Saturday, January 11, 2025

கல்வியும் சமூக அபிவிருத்தியும் : தமிழ்மொழித்திறன் விருத்தியை அடிப்படையாகக் கொண்ட பார்வை


கலாநிதி சு. குணேஸ்வரன்


அறிமுகம்

லகில் வாழும் உயிரினங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்துவது ஆறாம் அறிவாகிய பகுத்தறிவுதான். அந்தப் பகுத்தறிவைப் பிரயோகிப்பதற்கு எமக்குச் சாத்தியமான வழியாக அமைந்ததுதான் கல்வி. அறிவுசார்ந்தோர் சமூக முன்னேற்றத்திற்காகச் சேர்த்துவைத்த தேட்டம்தான் அது. கல்வியின் மூலமே ஒரு மனிதன் உலகை அறிந்து கொள்கிறான். உலகத்து மாந்தர்களையும் வாழவேண்டிய வழிவகைகளையும் அறிகிறான். கல்வியும் பகுத்தறிவுச் சிந்தனையும் இல்லையென்றால் இத்தனை வேகமாக மனிதன் முன்னேறியிருக்க முடியாது. கல்வி மிகப்பெரிய ஒரு பாய்ச்சலை மனித சமூகத்தில் நிகழ்த்தியிருக்கிறது.

  கல்வி அறிவினைப் பெற்ற ஒரு மனிதன் தன் வாழ்வினை நிலைநிறுத்துவதற்கு ஏற்ற தொழிலைப் பெற்றுக் கொள்கிறான். மற்றவர்களோடு இணைந்து வாழவேண்டிய பண்பாட்டைக் கற்றுக்கொள்கிறான். வாழ்வில் முன்னேறும் வழிவகைகளை ஆராய்ந்து பார்க்கிறான். தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் வழிகாட்டியாக இருக்கக் கற்றுக்கொள்கிறான். கல்வி இல்லையென்றால் ஒருவன் வாழ்க்கையின் கடைநிலைக்கே செல்லவேண்டியவனாக இருக்கிறான். மிகப் பிரயத்தனப்பட்டே தன் வாழ்வைக் கொண்டு நடாத்தவேண்டியவனாக இருக்கிறான். கல்வி ஒருவருக்கு அறிவையும் ஆளுமையையும் தருகிறது. எந்தக் காரியத்தையும் துணிச்சலுடன் செய்வதற்கு உரிய உத்வேகத்தைத் தருகிறது.

    கல்வியின் ஊடாக சமூக அபிவிருத்தியை நோக்கி நகரமுடியும். விருத்தி என்பது தொடர்ச்சியான முன்னேற்றகரமான மாற்றம் எனப் பொருள்படும். எனவே, மொழியைப் பிழையறக் கற்பதனூடாக ஒரு நிலையில் இருந்து இன்னொரு உயர்வான நிலைக்குச் செல்லமுடியும்.

 மாணவர்களிடம் இருக்கக்கூடிய பொதுவான மொழித்திறன் இடர்ப்பாடுகளாக எழுத வாசிக்கத் தெரியாமை, உச்சரிப்புப் பிரச்சினை, வாசிப்பு முறையில் பிரச்சினை, தெளிவற்ற எழுத்து, இலக்கண ரீதியான தவறுகள் ஆகியவை கட்டுரையாளர் ஒரு தமிழாசிரியர் என்ற வகையில் அவதானிக்கப்பட்டுள்ளன. முன்பள்ளிப் பருவத்திலும் பாடசாலைப் பருவத்திலும் மாணவர்களின் மொழித்திறன் இடர்ப்பாடுகளுக்கான காரணங்களை ஆராய்வதும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான சில ஆலோசனைகளை முன்வைப்பதும் அவசியமானதாகும்.

கல்வி கற்றலின் படிமுறைகள்

  ஒரு மனிதன் தன் வாழ்க்கை முழுவதும் கற்கக்கூடியவனாகவே இருக்கின்றான். அது முறைசார் கல்விக்கு (Formal education) ஊடாகவோ அல்லது முறையில் கல்விக்கூடாகவோ (Informal education)  அமையலாம். எமது நாட்டுக் கல்விக் கொள்கையின்படி முன்பள்ளிக் கல்வி தொடக்கம் தொழில் மற்றும் திறன் அடிப்படையிலான கல்வி வரை கற்றலின் படிமுறைகள் அமைந்திருக்கின்றன. அவற்றை

1.         முன்பள்ளிக் கல்வி  (Childhood education)

2.         ஆரம்பக் கல்வி அல்லது முதல்நிலைக் கல்வி (Primary education)

3.         இரண்டாம் நிலைக் கல்வி (Secondary education)

4.         மூன்றாம் நிலைக் கல்வி (Tertiary education including technical/vocational and

 university education)

5.         தொழில் மற்றும் திறன் அடிப்படையிலான கல்வி (Job/skill oriented education)

      என வகைப்படுத்தலாம். மேற்குறிப்பிட்டவை முறைப்படுத்தப்பட்ட அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல் படிமுறைகளாக அமைந்திருக்கின்றன.

     எமது முன்னோர் ஒழுங்குபடுத்தப்படாத முறையில்கல்விக்கு ஊடாகவே பல விடயங்களை அறிந்து கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் முற்பட்டனர். இவற்றுள் குடும்ப சூழல், சமூகச் சூழல் ஆகியன முக்கியம் பெறுகின்றன. அவை ஒரு வகையில் சமூகத்திலிருந்து கற்றுக்கொண்ட பட்டறிவுக் கல்வியாக அமையலாயின. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நகர்வதற்குப் பல தடைகள் இருந்தன. அந்நியர் ஆட்சிக்காலங்களில் கல்வியறிவற்ற மக்களை அடிமைகளாக்கி பேசாமடந்தைகளாக்கி தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லாவற்றையும் சுரண்டினார்கள் என்பது நாம் அறிந்த வரலாறு.

மொழி கற்பித்தல்

  மொழி கற்பித்தல் என்பது கல்வியியலில் மிக முக்கிய துறையாக வளர்ந்துள்ளது. 'சிந்தனை வளர்ச்சி மொழியினால் தீர்மானிக்கப்படுவதாகும். அதாவது சிந்தனைக்கான மொழிக் கருவிகளாலும், குழந்தையின் சமூக பண்பாட்டு அநுபவத்தினாலும் தீர்மானிக்கப்படுவதாகும். பியாஜேயின் ஆய்வுகள் நமக்கு எடுத்துக் காட்டியவற்றுக்கேற்ப குழந்தையின் தீர்க்க உணர்வு வளர்ச்சியானது, அக்குழந்தையின் சமூக நிலைப்படுத்தப்பட்ட பேச்சின் நேரடிப் பயன்பாடாகும். குழந்தையின் புலமை வளர்ச்சியானது சிந்தனைக்கான சமூக வழிமுறையில், அதாவது மொழியாட்சியிலேயே தங்கியுள்ளது.' என்று பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி குறிப்பிடுகிறார். மேலும், 'குழந்தையின் எண்ணக்கரு வளர்ச்சி மொழியினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மொழிவளம் இல்லையேல் சிந்தனைவளம் இருக்காது. தாய்மொழி வழியாக அந்த வளம் வரும்பொழுது அது பண்பாட்டுப் பலத்தையும் ஆளுமை உறுதிப்பாட்டையும் வழங்குகின்றது.' (சிவத்தம்பி,கா.,2007:17)

   எனவே, தாய்மொழிக்கல்வி  ஆளுமை உருவாக்கத்திற்கு முக்கியமானது என்பது தெரியவருகின்றது.

'எழுத்து என்பது ஆளுமையின் ஓர் அமிசமாகிறது. ஆளுமையின் வெளிப்பாடாகிறது. எழுத்துப் பயிற்சியின் தொடக்கம் ஓர் அறிவுப் பயணத்தின் தொடக்கமாகும். இதற்கான பொறுப்புணர்வுடன் ஆசிரியர் எழுத்துப் பயிற்சியைத் தொடங்க வேண்டும்.' (சிவத்தம்பி,கா.,2007:107)

    மொழி கற்பித்தலுக்கு பாடநூல், ஆசிரியர் கைநூல், துணைநூல்கள், துணைக் கருவிகள், கற்பிக்கும் காலமும் சூழலும், கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள், தேர்வு, மதிப்பீடு ஆகியவை அடிப்படையாக அமைந்துள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டே ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவிப்பதில் ஈடுபடுகின்றனர். எனினும் மாணவன் மொழிசார்ந்த பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொள்கின்றான்.

மொழிசார்ந்த பொதுவான இடர்ப்பாடுகள்

  எல்லாப் பாடங்களுக்கும் மொழியே ஊடகமாக அமைகின்றது. அந்த மொழியை செவ்வையாக எழுதாதபோது ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகள் கற்றலில் பின்னடைவை நோக்கித் தள்ளக்கூடியவையாக அமைகின்றன. கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய நான்கு இயல்புகளும் மொழிகற்றலில் முக்கியமானவை. இடர்ப்பாடுகள் பின்வருமாறு.

1.         செவிமடுத்துக் கிரகிக்கும் ஆற்றலின்மை

2.         எழுத்துக்களை இனங்கண்டு வாசிக்க இயலாமை

3.         நிறுத்தக் குறிகளை அவதானித்து வாசித்தல் பற்றிய விளக்கமின்மை

4.         வாசித்துக் கிரகிக்கும் ஆற்றலின்மை

5.         உறுப்படைய எழுத்துக்களை எழுதும் ஆற்றலின்மை

6.         வாக்கிய இயைபு பற்றிய தெளிவின்மை

7.         சொற்களஞ்சிய விருத்தியின்மை

8.         சொற்களைப் புணர்த்தி எழுதுவதில் இடர்ப்படுதல்

9.        வேற்றுமை உருபுகளைப் பொருத்தமாகப் பயன்படுத்துவதில்

           இடர்ப்படுதல்

10.      வாக்கியம் எழுதும்போது பேச்சுத் தமிழைப் பயன்படுத்தி எழுதுதல்

 ஆகிய இடர்ப்பாடுகள் மாணவர்களிடம் அவதானிக்க முடிகின்றது. தமிழ்மொழிப் பயிற்சிகளின்போது மாணவர்கள் விடுகின்ற தவறுகளை கலாநிதி பார்வதி கந்தசாமி அவர்கள் 'ஐந்தாம் வகுப்பு மாணவர் தமிழ்மொழிப் பயிற்சிகளில் சில அவதானிப்புகள்' என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாக எடுத்துக்காட்டியுள்ளார்.

1.         பேச்சுமொழி - இலக்கியமொழி வேறுபாடு ஏற்படுத்தும் குழப்பம்

2.         சொற்களைப் புணர்த்தி எழுதுதலில் இடர்ப்படுதல்

3.         சொற்களைப் பிரித்து எழுதுதலில் இடர்ப்படுதல்

4.         வேற்றுமை உருபுகளைப் பயன்படுத்துவதில் குழப்பம்

5.         எண் பயன்பாட்டில் குழப்பம்

6.         எழுவாய் பயனிலை இயைபிற் குழப்பம்

7.        சிக்கல் வாய்ந்த வாக்கிய அமைப்புகளைப் பயன்படுத்துவதால் தவறுகள்

8.        வினாவுக்கு விடை எழுதும்போது விடும் தவறுகள்

9.       சொற்களை ஒழுங்குபடுத்தி வாக்கியங்களை அமைப்பதில் விடும் 

           தவறுகள்

10.       நிறுத்தக் குறியீடுகளைப் பயன்படுத்தாமை

11.       ஒத்த கருத்துச் சொற்களில் குழப்பம்

12.       எதிர்க்கருத்துச் சொற்களில் குழப்பம்

13.       எதிர்ப்பாற் சொற்களில் குழப்பம்

14.       சோடிச் சொற்களை வாக்கியத்தில் அமைத்திலில் ஏற்படும் தவறுகள்

15.      சொற்களை வாக்கியங்களில் பயன்படுத்தும்போது அர்த்தமுடைய                         வாக்கியங் களாக   அமைப்பதில் குழப்பம்

16.      சொற்களைப் புணர்த்தி பிரித்து எழுதும்போது ஏற்படும் சொற்பொருள்

           குழப்பம்.

    முதலானவற்றை எடுத்துக்காட்டியுள்ளார். இவ்வாறான தவறுகளை நீக்க முறையான பயிற்சியை மாணவர் மேற்கொள்ளவேண்டியோராய் உள்ளனர்.

செவிமடுத்தல் திறன், பேச்சுத்திறன் இடர்ப்பாடுகளுக்கான காரணங்கள்

1.         கவனக் குறைவு

2.         உடல் உளக் குறைபாடு

3.         செவிப்புலக் குறைபாடு

4.         குடும்பச் சூழல்

5.         தாழ்வு மனப்பான்மை 

6.         உச்சரிப்புப் பயிற்சியின்மை

7.         வெட்கம், அச்சம்

8.         சொற்களஞ்சிய விருத்தியின்மை

9.         பெற்றோரின் அக்கறையின்மை

வாசித்தல்திறன், எழுத்துத்திறன் இடர்ப்பாடுகளுக்கான காரணங்கள்

1.         எழுத்துக்களை இனங்கண்டு வாசிக்க இயலாமை

2.         ஒலிபேதங்களை அனுசரித்து வாசிக்க இயலாமை

3.         பொறிமுறைகளை அனுசரித்து வாசிக்க இயலாமை

4.         கருத்தை விளங்கி வாசிக்க இயலாமை

5.         உயிர்க்குறிகளை அனுசரித்து வாசிக்க இயலாமை

6.         நீண்ட சொற்களைச் சேர்த்து வாசிக்க இயலாமை

7.         வாசிப்புப் பயிற்சியின்மை

8.         எழுத்துக்களை இனங்கண்டு எழுத இயலாமை

9.         உறுப்பமைய எழுதும் ஆற்றலின்மை

10.       தாழ்வு மனப்பான்மை

11.       குடும்பச் சூழல்

12.       பெற்றோர் கவனிப்பின்மை

13.       வகுப்பில் கடினப் போக்கு

14.       சக மாணவர்கள் வகுப்பில் ஒதுக்கி வைத்தல்

 

மாணவர்களுக்கு இருக்கக்கூடிய சவால்கள்

   இன்று கல்வி கற்பதற்கு மாணவர்களுக்கு இருக்கக்கூடிய சவால்களில் முக்கியமானது மொழிசார்ந்த பிரச்சினையாகும். குறிப்பாக, தமிழ்மொழியைப் செவ்வையாகக் கற்று வாசிக்கவும் எழுதவும் வேண்டும் என்பது எதிர்பார்க்கப்படுகின்றது. மாணவர்களிடம் இருக்கும் மொழித்திறன் குறைபாடு அவர்கள் கற்றலில் பின்தங்குவதற்கு முக்கிய காரணியாக இருக்கின்றது. இவ்விடத்தில் எழுத்தறிவு ஒரு சமூகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை நோக்குதல் வேண்டும்.

 'உலகளாவிய ரீதியில் எழுத்தறிவை வளர்ப்பதில் பாடசாலைக் கல்வி முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளது. எழுத்து ஒரு தொடர்பாடற் சாதனமாகக் கண்டுபிடிக்கப்பட்டமை மனித நாகரீக வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளது. மக்கள் மத்தியில் அறிவு பரவவும் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் பெருமாற்றம் நிகழவும் மனிதர்களுக்கிடையிலான இடைத்தொடர்புகள் வளர்ச்சி பெறவும் எழுத்தறிவு துணை புரிந்துள்ளது. சம்பவங்களை மனிதன் நினைவில் நிறுத்திக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லாது போயிற்று. எழுத்தின் பயன்பாட்டினால் தவறிழைப்பது மிகவும் குறைய நேரிட்டது. இன்று வாய்ச்சொல் வாக்குறுதிகளைவிட எழுத்திடப்பட்டவைக்கே மிகவும் பெருமதிப்பு உண்டு. எழுத்தறிவுடையவன் தொடர்பாடல் ஆற்றல் உடையவனாகின்றான்.' (சந்திரசேகரன்,சோ.,1996:29)

            எண்ணறிவும் எழுத்தறிவும் முன்பள்ளிப் பருவத்தில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஆனாலும் பாடசாலைக் கல்வியின் ஆரம்பப் பிரிவு மாணவர்களிலே (விசேட தேவையுள்ள மாணவர்கள் தவிர) மொழித்திறன் விருத்தியில் இடர்ப்பாடு இருக்குமாயின் அது தொடர்ச்சியாக மாணவர்கள் கற்பதற்கு மிகப் பெரிய தடையை ஏற்படுத்தக்கூடியதாக அமையும்.

            இவ்விடர்ப்பாடு தொடர்ச்சியாகக் கல்வி கற்றலில் அடுத்தகட்டம் நோக்கி நகரமுடியாத நிலையை ஏற்படுத்துகின்றது. பாடசாலைக் கல்வியை முடித்து வெளியேறும்போது மிகச் சாதாரண மாணவனாகவே வெளியேறவேண்டியும் ஏற்படுகிறது. இதற்கான பொறுப்பை அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களும் பெற்றோர்களுமே ஏற்கவேண்டியிருக்கிறது. மாணவர் ஏனைய திறன்களைப் பெற்றிருந்தாலும் வாசிப்பும் எழுத்தும் இல்லாத நிலை ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்குத் தடையாகவே அமையமுடியும். எனவே, ஆசிரியர்கள் பாடசாலைக் கல்வியில் கூடிய கவனம் எடுப்பதோடு பெற்றோரும் இதில் முக்கிய பங்காளிகளாக மாறவேண்டியோராக உள்ளனர்.

1.         பிள்ளையின் கல்வியில் அக்கறை எடுக்காமை

2.         கற்றலுக்குரிய வீட்டுச்சூழலை ஏற்படுத்தாமை

3.         கல்வி கற்பதற்குரிய வளங்களைப் பெற்றுக்கொடுக்காமை

 ஆகியவை காரணமாக பிள்ளைகளின் பெற்றோரும் பொறுப்புக் கூறவேண்டியவர்களாக இருப்பர்.

   பாடசாலைக் கல்வி முடிந்து வெளியேறும்போது தொடர்ந்து உயர்கல்வியைப் பெறுவதற்கு அவனது எல்லை வரையறுக்கப்பட்டதாகவே இருக்கும். மொழித்தேர்ச்சியைப் பெற்று சாதாரண சித்தியுடன் வெளியேறினாலும் ஓரளவு தொழில் வாய்ப்பைப் பெறக்கூடிய அதிக சந்தர்ப்பங்கள் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஊடாகவும் தொடர்ச்சியாக தொழிற்கல்வியையோ அல்லது பட்டப்படிப்பையோ பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. எனவேதான், எல்லாவற்றுக்கும் மொழித்தேர்ச்சியே அடிப்படையாக இருப்பதை உணர்ந்து மாணவர் செயற்படவேண்டும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களிடம் வளர்த்தெடுக்கப்படவேண்டிய மொழித்தேர்ச்சிகள்

'மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை. மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் உரிய கருவியாகவும் உள்ளது. பெற்ற தாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுதல். அவள் முதலில் அடையும் பெரிய மகிழ்ச்சி குழந்தையின் பேச்சைக் கேட்பதிலேயே ஆகும். குழந்தையின் மன வளர்ச்சியோடு ஒத்து வளர்ந்து வருவது மொழி வளர்ச்சியே ஆகும்.' (வரதராசன்,மு.,2002:17)

            மாணவர்களிடம் கேட்டலும் பேசுதலும் எழுதுதலும் வாசிப்பும் வளர்க்கப்படவேண்டிய மொழித் தேர்ச்சிகளாக அமைகின்றன. முன்பள்ளிக் கல்வியில் இதற்கான பயிற்சி பிள்ளைகளுக்கு வழங்கப்படுகிறது.

'எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழுமுயிர்க்கு'

    என்று திருக்குறள் கூறுகின்றது. இங்கு எண்ணும் எழுத்தும் அறிவுடைமையின் இரண்டு கண்களாகப் போற்றப்படுகின்றன.  பேச்சு நிலையை ஒலிவடிவம் என்றும் எழுத்து நிலையை வரிவடிவம் என்றும் கூறுகின்றோம். 'வாசித்தலை நாம் உயர்வகுப்பு நிலைப்பட்ட தொழிற்பாடாக மாத்திரம் பார்க்காமல் தொடக்கநிலை மாணவர்களது தேவைகளை முக்கியத்துவப்படுத்தி நோக்கல் வேண்டும்' (சிவத்தம்பி,கா.,2007:103) பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி, ஆயினும் எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும்.

வாசிப்புப் பயிற்சி பின்வரும் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது.

1.         ஒலிகளை உச்சரித்தல்

2.         அரிச்சுவடி வழிச்செல்லல்

3.         முழுச்சொல்லில் வாசித்தல்

        இந்த மொழித்திறனை இரண்டு வகையில் முன்னெடுத்துச் செல்லமுடியும். அவற்றில் ஒன்று பாடசாலைக்கு உள்ளேயான கல்வியின் ஊடாக. மற்றையது பாடசாலைக்கு வெளியேயான சமூக வளர்ச்சிநிலையின் ஊடாக. இங்கு முன்பள்ளிக்கல்வி, பாடசாலைக் கல்வி ஆகியவை பற்றி முதலில் நோக்குவோம்.

முன்பள்ளியில் மொழித்தேர்ச்சி

            ஒரு பிள்ளைக்கு ஆரம்ப குழந்தைப் பருவக்கல்வி மிக முக்கியமானதாகும். பிள்ளை பாடசாலைக் கல்வியைத் தொடர்வதற்கு முன்பாகவே முன்பள்ளிக் கல்வியைப் பெற்றுக் கொள்கிறது. இக்கல்வி அவரவர் வாழ்கின்ற கிராமச் சூழல்களிலேயே வழங்கப்படுகின்றன. அவ்வாறு வழங்கப்படும் கல்வி தரமானதாக அமையவேண்டும். அங்கு ஊட்டப்படும் ஆரம்ப விதைதான் தொடர்ந்து பாடசாலைக் கல்வியை முன்நகர்த்திச் செல்வதற்கு உதவுகின்றது.

    முன்பள்ளி என்பது 2½ வயதுமுதல் 5 வயதுவரை சிறார்கள் கற்கும் இடமாகும். முன்பள்ளிப் பிள்ளைக்குரிய சமூகச் சூழல், பௌதீகச் சூழல் ஆகியவற்றில் முன்பள்ளிகள் கவனம் செலுத்தவேண்டும்.

'குழந்தை முதலில் தன் பெற்றோர் களையும் தன்னைச் சுற்றியுள்ள வர்களையும் பார்த்து நடக்கவும் பேசவும் கற்றுக் கொள்கிறது. இதனையே போலச் செய்தல் என்று கூறுவர். தாய்மொழி கற்றலில் பெரும்பாலும் இவ்வணுகுமுறை பயன்படுகிறது. சில சமயங்களில் பிறமொழி கற்றலிலும் இவ்வணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது. தாய்மொழியினைப் பேசும்போது குழந்தையானது தன் பெற்றோர் உறவினர் வழியாக மொழியைக் கற்றுக் கொள்ளத் தொடங்குகிறது. பள்ளியில் பயிலும்போது ஆசிரியர், மாணவர், நண்பர்கள் போன்றோரைப் பார்த்துத் தானும் அதைப்போலவே மொழியைப் பயன்படுத்தத் தொடங்குகிறது. இதே நிலையை வயது வந்தவர்கள்கூட அல்லது உயர்கல்வி கற்றோருங்கூட தலைவர்கள் பெரியோர்கள் போன்றோரின் மொழியைப் பின்பற்றுவதில் பார்க்கிறோம். இதனை அப்படியே மனனம் செய்து பயன்படுத்துவதும் உண்டு. (கருணாகரன்,சி.,ஜெயா,வ.,1997:159)

 முன்பள்ளி மாணவர்களுக்கு பின்வரும் பயிற்சிகளின் ஊடாக மொழித்தேர்ச்சியை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

1.         பேச்சுப் பயிற்சி

2.         பாட்டுப் பாடுதல்

3.         கதை சொல்லுதல்

4.         நடித்துக் காட்டுதல்

5.         ஒலிகளை உச்சரித்தல்

6.         அரிச்சுவடி வழிச்செல்லல்

7.         சொல்லட்டை பயன்படுத்துதல்

8.         வாசித்தல் பயிற்சி

9.         முழுச்சொல்லில் வாசித்தல்

10.       சுயமாக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துதல்

11.       பாரம்பரிய முறையில் மண்ணில் விரலால் எழுதும் முறையினூடாக

          தசைநார்ப்         பயிற்சி அளித்தல் (உதாரணம் இ, ழ ஆகிய எழுத்துக்களை

          எழுதும்போது        இடர்ப்படுதல்)

12.       உறுப்பெழுத்து

13.       சொல்வதெழுதுதல்

ஆரம்பக்கல்வியில் மொழித்தேர்ச்சி

            1998ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கலைத்திட்டம் பிள்ளையின் அறிவு திறன் மனப்பாங்கு ஆகியவற்றினை விருத்தி செய்வதற்கான வாய்ப்புக்களை வழங்குகின்றது. முதன்மைநிலை 1, முதன்மைநிலை 2, முதன்மைநிலை 3 ஆகியவற்றில் நிறைவேற்றக்கூடிய அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள் ஊடாக ஒரு மாணவன் மிகத் தரமான கல்வியைப் பெற்றுக்கொள்வான் என எதிர்பார்க்கப்படுகிறது.

'இலங்கையில் 1998 ஆம் ஆண்டு புதிய கலைத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தேர்ச்சிமையக் கலைத்திட்டமாக அமைந்த அக்கலைத்திட்டம் பிள்ளைகளின் இயற்கையான திறன்களை விருத்தி செய்ய உதவும் பண்புசார் ஆரம்பக் கல்வியை வழங்குவதை நோக்காகக் கொண்டமைந்திருந்தது. ஒரு பிள்ளையின் அடைவு மட்டத்துடன் வேறொரு பிள்ளையின் அடைவு மட்டத்தை  ஒப்பிட்டுப் பார்க்காமல் அவனுடைய முன்னைய அடைவு மட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் கலாசாரத்தை ஏற்படுத்தியது. வகுப்பறைக்குள்ளேயும் வகுப்பறைக்கு வெளியேயும் பிள்ளைகள் சுதந்திரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வசதிகளுடன் கற்க உதவக்கூடிய ஒரு சூழலை உருவாக்கிக் கொடுத்தது. வகுப்பறையை மகிழ்ச்சியான கற்றலுக்குரிய இடமாக மாற்றியமைத்தது. வகுப்பறைக்குள்ளேயே புத்தக மூலையை உருவாக்கிக் கொடுத்தது. பாடநூல் தயாரிப்பில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. சர்வதேசத் தரத்துடனான வண்ண வடிவுடன் கூடிய ஆரம்பக் கல்விப் பாடநூல்களை ஆக்குவதற்கான களத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.'(உதயச்சந்திரன்,வி.என்.எஸ்.,2019:580) எனவே, ஆரம்பக்கல்வி வகுப்பறைகளில் பின்வரும் மொழித்தேர்ச்சிக்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படவேண்டும்.

1. வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துதல்

2. வகுப்பறைகளில் வாசிப்புமூலைகளை உயிர்ப்புள்ளதாகச் செயற்படுத்துதல்

3.  நூலகங்களைப் பயன்படுத்தும் வசதிகள் செய்து கொடுத்தல்

4. வாராந்தப் பத்திரிகைகளில் வெளிவரும் சிறுவர் பகுதிகளைக் கத்தரித்து

    வாசிக்கத்   தூண்டுதல்.

5. சிறுவர் சஞ்சிகைகளில் வெளிவருகின்ற ஆக்கங்களை வாசிக்க வைத்தல்

6. சிறுவர் கதைப்புத்தகங்களை வாசிக்க வைத்தல் (அம்புலிமாமா, பரமார்த்தகுரு கதை,  தெனாலிராமன் கதை, முல்லா கதைகள், நீதிக்கதைகள் முதலானவை)

7.   நவீன சாதனங்கள் ஊடாக கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளுதல்

    இன்று நவீன சாதனங்களுடன் கூடிய வகுப்பறைகள் ஊடாகவும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் கேட்டலுக்கும் பார்த்தலுக்கும் உரிய சாதனங்களாகவும் அமைந்துள்ளன. ஆனால் கிரகித்தல், எழுதுதல், வரைதல் முதலானவற்றையும் அவற்றில் மேற்கொள்ளமுடியும். மாணவருக்கு கற்றலில் அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தவும் இவ்வாறான நவீன சாதனங்களுடன் கூடிய வகுப்பறைகள் உதவுகின்றன.

 பிள்ளைகளுக்கு எமது சூழலுக்குப் பொருத்தமான காணொளிகளை வழங்குதல் இங்கு முக்கியமாக நோக்கவேண்டும். தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கக்கூடிய ஒலி, ஒளி நாடாக்களில் பயன்படுத்தப்படுகின்ற பொருத்தமில்லாத மொழிப்பிரயோகம் நமது சூழற் பிள்ளைகளுக்கு அந்நியமாக அமையக்கூடும். அவற்றில் கூடிய கவனம் செலுத்துதல் வேண்டும். 

இடைநிலைக் கல்வியில் மொழித்தேர்ச்சி

 தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பிள்ளைகள் தமிழை முறையாக வாசிக்கவும் எழுதவும் மிகுந்த இடர்ப்படுகின்றனர். இதனை நிவர்த்தி செய்ய பாடசாலைகளில் ஆசிரியர்கள் பெரும் சிரத்தை எடுக்கின்றனர். ஆரம்பக் கல்வியில் இடர்ப்படும் பிள்ளைகள் பின்னர் இடைநிலைப் பிரிவில் கல்வி கற்பதில் மேலும் பின்னடைவைச் சந்திக்கின்றனர். அதனால் உயர்தரக் கல்வியைப் பெறமுடியாமையால் பாடசாலையில் இருந்து இடைவிலக நேரிடுகின்றது. இடைநிலைப் பிரிவுக்கு வரும்போது,

1.         கருத்தமைந்த வாக்கியம் அமைத்தல்

2.         பந்தி பிரித்து எழுதுதல்

3.         பொருத்தமான குறியீடுகளைப் பயன்படுத்துதல்

4.         கட்டுரை கடிதம் ஆகியவற்றை அமைப்புக்கு ஏற்ப எழுதுதல்

     ஆகியவற்றில் கூடுதல் கவனஞ் செலுத்தவேண்டியோராய் உள்ளனர். இவற்றிலும் இடர்ப்பாடுகள் இருக்குமாயின் தமிழ்மொழிப் பாடத்தில் சித்தியடையத் தவறுவதோடு அது ஏனைய பாடங்களையும் பாதிப்பதாக அமைந்து விடுகின்றது.  இடைநிலை வகுப்புக்களில் கற்கும் மாணவர்கள் மொழிசார்ந்த பயிற்சிகளில் அதிக கவனமெடுக்க வழிப்படுத்த வேண்டும். பின்வருவனவற்றை நோக்குவோம். 

1.         வாசிப்புப் பயிற்சி (பத்திரியை, சஞ்சிகை, கவிதை, சிறுகதை, நாவல்,

            கட்டுரை முதலானவை)

2.         கட்டுரை எழுதும் பயிற்சி

3.         கடிதம் எழுதும் பயிற்சி

4.         இலக்கணம் மனனப் பயிற்சி

5.         வீட்டில் வாசிப்புச் சூழலை ஏற்படுத்துதல்

6.         பாடசாலைகளில் நடைபெறும் மாணவர் மன்றங்களில் பங்கெடுத்தல்

7.         போட்டிகளில் பங்கெடுத்தல்

8.         கவிதை, சிறுகதை, கட்டுரை எழுதும் போட்டிகள்

9.         கலை நிகழ்வுகளை நடாத்துதல்

உயர்தரக் கல்வியில் மொழித்தேர்ச்சி

            இடைநிலைக் கல்வியைத் தாண்டி உயர்தரக் கல்வியை நோக்கி (கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம்) மாணவர்கள் நகரும்போது அவர்களுக்கு ஊட்டப்பட்ட இடைநிலைக் கல்வியின் ஊடாக பல்வேறு அறிகைசார் திறன்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். உயர்வகுப்பு மாணவர்களில் கலைப்பாடத்தில் தமிழை ஒரு பாடமாகப் பயில்வோர்; இடைநிலைப் பிரிவினருக்கு மேற்கூறப்பட்ட பயிற்சிகளோடு பின்வருவனவற்றையும் கருத்திற் கொள்ளவேண்டியோராய் இருக்கின்றனர்.

             உயர்வகுப்பினரைப் பொறுத்தளவில் வாசிப்பு எழுத்து ஆகியவற்றில் பெரியளவில் பிரச்சினை இருக்காது. ஆனால் தமிழ்மொழியில் பாண்டியத்தியம் மிக்கவர்களாகவும் ஆக்க இலக்கியங்களை எழுதக்கூடியவர்களாவும் சமுதாயப் பார்வை மிக்கவர்களாகவும் வளர்வதற்கு மொழிசார்ந்த உயர்நிலைப் பயிற்சிகள் அவசியமாக அமைந்திருக்கின்றன.

'ஆரம்ப வகுப்புக்களில் மொழியாற்றல் சரியான அடிப்படைகளில் பயிற்றி வளர்க்கப்படாவிட்டால் உயர் வகுப்புகளிலும் மாணவர்களின் மொழியாற்றல் பெரிதும் பாதிக்கப்படும். இன்று நமது உயர்வகுப்பு மாணவர் மத்தியில் மொழியாற்றல் திருப்தியற்று இருப்பதற்கு ஆரம்ப வகுப்புக்களில் சரியான அடித்தளம் அமைக்கப்படாததே முக்கிய காரணமாகும்.' (நுஃமான்,எம்.ஏ.,2002:40)

1.         குறித்த ஒரு பொருளில் கலந்துரையாடல் நிகழ்த்துதல்

2.         விவாத அரங்குகளில் பங்கேற்றல்

3.         தமிழ் அறிஞர் தினங்களில் அவர்கள் பற்றித் தேடியறிந்து முன்வைத்தல்

4.         துறைசார்ந்த அறிஞர்களை அழைத்து அவர்களைப் பேச வைத்தல்

            ஆகியன தேவையானவையாகக் கருதப்படுகின்றன. அதற்கும் அப்பால் இன்றைய இளையோர் பலவித புறநெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியோராய் இருக்கின்றனர். அவர்களிடத்தில் மனிதநேயப் பண்பையும் வளர்த்தெடுக்க இலக்கியக் கல்வி அவசியம் என்று உணரப்படுகிறது. இந்நிலையில் இலக்கியக்கல்வி ஏன் கற்க வேண்டும்? என்ற வினாவும் அவர்களிடம் எழலாம். அதற்கு, பேராசிரியர் கா. சிவத்தம்பி முன்வைத்திருக்கும் கருத்துக்களை இங்கு எடுத்துக்காட்டுதல் பொருத்தமாகும்.

 

1.   இலக்கியம் நல்லது அல்லது என்ற சுவை மதிப்பீட்டுணர்வை 

      வளர்க்கின்றது.

2. இலக்கியம் மனிதப் பெறுமானங்களை நமக்கு மிகுந்த வலுவுடன்

    கற்பிக்கின்றது.

3. இலக்கியம் நமக்கு நமது மூதாதையரின் சமூக அநுபவங்களையும் 

    அவர்கள்  அவ்வநுபவங்களை எவ்வெவ் வகைகளில் எதிர்கொண்டார்கள்     

    என்பதனையும்    அறியத் தருகிறது.

4.  மாணவர்களுக்கு அவரவர் பாரம்பரியங்களைப் பரிச்சயப்படுத்துவதற்கு 

     பரிச்சயப்படுத்தி அவர்களை பயன்பாட்டு  நிலைப்படுத்துவதற்கும் சமூக          நிலைப்படுத்துவதற்கும் இலக்கியம் உதவுகிறது.

 

மாணவரின் கல்வி அபிவிருத்திக்கான பங்களிப்பு

'கல்வியறிவில்லாவிட்டால் கோடிக்கணக்கான மக்களுக்கு தன்னையறியும் சக்தியே இல்லாமற் போய்விடும்' என்றார் மகாத்மா காந்தி. கல்வியால்தான் மனித சமூகம் தலைநிமிர்ந்து நிற்கின்றது. உழைப்பின் மூலம் பொருளாதாரத்தைத் தேடவும் ஆரோக்கியத்தைக் காக்கவும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மனித வாழ்வுக்குத் தேவையானவற்றை உருவாக்கவும் மனிதன் தொடர்ந்தும் கற்றுக்கொண்டேயிருக்கிறான். எனவே, நமது பிள்ளைகளின் கற்றலுக்கு ஆசிரியரும் பெற்றோரும் சமூகமும் எவ்வாறான பொறுப்புக்களை நிறைவேற்றலாம் என்பதை நோக்குவோம்.

(அ) ஆசிரியர்

            புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கு அமைவாக அறிவுறுத்தப்படும் கற்றல் கற்பித்தல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் மொழியில் தேர்ச்சியடைய வைப்பதற்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். எனினும் குறித்த பாடவேளையில் கற்பித்தலோடு மேலதிக பரிகாரக் கற்பித்தலையும் மேற்கொள்ளவேண்டிய பணி ஆசிரியர்களுக்கு உள்ளது. எனவே,  

1.         மொழிவிருத்திக்கு மேலதிகமாக பாடவேளை ஒதுக்குதல்

2.         மொழிக்கல்வியில் தனித்த கவனம் எடுத்தல்

3.         இலகுவான முறையில் கற்பித்தல்

4.         வழமையான முறையோடு புதிய கற்பித்தல் முறையைக் கையாளுதல்

5.          ஒவ்வொரு மாணவருக்கும் உள்ள பிரச்சினையைக்  கண்டறிந்து  

            பொருத்தமான   கற்பித்தல் அணுகுமுறையை மேற்கொள்ளுதல்

6.         மாணவர்களின் மொழிப்பாடத்திற்கான பயிற்சிகள் திருத்தம்

7.         பிழைகளைத் தவிர்க்க மாணவரை வழிப்படுத்துதல்

8.         வகுப்பறையில் எழுத்து மொழியை வளர்த்தல்

9.          பாடசாலை நிர்வாகத்திடம் கற்றல் கற்பித்தலுக்கான வசதிகளைக்

            கோருதல்

10.       பயிற்சிகள், செயலமர்வுகள், விசேட பயிற்சிகள் என்பவற்றில் 

             ஈடுபாட்டுடன்   பங்கேற்றல்

 ஆகியவற்றில் அதிக சிரத்தையெடுக்க வேண்டிய பொறுப்பும் ஆசிரியர்களைச் சார்ந்திருக்கிறது.

(ஆ) பெற்றோர்

'சிறுவரொருவரின் சமூகச் சூழலானது பெருமளவில் குடும்பத்திலும் பாடசாலையிலும் தங்கியுள்ளது. சமூகச் சூழல் பிள்ளைகளுக்கு சமூக இடைத் தொடர்புகளை ஏற்படுத்துகின்றது. சிறுவரொருவரின் சமூகச் சூழல் அவருக்கு சவால்களைச் சந்திக்கும் ஆற்றல்களை ஏற்படுத்துகின்றது. பெற்றோராலும் ஆசிரியர்களாலும் சிறுவரொருவருக்கு சமூகத் திறன்களைக் கற்பிக்க முடியும். நல்ல சமூகப் பழக்க வழக்கங்களை மீள மீள வலியுறுத்தியும் அதனை ஊக்குவித்தும் சிறார்களிடம் வளர்த்தெடுக்க முடியும். மேலும் சமூகத் தொடர்புகளானது சிறார்களின் அறிகைப்புல விருத்தியிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது. நல்ல சமூக இடைத்தொடர்புடைய சிறாரின் அறிகைப்புல விருத்தியானது நல்ல நிலையில் காணப்படும். நல் சமூகப் பொருளாதார பின்னணியுடைய அயலவர்களின் மத்தியில் வாழும் சிறார்களின் சமூக விருத்தித் திறனானது மோசமான சமூகப் பொருளாதார பின்னணியுடைய அயலவர்களின் மத்தியில் வாழும் சிறார்களின் அறிகைப்புல விருத்தியிலும் பார்க்க நல்ல நிலையில் காணப்படுகின்றது.' (தேவமுகுந்தன்,2019:596)

 முன்பள்ளிக் கல்வியையும் பாடசாலைக் கல்வியையும் தொடரும் பிள்ளைகளுக்கு கற்றலில் மீது விருப்பத்தை அதிகரிப்பதற்கு பெற்றோரிடம் எதிர்பார்க்கக்கூடிய சில விடயங்களை முன்வைக்கலாம். இது முன்பள்ளிக்கல்வி மற்றும் ஆரம்பக்கல்வி ஆகியவற்றுக்குப் பொருந்தக்கூடியவை.

1.         பிள்ளைகள்மீது அன்பையும் பாசத்தையும் காட்டுதல்

2.         பிள்ளைகளுக்கு வாழ்த்து, பாராட்டுச் சொல்லுதல்

3.         பிள்ளைகளுடன் பேசுவதற்கு கூடிய நேரத்தை ஒதுக்குதல்

4.         பிள்ளைகளுக்குரிய இலக்குகளை முன்வைத்தல்

5.      வீட்டில் பிள்ளையின் வாசிப்பைத் தூண்டக்கூடிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல் (உதாரணம்:வாராந்தப் பத்திரிகைகளில்         பிரசுரமாகியிருக் கின்ற சிறுவர் பகுதியை வாசிக்கத் தூண்டுதல்,கதைப்புத்தகங்கள்  விக்கிரமாதித்தன் கதை, தெனாலிராமன் கதை,    பரமார்த்தகுரு கதைகள், நீதிக்கதைகள், விஞ்ஞானக்   கதைகள்              முதலானவை)

6.         நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் வாசிக்க வழிப்படுத்துதல்

7.         போட்டிகளில் பங்குபெற ஊக்குவித்தல்

8.         பிள்ளைகளின் நல்ல உணர்வுகளுக்கு மதிப்பளித்தல்

9.          பற்கள் சீரின்மை, வாயில் உள்ள குறைபாடு ஆகியவற்றை மருத்துவ                        ரீதியில்       அணுகித் தீர்த்தல்

10.       வீட்டில் தளவாடியின்முன் நின்று பேசவைத்தல்

11.       பேச்சுப் பயிற்சியளித்தல்

12.       பிள்ளையின் வகுப்பறைச் செயற்பாடு பற்றி அறிந்து கொள்ளுதல்

13.       பாடசாலைச் செயற்பாடுகளுக்கு பிள்ளைகளுக்காக ஆதரவு கொடுத்தல்

14.       பாடசாலையுடன் முறையான தொடர்பாடலைப் பேணுதல்

15.        பிள்ளைகளின் நலன்கருதி அதிபர், ஆசிரியர்களின் கருத்துக்

             களுக்கு  மதிப்பளித்தல்

(இ) சமூகம்

'பலர் சேர்ந்து ஒரு சமுதாயமாய் ஓர் இனமாய்ப் பழகி வாழ்வதற்குத் துணையாக உள்ள சிறந்த கருவி மொழியே.' என்பார் மு. வரதராசன். மாணவரின் கற்றலில் ஆசிரியரும் பெற்றோரும் பெரும் பங்கெடுத்தாலும் சமூகத்திற்கும் சில பொறுப்புக்கள் உள்ளன. ஏனெனில் குறித்த மாணவன் தனது கல்வியை மிகச் சிறப்பாக முன்னெடுத்து வரும்போது அவன் சமூகத்தின் பங்காளியாகின்றான். கல்வி, பொருளாதாரம், அரசியல், சமூகம், பண்பாடு ஆகிய நிலைமைகளில் தனக்குப் பின்வரும் சந்ததிகளுக்கு வழிகாட்டவேண்டியவனாக இருக்கின்றான். எனவே, கற்றலில் ஈடுபடும் மாணவர்களின் கல்விக்குப் பங்கம் ஏற்படாது சமூக மேன்மையைக் கட்டிக் காக்கவேண்டிய பொறுப்பு சமூகத் தலைவர்களுக்கும் சமூக நிறுவனங்களுக்கும் இருக்கின்றது.

     கிராம மட்டங்களில் இயங்கக்கூடிய முன்பள்ளிக் கல்வியுடன் தொடர்புபட்ட ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் கற்றலுக்குரிய வளங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் முன்பள்ளிப் பிள்ளைகளுக்கு உரிய நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியதும் சமூகத்தின் முக்கிய கடப்பாடாக அமைந்திருக்கின்றது. கல்வியை வழங்குதல், இணைபாடவிதான செயற்பாடுகளுக்கு சந்தர்ப்பம் வழங்குதல், கற்றலில் ஈடுபாட்டையும் ஊக்கத்தையும் வழங்குதற்கு சமூகம் பல்வேறு பங்களிப்புகளை வழங்குதல் ஆகியன இவற்றில் உள்ளடங்கியுள்ளன.

1. முன்பள்ளி நிர்வாகத்தினை மிகச் செம்மையாக நடாத்துதல்

2. முன்பள்ளிக்கு வேண்டிய பௌதீக வளங்களைப் பெற்றுக் கொடுத்தல்

3. கற்றல் கற்பித்தலுக்கான சூழலை ஏற்படுத்துதல்

4. பிள்ளைகள் நூல்களைப் பெற்று வாசிக்கக்கூடிய நூலக வசதி ஏற்படுத்திக்         கொடுத்தல்

5. மொழித்திறனை விருத்தி செய்யும் போட்டிகள் நடாத்தி ஊக்குவித்தல்

6. தமிழ் மன்றம், மாணவர் மன்றங்களை உருவாக்கி மாணவர்களைச்                        செயற்பட           வைத்தல்

7. கிராமங்களில் உள்ள வாசிகசாலைகளில் பத்திரிகைகளைக் கிரமமாகப்             பயன்படுத்த             வழிசெய்தல்

8. வாசிகசாலைகளில் மாணவர்களுக்குரிய சஞ்சிகைகளைக் காட்சிப்படுத்தி       வாசிப்பை ஊக்குவித்தல்

9. கிராமமட்டங்களில் எழுத்தாற்றலைத் தூண்டக்கூடிய போட்டிகளை                    ஒழுங்குபடுத்தி             பரிசில்கள் வழங்கி ஊக்குவித்தல்

10. கிராமங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் மாணவர்களுக்கும் வாய்ப்புக்             கொடுத்தல்

முடிவுரை

            எனவே, கல்வியின் ஊடாக ஒரு சமூகம் அபிவிருத்தியை அடைய வேண்டுமானால் மாணவர்களின் கற்றல் நிலைமை மேம்பாட்டினை நோக்கியதாக அமைய வேண்டும். மொழித்திறன் விருத்தியடையும்போதுதான் ஒரு மாணவன் தான் எதிர்பார்த்த இலக்கை அடையமுடியும். அந்த இலக்கின் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்த சமூகத்தையும் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றுவதற்கு ஊக்கியாக அமைய முடியும். கருத்துப் புலப்பாட்டுக்கும் சிந்தனை வளர்ச்சிக்கும் மறக்கப்படுவனவற்றை மறவாமல் காத்து அடுத்த சந்ததிக்குக்  கையளிப்பதற்கும் கருவியாக இருக்கும் தமிழ்மொழிக்கல்வியை நன்கு கற்று ஒவ்வொரு மாணவரும் வாழ்வை ஒளிமயமாக்கவேண்டும்.

உசாத்துணைகள்:

1.         சிவத்தம்பி, கா., தமிழ் கற்பித்தல், கொழும்பு: குமரன் புத்தக இல்லம், 2007.

2.         சந்திரசேகரன், சோ., அபிவிருத்தியும் கல்வியும், கொழும்பு: தர்ஷனா பிரசுரம், 1996.

3.         வரதராசன்,மு.டாக்டர்., மொழி வரலாறு, சென்னை: தென்னிந்திய சைவசிந்தாந்த             நூற்பதிப்புக் கழகம், 2002.

4.         கருணாகரன்,சி.முனைவர்,,ஜெயா.வ.முனைவர்., மொழியியல், சென்னை: கவிதா    பதிப்பகம், 1997.

5.         உதயச்சந்திரன்,வி.என்.எஸ்.,ஆரம்பக்கல்வியும் தமிழ்ப்பாட நூல்களும், கடல்           தொகுப்பு, அல்வாய்: ஜீவநதி வெளியீடு, 2019.

6.         நுஃமான், எம்.ஏ., ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ்மொழி கற்பித்தல் ஒரு             மொழியியல் அணுகுமுறை, கொழும்பு: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 2002.

7.         தேவமுகுந்தன், முன்பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிப் பிள்ளைகளின் பௌதிக மற்றும்             சமூகச் சூழல், கடல் தொகுப்பு, அல்வாய்: ஜீவநதி வெளியீடு, 2019.

8.         பார்வதி கந்தசாமி, கலாநிதி., 'ஐந்தாம் வகுப்பு மாணவர் தமிழ்மொழிப் பயிற்சிகளில்           சில அவதானிப்புகள்', தமிழ்மொழி கற்பித்தல் மொழியியலாளர் நோக்கு, (பதிப். திருமதி இரத்தினமலர் கயிலைநாதன்) ஏழாலை: மகாத்மா அச்சகம், 1999.

9.         Balasundaram Soba, Proceedings of Jaffna University International Research Conference             (JUICE 2014)

10.       http://aslamsaja.com/

(08.11.2023 இல் யா/கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் நிகழ்த்திய நிறுவுநர் நினைவுப் பேருரை)

நன்றி : பதிவுகள்


 

ஒரு சமூகத்தின் விழிப்பும் மாற்றமும் : செங்கை ஆழியானின் பிரளயம்

 

கலாநிதி சு. குணேஸ்வரன்

    ழத்தில் அதிகமான புனைகதைகளை எழுதியவர் செங்கை ஆழியான். இலக்கியத்துறை மட்டுமல்லாமல் நிர்வாகத்துறையிலும் கல்வித்துறையிலும் ஈடுபட்டவர். ஈழத்து இலக்கியச் சூழலில் சாதாரண மக்களின் பல்வேறு பிரச்சினைகளையும் வாழ்க்கைப் பாடுகளையும் தனது எழுத்துக்களில் கொண்டு வந்தவர். யாழ்ப்பாண மொழிவழக்கை எந்தப் பூடகமுமின்றி தனது படைப்புகளில் எடுத்தாண்டவர். இவரின் அதிகமான படைப்புகள் பத்திரிகைகளில் பிரசுரமானவை. அதனால் மக்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்ட எழுத்தாளராகவன்றி மக்கள் மத்தியில் வாசிப்பைப் பரவலாக்குதவற்கும் காரணராக இருந்திருக்கின்றார்.

     எழுத்து முயற்சிகளுக்கு அப்பால் செங்கை ஆழியானின் பணிகள் பல விதந்து பாராட்டத்தக்கவை. அவற்றுள் ஒன்று அவரது தொகுப்பு மற்றும் பதிப்பு முயற்சிகள். சிதைந்தும் சிதறியும் போயிருந்த ஈழத்துப் படைப்புகளை ஒன்று திரட்டித் தொகுப்புகளாகத் தந்த அவரின் பணியைக் குறைத்து மதிப்பிடமுடியாது.  

   புனைகதை இலக்கியம் சார்ந்து பல்வேறு பொருண்மையில் எழுதியிருந்தாலும் சாதியம் சார்ந்த வகையில் இரண்டு குறுநாவல்களை எழுதியுள்ளார். ஒன்று பிரளயம். மற்றையது அக்கினி, பிரளயம், 1971 இல் 'மயானபூமி' என்ற தலைப்பில் சிரித்திரனில் தொடராகப் பிரசுரமாகி 1975 இல் சில மாறுதல்களுடன் 'பிரளயம்' என மாற்றம் பெற்று வீரகேசரிப் பிரசுரமாக நூலுருப் பெற்றது. 1976 இல் சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றது. இரண்டாம் பதிப்பு 1989இல் கமலம் பதிப்பாக வந்தது. மற்றொரு நாவல் 1987இல் ஈழநாடு வாரமஞ்சரியில் வெளியாகிய அக்கினி என்பதாகும். இவற்றினைவிட அக்கினிக்குஞ்சு, என்ற குறுநாவலிலும் சிரித்திரன் ஆண்டு மலரில் வெளிவந்த நிலமகளைத்தேடி என்ற குறுநாவலிலும் சாதிப்பிரச்சினை பற்றி எழுதியுள்ளார்.

  இந்த வகையில் அவரின் பிரளயம் என்ற நாவல் பற்றி நோக்குவதே இக்கட்டுரையின் பணியாக அமைகிறது.

  சலவைத் தொழிலாளர் சமூகம் அடிமை குடிமை நிலையில் இருந்து விடுபடத் துடித்த உணர்வுநிலையை கதைக்கருவாகக் கொண்டதே பிரளயம் ஆகும்.

 வேலுப்பிள்ளை என்ற குடும்பத்தை மையமாகக் கொண்டு வண்ணார்ப்பண்ணையைக் களமாகக் கொண்டு இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது. மூத்தமகள் ராணி படிப்பிலும் வீட்டைக் கொண்டு நடாத்துவதிலும் கெட்டிக்காரி எனப் பேர்பெற்றவள்.  வேலுப்பிள்ளையின் இளைய மகள் சுபத்திரா படிப்பை நிறுத்திவிட்டு தையல் வேலைக்குச் சென்று வருபவள். அவள் உயர்சமூகத்தைச் சேர்ந்த வாமதேவன் என்ற வாலிபனைக் காதலிக்கிறாள். இக்காதல் விவகாரம் வாமதேவனின் பெற்றோருக்குத் தெரியவர அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் தமது சமூகத்திற்குள் திருமணம் செய்து வைக்கின்றனர். வாமதேவனால் ஏமாற்றப்பட்டமை அறிந்து வயிற்றில் கருவோடு நிற்கிறாள் சுபத்திரா. வேலுப்பிள்ளைக்கு இவையெல்லாம் தெரியவர அவரும் குடும்பமும் நிலைகுலைந்து போகிறது. சுபத்திராவுக்கு நியாயம் கேட்க தந்தை வேலுப்பிள்ளை செல்கிறார். அங்கு வாமதேவனின் பெற்றோரால் வேலுப்பிள்ளை ஏளனப்படுத்தப்படுகிறார். ஆனால் வாமதேவனின் தம்பி மகாலிங்கம் ஏற்கனவே முற்போக்கான எண்ணம் கொண்டவன். ஊரில் புதிய தலைமுறையினரின் மனமாற்றத்திற்கு உதாரணமாகக் கூறப்படுபவன். தன் தமையனால் ஏமாற்றப்பட்ட சுபத்திராவை மகாலிங்கம் ஏற்றுக்கொள்ள முன்வருகிறான்.

    இந்நாவலில் வழமையான கதைபண்ணும் போக்கில் செங்கையாழியான் தனது கதையை நகர்த்தாமல் புதிய தலைமுறையினரின் சிந்தனையூடாகவே சமூக மாற்றம் சாத்தியம் என்பதைக் காட்டுகிறார். எவ்வாறெனினும் சாதிமீறிய காதலும் திருமணமும் வாழ்க்கையில் பல பிரச்சினைகளுக்கு வழிகோலக்கூடியவையாகவே காலங்காலமாக அமைந்திருக்கின்றன.

      ஒரு புதிய சிந்தனையை முன்வைத்த வகையில் செங்கையாழியானின் இந்நாவல் அப்போது பலராலும் சிலாகித்துப் பேசப்பட்டது. சு.வித்தியானந்தன் எழுதிய ஒரு குறிப்பை இத்துடன் பொருத்திப் பார்க்கலாம்.

'குறிப்பாக, சாதி ஏற்றத்தாழ்வு என்ற சமூகக் குறைபாட்டைப் பொருளாகக் கொண்டு இவரால் படைக்கப்பட்ட பிரளயம் நாவல் யாழ்ப்பாணக் கிராமமொன்றிலே நிகழ்ந்து வரும் சமுதாய மாற்றத்தை அதன் இயல்பான நடப்பியல்புடன் காட்டுவது, நீண்ட காலமாக உயர்சாதிக் குடிமை செய்து வந்த சலவைத் தொழிலாளர் குடும்பம் ஒன்று கல்வி, பிறமொழி முயற்சிகள் என்பவற்றால் அக்குடிமை நிலையிலிருந்து விலகிப் புதிய வாழ்;க்கை முறைக்கு அடியெடுத்து வைக்க முயல்வதே இந்நாவலின் கதைப்பொருள். இம்மாற்றத்திற்கு இளைய தலைமுறை முனைந்து நிற்கிறது. ஆனால் முதிய தலைமுறை பாரம்பரியச் சிந்தனை ஓட்டத்திலிருந்து விடுபட முடியாமல் நிற்கிறது.' (காட்டாறு முன்னுரையில் சு. வித்தியானந்தன்)

   ஈழத்து நாவல்களில் சாதிப்பிரச்சினையை மையமாகக் கொண்டு நீலகண்டன் ஓர்சாதி வேளாளன் (1925), எஸ். தம்பிமுத்துப்பிள்ளையின் அழகவல்லி (1925) ஆகியன முதல் முயற்சிகளாக இருந்தாலும் இப்பிரச்சினையினை சமூக வரலாற்று நோக்கில் பின்வந்த எழுத்தாளர்கள் நோக்கினர். அவர்களுள் இளங்கீரன், செ. கணேசலிங்கன், கே. டானியல், தெணியான், செ. யோகநாதன் முதலானோர் சாதியத்தை வர்க்க அடிப்படையில் நோக்க சொக்கன், செங்கை ஆழியான், தி.ஞானசேகரன், சோமகாந்தன் முதலானோர் சமூக விமர்சன அடிப்படையில் நோக்கினர்.

'சமுதாய வரலாற்று நோக்கில் நாவல் படைக்கும் முயற்சியில் முக்கியமான இருவகை அணுகுமுறைகள் காணப்பட்டன. ஒருவகை இப்பிரச்சினையைப்  பொதுவுடைமைக் கோட்பாட்டு அடிப்படையில் ஒரு வர்க்கப் போராட்ட வரலாறாக நோக்குதல். இன்னொரு வகை,  இதனை சமுதாயத்தின் இயல்பான சிந்தனை மாற்றத்தின் வரலாறாக நோக்குதல். இவற்றின் முதல்முறை அணுகுமுறை செ. கணேசலிங்கன், கே.டானியல், என்போரால் மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவது அணுகுமுறையை மேற்கொண்டோரில் ஒருவர் செங்கை ஆழியான். அவரது இந்த நாவல் இவ்வணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள தரமானதொரு ஆக்கமாகும். தாழ்த்தப்பட்டோர் உயர்த்தப்பட்டோர் இரு சாரரிடத்தும் நிகழும் சிந்தனை மாற்றங்கள் இயல்பாகவே சமுதாய மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை இந்நாவல் உணர்த்தியமைகிறது. (நா. சுப்பிரமணியம், அணிந்துரை, பிரளயம். ப.5)

       கல்வியில் உயர்வடைவதும் ஒடுக்குதலுக்குரிய பாரம்பரியத் தொழிலில் இருந்து வேறுபட்ட தொழில் முயற்சிக்கு மாற்றத்தை வேண்டுதலும் இக்கதையில் முதன்மையான பேசுபொருள்களாக அமைந்திருக்கின்றன.

  பெண்பிள்ளைகள் தொடர்ந்து கற்பதை குடும்பத்தின் மூத்த தலைமுறை அவ்வளவு விரும்பவில்லை என்பது ஆச்சியின் பேச்சினூடாக வெளிப்படுகிறது. 'குசினிக்கை முடங்கப்போற வண்ணாத்திக்கும் படிப்புத் தேவையோ? மூத்த பொம்பிளைப் பிள்ளை வீட்டோட இருந்தால் எவ்வளவு உதவியாக இருக்கும்' என்கிறாள். இது அவர்களின் வழிவழியாக வந்த எண்ணமாக இருக்கின்றது.

  ஆனால் ராணி முதல் ஏனைய சகோதரர்வரை 'நாங்க எல்லாரும் படிக்க வேணும். படிக்காததாலதான் எங்க சாதி இப்பிடிக் கிடக்கு. படிப்பாலைதானே எல்லாரும் முன்னேறி இருக்கினம். எங்கடை ரீச்சர்கூட இதைத்தான் சொல்கிறா. உங்களைக் கும்பிட்டுக் கேக்கிறன் ஐயா. எங்களை மறிச்சுப் போடாதையுங்கோ' என்று ராணி கேட்கிறாள். பாரம்பரியமான எண்ணத்தை மாற்ற விரும்புகிறார்கள். தகப்பன் வேலுப்பிள்ளை அதனை ஏற்றுக் கொள்கிறார்.

'இதோ பார் பொன்னு, படிப்பின் பெருமையை இன்றைக்கு உணர்ந்திருக்கிறன். விதானையார் தம்பிப்பிள்ளையைப் பார். நான் துணி எடுக்கப் போற வேளையெல்லாம் என்ன சொல்லுறார் 'ஏன் வேலுப்பிள்ளை பிள்ளையளையெல்லாம் படிப்பிக்கிறாய் சும்மா மறிச்சுப்போட்டுத் தொழிலைக் கற்றுக் கொடுக்கிறதுதானே. படிச்சாப்போல ஏதோ கிடைக்கப்போகிறதோ? என்று சொல்லுறார். நம்மீது இரக்கப்பட்டா சொல்லுறார் என்று நினைக்கிறாய்? இல்லைப் பொன்னு எங்கை என்ரை புள்ளையள் படிச்சு நல்லா வந்திட்டா, தங்களிலும் பார்க்க உயர்ந்திடும் என்று பயப்பிடுகிறார். என்னோடேயே எல்லாhம் போகட்டும் என்ரை பிள்ளையள் வெள்ள நீருக்கை நின்று விறைக்க வேண்டாம். உச்சி வெயிலுக்கை நின்று காய வேண்டாம்.'

  இதனாலேயே ராணிக்கு முறைமச்சானை திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் விரும்பியபோதும் வேலுப்பிள்ளை, அவள் படிப்பைக் குளப்பவேண்டாம். படிப்பு முடியட்டும் என்று தள்ளிப்போடுகிறார். இந்தப் பச்சைக்கொடி காட்டல் ராணிக்கு மட்டுமல்ல அவளின் சகோதரர்களுக்கும் அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

'இப்ப சோதனை முடிந்ததும் நான் யூனிவசிற்றிக்குப் போகப்போறன். அங்கே மூன்று அல்லது நான்கு வருஷம் படித்துப் பட்டம் பெற்ற பின்புதான் மற்றதெல்லாம்.'

என்று அவளது திருமணப்பேச்சை எடுத்தபோது தாயாரிடமும் கூறுகிறாள்.

     பாடசாலையில் சாதியின் பெயரால் ராணி ஏளனப்படுத்தப்படுதல், வாடகைக்கார் ஓட்டிச் சம்பாதிக்கும் தமையனின் கார் ரயரை வைகாசிப் பொங்கல் திருவிழாவில் கோயிலடியில் குத்திக் கிழித்தல், விதானையார் குடும்பத்தினரின் இழிவுபடுத்தல்கள், வாமதேவனின் தகப்பன் வேலுப்பிள்ளையை கீழ்த்தரமாகப் பேசுதல், கோயிற் திருவிழாவில் ஏற்படுகின்ற முரண்பாடுகள் முதலான மனித நாகரிகமற்ற செயற்பாடுகள் கதையில் சம்பவச் கோர்வைகளாக விரிகின்றன.

   இதேபோல் தொழில்மாற்றமும் கதையில் கூறப்படுகிறது. ராணியின் தம்பி மீளவும் பரீட்சை எடுத்துச் சித்தியடைகிறான். இதனால் அவனின் மேற்படிப்புக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. மறுபுறத்தில் மூத்தமகன் இராசு தன் தந்தையின் சலவைத் தொழிலையே மீளவும் செய்யாமல் மாமன் வீட்டாரின் ஆதரவுடன் தனது சீதனக்காணி, நகைகளை விற்று கார் எடுக்கிறான். இதனூடாக வாடகைக்கார் ஓட்டும் தொழில் மாற்றத்தை மேற்கொள்கிறான். இத்தொழில் மாற்றம் இங்கு முக்கியமானது.

'இராசுவின் தொழில் மாற்றம் அவருக்குப் புதுமையாகப் படவில்லை. அவருடைய பகுதியில் எவ்வளவோ பேர் தொழில் மாறித்தான் விட்டார்கள். கணபதியின் மகன் ஒருவன் இன்று ரெயில்வேயில் உத்;தியோகம் பார்க்கிறான். வல்லிபுரத்தின் மகன் பாற்பண்ணை நடத்துகிறான். சோமரின் இளைய மகன் சைக்கிள் கடை ஒன்று தொடங்கி விட்டான். இப்படி இன்னும் யார் யாரோ? இராசுவும் அவர்களில் ஒருவனாகப் போகிறான் நினைத்துப் பார்க்கும்போது இந்தப் பரம்பரையில் மாற்றங்கள் நிகழத்தான் போகின்றன என்பது புலனாகின்றது.' 

      செங்கையாழியான், சாதியப் பிரச்சினை என்பது கல்வியினாலும் தொழில் மாற்றத்தினாலும் தீர்க்கக்கூடியது என்பதில் நம்பிக்கை கொண்டவராக இருந்திருக்கிறார். ஏனையவர்கள் சாதியத்திற்கு அடிப்படைக் காரணம் வர்க்க வேறுபாடு என்று கூற செங்கையாழியானோ சமூகமாற்றமே இப்பிரச்சினையைத் தீர்க்கக்கூடியது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார். இதனை அவரின் வாக்குமூலமே உறுதி செய்கின்றது.

'பிரளயத்திலும் அக்கினியிலும் சாதிப் பாகுபாட்டினை நீக்குவதற்கு உடனடி மார்க்கமாக மூன்று சமூகச் செய்திகளை முன்வைத்துள்ளேன். சாதி ஏற்றத் தாழ்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வசதி, செல்வ வசதி, தொழில் மாற்ற வசதி ஆகிய மூன்றும் கிடைக்கில் சமூக அந்தஸ்து தாமே கிடைப்பதாக இந்த நாவல்களில் அனுபவபூர்வமாகச் சித்திரித்துள்ளேன். பிரளயம் நாவலில் கல்வியாலும் சாதி அடிப்படையல்லாத தொழில் மாற்றத்தாலும் சமூகத்தில் ஏற்படும் மாற்றத்தைக் காட்டியுள்ளேன். அதனால்தான் பிரளயம் நாவலின் முன்னுரையில் ஒரு சமூகத்தின் விழிப்பையும் மாற்றத்தையும் இந்த நவீனம் பேசுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளேன்.' (செங்கை ஆழியான், நானும் எனது நாவல்களும், ப.40)

    சாதாரண மக்களின் பிரச்சினைகளைக் கதைக்கருவாக எடுத்தாண்டபோதிலும் பாத்திர வார்ப்பு, பாத்திர உரையாடல்கள், களச்சித்திரிப்பு ஆகியவற்றில் பொருத்தமான மொழிநடையினைக் கையாண்டுள்ளார். பாத்திரங்களின் உணர்வுக்கேற்ற சில தொடர்களை எடுத்துக்காட்டலாம்.

'அடிமைச் சேவகம் செய்து இரத்தத்தோடு ஊறிவிட்ட தாழ்வை வெல்ல என்னால் முடியவில்லை.' – வேலுப்பிள்ளை

'கரப்பான் பூச்சியள் உள்ளை நுழைந்து உடுப்பை அரிக்குது அதுதான் றங்குப்பெட்டிக்கு ஆமப்பூட்டுப் போட்டு பூட்டியிருக்கிறன்;. – சுபத்திரா

 'பூட்டுப் போட்டுப் பூட்டினால் பூச்சி போகாதா. ஏன் சுபத்திரா எதையாவது இரகசியத்தை வைத்துப் பூட்டியிருக்கிறியா?' - ராணி

  நாவலின் பிரதான பாத்திரமாகிய ராணியைச் சுற்றியே கதையும் கதைக்களங்களும் அமைக்கப்பட்டுள்ளன. படிப்பு, வீட்டுவேலை, சகோதரர்களை வழிநடத்துதல், சகோதரி சுபத்திராவின் பிரச்சினையை அறிதல், சுபத்திரா காதலிக்கும் வாமதேவனின் நடத்தை பற்றி எடுத்துக்கூறி எச்சரித்தல், தனது படிப்புக்கு திருமணம் தடையாக இருப்பதை எதிர்த்தல் முதலான சம்பவ விபரிப்புகள் ஊடாக ராணியின் பாத்திரத்தை உயிரோட்டமாக ஆசிரியர் சித்திரித்துள்ளார்.

    ஏனைய பாத்திரங்களில் மகாலிங்கம் பாத்திரம் ஓர் இலட்சியப் பாத்திரமாக ஆசிரியர் உருவாக்கியிருந்தாலும் கதையில் தொடக்கத்திலிருந்து அப்பாத்திரத்தின் நேர்மையும் முற்போக்கான எண்ணங்களும் படிப்படியாக வளர்த்துச் செல்லப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

'மகாலிங்கத்தைப் பற்றி எண்ணும்போது ராணிக்கு ஒரு மரியாதை உணர்வு பிறக்கிறது. அவன் ஓர் ஆசிரியன். தமையனின் அடிச்சுவட்டைப் பின்பற்றாதவன். ஏதோ கட்சி கூட்டம் என்று திரிபவன்.'

'மகாலிங்கத்தைப் பற்றி வண்ணார்ப்பண்ணையில் உயர்வாகவே பேசிக் கொண்டார்கள்.' 'ஊருக்கு உழைப்பவன்'

  களவர்ணனைகளில் சலவைத் தொழில் சார்ந்த நுணுக்கமான விபரணைகள் இல்லையெனினும் ஓரிரு இடங்கள் கதைக்குப் பொருத்தமாக அமைந்துள்ளன. கதைத்தொடக்கமே அழகான வருணனையுடன் தொடங்குவதை அவதானிக்கலாம்.

 'வைகறை இனிமையாக மலர, இருள் மெதுவாக விலகத் தொடங்கியது. மென்புகார் முற்றாக நீங்கி விடவில்லை. பாலை விறகு எரிந்து படர்ந்த புகைப் போர்வைபோல பனிப்புகார் திரை விரித்திருந்தது. ராணி சோம்பலை முறித்தபடி முற்றத்தில் கால்களைப் பதித்தாள். இரவு பெய்த மழையினால் நீர் ஊறிப் பொருமியிருந்த நிலம், சில்லென்ற குளிர்ச்சியை ஊட்டியது. அவளுக்கு அது வழக்கமான குளிர்ச்சிதான். பனியும், மழையும் அவளின் வைகறைத் துயில் களைப்பை நிறுத்திவிட முடியாதவை. அவை அவளின் தோழிகள். முற்றத்தில் தாழ்வாரத்தோடு சடைத்து வளர்ந்திருந்த சீமைக்கிளுவை மரங்கள் எதிர்பாராது வீசிய காற்றினால் அலைப்புற்றன. ராணியால் உடனே ஒதுங்கிவிட முடியவில்லை. பனித்துளிகளாகச் சிந்திய மழைத்துளிகள் அவள் உடலைத் தழுவிச் சிதறின.' (ப.1)

            உயர்சாதி இளைஞர்களின் மனமாற்றம், பொதுமைநோக்கு ஆகியனவும் கூறப்பட்டுள்ளன. அதேநேரம் பழைய நிலைப்பாட்டிலேயே இன்னமும் சமூகத்தை வைத்திருக்க நினைப்போரும் உளர். அந்த இடையூறுகளை எல்லாம் தவிர்த்து வாழ்வில் உயர்வடைய ஒரு சமூகம் பெரும் பிரயத்தனம் செய்கிறது. அவற்றின் ஒரு குறுக்கு வெட்டுமுகமாக பிரளயம் என்ற குறுநாவல் அமைந்துள்ளது.

    முடிவாக, ஈழத்து இலக்கியச் சூழலில் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய ஒரு புதிய தலைமுறைச் சேர்ந்தவர் செங்கையாழியான். இலங்கையின் பல பாகங்களிலும் தொழில்சார்ந்து பயணப்பட்டவர். மக்கள் பிரச்சினைகளை ஆராய்ந்து அறியும் நிர்வாகத் துறையிலும் பணியாற்றியவர். இதனாலேதான் மாறிவந்த பல்வேறு காலங்களையும் காலத்துடன் பயணித்த மக்களின் வாழ்க்கைத் துயர்களையும் பதிவு செய்தவர். அவரின் எழுத்துக்களில் 'இரவுநேரப் பயணிகள்' என்ற சிறுகதைத் தொகுப்பு நெருக்கடிமிக்க ஒரு காலத்தின் பதிவாக விளங்கியிருக்கிறது. அதேநேரம் இறுதிக்காலத்தில் ருத்ரதாண்டவம் என்ற நாவலில் காலத்தைப் பதிவுசெய்யும் அவசர முயற்சியாக கருத்தியற்பிழையுடன் எழுதப்பட்ட படைப்பையும் தந்திருக்கின்றார். மற்றும் அதிகமானவர்களால் வைக்கப்படும் குற்றச்சாட்டு அவரின் எழுத்துக்களில் இருக்கும் ஆழமும் உணர்வுச் செறிவும் மேலும் வலுப்பட்டிருக்கவேண்டும் என்பது. இவையெல்லாவற்றையும் தாண்டி சமூகத்தின் நடப்பியல்புகளை தனது மொழியில் தனது பார்வையில் பல்வேறு படைப்புக்களாகத் தந்திருக்கின்றார். மக்களிடையே வாசிப்பை ஊக்குவிப்பதற்கும் இலக்கியத்தின்பால் நாட்டத்தை ஏற்படுத்தவும் ஒரு காலத்தில் கல்கி எப்படித் தேவைப்பட்டாரோ வீரகேசரிப் பிரசுரங்கள் கிராமத்தின் மூலைகளுக்கு எல்லாம் சென்று சேர்ந்து ஈழ இலக்கியத்தை எவ்வாறு பரவலாக்கியதோ அதேபோல செங்கை ஆழியானின் எழுத்துக்களும் மக்களிடம் சென்று சேர்ந்தன என்று கூறலாம். அவர் புதியவர்களை வாசிக்க வைத்தார். புதியவர்களின் எழுத்துக்களுக்குக் களம் அமைத்தார். கடந்துபோன காலங்களையும் சமுதாயத்தின் மாற்றத்தையும் தனது எழுத்துக்களில் வடித்தார். அந்த வகையில் ஒரு சமூகத்தின் விழிப்பும் மாற்றமுமாக பிரளயம் அமைந்துள்ளது.

ஜீவநதி, சாதியச் சிறப்பிதழ், இதழ் 200, 2023.