சு.குணேஸ்வரன்..................................
புலம்பெயர் படைப்பிலக்கியம் தோற்றம் பெற்று இற்றைக்கு இரண்டு தசாப்தங்களைக் கடந்து விட்ட போதிலும் இவ் இலக்கியம் பற்றிய தேடல் இன்னமும் தொடர்ந்தவண்ணமே உள்ளது. இதனை நுணுகி நோக்கும்போது இன்னமும் பல வெளிச்சங்கள் எங்களுக்குத் தென்படும். அந்த வகையிலே இக்கட்டுரையானது புலம்பெயர் தமிழ்ப் படைப்புலகில் பிரதேசச் செல்வாக்கினை ஆராய்வதற்கான ஓர் அறிமுகக் குறிப்பாகவே அமைகின்றது.
1983 இன் பின்னர் இலங்கையில் உத்வேகம் பெற்ற இனவுணர்வுச் சூழல் பெருமளவான ஈழத் தமிழர்களை மேற்குலக நாடுகளை நோக்கிப் புலம்பெயர வைத்தது.
புலம்பெயர் இலக்கியம் என்ற வரையறைக்குள் நவீன இலக்கிய வடிவங்களாகிய கவிதை சிறுகதை நாவல் ஆகியவற்றையே முதன்மையாக கருத்திற் கொள்கின்றோம். அவற்றின் உள்ளடக்க ரீதியான பண்புகளைச் சுட்டும்போது ஒரு பொதுமைக்குள் நின்றுகொண்டே இதுவரை விவாதித்திருக்கின்றோம்.
ஈழத்து இலக்கியத்தின் போக்கினை மதிப்பிடும்போது எவ்வாறு பிரதேச அலகுகளை மனங்கொண்டு எமது மதிப்பீட்டினை முன்வைக்கிறோமோ அதேபோல் புலம்பெயர் இலக்கியத்தின் பிரதேச வேறுபாடுகளை மனங்கொண்டு புலம்பெயர் இலக்கியம் பற்றிய மதிப்பீட்டினை முன்வைக்கும்போது சில தெளிவீனங்கள் விடுபட வாய்ப்பு ஏற்படும் என்று கருதலாம்.
ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற மூன்று கண்டங்களிலும் (அவுஸ்திரேலியா,அமெரிக்கா,ஐரோப்பா) உள்ள நாடுகளின் சமூக பொருளாதார அரசியல் சூழலியல் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு அவை குறிக்கும் உள்ளடக்கத்தை மிக நுண்மையாக வகைப்படுத்தவும் முடியும்.
அவுஸ்திரேலியா தனியாகவும்,அமெரிக்காக் கண்டத்திலுள்ள கனடா, அமெரிக்கா தனித்தனியாகவும், ஐரோப்பாக் கண்டத்திலுள்ள ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்கண்டிநேவிய நாடுகளான நோர்வே, டென்மார்க், நெதர்லாந்து, பின்லாந்து, சுவீடன், ஆகியவற்றைத் தனித்தனியாகவும் நோக்க முடியும்.
புலம்பெயர் படைப்புலகின் உள்ளடக்கத்தினை தாயகநினைவு, அகதிநிலை, தொழிற்தள அநுபவம், புதிய பண்பாட்டுச் சூழல், நிறவாதம், இனவாதம், புவியியற்சூழல், வித்தியாசமான வாழ்வுலகு, அந்நியமயப்பாடு, அனைத்துலக நோக்கு, என பொதுமைப் பண்பிற்கூடாகச் சுட்டினாலும் இவை எல்லா நாடுகளுக்கும் பொதுவானவை என்று கருத முடியாது. சில நாடுகளில் இருந்து வருகின்ற படைப்புக்களில் சில பண்புகள் மிக அதிகமாகவும் மற்றைய நாடுகளில் இருந்து வருகின்ற படைப்புக்களில் இப்பண்புகள் மிகக் குறைவாகவும் இருப்பதற்கு வாய்ப்புண்டு.
உதாரணமாக இனவாதம் நிறவாதம் சார்ந்த பிரச்சனைகளை ஜேர்மனியிலும் கனடாவிலும் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் நிலைப்பாடுகளுக்கு இடையில் வேறுபாடுகள் உண்டு. அதேபோல் பிரான்ஸ் ஜேர்மனி, சுவிஸ் ஆகிய நாடுகளில் மொழிசார்ந்து தமிழர்கள் எதிநோக்கும் பிரச்சனைகளுக்கும் இலண்டன் கனடா அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. இதுபோல்தான் புவியியல் சார்ந்த இயற்கை அமைப்பிலும் வேறுபாடு உண்டு.
இவற்றை தனித்தனியான நுண்ஆய்வின் மூலமே கண்டு கொள்ள முடியும். இதற்கு அமைவாக இக்கட்டுரையானது ஈழத்துப் பிரதேச செல்வாக்கு எவ்வாறு புலம்பெயர் படைப்புலகில் காணப்படுகின்றது என்பதனை ஓர் ஆரம்ப கட்ட முயற்சியாக எடுத்துக் காட்ட முயல்கின்றது.
முதலில் கவிதைகளில் நோக்குவோம்.
“பலா இலை மடித்துக் கோலி
ஈர்க்கில் துண்டை முறித்துச் செருகி
ஓடியல் மீன் கூழை வார்த்து
அம்மா அப்பா தம்பி ஆச்சி என
சுற்றமும் சூழ இருந்து
உறிஞ்சிக் குடித்த நாட்கள்”
என்று தன் உறவுகளுடன் சொந்த மண்ணில் இருந்து மகிழ்வாக உண்டு களித்த நாட்களை நினைவுகளாக மீட்டுப் பார்க்கின்றார் கவிஞர் செழியன். இங்கு எமது மண்ணுக்கேயுரிய உணவுப் பழக்கம் எடுத்துக் காட்டப்படுகின்றது.
தாயகத்தை விட்டுப் பிரிந்து புவியியற் சூழலிலிருந்து பெரிதும் வேறுபட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ முற்படும்போது, சொந்தநாட்டு மண்மீதான நினைவும் ஏக்கமும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஏற்படுதல் தவிர்க்க முடியாததாகும். பனிநிறைந்த வீதிகளும் வானளாவிய கட்டடங்களும் நிறைந்த தேசத்திலே இயந்திர வாழ்வுடன் போராடி மூச்சுத் திணறி வாழும் வாழ்க்கையிலே கவிஞா;கள் தமது தேசத்தை ஏக்கத்துடன் நினைத்துப் பார்க்கின்றார்கள்
தாயக மண்ணின் இயற்கை அழகும் அதனோடு இயைந்த வாழ்வும் நினைவுகளை மீட்கின்றன. கிடுகுவேலி. பனைவடலி, கிணறு, வயல், வீடு, முற்றம், கோவில், எல்லாமே நினைவுகளாகின்றன. இதனாலேயே கவிஞர் செல்வம் ‘கட்டிடக் காட்டுக்குள்’ என்ற கவிதையில் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார்.
“சிறுகுருவி வீடு கட்டும்
தென்னோலை பாட்டிசைக்கும்
சூரியப் பொடியன் செவ்வரத்தம் பூவை
புணரும் என் ஊரில் இருப்பிழந்தேன்.
அலை எழுப்பும் கடலோரம் ஒரு வீடும்
செம்மண் பாதையோரம்
ஓர் தோட்டமும்
கனவுப் பணம் தேட
கடல் கடந்தோம்
நானும் நாங்களும்
அகதித் தரையில்
முகமிழந்தோம்.”
என்று கட்டிடக் காடாகிப் போன அந்நிய தேசத்தில் வாழ்ந்து கொண்டு ஊரின் நினைவினை மீட்டுப் பார்க்கின்றார். தாயக மண்ணுடனான உறவில் இருந்து பிரிந்து ஆண்டுகள் பலவாகிய பின்னரும் காலவெள்ளம் எதையெல்லாம் புரட்டிப் பார்க்கின்றது என்பதனை பின்வரும் கவிதை வரிகள் ஊடாக நோக்கலாம்.
“வித்து வெடித்து முளைத்து விட்ட மண்ணிலிருந்து
பிடுங்கி எறியப்பட்டு
ஆண்டுகள் பத்தாயிற்று
நான் புரண்ட செம்பாடு
வியர்வையில் குழைத்து எழுப்பிய வீடு
மூலைக் கன்று மா
முற்றத்து மல்லிகை
எஞ்சிக் கிடந்த அப்பாவின் புகைப்படம்
ஊர் சுற்றக் கிடைத்த சைக்கிள் கட்டை
சூரன் நாய்
காலவெள்ளம் எதையெல்லாம்
புரட்டிச் செல்கிறது.”
என்று ‘பனிவயல்; உழவு’ தொகுப்பின் முன்னுரையில் கவிதை வரிகளாகவே எழுதுகின்றார் திருமாவளவன்.
இவ்வாறாக ஈழத்து மண்ணின் வாழ்வும் வளமும் தாயக நினைவு சார்ந்த கவிதைகளிலே பிரதேசச் செல்வாக்குடன் பதிவுபெறுவதனை கண்டு கொள்ளலாம்.
இதேபோல் புனைகதைகளில் ஈழத்துப் பிரதேச செல்வாக்கு எவ்வாறு பதிவு பெற்றுள்ளது என்பதனையும் நோக்கமுடியும்.
அ. இரவியின் ‘காலம் ஆகி வந்;த கதை’ என்ற சிறுகதைத் தொகுப்பில் யாழ்ப்பாண மண்ணுக்கேயுரிய பண்பாட்டு அம்சங்களைக் கண்டு கொள்ள முடியும். ஒரு சிறுவனின் உளநிலையில் கூறப்படும் கதையூடாக கதைக்குரிய காலத்தையும், எம் மண்ணுடன் இரண்டறக்கலந்த வாழ்வையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றார்.
பிள்ளைப் பருவ நினைவுகளுடாக (child hood) பாடசாலைப் பருவ வாழ்க்கை, கோயிற் சம்பவங்கள், ஊர் நினைவுகள் (இதனுள் கோயிற்பண்பாடு, சமூகத்தொடர்பு, மரபு, நம்பிக்கை, கலை என்பன ஊடுபாவாக கதைகளில் உள்ளடங்கியுள்ளன) என எல்லாவற்றையும் சம்பவங்களாக அடுக்கிச் செல்கிறார். ஈழத்துப் படைப்பிலக்கியத்திலே இவ்வாறான பிள்ளைப் பருவ நினைவினூடாக, பிரதேசச் செல்வாக்குடன் கதை கூறியவர்கள் மிகக் குறைவென்றே கூறலாம்.
இதேபோல் அ. முத்துலிங்கத்தின் பல சிறுகதைகள் யாழ்ப்பாண மண்ணின் மணங்கமழ சித்தாpக்கப்பட்டுள்ளன. முத்துலிங்கத்திடம் புறவுலகம் சார்ந்த சித்தாpப்பு மிக நுண்மையாக இருந்தபோதும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழாpன் இரத்தமும் சதையுமான வாழ்வனுபவம் மிகக் குறைவு என்றே கூறலாம். ஷோபாசக்தி, குமார்மூர்த்தி, சக்கரவர்த்தி, பொ. கருணாகரமூர்த்தி ஆகியோர் காட்டுகின்ற புலம்பெயர் வாழ்வனுபவத்திற்கும் முத்துலிங்கம் காட்டுகின்ற புலம்பெயர் வாழ்வனுபவத்திற்கும் இடையில் நிரம்ப வேறுபாடுகள் உள்ளன.
முத்துலிங்கத்திடம் காணக்கூடிய பல விசேட அம்சங்களில் ஒன்றாக ஈழத்து அடுக்கமைவுகளைத் தீண்டாத கதைகூறும் பாணி மிக முக்கியமானது. முத்துலிங்கத்தின் மனக்கிடங்கின் ஆழத்திலிருந்து வெளிப்படும் பல கதைகளில் யாழ்ப்பாணத்து வாழ்வினோடு ஒட்டிய பிரதேசச் செல்வாக்கைக் கண்டு கொள்ள முடியும். ‘தில்லையம்பல பிள்ளையார் கோயில், அம்மாவின் பாவாடை’ ஆகிய கதைகளை இவற்றுக்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம்.
‘அப்பா முன் சீட்டில் இருந்து சுருட்டைப் பற்ற வைத்தார். வுட்போட்டில் நின்றபடி ஒரு கை உள்ளே பிடிக்க, மறு கை வெளியே தொங்க சின்னமாமா சிகை கலைய, அங்கவஸ்திரம் மிதக்க ஒரு தேவதூதன் போல பறந்து வந்தார். அந்தத் தருணத்தில் எனக்கு சின்ன மாமாவிடம் இருந்த மதிப்பு பன்மடங்கு பெருகியது.’ (தில்லையம்பல பிள்ளையார் கோயில்)
‘காரைக் கண்டதும் கட்டை வண்டிகள் எல்லாம் ஓரத்தில் நின்றன. சைக்கிள்காரர்கள் குதித்து இறங்கி வழிவிட்டனர். மூட்டை சுமப்பவர்களும்> பாதசாரிகளும் வேலிக்கரைகளில் மரியாதை செய்து ஒதுங்கினார்கள். இன்னும் பலர் வாயை ஆவென்று வைத்துக் கொண்டு, காரின் திசையை அது போய் பல நிமிடங்கள் சென்ற பின்னும்> பார்த்தபடி நி;ன்றார்கள். டிரைவர் பல சமயங்களில் பாதசாரிகளி;ன் வேகத்தை ஊக்குவிக்கும் முகமாக பந்துபோல உருண்டிருக்கும் ஒலிப்பானை அமுக்கி ஓசை உண்டாக்கினார்.’ (தில்லையம்பல பிள்ளையார் கோயில்)
இன்னோர் புறமாக, முத்துலிங்கம் தன் உலகளாவிய பயண அநுபவத்தின் மூலம் தமிழுக்குத் தரும் புதிய கதைகள் கவனத்திற் கொள்ளத்தக்கவை. அவை அந்தந்த நாட்டுப் பிரதேச அனுபவங்களாக விரிகின்றன. பாகிஸ்தான் பிரதேச அநுபவத்திற்கூடாகக் கூறப்படும் ‘ஒட்டகம்’ கதை இதற்கு நல்ல உதாரணமாகும். இதேபோல் ஏனையநாட்டு அனுபவங்களினூடாகவும் வரும் பல கதைகள் இவரிடம் உள்ளன. இவையெல்லாம் தனித்த பார்வைக்குரியன.
இலண்டனில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற விமல் குழந்தைவேலின் ‘அசதி’ தொகுப்பிலுள்ள பல சிறுகதைகள் மட்டக்களப்பின் அக்கரைப்பற்று கோளாவூர் பிரதேசங்களை உள்ளடக்கிய தென்கிழக்கு பிரதேசச் செல்வாக்கினை நமக்குக் காட்டுகின்றன. இவரி;ன் அசதி தொகுப்பிலுள்ள ‘ஆச்சியும் பூசாரியும், சின்னாம்பி, அசதி, பேய் நாவை, வெள்ளாவி’ ஆகிய சிறுகதைகள் சிலவற்றை எடுத்துப் பார்க்கலாம்.
விமல் குழந்தைவேலிடம் ஈழத்தின் கிராமியச் செல்வாக்குடன் கூடிய வாழ்வனுபவம் அவரின் படைப்புக்க@டாக வெளிப்படுதல் மிக முக்கியமானது. மரபுகள், நம்பிக்கைகள், வழக்காறுகள், என்பவற்றுடன் அவர் கையாளும் வட்டார வழக்கு மொழிநடையும் முக்கியமானது.
இதேபோல்தான் இவரின் ‘வெள்ளாவி’ என்ற நாவலும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இந்நாவலில் இலங்கையின் தென்கிழக்குப் பிரதேசத்தின் கிராமியச் செல்வாக்கு உள்ளமை கண்டுகொள்ளலாம். கோளாவில், அக்கரைப்பற்று. தீவுக்காலை, பனங்காடு ஆகிய சிறு சிறு கிராமங்களைச் சுற்றியே கதைக்களம் அமைந்துள்ளது. அப்பிரதேசத்து மக்களின் வாழ்வுடன் சலவைத்தொழிலாளர் சமூகத்தின் உயிர்த்துடிப்பான வாழ்வும், தலைமுறை தலைமுறையாக அவர்களைச் சுரண்டி வாழும் போடியார் சமூகம் பற்றிய பதிவும் இந்நாவலில் எடுத்துக்காட்டப்படுகின்றது.
இந்நாவலின் மொழிநடைக்கு ஓர் எடுத்துக்காட்டாக,
முன்னுக்கும் பின்னுக்கும் ரெண்டு பொண்டுகள் குடை பிரிச்சிப் புடிச்சிக் கொண்டு நடக்க> ரெண்டு குடையையும் தொடுத்தாப்போல போட்ட வெள்ளவேட்டி பந்தலுக்குள்ள பலகாரப் பொட்டியளயும் தட்டுக்களயும் எடுத்துக் கொண்டு பொண்டுகள் நடக்க மெல்ல மெல்ல நடந்து வந்த மாப்பிள்ளை ஊட்டாக்கள் பொண் ஊட்டு கடப்படிக்கு வந்ததும் தடுத்து நிறுத்தினாப் போல நகராமல் நிண்டுடுவாங்கள். கேட்டா இவ்வளவு தூரம் நடந்து வந்த மாப்பிள்ளை ஊட்டாக்கள் பொண்ணூட்டாக்கள் கடப்படிக்கு வந்து வரவேற்று உள்ளுக்கு கூட்டிப்போகோணும் எண்டு சொல்லுவாங்க (வெள்ளாவி)
‘இண்டைக்கு இரிக்கிற நாம நாளைக்கு இரிப்போமோ எண்டுறது நிம்மளம் இல்லாத சீவியத்துல இன்னும் எத்தின நாளைக்குத்தான் சாதி சனத்தோட பகைச்சிக் கொண்டிருக்கிறதாம். அந்த ஆள்ற கதைய உட்டுப்போட்டு அவங்கள கல்யாணம் செஞ்சி வரச் சொல்லுகா’ (வெள்ளாவி)
மேலே எடுத்துக் காட்டிய ஆசிரியரின் எடுத்துரைப்பு மொழியும் பாத்திரங்களின் உரையாடலும் விமல் குழந்தைவேலின் நாவலில் மிக அருகருகாக வருவதனைக் கண்டு கொள்ளலாம். இந்த வட்டாரத்தன்மை விமல் குழந்தைவேலின் நாவலில் கவனத்திற்கு உட்படுத்த வேண்டியதாகும்.
டென்மார்க்கில் இருந்து எழுதும் கி. செ. துரை சிறுகதைகளும் எழுதி வருபவர். இவரின் ‘திரியாப்பாரை’ சிறுகதையும் ‘சுயம்வரம்’ என்ற நாவலும் இவ்வகையில் கவனத்திற்கு உரியனவாகின்றன. ‘சுயம்வரம்’ நாவலில் வடமராட்சி கடற்கரைப் பிரதேச மக்களின் வாழ்வும் அவர்களின் மொழியும் பதிவாகியுள்ளதை அவதானிக்கலாம்.
“பிரித்து வைக்கப்பட்டிருந்த கடதாசிச் சரையில் பன்னிரெண்டாம் நம்பர் து}ண்டில்கள் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன. தங்கூசியை நன்றாக இழுத்து, விரலிடுக்குகளால் நீவி பக்குவமாக தூண்டில்களில் பெருக்கிக் கொண்டிருந்தார் கிழவர். தொழிலின் அநுபவமும், பொறுமையும் அவர் போடும் முடிச்சுக்களின் இறுக்கத்தில் பரிமளிக்கும். ஆகையால் தான் தூண்டில் போடும் கிட்டத்திற்கு அரிப்புக்கட்டி ஈயக்குண்டு போடுவதில் அந்த வட்டாரத்தில் மயிலருக்குத் தனிப்பெயருண்டு.” (சுயம்வரம்)
‘இந்த முறை விளைமீன் சீசனை ஒரு கை பார்த்துப்போடவேணும்’ என்று நினைத்துக் கொண்டே கிட்டத்தையும் தூண்டில்களைப் பிணைத்திருந்த அரிப்பையும் இணைத்துப் போட்ட பிரதான முடிச்சையும் ஒரு மூச்சுக் கொடுத்து இறுக்கிக் கொண்டபோது: வெளியே அவரது மனைவி ஆச்சிமுத்துக் கிழவி யாரையோ திட்டிக் கொண்டிருப்பது கேட்டது. வேலையைப் போட்டது போட்டபடி விட்டுவிட்டு வெளியே வந்து எட்டிப்பார்த்தார்’ (சுயம்வரம்)
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘தில்லையாற்றங்கரை’ நாவலும் பிரதேசச் செல்வாக்கைக் கொண்ட நாவலாகவே அமைந்துள்ளது. குழந்தைப் பருவத்தைத் தாண்டி குமரியாகிக் கொண்டிருக்கும் மூன்று பெண்பிள்ளைகளின் கதையைக் கிராமிய மணங்கமழ சொல்ல வருகின்ற ஆசிரியர் அம்மண்ணுக்கோpய வழிவழியாக வந்த மரபுகளை வழக்கடிபாடுகளை எடுத்துக் காட்டுகி;ன்றார்.
ஷோபாசக்தியின் ‘கொரில்லா’ நாவலின் மொழிநடையை தீவகத்திற்குரியது என்ற ஒரு கூற்றும் உள்ளது. இந்நாவலில் மொழி தீவகத்திற்குரியதாக இருந்தாலும் அப்பிரதேச மக்களின் உரையாடல் மொழியும், தமிழ்ப்போராளி அமைப்புக்கள் தமக்கேயுரிய ஒரு மொழிநடையினை கையாள்வதனை இந்நாவல் பதிவுசெய்வதனை அவதானிக்க முடியும்.
‘ஹெய் நிலத்தில வடிவா சப்பாணி கொட்டி இரும் ஐஸே’ காலில குந்தியிருந்த ரொக்கிராஜ் பொத்தெண்டு நிலத்தில சப்பாணிகொட்டி சக்கப்பணிய இருந்தான். ‘என்ன சவம் வந்தது வராததுமாய் மாஸ்டரிட்ட ஏச்சு வாங்கி;ப் போட்டேனே’ எண்டு அவன் சாpயாய்க் கவலைப்பட்டான். (கொரில்லா, ப. 66)
“ஐயோ தம்பியவை இஞ்ச ரத்தத்தைப் பார்த்தீங்களோ? நான் பிள்ள குட்டிக்காரன் கண்டீங்களோ? இந்தக் கொரில்லா எண்டுறவன் நெடுக நெடுக கடையில வந்து வெத்திலை, பீடி, சுருட்டு எண்டு நித்தம் ஒரு அரியண்டம் குடுத்துக் கொண்டேயிருக்கிறான். நானும் வயித்துப்பாட்டுக்காய் ஊர் விட்டு ஊர் வந்து கடை திறந்த இந்த ரெண்டு வரியத்திலயும் ஒரு நாள் எண்டாலும் அவனுக்கு குடுத்த சாமான்களுக்கு ஒரு சதமெண்டாலும் வேண்டியறியன்….” (கொரில்லா, ப. 94)
இந்த இரண்டு உரையாடலுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதனைக் கண்டு கொள்ளலாம். ஒரு வகையில் இளைஞர்களின் உரையாடல் ஈழத்துக்கேயுரிய பொதுவான நியமத்திற்குள் உள்வாங்கப்படுகின்றது. இவையும் கூட பிரதேசச் செல்வாக்காகக் கருதலாம்.
இவ்வகையில் புலம்பெயர் இலக்கியத்தில் உள்வாங்கப்பட்டுள்ள பிரதேசச் செல்வாக்கினை கண்டுகொள்ள முடியும். ஈழத்தின் தமிழ்ப் பிரதேசங்களில் மக்களின் வாழ்வும் அந்த வாழ்வினோடு இரண்டறக் கலந்துவிட்ட தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளும் மிக அழகாகப் புலம்பெயர் படைப்புக்களில் பதிவு பெற்றுள்ளன. இவை பற்றிய மேலதிக பார்வைகளும் முன்வைக்கப்படவேண்டும். அதேபோல் புலம்பெயர் படைப்புக்களின் அந்தந்த நாட்டு வாழ்வனுபவங்களும் அப்பிரதேசத்திற்கேயுரிய சிறப்புப் பண்புகளும் எடுத்து நோக்கப்படவேண்டும். அப்போதுதான் பொதுமைப் பண்புகளுள்ளே பல சிறப்புக் கூறுகள் இருப்பதனைக் கண்டு கொள்ள முடியும். அதற்கு ஓரு அறிமுகக் குறிப்பாகவே இக்கட்டுரை அமைந்துள்ளது.
நன்றி :- ஞானம் 100 வது இதழ்/ pathivukal.com
No comments:
Post a Comment