத்தையும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பண்பை இவரது எழுத்துக்களிலும் காணமுடியும்.

“இருபதாம் நூற்றாண்டில் ஆகப்பெரிய கண்டுபிடிப்பு கட்டுரை இலக்கியம். Truman Capote, Norman Mailer போன்றவர்கள் கட்டுரை இலக்கியத்தை புது உயரத்துக்குத் தூக்கிச் சென்றார்கள். கட்டுரை என்றும் இல்லாமல் முழுப்புனைவு என்றும் இல்லாமல் இரண்டுக்கும் உள்ள இடைவெளியில் படைத்தார்கள். The Executioner's Song என்ற உண்மைக்கதை நாவலுக்கு முதல்முறையாக புனைவுப்பிரிவில் புலிட்சர் பரிசு கிடைத்தது. இலக்கிய வாசகர்களுக்கு இது முற்றிலும் புதுமையான விருந்து.” (4)

என்று குறிப்பிடுகிறார். இவரது “அங்கே இப்போ என்ன நேரம்” என்ற நூலில் இந்த வடிவப்பிரக்ஞையைக் கண்டுகொள்ள முடியும். அத்தொகுப்பு ‘அனுபவக்கதை, விமர்சனம், சிந்திப்பதற்கு, சந்திப்பு’ என்றவாறாக அமைகின்றது. ஆனால் அத்தொகுப்பின் நடைக்கும், முத்துலிங்கம் கதைகளின் நடைக்கும் இடையில் இருக்கும் இடைவெளியோ மிகக் குறுகியது என்றே கூறலாம்.

தமிழ்ச்சூழலில் ஏற்கெனவே வந்துள்ள பல படைப்புக்கள் இவ்வாறு விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அருளரின் ‘லங்காராணி’ வந்தபோது அது சம்பவங்கள் விபரணங்களின் தொடர்ச்சிதான் எனக் கூறப்பட்டது. அ.ரவியின் ‘காலம் ஆகி வந்த கதைகள்’ வந்தபோது அது சிறுகதைத்தொகுதியா நாவலா என வினாவப்பட்டது. அதேபோல செழியனின் ‘ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’ வந்தபோது அது நாவல் அல்ல சுயவிபரக் குறிப்புக்கள் என பேசப்பட்டது. இறுதியாக முத்துலிங்கத்தின் இந்நூல் நாவல் அல்ல என மறுக்கப்படுகிறது,

முடிவாக, முத்துலிங்கத்தின் நோக்கமும் எழுத்தும் அவரது வாசிப்பினூடாகவும் வாழ்முறை அம்சங்களினூடாகவும் மாற்றமடைந்து வந்துள்ளமையை அறியமுடிகிறது. இந்நிலையில்தான் இந்நாவலும் மரபுவழிப்பட்ட வடிவத்திலிருந்து வேறுபடுகிறது.

எனினும் இந்நூலில் பாத்திரங்களின் தொடர்ச்சி, களங்களின் தொடர்ச்சி, சம்பவங்களின் தொடர்ச்சி இல்லையெனக்கூறமுடியாது. நாவல் முற்றுப்பெறும் வரையில் நிலவமைப்பு மாறுவதன் ஊடாகவும் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் பண்பாடுகள் மாறுவதன் ஊடாகவும் முத்துலிங்கம் கூறுகின்ற அனுபவத்தில் ஒரு தொடர்ச்சியைக் கண்டுகொள்ளமுடிகிறது. இந்நிலையிலேயே முத்துலிங்கம் கூறுவதுபோல் சுயசரிதைத்தன்மையான நாவல் என்ற கருத்துடன் ஒன்றுபட முடிகிறது.

புனைவின் உள்ளடக்கம்

கதைசொல்லி முத்துலிங்கத்தின் ‘சிறுவன்’ பாத்திரம் வளரவளர அவன் அனுபவங்களும் மாறிக்கொண்டேயிருக்கின்றன. நிலவுலகச் சூழல் மாறுகிறது. வித்தியாசமான மனிதர்கள், வித்தியாசமான வாழ்க்கை அம்சங்கள், அவற்றுக்கூடாக வித்தியாசமான பண்பாடுகளை அறிந்து கொள்ளமுடிகிறது.

இது முத்துலிங்கம் என்ற மனிதனின் இளம்பாராயம் தொடக்கம் முதுமைக்காலம் வரையான வாழ்க்கை அனுபவங்களின் ஊடாக நாம் அறிந்து கொள்ளும் காட்சிகளாக அமைந்துள்ளன. குக்கிராமத்தில் இருந்து ஆபிரிக்கக் காடுகள் வரை விரிகின்ற இக்கதையில் உயிரோட்டமாக இருப்பது முத்துலிங்கத்தின் வீட்டுச் சூழலும் அவர் கடந்து வந்த சமூகமும்தான்.

வீட்டுச்சூழல், பள்ளிச்சூழல், பல்கலைக்கழகச் சூழல், தொழில் புரியும் இடம், உலக நாடுகளில் பயணப்படும் அனுபவம், வித்தியாசமான பண்பாடுகள், வித்தியாசமான வாழ்வனுபவம், ஓய்வுப்பருவம் என கதை நகர்ந்து முற்றுப்பெறுகிறது.

தாய், தந்தை, அக்கா, மனைவி, மகள், பேரப்பிள்ளை என தன்னுணர்வாக கதை கூறப்படுகிறது. சிறுவனின் பார்வையில் நகரும் பாத்திரங்கள் அழகாக வார்க்கப்பட்டுள்ளன. கோயில், வீடு, பாடசாலை, கிராமம், நகரம், தொழிற்தளம், புகலடைந்த நாடுகள், கூடப்படித்த நண்பர்கள், தொழில் புரியும் நண்பர்கள், தெரிந்த மனிதர்கள், என பல களங்களையும் மனிதர்களையும் நோக்கி கதைகளுடன் விரிகிறது நாவல். கொக்குவில் கிராமத்தில் தொடங்கிய கதை கொழும்பில் வேலை செய்யும் காலத்துடன் இணைந்து, பின்னர் கண்டங்கள் தாண்டிச் செல்கிறது. எல்லாமே முத்துலிங்கம் என்ற மனிதனின் தரிசனங்கள்தான். வாழ்வின் சின்னச்சின்னத் தருணங்களை ஞாபகக்கிடங்கில் இருந்து மீட்டுத் தருகிறார். அந்தத் தருணங்கள் ஊடாக உலகத்து மாந்தர்களின் வாழ்வும் சொல்லப்படுகிறது.

பாத்திரங்கள் சம்பவங்களின் தொடர்ச்சி

முத்துலிங்கம் தனக்கு நினைவு தெரிந்த மூன்று வயதில் இருந்து இந்தக் கதையைத் தொடர்வதாகக் குறிப்பிடுகிறார். தன்னைப் பற்றியும், தனது சகோதரர்கள் பற்றியும், பள்ளிப்பருவ நண்பர்கள் பற்றியும், இளம்பருவக் குறும்புகள் பற்றியும் எழுதிச் செல்கிறார். தன்னைச் சூழ இருந்த குடும்ப உறவுகளின் கதையை அடிமனத்தின் ஆழத்திலிருந்து கதை கதையாகச் சொல்லியபடியே செல்கிறார். குறிப்பாக் தாய், தந்தை, அக்கா ஆகிய பாத்திரங்களின் வார்ப்பும் அவர்களைப் பற்றிய படிமமும் மனத்தை விட்டு அகலாதவையாக உள்ளன.

இந்நாவலில் வரும் அம்மா பாத்திரம் பற்றித் தனியே எழுதலாம். முத்துலிங்கம் தனது தாயாரை 13 வயதில் இழந்துவிடுகிறார். அப்பருவம் வரை தன் நினைவில் நிறைந்திருக்கின்ற அம்மாவை அழகாகச் சித்திரித்துள்ளார். ஏற்கெனவே முத்துலிங்கத்தின் பல சிறுகதைகளில் அம்மா பாத்திரம் அழகாக வார்க்கப்பட்டுள்ளது. அதனால் தாய் பற்றிய உணர்வு புனைவு முழுவதும் ஆங்காங்கே இழையோடுகிறது. ‘அம்மாவின் பாவாடை’, ‘தில்லையம்பலபிள்ளையார்’ ஆகிய கதைகள் இதற்கு நல்ல உதாரணம். அம்மாவின் பாவாடையில் வருகின்ற பாத்திர வார்ப்பு கச்சிதமாக இங்கும் பொருந்தி வருகிறது. தவிர்க்கமுடியாமல் அந்த வர்ணணைகளையும் கூட இங்கும் பொருத்திப் பார்க்கலாம்.

இப்புனைவில் ‘முதல் நினைவு’, ‘பேச்சுப்போட்டி’, ஆகிய தலைப்புக்களில் வருகின்ற அம்மா பற்றிய பதிவு மறக்கமுடியாதது. ஒருமுறை நல்லூர் சப்பறத்திருவிழாவுக்கு அம்மா ஐயா சகோதரர்களுடன் சென்றபோது சனநெரிசலில் அகப்பட்டு தாயையும் சகோதரியையும் பிரிந்துவிடுகிறார்கள். அந்தச் சந்தர்ப்பத்தை பின்வருமாறு எழுதுவார்.
“ஒரு நீண்ட வாங்கில் நாங்கள் எல்லோரும் பொலீஸ் ஸ்டேசன் வாசலில் உட்கார்ந்திருந்தோம். அங்கு இருந்த பொலிஸ்காரர்களும், வந்துபோன சனங்களும் நாங்கள்தான் தொலைந்துபோனவர்கள், யாருடைய வருகைக்கோ காத்திருக்கிறோம் என்பதுபோல புதினமாகப் பார்த்தார்கள். திடீரென்று அண்ணன் அழத்தொடங்கியபோது எனக்குப் பயம் பிடித்தது. அரை மணிநேரம் கழித்து அம்மா அரக்கப்பரக்க ஓடிவந்தார். எந்தப்பூகம்பம் வந்தாலும் அழாத தங்கச்சி அழுகை முடிந்து விம்மிக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் கண்ணீர் காய்ந்து காணப்பட்டது. அம்மா கவனமாக மடிப்புகள் வைத்து உடுத்திய சேலை தாறுமாறாகக் குழம்பிக் கிடந்தது. தலைமயிர் குலைந்து கண்ணீர் ஒழுகியது. வாய் குழறியது. அப்படியே ஓடிவந்து எங்களைக் கட்டிக்கொண்டார். ‘என்ரை பிள்ளைகள், என்ரை பிள்ளைகள்’ என்று வாய் ஓயாமல் பிதற்றிக் கொண்டு எங்கள் ஒவ்வொருவருடைய அங்களையும் தடவிப் பார்த்து அவை அந்தந்த இடங்களில் இருக்கின்றனவா என்று உறுதி செய்து கொண்டார். அம்மா தைரியமானவர் இப்படியான அற்ப விசயங்களுக்கெல்லாம் கலங்காதவர். ஆனால் அன்று யாரோ மூன்று பிள்ளைகள் செத்துப் போனார்கள் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டார்கள் அம்மாவின் மனதில் அது நாங்கள்தான் என்பது தீர்மானமாகிவிட்டது.” (5)

இங்கு அம்மாவின் படிமம் அழகாக வார்க்கப்பட்டிருக்கிறது. கோயில்திருவிழா சனநெரிசலில் காணாமற்போன தங்களுக்காக அம்மாவின் கலக்கத்தையும் துன்பத்தையும் எடுத்துக்காட்டுவார்.

இதேபோல் ஒரு குக்கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் இருந்து பேச்சுப்போட்டிக்குச் சென்று பரிசில் கிடைக்காமல் திரும்பி வந்த நினைவுகளையும் எடுத்துக்காட்டுவார். அந்த வர்ணணை மனத்தில் ஒர் இருளாக மூடிக்கொள்வதையும் படிப்போர் உணர்வார்.

“பேச்சுப்போட்டி முடிந்தபோது பெரும் மழை பிடித்துக் கொண்டது. ஒருவரும் எதிர்பாராமல் திடீரென்று பெய்த மழை, அது வந்தமாதிரியே உடனேயே போய்விடும் என்றார்கள். ஆனால் மழை விடாமல் இரண்டு மணிநேரமாகக் கொட்டியது. திரும்பும்போது மாஸ்ரர் சைக்கிளை உழக்க நான் பின் சீட்டில் உட்கார்ந்து வந்தேன். சைக்கிள் மெதுவாகச் சென்றபடியால் டைனமோவும் மெதுவாகவே சுழன்று மங்கலான வெளிச்சத்தைக் கொடுத்தது. கறுப்பு வானமும் நீண்ட வீதியும் மழையில் நனைந்து கூனிப்போன மாஸ்ரரின் முதுகும் வெட்டவெளியில் தனியாக நின்ற பனைமரம் ஒன்று இடி விழுந்தது எரிந்துகொண்டிருந்ததும் என்னுடைய அன்றைய மன நிலையில் அப்படியே பதிந்து போனது. ஒழுங்கைகளில் வெள்ளம் வடிந்து கொண்டிருந்தது. வாத்தியார் எங்கள் வீட்டுப் படலையில் என்னைக் கொண்டுவந்து இறக்கி விடும்போது மணி பத்துக்கு மேலாகிவிட்டது. ‘பார்த்துப்போ’ என்று சொல்லிவிட்டு மாஸ்ரர் சைக்கிளைத் திருப்பிக் கொண்டு போனார்.”

“வீடு இருட்டில் மூழ்கிக் கிடந்தது. எல்லோரும் தூங்கப்போய்விட்டார்கள் என்றே நினைத்தேன். ஒரேயொரு கைவிளக்கு எரிய அம்மா எனக்காகத் தூங்காமல் காத்திருந்தார். நான் ஒரு பெரிய ஆள், ஏதோ முக்கியமான காரியமாக வெளியே போய்விட்டு வருகிறேன் என்பதுபோல அம்மா எனக்காகக் கண்விழித்திருந்ததை இன்றுவரைக்கும் என்னால் மறக்கமுடியாது. என்னைக் கண்டதும் அம்மா கட்டி அணைத்து, தலையைத் தடவி ஈரம் இல்லையென்று உறுதி செய்தபிறகு ‘பிள்ளை உனக்கு நல்ல பசி. வா, நான் சாப்பாடு போடுறேன்’ என்றார். அன்றைய பேச்சுப்போட்டியில் என்ன நடந்தது என்றோ, நான் எப்படிப் பேசினேன் என்றோ, யாருக்குப் பரிசு கிடைத்தது என்றோ ஒரு வார்த்தை அவர் என்னிடம் கேட்கவில்லை. கையிலே வெற்றிக் கிண்ணம் இல்லாததைப் பார்த்துவிட்டு என்னைக் கேள்வி கேட்டு வேதனைப்படுத்தக்கூடாது என்று நினைத்திருக்கலாம். (6)

இங்குகூட அம்மாவின் உண்மை அன்பு எடுத்துக் காட்டப்படுகிறது. முத்துலிங்கத்தின் இந்த எழுத்துக்கள் பற்றி, வரப்பிரசாதம் தனது விமர்சனக் குறிப்பொன்றில் பின்வருமாறு கூறுவது கவனிக்கத்தக்கது.

“வெளிநாட்டுக் கதைகளைவிட மனக்கிடங்கின் ஆழத்தில் சேர்ந்திருந்த தன் இளமைக்கால வாழ்க்கையை நினைவு கூர்ந்து எழுதிய சில கதைகளில் மனித மனங்களின் ஆசைகள் பாசங்கள், உணர்வுகள், உளவியல்புகள், ஏழ்மைகள், ஆகியவை மிகத்திறமையாக எழுதப்பட்டுள்ளன” (7)

அக்கா பாத்திரம் பற்றிச் சொல்லும்போது அக்காவின் ‘சங்கீதசிட்சை’ என்ற தலைப்பில் உள்ள கதையைக் குறிப்பிடலாம். இதில் வரும் சம்பவங்கள் முத்துலிங்கத்தின் அங்கதத்திற்கு நல்ல எழுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஒருமுறை இவரது அக்காவுக்கு சங்கீதம் கற்றுக்கொடுப்பதற்காக ஐயாவால் ஒரு பாட்டு வாத்தியார் ஒழுங்குசெய்யப்படுகிறார். அக்கா சங்கீதம் படிக்கப் பட்ட பாடுகளை மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டுவார். இப்பகுதியை அழகான சித்திரமாக மாற்றியிருப்பார். புன்னகையை மீறி வாய்விட்டு சிரிக்க வைக்கும் அங்கதம் இந்நாவலின் முழுவதும் விரவிவருவதை அறிந்துகொள்ளமுடியும்.

“ஒரு நாள் உயரமான மெலிந்து எலும்பு தெரியும் ஒருத்தர் ஐயாவைப் பார்க்க வந்திருந்தார். விபூதி பூசி, பொட்டு வைத்து, கக்கத்தில் குடையை வைத்துக்கொண்டு அவர் ஒற்றைக் கையை வீசி வீசி நடந்து வந்தது விசித்திரமாக இருந்தது. அவர் தன் பாரத்திலேயே நுனியில் வளைந்துபோய் இருந்தார். அவசரமாக உட்கார்ந்தால் நடுவிலே முறிந்துவிடுவார் போலவும் பட்டது. நாங்கள் எங்களுக்குள் பந்தயம் கட்டினோம். மாட்டுத்தரகர், சாதகம் பார்ப்பவர், குடை திருத்துபவர், எல்லா ஊகங்களும் பிழைத்துவிட்டன. அவர்தான் அக்காவின் கனவுகளை நிர்மூலமாக்க ஐயாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாட்டுவாத்தியார்.

“அக்காவின் சித்திரவதை ஸ்வர வரிசைகளில் ஆரம்பித்தது. வீடு நிறைய ஸ்வரங்கள் சத்தம் போடும் காலை, பகல், மாலை எல்லாம் அதே சத்தம்தான். அக்காவுக்கு சங்கீதத்தில் இயற்கையான ஈடுபாடு கிடையாது. குரலையும் கருக்குமட்டைக்குரல் என்று அம்மா வர்ணித்திருக்கிறார். வாத்தியார் கொடுத்த வேலையைச் செய்து முடிக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் அக்கா பாவம் கத்தினார். நிலம், கூரை, சுவர் எல்லாம் சங்கீதமாய் அதிர்ந்தது”

“ அக்காவுக்கு ஸ்வர வரிசைகளில் ஒருவித சாமர்த்தியம் வந்ததும் பாட்டுவாத்தியார் ‘யாரோ இவர் யாரோ’ என்ற கீர்த்தனையைச் சொல்லிக் கொடுத்தார். இது பைரவி ராகத்தில் அமைந்தது. அருணாசலக்கவிராயர் அல்லும் பகலும் பாடுபட்டு அருமையாக எழுதிய பாட்டு. அக்கா அதை சப்பு சப்பென்று பாடமாக்கி உருத்தெரியாமல் ஆக்கிவிட்டார். பாட்டு வாத்தியாருக்குத் திருப்தியில்லை. ‘அம்மா இது ராமரும் சீதையும் முதன்முதலாகச் சந்திக்கும் இடம். ராமன் ஆர் என்று தெரியாமல் சீதை இரங்கிப் பாடுவது. நீ பாடும்போது குரலில் ஏக்கம் இருக்கவேண்டும்: உருகிப் பாடம்மா உருகு. என்று சொல்வார். அக்கா அதைப்பிடித்துக் கொண்டு மெழுகுவர்த்திபோல உருகினார். “யாரோ இவர் யாரோ” என்று அக்கா காலை, மாலை என்று பார்க்காமல் உருகுவது வீட்டிலும், வளவிலும், ரோட்டிலும் கேட்டது. தெருவிலே போகிற யாரோ ஒருத்தன் ஒருநாள் பாட்டைக் கேட்டுவிட்டு ‘அது நான்தான்’ என்று உரக்கக் கத்திவிட்டு மறைந்தது ஐயாவுக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆள் யார் என்பதையும் ஐயாவால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றே அந்தப் பாடலுக்கு தடை விழுந்தது. ஐயா விதித்த முதல் தடை அதுதான்.” (8)

தந்தையைப் பற்றிக் குறிப்பிடும்போது அக்காவின் சங்கீத சிட்சை, படிக்காசு ஆகிய தலைப்புக்களில் தந்தையின் நினைவு படிமமாக அழகாக வருகிறது. நாங்கள் பிழை செய்தால் ஐயா அடிக்கடி தன் தலையில் குட்டிக்கொள்வார் என்று சொல்வதும், மாமன்மார், நண்பர்கள், உறவினர்கள் என்று சம்பவங்களின் ஊடாகவும் கதை விரிகிறது. இவற்றின் ஊடாக இந்நாவலில் குறிப்பிட்ட பாத்திரங்களின் தொடர்ச்சியை அறிந்து கொள்ள முடிகிறது.

ஏனைய அம்சங்கள்

நாவலின் தொடக்கத்தில் தான் பிறந்து வளர்ந்த கொக்குவில் கிராமத்தை அறிமுகம் செய்யும் பகுதியே வித்தியாசமாகத்தான் இருக்கும்.

“ மழை இல்லையென்றால் கொடும்பாவி கட்டி இழுத்துக்கொண்டு போய் சுடலையில் எரிக்கும் வழக்கம் கொண்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். நாய் கடித்தால் உச்சந்தலையில் மயிரை இழுத்து மந்திரித்தால் விஷம் இறங்கிவிடும் என்று நம்பும் கிராமம். தலையிடி என்றாலும், கால்முறிவு என்றாலும், நெருப்புக் காய்ச்சல் என்றாலும் ஒரே மருந்தை முலைப்பாலில் கரைத்து உண்ணத்தரும் பரியாரியார் உள்ள கிராமம். வாத்தியாரிடம் சண்டையென்றால் உடனே அவர் படிப்பிக்கும் பள்ளிக்கூடத்தை நெருப்பு வைத்துக் கொழுத்திவிடும் கிராமம். மானம்பூ திருவிழா நடக்கும்போது ஐயர் வாழை மரத்தை வெட்டுவார். கடையிலே ஐந்து சதத்துக்கு விற்கும் அந்த வாழைப்பூவுக்காக ஐந்துபேர் வீதியிலே உருண்டு பிரண்டு பத்து நிமிடநேரம் சண்டை போடுவார்கள். இங்கேதான் நான் பிறந்து வளர்ந்து படித்து வாழ்வு முறைகளைக் கற்றுக்கொண்டேன்.” (9)

“பாடம் முடிந்து போகும்போது தன் செருப்பு நுனியைப் பார்த்தபடியே நடந்துபோவாள். என் முகத்தைக் கொண்டுபோய் அவளுடைய செருப்பு நுனியில் ஒட்டிவைத்தால் ஒழிய அவள் என்னைப் பார்க்கப்போவதில்லை. இரண்டு தவணைகள் நான் இவளுக்காக என் நாட்களை விரயமாக்கினேன்.” (10)

இவை மட்டுமன்றி வித்தியாசமான உவமைகளையும் இப்புனைவில் பயன்படுத்துவார். இது முத்துலிங்கத்தின் கதைகளுக்கே உரிய தனித்துவம். ஒன்றில் ஈழத்துப் பாரம்பரிய வாழ்விலிருந்து உவமைகளை எடுத்தாள்வார் அல்லது மேலைத்தேய பிரபல்யமான கதைகளில் வருவதுபோல் உவமையை கையாள்வார்.

“மாம்பழம் பழுத்துவிட்டதா என்பதை அழுத்தி அழுத்திச் சோதிப்பதுபோல அவர் என் கன்னத்தைப் பிடித்து அமுக்கிப் பார்க்கவில்லை. அதுதான் அவரை எனக்குப் பிடித்திருந்தது.”(11)

கிராமியப் பண்பாட்டுக் கூறுகளையும் கதைகளின் ஊடே உயிரோட்டமாக எடுத்துக்காட்டுவார். பள்ளிப்பருவத்தில் நண்பர்களுடன் கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது ஆடியபாதம் என்ற நண்பன் செய்த குறும்புகளை ஞாபகப்படுத்துவார். ஒருமுறை இவர்கள் போர்த்தேங்காய் அடித்துக்கொண்டிருந்தபோது ‘பத்துமா’ என்ற பெண் தேங்காயை ‘உரிச்சுத்தரச்சொல்லி’ கொடுத்தபோது ஆடியபாதம் அதனை உரிப்பதற்குப் பதில் சிதற அடித்துவிட்டான் அவள் அழுதுகொண்;டு சென்றிருக்கிறாள். பின்னர்.

“ சிறிது நேரம் கழித்து பத்துமா தாழ்த்திய கண்களுடன் வெளியே வந்து ‘அம்மா உடைந்த தேங்காயை கொண்டரட்டாம்” என்றபோது நாங்கள் சிரட்டையைத் தவிர மற்ற எல்லாத்தையும் சாப்பிட்டுவிட்டோம். ரோட்டுச் சண்டைக்கும் வசைக்கும் பேர்போனவர் அந்தத்தாய். அவர் வெளியே வந்து வசைபாட ஆரம்பித்தால் பள்ளிக்கூடத்தில் பத்து இலக்கிய வகுப்புகளில் கற்றுக்கொள்ளமுடியாத கற்பனை எல்லைகள் ஒரே நிமிடத்தில் கற்றுக்கொண்டுவிடலாம். ஆடியபாதம் என்ற பெயரில் இருந்து ஆரம்பித்தார். அந்த அம்மா. ‘பாதம்’ என்பதை நீக்கிவிட்டு இன்னும் பொருத்தமான ஓர் உடலுறுப்பைச் சேர்த்து வைத்துப் பேசினார். பிறகு அவனுடைய தாயையும் தகப்பனையும் திட்டித் தீர்த்தார். இறுதியில் ‘உன்ரை கொப்பனிட்டை போய்ச் சொல்லடா உன்ரை இளங்கொடியை தாட்ட இடத்தில் கிண்டிப் பார்க்கச் சொல்லு. உன்ரை மூளையில பாதி அதோடை போட்டுது. என்றார்.”

“அழுதுகொண்டு உள்ளே ஓடிய அதே பத்துமா சரியாக ஐந்து வருடம் கழித்து ஆடியபாதத்துடன் ஓடிப்போனாள்.” (12)

மேலும் உலகப்பயணங்களின் ஊடான களங்கள் பலவற்றை அறிமுகப்படுத்துவார். முடிதிருத்தும் கடைக்குச் செல்லும் ஒரு நாள் சுவருடன் பேசும் ஒரு மனிதரை அறிமுகப்படுத்துவார். அராமிக் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரின் கதையைக்கூறும்போது அந்த மொழி அழியும் ஆபத்திலிருக்கும் மொழியாகவும் அதனை அவரும் மனைவியும் மட்டுமே பேசுவதாகவும் மனைவி இறந்தவுடன் தன் மொழி இறந்துவிடாமல் இருக்க வீட்டில் சுவருடன் பேசுவதாகவும் ஒரு கதையைச் சொல்வார். “நண்பரே அழிவை நோக்கிப் பயணிக்கும் ஒரு மொழியை நிறுத்த தனி மனிதர் ஒன்றுமே செய்யமுடியாது. இன்றிரவு சுவருடன் உங்கள் உரையாடல் இனிமையாக அமையட்டும்” என்று கூறுவார்.

இங்கு மொழிகுறித்தும் அதைப் பேணிக்காக்கவேண்டிய தீவிரம் குறித்தும் பேசுவார். இந்த நாவலின் இறுதிப்பகுதி அவரது வேலைஓய்வுகால நினைவுகளுடன் முற்றுப்பெறுவதை அறியலாம். ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் ஒரு நிமிடம் நாலு வினாடி பின்னுக்குத் தள்ளிக்கொண்டே போகிறது என்ற குறிப்புடன் நாங்கள் வாழும் காலமும் குறுகிக்கொண்டே போகிறது. என்ற தொனிப்பட நாவலை முடித்து வைப்பார்.

பல்வேறுபட்ட நாடுகளுக்கும் தொழிலின் நிமிர்த்தம் பயணப்படுவதன் ஊடாக முத்துலிங்கத்திற்கு இந்த வித்தியாசங்கள் வசப்படுகிறது. இதன்மூலம் வேற்றினத்து மனிதர்களை, அவர்களின் பண்பாடுகளை, அவர்களின் வேறுபட்ட வாழ்வனுபவங்களை தமிழுக்குக் கொண்டுவந்து சேர்க்கிறார். இதனாலேயே அவரின் கதைகள் உலகளாவிய அனுபவங்களுடன் நம்மிடம் வந்து சேர்கின்றன.

வைரம் அரித்த கதை, மிதவையில் இறந்த கிழவியின் கதை ஆகிய உலகின் எங்கோ ஒரு மூலையில் நடந்த சம்பவத்தை தமிழுக்குத் தரும்போது உலகப் பொதுவான கதைகளாகி விடுகின்றன. இதேபோல்தான் முடிதிருத்தும் கடைக்காரன் சொன்ன கதையும் மொழிபற்றிய பிரக்ஞையை நமக்குத் தருகிறது. இப்பகுதி அதிகமான விமர்சகர்களால் சிலாகித்துப்பேசப்பட்டது. அதேபோல் ஆபிரிக்கப்பஞ்சாயத்தில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பமும் ஆபிரிக்கப் பண்பாட்டுக்கும் தமிழ்ப்பண்பாட்டுக்கும் இடையிலான வேறுபாட்டை சீர்தூக்கிப் பார்ப்பதற்கு உதவுகிறது. விருந்துக்காக மகளின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை செலவு செய்யும் கனவான் நிலையில் உள்ள ஒருவர் விருந்தினர்கள் முன்னிலையில் அவமதிக்கப்படும் நிலையையும் எடுத்துக்காட்டுகிறார். இவையெல்லாம் முத்துலிங்கத்தின் உலகத் தரிசனங்களின் ஊடாக நமக்கு வந்து சேர்கின்றன.

அ. முத்துலிங்கத்திடம் புதியஅனுபவங்களின் தகவல்கள் தீரவே தீராத வகையில் கதைகள் வந்துகொண்டே இருக்கும். இதற்கு

“அ.முத்துலிங்கத்தின் விரிவான உலகப் பயணம். அதன் விளைவான மானுட தரிசனம் அவரது எல்லைகளைச் சராசரி தமிழ் எழுத்தாளனால் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவு விரிவு செய்துள்ளது. அவரது மறுபக்கம் அல்லது மற்றவன் நில அடையாளங்களினாலோ, இன அடையாளங்களினாலோ, பழக்கவழக்கங்களின் அடிப்படையிலோ, உருவாக்கப்பட்டிருக்கவில்லை. அது விழுமியங்கள் சார்ந்ததாகவே பெரிதும் உள்ளன.” (13)


கதைகளின் ஆதார சுருதியாக நகைச்சுவையுணர்வும், கதைகளில் வெளிப்படும் புன்னகையும், மரபுகளின் அடுக்கமைவுகளைத் தீண்டாத சாமர்த்தியமும் இவர் கதைகளில் உள்ளமையைக் கண்டு கொள்ளமுடியும். இதனாலேயே ‘புன்னகைக்கும் கதைசொல்லி’ (14) என்று ஜெயமோகன் குறிப்பிடுகின்றார்.

நவீன இலக்கியத்தின் நவீன கோட்பாடுகளின் எந்தச் சாயலையும் தீண்டாத, நாட்டார் கதைக்கூறுகளின் நளினத்தைக் கொண்ட முத்துலிங்கத்தின் படைப்புநெறி சுயாதீனமானது. தனித்துவமானது.

தொகுப்பு

முத்துலிங்கத்தின் எழுத்துக்களை கூர்ந்து நோக்கினால் அவரின் எழுத்துக்களின் வித்தியாசம் புலப்படும். அவரின் எழுத்துக்களில் புனைவுக்கும் புனைவு சாரா எழுத்துக்களுக்கும் இருக்கும் இடைவெளியை அறிவதென்பது மிகக் கடினம். கதை, கட்டுரை, விபரணம் ஆகிய மூன்று இலக்கிய வடிவத்திற்கும் தமிழ்ச்சூழல் வெவ்வேறு வரையறைகளை வைத்துள்ளது. ஆனால் இந்த வரையறைகள் எல்லாவற்றையும் தாண்டிச் செல்லக்கூடிய எழுத்து வடிவம் முத்துலிங்கத்தினுடையது. இதற்கு பின்வரும் மூன்று பண்புகளை அவரின் படைப்புகளில் இருந்து இனங்காண முடிகிறது.

1. கட்டுரைத் தன்மை
2. பயண அனுபவங்களுக்குரிய விபரணம்
3. நாட்டார் கதைக்கூறுகளின் பண்பு

இவற்றுக்கூடாகவே நகைச்சுவையையும் சுவாரஷ்யம் குறையாத நடையையும் கலந்து விடுகிறார். இவையெல்லாம் வாசகனை முத்துலிங்கத்தின் கதைகளோடு இணைத்து விடுகின்றன. இவைதான் முத்துலிங்கத்தின் புனைவுகளின் வடிவம் பற்றிச் சிந்திப்பதற்கும் இடங்கொடுக்கின்றன.

இந்தக் கதைசொல்லலே கதைகளின் வடிவத்தையும் தீர்மானிக்கின்றன. நவீனத்துவத்தின் சாயலே இல்லாத அதே நேரம் புனைவின் தருக்கத்துக்கு ஏற்ற அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கிய வடிவம் முத்துலிங்கத்தின் கதைகளின் வடிவம் என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

“அப்படியானால் இவ்வடிவ இலக்கணத்தின் வெற்றி தோல்விகளை எப்படிக் கணிப்பது? இங்கு முதல்விதி, நம்மைச் சுவாரஷ்யப்படுத்தி, நம் கவனம் விலகாமல் கடைசிவரை கொண்டு செல்லப் படைப்பாளியால் முடிந்திருக்கிறதா என்பதுதான். இரண்டாவது விதி, கதை முடிந்ததுமே அதுவரை சொல்லப்பட்டவை அதுவரை அடைந்தவற்றைவிட மேலான அர்த்தத் தளங்களை அடைகின்றனவா என்பது” (15)

எனவே முத்துலிங்கம் புனைவுகளின் வடிவம் என்பது நவீனத்துவ வடிவம் என்று கருதுவதற்கு மாறாக அவரின் மொழியினூடாக வருகின்ற வடிவமாகக் கருதமுடிகிறது. இவ்விடத்தில்தான் தவிர்க்கமுடியாமல் முத்துலிங்கத்துடன் கி.ராஜநாராயணனையும், நாஞ்சில் நாடனையும் இணைத்துக்கூறவேண்டியிருக்கிறது.

முத்துலிங்கத்தின் எழுத்துக்களுக்கு அடிப்படைகளாக பின்வரும் பண்புகளை ஜெயமோகன் முன்வைப்பார்.

1. கதைசொல்லி என்ற இணைப்புச் சரடு
2. வடிவ கச்சிதத்தை நாடாத சகஜத்தன்மை.
3. புறவயமான உலகை முக்கியப்படுத்துதல் - குறிப்பாக உடலை, நிகழ்வுகளை.
4. படிமமாக்குதல் முதலிய கவித்துவ அம்சங்களில் சிரத்தை இல்லாமை.
5. பண்டைய இலக்கியங்கள் முதலியவற்றை புனைவுடன் கதை சொல்லும்
போக்கில் இணைத்துக் கொள்ளும் ஊடு பிரதித் தன்மை.
6. பொதுவாக உள்ள அங்கதப்பார்வை.(16)

இவையெல்லாம் சேர்ந்து முத்துலிங்கத்தின் எழுத்துக்களின் போக்கைத் தீர்மானிக்கின்றன. குறிப்பாக யாழ்ப்பாண அடுக்கமைவுகளைத் தீண்டாமல் கதைசொல்லும் நடையை கண்டுகொள்ளலாம். அதாவது யாழ்ப்பாணத்தின் அடுக்கமைவுகளில் மேலோங்கியிருப்பதில் முதன்மையானது சாதியம். ஆனால் அது பற்றிய பதிவுகளை முத்துலிங்கம் தந்திரமாகத் தவிர்த்துவிடுவார். இவை மட்டுமல்லாமல் முத்துலிங்கம் இந்நாவலில் தாண்டிச் செல்லும் வேறு பலவற்றையும் டிசே தமிழன் சுட்டிக்காட்டுவார்.

“இவ்வாறான மிக நுட்பமாய் கதையை எப்படிக்கொண்டு போவது குறித்தும், எப்படி முடிப்பது பற்றியும் அறிந்த படைப்பாளியான அ.முத்துலிங்கம் சில இடங்களில் முக்கியமான விடயங்களைக் கூட மிக எளிமையாக மெல்லிய நகைச்சுவையால் கடந்துவிடச் செய்கின்றார். முக்கியமாய் எல்லோரைப் போலவும் அம்மாவில் அதிக பாசம் கொள்கின்ற கதைசொல்லி, அவரது பதின்மூன்றாவது வயதில் ஏற்படுகின்ற அம்மாவின் இழப்பை மிக எளிதாகக் கடந்துபோய்விடுகின்றார். அதேபோன்று 1958 கலவரத்தின்போது கொழும்பில் அகதியாக்கப்படுகின்ற கதைசொல்லி அந்த அத்தியாயத்தோடு சிங்கள தமிழ் பிரச்சினையை மறந்து போய்விடுகின்றார். மீண்டும் இறுதி அத்தியாயங்களில் 'சுவர்களுடன் பேசும் மனிதர்” பகுதியில் மட்டுமே மொழி, ஈழம் பற்றி நினைவூட்டப்படுகின்றன (ஒரு மொழி நீண்ட காலமாய் உயிருடன் இருக்கவேண்டுமாயின், அந்த மொழியை முன்நிலைப்படுத்தும் ஒரு அரசு வேண்டுமென்பது இங்கே வலியுறுத்தப்படுகின்றது) 1983 இனப்படுகொலையின்போது, கதைசொல்லி ஈழத்திலிருந்து ஏற்கெனவே புலம்பெயர்ந்ததால் அதன்பின்னரான காலங்களை எழுதுதல் கடினமென எடுத்துக்கொண்டாலும், கதைசொல்லி நேரடியாகப் பாதிப்புற்ற 58 கலவரம் பற்றிக்கூட மனதில் பதியும் படியாக எழுதிவிடவில்லை என்பதை ஒரு பலவீனமாகத்தான் கொள்ளவேண்டும்.” (17)

ஏனைய புலம்பெயர்ந்த எழுத்தாளர்களிடம் இருக்கும் புலம்பெயர்வின் காரணமான சோகமும், அவலமும், தாயகநினைவும் இவரிடம் அதேபோல் எதிர் பார்க்கமுடியாதுள்ளது. மாறாக புன்னகை நிறைந்ததாகவும், அதற்குள்ளாக சிறியளவிலான சோகத்துடன் கூடியதாகவும் அமைந்து விடுகின்றன. இவரிடம் தாயக வாழ்வு பற்றிய மீள் நினைவு உள்ளதாயினும், அது மிக ஆழமாக, இந்த மண்ணின் மீதான மானிட வெளிப்பாடாக அதிகம் பதிவு பெறவில்லை. இது மிக முக்கியமான ஒரு குறைபாடாகும். இதற்கு காரணமாக அவரது தொழிலையும் அவரின் வாழ்வுப் பின்னணியையும் கூறிக்கொள்ளலாம்.

எனவே தனக்குத்தெரிந்த மனிதர்களை அவர்களின் குணவியல்புகளை அந்த மனிதர்கள் வாழ்கின்ற மண்ணின் பண்பாட்டை தன்னுணர்வாக புனைவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளார் முத்துலிங்கம். ஒவ்வொரு கணநேரத்தையும் அனுபவித்து வாழ்ந்திருக்கிறார். நுண்மையான அவதானிப்பும் வாழ்வு பற்றிய ஏக்கமும் நாவல் முழுவதும் விரவியிருக்கிறது. தன்னுணர்வு சார்ந்த கதையாக இருப்பினும் அவற்றைச் சொல்லும் விதத்தில் அழகு இருக்கிறது. மனிதர்களின் குணங்குறிகளை புன்னகையோடு தருகிறார். வடிவம் பற்றிய பிரக்ஞையின்றி கதைகளின் போக்குக்கு ஏற்பவே விட்டுவிடுகிறார். இவையெல்லாம் தமிழில் வந்துள்ள ஏனைய புனைவுகளில் இருந்து வித்தியாசத்தைக் காட்டி நிற்கின்றன.
(யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் யாழ் மறைமாவட்டமும் இணைந்து நடாத்திய தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழா ஆய்வரங்கு 28.07.2013 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்தபோது வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை )
---

அடிக்குறிப்புகள்
1) அருண்மொழிவர்மன் : “அங்கதம் ஆறாத கதை சொல்லலுக்கு ஐம்பது
ஆண்டுகள்” http://arunmozhivarman.com/
2) முத்துலிங்கம்.அ : 2010, ‘மோனாலிசாவின் புன்னகையின் புகழ்
முடிவதற்கான நேரம் வந்துவிட்டது’ நேர்காண்டவர் - மதுமிதா, http://madhumithaa.blogspot.com/
3) மேலது 2.
4) முத்துலிங்கம். அ : ‘மற்றுப் பற்றெனக்கின்றி’, 2007, இதழ் 86, பதிவுகள்
http://www.geotamil.com/pathivukal/
5) முத்துலிங்கம். அ : 2008, உண்மை கலந்த நாட்குறிப்புகள், உயிர்மை
பதிப்பகம். சென்னை, பக் 18.
6) மேலது 5, பக் 41.
7) வரப்பிரசாதம் : ‘மகாராஜாவின் ரயில்வண்டி’, காலம், இதழ் 16, கனடா,
ப. 134.
8) மேலது 5, பக்.26-27.
9) மேலது 5, பக் 13.
10) மேலது 5, பக் 87.
11) மேலது 5, பக் 13.
12) மேலது 5, பக் 33.
13) ஜெயமோகன் : 2003, அமர்தல் அலைதல், தமிழினி பதிப்பகம், சென்னை, ப. 56.
14) மேலது 13. பக். 51.
15) மேலது 13, பக் 72.
16) மேலது 13, பக் 66.
17) தமிழன் டி.சே : 2009, ‘அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள் in வாசிப்பு’ http://djthamilan.blogspot.com

உசாவியவை
1) முத்துலிங்கம். அ : 2008, உண்மை கலந்த நாட்குறிப்புகள், சென்னை,
உயிர்மை பதிப்பகம்.
2) வெற்றிச்செல்வன்.தெ : 2009, ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்,
சென்னை,சோழன் படைப்பகம்.
3) ஜெயமோகன் : 2003, அமர்தல் அலைதல், சென்னை, தமிழினி பதிப்பகம்.
4) ஜெயமோகன் : 2009, நாவல் கோட்பாடு, சென்னை, கிழக்கு பதிப்பகம்.

---

Tuesday, February 26, 2013

எஸ்.ஏ உதயனின் நாவல்கள்


 -சு. குணேஸ்வரன் 


அறிமுகம்

    மிழ் இலக்கியத்தின் செழுமையினையும் குறித்த ஒரு மக்கட்கூட்டத்தின் பண்பாட்டு அம்சங்களையும் விரிவாகப் பதிவு செய்யும் இலக்கிய வடிவங்களில் புனைகதை இலக்கியம் முதன்மையானது.

  அண்மைக்காலத்தில் இலங்கைத் தமிழ்ப்படைப்பாளிகளின் பல நாவல்கள் வெளிவந்துள்ளன. போர்க்காலத்திலும் போரின் பின்னரும் வெளிவந்த நாவல்களை அரசியல் அடிப்படையிலும் பண்பாட்டின் அடிப்படையிலும் இரண்டு பிரிவாகப் பகுக்கலாம். அவற்றுள் பண்பாட்டின் அடிப்படையில் பெரிதும் கவனத்தைக் குவித்த படைப்புக்களாக எஸ். ஏ உதயனின் நாவல்கள் அமைகின்றன.

   இந்தக் கட்டுரையில் லோமியா, தெம்மாடுகள், வாசாப்பு, சொடுதா ஆகிய உதயனின் நான்கு நாவல்களும் நோக்கப்படுகின்றன. இவை கடந்துபோன காலங்கள் பற்றியும் அவை கொண்டியங்கிய பண்பாட்டு பெறுமானங்களின் மீதான வேணாவா குறித்தும் பேசுகின்றன. 

  கழிந்துபோன காலத்தின் எச்சங்களான நினைவுகளின்மீது கட்டியெழுப்பப்பட்ட படைப்புக்கள் இவை. ஒரு இனத்தின், ஒரு சமூகத்தின் படிப்படியான மாறுதல்களைக் காட்டுபவை. பலவற்றை இந்தச் சமூகம் மறந்துவிடுகிறது. சிலவற்றையே ஞாபகக் கிடங்குகளில் இருந்து மீட்டுப் பார்க்கின்றது. மீளவும் மீளவும் இந்தச் சமூகம் தவறுவிடும்போது கடந்த காலங்கள் ஆசிரியர் சொல்லிக்கொடுத்த பாடங்களாகி விடுகின்றன.

   கடற்பிரதேச மக்களின் வாழ்க்கை அம்சங்கள், அவர்களின் பண்பாடுகள், வாழ்க்கைப் போராட்டங்கள், மாறுதல்கள் என ஏறத்தாள எண்பது வருடத்திற்கு முற்பட்ட காலங்களில் இருந்தான கதைகளை தனது நாவல்களில் எஸ்.ஏ உதயன் பதிவு செய்கிறார்.

கதையும் கதைப்பண்புகளும்

லோமியா

    லோமியா என்றால் ‘ஒளிதரும் விளக்கு’ என்று அர்த்தம். கடலில் வீசும் காற்றுக்கு அணைந்துவிடாமல் வெளிச்சம் தருவது அது. 1926, 1927 இல் தாக்கிய காலரா நோயினாலும் 1931 இல் வீசிய புயலினாலும் மன்னார்ப்பிரதேசம் பெரும் உயிரிழப்பைச் சந்தித்தது. இதனைப் பின்புலமாக வைத்து இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

    ஏறத்தாள 80 வருடங்களுக்கு முந்தைய கதை. தமிழ்நாட்டில் இருந்து தொழில் செய்வதற்காக வந்து சேர்ந்த குடும்பங்கள் அங்கு வாழ நேரிட்டபோது அந்தக் குடும்பங்களுக்கும் அந்த ஊராருக்கும் இடையில் ஏற்பட்ட உறவுநிலைச் சிக்கல்களே லோமியா நாவலாக விரிகின்றது.

   கடல்வாழ்க்கையும் தொழில்முறை அம்சங்களும் கிராமிய வாழ்வும் இணைந்த உயிர்த்துடிப்பான மாந்தரை இந்நாவலில் காணலாம்.



சடையன் என்ற அவ்வூர் இளைஞனும் தமிழ்நாட்டிலிருந்து வந்து குடியேறிய தலைமுறையின் வழிவந்த செல்வி என்ற பெண்ணுக்கும் இடையிலான காதல், பின்னர் திருமண பந்தமாக மாறும்போது ஏற்படும் சிக்கல்கள் இங்கு கூறப்படுகின்றன. இங்கு பிரதான பாத்திரமாகிய சடையனின் முற்போக்கான செயற்பாடுகளும் கூறப்படுகின்றன.

      இந்நாவலின் சம்மாட்டிமாரின் தொழில்முறைமை, அவர்களின் தந்திரோபாயம்,  மக்களின் வாழ்க்கைப் போராட்டம், சாதிப்பிரச்சினை, ஊர்க்கட்டுப்பாடுகள், வழக்கடிபாடுகள் என்பன இந்நாவலில் பேசுபொருள்களாக உள்ளன.

   தொழிலாளர்கள் பற்றிய சித்திரமும் அவர்களின் முதலாளிமாராக இருக்கின்ற சம்மாட்டிமாரின் தகுதிநிலைகளும் கதையில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

    மோசோ சம்மாட்டியின் நிலைகள் கூறப்படுகின்றன. அவர் தொழில் நுணுக்கம் தெரிந்த சம்மாட்டியாகவும், தொழிலாளரின் நன்மை தீமைகளில் கைகொடுப்பவராகவும் வார்க்கப்பட்டுள்ளார்.

    தொபியாசு சம்மாட்டி என்ற பாத்திரம் பொறாமையும் சூழ்ச்சியும் நிறைந்த பாத்திரமாக வார்க்கப்பட்டிருக்கிறது. தனக்குப் போட்டியாக இருக்கின்ற சம்மாட்டிகளின் தொழில் நுணுக்கத்துக்கான காரணங்களை அறிவதும் தனது உதவியாளர்களை வைத்து வலையை எரிப்பது, குடிசைகளுக்குத் தீ வைப்பது போன்ற இழிநிலைச் செயல்களுக்கு ஏவிவிடுவதும், இன்னும் பல சம்பவங்கள் கோர்வையாக நாவலில் பேசப்படுகின்றன.

   பேச்சுமொழிச்சொற்கள், சொற்றொடர்கள், மக்களின் பண்பாட்டுக் கூறுகளான வழிவழியான சடங்குகள், நம்பிக்கை, மரபுகள் கதையோட்டத்தில் கூறப்படுகின்றன. திருமணச் சடங்கு, மரணச்சடங்கு, வாக்குக் கொடுத்தல் (வெற்றிலையில் வைத்து காசு கொடுத்தல்), தொழிலுக்குச் சென்றவனுக்கு முள்ளுப்படுதல் முதலானவற்றுக்கு கைவைத்தியம் செய்தல் முதலான நம்பிக்கை மற்றும் மரபுசார் பண்பாட்டுக்கூறுகள் கதையெங்கும் இழையோடுகின்றன.

   இந்நாவலின் மொழிநடைக்கும் தொழில்முறைமை மற்றும் கிராமிய மணங்கமழும் சொற்றொடர்களுக்கும் பின்வரும் பகுதிகளை உதாரணம் காட்டலாம்.

“எலே வௌரம் கெட்ட பயலுகளா… இப்பிடிப் பொழுதுக்கும் பொழைப்புக்கும் தண்ணியில கெடப்பீகளா. வலையில கம்பு குத்தி கால்ப்பொறுப்பில இழுத்துவைச்சு வலை பிடிச்சிகன்னா கொள்ளை மீன் கிடைக்குமில்ல.” (லோமியா)

   சடையனுக்கும் செல்விக்குமான உறவின் தொடக்கத்தை நாவலாசிரியர் வர்ணிக்கும் பகுதி முக்கியமானது. ஒரு தேர்ந்த நாவலாசிரியனுக்கு இருக்கவேண்டிய பண்பை இப்பகுதி எடுத்துக்காட்டுகின்றது.

“கிணற்றடிக்குப் போனவனை நில்லுங்க தண்ணி கொண்டுவாறன் என்டு நிறுத்திய செல்வி வாளியில் தண்ணியும் சவுக்காரமும் துவாயும் ஒரே முறையில் கொண்டு வந்தாள். சடையன் கையை நீட்ட செல்வி வாளியில் தண்ணியை ஊத்தினாள். மஞ்சள் பூசின தங்கம் அவட கை. ஊத்தின கைக்கும் நீட்டின கைக்கும் எவ்வளவு வித்தியாசம். உழைச்சு உரம் பாஞ்ச சடையனின் முரட்டுக் கைக்கிட்ட முல்லைப்பூ மாதிரி செல்வியோட கை. அவ குனிஞ்சு ஊத்தும்போது அவ தலைமுடி கத்தையாய் முன்னுக்கு விழுந்து அழகு காட்டினத சடையன் ரசித்தான்.

சடையன் தேச்சுக்கிண்டே இருந்தான். செல்வி ஊத்திக்கொண்டே இருந்தா. செம்புல தண்ணியில்லாம போனது தெரியாம ரெண்டு பேரும் பாத்துக்கிண்டு நிண்டாங்க. மனசுக்குள்ள மின்னல் குடி வந்த மாதிரி சுளீரென்டு என்னவோ இழுக்குது. வெளிக்கிட்டான் சடையன். ‘தேத்தண்ணி குடிச்சிட்டுப் போங்க’ என்றவள் அவன் முகத்தைப் பாத்துச் சிரிச்ச சிரிப்பில் அவள் கண்களுக்குள் காதல் இருந்தது.” (லோமியா)

   பேசாலைக் கிராமத்தின் கடற்கரையில் விரவிக் கிடக்கும் சாதியச் சுவடுகளை இந்நாவலில் காணமுடிகின்றது என்பதும் மதத்தைவிடவும் சாதியே மனிதர்களின் எலும்பு மச்சைகளிலும் ஊடுருவியுள்ளது என்பதும் இந்நாவலின் ஊடாக உணர்த்தப்படும் முக்கியமான சமூகச் செய்தியாக அமைகின்றது.

தெம்மாடுகள்

   1986-1990 காலகட்டத்தில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து சென்று முகாம்களில் வாழநேரிட்ட தமிழ் அகதிகளின் கதைதான் தெம்மாடுகள்.

     ‘தெம்மாடு’ என்பது மன்னார்ப்பிரதேச வட்டாரவழக்குச் சொல்லாகும். இயல்புநிலை பிழன்று  அறியாமையால் உழலும் அப்பாவிகளை தெம்மாடுகள் என்று அழைப்பார்கள் என உதயன் குறிப்பிடுகிறார்.

   இங்கு இனப்பிரச்சினை காரணமாக இலங்கையில் இருந்து எல்லாவற்றையும் இழந்துவிட்டு தம் உயிரைக் காத்துக் கொள்வதற்காக தமிழ்நாட்டு முகாம்களுக்குச் சென்று அங்கு பல்வேறு அல்லல்களையும் மௌனமாக ஏற்று வாழ்ந்த மனிதர்கள் தெம்மாடுகளாக ஆசிரியரால் சித்திரிக்கப்பட்டுள்ளனர்.

   இந்நாவலின் பிரதான பாத்திரமாகிய ‘கலா’ என்ற பெண் இலங்கையில் சாதிமாறித் திருமணம் செய்த காரணத்தால் அவளின் குடும்பத்தினரால் நிராகரிக்கப்படுகிறாள். இந்நிலையில் அவளும் கணவனும் பிரச்சினைகளின் போது இடம்பெயர்ந்து வாழும்போது அவளின் கணவன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமற்போக அவள் தனித்துப்போகிறாள். பின்னர் தனது கணவனின் நண்பனின் உதவியால் தமிழகத்திற்குப் புலம்பெயர்கிறாள். அங்கு முகாம் வாழ்வில் அவள் எதிர்கொள்ளும் இன்னல்களும் அவளைப்போன்ற தமிழ்மக்கள் படும் அவலங்களும் நெருக்கடிகளும் இந்நாவலில் கதையாக விரிகின்றது.

   இக்கதையில் தமிழ்நாட்டு முகாம் வாழ்வு சொல்லப்படுகிறது. இலங்கையில் இருந்து புலம்பெயரும்போது அவர்கள் எதிர்கொள்ளும் கடற்பயண அனுபவம், முகாம்களில் இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள், பொலிஸாரின் அத்துமீறல்கள், பெண்கள் மீதான பாலியல் விடயங்கள், தரகுவேலை செய்வோர் மற்றும் கடத்தற்காரர்களின் இழிநிலைகள், முகாம்களில் இருந்து கூலித்தொழில் செய்வதற்காக வெளியே செல்வோரை முதலாளிகள் சுரண்டுதல், மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகளுக்கு மக்கள் படும் பாடுகள், காதல் - கல்யாணம், அடிதடி மற்றும் குடிப்பழக்கம் போன்ற சமூகத்தின் பல்வேறு முகங்களை இந்நாவலின் கதை நகர்வுக்குத் துணையாகக் கொள்கிறார் நாவலாசிரியர்.

   இந்நாவலின் ‘கலா’ முழுமையான ஒரு பாத்திரமாக வார்க்கப்பட்டுள்ளாள். வீட்டாரை எதிர்த்துத் திருமணம் செய்கிறாள் கலா. அதனால் தொடர்ச்சியாக ஏற்பட்ட பிரச்சினைகள் அவளைத் தனிமைப்படுத்தி விடுகின்றன. அவளுக்கு உதவ வந்தவன்தான் சத்தியநாதன். சமூகத்தின் எல்லைக் கோடுகளைத் தாண்டி தமிழகமுகாம் வாழ்வுவரை வருகின்றான். வெளியே குடும்பமாக இருப்பதுபோலும் உள்ளே கலாவும் சத்தியநாதனும் தனித்தனியானவர்களாகவும் வாழ காலமும் சூழலும் அவர்களை நிர்ப்பந்திக்கிறது. சமூகத்தின் ஏளனங்களுக்குத் துணைபோகாமல் அகதியாக அந்தரிக்கும் மனத்தைத் திடப்படுத்தி வாழ்ந்து காட்டும் பாத்திரமாக்குகிறார் ஆசிரியர்.

   அகதிமுகாமில் ஒரு முற்போக்குச் செயற்பாடு கொண்ட பெண்ணாக கலா உலாவருகிறாள். அதனால் அவள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பல வடிவங்களில் அவளை அணுகுகின்றன. பாலியல் பலாத்காரமாக, சந்தேகத்துக்குரியவளாக, இறுதியில் போலியாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் வதைபடுகிறாள்.

   எம்மைச்சூழ வாழும் வெவ்வேறுபட்ட மனிதர்களின் மனவுணர்வுகளையும், வாழ்வதற்காக அப்பாவி மனிதர்கள் எதிர்கொள்ளக்கூடிய மிகப்பெரிய தண்டனைகளையும் வித்தியாசமான களத்தினூடாக ஆசிரியர் இந்நாவலில் சித்திரிக்கிறார்.

வாசாப்பு

   வாசாப்பு என்பது கூத்துக்கலையைப் பற்றிய புனைவாகும்.

   மன்னார்ப்பிரதேசத்தின் கூத்துக்கலையை உயிரோட்டமாகச் சொல்லும் நாவலே வாசாப்பு ஆகும். வாசாப்பு என்பது இரண்டு இரவு நாடகமாக சமய வழக்காற்றுடன் தொடர்புபடுத்தி கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் நேர்த்திக்கடனுக்காக நடிக்கப்படுவதாகும்.  மன்னார்ப் பிரதேசக் கூத்துமுறையை மீட்டுப் பார்க்கும் கதை.

கூத்து ஒரு கலைஞனோடும் ஊரோடும் எப்படிப் பின்னிப் பிணைந்தது என்பதை இந்நாவலூடாக ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்றார்.

“கிராமியக் கலைகளும் அதன் வீரிய வீச்சங்களும் முனைமழுங்கிப் போயிற்று. நகரமயமாதல் என்ற நகர்த்தலில் எமது பண்பாட்டு வாண்மைகள் பதுங்கிப் படுக்கின்றன என்ற இக்காலத்து அச்ச உணர்வுதான் இப்படியொரு நாவலை எனக்கு எழுதத்தூண்டியது.”
   என்று உதயன் எழுதுகிறார்.” (வாசாப்பு - என்னுரை)

   இதனை, கூத்துக்கலை பற்றி இலங்கையில் எழுந்த முதல் தமிழ் நாவல் என விமர்சகர் செ. யோகராசா குறிப்பிடுகிறார். விமல் குழந்தைவேல் உட்பட பலரின் சிறுகதைகள் கூத்துக்கலை பற்றி வந்துள்ளனவாயினும் ‘வாசாப்பு’  நாவல்தான் முதல் முயற்சியாக அமைகின்றது.
   இந்நாவலில் கூத்துப்பற்றிய விலாவாரியான விபரிப்புகள் இடம்பெறுகின்றன. வாசாப்புக் கூத்துத் தொடங்குதற்கு முன்னர்  மேற்கொள்ளப்படும் வரண்முறையான சில வழக்காறுகள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன.



   நாடகம் படிப்பதற்கான அறிவித்தலை பறையடித்து கிராமத்திற்கு தெரிவிக்கும் வழக்கத்துடன் தொடங்குகின்றனர். தொடர்ந்து கூட்டம் கூடுதல், நடிகர்கள் தெரிவுசெய்தல், நாடகம் பழக்குதல், ஏடு திறத்தல், வரவு கொடுத்தல், பழக்கம், கொச்சைகட்டுதல், கப்புக்கால் நடுதல், படிப்பு, மங்களங்கட்டி நேர்த்தி அவிழ்ப்பு என்ற சடங்குகளின் ஊடாக இக்கூத்து முறைமைக்கான படிமுறைவழக்கம் கூறப்படுகிறது. அத்தோடு மத்தளகாரர், கட்டளைக்காரர், அண்ணாவியார், மற்றும் கூத்துக் கலைஞர்கள் பற்றிய வர்ணணைகளும் வருகின்றன.

   அமலதாசு, குருசுமுத்துப்புலவர் ஆகிய உண்மையான கலை உள்ளங்களின் நிலையும் கூறப்படுகிறது. 

“மேடைக்குப் பக்கத்தில் கதிரையைப் போட்டு நாடகம் பாத்துக்கிண்டிருந்த குருசுமுத்துப் புலவருக்கு அது நாடகமாகத் தெரியயில்ல. அது சீவியமாத் தெரியுது. நெஞ்சு குமுறிக் குமுறிவிழுகிது. போர்க்களத்தில் அவரும் போய் நிக்கிற மாதிரி துறுதுறுவென்டு நரம்பு மண்டலம் புடைக்குது. அவரு எழுதின நாடகம் காவியமாப் போகுதென்டு பூரிப்பு. இப்ப அவரிட புத்திக்குள்ள இருந்து மனசாட்சி கதைக்குது. ‘அப்பா குருசு நீ பெரிய புலவன்தான்டா.. பிறந்தா உன்ன மாதிரிப் பிறந்து உன்னமாதிரி வாழணுமடா.. இனி.. நீ.. செத்தாலும் பரவாயில்ல..’ நினைப்புக்கு ஏத்த மாதிரி உடம்பு பாரம் குறைஞ்சு நேத்து இருந்த கையுளைச்சல் காணாமப் போய்ச்சு” (வாசாப்பு)

   ஏரேது என்றால் அது அமலதாசுதான் மிகப் பொருத்தமான கலைஞன் என்ற எண்ணவோட்டம் ஊரார் மனதில் ஏற்பட்டுவிடுகிறது.

“கோணான் கூத்து முடிச்சிட்டுது. இனி நமக்கு ஆட்டம்தான். தனக்குள்ளேயே சொல்லிக் கொண்ட அமலதாசு அலுமாரிக்கு மேல இருந்த மரமுடியை பார்க்கிறாரு. ‘வந்திட்டுடா நமக்கு வேலை’ அவர் முகத்தில சிரிப்பு முளைச்சு கண்ணு பளபளக்குது. பக்குவமா அந்த மரமுடியைத் தொட்டு தூக்கிறாரு.” (வாசாப்பு)

   நாவலில் அமலதாசுவின் சந்தோசமும் துக்கமும் ஆற்றாமையும் மிகச் சிறப்பாகக் கூறப்படுகின்றன. குருசுமுத்துப் புலவரின் மரணம் கூத்துக்களரியிலேயே நிகழ்ந்துவிடுகிறது. இது கலைக்காகவே வாழ்ந்த உண்மையான மனிதனை இனங்காட்டுகிறது.

   உள்ளோட்டமாக கிளைக்கதையாக துப்பரவுத் தொழிலாளர் சாதியின்பெயரால் எப்படி அப்பிரதேசத்தில் இருந்து விரட்டப்பட்டார்கள் என்பதும் அடிமைகுடிமைத் தொழிலின் நிலையும் கூறப்படுகிறது. உயர்வர்க்கத்தினர் செய்யும் சூழ்ச்சிகளில் அவர்கள் அகப்பட்டு விடுவதும் சாதிமான்களின் முன் கூனிக்குறுகி நிற்கும் அவர்களின் நிலையும் எடுத்துக்காட்டப்படுகிறது.

   இந்நாவலில் வரும் கட்டளைகாரரின் மகனும் அதிகாரத்தின் ஒரு குறியீடுதான். அவன் அந்த வீட்டில் வேலை செய்யும் துப்பரவுத் தொழிலாளப் பெண்ணைப் பலவந்தமாக ஏமாற்றி தனது இச்சையைத் தீர்த்துக் கொள்கிறான். அது வெளியே தெரிய வந்தபோது அவளை கள்ளப்பட்டத்துடன் வீட்டைவிட்டே கட்டளைக்காரர் வெளியேற்றுவதும் மிக இயல்பாக நடந்துவிடுகிறது. அதேநேரம் அந்தக் குடும்பங்களின் குடியிருப்பைத் தங்கள் கிராமத்தைவிட்டே அகற்றவேண்டும் என்று சந்தர்ப்பம் பார்த்திருந்த அதிகார வர்க்கம் அதையும் மிகத்தந்திரமாகச் செய்துமுடித்துவிடுகிறது.

   ஆசிரியர் ஒரு கலைஞனாக இருந்து எழுதிய இந்நாவலின் ஒவ்வொரு நகர்வும் மிக நுட்பமாகச் செதுக்கி எடுக்கப்பட்டிருக்கின்றது. பண்பாட்டின் அடியாகக் கட்டியெழுப்பப்பட்ட நாவலாக இருப்பது அதன் மற்றுமொரு சிறப்பு எனலாம்.

சொடுதா

   1950 களின் காலகட்டக்கதை. மன்னார் கடற்புறத்து வாழ்க்கையையும் சம்மாட்டிகளின் நிலையையும் சொல்வது.

      ‘சொடுதா’ என்றால் இளைஞன் என்று அர்த்தம். மன்னார்ப்பிரதேச கடற்பிரதேச சம்மாட்டிமாரின் கதை. கரைவலை இழுப்போர் சம்மாட்டிகளின் ஆதரவில் வாழ்வதும் சம்மாட்டிமார் அவர்களின் குடும்பங்களில் ஏற்படுத்தும் தாக்கமுமே இந்நாவலாக விரிகிறது.
   இந்நாவலிலும் தொழில்முறை நுணுக்கம் மிகச்சிறப்பாக வருகிறது. காலங்காலமாக இருந்த கயிற்றுவலை, நைலோன் வலைக்கு மாற்றப்படுகிறது.



 மரியாசு சம்மாட்டியும் சுகந்தமாலையுமே இந்நாவலின் முக்கிய பாத்திரங்கள். மரியாசு இளமையும் துடிப்பும் மிக்க இளைஞன். முழுமையாக வார்க்கப்பட்டுள்ள பாத்திரம். தொழிலாளரைப் பங்காளிகள் ஆக்கவேண்டும்; அவர்களைக் கூலிகளாகக் கருதக்கூடாது; தொழில் முறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.  என்பது மரியாசு சம்மாட்டியின் இலட்சியமாக உள்ளது. பெண்கள் விடயம் சந்தர்ப்பசூழ்நிலை என்று சொல்லப்படுகிறது.

   சுகந்தமாலை என்ற பாத்திரம் கதை நகர்வின் நடுப்பகுதியில் இருந்து வருகின்ற பாத்திரமாக இருந்தாலும் முழுமையும் நிறைவும் உள்ள மனதை விட்டு அகலாத பாத்திரமாக உள்ளது. மரியாசுவுடன் ஏற்பட்ட தொடர்பு சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆனது. மரியாசுவைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்பதற்காக - திருமணம் காலம் தாழ்த்தியதால் உயிரை மாய்க்கிறாள்.

இரண்டு பெண்களின் சீரழிவுக்குக் மரியாசு சம்மாட்டி காரணமாக இருக்கிறார். ஆனால் மரியாசு சம்மாட்டியின் பெயரும் மானமும் சாதாரண பெண்களின் இழப்பினூடாக யாருக்கும் தெரியாமல் காப்பாற்றப்படுகிறது.

    ஒருத்தி கற்பமாகி ஊருக்குத்தெரியாமல் சம்மாட்டியின் பெயரை சமூகத்திற்கு சொல்லிக்கொள்ளாமல் தற்கொலை செய்கிறாள். மற்றவளின் காதல் யாருக்கும் தெரியாமல் சம்மாட்டியால் நிராகரிக்கப்படுகிறது.

நாவலாசிரியர் இறுதிவரை மரியாசு சம்மாட்டியை சமூகத்திடம் காட்டிக்கொடுக்காமல் காப்பாற்றி விடுகிறார்.

தொகுப்பு

   எஸ். ஏ உதயனின் நாவல்களில் தெம்மாடுகள் கதைக்களம் தமிழ்நாட்டு முகாம்களில் வாழ்ந்த அகதிகளின்  களத்துடன் தொடர்புபட்டது ஏனையமூன்று நாவல்களும் இலங்கை மன்னார்மாவட்ட கடற்பிரதேசக்களத்துடன் தொடர்புபட்டது.

   குறிப்பாக கடற்பிரதேச மக்களின் வாழ்வு இம்மூன்று நாவல்களிலும் கூறப்படுகின்றன. அவர்களின் கிறிஸ்தவ மத பின்னணியுடன் கூடிய வாழ்முறை அம்சங்கள், சடங்காசார முறைகள், கட்டுப்பாடுகள் இந்நாவல்களில் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

  அடுத்து முக்கியம் பெறுவன சாதியச் சமூகம். மதத்தை மாற்றினாலும் சாதியச் சமூகத்தை மாற்றமுடியாது என்பதற்கு ஆதாரமாக நான்கு நாவல்களிலும் சாதியச் செல்வாக்குப் பேசப்படுகிறது.

   கட்டளைக்காரர், சம்மாட்டிமார் ஒரு அதிகார வர்க்கமாகவும் அவர்களின் கீழ் இருக்கும் அப்பிரதேச மக்கள், அதற்கும் அடிநிலையில் இருக்கும் தலித் சமூகத்தின் பல்வேறு தொழில் புரிவோரும் இந்நாவல்களில் பேசப்படுகின்றனர். 

   குறிப்பாக வர்க்கவேறுபாடு, சாதிய வேறுபாடு, என்ற அடுக்கமைவுகளில் இச்சமூகங்கள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன.

   இவ்வகையில் உதயனின் நாவல்கள் எதிர்காலத்தில் பின்வருவன தொடர்பாக கவனத்தைக் கோருவனவாக உள்ளன.

1.       சமகால இலக்கியம் என்பது சமகால வாழ்வைப் பதிவுசெய்வதாக இருக்கும். மூன்று தசாப்த  போர்ச்சூழலில் பல படைப்புக்கள் எழுந்துள்ளன. ஆனாலும் எஸ்.ஏ உதயன் அதிலிருந்து விலகி கடந்தகாலங்களையே இந்நாவல்களில் பதிவு செய்துள்ளார் (தெம்மாடுகளின் ஒரு பகுதி தவிர)

2.       உடமைச் சமூகங்களாக இருக்கின்ற சம்மாட்டிமார் மற்றும் கட்டளைகாரர் போன்றோர் தலித் சமூகம் தொடர்பாக வைத்திருக்கும் கருத்துநிலைகள்

3.       தெம்மாடுகளிலும் சொடுதாவிலும் இருக்கக்கூடிய பலவீனமான பகுதிகள் - குறிப்பாக சினிமாத்தனமான திடீர் திருப்பம் மற்றும் விபரண ரீதியிலான பதிவுகள்.

    எனவே ஈழத்து நாவல் இலக்கியத்தில் மன்னார் மாவட்டத்தின் கடற்பிரதேச மக்களின் வாழ்வையும் பண்பாட்டையும் முதல் முதலில் பதிவு செய்த வகையில் உதயனின் நாவல்கள் கவனத்திற்கு உட்படுத்தவேண்டியனவாகவுள்ளன. 

(சென்னை தரமணியில் ‘உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்’ பெப் 14,15 இல் நடாத்திய அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் என்ற ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை)
---