Saturday, August 30, 2014

கருணாகரமூர்த்தியின் படைப்பில் வெளிப்படுகின்ற கலாசாரத் தத்தளிப்பு - ஜேர்மனி புலம்பெயர்வாழ்வு குறித்த “வாழ்வு வசப்படும்” குறுநாவலை அடிப்படையாகக் கொண்டது




- சு. குணேஸ்வரன்


அறிமுகம்
பொ. கருணாகரமூர்த்தி ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். சிறுகதை, நாவல் ஆகியவற்றுடன் புனைவுசாரா எழுத்துக்களையும் எழுதிவருபவர். இவரின் “ஒரு அகதி உருவாகும் நேரம்” தொகுதியில் இடம்பெற்றுள்ள “வாழ்வு வசப்படும்” என்ற குறுநாவலை மையமாகக் கொண்டதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் படைப்புக்களில் தாயகம், புகலிடம் என்ற இரட்டைச்சூழல் சார்ந்த படைப்புக்களை அவதானிக்கமுடியும். அந்த வகையில் பொ. கருணாகரமூர்த்தியும் தனது எழுத்துக்களைத் தந்திருக்கிறார். இங்கு புகலிட எழுத்துக்களின் முக்கிய போக்குகளில் ஒன்றாகிய பண்பாடு சார்ந்த விடயத்தை மட்டும் இப்பகுதியில் நோக்கலாம்.

கலாசாரம் – தமிழ்மனம் - தத்தளிப்பு
இலங்கைத் தமிழருக்கெனத் தனித்துவமான பண்பாட்டு அம்சங்கள் உள்ளன. அவர்களின் சமூகம், மொழி, வாழ்வியல் அம்சங்கள் சார்ந்து பல தனித்துவமான பண்பாட்டுக் கூறுகள் தமிழ் வாழ்வுக்குரியதாக இருக்கின்றது. தமிழர் வாழ்புலப் பண்பாட்டைக் கீழைத்தேயப் பண்பாடு என்றும் கூறுவர். இவர்கள் முற்றிலும் மேலைத்தேய நாடுகளில் அந்நிய பண்பாட்டுக்குள் கலந்து வாழமுற்படும்போது எதிர்கொள்ளும் அனுபவங்களும், முரண்பாடுகளும், தத்தளிப்புக்களும் வேறுவேறானவையாக அமைகின்றன.

இந்தவகையில் கருணாகரமூர்த்தியின் பல புனைவுகளில் தமிழ்மனம் எதிர்கொள்ளும் கலாசாரத் தத்தளிப்பை அவதானிக்க முடியும். ‘வாழ்வு வசப்படும்’ என்ற குறுநாவலிலும்; சிறுகதைகளான ‘பர்வதங்களும் பாதாளங்களும்’, ‘வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்’ ஆகிய சிறுகதைகளிலும் மிகத்தெளிவாக இந்தப் பண்பை அவதானிக்கமுடியும். இக்கட்டுரையில் “வாழ்வு வசப்படும்” குறுநாவல் கருத்திற்கொள்ளப்படுகிறது.

உண்மையில் ‘தமிழ்மனம்’ என்பது தமிழ்வாழ்வைக் குறிப்பதாகவே அமைகிறது. அது தமிழ்ப்பண்பாட்டினால் கட்டமைக்கப்பட்ட சிந்தனையோட்டத்தையும் செயற்பாட்டையும் குறிப்பது. மிக நுண்மையாக நோக்கினால் அது தனது தமிழ்அடையாளத்தையே வெளிப்படுத்துகின்றது. இலங்கைத் தமிழர் புலம்பெயர்ந்து சென்ற தேசமெங்கும் இன்னமும் சாதியையும் சமயத்தையும் துடக்கையும் தம் நினைவிலிருந்தும் வாழ்விலிருந்தும் அகற்றமுடியாது கட்டுண்டு கிடக்கின்றனர். இதற்குள்தான் தமிழ்ப்பண்பாட்டு ஒழுக்கவியலும் எழுதப்படாத விதியாக அமிழ்ந்திருக்கின்றது. இந்த நிலையில் முற்றிலும்; தமிழ், தமிழ்ப்பண்பாடு என்று வாழ்ந்தவர்கள் அந்நிய வாழ்வில் எதிர்கொள்ளும் தத்தளிப்புத்தான் இந்தக் குறுநாவலில் உள்ளது.

“ஏறத்தாழ எல்லாக் கதாபாத்திரங்களிலும் ஆசிரியர் சீராக ஒரு விஷயத்தை வைத்திருக்கிறார். கீழைத்தேசக் கலாசாரத்தில் வளர்ந்த மனிதர்கள் மேலைத்தேச கலாசாரத்தை எதிர்கொள்ளும் தத்தளிப்புதான் அது. அத்வைதன் முதல் அலெக்ஸ் வரை பல்வேறு நிலைகளில் அதை வெளிப்படுத்துகிறார்கள். அவ்வெளிப்பாடு மூலம்தான் அவர்களுடைய குணச்சித்திரம் வெளிப்படுகிறது. கதாபாத்திரங்கள் மெல்லிய வேகமாக கோடுகள் மூலம் தீட்டப்படும் ஓவியங்களாக, சகஜமாகவும் வேகமாகவும் உருவாகும் விதம் இக்குறுநாவலின் மிக முக்கியமான குணம் என்று படுகிறது.” (1)

என்று எழுத்தாளர் ஜெயமோகன் இக்குறுநாவலின் முக்கியத்துவம் குறித்து எழுதுகிறார்.

முத்துராசண்ணை, அத்வைதன், திலகன், நகுலன், நிமலன், சுருவில் ஆகிய இலங்கைத்தமிழர்கள் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தபோது அவர்களை அந்நாட்டு அரசு; அகதிகளாகக் கருதி அவர்களுக்கு தங்குமிடம் கொடுத்து சமூகநல உதவிப்பணமும் கொடுத்து வாழ வழிசெய்கிறது.

ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்தபோது பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இவர்கள் புலம்பெயர்கிறார்கள். ஒரு அறையில் இரண்டடுக்குக் கட்டில் அமைத்து ‘ப’ வடிவத்தில் ஆறுபேரை அங்கு தங்க ஏற்பாடு செய்கிறார்கள். இவர்களைப் போலவே ஏனைய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த பாகிஸ்தானியர், கானாக்காரரும் இதேபோல அறைகளில் தங்கவைக்கப்படுகிறார்கள்.

இக்குறுநாவலில் அகதிகளை ஜேர்மனி நடத்துகிறவிதம், தொழில் தேடுதலில் - தொழில் புரிதலில் உள்ள சிக்கல்கள், மேலைத்தேயக் கலாசாரத்தை எதிர்கொள்வதில் உள்ள தத்தளிப்புகள், தாயகக் குடும்பங்களின் நிலை, தனிப்பட்டவர்களின் பல்வேறு மனநிலைகள் ஆகியவை முதன்மையாகப் பேசப்படுகின்றன.

குறிப்பாக ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து வாழநேரிட்ட இலங்கைத் தமிழ் இளைஞர்களின் சிந்தனையோட்டங்களை அவர்களின் செயற்பாடுகளை இந்நாவல் கோடிட்டுக்காட்டுகிறது. இலங்கைத் தமிழரின் புலம்பெயர்வு 1980 களில் இருந்தே முனைப்புக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஜேர்மனி போன்ற முற்றிலும் அந்நிய மொழிபேசும் நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களின் மனவோட்டங்களை இது எடுத்துக்காட்டுகின்றது. இதனை டி.செ தமிழன் புலம்பெயர்ந்தவர்களின் மனவோட்டங்களை சொல்லும் ஆரம்பகால ஆவணம் என்று குறிப்பிடுவது முக்கியமான அவதானிப்பு.

“80களின் ஆரம்பத்தில் ஈழத்திலிருந்து ஜேர்மனிக்கு அகதிகளாய் அடைக்கலங்கேட்டு, ஒரே அறையில் தங்கியிருக்கும் ஐந்தாறு இளைஞர்களைப் பற்றிய கதைதான் இது. இன்னொருவகையில் சொல்லப்போனால், இந்தக்கதை எமது புலம்பெயர் வாழ்வின் தொடக்கத்தைப் பதிவு செய்யும் ஒரு முக்கிய ஆவணம் எனவும் சொல்லலாம். புலம்பெயர் வாழ்க்கை என்பது பொதுவான ஒன்றல்ல. நாம் புலம்பெயர்ந்த ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்ப அவை வேறுபடுபவை. உதாரணமாய் கனடா, இங்கிலாந்து போன்றவற்றுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கும், ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கும், இடையிலான வாழ்க்கை என்பது வித்தியாசமானது. கனடா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கு, ஆகக்குறைந்தது, ஏற்கனவே கற்றுக்கொண்ட, அடிப்படை ஆங்கிலத்தை வைத்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவாவது முடிந்திருந்தது. ஆனால் ஜேர்மனி, பிரான்ஸ் போன்றவற்றுக்குப் போனவர்கள், மொழியிலிருந்து எல்லாவற்றையும் புதிதாகவே கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஆகவே அவர்களுடைய புலம்பெயர்வு எம்மைவிட வித்தியாசமானது மட்டுமின்றி, மிகவும் கஷ்டமானதும் கூட. எனவே 'புலம் பெயர் வாழ்வு' என்ற ஒற்றைவரிக்குள், எல்லோருடைய வாழ்வையும், பொதுவாகப் பார்க்கும் நிலையையும், நாம் மாற்றவும் வேண்டியிருக்கிறது.” (2)

ஆசிரியர்; அத்வைதனை பிரதான பாத்திரமாக்கி கதையை நகர்த்தியுள்ளார். இதில் வரும் ஆறு பாத்திரங்களும் ஆறு வகையான மனவுணர்வு மற்றும் செயற்பாடு கொண்டவர்கள். ஒவ்வொரு காரணத்துடனும் புலம்பெயர்ந்து வந்தவர்கள்.
இவர்கள் வதியும் விடுதி நான்கு மாடிகளைக் கொண்டது. முதலாவதில் உலகின் ஆதித்தொழிலாகிய விபச்சாரம் மற்றும் மதுபானச் சாலைகளும் மூன்றாவதில் இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களும் நான்காவதில் நிரந்தர குடியிருப்பாளர்களாகிய ஜேர்மனியரும் வதிகின்றனர்.

இந்நாவலில் பல விடயங்கள் பேசப்பட்டாலும் கீழைத்தேய மரபில் வாழ்ந்தவர்கள் எதிர்கொள்ளும் கலாசார முரண்பாடு அதிகம் பேசப்படுவது நோக்கத்தக்கது.
குறிப்பாக
1. போதைப்பொருள் பாவனை
2. மதுப்பாவனை
3. போர்ணோ படங்களின் பாதிப்பு
4. பெண்களின் தொடர்பு

ஆகியவை இக்குறுநாவலின் பேசுபொருள்களில் முக்கியமானவை.

“மொழிவழித்தனிமை, கலாசாரத் தனிமை, பாலியல்தனிமை, என்று தனிமையின் வகைமைகளுக்குள் சிக்கி சுழலும் அகதி வாழ்வு. அதிலும் அதீதப் பாலியல் தனிமை காரணமாக பெரும்பாலான கதாபாத்திரங்கள் பாலியல் குறித்த விடயங்களை ஏதாவதொரு விதத்தில் வெளிப்படுத்தும் கதைப்போக்கு அகதிகளின் உளவியல் தாக்கத்தைக் காட்டுகிறது. “(3)

நாவலில் வரும் ஈழத்தவர் ஆறுபேரின் கதையுடன் இணையாக பக்கத்து அறைகளில் வசிக்கும் பாக்கிஸ்தானியர், கானாக்காரர் ஆகியோருடன் கதையோட்டம் நகருகின்றது.

இவர்களில் வயதில் மூத்தவரான முத்துராசண்ணை கடவுள் சிந்தனையும் அமைதியும் கொண்டவர். அடிதடிகளுக்கு போகாதவர். சமையல் வேலைகளுடன் அவர் பொழுது போய்விடும். அத்வைதன் கொஞ்சம் கோபக்காரன் அநீதிகளைக் கண்டு பொறுக்கமாட்டாதவன். காலையில் மாடிப்படிகளில் ஏறி பத்திரிகைபோடும் வேலையை செய்பவன். இதனை திலகனும் செய்கிறான். ஆனால் அவன் ஒரு ஜாலிப்பேர்வழி. இக்குறுநாவலின் பேசுபொருள் திலகன் பாத்திரத்திற்கு ஊடாகவே அதிகம் சிலாகிக்கப்படுவதும் கவனிக்கத்தக்கது. மற்றவர்களில் சுருவில் ஒரு ஹோட்டலில் உறவினர் ஒருவர் ஊடாக கிடைத்த வேலையை செய்துவருபவர். மாதம் ஒரு தடவை சோசல் காசு பெறுவதற்காக இவர்களது அறையில் வந்து தங்குபவர். மற்றைய இருவரும் வயதில் இளையவர்கள். சகோதரர்கள்.

இந்நாவலில் மேலைத்தேய சமூகத்தில் வளர்ந்த இரண்டு இளம்பெண்களை அவதானிக்கலாம். அவர்களில் ஒருத்திக்கு பிள்ளையைப் பெற்று நல்ல விலைபேசி விற்றல் தொழிலாகிறது. மற்றவளுக்கு தனது கைச்செலவுகளுக்காக சோரம்போதல் உதவுகிறது. இவ்வாறான பெண்களின் தொடர்பு புலம்பெயர்ந்து அங்கு வாழ நேர்ந்த இளைஞர்களுக்கு கைகூடுகிறது. கறுப்பின ஆடவருடன் நட்புக்கொண்டு அவர்கள் மூலம் குழந்தை பெற்று விற்கும் ஒருத்தியாக சபீனா என்ற பெண் இக்குறுநாவலில் அறிமுகமாகின்றாள். அவள் அத்வைதனுடன் நிகழ்த்தும் உரையாடல் ஒன்றை நோக்கலாம்.

“அத்வைதன் விளங்காமல் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான்”

“நத்திங் ஆக்ஸ்டென்ரால்… கர்ப்பம் தங்க வைத்துக் கொண்டு வந்தேன்.”

“இந்தியக் குழந்தையில் அப்படி என்ன விசேஷம்?”

“சொக்கோ பிறவுண் குழந்தைகளுக்கு ஏக டிமாண்ட தெரியுமோ? கண்ணடித்தாள்”

“இப்போ எங்கே குழந்தை?”

“போன கோடையில் Sylf க்குப் போயிருந்தபோது ஒரு பணக்காரன் ஸ்வீகாரம் பண்ணிறேன் என்றான்… கொடுத்திட்டேன்… ஒன்றும் சும்மாவல்ல… அறுபதினாயிரம் டொய்ச்மார்க். இதைச் சம்பாதிக்க நான் பத்து வருஷம் மாடாய் உழைக்க வேணும் பார்… இது ஒரு சிம்பிளான பிஸினஸ்” (4)

இதேபோல் இன்னொரு பெண்பற்றிய சம்பவமும் நாவலில் வருகிறது. பக்கத்து அறையில் வதியும் இலங்கைத்தமிழர் இரண்டு பேர் போதைவஸ்தும் போர்ணோவும் என அலைபவர்கள். பாடசாலை சென்றுவரும் 14 வயதுடைய பள்ளி மாணவியை தம் அறைக்கு அழைத்து வந்து போதைஊசியை அதிமாகச் செலுத்தி அவளை பாலியல் தேவைக்கு உட்படுத்துகின்றனர். இறுதியில் அவள் இறக்கும் தறுவாயில் அவளைக் காப்பாற்றும் எண்ணமில்லாத அவர்களின் மனித மனமும் அதற்கு இடங்கொடாத சட்டங்களும் இந்நாவலில் காட்டப்படுகிறது.

இச்சம்பவத்தை அறிந்து அத்வைதன் கோபப்படுகிறான். அவர்களுடன் சண்டைபிடிக்க முற்படுகிறான். இறுதியில் அந்தப் பெண்ணைக் காப்பாற்றும் பொருட்டு பொலிஸில் அறிவித்தும் அவர்களின் சட்டம் அதற்கு இடங்கொடுக்காத நிலையில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் விசேட அம்புலன்ஸ் வண்டி வைத்தியர்களின் உதவியுடன் அவள் உணர்வற்ற ஆபத்தான நிலையில் மீட்கப்படுவதோடு நாவல் முற்றுப்பெறுகின்றது.

பாலியல் நடவடிக்கைகள் மேலைத்தேய வாழ்வில் திறந்து விடப்பட்ட கலாசார நிலையாக இருந்தாலும் இவர்களின் பார்வையில் அது ஒழுக்கவிதிகளுக்கு அப்பாற்பட்டதாகவே அமைகின்றது. இது சார்ந்த பல சிக்கல்களை அறைநண்பர்கள் எதிர்கொள்கின்றனர்.

கீழைத்தேய கறுப்பின ஆடவனை நண்பனாக்கிக் கொள்வதன் ஊடாக தான் சொக்கிளற் கலர் குழந்தை பெற்று அதனை நல்ல விலைக்கு விற்றுவிட விரும்பும் பெண் ஒருத்தி திலகனுடன் நெருங்கிப் பழகியபின் தனது குழந்தைக்கு அப்பாவாக பதிவுசெய்தால் போதும். தான் அந்தக் குழந்தையை பின்னர் நல்ல விலைக்கு விற்றுவிடுவேன் என்கிறாள். இது அதிர்ச்சியூட்டும் சம்பவமாக அமைகிறது. பத்திரிகை விநியோகிக்கப்போன இடத்தில் வெள்ளைக்காரப் பெண்கள் படுக்கைக்கு அழைக்கும் சந்தர்ப்பங்கள், முத்துராசன் ஒருமுறை ஜேர்மனியை சுற்றிப்பார்த்து போட்டோவுக்கு முகங்கொடுக்கும் சந்தர்ப்பத்தில் ஒரு இளம்பெண் அவரை முத்தமிட்டுச் செல்லும் சந்தர்ப்பம், இன்னும் பல சம்பவங்கள்… எல்லாம்; கீழைத்தேய ஒழுக்கவியலில் வாழ்ந்தவர்களை இரண்டக நிலைக்கு உட்படுத்துகின்றன.

“ஒரு நாட்டில் குடியுரிமை பெற்று வாழும் வேற்று நாட்டவர்கள் அவர்கள் குடியேறிய நாட்டின் பண்பாட்டில் ஒரு பகுதியையும் அவர்களின் சொந்தப்பண்பாட்டில் பெரும் பகுதியையும் இணைத்துக் கொண்டவர்களாய் உள்ளனர். இவ்வாறான வாழ்க்கைமுறை அவர்கள் வாழும் நாட்டு மக்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டதாக அமையும். அவர்களின் அவ்வகைப்பண்பாடு அந்நாட்டின் மொத்தப்பண்பாட்டில் ஓர் உட்பண்பாடாக அமையும்” (5)

என புலம்பெயர்ந்த தேசத்தின் உபபண்பாடு பற்றி கூறப்படுகிறது. இக்கூற்று ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து இற்றைக்கு கால்நூற்றாண்டு கழிந்துவிட்ட நிலையில் பொருத்தமாக இருக்கின்றது. ஆனால் இந்நாவல் புலம்பெயர்ந்தவர்களின் ஆரம்பநிலை குறித்தே பேசுவதனாலேயே மேற்குறித்த கலாசார தத்தளிப்பை இலங்கைத்தமிழர்கள் எதிர்நோக்கவேண்டியிருந்திருக்கின்றது.

மேலும் ஒரு சம்பவத்தையும் இங்கு எடுத்துக்காட்டலாம். அறைநண்பர்கள் ஒருமுறை கோவைத்தமிழர் ஒருவரை சந்திப்பதன் ஊடாக தமிழ்ப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. அவர் ஒரு சுரண்டல் பேர்வழியாக இந்நாவலில் காட்டப்படுகிறார். அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு அறைநண்பர்களுக்கு ஒரு ரீவியும் டெக்கும் வாங்கவேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது. அது படிப்படியாக இவர்கள் மட்டுமல்லாமல் பக்கத்து அறையினரும் தமிழ்ப்படம் பார்ப்பதற்கு ஏற்ற சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. காலநீட்சியில் ‘போர்ணோ’ படம் பார்க்கும் நிலைக்கு இவர்களது பொழுது தள்ளப்படுகிறது.

இதுபோன்ற சம்பவங்களுக்கு நாவலில் இருந்து சில உதாரணங்களை எடுத்துக்காட்டலாம்.

“படம் திடீரென முடிந்து ‘டிவி’ திரையிலிருந்து அறைக்குள் வெளிச்சம் பரவியபோது நிமலனும் முத்துராசா அண்ணையும் தத்தமது கட்டில்களில் தலையைச் சுற்றிப் போர்த்தபடி உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்” (6)

“அறையின் மையமாகவிருந்த பதிவான மேசையில் மூன்றுபேர் காலடியில் பியர்க் குலையும், கையில் சிகரெட்டுமாக ‘ரம்மி’ ஆடிக்கொண்டிருந்தனர். கதவுக்கு எதிராக இருந்த கட்டிலில் ஒருவன் ஜெர்மன்காரி ஒருத்தியை போர்த்தி வைத்து முயங்கிக் கொண்டிருந்தான். அத்வைதன் 120000 வோட்ஸ் மின்சாரத்தால் தாக்கப்பட்டு சுதாகரிப்பதற்குள் அவனையும் ரம்மியாட அழைத்தனர். …………அத்வைதன் வேறொரு சமயம் வருவதாகக் கூறிக்கொண்டு வெளியே பாய்ந்தான். அவனின் மனோ உணர்வுகளைத் துளியும் புரியாத சார்ளியின் அறையினர் ஒரு அரை மணிநேரமாவது ரம்மியாட வருமாறு கெஞ்சினர்.” (7)

“இவங்கட செக்ஸ்… ஒழுக்கம் பற்றிய பார்வையே வேறை… போய் பிரண்டோட ஒருத்தி ஒரு பார்ட்டிக்கு போறாள் என்று வையன். அவள் தாயே பில்லை (கருத்தடை)யும் எடுத்துக் கையில கொடுத்து விடறாளே?.... இவங்களுடைய தியறிப்படி ஒழுக்கத்திற்கும் கன்னித்தன்மைக்கும் சம்பந்தமேயில்லை” (8)

தொகுப்பு
புலம்பெயர்ந்தவர்களின் ஆரம்பகால வாழ்க்கை நெருக்கடியை முக்கியமாக இந்நாவல் எடுத்துக்காட்டுகின்றது. அத்துடன் இன்று புலம்பெயர் இலக்கியத்தில் அதிக அழுத்தம் கொடுத்துப் பார்க்கவேண்டிய விடயம் ‘தமிழ்அடையாளம்’ அது பண்பாடு சார்ந்து அவர்களின் வாழ்க்கை சார்ந்து எந்தவிதமான சரிவுகளை மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது இங்கு எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் கால்நூற்றாண்டு கடந்துவிட்ட நிலையில் இங்கு குறிப்பிடப்பட்ட பலவற்றில் இன்று வாழ்ந்துவரும் புகலிடத் தமிழர்கள் புகலிடப்பண்பாட்டில் தமக்குரிய உபபண்பாட்டைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

மொழி, சமயம், திருமணம், பழக்கவழக்கம், பொழுதுபோக்கு, பாலியல் சார்ந்த பல விடயங்களில் எமது தமிழ்ப்பண்பாட்டுக்கூறுகளுக்கு இருக்கக்கூடிய தனித்துவமான அம்சங்களோடு புலம்பெயர்ந்த நாட்டின் மொத்தப்பண்பாட்டில் உப பண்பாட்டுக்கூறு ஒன்றினையும் உருவாக்கி இன்று வாழ்ந்து வருகின்றனர். எவ்விதத்திலும் முற்றுமுழுதாக தமிழ்ப்பண்பாட்டு மனம் என்ற நிலை மாறி ஒத்துப்போகக்கூடிய அல்லது மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய நிலையிலேயே இன்று புகலிடத்தமிழர்கள் இருக்கின்றனர். அது உணர்வுபூர்வமான மொழிவழியான தமிழ் அடையாளமாக முற்றுமுழுதாக அல்லாமல் வெறும் தமிழ் அடையாளமாகவே மூன்றாம் தலைமுறையினரிடத்தில் கையளிக்கப்படுகிறது. இதற்கு இன்றைய மொறீசியஸ் நல்ல உதாரணம் ஆகும்.

எனவே கருணாகரமூர்த்தியின் இக்குறுநாவலானது இலங்கைத்தமிழரின் ஆரம்பகால வாழ்க்கைச் சூழலை எடுத்துக்காட்டும் ஆவணமாக திகழ்கின்ற நேரத்தில் தமிழ்ப்பண்பாட்டு மனம் எதிர்கொள்ளக்கூடிய கலாசாரத் தத்தளிப்பையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் புலம்பெயர் தமிழரின் வாழ்க்கையில் அவர்களின் எழுத்துக்களில் தமிழ்ப்பண்பாடு அல்லது தமிழ் அடையாளம் என்பதுதான் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என்பதும் இக்குறுநாவலூடாக வலியுறுத்தப்படுகிறது.
---

அடிக்குறிப்புக்கள்
1) ஜெயமோகன் : 1996, “இவை என் முகங்கள்” ஒரு அகதி உருவாகும் நேரம் சென்னை, ஸ்நேகா ப7.
2) டி.சே. தமிழன்: “வாசிப்பும் சில குரல்களுக்கான எதிர்வினையும்” http://djthamilan.blogspot.com/2009/06/blog-post.html
3) வெற்றிச்செல்வன். ப: 2009, ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும், சென்னை சோழன் படைப்பகம், ப 228.
4) கருணாகரமூர்த்தி : 1996, ஒரு அகதி உருவாகும் நேரம், ஸ்நேகா, சென்னை, ப 59.
5) பக்தவத்சலபாரதி : 1999 (விரிவாக்கி திருத்திய பதிப்பு), பண்பாட்டு மானிடவியல், சென்னை, மணிவாசகர் பதிப்பகம், ப169.
6) மேலது 4: ப99.
7) மேலது 4: ப75.
8) மேலது 4: ப125.

(சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து மே 31, 2014 இல் நடத்திய 'புலம்பெயர்ந்த தமிழர் வரலாறும் வாழ்வியலும்' என்ற கருப்பொருளிலான பன்னாட்டு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை.)
நன்றி : கலைமுகம், இதழ் 58 (ஏப்ரல் – யூன் 2014) யாழ்ப்பாணம்.