Saturday, January 11, 2025

ஒரு சமூகத்தின் விழிப்பும் மாற்றமும் : செங்கை ஆழியானின் பிரளயம்

 

கலாநிதி சு. குணேஸ்வரன்

    ழத்தில் அதிகமான புனைகதைகளை எழுதியவர் செங்கை ஆழியான். இலக்கியத்துறை மட்டுமல்லாமல் நிர்வாகத்துறையிலும் கல்வித்துறையிலும் ஈடுபட்டவர். ஈழத்து இலக்கியச் சூழலில் சாதாரண மக்களின் பல்வேறு பிரச்சினைகளையும் வாழ்க்கைப் பாடுகளையும் தனது எழுத்துக்களில் கொண்டு வந்தவர். யாழ்ப்பாண மொழிவழக்கை எந்தப் பூடகமுமின்றி தனது படைப்புகளில் எடுத்தாண்டவர். இவரின் அதிகமான படைப்புகள் பத்திரிகைகளில் பிரசுரமானவை. அதனால் மக்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்ட எழுத்தாளராகவன்றி மக்கள் மத்தியில் வாசிப்பைப் பரவலாக்குதவற்கும் காரணராக இருந்திருக்கின்றார்.

     எழுத்து முயற்சிகளுக்கு அப்பால் செங்கை ஆழியானின் பணிகள் பல விதந்து பாராட்டத்தக்கவை. அவற்றுள் ஒன்று அவரது தொகுப்பு மற்றும் பதிப்பு முயற்சிகள். சிதைந்தும் சிதறியும் போயிருந்த ஈழத்துப் படைப்புகளை ஒன்று திரட்டித் தொகுப்புகளாகத் தந்த அவரின் பணியைக் குறைத்து மதிப்பிடமுடியாது.  

   புனைகதை இலக்கியம் சார்ந்து பல்வேறு பொருண்மையில் எழுதியிருந்தாலும் சாதியம் சார்ந்த வகையில் இரண்டு குறுநாவல்களை எழுதியுள்ளார். ஒன்று பிரளயம். மற்றையது அக்கினி, பிரளயம், 1971 இல் 'மயானபூமி' என்ற தலைப்பில் சிரித்திரனில் தொடராகப் பிரசுரமாகி 1975 இல் சில மாறுதல்களுடன் 'பிரளயம்' என மாற்றம் பெற்று வீரகேசரிப் பிரசுரமாக நூலுருப் பெற்றது. 1976 இல் சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றது. இரண்டாம் பதிப்பு 1989இல் கமலம் பதிப்பாக வந்தது. மற்றொரு நாவல் 1987இல் ஈழநாடு வாரமஞ்சரியில் வெளியாகிய அக்கினி என்பதாகும். இவற்றினைவிட அக்கினிக்குஞ்சு, என்ற குறுநாவலிலும் சிரித்திரன் ஆண்டு மலரில் வெளிவந்த நிலமகளைத்தேடி என்ற குறுநாவலிலும் சாதிப்பிரச்சினை பற்றி எழுதியுள்ளார்.

  இந்த வகையில் அவரின் பிரளயம் என்ற நாவல் பற்றி நோக்குவதே இக்கட்டுரையின் பணியாக அமைகிறது.

  சலவைத் தொழிலாளர் சமூகம் அடிமை குடிமை நிலையில் இருந்து விடுபடத் துடித்த உணர்வுநிலையை கதைக்கருவாகக் கொண்டதே பிரளயம் ஆகும்.

 வேலுப்பிள்ளை என்ற குடும்பத்தை மையமாகக் கொண்டு வண்ணார்ப்பண்ணையைக் களமாகக் கொண்டு இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது. மூத்தமகள் ராணி படிப்பிலும் வீட்டைக் கொண்டு நடாத்துவதிலும் கெட்டிக்காரி எனப் பேர்பெற்றவள்.  வேலுப்பிள்ளையின் இளைய மகள் சுபத்திரா படிப்பை நிறுத்திவிட்டு தையல் வேலைக்குச் சென்று வருபவள். அவள் உயர்சமூகத்தைச் சேர்ந்த வாமதேவன் என்ற வாலிபனைக் காதலிக்கிறாள். இக்காதல் விவகாரம் வாமதேவனின் பெற்றோருக்குத் தெரியவர அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் தமது சமூகத்திற்குள் திருமணம் செய்து வைக்கின்றனர். வாமதேவனால் ஏமாற்றப்பட்டமை அறிந்து வயிற்றில் கருவோடு நிற்கிறாள் சுபத்திரா. வேலுப்பிள்ளைக்கு இவையெல்லாம் தெரியவர அவரும் குடும்பமும் நிலைகுலைந்து போகிறது. சுபத்திராவுக்கு நியாயம் கேட்க தந்தை வேலுப்பிள்ளை செல்கிறார். அங்கு வாமதேவனின் பெற்றோரால் வேலுப்பிள்ளை ஏளனப்படுத்தப்படுகிறார். ஆனால் வாமதேவனின் தம்பி மகாலிங்கம் ஏற்கனவே முற்போக்கான எண்ணம் கொண்டவன். ஊரில் புதிய தலைமுறையினரின் மனமாற்றத்திற்கு உதாரணமாகக் கூறப்படுபவன். தன் தமையனால் ஏமாற்றப்பட்ட சுபத்திராவை மகாலிங்கம் ஏற்றுக்கொள்ள முன்வருகிறான்.

    இந்நாவலில் வழமையான கதைபண்ணும் போக்கில் செங்கையாழியான் தனது கதையை நகர்த்தாமல் புதிய தலைமுறையினரின் சிந்தனையூடாகவே சமூக மாற்றம் சாத்தியம் என்பதைக் காட்டுகிறார். எவ்வாறெனினும் சாதிமீறிய காதலும் திருமணமும் வாழ்க்கையில் பல பிரச்சினைகளுக்கு வழிகோலக்கூடியவையாகவே காலங்காலமாக அமைந்திருக்கின்றன.

      ஒரு புதிய சிந்தனையை முன்வைத்த வகையில் செங்கையாழியானின் இந்நாவல் அப்போது பலராலும் சிலாகித்துப் பேசப்பட்டது. சு.வித்தியானந்தன் எழுதிய ஒரு குறிப்பை இத்துடன் பொருத்திப் பார்க்கலாம்.

'குறிப்பாக, சாதி ஏற்றத்தாழ்வு என்ற சமூகக் குறைபாட்டைப் பொருளாகக் கொண்டு இவரால் படைக்கப்பட்ட பிரளயம் நாவல் யாழ்ப்பாணக் கிராமமொன்றிலே நிகழ்ந்து வரும் சமுதாய மாற்றத்தை அதன் இயல்பான நடப்பியல்புடன் காட்டுவது, நீண்ட காலமாக உயர்சாதிக் குடிமை செய்து வந்த சலவைத் தொழிலாளர் குடும்பம் ஒன்று கல்வி, பிறமொழி முயற்சிகள் என்பவற்றால் அக்குடிமை நிலையிலிருந்து விலகிப் புதிய வாழ்;க்கை முறைக்கு அடியெடுத்து வைக்க முயல்வதே இந்நாவலின் கதைப்பொருள். இம்மாற்றத்திற்கு இளைய தலைமுறை முனைந்து நிற்கிறது. ஆனால் முதிய தலைமுறை பாரம்பரியச் சிந்தனை ஓட்டத்திலிருந்து விடுபட முடியாமல் நிற்கிறது.' (காட்டாறு முன்னுரையில் சு. வித்தியானந்தன்)

   ஈழத்து நாவல்களில் சாதிப்பிரச்சினையை மையமாகக் கொண்டு நீலகண்டன் ஓர்சாதி வேளாளன் (1925), எஸ். தம்பிமுத்துப்பிள்ளையின் அழகவல்லி (1925) ஆகியன முதல் முயற்சிகளாக இருந்தாலும் இப்பிரச்சினையினை சமூக வரலாற்று நோக்கில் பின்வந்த எழுத்தாளர்கள் நோக்கினர். அவர்களுள் இளங்கீரன், செ. கணேசலிங்கன், கே. டானியல், தெணியான், செ. யோகநாதன் முதலானோர் சாதியத்தை வர்க்க அடிப்படையில் நோக்க சொக்கன், செங்கை ஆழியான், தி.ஞானசேகரன், சோமகாந்தன் முதலானோர் சமூக விமர்சன அடிப்படையில் நோக்கினர்.

'சமுதாய வரலாற்று நோக்கில் நாவல் படைக்கும் முயற்சியில் முக்கியமான இருவகை அணுகுமுறைகள் காணப்பட்டன. ஒருவகை இப்பிரச்சினையைப்  பொதுவுடைமைக் கோட்பாட்டு அடிப்படையில் ஒரு வர்க்கப் போராட்ட வரலாறாக நோக்குதல். இன்னொரு வகை,  இதனை சமுதாயத்தின் இயல்பான சிந்தனை மாற்றத்தின் வரலாறாக நோக்குதல். இவற்றின் முதல்முறை அணுகுமுறை செ. கணேசலிங்கன், கே.டானியல், என்போரால் மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவது அணுகுமுறையை மேற்கொண்டோரில் ஒருவர் செங்கை ஆழியான். அவரது இந்த நாவல் இவ்வணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள தரமானதொரு ஆக்கமாகும். தாழ்த்தப்பட்டோர் உயர்த்தப்பட்டோர் இரு சாரரிடத்தும் நிகழும் சிந்தனை மாற்றங்கள் இயல்பாகவே சமுதாய மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை இந்நாவல் உணர்த்தியமைகிறது. (நா. சுப்பிரமணியம், அணிந்துரை, பிரளயம். ப.5)

       கல்வியில் உயர்வடைவதும் ஒடுக்குதலுக்குரிய பாரம்பரியத் தொழிலில் இருந்து வேறுபட்ட தொழில் முயற்சிக்கு மாற்றத்தை வேண்டுதலும் இக்கதையில் முதன்மையான பேசுபொருள்களாக அமைந்திருக்கின்றன.

  பெண்பிள்ளைகள் தொடர்ந்து கற்பதை குடும்பத்தின் மூத்த தலைமுறை அவ்வளவு விரும்பவில்லை என்பது ஆச்சியின் பேச்சினூடாக வெளிப்படுகிறது. 'குசினிக்கை முடங்கப்போற வண்ணாத்திக்கும் படிப்புத் தேவையோ? மூத்த பொம்பிளைப் பிள்ளை வீட்டோட இருந்தால் எவ்வளவு உதவியாக இருக்கும்' என்கிறாள். இது அவர்களின் வழிவழியாக வந்த எண்ணமாக இருக்கின்றது.

  ஆனால் ராணி முதல் ஏனைய சகோதரர்வரை 'நாங்க எல்லாரும் படிக்க வேணும். படிக்காததாலதான் எங்க சாதி இப்பிடிக் கிடக்கு. படிப்பாலைதானே எல்லாரும் முன்னேறி இருக்கினம். எங்கடை ரீச்சர்கூட இதைத்தான் சொல்கிறா. உங்களைக் கும்பிட்டுக் கேக்கிறன் ஐயா. எங்களை மறிச்சுப் போடாதையுங்கோ' என்று ராணி கேட்கிறாள். பாரம்பரியமான எண்ணத்தை மாற்ற விரும்புகிறார்கள். தகப்பன் வேலுப்பிள்ளை அதனை ஏற்றுக் கொள்கிறார்.

'இதோ பார் பொன்னு, படிப்பின் பெருமையை இன்றைக்கு உணர்ந்திருக்கிறன். விதானையார் தம்பிப்பிள்ளையைப் பார். நான் துணி எடுக்கப் போற வேளையெல்லாம் என்ன சொல்லுறார் 'ஏன் வேலுப்பிள்ளை பிள்ளையளையெல்லாம் படிப்பிக்கிறாய் சும்மா மறிச்சுப்போட்டுத் தொழிலைக் கற்றுக் கொடுக்கிறதுதானே. படிச்சாப்போல ஏதோ கிடைக்கப்போகிறதோ? என்று சொல்லுறார். நம்மீது இரக்கப்பட்டா சொல்லுறார் என்று நினைக்கிறாய்? இல்லைப் பொன்னு எங்கை என்ரை புள்ளையள் படிச்சு நல்லா வந்திட்டா, தங்களிலும் பார்க்க உயர்ந்திடும் என்று பயப்பிடுகிறார். என்னோடேயே எல்லாhம் போகட்டும் என்ரை பிள்ளையள் வெள்ள நீருக்கை நின்று விறைக்க வேண்டாம். உச்சி வெயிலுக்கை நின்று காய வேண்டாம்.'

  இதனாலேயே ராணிக்கு முறைமச்சானை திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் விரும்பியபோதும் வேலுப்பிள்ளை, அவள் படிப்பைக் குளப்பவேண்டாம். படிப்பு முடியட்டும் என்று தள்ளிப்போடுகிறார். இந்தப் பச்சைக்கொடி காட்டல் ராணிக்கு மட்டுமல்ல அவளின் சகோதரர்களுக்கும் அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

'இப்ப சோதனை முடிந்ததும் நான் யூனிவசிற்றிக்குப் போகப்போறன். அங்கே மூன்று அல்லது நான்கு வருஷம் படித்துப் பட்டம் பெற்ற பின்புதான் மற்றதெல்லாம்.'

என்று அவளது திருமணப்பேச்சை எடுத்தபோது தாயாரிடமும் கூறுகிறாள்.

     பாடசாலையில் சாதியின் பெயரால் ராணி ஏளனப்படுத்தப்படுதல், வாடகைக்கார் ஓட்டிச் சம்பாதிக்கும் தமையனின் கார் ரயரை வைகாசிப் பொங்கல் திருவிழாவில் கோயிலடியில் குத்திக் கிழித்தல், விதானையார் குடும்பத்தினரின் இழிவுபடுத்தல்கள், வாமதேவனின் தகப்பன் வேலுப்பிள்ளையை கீழ்த்தரமாகப் பேசுதல், கோயிற் திருவிழாவில் ஏற்படுகின்ற முரண்பாடுகள் முதலான மனித நாகரிகமற்ற செயற்பாடுகள் கதையில் சம்பவச் கோர்வைகளாக விரிகின்றன.

   இதேபோல் தொழில்மாற்றமும் கதையில் கூறப்படுகிறது. ராணியின் தம்பி மீளவும் பரீட்சை எடுத்துச் சித்தியடைகிறான். இதனால் அவனின் மேற்படிப்புக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. மறுபுறத்தில் மூத்தமகன் இராசு தன் தந்தையின் சலவைத் தொழிலையே மீளவும் செய்யாமல் மாமன் வீட்டாரின் ஆதரவுடன் தனது சீதனக்காணி, நகைகளை விற்று கார் எடுக்கிறான். இதனூடாக வாடகைக்கார் ஓட்டும் தொழில் மாற்றத்தை மேற்கொள்கிறான். இத்தொழில் மாற்றம் இங்கு முக்கியமானது.

'இராசுவின் தொழில் மாற்றம் அவருக்குப் புதுமையாகப் படவில்லை. அவருடைய பகுதியில் எவ்வளவோ பேர் தொழில் மாறித்தான் விட்டார்கள். கணபதியின் மகன் ஒருவன் இன்று ரெயில்வேயில் உத்;தியோகம் பார்க்கிறான். வல்லிபுரத்தின் மகன் பாற்பண்ணை நடத்துகிறான். சோமரின் இளைய மகன் சைக்கிள் கடை ஒன்று தொடங்கி விட்டான். இப்படி இன்னும் யார் யாரோ? இராசுவும் அவர்களில் ஒருவனாகப் போகிறான் நினைத்துப் பார்க்கும்போது இந்தப் பரம்பரையில் மாற்றங்கள் நிகழத்தான் போகின்றன என்பது புலனாகின்றது.' 

      செங்கையாழியான், சாதியப் பிரச்சினை என்பது கல்வியினாலும் தொழில் மாற்றத்தினாலும் தீர்க்கக்கூடியது என்பதில் நம்பிக்கை கொண்டவராக இருந்திருக்கிறார். ஏனையவர்கள் சாதியத்திற்கு அடிப்படைக் காரணம் வர்க்க வேறுபாடு என்று கூற செங்கையாழியானோ சமூகமாற்றமே இப்பிரச்சினையைத் தீர்க்கக்கூடியது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார். இதனை அவரின் வாக்குமூலமே உறுதி செய்கின்றது.

'பிரளயத்திலும் அக்கினியிலும் சாதிப் பாகுபாட்டினை நீக்குவதற்கு உடனடி மார்க்கமாக மூன்று சமூகச் செய்திகளை முன்வைத்துள்ளேன். சாதி ஏற்றத் தாழ்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வசதி, செல்வ வசதி, தொழில் மாற்ற வசதி ஆகிய மூன்றும் கிடைக்கில் சமூக அந்தஸ்து தாமே கிடைப்பதாக இந்த நாவல்களில் அனுபவபூர்வமாகச் சித்திரித்துள்ளேன். பிரளயம் நாவலில் கல்வியாலும் சாதி அடிப்படையல்லாத தொழில் மாற்றத்தாலும் சமூகத்தில் ஏற்படும் மாற்றத்தைக் காட்டியுள்ளேன். அதனால்தான் பிரளயம் நாவலின் முன்னுரையில் ஒரு சமூகத்தின் விழிப்பையும் மாற்றத்தையும் இந்த நவீனம் பேசுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளேன்.' (செங்கை ஆழியான், நானும் எனது நாவல்களும், ப.40)

    சாதாரண மக்களின் பிரச்சினைகளைக் கதைக்கருவாக எடுத்தாண்டபோதிலும் பாத்திர வார்ப்பு, பாத்திர உரையாடல்கள், களச்சித்திரிப்பு ஆகியவற்றில் பொருத்தமான மொழிநடையினைக் கையாண்டுள்ளார். பாத்திரங்களின் உணர்வுக்கேற்ற சில தொடர்களை எடுத்துக்காட்டலாம்.

'அடிமைச் சேவகம் செய்து இரத்தத்தோடு ஊறிவிட்ட தாழ்வை வெல்ல என்னால் முடியவில்லை.' – வேலுப்பிள்ளை

'கரப்பான் பூச்சியள் உள்ளை நுழைந்து உடுப்பை அரிக்குது அதுதான் றங்குப்பெட்டிக்கு ஆமப்பூட்டுப் போட்டு பூட்டியிருக்கிறன்;. – சுபத்திரா

 'பூட்டுப் போட்டுப் பூட்டினால் பூச்சி போகாதா. ஏன் சுபத்திரா எதையாவது இரகசியத்தை வைத்துப் பூட்டியிருக்கிறியா?' - ராணி

  நாவலின் பிரதான பாத்திரமாகிய ராணியைச் சுற்றியே கதையும் கதைக்களங்களும் அமைக்கப்பட்டுள்ளன. படிப்பு, வீட்டுவேலை, சகோதரர்களை வழிநடத்துதல், சகோதரி சுபத்திராவின் பிரச்சினையை அறிதல், சுபத்திரா காதலிக்கும் வாமதேவனின் நடத்தை பற்றி எடுத்துக்கூறி எச்சரித்தல், தனது படிப்புக்கு திருமணம் தடையாக இருப்பதை எதிர்த்தல் முதலான சம்பவ விபரிப்புகள் ஊடாக ராணியின் பாத்திரத்தை உயிரோட்டமாக ஆசிரியர் சித்திரித்துள்ளார்.

    ஏனைய பாத்திரங்களில் மகாலிங்கம் பாத்திரம் ஓர் இலட்சியப் பாத்திரமாக ஆசிரியர் உருவாக்கியிருந்தாலும் கதையில் தொடக்கத்திலிருந்து அப்பாத்திரத்தின் நேர்மையும் முற்போக்கான எண்ணங்களும் படிப்படியாக வளர்த்துச் செல்லப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

'மகாலிங்கத்தைப் பற்றி எண்ணும்போது ராணிக்கு ஒரு மரியாதை உணர்வு பிறக்கிறது. அவன் ஓர் ஆசிரியன். தமையனின் அடிச்சுவட்டைப் பின்பற்றாதவன். ஏதோ கட்சி கூட்டம் என்று திரிபவன்.'

'மகாலிங்கத்தைப் பற்றி வண்ணார்ப்பண்ணையில் உயர்வாகவே பேசிக் கொண்டார்கள்.' 'ஊருக்கு உழைப்பவன்'

  களவர்ணனைகளில் சலவைத் தொழில் சார்ந்த நுணுக்கமான விபரணைகள் இல்லையெனினும் ஓரிரு இடங்கள் கதைக்குப் பொருத்தமாக அமைந்துள்ளன. கதைத்தொடக்கமே அழகான வருணனையுடன் தொடங்குவதை அவதானிக்கலாம்.

 'வைகறை இனிமையாக மலர, இருள் மெதுவாக விலகத் தொடங்கியது. மென்புகார் முற்றாக நீங்கி விடவில்லை. பாலை விறகு எரிந்து படர்ந்த புகைப் போர்வைபோல பனிப்புகார் திரை விரித்திருந்தது. ராணி சோம்பலை முறித்தபடி முற்றத்தில் கால்களைப் பதித்தாள். இரவு பெய்த மழையினால் நீர் ஊறிப் பொருமியிருந்த நிலம், சில்லென்ற குளிர்ச்சியை ஊட்டியது. அவளுக்கு அது வழக்கமான குளிர்ச்சிதான். பனியும், மழையும் அவளின் வைகறைத் துயில் களைப்பை நிறுத்திவிட முடியாதவை. அவை அவளின் தோழிகள். முற்றத்தில் தாழ்வாரத்தோடு சடைத்து வளர்ந்திருந்த சீமைக்கிளுவை மரங்கள் எதிர்பாராது வீசிய காற்றினால் அலைப்புற்றன. ராணியால் உடனே ஒதுங்கிவிட முடியவில்லை. பனித்துளிகளாகச் சிந்திய மழைத்துளிகள் அவள் உடலைத் தழுவிச் சிதறின.' (ப.1)

            உயர்சாதி இளைஞர்களின் மனமாற்றம், பொதுமைநோக்கு ஆகியனவும் கூறப்பட்டுள்ளன. அதேநேரம் பழைய நிலைப்பாட்டிலேயே இன்னமும் சமூகத்தை வைத்திருக்க நினைப்போரும் உளர். அந்த இடையூறுகளை எல்லாம் தவிர்த்து வாழ்வில் உயர்வடைய ஒரு சமூகம் பெரும் பிரயத்தனம் செய்கிறது. அவற்றின் ஒரு குறுக்கு வெட்டுமுகமாக பிரளயம் என்ற குறுநாவல் அமைந்துள்ளது.

    முடிவாக, ஈழத்து இலக்கியச் சூழலில் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய ஒரு புதிய தலைமுறைச் சேர்ந்தவர் செங்கையாழியான். இலங்கையின் பல பாகங்களிலும் தொழில்சார்ந்து பயணப்பட்டவர். மக்கள் பிரச்சினைகளை ஆராய்ந்து அறியும் நிர்வாகத் துறையிலும் பணியாற்றியவர். இதனாலேதான் மாறிவந்த பல்வேறு காலங்களையும் காலத்துடன் பயணித்த மக்களின் வாழ்க்கைத் துயர்களையும் பதிவு செய்தவர். அவரின் எழுத்துக்களில் 'இரவுநேரப் பயணிகள்' என்ற சிறுகதைத் தொகுப்பு நெருக்கடிமிக்க ஒரு காலத்தின் பதிவாக விளங்கியிருக்கிறது. அதேநேரம் இறுதிக்காலத்தில் ருத்ரதாண்டவம் என்ற நாவலில் காலத்தைப் பதிவுசெய்யும் அவசர முயற்சியாக கருத்தியற்பிழையுடன் எழுதப்பட்ட படைப்பையும் தந்திருக்கின்றார். மற்றும் அதிகமானவர்களால் வைக்கப்படும் குற்றச்சாட்டு அவரின் எழுத்துக்களில் இருக்கும் ஆழமும் உணர்வுச் செறிவும் மேலும் வலுப்பட்டிருக்கவேண்டும் என்பது. இவையெல்லாவற்றையும் தாண்டி சமூகத்தின் நடப்பியல்புகளை தனது மொழியில் தனது பார்வையில் பல்வேறு படைப்புக்களாகத் தந்திருக்கின்றார். மக்களிடையே வாசிப்பை ஊக்குவிப்பதற்கும் இலக்கியத்தின்பால் நாட்டத்தை ஏற்படுத்தவும் ஒரு காலத்தில் கல்கி எப்படித் தேவைப்பட்டாரோ வீரகேசரிப் பிரசுரங்கள் கிராமத்தின் மூலைகளுக்கு எல்லாம் சென்று சேர்ந்து ஈழ இலக்கியத்தை எவ்வாறு பரவலாக்கியதோ அதேபோல செங்கை ஆழியானின் எழுத்துக்களும் மக்களிடம் சென்று சேர்ந்தன என்று கூறலாம். அவர் புதியவர்களை வாசிக்க வைத்தார். புதியவர்களின் எழுத்துக்களுக்குக் களம் அமைத்தார். கடந்துபோன காலங்களையும் சமுதாயத்தின் மாற்றத்தையும் தனது எழுத்துக்களில் வடித்தார். அந்த வகையில் ஒரு சமூகத்தின் விழிப்பும் மாற்றமுமாக பிரளயம் அமைந்துள்ளது.

ஜீவநதி, சாதியச் சிறப்பிதழ், இதழ் 200, 2023.

 

No comments:

Post a Comment