கலாநிதி சு. குணேஸ்வரன்
புலம்பெயர்ந்தோர்
படைப்புகளில் அரசியல் சார்ந்த உள்ளடக்கத்தைக் கொண்டனவாக 80கள் முதலே பல புனைவுகள் வெளிவந்துள்ளன.
இதற்கு ஈழத்திலும் தமிழகத்திலும் வெளிவந்த ஈழத்தவரின் முன்னோடிப் படைப்புகளை ஒருமுறை
நினைவு கொள்ளலாம். மு. தளையசிங்கத்தின் ‘ஒரு தனிவீடு’ தொடக்கிவைத்த அரசியல் சார்ந்த
வெளிப்பாட்டின் தொடர்ச்சியை அருளரின் ‘லங்காராணி’யில் காணமுடிந்தது. அதேபோல் கோவிந்தனின்
‘புதியதோர் உலகம்’, செழியனின் ‘ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’ ஆகியவற்றுக்கூடாக
போராட்ட இயக்கங்களின் உள்ளரசியல் பேசப்பட்டது. ஆனால் இவ்விரண்டு போக்குகளைக் கடந்தும்
இணைந்தும் பல படைப்புக்கள் 2009 இற்கு முன்பின்னாக வெளிவந்துள்ளன. இவை யாவும் அரசியல்
சார்ந்த புனைவுகள் என்ற ஒரு புள்ளியில் சந்திக்கக்கூடியவை.
ஈழத்தில் மண்வாசனை
நாவல்கள் வெளிவந்த காலத்தைத் தொடர்ந்து 1950 கள் முதல் மொழியுரிமை மற்றும் இனமுரண்பாடு
சார்ந்த பிரச்சினைகளை வெளிப்படுத்தியும் பல நாவல்கள் தோன்றின. ஒரு புறத்தில் தமிழ்த்தேசிய
ஆதரவு சார்ந்த எழுத்துகளும் மறுபுறத்தில் இயக்க உள்ளரசியல் முரண்பாடுகளைப் பேசிய படைப்புகளும்
இன்றுவரையிலும் தொடர்கின்றன. அதேவேளையில் இரண்டு போக்குகளுக்கும் அப்பால் மாற்றுச்
சிந்தனை என்ற வகையிலும் கணிசமான படைப்புகள் வந்துள்ளன. அவற்றுள்ளும் நுண்ணரசியலை வெளிப்படுத்தும்
வித்தியாசங்களை அறியமுடியும். கருத்தியல் அடிப்படையிலும் புனைவின் தீவிரத்தன்மையிலும்
தமிழ்ச்சூழலில் ஈழப்படைப்புகளைக் கவனங்கொள்ள வைத்த பல நாவல்களை இவற்றுக்கு உதாரணங்
காட்டலாம். இந்த வகையில் ஒரு பொதுத்தளத்தில் கடந்த காலச் செயற்பாடுகளைப் பதிவு செய்த
அல்லது விமர்சித்த நாவல்களின் வரிசையில் வந்து சேரக்கூடியதாகவே சயந்தனின் ஆறாவடு அமைந்திருக்கிறது.
1987 முதல் 2003ற்கு
இடைப்பட்ட காலத்தைக் களமாகக் கொண்டு ஆறாவடு நாவல் இயங்குகின்றது. இரண்டு சமாதான ஒப்பந்தங்களுக்கு
இடைப்பட்ட காலங்களிலுங்கூட தமிழ்மக்கள் எவ்வாறான இன்னல்களை அனுபவித்தார்கள் என்பதனையே
நாவலின் கதைக்காலம் குறிக்கின்றது.
“நிகழ்கால நடப்பியலைச்
சித்திரிப்பதற்கு கடந்த காலத்தின் மீதான விசாரணைகள் அதன் தாக்கங்கள் அதன் மீதான தீர்ப்புகள்
கடந்த காலம் முடிந்தேறிவிட்ட ஒன்றா அல்லது இன்னும் அது நிகழ்காலத்தின் மீது நிழல் விழுத்தி
நிற்கிறதா என்பது பற்றிய தெளிவு என்பனவெல்லாம் அவசியமானவை.” (யமுனா ராஜேந்திரன், ஈழத்து
அரசியல் நாவல்கள்) என்ற கூற்று கடந்த காலத்தை ஏன் எழுதவேண்டும் என்பதற்கான பதிலாக அமைந்திருக்கிறது.
இந்தியப் படைகள் இலங்கையில்
நிலைகொண்டிருந்த காலங்களிலும் அச்சுறுத்தல்கள், கைதுகள், சித்திரவதைகள் நிகழ்ந்துள்ளன.
இந்த நாவலை வாசிக்கின்றபோது அந்தக் காலங்களோடு விடலைப் பருவத்தில் எதிர்கொண்ட அனுபங்களும்
கூடவே நினைவை அச்சுறுத்துகின்றன. அக்காலத்தைக் கடந்த அதிகமான இளைஞர்கள் அனுபவித்திருக்கக்கூடிய
பொதுமையான ஒரு போக்காகவே இது அமைந்திருக்கின்றது. இந்த அச்சத்திற்கு இந்திய இராணுவத்துடன்
இணைந்து இயங்கிய ஈழத்தமிழ்ப் போராளிக் குழுவும்கூட, காரணமாக இருந்திருக்கின்றது.
மறுபுறம் தமிழ் மக்களின்
விடுதலைக்குத் தொடர்ச்சியாகப் போராட்டக்களத்தில் நின்ற தமிழ்ப் போராளிகளும் மக்களுக்கு
நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளனர். போராட்டகாலச் சம்பவங்கள், நிர்வாகக் கட்டுப்பாடுகளுக்கு
இணங்கி நடக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் ஆகியன இந்நாவலின் கதைகளுக்கு ஊடாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இங்கும் இளைஞர்கள் அச்சுறுத்தப்பட்டனர். தனிமனித சுதந்திரம் என்பது அமைப்பின் பெயரால்
கட்டுப்படுத்தப்பட்டது. ‘இது சரியில்லை அல்லவா?’ என்பதுபோல பல பாத்திரங்களின் ஊடாக
சயந்தன் வெளிப்படுத்துவார். இயக்கத்திற்கு மொழிபெயர்ப்புப் பணி செய்கின்ற நேரு ஐயாவுக்கூடாகவும்
அமுதன் என்ற பாத்திரத்திற்கூடாகவும் இந்த வெளிப்பாட்டை கச்சிதமாக சயந்தன் கொண்டு வருகிறார்.
நாவல் இரண்டு தளங்களில்
பயணிக்கின்றது. ஒரு புறத்தில் நீர்கொழும்பிலிருந்து இத்தாலிக்குப் படகுப்பயணம் மேற்கொள்கின்றபோது
நிகழ்கின்ற சம்பவங்களினடியாகச் சொல்லுதல். மறுபுறத்தில் நனவோட்ட உத்தியாக 1987 -
2003 காலகட்ட அரசியல் நிலைமைகளை சொல்லுதல்.
1987- 1990 இந்திய
அமைதிகாக்கும் படையினரின் சமாதான காலமாகவும் அதற்குப் பின்னர் 2003 காலகட்டம் இலங்கை
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்த காலமாகவும் இருந்திருக்கின்றன.
இந்த இரண்டு காலங்களுக்கு இடையிலும் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களின் கோர்வையாக இந்நாவல்
அமைந்திருக்கிறது.
அமுதன் முதலான இளைஞர்கள்
இத்தாலி செல்வதற்காக நீர்கொழும்பிலிருந்து புறப்படுகிறார்கள். படகுப்பயணம் அவர்களுக்கு
சோர்வையும் துக்கத்தையும் அச்சத்தையும் கொடுக்கிறது. பயணத்தில் சிறுவன் நோய்வாய்ப்பட்டு
இறக்கின்றான். அவனின் சடலத்தைக் கடலில் வீசிவிட்டுச் செல்லவேண்டிய அவலம் நேர்கிறது.
இவர்களோடு பயணம் செய்த பெரியய்யாவும் புயற்காற்றினால் அடித்துச் செல்லப்படுகிறார்.
இவ்வாறு கடற்பயணத்தில் கூடவந்தவர்களை கண்முன்னாலேயே இழப்பது பயணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக
அமைந்திருக்கிறது. இது நாவலின் ஒருகட்ட நகர்வாக அமைந்திருக்கிறது.
நாவலின் மற்றைய நகர்வு
நனவோடை உத்தியில் அமைந்துள்ளது. இதனூடாகவே இரண்டு சமாதான காலங்களின் நீட்சிக்கூடான
மக்களின் வாழ்நிலை அவலம் சொல்லப்படுகிறது.
பெரும் எடுப்பில் யாழ்ப்பாண
இடப்பெயர்வு நிகழ்கிறது. அதனால் மக்கள் பெரும் அவலங்களுக்கு உள்ளாகிறார்கள். திலீபனின்
இறப்புக்குப் பின்னரான போராளிகளின் தலைமறைவுச் செயற்பாடுகள், நிலாமதியின் கதை, இடம்பெயர்ந்த
மக்கள் கோயில்களிலும் தங்குதல், சாதிய வேறுபாடுகள், குடாரப்பு தரையிறக்கம், இந்தியப்
படைகளுடன் வரதராஜப்பெருமாள் தலைமையிலான ஈழத்தமிழ்ப் போராளிக் குழு இணைந்திருத்தல்,
தேவியின் கதை, சமாதான காலம், ஏ9 பாதை திறப்பு,
சுகன்யா லோகன் கதை, இந்திய இராணுவம் வெளியேற்றம், முல்லைத்தீவுத் தாக்குதல்,
விடுதலைப் புலிகளின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் அரசியற் பணிகள் முதலானவற்றைச்
சுற்றி கதைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு எல்லாமே தனித்தனிச்
சம்பவக் கோர்வைதான். அச்சம்பவங்கள் ஒன்றுசேர்ந்து நாவலாகக்கூடிய இழை பிரதான பாத்திரமாகிய
அமுதனுக்கூடாகவே நிகழ்கின்றது. மற்றைய சில பாத்திரங்கள் தவிர ஏனையவற்றில் கதைத்தொடர்ச்சியோ
சம்பவத் தொடர்ச்சியோ இல்லை. இதனாலேயே வடிவ அடிப்படையில் இது நாவலாக அமையவில்லை என்ற
கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் இது நாவலென்ற வடிவத்தை எங்கே பெறுகிறது
என்ற வினா முக்கியமாகின்றது.
“பயணிகள் எதிர்பார்த்திருந்தபடி
அவர்கள் இத்தாலி போய்ச் சேர்ந்திருந்தாலும் உட்பிரதியின் தன்மை மாற்றடையாமலேதான் இருந்திருக்கும்.
மொழியையும் மதத்தையும் இனம்சார் மற்றும் கூறுகளையும் ஒரு ஒற்றைவழிப் பயணமானது தேவைக்கானதை
மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை ஒதுக்கி வைத்துவிடுகிறது. அது கப்பல் பயணமாக மட்டும்
இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆறாவடு ஒரு சம்பவக்கோவை நூலாகவிருந்து நாவலாக நிமிர்கின்ற
இடம் இந்த உட்பிரதிக் கூறினாலேயே நிகழ்கிறது.” (பதிவுகள்) என்று தேவகாந்தன் குறிப்பிடுகிறார்.
இவ்வாறான போக்கை Non linear narrative முறையிலமைந்த
கதையெனக் குறிப்பிடுவர். நேர்கோட்டுப் பாணியில் அல்லாது வேறு வேறு சம்பவங்களைக் கூறிச்செல்வது.
ஒரு வகையில் அ. முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’, சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்துத்
தேவதைகள்’ முதலானவை தமிழ்ச்சூழலில் நல்ல உதாரணங்களாக அமைந்திருக்கின்றன.
இடப்பெயர்வின் காரணமாக
உறவுகளை இழந்த அவலம் (படுத்த படுக்கையிலிருந்து நகர முடியாத தாயை விட்டு வந்த சிவராசன்
கதை) உள்ளுர் இடப்பெயர்வின் காரணமாக ஒரு சாரார் ஒடுக்குதலுக்குள்ளான மக்களை கோயில்களில்
தங்குவதற்கு முட்டுக்கட்டை போடுதல், புலப்பெயர்வின் காரணமாக (படகுப்பயணம்) சொல்லமுடியாத
இன்னல்களை அனுபவித்து இறுதியில் எரித்திரியக் கடற்பகுதில் படகுவிபத்து ஏற்பட்டு படகில்
சென்றவர்கள் உயிரிழத்தல், ஆயுதம் தாங்கிய அனைத்துத்
தரப்பினராலும் ஏற்படுத்தப்படும் மரணங்கள், பண்பாட்டு அழிப்பு முதலானவற்றை மக்களின்
பக்கம் நின்று சயந்தன் பேசுவது மிக முக்கியமானது.
சண்டிலிப்பாய் அளவெட்டி
தாக்குதலுக்குப் பின்னர் இராணுவம் யாழ் குடாவைப் பிடிக்கின்றது. மக்களுடன் இயக்கத்தினரும்
வன்னிக்கு நகர்கின்றனர். இந்த இடப்பெயர்வு பெருந்துயர் நிறைந்தது. அதனை ஒரு காட்சியில்
சிவராசன் குடும்பத்திற்கு ஊடாக காட்டுகிறார். பாரிசவாத நோயாளியான தாயாரை பின்னர் சென்று
அழைத்துவருவோம் என தனது மூன்று பெண்பிள்ளைகளையும் மனைவியுடன் அழைத்துக்கொண்டு செல்கிறார்.
செல்லும்போது தாயாருக்கு அருகில் தண்ணீர்ப் போத்தல் குளிசைகளையும் எடுத்து வைத்துவிட்டுச்
செல்கிறார். இயக்கப்பொடியள் முகவரியைக் குறித்து வைத்துக் கொள்கிறார்கள். அங்கு தப்பியொட்டி
நிற்கும் யாராவது உதவி செய்யக்கூடும் என எண்ணுகிறான். இவையெல்லாம் யாராவது அம்மாவுக்கு
உதவி செய்வார்கள் என்று நம்ப வைக்கிறது. ஆனால் அந்த நம்பிக்கை எவ்வாறு பொய்யாகிப் போகிறது
என்பது நாவலின் ஒரு காட்சியில் மனதைக் கல்லாகும்படி சொல்லப்படுகிறது. இதற்கு ஓர் உதாரணத்தை
இங்கு காட்டலாம்.
“ஆறு மாதத்தில் றோட்டுகளும்
ஒழுங்கைகளும் வளவுகளும் அடையாளமே தெரியாமல் மாறியிருந்தன. சருகுகளும் கஞ்சல்களும் குவிந்துபோய்க்
கிடந்தன. வீட்டைக் கண்டதும் பொலபொலவென்று கண்ணீர் வந்தது. சிவராசன் படலையடியில் சைக்கிளைப்
போட்டுவிட்டு அம்மா என்று கத்திக்கொண்டு கட்டில் அருகே ஓடினார். வளவிற்குள் ஒரு வித்தியாசமான
மணம் பரவியிருந்தது. வெளி விறாந்தைக் கட்டிலில் இன்னமும் ஊனம் வடிந்து கொண்டிருந்த
எலும்புக் கூடொன்று நீட்டி நிமிர்ந்து கிடந்தது. அருகில் சில மருந்து டப்பாக்களும்
தண்ணீர் இல்லாத ஐந்து பெரிய க்ளாஸ்களும் இருந்தன. கட்டிலில் புழுக்கள் நெளிந்தன.”
இதனாலேயே “எமது சமூகத்தில்
நிகழ்ந்த அவலங்களைப் பேசுகின்ற ஓர் மனச்சாட்சிதான் ஆறாவடு” (thuuu.net)
என்று அசுரா எழுதுகிறார்.
கொள்கைக்காகத் தன்னை
அர்ப்பணித்தல் என்பதற்கும் அப்பால் ஒருவன் உயிர்வாழ்வதற்கு எடுக்கக்கூடிய ஆகக்குறைந்த
எத்தனங்களை இந்நாவலில் சயந்தன் பதிவு செய்வார்.
“சுடலையில் மத்தியான
நேரத்துச் சவம் ஒன்று புகைந்து கொண்டிருந்தது. பிரேதத்தை எரிக்கிறபோது உடனடியாகக் கிளம்பும்
மணங்கள் தணிந்திருந்தன. பஸ்ஸிலிருந்து ஆமிக்காரர்களும் மற்றையவர்களும் தொப் தொப் என்று
குதித்தார்கள். இவர்கள் அவ்வளவு பேரையும் இழுத்துக் கீழே போட்டார்கள். இருளில் கரிய
உருவங்களாக அவர்கள் அசைந்தார்கள்.
எல்லோரும் அப்பிடி
அப்பிடியே குப்புறப் படுங்க
துப்பாக்கி லோட் செய்யப்படுகிற
சத்தம் எதையோ முறிக்கிற மாதிரிக் கேட்டது.
இவனது இரத்தம் சில்லிட்டு
உறைந்ததைப் போல உணர்ந்தான். அடிவயிற்றுக்குள் குளிர்ந்தது. வாயிலிருந்து எச்சில் தன்
பாட்டில் வழிந்து கொண்டிருந்தது. பிறகு இன்னுமொரு வெடியொலி கேட்டது. ஒவ்வொரு சத்தத்தின்போதும்
இவன் கண்களை இறுக்க மூடிக்கொண்டான். சத்தங்கள் ஒன்று இரண்டு மூன்று எனத் தொடர்ந்து
கொண்டிருந்தன. அடுத்த குண்டு தனக்கானது என்ற நினைப்பு. ஒவ்வொரு முறையும் உள்ளே ஓடிற்று.
ஏழு அல்லது எட்டுக் குண்டுகள் பாய்ந்த பிறகும் இவன் உயிரோடிருந்து அழுது கொண்டிருந்தான்.”
துப்பாக்கி மனிதர்கள்
இவர்களை தங்களுடன் சேர்ந்தால் உயிருடன் விட்டுவிடுவதாகக் கூறுவது கேட்டு
“அவன் சின்ன இடைவெளி
விட்டுத் தொடர்ந்தான். இல்லாட்டி வேறை வழி இல்லை எல்லாரும் இப்பொழுதே போய்ச்சேர வேண்டியதுதான்.
ம். யாரெல்லாம் வாறியள்.. யாரெல்லாம் போறியள்…
சந்திரன்தான் முதலில்
கையை உயர்த்தினான். பிறகு தேவபாலு இரண்டு கைகளையும் சரண்டர் ஆவதைப்போல உயர்த்தினான்.
மூன்றாவதாக இவனது கை உயர்ந்தது.:”
உயிர்; போகக்கூடிய
இறுதிக் கணத்தில் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் வாழ்வதற்கான வழியைத் திறக்கிறது. மற்றெவற்றையும்
எண்ணிப் பார்க்கவில்லை. அதனால் ஒரு கட்டத்தில் இந்திய இராணுவத்தினருடன் இணைந்திருந்த
தமிழ்ஆயுதக் குழுவினருக்கு ஆதரவாகவும் மற்றொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் தப்பித்தலுக்காக
விடுதலைப் புலிகளுக்கு ஆதாரவாகவும் செயற்படுகிறான். இவற்றை நாவலின் பல சம்பவங்கள் விபரிக்கின்றன.
இந்நாவல் தொடர்பான
விமர்சனங்களில் அதிகமானோர் குறிப்பிடுவது குறித்த காலத்தில் நடைபெற்ற முக்கிய வரலாற்றுச்
சம்பவங்களை நாவல் கருத்திற் கொள்ளவில்லை அல்லது சொல்லாமல் விட்டது பற்றி. இதற்கூடாக
சயந்தனும் தன்னிலைச் சார்புடன் சிலவற்றைத் தவிர்க்கிறாரா என. இது “ஒன்றைச் சொல்வதின்
மூலம் எடுக்கும் சார்புநிலைபோலவே, எதுவொன்றையோ பலதையோ சொல்லாமல் விடுவதின்மூலமும் தன்
சார்புநிலையைத் தக்க வைக்க முடியும்” (தேவகாந்தன், பதிவுகள்) என்ற கருத்தும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஆனால் சயந்தன் கூறுவதுபோல் இரண்டு சமாதான காலங்களிலும்கூட அதிகாரங்களினால் மக்கள் எவ்வாறெல்லாம்
அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பதும் சிதைக்கப்பட்டார்கள் என்பதும்தான். ஒருபுறம் தனிநபர்
மீதான கட்டுப்பாடுகள் வலியுறுத்தப்பட்டன. எப்படியேனும் அதற்குக் கட்டுப்பட்டு ஒழுக
வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக கொள்கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள்
உயிரை விடவேண்டிய அச்சநிலை ஏற்பட்டது. இவற்றை மிகச் சிறப்பாக இயக்கத்திற்கு மொழிபெயர்ப்புப்
பணியைச் செய்யும் நேருஐயா பாத்திரத்திற்கு ஊடாகக் காட்டுகிறார்.
“இயக்கத்தைப் பிடிக்காது.
இயக்கம் செய்யிற ஒண்டும் பிடிக்காது. பிறகெதுக்கு இயக்கத்துக்கு வேலை செய்யிறியள்.”
என்று நான் நேரு ஐயாவிடம் கேட்டேன். .
அவர் சிம்பிளாக “சம்பளம்
தாறியள்” என்றார். அப்படிச் சொல்லும்போது விரல்களால் பணத்தாள்களை எண்ணுவது போல காட்டினார்.
“அப்ப ஆமிக்காரனும்
சம்பளம் தருவான். அவனிட்டையும் போய் வேலை செய்வியளோ” என்று றோட்டைப் பார்த்துக் கொண்டு
நின்று கேட்டேன்.
“ஒப் கோர்ஸ்” என்ற
சத்தம் பின்னால் கேட்டது.
எப்பொழுதும் இயக்கத்தைக்
குற்றம் சொல்லும் நேரு ஐயா, பின்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ்க்கூடல் மேடையில்
இயக்கத்தைப் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்ததை அமுதன் காண்கின்றான்.
கப்பல் பயணம் என்பது
எவ்வளவு கொடுமையானது என்பதற்கு சிறுவனின் சாவும் பெரியய்யாவின் சாவும் எடுத்துக்காட்டாக
அமையக்கூடியவை. இறுதியில் கப்பல் எரித்திரிய நாட்டோரக் கடலில் மூழ்கிவிடுகின்றது. அங்கிருந்து
மிதந்து வந்த அமுதனின் பிளாஸ்ரிக் கால், யுத்தத்தில் காலிழந்த எரித்திரியக் கிழவருக்குப்
பொருந்துகிறது. எரித்திரியக் கிழவர் தனது நாட்டின் விடுதலை பற்றிய நிறைய கனவுகளோடு
இருந்தவர். இறுதியில் அவரால் என்ன செய்ய முடிந்தது. கடற்கரையில் மீன்பிடிப் படகுக்காரருக்கு
சில உதவிகள் செய்து அதிலிருந்து வருவதைக் கொண்டு பிழைத்துக் கொள்ளத்தான் முடிகிறது.
இந்தச் சம்பவம் நாவலை வேறொரு கோணத்திற்கு நகர்த்துகின்றது. இந்த இறுதி அத்தியாயம் மிகக்
கட்டிறுக்கமாகவும் அர்த்தம் பொதிந்ததாகவும் அமைந்து விடுகிறது. அதிகமாக விடுதலைப் போராட்டங்கள்
வெறும் கனவுகளாகவே கலைந்து விடுகின்றன. அவற்றின் எச்சங்களாக மிஞ்சப்போவன மனிதர்களின்
வாழ்க்கைச் சிதைவுகள்தான் என்பதனை இது காட்டுகிறது.
நாவலின் இயல்பான மொழிநடைக்கும்
பொருத்தமான இடங்களில் சொற்களைக் கொண்டு கட்டமைக்கின்ற உணர்வு வெளிப்பாடும் மிகச் சிறப்பாகவே
அமைந்திருக்கின்றது. நீர்கொழும்பிலிருந்து படகுப் பயணம் தொடங்கியபோது தங்களுடன் சிங்கள
இளைஞர்களும் வருகிறார்கள் என்று அறிந்தபோது
“அவர்களும் தங்களோடு
வரப்போகிறார்கள் என்பது இவனது மனதை அரிக்கத் தொடங்கியது. அதுவரை ஊறிநின்ற சந்தோசம்
கால்களின் கீழே அலை நீரில் மணல் கரைவதைப் போல கரைவதை உணர்ந்தான்.” என்று கூறுவது ஒரு
வேறுபட்ட மனநிலைதான்.
சிங்களவர்களைப் பார்த்து
தமிழர் பயம்கொள்வதும் சிங்களவர் தமிழரைப் பார்த்து ஐயம் கொள்வதுமாகத்தான் இந்தக் காலங்கள்
கடந்திருக்கின்றன. இந்த மனநிலை இங்கும் வருகிறது. சூழல்களின் தாக்கத்திலிருந்து உயிர்வேட்கையுடன்
தப்பித்தலுக்குரிய காலங்களிலும்கூட படகில் சிங்களவர்களும் தமிழர்களும் வேறுவேறாகத்தான்
இருக்கிறார்கள். பண்டாரவைத் தவிர அவ்வளவு இயல்பாக உரையாடல் நிகழவில்லை என்பதைத்தான்
நாவல் தெரிவிக்கிறது.
எனவே, ஈழத்து இனவுணர்வுச்
சூழலால் மக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு துன்பத்தை அனுபவித்தார்கள் என்பதை ஒரு குறுக்கு
வெட்டுமுகமாக இந்நாவல் காட்டுகிறது. இங்கு சொல்லப்பட்ட எல்லாச் சம்பவங்களும் தனித்தனியாக
மக்களின் சமூக பண்பாட்டு அரசியல் வரலாற்றினைக் காட்டக்கூடியவை. விலைமதிக்கமுடியாத உயிர்களையும்
மக்களின் நிம்மதியான வாழ்வையும் ஆயுதங்களும் ஆயுததாரிகளும் அதிகாரத்தைக் கையில் ஏந்தியவர்களும்
உருத்தெரியாமற் சிதைத்துவிட்டார்கள். அந்தச் சிதைவிலிருந்து மீண்டெழுவதற்கும் மீளவும்
இருளில் தள்ளப்படாமல் இருப்பதற்கான எச்சரிக்கைகளைக் காட்டுவதாகவும் ஆறாவடு அமைந்திருக்கிறது.
எழுத்தாளர் ஷோபாசக்தி கூறுவதுபோல் இது அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதியாக இருந்தாலும்
குறித்த காலகட்ட அரசியலைப் பேசிய பிரதியாகவும் அமைந்திருக்கிறது.
நன்றி
: ஜீவநதி, ஈழத்துஅரசியல் நாவல்கள் சிறப்பிதழ் – 1, தை 2023.
No comments:
Post a Comment