Tuesday, March 24, 2009

ஆழியாளின் துவிதம்








சு. குணேஸ்வரன்………………..

‘உரத்துப்பேச’(2000) கவிதைத் தொகுப்பினூடாக ஈழத்துப் பெண் கவிஞர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட ஆழியாளின் ‘துவிதம்’ என்ற கவிதைத் தொகுதி கடந்த வருடம் ‘மறு’ வெளியீடாக வந்துள்ளது. நவீன தமிழ் இலக்கியத்தில் பெண் எழுத்துக்கள் மிகுந்த கவனிப்புக்கு உள்ளாகியிருக்கும் தற்கால இலக்கிய உலகில்@ இக்கவிதைத் தொகுதி புலம்பெயர்ந்த ஈழத்தமிழாpன் படைப்புக்களுக்கு வலுச்சேர்க்கும் ஒரு முயற்சியாக அமைந்துள்ளது.

பெண்-மொழி-கவிதை: மொழிசார் சாலைப் பயணம் என்ற தெ. மதுசூதனனின் ஆழமான தொடக்க அறிமுகத்துடன் அழகான அமைப்பில் அமைந்துள்ள இக்கவிதைத் தொகுப்பில் மொத்தம் 24 கவிதைகள் அமைந்துள்ளன.

கவிதைகள் அனைத்திற்கும் தாயக வாழ்வும் புலம்பெயர் தேசத்து வாழ்வும் இணைந்த உணர்வுநெறி அடிப்படையாக அமைந்துள்ளது. சில கவிதைகளில் இரண்டையுமே வேறுபிரித்து அறியமுடியாதபடிக்கு அதன் உள்ளுணர்வு பின்னிப் பிணைந்துள்ளது.

ஆழியாளின் கவிதைகள் அனைத்தும் சுட்டுகின்ற பொருட்பரப்பு முக்கியமானது. இத்தொகுப்பினூடாக தாயக வாழ்வின் ஞாபக அடுக்குகளில் இருந்து பல உணர்வு வெளிகள் விரிகின்றன. வாழ்வு பற்றிய பிடிமானமும் அதற்கான எத்தனமும் இந்தச் சூழலிலிருந்து மெல்ல மெல்ல விலகுவதும்> புலம்பெயர் தேசத்தில் அந்நியமாகிப் போன வாழ்வு நிலையும்> பெண் தன்னையும் தன் உணர்வுகளையும் வெளிப்படுத்துதலும்> பெண் தன் தனித்துவத்தைக் கட்டமைத்தலுமாக இத்தொகுப்பின் கவிதைகள் பல வழிகளில் பயணிக்கின்றன.

பெண் ஒடுக்குமுறையும் அதற்கெதிரான எழுச்சியும்> பெண் தன் சுய அடையாளத்தை வெளிப்படுத்தலுமாக இதுவரை பயணித்து வந்த பெண் படைப்பாளிகளின் படைப்புக்கள் எவ்வளவு து}ரம் முக்கியமோ@ அதே அளவு பெண் தனக்கான மொழியைக் கட்டமைக்கும் சிந்தனையும் அதற்கான செயற்பாடுகளும் தற்கால இலக்கிய உலகில் முக்கியமானவையாக அமைந்துள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக பெண் தன்னை தன் எழுத்துக்களுக்கூடாக மறுபிரதி செய்தலும் தன் உணர்வுகளையும் தன் மொழியையும் எழுதுதலாயும் உள்ளது. இது காலம் காலமாக இருந்த தடத்தை அழித்து புதிய தடத்தை எற்படுத்தும் நிலை. இதன் ஒரு அம்சமாகத்தான் ‘இருப்பதை உடைக்காமல் புதிய சொல்லாடலை உருவாக்க வழியில்லை’ என்று பெண்ணியல் திறனாய்வாளரான ஹெலன் சீக்ஸீஸ் (Helene Cixous) எழுதியுள்ளார். இதனாலேயே பெண்> பெண்உடல்> பெண்மொழி என்பன இன்றைய இலக்கியச் சூழலில் மிகுந்த விவாதத்திற்கு உட்பட்டிருக்கின்றது. பெண்கள் தமக்கான மொழியைக் கட்டமைப்பதன் மூலம் தமக்கான விடுதலையைச் சாத்தியமாக்க முடியும் என்ற சிந்தனையும் இன்று வலுப்பெற்று வருகின்றது. இவற்றை மனங்கொண்டுதான் ஆழியாளின் படைப்பினை நோக்கமுடியும்.

காமம்> விடுதலை> தடம் இதுபோன்ற பல கவிதைகளை ஆழியாளின் பெண் மொழிக்கு உதாரணமாகக் காட்டலாம். ‘தடம்’ என்ற கவிதையில்

“வெகு இயல்பாய்

என் தடமழியும்

வள்ளம்

பதித்த நீர்ச் சுவடு போல

காற்றுக்

காவும்

மீன் வாசம் போல

கடற்கரைக் காலடியாய்

வெகு இயல்பாய்

என்; தடமழியும்

நாலு சுவருள்

ஒற்றப்படும்

மென் உதட்டு முத்தம் போலவும்

எட்டுக்கால் படும் ஒற்றைச் செருப்படி போலவும்.

வெகு இயல்பாய்

என் தடமழியும்

ஒளி விழுங்கின வானவில்லாய்.”

தனது முதலாவது தொகுப்பிலேயே ‘என் ஆதித்தாயின்/ முதுகில் பட்ட/ திருக்கைச் சவுக்கடி/ நான் காணும் ஒவ்வொரு/ முகத்திலும்/ தழும்பாய் தேமலாய்/ படர்ந்து கிடக்கிறது’ என்ற பிரகடனத்துடன் கவிதை எழுதியபோதே கவனிக்கப்பட்டவர் ஆழியாள். துவிதம் தொகுப்பில் அமைந்துள்ள ‘காமம்’ என்ற பிறிதொரு கவிதையில்

“உயரும்

மலையடிவார மண்கும்பிகளுள்

திணறி அடக்கமுறும்

மனித மூச்சுகளும்

பள்ளங்களின்

ஆழப்புதைவில்

அலறி ஓயும் குரல்களின்

இறுதி விக்கல்களும்

உண்டு இங்கு

சுவருக்கு செவிகள் உண்டு

இருளுக்கு கூர் விழிகளும் உண்டு

பீறிக் கசியும் ரத்தமாய் மேலும்

உண்டு இன்னொன்று

அவளுக்கு.”

ஆழியாளின் கவிதைகளின் பலமே அதன் மொழிதான். ஆணாதிக்க மொழியில் இருந்து விடுபட்டு பெண்கள் தமக்கான மொழியை உருவாக்குதலும் இவரின் படைப்புநெறியாக அமைந்துள்ளதை அவதானிக்கலாம். தமிழ்ச்சூழலில் அம்பை> மாலதி மைத்திரி> குட்டிரேவதி> சுகிர்தராணி> சல்மா> புகலிடத்தில் ரஞ்சனி> சுமதிரூபன் ஆகியோரின் எழுத்துக்களில் இதற்கான எத்தனத்தை தற்காலத்தில் அவதானிக்கமுடியும்.

தாயக வாழ்வு தந்த போரின் வலிகளைப் பதிவுசெய்யும் கவிதைகளில் ‘சி;ன்னப்பாலம்’ கவிதை ஏனைய பல கவிதைகளுக்கு தொடர்ச்சியாய் அமைந்துள்ளது. அது கொண்டு வரும் படிம அடுக்குகள் முக்கியமானவை. அதில் வெளிப்படும் குரூரம் காட்சிப்படிமாகத் தொடர்வதனை கவிதையின் வாசிப்பினூடாக கண்டுகொள்ளலாம். இது போன்ற உணர்வு வெளிப்பாடுகளை பல ஈழக்கவிஞர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். சேரனின் ‘எலும்புக்கூடுகளின் ஊர்வலம்’ கவிதையில் எலும்புக்கூடுகள் அணிநடையாகச் சென்ற பின்னரும் தொடரும் ஓசை ஒழுங்குபோல் ஆழியாளின் இந்தக் கவிதையிலும் தொடர்கிறது. இதனை அதியதார்த்தக் (Surrealism) கவிதைகளில் வெளிப்படும் பண்புக்கு இணையாக ஒப்பிடலாம்.

“------------------------------

சின்னப் பாலத்தடிக்கு

நித்தம் செட்டை அடித்து வந்தன

வழக்கத்திலும் கொழுத்த

ஒற்றைக்கால் கொக்குகளும்> சுழியோடும் நீர்க்கோழிகளும்.

அவற்றிலும் அதிகமாய்

விளைந்து கிடந்தன

ஊறி அழுகிய பிணங்களின்

வாசனை முகர்ந்து> சுவை அறிந்த

ஜப்பான் குறளிகளும்> குறட்டை பெட்டியான் மீன்களும்.

கபறக்கொய்யாக்களோ

எவ்வித நிர்ச்சலனமுமின்றி

நீரிற் பொசிந்து}றிய மனிதக் கபாலங்களை

ஆளுக்கு ஐந்து ஆறாய்ப்

பங்கிட்டுக் கொண்டன – சண்டை சச்சரவின்றி

சமாதானத்துடனே.

தேவைப்படும்போது

அவை பின்னிற்பதில்லை

தம் நாவால் மனிதக் கட்குழிகளை நீவிக்

கறுத்த விழிகளைத்

திராட்சைகளாய் உறிஞ்ச.

---------------------------”

இவை தவிர ஆழியாளின் கவிதைகளில் அந்நியமும் தனிமையும் வெளிப்படுவதையும் அவதானிக்கலாம். ‘மரணம்’ என்ற கவிதையில் அவர் தனது தனிமையை வெளிப்படுத்த எடுத்துக்கொள்ளும் உவமை அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது.

“கலங்கரை விளக்கத்து

இரவுக் காவலாளியாகவும்

ஆறடிக் குழியுள்

மெளனம் புடைசூழ இறக்கப்பட்ட

பிணமொன்றைப் போலவும்

தனித்தே

மிகத் தனித்தே இருக்கின்றேன்.”

கொடூரமான கனவுகளே வாழ்வாகிப் போன நிலையில் கவிதை சார்ந்த அழகியலும் சூழல் சார்ந்தே இயங்குவதனைக் கண்டு கொள்ளலாம். இது இவரது அதிகமான கவிதைகளுக்குப் பொருந்தக்கூடியது. சின்னப்பாலம்> கி.பி.2003 இல் தைகிரீஸ்> மரணம்> ஞாபக அடுக்குகள் ஆகியவற்றில் வரும் படிமங்கள் முக்கியமானவை.

உணர்வும் தர்க்கமும் இழையோடும் கவிதைகளில் அவை வெளிப்படுத்த விளையும் பொருட்பரப்பும் அதன் அழகியலும் மிகக் கட்டிறுக்கமாக பல கவிதைகளில் அமைந்துள்ளன. குறியீட்டு அர்த்தமுடைய கவிதைகள் வாசிப்பில் பல அர்த்தத் தளங்களுக்கு இடங்கொடுக்கின்றன.

கவிதைகளின் அர்த்தத்திற்கு ஏற்ப சில கவிதைகளில் துருத்திக் கொண்டு நிற்கும் சாத்தியமில்லாத பந்தி பிரிப்பு தவிர்த்திருக்கக்கூடியதே. சின்னப்பாலம்> விமானநிலையச் சந்திப்பு ஆகியவற்றில் வரும் இறுதி இரண்டு பந்திகளுமே அவை.

அதிகளவான பெண் படைப்பாளிகள் தொடர்ந்து எழுதுவதில்லை என்ற குற்றச்சாட்டு விமர்சகர்களால் முன்வைக்கப்படுவதுண்டு. இது படைப்பு நெறி சார்ந்து நோக்கும்போது பெண் படைப்பாளிகளிடம் இருக்கும் முக்கிய குறைபாடாகும். அந்த நிலையில் இருந்து விடுபட்டு தொடர்ச்சியாக தனது படைப்பைச் சாத்தியமாக்க வேண்டிய தேவை ஆழியாளுக்கும் உண்டு. அதற்குரிய வீச்சும் புதிய விளைவும் ஆழியாளிடம் நிரம்பவே உள்ளன என்பதை வெளிவந்துள்ள இரண்டு தொகுப்புக்களுமே நிரூபிக்கின்றன. இந்த வகையில் புலம்பெயர்ந்த பெண் கவிஞர்களின் படைப்புக்களில் கவனத்திற்கு உட்படுத்த வேண்டியதும் ஈழத்தமிழ்ப் படைப்புக்களில் தவிர்க்க முடியாததுமான ஒரு தொகுப்பாக துவிதம் அமைந்துள்ளது என்பது வெளிப்படையான உண்மையாகும்.

thanks:- jeevanathy magazine jaffna,thinnai.com

No comments:

Post a Comment