Friday, June 17, 2022

ஈர மண்சுவரில் அப்பிய கையடையாளம் - வாசுதேவனின் “என் புழுதி ரசம்” கவிதைகளை முன்வைத்து…


சு. குணேஸ்வரன்

னித வாழ்வின் நுண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலை கலை இலக்கியங்கள் கொண்டமைந்துள்ளன. அவற்றுள்ளும் கவிதைக்கலை மிக நுட்பமானது. எழுத்துக்கள் சொற்களாகி சொற்களில் உணர்வுகளைத் தேக்கி வைக்கக்கூடிய அற்புத ஆக்கக் கலைகளில் ஒன்று கவிதை.

வாசுதேவன் 28 வருடங்களாக வாழ்க்கை என்ற அனுபவக்கல்லை சொற்கள் என்ற உளி கொண்டு உணர்வுள்ள கவிதைச் சிலையாக வடித்துள்ளார். பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோது 1986 இல் “என்னில் விழும் நான்” என்ற தொகுப்பை மல்லிகைப் பந்தல் வெளியீடாகக் கொண்டு வந்தவர். 1993 இல் “வாழ்ந்து வருதல்” என்ற தொகுப்பு வெளிவந்தது. “என் புழுதி ரசம்” என்ற இத்தொகுப்பு 2013 இல் இருந்து எழுதியவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்டமைந்துள்ளது.

தொகுப்பின் தலைப்பு என் புழுதி ரசம். ‘ரசம்’ என்பது மூலிகைகள் சேர்த்து ஆக்கப்படும் கறிவகையைச் சேர்ந்தது. அது உடலில் ஏற்படும் கோளாறுகளைத் தீர்க்கக் கூடியது. தமிழ் இலக்கியமும் ‘திரிகடுகம்’ என்று சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. நூலின் அட்டைப்படம் வேர்கள், பூக்கள், இலைகள் கொடிகளுடன் கூடிய ரசம் வைப்பதற்கு மூலிகைகள் சேர்ப்பதுபோன்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது. அட்டைப்படத்தை ஓவியை கமலா வாசுகி வரைந்துள்ளார். கவிதைகளுக்கு வரையப்பட்ட ருத்ராவின் கறுப்பு வெள்ளை ஓவியங்களும் அர்த்தம் பொதிந்தவையாக அமைந்துள்ளன.  இவ்வகையில் கிராமிய வாழ்வுடன் கூடிய புழுதி வாசத்தை வெளிப்படுத்தக்கூடிய அழகியல் உணர்வுடன் நூல் முகப்பும் பெயரும் அமைந்துள்ளதைக் குறிப்பிடலாம்.

கடந்துபோன வாழ்வின் கோலங்களையும் கடந்து செல்லவேண்டிய காலங்களையும் இயற்கைக்கு ஊடாகவும் மனித மனங்களின் செயற்பாடுகளுக்கு ஊடாகவும் இக்கவிதையில் வாசுதேவன் பதிவு செய்திருக்கிறார்.

 “எப்படிப் பார்த்தாலும்

ஓவ்வொருத்தரும்

ஏதோவொரு

தூண்டில் போட்டுவிட்டு

காத்துக் கொண்டுதான்

இருக்கிறோம்.

……….

ஒன்றும் அகப்படவில்லையே

என்பதில்

ஒரு வருத்தமும் இல்லை.

என்கூடை

நிறைந்து போயுள்ளது.

உயிர்த்துடிப்பு மிக்க

பொழுதுகளால். (தூண்டில், ப.13)

என்று வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளைப் பாடுகிறார். ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து இப்படித்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் மாபெரும் மீன் அகப்படவில்லை என்று இக்கவிதையில் தொன்மத்தைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.

அந்த எதிர்பார்ப்புகளை உயிர்த்துடிப்புள்ள பொழுதுகளால் நிரப்பி வைத்து, கிடைத்த வாழ்க்கைக்காகத் திருப்திப்படும் மனத்தைக் காட்டுகிறார். இன்றைய மனிதர்கள் நிறைவேறாத எதிர்பார்ப்புகளோடு காத்திருந்து காத்திருந்து தங்களை இழந்து வாழ்வை முடித்துக் கொள்ளும் யதார்த்தத்தை இக்கவிதை நினைவுபடுத்துகிறது.



“ஒன்றின்பின் ஒன்றாய்

விரையும் வாகனங்கள்

அள்ளிச் சரித்து விடும் காற்றில்

இழுபட்டு

தத்தளித்துப் பின்

விடுபட்டு

தனது இடம் வந்து

மீண்டும் மீண்டும்

நிலையெடுத்து விடுகிறது

சாலை ஓர

வாழை மர இலைகள்” (ப.10)

வாழ்க்கையும் இப்படித்தான். எம்மை மிஞ்சிய பல்வேறு காரணிகளால் இழுபடவும், தத்தளிக்கவும் பின்னர் மிகப் பிரயத்தனப்பட்டு மீளவும் தொடங்கிய இடத்திலேயே நிற்கவும் பழகியிருக்கிறது. இதற்கு கொஞ்சம் தைரியமும் வேண்டும். இல்லாவிட்டால் காற்றில் இழுபட்டு சரிந்து விழும் வாழை மரங்களாய் நாமும் எம் வாழ்வில் சரிந்து விழநேரிடும் என்ற வாழ்க்கை உண்மையை மிகச் சாதாரணமாக அன்றாடம் நாம் காணும் காட்சிகளின் ஊடாகக் காட்டுகிறார்.

ஒருநாள் வாழ்வு இந்த மனத்தை ஒர் அழுக்குப் பையாக்கி விடுகிறது. அவ்வளவு அழுக்குகளும் படிப்படியாக மனத்தில் ஏறி உட்கார்ந்து பாரமாகி விடுகின்றன. அந்த அழுக்குகள் எவை எவை எனக் கவிஞர் சொல்லவில்லை. எமது உரையாடல்களில், செயற்பாடுகளில், நினைவுகளில், குழிபறிப்புகளில் எல்லாம் இந்த அழுக்குகள் நிரம்பியிருப்பதாகக் கருதலாம். அதை மிக அழகான படிமமாக வெளிப்படுத்துகிறார்.

“மனதை

இரவுக்குள் ஊற வைத்து

தோய்த்துக் கழுவி

தூய பஞ்சுப் பொதியாக்கி,

ஒவ்வொரு

காலைப்பொழுதும்

என்னிடம்

கையளித்துவிட்டு போகிறது

தூக்கம்.

 

எப்படியும்

மாலையாவதற்குள்,

அழுக்கு மண்டிய

எண்ணெய்ப் பிசுக்கேறிய

சாக்குத் துண்டாகி விடுகிறது

அது!

 

பத்திரமாய் வைத்திருக்க

ஒரு இடத்தைத்தானும்

விட்டுவைக்கவில்லையே இங்கு” (ப.16)

 

பசியையும் ஏழ்மையையும் வென்றால்தான் நாங்கள் வாழ்வின் சுவையை அதன் அருமையை அனுபவிக்க முடியும். இதனை பறவையின் பறப்பு முடியும் நிலைமையுடன் காட்டுகிறது ஒரு கவிதை.

“பறவைகளின் வானம்

பசி தொடங்குமிடத்தில்

முடிந்து விடுகிறது” (ப.43)

இக்கவிதையை பறவைகளுடன் மட்டுப்படுத்தாமல் மனித வாழ்க்கையுடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். வாசுதேவனின் கவிதைமொழி இயற்கைக் காட்சிகளின் ஊடாக ஜீவராசிகளின் ஊடாக, தான் சொல்ல வந்ததை அழகியல் நுண்ணுணர்வுடன் சொல்லிவிடுகிறது. எனவே; இயற்கை, பிராணிகள் எல்லாவற்றையும் வெறுமனே அவற்றைக் குறிக்க மட்டும் அல்லாமல் மனித வாழ்வுடன் தொடர்புபடுத்திப் பார்க்கவும் கவிதை வழிப்படுத்துகிறது. 

போரின் காயங்கள் அல்லது யுத்தத்தின் பின்னரான மனவடுக்களைப் பேசும் கவிதைகளையும் இங்கு பார்க்கலாம். “நியாயம் என்ன” என்ற கவிதையில் இதனைப் பேசுகிறார். அப்போது எல்லாவற்றையும் நாம் எதிர்கொண்டோம். அதன் நேரடிப் பாதிப்புகள் எம்மைத் தாக்கின. மனத்தைப் பலவீனமடையச் செய்தன. இப்போது அந்த நிலைமைகள் மாறிவிட்டாலும் வேறொரு வடிவத்தில் அந்த இடையூறுகளை எதிர்கொள்வதாகக் கவிஞர் எழுதுகிறார். 

“இப்போதெல்லாம்

சுற்றிவளைப்புகள் இடம்பெறுவதில்லை..

ஆனால்

வெளியே வந்துவிட வேண்டுமென்று நான்

அங்கலாய்ப்பதன் நியாயம் என்ன?

 

இப்போதெல்லாம்

முகமூடிகள் வந்து தலையாட்டுவதில்லை...

ஆனால்

யாரோ என்னை நோட்டமிடுவதாய்

அவ்வவ்போது நான்

உணர்வதன் நியாயம் என்ன?” (நியாயம் என்ன?,ப.11)

மேலும்; கைது செய்யப்படுதல், சோதனை செய்தல், நாய் குரைப்பு, துப்பாக்கி வேட்டுக்கள், விமானக் குண்டுவீச்சு முதலானவை நினைவுக்கு வருவதாகக் கூறுகிறார். அவை வெவ்வேறு வடிவத்தில் வந்து அச்சமூட்டுகின்றன.

இயற்கை தொடர்பாக எழுதிச் செல்லும் கவிதையில் மிக அநாயாசமாகவும் பொருத்தமாகவும் யுத்தம் ஏற்படுத்திய தீராத காயத்தை “கச்சான் அடிக்குது” என்ற கவிதையில் எழுதுகிறார்.

“காற்று கொந்தளிக்கிறது

புழுதி நுரைக்கிறது

தள்ளாடும் இலைகள்

அள்ளுண்டு போகின்றன.

ஓலைக்கூரைகளுக்கு

பேன் பார்த்து விடுகிறாள்

காற்றுப் பெண்.

 

பல் வரிசை

நாக்கெல்லாம் தெரிய

சிரிக்கிறது

தென்னை உச்சி.

 

காற்றோடு கிளைக்கு

கயிறிழுத்தல் போட்டி

 

இலைகள் கும்பிடுகின்றன.

ஆம்

கும்பிடுகின்றன.

 

கும்பிடக்

கும்பிடக்

கும்பிடத்தானே

இழுத்துக் கொண்டு போய்ச்

சுட்டார்கள். (கச்சான் அடிக்குது, ப.15)

இக்கவிதை போரின் வலியை அதனால் உறவுகளுக்கு ஏற்பட்ட இழப்பை முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிடுகின்றது. “வாழ்ந்து வருதல்” தொகுப்புக்கு எம். ஏ நுஃமான் எழுதிய முன்னுரையை இக்கவிதையோடு பொருத்திப் பார்க்கலாம்.

“நம் வாசல் படியில் மட்டும் அல்ல. உலகின் எல்லா மூலைகளிலும் இன்று துப்பாக்கியினால் அடிமை கொள்ளப்பட்ட மனிதனை விடுவிப்பதற்கு நமது கவிதை செய்யக்கூடியது என்ன? அதனால் ஏதும் செய்யமுடியுமா? இந்தக் கேள்விதான் இப்போது எனது மனதை ஆக்கிரமித்திருப்பது. மனித உயிர்ப்புப் பற்றிய அரூபமான படிமங்களால் நாம் இதனைச் சாதிக்க முடியுமா?” என்று ஆயுதம் எப்போதும் இரக்கம் பார்ப்பதில்லை. என்ற கூற்றை வெளிப்படுத்துகிறார்.

இயல்பான இயற்கையை தன் வாழ்வோடு பொருத்திப் பார்த்த கவிஞன் அதே இயற்கைக்கு ஊடாகவே தீராத வடுவான வலியையும் பாடிவிடுகின்றான். இது போர் தந்த வலிகளில்  மிக இயல்பாக மனதைத் தாக்கும் சிறந்த கவிதைகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

நட்பையும் பகையையும்கூட அர்த்தமுள்ள கவிதையாகக் காட்டியுள்ளார். நட்பின் கொடிகள் உன்னைச் சுற்றியபோது நீ உன்னை மறந்து கிறங்கிப் போயிருந்தாய். அந்தக் கொடிகள் புடைத்து இறுகியபோது உனக்கு உண்மை தெரிந்ததா என்கிறார்.

“படர்தலின் கிளர்வில்

உட்சுகம் பெருகியதா

இலைகள் அசைந்து வருட

கண்கள் சொருகியதா

நட்பின் தேன் தொட்டு

நாட்களை

உண்டபடி இருந்தாயா

திடீரென

பனையைச் சுற்றும் ஆலங்கிளையாய்

கொடிகள்

புடைத்து விறைத்து இறுகியபோது

என்ன நினைத்தாய்? (ப.35)

என்று நட்பையும் பகையையும் எதிரெதிரில் வைத்துப் பாடுகிறார். ஒற்றுமையின் பலத்தை ஒர் இயற்கைக் காட்சிக்கூடாகக் காட்டுகிறார்.

“தென்னையின்

தலை குழப்பி விளையாடும்

அதே காற்று

பனை மரத்திடம்

பணிந்துதான் போகிறது.” (ப.5)



படைப்புகளில் மிக அரிதாகவே சூழலியல் சார்ந்த சமூகச்செய்திகள் பதிவாகின்றன. மனிதர்கள் சூழலியல் மீது நிகழ்த்தும் அச்சுறுத்தலை பல கவிதைகள் பதிவாக்கியுள்ளன. தொட்டியில் நிரப்பி வைத்திருக்கும் தண்ணீரைப் பார்த்து செத்துப்போன தண்ணீர் என்று எழுதுகிறார் கவிஞர்.  ஏனெனில் நீர் உயிருள்ளது. அது ஓடும், பாயும், தானாக ஊறும். நீராதாரங்களை மனிதர்கள் அழித்துக் கொண்டிருக்கும் சூழலியற் பிரச்சினை பற்றிய சிந்தனையை இக்கவிதை முன்வைக்கிறது. 

அருவி நீர்

தானாய் பாயும்

நதி நீர்

தானாய் ஓடும்

கிணற்று நீர்

தானாய் ஊறும்

நாமாய் ஏதும்

செய்தாலன்றி

அசையா திருக்கும்

தொட்டி நீர்

 

உயிருள்ள தண்ணீரை

விட்டு விலகி வந்து

செத்துப்போன தண்ணீருடன்

வாழ்க்கை நடத்துகிறோம். (ப.39)

மரபிலக்கியங்கள் இயற்கையின் அழகையும் வளத்தையும் ஏராளமாகப் பதிவுசெய்து வைத்துள்ளன. ஆனால் இன்றைய கவிஞர்களின் பார்வை அவற்றிலிருந்து மாறுபட்டுள்ளதையும் கவனத்திற் கொள்ளவேண்டும். நீரையும் மரங்களையும் இன்றைய சூழலியற் கண்ணோட்டத்துடன் நோக்கவேண்டிய தேவையை இக்கவிதைகள் வலியுறுத்துகின்றன.

“தண்ணீரால்

திரும்பி வர

இயலாது

அதனால்

அது

போகும் வழியெங்கும்

மரமாகி நின்று விடுகிறது.

மானாகி ஓடி விடுகிறது.” (தண்ணீர் பயணம், 96)

 

 “மேகமென்றேன்

சொல்கிறீர்கள்

மிதக்கும் மரங்களை” (ப.71)

 

“நகரவே மட்டோமென்ற

மரங்களின் பிடிவாதம்

வரவைத்தே விடுகிறது

மழையை” (ப.87)

வாழ்க்கையின் நெருக்கடிகளை தோல்விகளை ஏமாற்றங்களைப் பாடியவர் மனிதர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகவும் பாடுகிறார். அது மிக முக்கியமானது. படைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று நம்பிக்கையூட்டுவது. அந்த நம்பிக்கைதான் துன்பத்திலிருந்து விடுதலையைப் பெற்றுத் தரக்கூடியது. இங்கு நட்டநடுக் காற்றில் பூத்திருக்கும் ஒற்றைப்பூவை நம்பிக்கையின் குறியீடாகக் காட்டுகிறார்.

“நட்டநடுக் காட்டில்

தனித்துப்போய் நிற்கும்

சின்னஞ்சிறு செடியும்

தன் ஒற்றைப் பூவை

பூத்தபடிதான் நிற்கிறது.” (ப.21)

 

“பூக்கும் உயரம்வரை

வளர்ந்து முடிக்கும்

புல்லையா சிறிதென்று

சொல்கிறாய்” (ப.34)

 

“உதிர்ந்தவற்றை

குனிந்து பார்க்க நேரமின்றி

நிமிர்ந்தே நிற்கிறது

மரம்

அடுத்த பூவிற்கு” (ப.37)

வாழ்வின் யதார்த்தத்தையும் அதே அழகியல் உணர்வுடன் வெளிப்படுத்துவது நோக்கத்தக்கது.

“இனி

இரவுக்குள்

நான் வாடி உதிரும்வரை

வாழ்வின் கிளையில்

மலர்ந்திருப்பேன்.” (ப.22)

இயற்கை மீதான கவிஞரின் அலாதிப் பிரியத்தை ‘காற்று’ என்ற கவிதையில் காட்சிப் படிமமாக வெளிப்படுத்துகிறார்.

“தோப்பினுள் நுழைந்த காற்று

மாமர இலைகளில்

கதைகதையென்று

கதைத்து

வேம்பின் இலைகளில்

சிரிசிரியென்று

சிரித்துக் கொட்டி,

தென்னோலைகளில்

வயலின் இசையாகி,

சருகுகளில்

தொண்டை செருமி,

தோப்பிலிருந்தும்

வெளியேறி

வானில் கலக்கிறது.

ஓசை உடலுதிர்த்த

வெறும் காற்றாக!” (காற்று, ப.6)

இங்கு எமக்கு முன்னால் ஒருவர் கதைத்து, சிரித்து, தொண்டை செருமி வெளியேறுவது போன்ற காட்சியைக் கண்முன் நிறுத்துகிறார். இவ்வாறு படிம அழகியல் அமைந்த அர்த்தப்பாட்டுடன் கூடிய பல கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

“காலையின்

குளிர் காற்றுத் திரையை

காகங்கள் கிழிக்கின்றன.

…..

உள் விழித்து

உடல் விழித்து

அன்றைய நாளுக்காய்

துயில் ஓட்டினை உடைத்து

வெளியே வருகிறேன்.”(ப.22)

இங்கு நித்திரையை, எம்மை மூடியிருக்கும் ஓடாகக் காட்சிப்படுத்துகிறார். துயில் ஒரு படிமமாகக் காட்சியளிக்கிறது.

சூரியனின் ஒளிக்கற்றைகளை புதிய சொற்சேர்க்கையுடன் கூடிய அணியாக வெளிப்படுத்துவது நயக்கத் தக்கதாக உள்ளது.

“ஜன்னல் துளையூடு

தோல் சீவிய நீளக் கரும்பென

சூரிய ஒளிக் கற்றைகள்” (ப.22)

கவிதை வடிவம் சார்ந்து நோக்குகின்றபோது அதிகமும் சிறிய கவிதைகளில் சொற்செட்டு, சிக்கனம், மொழியை இலாவகமாக எடுத்தாளும் தன்மை முதலியன குறிப்பிடத்தக்கன.

“நான்கு வரியில் நல்ல கவிதை எழுதுவதற்கு அதிகபட்ச திறமை வேண்டும் என்பது என் அனுபவம். நானூறு வரியில் ஒரு நல்ல கவிதை எழுதுவதற்கு அதைவிடவும் ஆற்றல் வேண்டும் என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். கவிதையின் நீளம் அல்ல முக்கியம்; தரம்தான் முக்கியம்.” (எம்.ஏ நுஃமான், வாழ்ந்து வருதல், முன்னுரை.)

அதிகமான கவிதைகளுக்குத் தலைப்பிடவில்லை. தலைப்பிடாத கவிதைகள் வாசகரின் பங்கேற்பை அதிகம் கோருவனவாக அமைந்துள்ளன. அவை பல்தள வாசிப்புக்கு இடங்கொடுப்பவை. தலைப்பிடப்பட்டிருந்தால் அதன் பொருள் உணர்த்தும் தன்மையைச் சிதைத்து விடும் என்று கவிஞர் எண்ணியிருக்கலாம்.

வாழ்க்கை நெருக்கடிகள், போர் சப்பித்துப்பிய சக்கையாகிப் போன வாழ்வு, சூழலியல் பிரச்சினைகள், மனிதர்களின் மனங்களில் அமுங்கியிருக்கும் மன அழுக்குகள், வாழ்வதற்கான நம்பிக்கைகள் ஆகியனவற்றை வாசுதேவனின் கவிதைகள் கொண்டிருக்கின்றன. கவிதை மொழியும் அழகியல் அர்த்தப்பாடுகளும் கவிதைகளின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கின்றன. கடந்துபோன காலங்களின் துன்பங்களை நினைந்து கழிவிரக்கப்படாமல் அவற்றில் துவண்டுபோகாமல் இன்னமும் வாழவேண்டும் என்ற உத்வேகத்தைத் தூண்டக்கூடியவையாகவே இக்கவிதைகள் அமைந்துள்ளன. அதற்கு ஏற்றாற்போல் மொழி செதுக்கி எடுக்கப்பட்டிருக்கின்றது. நீண்ட கவிதைகள் மிகக் குறைவு. சிறிய கவிதைகள் களிமண் சுவரில் அப்பிய கையடையாளத்தைப்போல் மனத்தை ஆட்கொண்டு விடுகின்றன. நம்பிக்கைகள் வளரட்டும் நல்ல விளைச்சல்கள் பெருகட்டும்.

(20.11.2021 இல் ஜெனீவா கலை இலக்கியப் பேரவை - சுவிஸ், தமிழ்நிலம் அறக்கட்டளை - சென்னை, தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சி  - அமெரிக்கா; ஆகியன  இணைந்து நடாத்திய இணையவெளி அரங்கில் நிகழ்த்தப்பட்ட உரையின் கட்டுரை வடிவம்)

நன்றி : இலக்கியவெளி, இதழ் 2, 2022

---