Sunday, July 21, 2019

உண்மை கலந்த நாட்குறிப்புகளில் 'அம்மா' பாத்திர வார்ப்பு



அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள் நாவலில் 'அம்மா' பாத்திரவார்ப்புப் பற்றி எழுதிய கட்டுரையை இங்கே சென்று வாசிக்கலாம்.
http://skuneswaran.blogspot.com/2018/11/blog-post.html

குந்தவையின் பாதுகை




குந்தவையின் பாதுகை சிறுகதை பற்றிய நான் எழுதிய கட்டுரையை இங்கே சென்று பார்க்கலாம்.
http://skuneswaran.blogspot.com/2018/12/blog-post.html

சுந்தரரின் பதிகங்களில் இயற்கை இன்பம்


சீபர்ப்பதப் பதிகத்தை அடிப்படையாகக்கொண்ட உசாவல்



சு.குணேஸ்வரன்

அறிமுகம்
  பக்தி இலக்கிய வரலாற்றில் பல்லவர்காலம் மிக்குயர்ந்த இறைவழிபாட்டையும் தமிழர் பண்பாட்டையும் எடுத்துக்காட்டும் காலமாகத் திகழ்ந்தது. அக்காலத்தில் சைவசமயத்தின் எழுச்சிக்கும் அதன் வளர்ச்சிக்கும் நாயன்மார்களின் பங்களிப்பு மிக அதிகமாகவே இருந்துள்ளது. அவர்களில் சுந்தரின் திருப்பதிகங்கள் ஓசை நயமும் பொருள்வளமும் கொண்டவை. வாழ்வின் இன்பத்தை ஏற்றுக்கொண்டு குதூகல உணர்வுடன் இறைவனுடன் நட்புரிமை பூண்டவை. எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கையில் இறைவனைக் காணும் நிலையில் அவரது பாசுரங்கள் அமைந்துள்ளன. இவ்வகையில் ஸ்ரீசைலம் என்று அழைக்கப்பட்ட திருப்பருப்பதமலையில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாடிப்பரவிய பதிகங்களில் சுந்தரர் பாடிய சீபர்ப்பதம் என்ற பதிகத்தில் அமைந்துள்ள இயற்கை இன்பத்தில் இறைவனைக் காணும் உத்தியை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பாடப்பட்ட சந்தர்ப்பம்
   சீபர்ப்பதத்தின் பதிக வரலாறு பற்றிக் குறிப்பிடப்படும்போது சுந்தரமூர்த்தி நாயனார் திருக்காளத்தி மலைக்குச் சென்று இறைவனை வழிபட்ட பின்னர் அங்கிருந்தவாறே ஸ்ரீபர்வதத்துப் பெருமானை நெஞ்சில் நினைத்து அகக்கண்ணாற் கண்டு பாடிய திருப்பதிகமே சீபர்ப்பதமாகும். இத்தலம் ஸ்ரீசைலம் என அழைக்கப்படுகிறது. சம்பந்தரும் அப்பரும் சேக்கிழாரும் பர்வதம் என வடமொழியில் அழைக்கப்பட்டதை பருப்பதம் என தமிழில் வழங்கியுள்ளனர். ஆனால் சுந்தரரோ ஸ்ரீபர்வதம் என்பதனை சீபர்ப்பதம் என அழைக்கின்றார். இந்தியத்தேசத்தில் இருக்கக்கூடிய ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகச் சிறப்புடன் அழைக்கப்படும் ஸ்ரீசைலத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவனின் பொருமைகளையும் இயற்கை இன்பச்சூழல் நிறைந்த அழகையும் இப்பதிகத்தில் எடுத்துக்காட்டி மக்களை வழிப்படுத்தும் நோக்கில் இப்பதிகம் பாடப்பட்டுள்ளது.

இயற்கை வருணனைகள்
1. மலைச்சிறப்பு
   விலங்குகள், பறவைகள் யாவும் சுதந்திரமாக உலாவித் திரிந்து வாழும் மலை சீபர்ப்பதமலை எனக் கூறப்படுகிறது. விருந்தோம்பும் பண்புடைய குறமாந்தர்கள் பண்பட்ட வாழ்க்கை வாழுகின்றவர்கள் என்பதற்கு உதாரணமாக யானைக்குலமே மனிதர்களுக்குரிய மானத்துடனும் பண்புகளுடனும் வாழும் மலையாக “பொலி சீபர்ப்பத மலையே” என்ற சொற்றொடரின் ஊடாக வளம்நிறைந்த மலைப்பிரதேசமாகச் சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. முப்புரங்களை எரித்த சிவபெருமான் விரும்பி உறைந்துள்ள புராண வரலாற்றையும் இயற்கையில் இறைவனைக் காணும் அழகினையும்

“மானும்மரை இனமும்மயி லினமுங்கலந் தெங்கும்
தாமேமிக மேய்ந்துதடஞ் சுனைநீர்களைப் பருகிப்
பூமாமர முரிஞ்சிப் பொழி லூடேசென்று புக்குத்
தேமாம்பொழில் நீழற்றுயில் சீபர்ப்பத மலையே.”

   என்ற பதிகத்தில் சுந்தரர் அழகாகக் காட்டுவார். மானினமும் மரையினமும் மயிலினமும் தாமாகத் திரிந்து மேய்ந்து சுனைகளில் உள்ள நீரைப்பருகி மரங்களிலே தம் உடலை உராய்ந்து பொழில்கள் ஊடாகச் சென்று இனிய தேமாமரங்கள் நிறைந்த சோலையிலே துயில் கொள்ளுகின்ற காட்சியை மேற்படி விபரிக்கிறார். இவ்வாறான இயற்கை அழகு நிறைந்த மலையிலே இறைவன் வீற்றிருந்து அருள் பொழிகின்ற அழகு சீபர்ப்பதத்தில் மிக எளிமைநிறைந்த இன்தமிழில் பாடப்பட்டுள்ளது.

2. விலங்குகளின் வாழ்முறை
   மலையில் வாழும் குறமாந்தரின் பண்பாட்ட வாழ்வினை ஐந்தறிவு உயிரினங்களாகிய யானைகளின் செயற்பாடுகளினூடாகக் காட்டும் அழகு படித்து இன்புறத்தக்கதாகும். குறவர்கள் தங்கள் மலைகளுக்கும் சோலைகளுக்கும் அப்பால் இருந்து வந்த ஆண் யானைகளைப் பிடித்து அவைகளை வற்புறுத்தி தொன்னையில் தேனைப்பிழிந்து ஊட்டுகிறார்கள். பெண்யானைகள் தமது ஆண்யானைகளும் அகப்பட்டனவோ என அஞ்சி அவற்றை அழைத்துப் பிளிற அவற்றின் களிறுகள் தம் பிடிகளுக்கு என்ன துன்பம் நேர்ந்ததோ என்று அவற்றைத் தேடுகின்றன. பெண்யானைகள் செவிதாழ்த்தி ஆண்யானைகளின் குரலோசையைக் கேட்டு நிற்கின்றன. (ஆனைக்குலம் இரிந்தோடித் தன் பிடி சூழலில் திரியத் தானப்பிடி செவிதாழ்த்திட அதற்குமிக இரங்கி…) இவ்வாறு ஆண்யானைகள் ஒருபுறமும் பெண்யானைகள் ஒருபுறமும் தமது இணைகளைக் காணாது அலைந்து திரிந்து துயருறுகின்றன.

   மதங்கொண்ட ஆண்யானையானது தனது இணையை வேறு ஒரு யானையுடன் நீ சேர்ந்தாயென்று கூறி தனது தும்பிக்கையினைத் தூக்கி கோபம் பொங்கிவர மதநீரைச் சொரிந்து முகத்தைச் சுழிக்க, அதைக்கண்ட பெண்யானையானது நீ இவ்வாறு பழியுரைப்பின் நான் உயிர்வாழமாட்டேன் என அயலறியச் சபதம் செய்து ஆண் யானையைத் தெளியச்செய்கின்ற திருப்பருப்பதமலையே சிவபெருமான் வீற்றிருக்கும் மலையாகும் என்ற அழகான காட்சி இப்பதிகத்தில் உரைக்கப்படுகிறது.

“மாற்றுக்களி றடைந்தாய் என்று மதவேழங்கை யெடுத்து
மூற்றித்தழ லுமிழ்ந்தும்மதம் பொழிந்தும் முகஞ்சுழியத்
தூற்றத்தரிக் கில்லேனென்று சொல்லியய லறியத்
தேற்றிச்சென்று பிடிசூளறுஞ் சீபர்ப்பத மலையே”

  என்ற பதிகத்தினால் சுற்றத்தாரிடம் நிலையை விளக்கி சபதம் செய்வதாக “அயலறியத் தேற்றிச்சென்று சூளறும்” என சுந்தரர் பாடுவார். இது ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை முறையினை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

   மலையில் வாழ்கின்ற பன்றிக் கூட்டங்கள் நிலத்தைக் கிளறுகின்றன. அப்போது பன்றி கிளறிய மணிகள் நெருப்புப்போல் செவ்வொளி வீசிச் சிதறுகின்றன. இதைக் கண்ட கரடியும் மானும் அவ்வொளியைத் தீயென எண்ணிப் பயந்து தப்பிப் பிழைப்பதற்காக குளிர்ச்சி பொருந்திய சோலையில் புகுந்து பதுங்குகின்றன. இவ்வாறான சொல்லோவியம் சுந்தரரின் மற்றுமொரு பாடலில் வருகின்றது. இவ்வாறாக மான், மரை, கரடி, மயில் முதலானவை தேனையுண்ணுகின்ற பூஞ்சோலைகளும் பிற சோலைகளும் நீக்கமற நிறைந்து இறைவன் வீற்றிருக்கும் மலையாக திருப்பதமலை அமைந்துள்ளது.
இயற்கைச் சூழலில் தன்னைப் பறிகொடுத்துப் பாடும்போது யானைகளின் செயற்பாடு, ஏனைய வன ஜீவராசிகளின் செயற்பாடு, அந்தச் சூழலில் தம் வாழ்வை அமைத்துக் கொண்ட குறவர் குடிகளின் பண்பாடு ஆகியவற்றையெல்லாம் இங்கு சுந்தரர் காட்சிப்படுத்துகிறார் “சுந்தரரின் பதிகங்கள் பலவற்றில் காணப்படும் அவரது ஈடுபாடுகளிலொன்று இயற்கைச் சூழலின் பகைப்புலத்தில் இறைவனைப் பொருத்தி நோக்கும் முறைமையாகும். பொதுவாக இப்பண்பு காரைக்காலம்மையார், நாவுக்கரசர், சம்பந்தர் ஆகியோரிடம் காணப்பட்ட ஒன்றுதான். சுந்தரரின் இயற்கையீடுபாடு பொதுவாக நம் முன்னோடிகளை அடியொற்றிச் செல்லும் மரபுசார் செயற்பாங்கு எனக் கருதமுடிகிறது.” (நா.சுப்பிரமணியன், 2002, ப.166.) இவ்வகையில் பக்தி இலக்கிய மரபின் அறாத்தொடர்ச்சி சுந்தரரின் பாடல்களினூடாக வெளிப்படுகின்ற உண்மையையும் சீபர்ப்பதப் பதிகத்தில் கண்டுகொள்ள முடிகிறது.

3. குறவர் வாழ்முறை
     குறத்தி தினைப்புனத்தைக் காத்து நிற்க, கிளி வந்து கதிர்களைக் கொய்ய, கிளி தன்னை மதிக்கவில்லை என்று கோபித்து குறத்தி கவண் எய்ய, கிளி பயந்து ஓடுகிறது. மறுபுறம் கிளி பறந்து திரிவதைக் கண்ட குறப்பெண் “ஆய் ஓய்” எனக் கடியவும் கிளி அதனைப் பொருட்படுத்தாதது கண்டு, இரத்தினக் கல்லை கவணிலே வைத்து எறிய, கிளி மனம்மாறிப் பறந்தோடுகிறது. தினைப்புனம் காக்கும் பெண்கள் கிளிகளை நோக்கி, நீங்கள் முன்பு வந்தபோதெல்லாம் உங்களுக்காக இரங்கி உங்களைக் கடியாமல் இருந்தோம். ஆனால் நீங்கள் எப்போதும் இப்படி வந்து கதிர்களை உண்டால் உமது வீட்டார் எம்மைக் கோபிக்க மாட்டார்களா? எனக் கேட்கின்றனர்.

  மலைப்பக்கத்திலும் சோலைப்பக்கத்திலும் அவற்றிற்கு அப்பாற்பட்ட இடங்களிலுமுள்ள யானைகளைக் குறவர்கள் கொண்டு வந்து அவற்றைத் துன்பப்படுத்தி உணவை உண்ணச் செய்கின்ற செயற்பாடும் குறமக்களின் வாழ்க்கையினூடாகவே வெளிப்படுகிறது.

   மேலும் பெண்கள் தினைப்புனத்தைக் காவல் செய்தல், குறவர்கள் தேன் எடுத்தல், தினைக்கதிர்களை உண்ண வந்த கிளிகளைக் கலைப்பதற்காக பெண்கள் கவண் எடுத்துக் கல்லை வீசுதல் ஆகிய தமிழர் பழங்கால ஐந்திணை வாழ்வின் பண்பாட்டுக்கூறுகளும் இயற்கையோடிணைந்த வகையில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

சீபர்ப்பதத்தில் பக்தி அனுபவம்
   மலைவளத்தைக் கூறுவதனூடாக இயற்கையில் இறைவனைக் காணுதல், இயற்கை நிகழ்வுகளினுடாக இறைவன் பெருமைகளைக் கூறுதல், வனவாசிகளான குறவர்களினதும் வாழ்வியலை எடுத்துக்காட்டுதல், தமிழர் பண்பாட்டுச் சூழலினூடான விழுமியப் பண்புகளான ஒற்றுமை, விருந்தோம்புதல், ஒருவனுக்கு ஒருத்தி என வாழுதல் ஆகியனவெல்லாம் இப்பதிகத்தினூடாக வெளிப்படுகின்றன.

  திரிபுரம் எரித்தமை, திருமாலும் பிரமனும் அடிமுடி தேடியமை, முப்புரங்களை எரித்த முக்கட்செல்வனாகிய சிவபெருமானின் பாதங்களை அரிய திருமாலும் பிரமனும்கூட அறியமுடியாமை ஆகிய புராணக் கதை மரபுகளின் ஊடாக இறைவன் பெருமை வெளிப்படுத்தப்படுகிறது.

   ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் “சீபர்ப்பதமலையே” என்ற விளித்து, எங்கள் சிவபெருமானது பருப்பதமலை என்று பாடப்படுவதனூடாக இறைவன் வீற்றிருக்கும் தலச்சிறப்புக் கூறப்படுகிறது.

“நல்லாரவர் பலர்வாழ்தரு வயல்நாவல வூரன்
செல்லலுற வரியசிவன் சீபர்ப்பத மலையை
அல்லலவை தீரச்சொன தமிழ்மாலைகள் வல்லார்
ஒல்லைசெல வுயர்வானகம் ஆண்டங்கிருப் பாரே.”

   என்ற பதிகத்தின் இறுதிச்செய்யுள் நல்லவர்கள் பலர் வாழ்கின்றதும் வயல்களை உடையதுமான திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் எல்லோருடைய துன்பங்களும் நீங்குமாறு பாடிய இந்தத் தமிழ்ப்பாமாலைகளை பாடவல்லவர்கள் உயர்ந்த விண்ணுலக சுவர்க்கத்தை அடைந்து அங்கு வீற்றிருப்பார்கள் என்று பதிகத்தைப் படிப்பவர் பெறும் பயனைக் கூறுகிறது.

சங்கக் கவிதை மரபின் தொடர்ச்சி
   சீபர்ப்பதப் பதிகம் பொருள் அடிப்படையிலும் அமைப்பு அடிப்படையிலும் சங்கக் கவிதை மரபின் தொடர்ச்சியைக் கொண்டுள்ளது. இயற்கையோடு இணைந்த வாழ்வுமுறை, இயற்கை வர்ணணைகள், வன ஜீவராசிகள், மக்கள் (குறமக்கள்), சூளுரைத்தல், விருந்தோம்பல், ஒருவனுக்கு ஒருத்தி என்ற விழுமியப்பண்பு வலியுறுத்தப்படுதல் ஆகியனவெல்லாம் பொருள் அடிப்படையான சங்கக் கவிதை மரபின் தொடர்ச்சியாக அமைந்துள்ளன.

   அமைப்பு அடிப்படையில் நோக்கின் நூலில் பதிந்துள்ள பொருளைக்கூறுவது ‘பதிகம்’ ஆகும். இது பத்து எண்ணிக்கை கொண்ட பாடல்களின் தொகுப்பு என திருமுறைகள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு பத்துப்பாடல் தொடர்ந்துவரச் செய்யுள் அமைக்கும் மரபு சங்ககாலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. ஐங்குநூறு என்னும் சங்க இலக்கியத்தில் வேட்கைப்பத்து, வேழப்பத்து என ஒவ்வோர் திணைக்குமுரிய நூறு செய்யுட்களும் பத்துப் பத்துப் பாடல்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஐந்து திணைக்கும் ஐந்நூறு செய்யுட்கள் பாடப்பட்டுள்ளன. இதேபோல் பதிற்றுப்பத்தில் ஒவ்வொரு சேரமன்னனும் பத்துப்பாடல்களில் தொடர்ச்சியாகப் புகழ்ந்து பாடப்பட்டுள்ளனர்.

   பதிகத்தின் இறுதிப்பாடல் பதிகம் பாடியவர் பெயரையும், பாடுவோர் அடையும் பயனையும் கூறுவது. இதனை சுந்தரரும் “நல்லாரவர் பலர்வாழ்தரு வயல்நாவல வூர” என்ற அடிகளினூடாகக் காட்டுகிறார். எனவே இவையெல்லாம் சங்கப்பாடல் மரபின் தொடர்ச்சியை வெளிப்படுத்துகின்றன.

முடிவுரை
   இறைவனைத் தோழனாகக் கொண்டு யோகநெறி நின்று சாரூபமுத்தியை அடைந்த சுந்தரனின் பாசுரங்களில் இயற்கை இன்பத்தை மிக அற்புதமாக வியந்து பாடியுள்ள பல பாடல்களைத் தரிசிக்க முடியும். நாவுக்கரசர், சம்பந்தர் ஆகியோரின் பக்தி இயக்கநெறியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் அவர்களுக்கு வாரிசுரிமை பூணவும் ஒருவரை பக்தி இலக்கிய வரலாறு தந்ததெனில் அது சுந்தரர் என்றே கூறலாம். சுந்தரரின் வாழ்வும் அவர் காலத்து, பக்தி இயக்க காலமும் மிகத் தாராளமாகவே முற்பட்ட காலத் தொடர்ச்சியை மேலும் நகர்த்திச் செல்வதற்கு ஏதுவாக அமையலாயிற்று. இதனாலேயே இயற்கை இன்ப ஈடுபாட்டுடனும் தோழமையுணர்வுடனும் சந்தச்சிறப்புடனும் அவர் பாடிய பாடல்கள் சுந்தரரின் பாடல்களின்பால் ஈர்ப்பை ஏற்படுத்தி இறைவழிபாட்டையும் பக்தி இயக்க நெறியையும் முன்நகர்த்திச் செல்லக் காரணங்களாக அமைந்தன. இந்த வகையில் இயற்கையில் இறைவனைக் காணும் சீபர்ப்பதப் பதிகங்கள் சிறப்புப் பெற்று அமைந்துள்ளன.
உசாவியவை

1. ஞானசம்பந்தன், அ.ச., அடங்கன்முறை தேவாரத் திருப்பதிகங்கள் (பதிப்பாசிரியர்) கங்கை புத்தக நிலையம், சென்னை. 1998.
2. சுப்பிரமணியன், கலாநிதி. நா., நால்வர் வாழ்வும் வாக்கும், கலைஞன் பதிப்பகம், சென்னை,2002.
3. சர்மிளா சதாசிவம், “சுந்தரரின் மிஞ்சுமொழியும் அதன் உட்பொருளும்” தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ், தொகுதி 4, இந்திய ஆய்வியல் துறை, மலாய் பல்கலைக்கழகம். 2016.
4. மகாதேவன், முனைவர்.ச., “மூவர் தேவாரத்தில் இயற்கை” http://katuraitamil.blogspot.com/2013/01/blog-post_1717.html
5. http://www.tamilvu.org/library
6. http://www.shairam.org/thirumurai
(நன்றி : இயற்கையும் தமிழ்ச்சமுதாயமும் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஆய்வுக்கட்டுரைகள் – தொகுதி 1, தமிழ் உயராய்வு மையம், ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி, தமிழ்நாடு, 25.01.2019)
---





Monday, July 15, 2019

இயற்கையை உறவாகக் காணும் பண்பு – ரஜிதாவின் “மணல் கும்பி” கவிதைகள்



சு.குணேஸ்வரன்

   “ஆழ்ந்த அமைதி நிலையில் நினைவு கூரப்பட்ட உணர்ச்சிகள் கவிதைகள்” என்பர் கவிதையியலாளர். ரஜிதா இராசரத்தினமும் “மணல் கும்பி” என்ற கன்னிக் கவிதைகளோடு தன் வாழ்வனுபவங்களை ஆழ்ந்த அமைதி நிலையில் அசைபோட்டு, கவிதைகளாக்கி உங்கள் முன் தந்துள்ளார்.
வாழ்தல் ஒரு போராட்டம். அது இன்பம் தருவது, சமவேளையில் துன்பத்தையும் தருவது. அந்த அலையோட்டத்தில்தான் நாங்கள் வாழப் பழகிக் கொள்கிறோம். கவிஞர் தான் வாழும் சமூக மாந்தர்களின் வாழ்வின் ஊடாகவும், கண்டு கேட்டு வாழ்ந்து பழகிக் கொண்ட அனுபங்களின் திரட்டாகவும் இக்கவிதைகளைத் தந்துள்ளார்.

   ஏழ்மைத்துயரில் வாடும் மனிதர்கள், ஏமாற்றத்தைத் தரும் அறிந்தும் அறியாத முகங்கள், காலவோட்டத்தோடு எதிர்த்துப் போராடி வாழ்வை வெற்றிகொள்ள முனையும் மாந்தர்கள், மன இருட்டின் மாறாத வடுக்களை மூடி மறைத்து வாழத் தலைப்படும் மனித மனங்கள் என பல்வேறுவிதமாகவும் வாழ்வின் சாத்தியப்பாடுகளை எட்டமுனையும் எத்தனங்களை தன் கவிதைகளில் ரஜிதா இராசரத்தினம் தந்துள்ளார்.
நாள்தோறும் பற்றாக்குறைகளோடு வாழும் மனிதர்கள் உழைப்பின் உச்சத்தை எட்ட முடியாத அவலத்தை,

“இந்தப் புதுவருடமாவது
என் குழந்தைகளுக்குப்
புதுத்துணி வாங்கித் தருவதாக
வாக்குக் கொடுத்தேனே
அதுவும் இல்லை.”
   என அழுகின்ற இழகிய மனங்களை தன் கவிதை வரிகளில் காட்டுகிறார். பாரம்பரியத்தையும் பண்பட்ட வாழ்வையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்துவிட்டு வாழச் சபிக்கப்பட்ட மனிதர்களின் எண்ணங்களையும் கோடிட்டுக் காட்டுகிறார்.

“தொலைத்ததைத் தேடுகிறோம்
தேடியும் கிடைக்காதவை
எத்தனை எத்தனையோ?”

   என்ற வார்த்தைகளில் உள்ளமுங்கியிருக்கும் தேடல்கள்தான் எத்தனை? இந்த நிலையில்தான் இரசிக்கத் துளியளவும் திராணியற்றது இவ்வெளிர் நிலவு என மனத்துக்கு இன்பமும் குளிர்ச்சியும் தரும் நிலவை வெறுப்பாகக் கவிஞர் நோக்குகிறார்.
இயற்கையை உறவாகக் காணும் பண்பு முக்கியமானது. இது சவுக்கம் காடுகளும் மணல் கும்பிகளும் என்ற கவிதையில் வெளிப்படுகிறது.

“பரந்திருக்கும் இப்பெரும்
வெண்மணற் போர்வையில்
உருண்டு புரள்தலின் சுகத்தையும்
படுத்திருந்தே பறித்து
நாசியேறக் கனிந்திருக்கும்
நாவற்பழங்களின் சுவையையும்
இவைதான் மலைகளென
தொடர் தொடராய்
எதிர்கண்ட மணற்கும்பிகளின் பேரழகை
தினம் தின்று தீர்த்தும்
கொண்டாடி வாழ்கின்றோம்.”

   காணாமல் ஆக்கப்பட்டோரின் கண்ணீர்க் கதைகளும், புதைக்கப்பட்ட குழிகளில் இருந்து எலும்புகளைத் தோண்டியெடுக்கும் அவலமும் சமகாலக் கவிதையோட்டத்தின் தளத்தில் பயணிக்கும் கவிதைகளாகத் திகழ்கின்றன.

“மூன்று வயதில் பார்த்தது
முகங்கூட நினைவில் இல்லை.
தேடிக் கண்டுபிடிக்கக் கோரி
பல இடம் கொடுத்த
நிழல் படம் ஏராளம்.”

   அன்பும் ஆதரவும் நினைவும் தொடரும் வகையில்தான் வாழ்தலின் சுகம் இருக்கிறது. அந்த வாழ்வின் சுவை மெல்லத்துளிர்க்கும் என்பதும் பல கவிதைகளில் காட்டப்படுகிறது.


   தொடர்ந்த வாசிப்பும் தேடலும்; கட்டிறுக்கமான மொழிக் கையாள்கையும் எதிர்காலத்தில் மேலும் வலுப்படும்போது கவிதையில் பல்வேறு சாத்தியப்பாடுகளை எட்டிப்பிடிக்கும் வல்லமை வாய்க்கப்பெறுவார் என்பதற்கு சில கவிதைகள் கட்டியங்கூறி நிற்கின்றன. அவ்வகையில் “பேரன்பு” என்ற கவிதையில் வாழ்வின் ஒளியை அவாவும் முயற்சி மிக நன்றாகப் பதிவாகியுள்ளது.

“ நான் நட்ட கன்றொன்று
பற்றிப் படர்ந்து பயனறிந்து
நிழல் பரப்பி
உதிரும் இலையை உரமாக்கி
உற்ற நேரம் தரும்
ஒப்பற்ற நேசமொன்றே.”

   இதுபோன்று மனிதசாதி, ஏழையின் ஒருநாள், சவுக்கம் காடுகளும் மணல் கும்பிகளும் முதலான கவிதைகளும் கவிஞரின் கவிதை ஈடுபாட்டை நயத்துடன் எடுத்துக்காட்டுகின்றன.

   பாரதியின் கவிதைகள் முதல் இன்றைய கவிஞர்களின் கவிதைகள் வரை மொழியின் உச்சபட்ச சாத்தியப்பாடுகளை பலர் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். கவிதையின் மொழி சாட்டையடிபோல் விழவேண்டும் என்றும், அது பல பரிமாண சாத்தியங்களை எட்டவேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

   ரஜிதாவின் கவிதைகள் சமகாலத்தில் மாந்தர் எதிர்கொள்ளும் அவலங்களையும், ஆறாத காயங்களாக உறைந்து போய்விட்ட மனிதர்களின் மனப்போராட்டங்களையும், இயற்கையின் மீதான நேசிப்பையும், வாழ்வின் மீதான பிடிப்பையும் சித்திரிக்கின்றன.

   இத்தொகுப்பு முயற்சியைப் பாராட்டி, தேடலும் பதித்தலும் இலக்கிய வானில் மேலும் தொடரவேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.