Monday, January 29, 2024

இலக்கியத் தேட்டத்துத் தேனீ : பேராசிரியர் செ.யோகராசா

 

-       கலாநிதி சு.குணேஸ்வரன்

   பேராசிரியர் கலாநிதி செ.யோகராசாவின் எழுத்து முயற்சிகளில் புலம்பெயர் தமிழ் இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் விரிவான ஆய்வுகளுக்கு வழிகாட்டிகளாக அமைந்துள்ளன. 90 களில் இருந்து புலம்பெயர்ந்தோரின் இலக்கிய முயற்சிகள் பற்றி ஈழத்தில் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார். நூல்கள் மற்றும் படைப்பாளிகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள், விமர்சனங்கள் ஆகியவற்றை முதலாவதாக எடுத்துக்காட்டலாம். இவை தவிர நூல் வெளியீடுகள் மற்றும் கருத்தரங்குகளில் உரையாற்றி முன்வைத்த கருத்துக்களும் உள. எனினும் செ. யோகராசா எழுதிய கட்டுரைகளையும்  நூல்களையும் ஆதாரமாகக் கொண்டு சில கருத்துக்களை இக்கட்டுரை முன்வைக்கின்றது.

   ஈழத்தைப் பொறுத்தவரையில் செ. யோகராசா, சித்திரலேகா மௌனகுரு, சி.சிவசேகரம் ஆகியோர் புலம்பெயர் இலக்கியங்கள் பற்றி 90களில் கவனஞ் செலுத்தியவர்களாக அமைகின்றனர். சித்திரலேகா மௌனகுரு, 1995 இல் எழுதிய இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர் இலக்கியம் என்ற நூலும் சி.சிவசேகரம் 1994 இல் புலம்பெயர்ந்த தமிழர் நல மாநாடு சிறப்பு மலரில் எழுதிய கட்டுரையும் முக்கியமானவை. ஆனால் தொடர்ச்சியாக புலம்பெயர் படைப்புக்களை வாசிப்பதிலும் அவை தொடர்பான கட்டுரைகளை எழுதியதிலும் செ. யோகராசா கவனத்திற்குரியவராகின்றார்.


செ.யோகராசா எழுதியவற்றை புலம்பெயர் இலக்கியங்களின் வளர்ச்சிப் போக்குப் பற்றிய பொதுவான அவதானிப்பில் எழுதிய கட்டுரைகள், படைப்புக்களை மையப்படுத்தி (கவிதை, புனைகதைகள், சஞ்சிகைகள்) எழுதிய கட்டுரைகள், தனி ஆளுமைகளின் படைப்புக்களை மதிப்பிடும் வகையில் எழுதிய கட்டுரைகள் எனப் பகுத்து நோக்கலாம். 

   இவர் 1995 இல் பண்பாடு இதழில் எழுதிய 'புலம்பெயர் கலாசாரமும் புகலிட இலக்கியங்களும்' என்ற நீண்ட கட்டுரை முக்கியமானதாக அமைந்துள்ளது. அதில் புலம்பெயர்ந்த தமிழர்களின் புனைவு சார்ந்த எழுத்துக்களையும் புனைவுசாராத எழுத்துக்களையும் ஏனைய கலை இலக்கிய முயற்சிகளையும் பற்றி விரிவான பதிவொன்றினை செய்திருந்தார். அந்தக் கட்டுரையில் இருந்து ஆய்வுக்கான பல களங்கள் விரிகின்றன. புலம்பெயர் இலக்கியங்கள் கொண்டிருக்கக்கூடிய இலக்கியப்போக்கின் வகைப்பாட்டுக்கான விரிவான களங்களையும் அக்கட்டுரையில் இனங்காணமுடியும்.

(1)      

   புலம்பெயர் இலக்கியங்கள் பற்றிய பொதுவான அவதானிப்பில் எழுதிய கட்டுரைகள் என்ற வகையில் சிலவற்றை எடுத்துக்காட்டலாம். ஈழத்து இலக்கியத்தின் தொடர்ச்சியாக புலம்பெயர்ந்தோரின் இலக்கிய முயற்சிகளையும் ஒப்புநோக்கி அவை தொடர்பாக எழுதப்பட்டவற்றை ஈழத்து நாவல் வளமும் வளர்ச்சியும் (2008) என்ற நூலில் காணலாம். அத்தோடு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவமாக வெளிவந்த இலக்கியத் தேட்டம் ஈழத்து நவீன இலக்கியம் (2000) என்ற நூலிலும் இதன் தொடர்ச்சியைப் பதிவு செய்துள்ளார். இந்த அடிப்படையில் பின்வருவன முக்கியமானவை.

  1. புகலிட இலக்கியங்கள் ஒரு கண்ணோட்டம், முத்தமிழ் விழா மலர், 1992.
  2. புலம்பெயர் கலாசாரமும் புகலிட இலக்கியங்களும், பண்பாடு, 1995.
  3. விமர்சன நோக்கில் எண்பதுகளுக்குப் பிற்பட்ட ஈழத்து நூல்கள், 2002.
  4. ஈழத்துப் புகலிட இலக்கிய வளர்ச்சி ஒரு நோக்கு, ஞானம், அவுஸ்திரேலிய எழுத்தாளர் விழா சிறப்பு மலர், 2004.
  5. இலங்கைப் புகலிட நாவல்கள். சிந்தனை, தொகுதி XIV  2004.
  6. புலம்பெயர் இலக்கியங்களும் தமிழும், சர்வதேச எழுத்தாளர் மாநாட்டுக் கட்டுரைக்கோவை, 2011.
  7. புலம்பெயர் இலக்கிய வளர்ச்சிக்கு வடமராட்சியின் பங்களிப்பு, வேலாயுதம் மகாவித்தியாலயம், நிறுவுநர் நினைவுப் பேருரை, 2011.
  8. துன்பியல் மிகுந்த பெருங்கதையாகும் புலம்பெயர் பயண  அனுபவங்கள் : சில அவதானிப்புகள், ஞானம் 175, 2014.
  9. நோர்வேத் தமிழர் வரலாறும் வாழ்வியலும், 2016.

கட்டுரையாளருடன் பேராசிரியர்
செ. யோகராசா மற்றும் எழுத்தாளர் சித்தன்
   ஈழத்து நாவல் இலக்கியத்தின் போக்கினை வரையறுக்கும்போது எண்பதுகளுக்குப் பின்னர் தோற்றம் பெற்ற புலம்பெயர்ந்தோரின் நாவல்களை இனங்கண்டு அவற்றை வகைப்படுத்தி தொடர்ச்சியாகப் பதிவுசெய்த முறைமை முக்கியமானது. இங்கு கவிதை தொடர்பாக எழுதிய ஆய்வுகளிலும் மிகக் கூடிய கவனம் செலுத்தி புதிய படைப்பாளிகளின் வித்தியாசமான கவிதைகளையும் வித்தியாசமாக களங்களையும் முன்வைத்திருக்கிறார்.  படைப்புக்களின் செல்நெறிகள் பற்றி பகுத்து நோக்கும்போது வழமையான உள்ளடக்கத்திற்கு மேலதிகமாக புகலிட நிர்வாகக் கெடுபிடிகள், புதிய நாஸிகளின் தோற்றம், அந்நியம், சர்வதேச விகாரங்கள், தனிமை, பாலுறவு முதலான உபபிரிவுகளில் புலம்பெயர்ந்தோரின் படைப்புக்களைப் பகுத்து நோக்கியிருக்கிறார். இவை புலம்பெயர் இலக்கியங்களின் உள்ளடக்கத்தின் புதிய போக்குகளை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. அவற்றுக்குப் பொருத்தமான படைப்புக்களையும் உதாரணங்களாகக் காட்டுகிறார்.

பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியால நிறுவுநர் நினைவுப் பேருரை என்ற கட்டுரையில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற வடமராட்சிப் படைப்பாளிகளை இனங்காட்டியுள்ளார். புனைவிலக்கியங்கள் மட்டுமன்றி மொழிபெயர்ப்புத்துறை, ஊடகத்துறைகளிலும் பணியாற்றுபவர்களையும் தேடி எழுதியிருக்கிறார்.

(2)      

   படைப்புக்களை மையப்படுத்தி எழுதிய கட்டுரைகள் அடுத்து முக்கியம் பெறுகின்றன.  புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், சஞ்சிகைகள், கலை இலக்கியச் செயற்பாடுகள் ஆகியவற்றை இங்கு வகைப்படுத்தியுள்ளார். இவற்றில் புகலிடச்சஞ்சிகைகள் பற்றிக் குறிப்பிடும்போது, கனடாவில் இருந்து வெளிவந்த நான்காவது பரிமாணத்தில், 'புகலிடச் சஞ்சிகைகள் வாசகரின் எதிர்பார்ப்பு' என்ற சிறிய கட்டுரையுடன் இந்த எழுத்து முயற்சி தொடங்குகிறது. 'அபிமன்யு' என்ற புனைபெயரிலும் படி சஞ்சிகையில் தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

  1. புகலிடச் சஞ்சிகைகள் வாசகரின் எதிர்பார்ப்பு, நான்காவது பரிமாணம் கனடா, 1991.
  2. ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் உலகமெல்லாம் வியாபாரிகள், படி, ஐப்பசி, 1993.
  3. கி.பி அரவிந்தனின் முகங்கொள், படி 2, 1996.
  4. சுகனின் நுகத்தடி நாட்கள், படி 4, 1996.
  5. பொ. கருணாகரமூர்த்தியின் ஒரு அகதி உருவாகும் நேரம், படி 5, சித்திரை, 1997.
  6. எஸ்.பொவின் மாயினி ஒரு அறிமுகம், ஞானம் எஸ்.பொ சிறப்பிதழ், 2009.
  7. ஈழத்து நாவல் வளர்ச்சியில் ஒரு பூ என்றொரு நாவல் - 'ஆறு' நூற்றாண்டு விழாமலர், தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம், 2014.
  8. வ.ந கிரிதரனின் அமெரிக்கா, முன்னுரை.
  9. ஆ.மு.சி வேலழகனின் நெஞ்சில் நிலைத்த நினைவுகள், முன்னுரை.

(3)

   தனி ஆளுமைகளின் படைப்புக்களை மதிப்பிடும் வகையில் எழுதப்பட்ட கட்டுரைகளை அடுத்து குறிப்பிடலாம். ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் போன்ற அறியப்பட்ட படைப்பாளிகளின் நாவல்களை பல கட்டுரைகளில் எடுத்துக்காட்டியுள்ளார். நாவல்களில் உருவம், உள்ளடக்கம், அவற்றின் போதாமைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் அதேவேளை, புதிய படைப்பாளிகளை இனங்கண்டு பதிவுசெய்யும் முக்கிய பணியையும் செய்திருக்கிறார். இவர்களில் குறிப்பிடக்கூடிய படைப்பாளிகளில் இ.தியாகலிங்கத்தின் நாளை, அழிவின் அழைப்பிதழ் ஆகிய படைப்புக்களின் வித்தியாசமான கதைகளையும் களங்களையும் தொடர்ச்சியாகத் தனது எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார். அதேபோல் பொ. கருணாகரமூர்த்தி, பார்த்திபன், ஆதவன் ஆகியோரின் படைப்புக்களை முழுமையாகப் பெறமுடியாத காலகட்டத்திலேயே தனது வாசிப்பின் மூலம் ஈழத்தில் வெளிவந்த கட்டுரைகளில் கவனப்படுத்தியிருக்கிறார். அ. முத்துலிங்கம் (ஞானம் முத்துலிங்கம் சிறப்பிதழ்)   தமிழ்நதி (மகுடம்), மனுவல் யேசுதாசன் (ஜீவநதி), மு. தயாளன், இளைய அப்துல்லா ஆகியோர் குறித்தும் எழுதியிருக்கிறார். 'சமகால ஈழத்து எழுத்தாளருள் தமது வீச்சான தனித்துவமான மொழியாற்றல் காரணமாக தீவிர வாசகரது கவனத்தைப் பெற்றிருப்பவர் தமிழ்நதி' எனக் குறிப்பிட்டுகின்றார். (மகுடம் கனடாச் சிறப்பிதழ்)  அக்கட்டுரையில் தமிழ்நதியின் சிறுகதைத் தொகுப்பினையும் நாவல்களாகிய பார்த்தீனியம், கானல்வரி ஆகியவற்றையும் உள்ளடக்கி தமிழ்நதியின் புனைகதையுலகம் பற்றி எழுதியிருக்கிறார். இதேபோல் நோர்வேயில் புலம்பெயர்ந்து வாழும் இ. தியாகலிங்கத்தின் அழிவின் அழைப்பிதழ், பரதேசி ஆகியவை குறித்து தனித்தனியாக எழுதியிருந்தாலும் பின்னர் சில நாவல்களை ஒட்டுமொத்தமாக நோக்கி எழுதப்பட்ட கட்டுரையை சிங்கப்பூர் ஆய்வு மாநாட்டுக்கு சமர்ப்பித்துள்ளார். இவை தவிர ஈழத்து இலக்கியம் தொடர்பாக எழுதிய பல கட்டுரைகளிலும் ஆய்வுக்கட்டுரைகளிலும், உரைகளிலும் புலம்பெயர் எழுத்து முயற்சிகள் பற்றிய கருத்துக்களையும் இற்றைப்படுத்தி வந்திருக்கிறார்.


 'எந்த நாட்டினது இலக்கியமும் உலக இலக்கியத் தரத்தினை எட்டுவதென்பது இருவகைகளில் அமையமுடியுமொன்று கருதலாம். அவ்விரு நிலைகளையும் அளவுகோல்களாகக் கொண்டு ஈழத்து இலக்கிய வளர்ச்சிப் போக்கினை நோக்குவது வசதியானது எனலாம். அவையாவன, உலகப் பொதுவான விடயங்கள் ஈழத்து இலக்கியங்களில் இடம்பெறுதல், ஈழத்திற்குரிய பிரச்சினைகள் உலகப் பொதுவான பிரச்சினைகளாக பரிணாமம் பெறுதல்' (உலக இலக்கியத்தை நோக்கி ஈழத்து இலக்கியம், மறுகா) என்ற கருத்தை முன்வைத்து உலக இலக்கியங்களில் எவையெவை கவனிப்புப் பெற்றுள்ளன என்ற உதாரணத்தையும் தனது வாசிப்பு அனுபவத்தின் ஊடாக முன்வைத்துள்ளார். ஈழத்து போர்க்கால இலக்கியங்களும் புலம்பெயர் இலக்கியங்களும்தான் ஈழ இலக்கியத்தை உலக இலக்கியத்தை நோக்கி நகர்த்துவதற்குக் காரணமாகவும் அமைந்திருக்கின்றன என்ற கருத்தை பல உரையாடல்களில் முன்வைத்துள்ளார்.

   எனவே, ஈழத்து இலக்கியச் செல்நெறியைத் தனது தொடர்ச்சியான வாசிப்பின் ஊடாகவும் எழுத்துக்களின் ஊடாகவும் பேராசிரியர் செ. யோகராசா முன்வைத்துள்ளார். நெருக்கடி மிக்க இன்றைய வாழ்வுச்சூழலில் தனது குடும்பவாழ்வில் இருந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்விப்புலத்திலும் இலக்கியப் புலத்திலும் ஆய்வுப்புலத்திலும் இயங்கி வந்திருக்கிறார். அவரின் அர்ப்பணிப்பான சேவைக்கு அவரிடம் இருக்கக்கூடிய மனவுறுதியும் சுறுசுறுப்பும் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஆளுமைப்பண்புகளாக அமைந்துள்ளன. இலக்கியத்துறை மட்டுமல்லாமல் இலங்கை அரசுசார்ந்த பாடநூல், பாடங்களைத் திட்டமிடுதல், பரீட்சைக்குழு என மிகப் பொறுப்பான பணிகளிலும் செயற்பட்டு வருகின்றார்.

   பேராசிரியர் செ. யோகராசாவின் பணிகள் ஈழத்து இலக்கியத்துறையில் மிகக் கணிப்புக்குரியதாக அமைவதனை யாரும் எளிதில் மறுத்துவிடமுடியாது. தனது பல்கலைக்கழகக் கற்பித்தல் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் எழுத்துப்பணியில் இருந்து ஓய்வுபெறாது தமிழ்ச் சமூகத்தின் இலக்கியத் தேட்டத்திற்கு இன்னமும்  தேனீபோல தேனைச் சேகரித்துக் கொண்டேயிருக்கிறார்.

நன்றி : ஜீவநதி, ஆளுமைச் சிறப்பிதழ், ஆனி 2023.