Tuesday, February 26, 2013

எஸ்.ஏ உதயனின் நாவல்கள்


 -சு. குணேஸ்வரன் 


அறிமுகம்

    மிழ் இலக்கியத்தின் செழுமையினையும் குறித்த ஒரு மக்கட்கூட்டத்தின் பண்பாட்டு அம்சங்களையும் விரிவாகப் பதிவு செய்யும் இலக்கிய வடிவங்களில் புனைகதை இலக்கியம் முதன்மையானது.

  அண்மைக்காலத்தில் இலங்கைத் தமிழ்ப்படைப்பாளிகளின் பல நாவல்கள் வெளிவந்துள்ளன. போர்க்காலத்திலும் போரின் பின்னரும் வெளிவந்த நாவல்களை அரசியல் அடிப்படையிலும் பண்பாட்டின் அடிப்படையிலும் இரண்டு பிரிவாகப் பகுக்கலாம். அவற்றுள் பண்பாட்டின் அடிப்படையில் பெரிதும் கவனத்தைக் குவித்த படைப்புக்களாக எஸ். ஏ உதயனின் நாவல்கள் அமைகின்றன.

   இந்தக் கட்டுரையில் லோமியா, தெம்மாடுகள், வாசாப்பு, சொடுதா ஆகிய உதயனின் நான்கு நாவல்களும் நோக்கப்படுகின்றன. இவை கடந்துபோன காலங்கள் பற்றியும் அவை கொண்டியங்கிய பண்பாட்டு பெறுமானங்களின் மீதான வேணாவா குறித்தும் பேசுகின்றன. 

  கழிந்துபோன காலத்தின் எச்சங்களான நினைவுகளின்மீது கட்டியெழுப்பப்பட்ட படைப்புக்கள் இவை. ஒரு இனத்தின், ஒரு சமூகத்தின் படிப்படியான மாறுதல்களைக் காட்டுபவை. பலவற்றை இந்தச் சமூகம் மறந்துவிடுகிறது. சிலவற்றையே ஞாபகக் கிடங்குகளில் இருந்து மீட்டுப் பார்க்கின்றது. மீளவும் மீளவும் இந்தச் சமூகம் தவறுவிடும்போது கடந்த காலங்கள் ஆசிரியர் சொல்லிக்கொடுத்த பாடங்களாகி விடுகின்றன.

   கடற்பிரதேச மக்களின் வாழ்க்கை அம்சங்கள், அவர்களின் பண்பாடுகள், வாழ்க்கைப் போராட்டங்கள், மாறுதல்கள் என ஏறத்தாள எண்பது வருடத்திற்கு முற்பட்ட காலங்களில் இருந்தான கதைகளை தனது நாவல்களில் எஸ்.ஏ உதயன் பதிவு செய்கிறார்.

கதையும் கதைப்பண்புகளும்

லோமியா

    லோமியா என்றால் ‘ஒளிதரும் விளக்கு’ என்று அர்த்தம். கடலில் வீசும் காற்றுக்கு அணைந்துவிடாமல் வெளிச்சம் தருவது அது. 1926, 1927 இல் தாக்கிய காலரா நோயினாலும் 1931 இல் வீசிய புயலினாலும் மன்னார்ப்பிரதேசம் பெரும் உயிரிழப்பைச் சந்தித்தது. இதனைப் பின்புலமாக வைத்து இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

    ஏறத்தாள 80 வருடங்களுக்கு முந்தைய கதை. தமிழ்நாட்டில் இருந்து தொழில் செய்வதற்காக வந்து சேர்ந்த குடும்பங்கள் அங்கு வாழ நேரிட்டபோது அந்தக் குடும்பங்களுக்கும் அந்த ஊராருக்கும் இடையில் ஏற்பட்ட உறவுநிலைச் சிக்கல்களே லோமியா நாவலாக விரிகின்றது.

   கடல்வாழ்க்கையும் தொழில்முறை அம்சங்களும் கிராமிய வாழ்வும் இணைந்த உயிர்த்துடிப்பான மாந்தரை இந்நாவலில் காணலாம்.



சடையன் என்ற அவ்வூர் இளைஞனும் தமிழ்நாட்டிலிருந்து வந்து குடியேறிய தலைமுறையின் வழிவந்த செல்வி என்ற பெண்ணுக்கும் இடையிலான காதல், பின்னர் திருமண பந்தமாக மாறும்போது ஏற்படும் சிக்கல்கள் இங்கு கூறப்படுகின்றன. இங்கு பிரதான பாத்திரமாகிய சடையனின் முற்போக்கான செயற்பாடுகளும் கூறப்படுகின்றன.

      இந்நாவலின் சம்மாட்டிமாரின் தொழில்முறைமை, அவர்களின் தந்திரோபாயம்,  மக்களின் வாழ்க்கைப் போராட்டம், சாதிப்பிரச்சினை, ஊர்க்கட்டுப்பாடுகள், வழக்கடிபாடுகள் என்பன இந்நாவலில் பேசுபொருள்களாக உள்ளன.

   தொழிலாளர்கள் பற்றிய சித்திரமும் அவர்களின் முதலாளிமாராக இருக்கின்ற சம்மாட்டிமாரின் தகுதிநிலைகளும் கதையில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

    மோசோ சம்மாட்டியின் நிலைகள் கூறப்படுகின்றன. அவர் தொழில் நுணுக்கம் தெரிந்த சம்மாட்டியாகவும், தொழிலாளரின் நன்மை தீமைகளில் கைகொடுப்பவராகவும் வார்க்கப்பட்டுள்ளார்.

    தொபியாசு சம்மாட்டி என்ற பாத்திரம் பொறாமையும் சூழ்ச்சியும் நிறைந்த பாத்திரமாக வார்க்கப்பட்டிருக்கிறது. தனக்குப் போட்டியாக இருக்கின்ற சம்மாட்டிகளின் தொழில் நுணுக்கத்துக்கான காரணங்களை அறிவதும் தனது உதவியாளர்களை வைத்து வலையை எரிப்பது, குடிசைகளுக்குத் தீ வைப்பது போன்ற இழிநிலைச் செயல்களுக்கு ஏவிவிடுவதும், இன்னும் பல சம்பவங்கள் கோர்வையாக நாவலில் பேசப்படுகின்றன.

   பேச்சுமொழிச்சொற்கள், சொற்றொடர்கள், மக்களின் பண்பாட்டுக் கூறுகளான வழிவழியான சடங்குகள், நம்பிக்கை, மரபுகள் கதையோட்டத்தில் கூறப்படுகின்றன. திருமணச் சடங்கு, மரணச்சடங்கு, வாக்குக் கொடுத்தல் (வெற்றிலையில் வைத்து காசு கொடுத்தல்), தொழிலுக்குச் சென்றவனுக்கு முள்ளுப்படுதல் முதலானவற்றுக்கு கைவைத்தியம் செய்தல் முதலான நம்பிக்கை மற்றும் மரபுசார் பண்பாட்டுக்கூறுகள் கதையெங்கும் இழையோடுகின்றன.

   இந்நாவலின் மொழிநடைக்கும் தொழில்முறைமை மற்றும் கிராமிய மணங்கமழும் சொற்றொடர்களுக்கும் பின்வரும் பகுதிகளை உதாரணம் காட்டலாம்.

“எலே வௌரம் கெட்ட பயலுகளா… இப்பிடிப் பொழுதுக்கும் பொழைப்புக்கும் தண்ணியில கெடப்பீகளா. வலையில கம்பு குத்தி கால்ப்பொறுப்பில இழுத்துவைச்சு வலை பிடிச்சிகன்னா கொள்ளை மீன் கிடைக்குமில்ல.” (லோமியா)

   சடையனுக்கும் செல்விக்குமான உறவின் தொடக்கத்தை நாவலாசிரியர் வர்ணிக்கும் பகுதி முக்கியமானது. ஒரு தேர்ந்த நாவலாசிரியனுக்கு இருக்கவேண்டிய பண்பை இப்பகுதி எடுத்துக்காட்டுகின்றது.

“கிணற்றடிக்குப் போனவனை நில்லுங்க தண்ணி கொண்டுவாறன் என்டு நிறுத்திய செல்வி வாளியில் தண்ணியும் சவுக்காரமும் துவாயும் ஒரே முறையில் கொண்டு வந்தாள். சடையன் கையை நீட்ட செல்வி வாளியில் தண்ணியை ஊத்தினாள். மஞ்சள் பூசின தங்கம் அவட கை. ஊத்தின கைக்கும் நீட்டின கைக்கும் எவ்வளவு வித்தியாசம். உழைச்சு உரம் பாஞ்ச சடையனின் முரட்டுக் கைக்கிட்ட முல்லைப்பூ மாதிரி செல்வியோட கை. அவ குனிஞ்சு ஊத்தும்போது அவ தலைமுடி கத்தையாய் முன்னுக்கு விழுந்து அழகு காட்டினத சடையன் ரசித்தான்.

சடையன் தேச்சுக்கிண்டே இருந்தான். செல்வி ஊத்திக்கொண்டே இருந்தா. செம்புல தண்ணியில்லாம போனது தெரியாம ரெண்டு பேரும் பாத்துக்கிண்டு நிண்டாங்க. மனசுக்குள்ள மின்னல் குடி வந்த மாதிரி சுளீரென்டு என்னவோ இழுக்குது. வெளிக்கிட்டான் சடையன். ‘தேத்தண்ணி குடிச்சிட்டுப் போங்க’ என்றவள் அவன் முகத்தைப் பாத்துச் சிரிச்ச சிரிப்பில் அவள் கண்களுக்குள் காதல் இருந்தது.” (லோமியா)

   பேசாலைக் கிராமத்தின் கடற்கரையில் விரவிக் கிடக்கும் சாதியச் சுவடுகளை இந்நாவலில் காணமுடிகின்றது என்பதும் மதத்தைவிடவும் சாதியே மனிதர்களின் எலும்பு மச்சைகளிலும் ஊடுருவியுள்ளது என்பதும் இந்நாவலின் ஊடாக உணர்த்தப்படும் முக்கியமான சமூகச் செய்தியாக அமைகின்றது.

தெம்மாடுகள்

   1986-1990 காலகட்டத்தில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து சென்று முகாம்களில் வாழநேரிட்ட தமிழ் அகதிகளின் கதைதான் தெம்மாடுகள்.

     ‘தெம்மாடு’ என்பது மன்னார்ப்பிரதேச வட்டாரவழக்குச் சொல்லாகும். இயல்புநிலை பிழன்று  அறியாமையால் உழலும் அப்பாவிகளை தெம்மாடுகள் என்று அழைப்பார்கள் என உதயன் குறிப்பிடுகிறார்.

   இங்கு இனப்பிரச்சினை காரணமாக இலங்கையில் இருந்து எல்லாவற்றையும் இழந்துவிட்டு தம் உயிரைக் காத்துக் கொள்வதற்காக தமிழ்நாட்டு முகாம்களுக்குச் சென்று அங்கு பல்வேறு அல்லல்களையும் மௌனமாக ஏற்று வாழ்ந்த மனிதர்கள் தெம்மாடுகளாக ஆசிரியரால் சித்திரிக்கப்பட்டுள்ளனர்.

   இந்நாவலின் பிரதான பாத்திரமாகிய ‘கலா’ என்ற பெண் இலங்கையில் சாதிமாறித் திருமணம் செய்த காரணத்தால் அவளின் குடும்பத்தினரால் நிராகரிக்கப்படுகிறாள். இந்நிலையில் அவளும் கணவனும் பிரச்சினைகளின் போது இடம்பெயர்ந்து வாழும்போது அவளின் கணவன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமற்போக அவள் தனித்துப்போகிறாள். பின்னர் தனது கணவனின் நண்பனின் உதவியால் தமிழகத்திற்குப் புலம்பெயர்கிறாள். அங்கு முகாம் வாழ்வில் அவள் எதிர்கொள்ளும் இன்னல்களும் அவளைப்போன்ற தமிழ்மக்கள் படும் அவலங்களும் நெருக்கடிகளும் இந்நாவலில் கதையாக விரிகின்றது.

   இக்கதையில் தமிழ்நாட்டு முகாம் வாழ்வு சொல்லப்படுகிறது. இலங்கையில் இருந்து புலம்பெயரும்போது அவர்கள் எதிர்கொள்ளும் கடற்பயண அனுபவம், முகாம்களில் இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள், பொலிஸாரின் அத்துமீறல்கள், பெண்கள் மீதான பாலியல் விடயங்கள், தரகுவேலை செய்வோர் மற்றும் கடத்தற்காரர்களின் இழிநிலைகள், முகாம்களில் இருந்து கூலித்தொழில் செய்வதற்காக வெளியே செல்வோரை முதலாளிகள் சுரண்டுதல், மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகளுக்கு மக்கள் படும் பாடுகள், காதல் - கல்யாணம், அடிதடி மற்றும் குடிப்பழக்கம் போன்ற சமூகத்தின் பல்வேறு முகங்களை இந்நாவலின் கதை நகர்வுக்குத் துணையாகக் கொள்கிறார் நாவலாசிரியர்.

   இந்நாவலின் ‘கலா’ முழுமையான ஒரு பாத்திரமாக வார்க்கப்பட்டுள்ளாள். வீட்டாரை எதிர்த்துத் திருமணம் செய்கிறாள் கலா. அதனால் தொடர்ச்சியாக ஏற்பட்ட பிரச்சினைகள் அவளைத் தனிமைப்படுத்தி விடுகின்றன. அவளுக்கு உதவ வந்தவன்தான் சத்தியநாதன். சமூகத்தின் எல்லைக் கோடுகளைத் தாண்டி தமிழகமுகாம் வாழ்வுவரை வருகின்றான். வெளியே குடும்பமாக இருப்பதுபோலும் உள்ளே கலாவும் சத்தியநாதனும் தனித்தனியானவர்களாகவும் வாழ காலமும் சூழலும் அவர்களை நிர்ப்பந்திக்கிறது. சமூகத்தின் ஏளனங்களுக்குத் துணைபோகாமல் அகதியாக அந்தரிக்கும் மனத்தைத் திடப்படுத்தி வாழ்ந்து காட்டும் பாத்திரமாக்குகிறார் ஆசிரியர்.

   அகதிமுகாமில் ஒரு முற்போக்குச் செயற்பாடு கொண்ட பெண்ணாக கலா உலாவருகிறாள். அதனால் அவள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பல வடிவங்களில் அவளை அணுகுகின்றன. பாலியல் பலாத்காரமாக, சந்தேகத்துக்குரியவளாக, இறுதியில் போலியாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் வதைபடுகிறாள்.

   எம்மைச்சூழ வாழும் வெவ்வேறுபட்ட மனிதர்களின் மனவுணர்வுகளையும், வாழ்வதற்காக அப்பாவி மனிதர்கள் எதிர்கொள்ளக்கூடிய மிகப்பெரிய தண்டனைகளையும் வித்தியாசமான களத்தினூடாக ஆசிரியர் இந்நாவலில் சித்திரிக்கிறார்.

வாசாப்பு

   வாசாப்பு என்பது கூத்துக்கலையைப் பற்றிய புனைவாகும்.

   மன்னார்ப்பிரதேசத்தின் கூத்துக்கலையை உயிரோட்டமாகச் சொல்லும் நாவலே வாசாப்பு ஆகும். வாசாப்பு என்பது இரண்டு இரவு நாடகமாக சமய வழக்காற்றுடன் தொடர்புபடுத்தி கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் நேர்த்திக்கடனுக்காக நடிக்கப்படுவதாகும்.  மன்னார்ப் பிரதேசக் கூத்துமுறையை மீட்டுப் பார்க்கும் கதை.

கூத்து ஒரு கலைஞனோடும் ஊரோடும் எப்படிப் பின்னிப் பிணைந்தது என்பதை இந்நாவலூடாக ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்றார்.

“கிராமியக் கலைகளும் அதன் வீரிய வீச்சங்களும் முனைமழுங்கிப் போயிற்று. நகரமயமாதல் என்ற நகர்த்தலில் எமது பண்பாட்டு வாண்மைகள் பதுங்கிப் படுக்கின்றன என்ற இக்காலத்து அச்ச உணர்வுதான் இப்படியொரு நாவலை எனக்கு எழுதத்தூண்டியது.”
   என்று உதயன் எழுதுகிறார்.” (வாசாப்பு - என்னுரை)

   இதனை, கூத்துக்கலை பற்றி இலங்கையில் எழுந்த முதல் தமிழ் நாவல் என விமர்சகர் செ. யோகராசா குறிப்பிடுகிறார். விமல் குழந்தைவேல் உட்பட பலரின் சிறுகதைகள் கூத்துக்கலை பற்றி வந்துள்ளனவாயினும் ‘வாசாப்பு’  நாவல்தான் முதல் முயற்சியாக அமைகின்றது.
   இந்நாவலில் கூத்துப்பற்றிய விலாவாரியான விபரிப்புகள் இடம்பெறுகின்றன. வாசாப்புக் கூத்துத் தொடங்குதற்கு முன்னர்  மேற்கொள்ளப்படும் வரண்முறையான சில வழக்காறுகள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன.



   நாடகம் படிப்பதற்கான அறிவித்தலை பறையடித்து கிராமத்திற்கு தெரிவிக்கும் வழக்கத்துடன் தொடங்குகின்றனர். தொடர்ந்து கூட்டம் கூடுதல், நடிகர்கள் தெரிவுசெய்தல், நாடகம் பழக்குதல், ஏடு திறத்தல், வரவு கொடுத்தல், பழக்கம், கொச்சைகட்டுதல், கப்புக்கால் நடுதல், படிப்பு, மங்களங்கட்டி நேர்த்தி அவிழ்ப்பு என்ற சடங்குகளின் ஊடாக இக்கூத்து முறைமைக்கான படிமுறைவழக்கம் கூறப்படுகிறது. அத்தோடு மத்தளகாரர், கட்டளைக்காரர், அண்ணாவியார், மற்றும் கூத்துக் கலைஞர்கள் பற்றிய வர்ணணைகளும் வருகின்றன.

   அமலதாசு, குருசுமுத்துப்புலவர் ஆகிய உண்மையான கலை உள்ளங்களின் நிலையும் கூறப்படுகிறது. 

“மேடைக்குப் பக்கத்தில் கதிரையைப் போட்டு நாடகம் பாத்துக்கிண்டிருந்த குருசுமுத்துப் புலவருக்கு அது நாடகமாகத் தெரியயில்ல. அது சீவியமாத் தெரியுது. நெஞ்சு குமுறிக் குமுறிவிழுகிது. போர்க்களத்தில் அவரும் போய் நிக்கிற மாதிரி துறுதுறுவென்டு நரம்பு மண்டலம் புடைக்குது. அவரு எழுதின நாடகம் காவியமாப் போகுதென்டு பூரிப்பு. இப்ப அவரிட புத்திக்குள்ள இருந்து மனசாட்சி கதைக்குது. ‘அப்பா குருசு நீ பெரிய புலவன்தான்டா.. பிறந்தா உன்ன மாதிரிப் பிறந்து உன்னமாதிரி வாழணுமடா.. இனி.. நீ.. செத்தாலும் பரவாயில்ல..’ நினைப்புக்கு ஏத்த மாதிரி உடம்பு பாரம் குறைஞ்சு நேத்து இருந்த கையுளைச்சல் காணாமப் போய்ச்சு” (வாசாப்பு)

   ஏரேது என்றால் அது அமலதாசுதான் மிகப் பொருத்தமான கலைஞன் என்ற எண்ணவோட்டம் ஊரார் மனதில் ஏற்பட்டுவிடுகிறது.

“கோணான் கூத்து முடிச்சிட்டுது. இனி நமக்கு ஆட்டம்தான். தனக்குள்ளேயே சொல்லிக் கொண்ட அமலதாசு அலுமாரிக்கு மேல இருந்த மரமுடியை பார்க்கிறாரு. ‘வந்திட்டுடா நமக்கு வேலை’ அவர் முகத்தில சிரிப்பு முளைச்சு கண்ணு பளபளக்குது. பக்குவமா அந்த மரமுடியைத் தொட்டு தூக்கிறாரு.” (வாசாப்பு)

   நாவலில் அமலதாசுவின் சந்தோசமும் துக்கமும் ஆற்றாமையும் மிகச் சிறப்பாகக் கூறப்படுகின்றன. குருசுமுத்துப் புலவரின் மரணம் கூத்துக்களரியிலேயே நிகழ்ந்துவிடுகிறது. இது கலைக்காகவே வாழ்ந்த உண்மையான மனிதனை இனங்காட்டுகிறது.

   உள்ளோட்டமாக கிளைக்கதையாக துப்பரவுத் தொழிலாளர் சாதியின்பெயரால் எப்படி அப்பிரதேசத்தில் இருந்து விரட்டப்பட்டார்கள் என்பதும் அடிமைகுடிமைத் தொழிலின் நிலையும் கூறப்படுகிறது. உயர்வர்க்கத்தினர் செய்யும் சூழ்ச்சிகளில் அவர்கள் அகப்பட்டு விடுவதும் சாதிமான்களின் முன் கூனிக்குறுகி நிற்கும் அவர்களின் நிலையும் எடுத்துக்காட்டப்படுகிறது.

   இந்நாவலில் வரும் கட்டளைகாரரின் மகனும் அதிகாரத்தின் ஒரு குறியீடுதான். அவன் அந்த வீட்டில் வேலை செய்யும் துப்பரவுத் தொழிலாளப் பெண்ணைப் பலவந்தமாக ஏமாற்றி தனது இச்சையைத் தீர்த்துக் கொள்கிறான். அது வெளியே தெரிய வந்தபோது அவளை கள்ளப்பட்டத்துடன் வீட்டைவிட்டே கட்டளைக்காரர் வெளியேற்றுவதும் மிக இயல்பாக நடந்துவிடுகிறது. அதேநேரம் அந்தக் குடும்பங்களின் குடியிருப்பைத் தங்கள் கிராமத்தைவிட்டே அகற்றவேண்டும் என்று சந்தர்ப்பம் பார்த்திருந்த அதிகார வர்க்கம் அதையும் மிகத்தந்திரமாகச் செய்துமுடித்துவிடுகிறது.

   ஆசிரியர் ஒரு கலைஞனாக இருந்து எழுதிய இந்நாவலின் ஒவ்வொரு நகர்வும் மிக நுட்பமாகச் செதுக்கி எடுக்கப்பட்டிருக்கின்றது. பண்பாட்டின் அடியாகக் கட்டியெழுப்பப்பட்ட நாவலாக இருப்பது அதன் மற்றுமொரு சிறப்பு எனலாம்.

சொடுதா

   1950 களின் காலகட்டக்கதை. மன்னார் கடற்புறத்து வாழ்க்கையையும் சம்மாட்டிகளின் நிலையையும் சொல்வது.

      ‘சொடுதா’ என்றால் இளைஞன் என்று அர்த்தம். மன்னார்ப்பிரதேச கடற்பிரதேச சம்மாட்டிமாரின் கதை. கரைவலை இழுப்போர் சம்மாட்டிகளின் ஆதரவில் வாழ்வதும் சம்மாட்டிமார் அவர்களின் குடும்பங்களில் ஏற்படுத்தும் தாக்கமுமே இந்நாவலாக விரிகிறது.
   இந்நாவலிலும் தொழில்முறை நுணுக்கம் மிகச்சிறப்பாக வருகிறது. காலங்காலமாக இருந்த கயிற்றுவலை, நைலோன் வலைக்கு மாற்றப்படுகிறது.



 மரியாசு சம்மாட்டியும் சுகந்தமாலையுமே இந்நாவலின் முக்கிய பாத்திரங்கள். மரியாசு இளமையும் துடிப்பும் மிக்க இளைஞன். முழுமையாக வார்க்கப்பட்டுள்ள பாத்திரம். தொழிலாளரைப் பங்காளிகள் ஆக்கவேண்டும்; அவர்களைக் கூலிகளாகக் கருதக்கூடாது; தொழில் முறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.  என்பது மரியாசு சம்மாட்டியின் இலட்சியமாக உள்ளது. பெண்கள் விடயம் சந்தர்ப்பசூழ்நிலை என்று சொல்லப்படுகிறது.

   சுகந்தமாலை என்ற பாத்திரம் கதை நகர்வின் நடுப்பகுதியில் இருந்து வருகின்ற பாத்திரமாக இருந்தாலும் முழுமையும் நிறைவும் உள்ள மனதை விட்டு அகலாத பாத்திரமாக உள்ளது. மரியாசுவுடன் ஏற்பட்ட தொடர்பு சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆனது. மரியாசுவைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்பதற்காக - திருமணம் காலம் தாழ்த்தியதால் உயிரை மாய்க்கிறாள்.

இரண்டு பெண்களின் சீரழிவுக்குக் மரியாசு சம்மாட்டி காரணமாக இருக்கிறார். ஆனால் மரியாசு சம்மாட்டியின் பெயரும் மானமும் சாதாரண பெண்களின் இழப்பினூடாக யாருக்கும் தெரியாமல் காப்பாற்றப்படுகிறது.

    ஒருத்தி கற்பமாகி ஊருக்குத்தெரியாமல் சம்மாட்டியின் பெயரை சமூகத்திற்கு சொல்லிக்கொள்ளாமல் தற்கொலை செய்கிறாள். மற்றவளின் காதல் யாருக்கும் தெரியாமல் சம்மாட்டியால் நிராகரிக்கப்படுகிறது.

நாவலாசிரியர் இறுதிவரை மரியாசு சம்மாட்டியை சமூகத்திடம் காட்டிக்கொடுக்காமல் காப்பாற்றி விடுகிறார்.

தொகுப்பு

   எஸ். ஏ உதயனின் நாவல்களில் தெம்மாடுகள் கதைக்களம் தமிழ்நாட்டு முகாம்களில் வாழ்ந்த அகதிகளின்  களத்துடன் தொடர்புபட்டது ஏனையமூன்று நாவல்களும் இலங்கை மன்னார்மாவட்ட கடற்பிரதேசக்களத்துடன் தொடர்புபட்டது.

   குறிப்பாக கடற்பிரதேச மக்களின் வாழ்வு இம்மூன்று நாவல்களிலும் கூறப்படுகின்றன. அவர்களின் கிறிஸ்தவ மத பின்னணியுடன் கூடிய வாழ்முறை அம்சங்கள், சடங்காசார முறைகள், கட்டுப்பாடுகள் இந்நாவல்களில் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

  அடுத்து முக்கியம் பெறுவன சாதியச் சமூகம். மதத்தை மாற்றினாலும் சாதியச் சமூகத்தை மாற்றமுடியாது என்பதற்கு ஆதாரமாக நான்கு நாவல்களிலும் சாதியச் செல்வாக்குப் பேசப்படுகிறது.

   கட்டளைக்காரர், சம்மாட்டிமார் ஒரு அதிகார வர்க்கமாகவும் அவர்களின் கீழ் இருக்கும் அப்பிரதேச மக்கள், அதற்கும் அடிநிலையில் இருக்கும் தலித் சமூகத்தின் பல்வேறு தொழில் புரிவோரும் இந்நாவல்களில் பேசப்படுகின்றனர். 

   குறிப்பாக வர்க்கவேறுபாடு, சாதிய வேறுபாடு, என்ற அடுக்கமைவுகளில் இச்சமூகங்கள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன.

   இவ்வகையில் உதயனின் நாவல்கள் எதிர்காலத்தில் பின்வருவன தொடர்பாக கவனத்தைக் கோருவனவாக உள்ளன.

1.       சமகால இலக்கியம் என்பது சமகால வாழ்வைப் பதிவுசெய்வதாக இருக்கும். மூன்று தசாப்த  போர்ச்சூழலில் பல படைப்புக்கள் எழுந்துள்ளன. ஆனாலும் எஸ்.ஏ உதயன் அதிலிருந்து விலகி கடந்தகாலங்களையே இந்நாவல்களில் பதிவு செய்துள்ளார் (தெம்மாடுகளின் ஒரு பகுதி தவிர)

2.       உடமைச் சமூகங்களாக இருக்கின்ற சம்மாட்டிமார் மற்றும் கட்டளைகாரர் போன்றோர் தலித் சமூகம் தொடர்பாக வைத்திருக்கும் கருத்துநிலைகள்

3.       தெம்மாடுகளிலும் சொடுதாவிலும் இருக்கக்கூடிய பலவீனமான பகுதிகள் - குறிப்பாக சினிமாத்தனமான திடீர் திருப்பம் மற்றும் விபரண ரீதியிலான பதிவுகள்.

    எனவே ஈழத்து நாவல் இலக்கியத்தில் மன்னார் மாவட்டத்தின் கடற்பிரதேச மக்களின் வாழ்வையும் பண்பாட்டையும் முதல் முதலில் பதிவு செய்த வகையில் உதயனின் நாவல்கள் கவனத்திற்கு உட்படுத்தவேண்டியனவாகவுள்ளன. 

(சென்னை தரமணியில் ‘உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்’ பெப் 14,15 இல் நடாத்திய அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் என்ற ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை)
---

5 comments:

  1. நாவல் குறித்த ஆய்வில் மிக முக்கியமான பதிவு.
    நாவல்கள் இன்னும் என் வாசிப்பிற்குக் கிடைக்கவில்லை.
    அவற்றைத் தேடி எடுத்து வாசிக்கத் தூண்டுகிறது உங்கள் கட்டுரை.

    ReplyDelete
  2. வருகைக்கு மிக்க நன்றி தாட்சாயணி.

    ReplyDelete
  3. மன்னார் அமுதன் மின்னஞ்சலில்...

    Tuesday

    7:40pm
    மன்னார் அமுதன்
    மிகவும் சிறப்பான கட்டுரை ஐயா.... மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாவல்களுக்கு கட்டுரைவடிவம் கொடுத்தமைக்கும் அதனை ‘உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்’ மாநாட்டில் சமர்ப்பித்தமைக்கும் நன்றிகள்...
    இக்கட்டுரையை உங்கள் பெயரோடு தழல் இலக்கிய வட்ட இணைய தளத்தில் பிரசுரிக்க அனுமதிப்பீர்களா...? அனுமதிக்காக காத்திருக்கின்றேன்
    Wednesday

    6:06am
    Subramaniam Kuneswaran
    நன்றி அமுதன். தழல் இலக்கிய இணையத்தளத்திற்கு தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  4. முகநூல் பதிவுகள்....

    Suntharalingam Keerththi, Vathiri C Raveendran and 2 others like this.

    Subramaniam Kuneswaran நன்றி - பதிவுகள் வ.ந. கிரிதரன்
    February 27 at 11:33am · Like

    Kanthavarothayan Murugesu மன்னார்ப்பிரதேசத்தின் கூத்துக்கலையை உயிரோட்டமாகச் சொல்லும் நாவலே வாசாப்பு ஆகும். வாசாப்பு என்பது இரண்டு இரவு நாடகமாக சமய வழக்காற்றுடன் தொடர்புபடுத்தி கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் நேர்த்திக்கடனுக்காக நடிக்கப்படுவதாகும்.
    February 27 at 11:51am · Unlike · 2

    Suntharalingam Keerththi, Kanthavarothayan Murugesu, Kuppilan Shanmugan and 2 others like this.

    Subramaniam Kuneswaran நன்றி - tamilauthors.com
    February 27 at 11:34am · Like

    Kanthavarothayan Murugesu லோமியா என்றால் ‘ஒளிதரும் விளக்கு’ என்று அர்த்தம். கடலில் வீசும் காற்றுக்கு அணைந்துவிடாமல் வெளிச்சம் தருவது அது. 1926, 1927 இல் தாக்கிய காலரா நோயினாலும் 1931 இல் வீசிய புயலினாலும் மன்னார்ப்பிரதேசம் பெரும் உயிரிழப்பைச் சந்தித்தது. இதனைப் பின்புலமாக வைத்து இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
    February 27 at 11:47am · Unlike · 2

    Theepachelvan Pratheepan நானும் இந்த நாவலைப் படித்தேன். மிக அருமையான நாவல். இந்த மாதிரியான பதிவுகள் அவசியமானது. உதயனின் ஏனைய நாவல்களையும் படிக்க வேண்டும். வன்னியில் இருந்து அவரும் வெற்றிச்செல்வியும்தான் போருக்குப் பின்னர் நாவல் எழுதியிருக்கிறார்கள். வெற்றிச்செல்வியும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர். வன்னியில் இருந்து நேர்மையான புனைவு வெற்றிச்செல்வினுடைய நாவல். இவற்றை கவனித்து உரிய கவனத்தை பெறும் வகையில் ஆய்வு செய்த துவாரகனுக்கு வாழ்த்துக்கள்!
    February 27 at 11:55am · Like · 2

    Subramaniam Kuneswaran எஸ்.ஏ உதயன் போருக்குப் பின்னர் நாவல்களை எழுதியிருந்தாலும் அவை போருக்குப் பின்னரான பதிவை கொண்டவையல்ல. கடந்த காலங்கள் பற்றிய பதிவாகத்தான் இருக்கிறது. நன்றி தீபச்செல்வன்.
    February 27 at 12:00pm · Like · 3

    Suntharalingam Keerththi, Kobi Kandhasami, Shadagopan Ramiah and 7 others like this.

    Navaneethan Mailu nice
    February 26 at 10:11am · Unlike · 1

    ReplyDelete
  5. Lucky Club Casino Site - Online slots, jackpots, and more
    Lucky Club Casino luckyclub · Online slot games · New games and bonuses · Cash Out promotions · Live Casino · Online casino · Online casino · Online casino · Online

    ReplyDelete