Sunday, July 12, 2009

இருளும் மெளனமும் இணைந்த வாழ்வு


ந. சத்தியபாலனின் - இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்

-சு. குணேஸ்வரன்

கவிஞர் ந. சத்தியபாலன் (1956) அடிப்படையில் ஓர் ஆங்கில ஆசிரியர். கவிதை, சிறுகதை, பத்தி எழுத்து, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் தனது ஆளுமையைச் செலுத்தி வருபவர். இவரின் ‘இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்’ என்ற கவிதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது.

2006 ற்குப் பின்னர் ஈழத்தில் வெளிவந்த காத்திரமான கவிதைத் தொகுப்புகளில் ஒன்றாகக் கருதுவதற்குரிய அதிகபட்ச சாத்தியக் கூறுகளை சத்தியபாலனின் கவிதைகள் கொண்டுள்ளன. 1986 இல் இருந்து 2008 வரை எழுதப்பட்டவற்றுள் 41 கவிதைகளைக் கொண்டமைந்த இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்துமே மனித வாழ்வின் துயரத்தையும் ஆற்ற முடியாத சோகத்தையும் அதிகாரத்தால் அமிழ்ந்து போகும் மெளனத்தையும் பேசுவனவாக உள்ளன.

பார்த்தவுடன் அதிர்ச்சியூட்டக்கூடிய அட்டைப்படம். முகத்தின் மண்டையோட்டுப் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான ஆணி அறையப்பட்ட ‘நிக்சி நெக் ஒண்டி’ மரச்சிற்ப புகைப்படத்துடன் கூடிய தொகுப்பைப் பார்த்தபோது மிகவும் இறுகிய மனத்துடனேயே கவிதைகளுள் நுழைய முடிகின்றது.

இந்த நூற்றாண்டுத் துயரங்களில் ஒன்றாகிப் போன மனித அவலங்களையே அதிகமான கவிதைகள் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. மனித வாழ்வின் இருளையும் அதன் மெளனத்தையும், சொற்களும், சொற்களுள் தொங்கிக் கொண்டிருக்கும் வரிகளும், வரிகளுள் உறைந்திருக்கின்ற உணர்வுகளும் பேசமுயல்கின்றன. பேச முடியாத சொற்கள் கண்ணாடி முன் தெரியும் விம்பமாகி ஒரு கணத்திலேயே உடைந்து நொறுங்கிப் போகின்றன. இந்த நிலையிலேயே வாழ்வு பற்றிப் பாடுகிறார்.

“ஓசையெழாமல்

குழாய் வழி வழிந்து

வெளியேறிவிட்ட

தாங்கிக் தண்ணீராய்

வீணாகிப் போன வாழ்வு பற்றி

ஒரு கணம் துணுக்குறும் நெஞ்சு”

(மூன்று பொம்மைகள்)

வாழ்வு காலத்தோடு கரைந்து போகின்றது. அதுவே கருணையற்ற காலமாக எம்முன் விரிந்து கிடக்கிறது. இந்தக் காலங்களால் மனித வாழ்வு அலைக்கழிக்கப்படுகின்றது. என்றாலும் வாழவேண்டும் என்ற ஆசை, செடிகளின் வேரில் படிந்திருக்கும் ஈரம்போல் நெஞ்சில் கசிகிறது.

மெளனமாக நடந்து சந்தைக்குச் செல்லும்போது ‘அப்பா எனக்கு சொக்காவும்’ என்ற குழந்தையின் குரலும், நெஞ்சின் வலி பாரமாய்க் கனக்க மருந்தாய் தடவுண்ட தாயின் வார்த்தைகளும், பிரிந்து போன நட்பும் உறவும் மீண்டும் கைகோர்த்து மீள வருகின்ற போது வாழவேண்டும் என்ற ஆசை மனமூலையி;ல் ஓர் ஒளிப்பொட்டாக உள்ளிறங்குகின்றன. அழைப்பு, சிறகடிப்பு, பிறப்பு, தரிசனம் 1, கனவு ஆகிய கவிதைகளில் இந்தப் பண்பைக் கண்டு கொள்ளலாம்.

அரிதாரம் பூசி மெழுகப்பட்ட மனிதர்களின் பொய்முகங்கள் பற்றியும்> அவர்கள் அணிந்து கொள்கின்ற கிரீடங்கள் பற்றியும்> முகம் கொடுப்பதா முதுகு காட்டுவதா என்ற வினாக்களோடு மனிதர்களின் இரக்கமின்மையினையும் புறக்கணிப்பையும், தருணம் பார்த்துக் கழுத்தறுக்கும் நிலையினையும் பல கவிதைகளில் தோலுரித்துக் காட்டுகின்றார்.

அதனாற்தான் இயற்கை கூட ஈரமும் மழையும் கண்டாலே துளிர்விட நினைக்கின்ற கணங்களிலே இந்த மனித மனங்கள் மட்டும் ஏன் இவ்வாறு இருக்கின்றன என்று கேட்கிறார்.

“ஈரமும் மண்ணும் கண்டாலே

வெட்டுத் துண்டமாய்க் கிடக்கும்

பூஞ்செடியின் சிறுகம்பு

வேர்விட நாள் பார்க்கிறது

அறிவு சுமந்த எமது

மனித இதயங்கள் மட்டும்

ஏன் இப்படி?”

(ஏன்)

மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் முடிவிலியாய்த் தொடர்கின்ற தொடரிசை போல் பல கவிதைகளில் தொடர்வதைக் கண்டு கொள்ளலாம். அவற்றுள் முக்கியமானது: பல அர்த்தத் தளத்தில் பயணிப்பது. விடுதலையாகி, அர்த்தம், ஒரு புழுக்கூட்டின் கதை, நெடியோடு வீசும் காற்று ஆகிய கவிதைகளை ஆதாரமாகக் காட்டலாம்.

‘இருள்’ ஒரு படிமமாகவே பல கவிதைகளில் தொடர்வதைக் காணலாம். இருள்: கவிதைகளின் பாடுபொருளாக அமைகின்ற அதேவேளையில் மக்களைத் தொடர்ச்சியாக வாட்டும் அவலத்திற்கும் அதிகாரத்திற்கும் குறியீடாகவும் வருகின்றது.

“கோரப்பற்கள் துருத்திய வாயொடு

குதித்தாடத் தொடங்கியது இருள்”

(கூத்து)

இருள் எல்லோரையும் பயம்கொள்ள வைக்கிறது. பகல் குறுகி விடுகிறது. இருளும் பேய்க்காற்றும் கைகோர்த்துத் தம் ஊழிக் கூத்தை நிறைவு செய்து வெளியேறுகின்றன. அடுத்தநாள் காலைப்பொழுது மிக அமைதியாக விடிகின்றது.

“நோயொடு புலர்ந்த காலையில்

தெருக்களும் நிலங்களும்

கழுவப்பட்டிருந்தன

சுவர்கள் புது வர்ணம் தீட்டப்பட்டிருந்தன

குளித்துப் புத்தாடை அணிந்து

போய்க் கொண்டிருந்தோரின்

கவனத்திற்குத் தப்பிய கால்விரல்

இறைகளுக்குள்

உலர்ந்து போயிருந்தது

இரத்தம்”

(கூத்து)

ஒரு வழிப்போக்கன்போல் காற்று யாரையும் கேட்காமல் யன்னல் கதவுகளை அடித்துச் சாத்திவிட்டுப் போகிறது. நீண்ட பகல் ஒரு குட்டிநாய் போல் வாலைச் சுருட்டிக் கொண்டு பயந்து ஒதுங்கிக் கொள்கின்றது. இவையெல்லாம் சத்தியபாலனின் கவிதைகளை முழுமையாகத் தரிசிக்கும்போது எமக்குள் வந்து சேரும் நுண்ணிய அனுபவங்கள்.

‘அர்த்தம்’ என்ற கவிதை அதிகாரத்தை இயல்பாகவே பேசும். இங்கு மொழியின் செதுக்கலை மிகக் கூர்மையாக அவதானிக்கலாம்.

“சென்ற திசையிலேயே

திகைத்தலைந்தன சில

வில்லங்கமாய்ப் பிடித்து

அமர்த்தப்பட்டன சில

தவறான இடத்தில்

அவமதிக்கப்பட்டு

முகஞ்சிவந்து திரும்பின சில

உரிய திசையின்

இடமோ

வெறுமையாய் எஞ்ச

எனது சொற்களின் கதி

இப்படியாயிற்று

நூற்றியோராவது தடவையும்”

(அர்த்தம்)

இந்த இறுக்கத்திற்கும் மத்தியில் சில கணங்கள் என்றாலும் கவிஞனால் உயிர்ப்பாய் இருக்க முடிகிறதென்றால் அது உறவுகளின் வாழ்விலேயே என்பார்.

வெளியே செல்லும் வழியில் நடைபெறும் சம்பவத்திற்குப் பின்னர் மிக வேகமாக வீடு வந்து சேரும் கவிமனத்தை இக்கவிதையில் காணலாம். வேலி, மதில், சுவர், கதவு இவற்றையெல்லாம் ஒரு காவலென எண்ணி வீட்டை நோக்கி விரைகின்றன கால்கள். கவிமனம் தன் வீடு தனக்கு பாதுகாப்புத் தருமென எண்ணுகிறது. இது ஒரு குருட்டு நம்பிக்கைதான். தன் மனத்தைத் தானே தேற்ற நினைப்பது போன்றது. காற்றும் இருளும் கால்முளைத்து நடந்து வந்து கதவு யன்னல்களை வேகவேகமாக மூடிவிட்டுப் போக இருளில் முக்காடு போட்டு மூடிக்கொண்டிருக்கும் குருட்டு மனம் வீட்டை எப்படிக் காவலென எண்ண முடியும்? இவையெல்லாம் சத்தியபாலன் கவிதைகளின் மெளனங்களுக்கான விடைகளாக இருக்க முடியும்.

மனிதனின் அகமும் புறமும் இணைந்து அடங்கிய வாழ்வினைக் கவிதைகள் பேசுகின்றன. தன்னுணர்வு சார்ந்த கவிதைகள் அதிகமெனினும் அவை கவித்துவத்தில் குறைவானவையெனக் கூறமுடியாது. சத்தியபாலன் அகத்தைப் பாடினாலும் அவர் அதற்குத் தேர்ந்து கொள்ளும் மொழியில் கூடிய கவனம் செலுத்தியிருக்கின்றார்.

தட்டையானதும் வெளிப்படையானதும் நீர்த்துப் போனதுமான சொற்களுடன் கூடியவையே கவிதைகள் என்ற தவறான கருத்து; சத்தியபாலன் போன்றோரின் கவிதைகள் புரியவில்லை என்ற ஆபத்தையும் விதைத்து விட்டுச் செல்லலாம். அதற்குப் படைப்பாளியைக் குற்றம் சுமத்த முடியாது.

இங்கு சத்தியபாலன் தனக்குரிய மொழியைக் கட்டியிருக்கிறார். கவிதை அதற்கேற்ற வடிவத்தினைப் பெற்றிருக்கிறது. உணர்வுக்கூடாகவே கவிதைகள் தமக்குரிய வெளியைத் தேடுகின்றன. மண்ணிலிருந்து கிளம்பி பிரபஞ்ச வெளியைத் தேடியபடியிருக்கின்றன. கண்ணாடி முன்னால் நொறுங்கிப் போன விம்பமாய், கழிந்து போன காலங்களை ஈடுசெய்வதற்கு முனையும் எத்தனங்களாய் கவிஞனின் மனம் அந்த வெளிகளில் சஞ்சாpக்கிறது.

நடுப்பகலும் நண்டுக்கோதும் அண்டங்காகமும் ஒரு உறைந்த மனிதனும், இரண்டு பேர், மூன்று பொம்மைகள், அர்த்தம், கூத்து, காவல், கனவு, ஏன் இதுபோன்ற பல கவிதைகளைக் கவித்துவமும் உணர்வும் பொதிந்த வரிகளுக்கு உதாரணமாகக் காட்டலாம்.

பொய்யும் போலித்தனமும் துதிபாடும் மரபும் மிக மலிந்து போயுள்ள தற்கால ஈழத்து இலக்கியச் சூழலில்; எமது காலங்களை மிகக் காத்திரமாகப் பதிவு செய்து கொள்வதற்குரிய ஒரு எத்தனமாக இத்தொகுப்பு வெளிவந்துள்ளமை வரவேற்கத் தக்கதாகும்.

தமிழ்க் கவிதைகளின் வெளியை நோக்கி சத்தியபாலனின் கவிதைகளும் பயணிக்கும் என்று கருதலாம்.

நன்றி:- ஜீவநதி, இதழ் 13, ஆடி - ஆவணி 2009