- சு. குணேஸ்வரன்
இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நாவல் இலக்கியம் பற்றிய ஆரம்பநிலை ஆய்வுகள் கணிசமான அளவு மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில்லையூர் செல்வராசனில் இருந்து கலாநிதி செ. யோகராசா வரை இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள் ஈழத்து நாவல் இலக்கியம் பற்றிய பருமட்டான ஒரு வரைபை மேற்கொள்வதற்கு சான்றாக அமைந்துள்ளன.
இவ்வகையில் ஈழத்தில் தோன்றிய முதல் நாவல் தொடக்கம் அண்மைக்கால நாவல்கள் வரை எழுதப்பட்ட விமர்சனங்களையும், கட்டுரைகளையும், பல்கலைக்கழக மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நாவல்கள் தொடர்பான ஆய்வுகளையும் கவனத்தில் எடுக்கும்போது நாவல்களின் போக்கையும் அவை குறிக்கும் சமூக பண்பாட்டு அம்சங்களையும் கண்டுகொள்ள முடியும்.
இந்த அடிப்படையை வைத்துக்கொண்டு இலக்கியமும் இரசனையும் என்ற பொருளில் சில சிந்தனைகளை இவ்விடத்தில் குறித்துரைக்கலாம்.
வாசிப்புக்குப் பல்வேறு படிநிலைகள் உள்ளன. நாளாந்தச் செய்திப் பத்திரிகை வாசிப்பதிலிருந்து ஆய்வேடுகளை வாசிப்பது வரையில் இந்தப் படிநிலைகள் வேறுபட்டுச் செல்கின்றன. இலக்கிய வாசிப்பும் இந்தப் படிநிலைகளில் ஒன்றுதான். தொடர்ச்சியான வாசகன் ஓன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவுவதுபோல இந்தப் படிநிலைகளைத் தாண்டிச் சென்றுகொண்டேயிருப்பான்.
வெகுஜன வாசிப்பில் இருந்து தீவிர வாசிப்புக்கு வரும்போது பொழுதுபோக்கு என்பதில் இருந்து வாழ்க்கையை, அதன் ஏற்ற இறக்கங்களை, அதன் மானிட வரலாற்றை, சகமனிதர்களைப் புரிந்து கொள்ளும் நிலைக்கு வாசகன் கடந்தேறி வருவான். அதிகமான சந்தர்ப்பங்களில் எமது வரலாற்று ஓட்டங்களையும் இலக்கியத்திற்கு ஊடாகவே ஒரு வாசகன் கண்டு கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இங்குதான் இலக்கியம் என்பதன் பெறுமானம் என்ன? என்பதற்கான விடை கிடைக்கக்கூடும். இங்கு ரசனை என்பதும் வாசிப்பின் மூலமே உருவாகின்றது.
மேற்குறித்த நிலையை ஈழத்தில் வெளிவந்த நாவல்கள் தக்கவைத்திருக்கின்றனவா என்று ஆராய்ந்து பார்த்தல் வேண்டும்.
பொழுதுபோக்கு என்பதற்கும் அப்பால் இந்த மாந்தர்கள் கடந்து வந்த காலங்களை, வாழ்க்கைப் போராட்டங்களை, வரலாறுகளை அவை பொதிந்து வைத்துள்ளன. ஈழத்தில் வெளிவந்த பல நாவல்களில் இந்த அம்சங்களை எடுத்துக்காட்டமுடியும்.
மங்களநாயகம் தம்பையாவின் - நொறுங்குண்ட இருதயம், டானியலின் - பஞ்சமர், பாலமனோகரனின் - நிலக்கிளி, அருள் சுப்பிரமணியத்தின் - அவர்களுக்கு வயது வந்துவிட்டது, மு. தளையசிங்கத்தின் - ஒரு தனி வீடு, கணேசலிங்கனின் - நீண்ட பயணம், தெணியானின் - மரக்கொக்கு, செங்கை ஆழியானின் - காட்டாறு, அருளரின் - லங்காராணி, கோவிந்தனின் - புதியதோர் உலகம், தாமரைச் செல்வியின் - பச்சை வயல் கனவு, தேவகாந்தனின் - கனவுச்சிறை, ஷோபாசக்தியின் - கொரில்லா, நௌசாத்தின் - நட்டுமை, விமல் குழந்தைவேலின் - கசகரணம் என்று கவனத்திற் கொள்ளத்தக்க படைப்புக்களை ஈழத்து நாவல் இலக்கியத்தில் இருந்து வகைமாதிரிக்கு எடுத்துக் காட்டமுடியும்.
எமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களின்படி 1885 இல் அறிஞர் சித்திலெவ்வை மரைக்கார் எழுதிய ‘அஸன்பேயுடைய கதை’ என்ற நாவலுடனேயே ஈழத்து நாவல் வரலாறு தொடங்குகிறது என்பதில் ஆய்வாளர்கள் மத்தியில் வேறுபட்ட கருத்து இருக்கமுடியாது. கொழும்பு முஸ்லிம் நண்பன் அச்சகம் இதன் முதற்பதிப்பை வெளியிட்டது. (‘அஸன்பேயுடைய சரித்திரம்’ என்ற தலைப்பில் 1890 இல் இரண்டாம் பதிப்பு அர்ச். சூசையப்பர் அச்சுக்கூடத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது) இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஏன் முதல் நாவல் எழவில்லை என்று கேட்பதும் ‘அசன்பேயுடைய கதை’ நாவலை இருட்டடிப்புச் செய்யும் முயற்சிகளும் அவசியமில்லாத செயற்பாடுகள் எனலாம்.
இது ஒருபுறம் இருக்க ஈழத்தின் முதல் நாவல் 1856 இல் வெளிவந்த ‘காவலப்பன் கதை’ (‘Parley the Porter’ என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே ‘காவலப்பன் கதை’ என்பர்) என்று மு. கணபதிப்பிள்ளை சில்லையூர் செல்வராசனின் நூலில் எழுதுகிறார். ஆனால் அதற்குரிய சான்றாதாரங்களை கணபதிப்பிள்ளையோ பின்வந்தவர்களோ சரிவர நிறுவவில்லை. அத்தோடு இந்நூற் பிரதிகளும்கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் “கைக்குக் கிடைக்காத நூல் ஒன்றினை நாவலா நாவலில்லையா என்று எப்படிக் கூறலாம்” (1) என்று பேராசிரியர் அ. சண்முகதாஸ் கட்டுரையொன்றில் எழுதுகிறார். இந்நிலையில் ‘அஸன்பேயுடைய கதை’ யே ஈழத்தில் முதல் நாவல் என்ற கருத்து இன்றுவரை நிலைபெற்றதாக உள்ளது.
அசன்பேயுடைய கதை நாவலைத் தொடர்ந்து, 1891 இல் வெளிவந்த இன்னாசித்தம்பியின் ‘ஊசோன் பாலந்தை கதை’, 1895 இல் வந்த தி. த சரவணமுத்துப்பிள்ளையின் ‘மோகனாங்கி’ ஆகியவை முதற்கட்ட நாவல்களில் முக்கியமானவை.
1905 வரை வெளிவந்த நாவல்களை கதை நிகழிடங்கள் பிற நாடுகளைத் தழுவியது அல்லது சார்ந்தது என்றே கருதமுடிகிறது. காரணம் அந்நியர் ஆட்சிகாலமாக இருந்த காரணத்தால் அந்தக் காலத்தின் தேவைக்கு ஏற்ப இந்நாவல்கள் முதன்முயற்சியாக எழுந்துள்ளன. இந்நிலையில் இந்நாவல்கள் ஈழம் என்ற களத்தைப் பிரதிபலிக்கவில்லை என்று ஒதுக்குதல் அறிவுடைய செயலாக கருதமுடியாது. காரணம் இந்நாவல்கள் இவ்வாறு எழுந்தமைக்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளமையை வரலாற்றின் ஊடாகக் கண்டுகொள்ளலாம்.
1. குறித்த காலமும் அக்கால அரசியல் நிலையும்
2. ஆங்கிலக் கல்வியின் தாக்கம்
3. மேலைத்தேய இலக்கியமான நாவல் என்ற இலக்கிய வடிவத்தின் வரவு
4. மொழி, சமயம், பண்பாட்டு அம்சங்கள்
இவற்றை மனங்கொண்டு பார்ப்போமானால் அக்காலத்தில் எழுந்த ஆரம்ப கால நாவல்கள் ஈழம் என்ற களத்திற்கு அந்நியமான கதைகளையும் கதைக்களங்களையும் பாத்திரங்களையும் கொண்டமைந்தமையை அறிந்து கொள்ளமுடியும்.
இங்குதான் நாவல் இலக்கியத்தையும் அதன் ரசனையையும் ஒருவாறு அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. கல்வி கற்ற உயர் வர்க்க அல்லது கற்ற நடுத்தர வர்க்கத்தினரின் தேவையை நிறைவு செய்வனவாக இக்கால நாவல்களின் வரவு அமைந்திருந்தமை தெளிவாகின்றது. இது தமிழகச் சூழலில் வெளிவந்த ஆரம்ப நாவல்களுக்கும் பொருந்தும்.
‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற தமிழின் முதல் நாவலை எழுதிய வேதநாயகம்பிள்ளை அதன் முன்னுரையில் குறிப்பிடும் கருத்து இங்கு கவனத்திற் கொள்ளத்தக்கது.
“தமிழில் இம்மாதிரி உரைநடை நவீனம் பொதுமக்களுக்கு இதுவரை அளிக்கப்படவில்லை. ஆகையால் இந்நூல் வாசகர்களுக்கு ரசமாகவும் போதனை நிறைந்ததாகவும் இருக்கலாம் எனப் பெருமை கொள்கிறேன். இம்மாதிரிப் புதிய முயற்சியில் ஏதாவது குற்றங்குறைகள் இருப்பின் பொறுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” (2)
இதிலிருந்து நாவலை ‘நவீனம்’ என அழைக்கவும், அது ரசமாகவும் (ரசனை மிகுந்ததாக) போதனை நிறைந்ததாகவும் இருக்கவேண்டும் என்ற எண்ணமும் வேதநாயகம்பிள்ளையிடம் இருந்தமை தெளிவாகின்றது.
1905 ற்குப் பின்னர் ஈழத்தைக் களமாகக் கொண்ட நாவல்கள் வெளிவரத் தொடங்குகின்றன. (சி. வை சின்னப்பபிள்ளையின் ‘வீரசிங்கன்கதை அல்லது சன்மார்க்கஜயம்’) ஒருவிதத்தில் ‘போலச் செய்தல்’ என்பதும் இங்கும் தொடர்கிறது. ஈழப்படைப்பாளிகள் ஏற்கெனவே ஆங்கிலத்தில் இருந்த நாவலுக்குரிய வடிவத்தைப் பயன்படுத்தி தமது கதையை சொல்லத் தொடங்குகிறார்கள். இதற்கு எமது தமிழ் மரபில் நன்கு ஊறிப்போன காவியமரபு கைகொடுக்கிறது. இக்காலத்திற்குப் பின்னர் வருகின்ற நாவல்கள் ஈழத்தைக் களமாகக் கொண்டிருந்தாலும் கற்பனையும் மர்மமும் திருப்பங்களும் நிறைந்தவையாக வந்துள்ளன.
இங்கும்கூட அடுத்தகட்ட ரசனை எவ்வாறு வருகின்றது என்பது நோக்கவேண்டியுள்ளது.
“கதைகூறும் நோக்கமும் சில இலட்சியப் பாத்திரங்களை படைத்துக் காட்டும் நோக்கமும் ஆரம்ப காலத்தில் நாவலாசிரியர்களிடையில் நிலவியமை அடுத்து வரும் காலப்பகுதியில் அற்புதச் சம்பவங்களைச் சுவைபட பெருக்கிக் கூறவும் வீரசாகசத் துப்பறியும் சிங்கங்களைப் படைத்து மர்மப்பண்பு, வரலாற்றுக் கற்பனை, தத்துவச் சார்பு, சமூகப்பார்வை, முதலான பல்வேறு பண்புகளிலும் நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆங்கிலம் முதலிய பிற மொழிகளில் உள்ள கதைகளைத் தழுவியும் தமிழாக்கியும் எழுதும் வழக்கமும் தோன்றிவிட்டது, இவற்றுள் சமூகப்பார்வையும் தத்துவச் சார்புமே தரமான படைப்புக்களைத் தந்தன. எனினும் அன்றைய கால வாசகர் மத்தியில் சம்பவச் சுவையுடன் கூடியனவும் மர்மப் பண்புடையவுமான கதைகளுக்குப் பெரு வரவேற்பிருந்ததாக ஊகிக்க முடிகிறது” (3)
உண்மையில் சமூகத்துடன் தொடர்புபட்ட நடப்பியல்புகளோடு ஒட்டி எழுந்த ஈழத்து நாவல் என்பது ‘நொறுங்குண்ட இருதயம்’ (1914) நாவலுடனே தொடங்குகிறது. இங்கு மங்களநாயகம் தம்பையாவின் நாவலுக்கு பல முக்கியத்துவங்கள் இருப்பதை அவதானிக்கலாம்.
1. சமூகத்தின் நடப்பியல்போடு தொடர்புபட்ட படைப்பு
2. முதற்பெண் நாவலாசிரியை மங்களநாயகம் தம்பையா என்ற வரலாற்றுப் பதிவு
3. காலமாற்றம், சமூக மாற்றத்தை எதிர்கொள்ளுதல்
ஆகிய பண்புகளால் நொறுங்குண்ட இருதயம் நாவலுக்கு முக்கியத்துவம் உண்டு. இந்த ஓட்டம் ஏறத்தாழ 1940 கள் வரை ஈழத்தில் தொடர்கிறது. காவியத்தின் தொடர்ச்சியான பண்பினைக் கொண்டிருந்த இந்நாவல்களின் உள்ளடக்கம் காதல், வீரசாகசம், வரலாறு, துப்பறிதல், மர்மம், சமூகக் குறைபாடு, என அமைந்திருந்தாலும் ஏறத்தாழ 1940 கள் வரை ஈழத்தில் எழுந்த நாவல்கள் அறப்போதனை செய்வதையே முதன்மையாகக் கொண்டிருந்தன என கலாநிதி செ.யோகராசா (ஈழத்துத் தமிழ் நாவல் வளமும் வளர்ச்சியும், 2008) குறிப்பிடுவார்.
இந்நிலையில் 40 களின் பின்னரே முக்கியமான மாற்றங்கள் ஈழத்து நாவல்களில் எழத் தொடங்குகின்றன. குறிப்பாக பிரதேசப் பண்பாட்டை நோக்கி பல நாவல்கள் வரத்தொடங்குகின்றன. இது 1950 முதல் 70 வரையும் யதார்த்தபூர்மான சமூக அரசியல் பிரச்சினைகளை ஆழமாக நோக்கும் பண்புடைய நாவல்கள் வரை நகர்கின்றன. இக்காலத்தில் எழுந்த நாவல்களை
“சமுதாய உணர்வு மேலோங்கியும் அரசியல் பொருளாதாரப் பார்வை சிறந்தும் காணப்படும் நாவல்கள் பல தோன்றிய இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி ஈழத்தமிழ் நாவலிலக்கிய வரலாற்றில் புதுயுகம்” (4) என சி. தில்லைநாதன் குறிப்பிடுவார்.
1. அரசியல் பொருளாதாரப் பார்வை தொடர்பானவை - இளங்கீரன், கணேசலிங்கன்
2. சாதியம் தொடர்பான பிரச்சினைகளை சித்திரித்தவை – எஸ். அகஸ்தியர், செ. கணேசலிங்கம், டானியல்
3. மலையக மக்களின் வாழ்வை சித்திரித்தவை. – கோகிலம் சுப்பையா, நந்தி, தெளிவத்தை ஜோசப்
4. பிரதேச பண்புடையவை – பாலமனோகரன், அருள் சுப்பிரமணியம், எஸ்.பொ,
5. வரலாற்றுப் பண்புடையவை – வ.அ. இராசரத்தினம்
6. பொழுதுபோக்கு மற்றும் குடும்ப நாவல்கள் - அதாவது சமூகப் பிரக்ஞையின்றியும் ஆசிரியரின்ஆளுமையின்றியும் வெளிவந்த நாவல்கள்.
(மேற்குறிப்பிட்ட வகைப்பாடு சி. தில்லைநாதனின் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது)
இவ்விடத்தில் குறிப்பிடவேண்டிய மற்றொரு அம்சம் இந்நாவல்கள் எழுவதற்கு களம் அமைத்த வெளியீட்டு முயற்சிகள். குறிப்பாக 1971 இல் தென்னிந்திய சஞ்சிகைகள் மற்றும் நூல்கள் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை அடுத்து அதற்கு மாற்றாக ஒரு பதிப்புச் சூழலை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. வீரகேசரிப் பிரசுரம் (1972 இல் தொடங்குகிறது) ஜனமித்திரன் பிரசுரம் ஆகியவற்றுக்கு ஊடாக ஒரு எழுத்துச்சூழல் ஊக்குவிக்கப்படுவதோடு பதிப்புச்சூழலும் கட்டியெழுப்பப்படுகிறது. இதனூடாகவே சமூகத்தில் வாசிப்பைப் பரவலாக்கும் முயற்சியும் வரத்தொடங்குகிறது.
ஈழத்து நாவல் வரலாற்றில் 70 களில் இந்த மாற்றம் இரண்டு விதமான ரசனை வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் பொழுதுபோக்கு நிறைந்த வெகுஜன வாசிப்புக் கலாசாரத்தை ஏற்படுத்துகின்றது. (50 களின் பின் வருகின்ற கல்கியின் செல்வாக்கு முக்கியமானது) மறுபுறம் சமூக நோக்குடைய யதார்த்தபாணி நாவல்களை நோக்கிய ரசனை வேறுபாட்டை நோக்கியும் வாசகர்களை நகர்த்துகின்றது. இங்குதான் மேற்குறிப்பிட்ட மண்வாசனை மற்றும் பிரதேசப் பண்பாட்டை வலியுறுத்தும் நாவல்கள் வந்து சேர்கின்றன. பாலமனோகரனின் ‘நிலக்கிளி’ தண்ணீரூற்றுப் பிரதேசத்தையும், செங்கையாழியானின் ‘வாடைக்காற்று’ நெடுந்தீவுப் பிரதேசத்தையும் , வ. அ. இராசரத்தினத்தினத்தின் ‘ஒரு வெண்மணற்கிராமம் காத்துக்கொண்டிருக்கிறது’ ஆலங்கேணிப் பிரதேசத்தையும் , தெணியானின் ‘விடிவை நோக்கி’ வடமராட்சிப் பிரதேசத்தையும், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘தில்லையாற்றங்கரை’ அக்கரைப்பற்றுப் பிரதேசத்தையும், எஸ். ஏ. உதயனின் ‘வாசாப்பு’ மன்னார்ப் பிரதேசத்தையும் பதிவுசெய்து வைத்துள்ளன.
மேற்குறிப்பிட்ட பிரசுர வாய்ப்பு ஈழத்து நாவலிலக்கிய வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது (வீரகேசரி, ஜனமித்திரன் வெளியீடுகள் பற்றிய மாறுபட்ட கருத்துக்களும் உள்ளன) என்பதை இன்று நுண்மையாக நோக்கும்போது புரிந்து கொள்ளமுடிகிறது. பொழுதுபோக்கில் இருந்து தீவிர வாசிப்புக்குரிய களத்தினை இவ்வெளியீட்டு முயற்சிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
1980 கள் முதல் இன்றுவரை ஈழத்து நாவல் இலக்கியம் இன்னொரு தளத்தில் பயணிப்பதாக கூறலாம். இக்காலம் முன்னைய காலங்களைவிடவும் அரசியல் ரீதியாகவும் சமூகரீதியாகவும் பல மாற்றங்களை எதிர்கொண்ட காலமாக விளங்குகின்றது. விடுதலைப்போராட்ட உணர்வும் அது தொடர்பான எழுச்சியும் வீழ்ச்சியும் நிறைந்த காலங்களைப் பதிவுசெய்த காலமாக கடந்த 30 வருடகாலம் விளங்குகின்றது. இங்கு எழுந்த நாவல்கள் குறிப்பாக தேசிய இனப்பிரச்சினை, பெண்ணிலைவாதம், புகலிட வாழ்வனுபவம், ஆகியவற்றை முதன்மையாகப் பேசிய காலமாக விளங்குகின்றன.
இக்காலத்தில் எழுந்த கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’, செழியனின் ‘ஒரு மனிதனின் நாட்குறிப்பு’, மலரவனின் ‘போருலா’ ஆகிய படைப்புக்கள் தனித்து நோக்கவேண்டியனவாகும். இக்காலத்தில் எழுந்த ஏனைய நாவல்களில் இருந்து இவை வேறுபட்டன. இங்கு நாவல், கலையாக நோக்கப்படாமல் வாழ்வை எழுதுதலாக நோக்கப்பட்டது. உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் காலத்தையும் நெருக்கடியையும் பதிவு செய்தலே இங்கு முக்கியமானதாக இருந்துள்ளது.
இந்த நெருக்கடிகளுக்கு அப்பால் குறித்த காலங்களும் மக்களின் இக்கட்டுக்களும் மிகுந்த கலைநயத்துடன் பதிவு செய்த வரலாறுகளும் உள்ளன. அவை தனித்து நோக்கவேண்டியவை. குறிப்பாக 80 களின் பின்னரான நாவல்களின் பண்புகளையும் அவற்றின் புதிய போக்குகளையும் பற்றிய ஆரம்ப வரைபை செ. யோகராசா செய்துள்ளார்.
எடுத்துக்காட்டாக 2000 இல் வெளிவந்த முல்லைமணியின் ‘கமுகஞ்சோலை’ பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஆங்கிலேயரின் நிர்வாகத்திற்கு எதிராக குரலெழுப்பிய முல்லைத்தீவின் தண்ணீரூற்றுப் பிரதேச மக்களது வாழ்க்கை பற்றிச் சித்திரிக்கின்றது. இது சமூக வரலாற்று நாவலாக அமைந்துள்ளது என செ. யோ குறிப்பிடுவார்.
இதேபோல புகலிட நாவல்கள் வித்தியாசமான வாழ்நிலை அம்சங்களை அழகாக எடுத்துக்காட்டுகின்றன. தாயக வாழ்வனுபவம், புகலிட வாழ்வனுபவம், வித்தியாசமான பண்பாடு, அந்நியமாதல், நிறவாதம் என ஈழத்து நாவல்களில் இருந்து சற்று மாறுபட்ட கதையம்சங்களை முன்வைக்கின்றன.
ஒரு இலக்கியப் படைப்பு எவ்வாறு ஒரு சமூகத்தைப் பாதிக்கின்றது என்பதையும் அச்சமூக மாந்தர்களின் சிந்தனையிலும் ஆழ்மனத்திலும் அழுத்தமான பாதிப்பை அது எவ்வாறு ஏற்படுத்துகின்றது என்பதையும் பார்ப்போமானால்
“இலக்கிய வாசகர்கள் சமூகத்தில் அறிவார்ந்த மையத்தில் இருப்பவர்கள் சமூகத்தின் பற்பல தளங்களைச் சார்ந்து சிந்திப்பவர்கள். செயற்படுபவர்கள் அவர்களைப் பாதிக்கும் இலக்கியம் அவர்கள் வழியாக சமூகம் நோக்கி விரிகிறது. அந்நிலையில் தன் வாசகர்களில் ஆழமான பாதிப்பை உருவாக்கும் படைப்பே சிறந்த சமூகப் பங்களிப்பை செலுத்த இயலும். சிறந்த கலைப்படைப்புகளின் பாதிப்புதான் ஆழமானதாகவும் நீடித்ததாகவும் இருக்கும்.” (5)
இந்த வகையில் அறிவுத்துறைகளை விடவும் ஆக்க இலக்கியத்துறையாகிய நாவல் இலக்கியம் உலக வரலாற்றையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாக விளங்கியுள்ளதையும் வரலாற்றில் நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். ஏனெனில் அறிவுத்துறை மூளையால் இயங்க ஆக்க இலக்கியத் துறை உணர்ச்சியால் இயங்குகின்றது. இவ்வகையில் ஒரு மனிதனின் மனத்தை நல்ல வழியில் செலுத்துவதற்கு இலக்கியம் உதவுகிறது என்று கூறலாம். அது மனிதகுல வாழ்க்கையையே நல்ல வழியில் மாற்றியமைப்பதற்கு முக்கிய பங்காற்றுகின்றது. இங்குதான் இலக்கியம் என்பதும் அதன் ரசனை என்பதும் அதன் பெறுமானம் என்ன என்பதும் ஒன்றுபடுகின்றன.
எனவே தொகுத்து நோக்கினால் ஈழத்து நாவல்கள் காலத்துக்குக் காலம் ஏற்பட்ட அரசியல் சமூக பண்பாட்டு மாறுதல்களுக்கு ஏற்ப அந்தக் காலங்களையும் வாழ்வையும் பதிவுசெய்து வைத்துள்ளன. அந்தப் பதிவுகள் மாறுகின்ற காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டிருந்த மாந்தர்களின் இரசனை வேறுபாட்டையும் எடுத்துக்காட்டுவனவாக அமைந்துள்ளன.
(02.09.2013 இல் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் இடம்பெற்ற வடமாகாண தமிழ் இலக்கியப் பெருவிழா ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
---
அடிக்குறிப்புகள்
1) சண்முகதாஸ். அ : 2008, ‘சித்திலெவ்வை மரைக்காரின் அஸன்பே சரித்திரம்’,
தமிழ் நாவல்கள் ஒரு மீள்பார்வை, கொழும்பு, லங்கா புத்தகசாலை, ப 81.
2) வேதநாயகம்பிள்ளை : பிரதாப முதலியார் சரித்திரம், முன்னுரை.
3) சுப்பிரமணியன். நா : 1977, “ஆரம்பகாலத் தமிழ் நாவல்கள்”, தமிழ்நாவல்
நூற்றாண்டு விழா ஆய்வரங்கு, தட்டச்சுப்பிரதி, யாழ்ப்பாணம், இலங்கைப்
பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம். ப 8
4) தில்லைநாதன். சி : 1977, “ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் - ஒரு பொதுமதிப்பீடு”, தமிழ்நாவல் நூற்றாண்டு விழா ஆய்வரங்கு, தட்டச்சுப்பிரதி, யாழ்ப்பாணம், இலங்கைப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம்.
5) ஜெயமோகன் : நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், சென்னை, உயிர்மை பதிப்பகம், ப 82.
உசாவியவை
1. இரகுநாதன் மயில்வாகனம் கலாநிதி: 2004, ஈழத்துத் தமிழ் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள், கொழும்பு, தென்றல் பப்ளிக்கேஷன்.
2. சுப்பிரமணியம் நா : 1978, தமிழ் நாவல் இலக்கியம், யாழ்ப்பாணம், முத்தமிழ் வெளியீட்டுக் கழகம்.
3. செல்வராசன் சில்லையூர் : 2009 இரண்டாம் பதிப்பு, ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி, சென்னை, குமரன் புத்தக இல்லம்.
4. மௌனகுரு, சித்திரலேகா, நுஃமான் : 1979, இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம், கல்முனை, வாசகர் சங்கம்.
5. யோகராசா. செ கலாநிதி : 2008, ஈழத்துத்தமிழ் நாவல் வளமும் வளர்ச்சியும், சென்னை, குமரன் புத்தக இல்லம்.
6. ஜெயமோகன் : 2007, நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், சென்னை, உயிர்மை பதிப்பகம்.
7. ………………: 1977, தமிழ்நாவல் நூற்றாண்டு விழா ஆய்வரங்கு, தட்டச்சுப்பிரதி, யாழ்ப்பாணம், இலங்கைப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம்.
நன்றி - பதிவுகள்