கலாநிதி சு. குணேஸ்வரன்
அறிமுகம்
புலம்பெயர்ந்தோரின் இலக்கிய முயற்சிகள் ஆரம்பித்து இற்றைக்கு ஒரு தலைமுறை கடந்துவிட்டது. இக்காலத்துள் ஏராளமான புனைவெழுத்துக்களும் புனைவு சாராத எழுத்துக்களும் வந்துள்ளன. இவை எல்லாவற்றிற்கும் ஆரம்பப் படிகளை இட்டவர்கள் சஞ்சிகையாளர்களே. தனிநபர்களின் ஆர்வத்தினாலும் நண்பர் வட்டங்களின் கூட்டுமுயற்சியினாலும் ஆரம்பிக்கப்பட்ட இதழ்கள் படிப்படியாக அமைப்புகள் சார்ந்து வெளிவரக்கூடியளவுக்கு வளர்ச்சியடைந்தன
1983 யூலைக் கலவரங்களுக்குப் பின்னரே இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியில் வாழ்ந்த இளைஞர்கள் பெருமளவில் மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். அவர்களின் இலக்கியச் செயற்பாடுகளே ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ என்ற புதிய இலக்கிய வகைமைக்கு வழிவகுத்தது. புலம்பெயர்ந்தவர்களில் எழுத்தார்வம் உள்ளோர் தங்கள் அக - புற நெருக்கடிகளை, உணர்வுகளை வெளிப்படுத்த இதழ்களை வெளியிட்டனர். ஐரோப்பிய நாடுகளிலும் அவுஸ்திரேலியாவிலும் வடஅமெரிக்காவில் கனடாவிலும் இருந்து அதிகமான பத்திரிகைகள், சஞ்சிகைகளை வெளிக்கொண்டு வந்த வரலாறு இவ்வாறுதான் ஆரம்பித்தது. இந்த முயற்சிகள் புலம்பெயர்ந்தோரின் இதழியல் வரலாற்றில் ஆவணப்பதிவுகளாக அமைந்துள்ளன.
முதல் முயற்சி
புலம்பெயர்ந்தோர் மத்தியிலிருந்து முதலில் வெளிவந்த சஞ்சிகையாக ‘தமிழ்முரசு’ என்ற இதழை இனங்காணலாம். பிரான்சில் இருந்து வெளியாகிய இவ்விதழ் பற்றி கலைச்செல்வன் பின்வருமாறு எழுதியுள்ளார்.
“பிரான்சில் புகலிட இலக்கியத்தின் உருவாக்கம் கார்த்திகை 1981 இல் வெளியான ‘தமிழ்முரசு’ என்னும் சஞ்சிகையுடன் உருவாகின்றது. இலங்கைத் தமிழரிடையே 1981ஆம் ஆண்டில் உருவாகிய சில காலங்களிலேயே அஸ்தமித்துப்போன பாரிஸ் தமிழர் இயக்கத்தினால் முதன்முதல் தமிழ்முரசு 1981ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகியது.” (16ஆவது இலக்கியச் சந்திப்பு மலர், நெதர்லாந்து, 1993) என்று ‘பிரான்ஸ் தமிழ்ச் சஞ்சிகைகள் ஒரு பதிவு’ கட்டுரையில் கலைச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் முரசின் ஆசிரியராக உமாகாந்தன் பணியாற்றினார். தமிழ்முரசு ஆரம்பத்தில் 16 பக்கங்கள் கொண்ட கையெழுத்திலான ஒளிப்படப்பிரதியாகவும் (Photo Copy) பின்னர் 40-60 பக்கங்களைக் கொண்ட தட்டச்சுச் செய்யப்பட்ட பிரதியாகவும் 1981-1989 ஆம் ஆண்டுவரை 72 இதழ்கள் வெளியாகியது. கலை இலக்கியம் அரசியல் குறித்த இவ்விதழின் ஊடாகவே உமாகாந்தன், செல்வம், கலாமோகன், அருந்ததி, சுகன், தேவதாஸ் முதலான படைப்பாளிகள் இலக்கியச் சூழலில் அறியப்பட்டனர்.
வெளிவந்த
இதழ்கள்
1981 ஆம் ஆண்டுமுதல் 250 ற்கும் மேற்பட்ட இதழ்கள் புகலிடப் பரப்பில் தம் வரவைப் பதிவு செய்துள்ளன. இந்த இதழ்களில் “சொந்த நாட்டின் அவலங்கள், புகலிட நாடுகளில் எமக்குள்ள வாழ்வு, அன்னியச் சூழல், எம்மிடையேயுள்ள முரண்பாடுகள், தொடர்கின்ற போராட்டங்கள், பெண்கள் மீதான ஒடுக்குமுறை, உலகப் பார்வை என்று பல்வேறு கோணங்களில் வெவ்வேறு பார்வைகளைச் சஞ்சிகைகள் படம்பிடித்திருக்கின்றன” (சாள்ஸ், 16ஆவது இலக்கியச் சந்திப்பு மலர்) இவற்றை இதழ்கள் வெளிவந்த நாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்தி நோக்கலாம்.
பிரான்ஸ்
பிரான்சிலிருந்து வெளியாகிய
‘தமிழ்முரசு’ இதழைத் தொடர்ந்து அசை, அநிச்ச, அம்மா, அரும்பு, அறிவோர், ஆக்காட்டி, ஆதங்கம்,
இந்து, உயிர்நிழல், உறவுகள், உன்னையே நீ அறிவாய், எக்ஸில், எழில், எரிமலை, ஓசை, கதலி,
கதிர், கண், கதம்பம், கம்பன், கலையமுதம், குமுறல், சங்கப் பலகை, சமர், சிந்து, சிரித்திரு,
சுட்டுப்புள்ளி, சுட்டுவிரல், தகவற்சுருள், தமிழ்த் தென்றல், தமிழ் நெஞ்சம், துளிர்,
தாமரை, தாயகம், தீபச்சுடர், தேடல், நகர்வு, நம்பிக்கை, நண்பன், நிலா, பகடைக்காய்களின்
அவலக்குரல், பரிசு, பள்ளம், பாலம், புன்னகை, புதுவெள்ளம், மத்தாப்பூ, முற்றம், மௌனம்,
வடு, வண்ணை, வான்மதி, விழுது, வெகுமதி, வெம்மை ஆகிய இதழ்கள் வெளிவந்துள்ளன.
ஜேர்மனி
ஜேர்மனியிலிருந்து
வெளிவந்த ‘தூண்டில்’ புலம்பெயர்ந்தோரின் சஞ்சிகைகளில் அதிகம் கவனத்தைக் கோரிய இதழாகக்
கணிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அக்கினி, அகரம், அத்தம், அப்பிள், அபிநயா, அறுவை,
அன்றில், இளங்காற்று, இளைஞன், இரவல் தூண்டில், ஊதா, எண்ணம், ஏலையா, ஓவியா, கடல் அலைகள்,
கதிர், கமலம், கலைவிளக்கு, கலைக்கதிர், சிந்தனை, சிவத்தமிழ், சிறுவர் அமுதம், தமிழ்
அகதி, தமிழ் செய்திக் குறிப்பு, தளிர், தமிழ் நாதம், தாகம், தாயகம், தென்றல், தேனீ,
நம்நாடு, நமது இலக்கு, நமது குரல், நாணல், பணி, பயணம், பாப்பா, பாரிஸ் ஈழமுரசு, பிரவாகம்,
புதுமை, புதுயுகம், பூவரசு, பெண்கள் வட்டம், மக்கள் குரல், மண், மலரும் மொட்டுக்கள்,
மனிதம், மார்க்சிய முன்னோக்கு, யாத்திரை, வசந்தம், வண்ணாத்துப்பூச்சி, வளர்தமிழ், வெகுஜனம்,
வெளிச்சம், ஜனனம் ஆகியன வெளிவந்துள்ளன.
லண்டன்
லண்டனில் இருந்து
80 களுக்கு முன்னர் புலம்பெயர்ந்த தலைமுறையினரால் (70களில்) ‘லண்டன் முரசு’ என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டது. சதானந்தன் என்பவர் இதன்
ஆசிரியராக இருந்துள்ளார். இந்த முயற்சிகள் பற்றி சி. சிவசேகரம் விரிவாக எழுதியுள்ளார். “1970க்கும் சிறிது முன்பின்னாக
லண்டனிலிருந்து பாதி தமிழிலும் மீதி ஆங்கிலத்திலுமாக ‘லண்டன் முரசு’ என்ற சஞ்சிகை வந்திருக்கிறது. இதன் அக்கறைகள் கணிசமான
அளவு மரபு சார்ந்தவை. அத்துடன் லண்டன் வாழ் வசதி படைத்த தமிழர்களது சுய அடையாளத்தின்
நெருக்கடி சார்ந்து அது அமைந்ததில் வியப்பில்லை. கோவில்கள், சங்கங்கள், வாராவாரம் பிள்ளைகள்
தமிழ்ப் படிக்கும் தமிழ்ப்பாடசாலைகள் என்ற
விதமாக உருவான அமைப்புக்கள் யாவுமே சுய அடையாளத்துக்கான மன உளைச்சலின் வெளிப்பாடுகள்தாம்.” (சி.சிவசேகரம்,
புலம்பெயர்ந்த தமிழர் நல மாநாட்டு மலர்)
லண்டன் முரசைத் தொடர்ந்து
அகதி, அலை ஓசை, ஈழகேசரி, உயிர்ப்பு, உலகத் தமிழோசை, எதுவரை, கலசம், கால ஒளி, காற்றுவெளி,
சமகாலம். சிந்தனை, சுடரொளி, தமிழ் ஒலைகள், தமிழர் தகவல், தமிழ் அகதி, தமிழ் உலகம்,
தாகம், தேசம், தேம்ஸ், நாழிகை. நெய்தல், பனிமலர், பாரிஸ் ஈழமுரசு, புதினம். புலம்,
மனம் பேசுது, மீட்சி, வான்முரசு. வெண்ணிலா, வெளி, வைகறை ஆகிய இதழ்கள் வெளிவந்துள்ளன.
சுவிஸர்லாந்து
சுவிஸர்லாந்தில் இருந்து
ஆனந்தி, ஊசி இலை, கட்டியம், குருத்து, தமிழ் ஏடு, தமிழ்க்குரல், தமிழ்நாடு, பாரிஸ்
ஈழமுரசு, மனிதம், வாழை ஆகிய இதழ்கள் வெளிவந்துள்ளன.
டென்மார்க்
டென்மார்க்கில் வாழ்ந்த
எழுத்தாளர்களின் கூட்டு முயற்சியால் 1984 இல் ‘டென்மார்க் முரசு’ என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டது.
அரும்பு, இனி, கற்பகம், காகம், குயிலோசை, சங்கமம், சஞ்சீவி, செய்திக்கோர்வை, தாயகம்
ஆகிய இதழ்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன.
நோர்வே
நோர்வேயில் இருந்து
உயிர்மெய், கதிரவன். கலைமகள். குவியம், சக்தி, சர்வதேசத் தமிழர், சுமைகள், சுவடுகள்,
துருவக் குரல், துருவத் தளிர்கள். தேன்தமிழ் ஓசை, நோட்டம், பறை, பாலம், வடலி, வளர்நிலா
ஆகிய இதழ்கள் வெளிவந்துள்ளன.
நியூசிலாந்து
நியூசிலாந்திலிருந்து வெண்ணிலவு, தமிழ் மஞ்சரி ஆகிய இதழ்கள் வெளிவந்துள்ளன.
நெதர்லாந்து
நெதர்லாந்தில் தமிழ்
டச்சு ஒன்றிணைப்புக் கழகத்தின் வெளியீடாக ‘தமிழ் ஒளி’ என்ற இதழ் வெளிவந்துள்ளது. இது
1986 தை மாதத்திலிருந்து 16 இதழ்கள் வரை ஏறத்தாழ 30 பக்கங்களைக் கொண்ட செய்தித்தொகுப்பாகவே
வந்தது. அ.ஆ.இ, உரிமை, சமநீதி, சுமைகள், செய்திக்கதிர் ஆகியன நெதர்லாந்திலிருந்து வந்த
ஏனைய இதழ்களாகும்.
கனடா
கனடாவில் இருந்து
1985 ஜனவரியில் ‘தமிழ் எழில்’ என்ற கையெழுத்துச் சஞ்சிகை வெளியாகியது. அதே ஆண்டு மார்கழிமாத
இதழ் தட்டச்சுச் செய்யப்பட்ட ஒளிநகல் பிரதியெடுக்கப்பட்டு வெளியாகியது. இதனைத் தொடர்ந்து
‘நிழல்’ என்ற சஞ்சிகை கணனி எழுத்துருவைப் பயன்படுத்தி வெளிவந்தது. அமுதம், அன்புநெறி,
அற்றம், அறிதுயில், ஆத்மஜோதி, ஆலயமணி, இலக்கியவெளி, இளங்கீற்று, ஈழநாடு, ஈழமுரசு, உரைமொழிவு, உலகத் தமிழோசை, உலகத்
தமிழர், உலகத் தமிழர் குரல், கரித்துண்டு, காலம், குரல், குவியம், கூர், சிறுவர் கதைமலர்,
சுடரொளி, தமிழர் செந்தாமரை, தமிழ் மகள், தாயகம், தினத்தமிழ், தூறல், தேசியம், தேடல்,
தென்றல், நண்பன், நாயகன், நான்காவது பரிமாணம், நுட்பம், பறை, பார்வை, புதிய காற்று,
புரட்சிப் பாதை, புன்னகை மலர், பொதிகை, மண்,
மருத்துவம், மற்றது, மறுமொழி, மாற்று, யாதும், ரமில் ரைம்ஸ், ரோஜா, வாசம், வானமே எல்லை,
வானவில், வியூகம், வீடு, வீணைக்கொடி, வைகறை, ழகரம் ஆகியன கனடாவிலிருந்து வெளிவந்துள்ளன.
அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவில்
முதல்முதல் வெளியிடப்பட்ட மாதஇதழ் ‘தமிழ்க்குரல்’ ஆகும். மாத்தளை சோமுவால் 1987 ஆம்
ஆண்டு ஒளிப்படப் பிரதியாக இவ்விதழ் கொண்டு வரப்பட்டது. அக்கினிக்குஞ்சு, அவுஸ்திரேலிய
மரபு, அவுஸ்திரேலிய முரசு, இளவேனில், இன்பத்தமிழ் ஒலி, உணர்வு, உதய சூரியன், எதிரொலி,
கதிர், கலப்பை, காவோலை, செய்திச் சுடர், தமிழ் அவுஸ்திரேலியன். தமிழ் ஓசை, தரிசனம்,
தினமுரசு, தென்றல், பாலம், பாரதி சிறுவர் இதழ், பிரவாகம், மக்கள் குரல், மரபு, மெல்லினம்
ஆகியன தொடர்ந்து வெளிவந்தன.
இதழ்களும்
அவற்றின் உள்ளடக்கமும்
மாதம் இரண்டு இதழ்கள்,
மாதாந்த இதழ்கள், காலாண்டு இதழ்கள், அரையாண்டு இதழ்கள், ஆண்டு இதழ்கள் ஆகியன மேற்குறிப்பிட்டவற்றுள்
உள்ளன. அதிகமான இதழ்கள் கலை இலக்கியம் அரசியல் சமூகம் பண்பாடு குறித்து வெளிவந்தாலும்
குறித்த ஒவ்வொரு இதழ்களும் அதிகம் கவனப்படுத்திய உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு
பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. கலை இலக்கிய இதழ்கள்
2. கலை இலக்கிய சமூக அரசியல் இதழ்கள்
3. அரசியல் இதழ்கள்
4. பெண்கள் இதழ்கள்
5. சிறுவர் இதழ்கள்
6. ஆன்மீக இதழ்கள்
7. பல்சுவை இதழ்கள்
இவ்விதழ்களில் தமிழ்ப்
போராளி அமைப்புக்களின் அரசியற் கொள்கைகள்,
போராளி அமைப்புக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள். தமிழருக்கான அரசியல் உரிமைகள்,
தாயகத்தில் போரால் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புக்கள் - இழப்புக்கள், புலம்பெயர்ந்தவர்களின்
அக - புற நெருக்கடிகள், அனைத்துலகப் பார்வை, பல்வேறு இலக்கிய வகைப்பாடுகளை முன்வைத்தல்
முதலானவை விடயதானங்களாக அமைந்திருந்தன.
“ஆக்கங்கள் அனைத்தும்
இலக்கியத் தரம் மிக்கவையா இல்லையா என்பதற்கப்பால், பல்வேறு அவலங்களையும் வாழ்வையும்
அள்ளிக்கொண்டு வந்திருக்கின்றன. ஈழத்தின் ஒவ்வொரு
முக்கியமான நிகழ்வின் தாக்கத்தையும் இங்குள்ள சஞ்சிகைகளில் பார்க்கக் கூடியதாக இருந்திருக்கின்றது.
அதிகமான ஆக்கங்களில் விமர்சனமே முன்னோக்கி நின்றிருப்பதை அவதானிக்க முடிகிறது. இனப்போராட்டம்
கேள்விக்குள்ளாகியது, தேசியம் கேள்விக்குள்ளாகியது. யாழ் மேலாதிக்கம் அடையாளப்படுத்தப்பட்டது.
கலாசார மதிப்பீடுகள் கேள்விக்குள்ளாயின. சாதி சமய பிரதேசம் எல்லாம் முக்கிய விவாதங்களாயின”
(கலைச்செல்வனின் பிரதிகள், ப244) என்று இதழ்கள் அதிகம் வெளிவந்தமைக்கான பின்புலத்தையும்
அவற்றில் வெளிப்பட்ட புதிய குரல்களையும் இனங்கண்டு கலைச்செல்வன் வெளிப்படுத்தியுள்ளார்.
வெளிவந்த இதழ்கள் அனைத்தையும்
பெற்றுக்கொள்வது என்பது மிகக் கடினமான பணி. அவற்றுள் எண்ணிம மின்னூற் திட்டத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள
ஒரு தொகுதி இதழ்களை வகைப்படுத்தி தனித்தனியாகப் பகுப்பாய்வு செய்வது என்பதும் மிகக்
கடினமான பணியாகவும் நீண்ட காலத் தேடலுக்கு வழிசமைக்கக்கூடியதாகவும் இருக்கும். ஆதலால், கட்டுரையாளரால் இனங்காணப்பட்ட இதழ்களை அடிப்படையாகக்
கொண்டு சிலவற்றை அறிமுகப்படுத்த முடியும்.
இதழ்களின்
சிறப்பியல்புகள்
கலை இலக்கிய இதழ்கள்
என்ற வகையில் சில இதழ்களின் சிறப்பியல்புகளை நோக்குவோம். கனடாவில் 1990 இல் ஆரம்பிக்கப்பட்ட ‘காலம்’ சஞ்சிகை தற்போதும் வெளிவந்து
கொண்டிருக்கிறது. ஈழ - தமிழக - புகலிடப் படைப்பாளிகள் ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து
எழுதி வருகின்றனர். படைப்பாளிகள் தொடர்பான சிறப்புப் பக்கங்களையும் காலம் தொடர்ச்சியாக
வெளியிட்டு வருகின்றது. இவ்விதழ் பற்றி காலச்சுவடு கண்ணன் குறிப்பிடும்போது,
“காலம் வெளிவந்த இந்தக்
காலகட்டம் புலம்பெயர் அரசியலில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டம். இக்காலகட்டத்தின்
அரசியல் செயல்பாடுகளிலும் செல்வம் தன்னைத் தொடர்ந்து ஈடுபடுத்தி வந்திருக்கிறார். இருப்பினும்
‘காலம்’ அதிகமும் அரசியலைத் தவிர்த்து இலக்கியத்தை மையப்படுத்தி இயங்கியமைக்காக விமர்சிக்கப்பட்டிருக்கிறது.
இன்று ஒரு பெரும் வெற்றிடம் ஈழத்தமிழ் அரசியலில் ஏற்பட்டிருக்கும் சூழலில் இலக்கிய
பண்பாட்டுச் செயல்பாடுகளின் தனித்துவமான முக்கியத்துவம் உணரப்படும் என்று நினைக்கிறேன்.
ஒரு இதழுக்கு அவசியமாக இருக்கவேண்டிய பண்பாட்டு அரசியல் ஆகியவற்றுடன் டொரண்டோவின் பண்பாட்டுப்
பின்புலமும் இணைந்து காலத்திற்குச் செழுமை ஊட்டுகின்றன.” (காலம், இதழ் 42) என்று காலம்
22ஆம் ஆண்டு சிறப்பிதழ் வெளியீட்டில் கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தாளர் க. நவம்
ஆசிரியராகச் செயற்பட்ட ‘நான்காவது பரிமாணம்’ கனடாவில் இருந்து வெளிவந்தது. கலை இலக்கியக் காலாண்டு இதழாக 1991 செப்ரெம்பரில்
இருந்து 1994 ஏப்ரல் வரை பதின்மூன்று இதழ்களுடன் தனது வருகையை இவ்விதழ் நிறுத்தியது.
நான்காவது பரிமாணம் வெளியீட்டகத்தின் ஊடாக பல நூல்கள் வெளிவந்துள்ளன. கனடாவின் இதழியல்
முயற்சிகள் பற்றி இதழாசிரியர் குறிப்பிடும்போது “காலம், நான்காவது பரிமாணம், மறுமொழி,
ழகரம், கூர், பொதிகை, புன்னகை என்பன முக்கியமாக நவீன தமிழ் இலக்கியத்திற்குக் களம்
அமைத்துக் கொடுக்கும் நோக்குடன் வெளிவந்த இலக்கியச் சஞ்சிகைகளாகும். இவை இலக்கிய தாகம்
கொண்டு தரமான வாசகர்களை இலக்காக வைத்துப் படைப்புக்களைத் தாங்கி வந்தன” (க.நவம், ஈழத்துப்
புலம்பெயர் இலக்கியம், ஞானம் சிறப்பிதழ் 175)
என கனடாவில் இருந்து வந்த இதழ்களை அவற்றின் உள்ளடக்கம் சார்ந்து வகைப்படுத்தி
எழுதியுள்ளார்.
பிரான்சில் இருந்து வெளிவந்த ‘அம்மா’ சஞ்சிகை சிறுகதைக்கென காலாண்டு இதழாக வெளிவந்தது. 1997 - 2001 வரை பதின்மூன்று இதழ்கள் வந்துள்ளன. இதன் தொகுப்பாசிரியராக சி. மனோகரன் (மனோ) இதில் வந்துள்ள சிறுகதைகள் பின்னர் நூல் வடிவம் பெற்றுள்ளன. ‘அம்மா’வில் கட்டுரைகள், எதிர்வினைகளும் வெளிவந்துள்ளன. யமுனா ராஜேந்திரன் இன்னுமொரு காலடியில் பார்த்திபன் பற்றி எழுதிய கட்டுரையின் பின்னரான எதிர்வினைக்குப் பதிலளிக்கும் முகமாக “பார்த்திபன் கதைகளும் புலம்பெயர் இலக்கியமும் இன்னும் சில பிரச்சினைகளும்” என்ற கட்டுரையும் இவ்விதழிலேயே வெளிவந்தது.
பிரான்சில் இருந்து
எக்ஸில் வெளியீட்டகத்திற்கு ஊடாக 1998 இல் இருந்து ‘எக்ஸில்’ சஞ்சிகை வெளிவந்தது. எக்ஸிலின் முதலாவது
இதழில் “புகலிடத்து வாழ்வில் இருந்து புறப்படுகிறோம். எவரும் எங்களுடன் இணைந்து கொள்ளலாம்.
எங்கிருந்தேனும் எந்த மொழியிலும் எம்மிலும் முகம் பார்த்துக் கொள்ளட்டும். மீண்டும்
யாதும் ஊரே யாவரும் கேளிர். கருத்துக்கள் இலக்கியங்கள் எதுவாயினும் எம்மிலும் பட்டுத்
தெறிக்கட்டும். எக்கருத்துக்கும் மதிப்பளிக்கும் மனப்பக்குவம் எமக்குண்டு. எதையும்
தவிர்த்து உண்ணும் பாங்கு எம்மிடம் இல்லை. கிடைப்பதைப் பகிர்ந்து உண்ணும் காகங்களாய்”
(எக்ஸில், இதழ் 1) என்ற வாக்குமூலத்துடன் வெளிவந்த ‘எக்ஸில்’ தமிழ்ச் சஞ்சிகைச் சூழலில்
மிகுந்த கவனிப்புக்கு உள்ளாகியது. அரசியல், எதிர்ப்பிலக்கியம், பின்நவீனத்துவம், தலித்தியம்
குறித்த பார்வைகளையும் இந்த இதழ் கவனப்படுத்தியது.
13 இதழ்கள் வரை வெளிவந்த
எக்ஸில் திருமாவளவன், கலாமோகன், சிவசேகரம், சக்கரவர்த்தி ஆகியோரின் நூல்களையும் புகலிடப் பெண்கவிஞர்களின் கவிதைத் தொகுப்பான “மறையாத
மறுபாதி” யையும் வெளியிட்டுள்ளது.
கலைச்செல்வன் மற்றும்
லஷ்மி ஆகியோரின் முயற்சியில் பிரான்சில் இருந்து வெளிவந்ததே ‘உயிர்நிழல்’ ஆகும். இவ்விதழும்
எக்ஸில் போல இதழியலுக்குரிய கட்டமைப்புடன் அதிகமான வாசகர்களைச் சென்றடைந்த இதழாகும்.
1998 இல் இருந்து 2012 வரை 35 இதழ்கள் வரை வெளிவந்துள்ளது. சிறுகதை, கவிதை, கட்டுரை,
விமர்சனம், குறும்படம், ஓவியம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கி வெளிவந்தது.
முல்லை அமுதனை ஆசிரியராகக்
கொண்டு இலண்டனில் இருந்து ‘காற்றுவெளி’ அச்சிதழாக வெளிவந்தது. 16 இதழ்கள் வெளிவந்த
நிலையில் தற்போது மின்னிதழாக வெளிவருகின்றது. தனியே நாடகம் தொடர்பான ஆற்றுகைக் கலைக்காக
வெளிவருகின்ற ‘கட்டியம்’ சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியின் ஏற்பாட்டில் காலாண்டு ஆய்விதழாக
வெளிவருகின்றது. இவ்விதழில் துறைசார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மேற்குறித்தவை
கலை இலக்கியம் தொடர்பாக அதிகம் கவனத்தைக் கோரிய இதழ்களாக அமைந்துள்ளன.
கலை இலக்கியம் அரசியல்
சமூகம் குறித்த இதழ்களின் வரிசையில் சிலவற்றைக் கவனப்படுத்தலாம்.
1986 இல் மேற்கு ஜேர்மனியிலிருந்து ‘தமிழ் செய்திக் குறிப்பு’ 44 இதழ்கள் வரை தென்னாசிய நிறுவனத்தின் வெளியீடாக வந்தது. இதில் அதிகமும் இலங்கை தொடர்பான செய்திகள் தகவல்கள் மற்றும் அரசியல் சார்ந்த விடயங்கள் வெளியாகின. தமிழ் செய்திக் குறிப்பின் போதாமை குறித்தும் கலை இலக்கியங்களையும் உள்ளடக்கும் நோக்கங் கருதியும் பின்னர் ‘தூண்டில்’ என்ற பெயரில் இதழியலுக்குரிய கட்டமைப்புடன் இவ்விதழ் வெளிவந்தது.
பார்த்திபனின் ‘கனவை
மிதித்தவன்’ தொடர்கதையின் 25 அத்தியாயங்கள் தமிழ் செய்திக் குறிப்பில் வெளிவந்தது.
26 ஆவது அத்தியாயம் தூண்டில் 1 ஆவது இதழிலிருந்து வெளியாகியது. அதேபோல் தமிழ் செய்திக்
குறிப்பில் வெளிவந்த விடயதானங்களுக்கும் தூண்டிலில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டு அதன் தொடர்ச்சி
பேணப்பட்டது ‘தமிழ் செய்திக் குறிப்பு’ ஆரம்பத்தில் அரசியல் குறித்த கட்டுரைகளுக்கு
முன்னுரிமை கொடுத்தாலும் பின்னர் வெளிவந்த ‘தூண்டில்’ சஞ்சிகை கலை இலக்கியம் குறித்த
படைப்புக்களுக்கு முதன்மையளித்தது.
நோர்வேயில் இருந்து
சுவடுகளும் இதேபோன்று 72 இதழ்கள்வரை வெளிவந்த ஆரம்பகாலச் சஞ்சிகையாகும். இதில் ஆதவனின்
‘மண்மனம்’ நாவல் தொடர்கதையாக வெளிவந்தது. கலை இலக்கிய சமூக பொருளாதார விஞ்ஞான மாத இதழாகிய
‘ஏலையா’ ஒபகௌசன் தமிழர் ஒன்றியத்திற்கு ஊடாக வெளிவந்துள்ளது. ஏலையா நூற்றுக்கும் அதிகமான
இதழ்கள் வெளிவந்துள்ளதாக அறியமுடிகிறது.
1990 இல் வெளிவந்த சுமைகள் 9 இதழ்கள் வரை வெளிவந்தது. கலை இலக்கிய அரசியல் கட்டுரைகளோடு
அறிவியற் கட்டுரைகளையும் கொண்டமைந்துள்ளது.
அதிகமும் அரசியல் சார்ந்த
கருத்து நிலையினை வெளிப்படுத்திய இதழ்கள் சிலவற்றை நோக்குவோம். நெதர்லாந்திலிருந்து
வெளிவந்த ‘அ.ஆ.இ’ என்ற அரசியல் ஆய்வு காலாண்டிதழ் 1989 இல் இருந்து வெளிவந்தது. இதில்;
சிவசேகரத்தின் புனிதமாக்கப்படும் அராஜகம், என். சண்முகரத்தினத்தின் தமிழீழ விடுதலைப்
போராட்டம் சில சவால்கள், பி. சரவணமுத்துவின் இலங்கை : சிங்கள – தமிழ் இனமோதல், தயபால
திராணகமவின் இலங்கையில் இராணுவமற்ற அரசியல் ஆகியன மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்த அரசியற்
கட்டுரைகளாகும். லோகா, தேவகி ராமநாதான், சாள்ஸ்,
பொ. கருணாகரமூர்த்தி, கலைச்செல்வன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், கலாமோகன், சுகன்,
ந. சுசீந்திரன் ஆகிய ஒன்பது படைப்பாளிகளின் சிறுகதைகளைத் தாங்கி புகலிடச் சிறுகதைச்
சிறப்பிதழையும் ‘அ.ஆ.இ’ இதழ் வெளிக்கொண்டு வந்தது. முதலில் கையெழுத்தில் எழுதி பிரதி
செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இவ்விதழ்; பின்னர் கணனி அச்சிலும் வெளிவந்தது.
‘வடு’ சமூக நோக்கங்கருதிய
கருத்தியலை வலியுறுத்தி வெளிவந்த இதழாகும். “புலம்பெயர் சூழலில் எத்தனையோ பத்திரிகைகள்
சஞ்சிகைகள் வந்தன. நின்று போயிருக்கின்றன. ஆனால் இலங்கையில் உள்ள சாதிக் கட்டுமானங்களை
அதனுடைய தாக்கங்களை கொந்தளிப்புகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு தனித்துவமான சஞ்சிகை வரவில்லை
என்றபோதுதான் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினால் நாங்கள் ‘வடு’வைக் கொண்டு வருகின்றோம்.
இதை உலகெங்கும் உள்ள தலித் மக்களிடம் கொண்டு செல்வதற்கான முயற்சியில் இருக்கிறோம்.
இதை மிகவும் எளிமையாகக் கொண்டு வருகிறோம். இதில் பெரிய இலக்கியத் தரமோ தத்துவார்த்தத்
தர்க்கங்களோ இல்லை. தலித் மக்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் சாதாரணமாக
படித்துப் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும் கொண்டு வருகிறோம்” (தேவதாசன், உயிர்நிழல்,
இதழ்30) இந்தக் கூற்று வடுவின் நோக்கத்தை மிகக் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
சுவிஸில் இருந்து வெளிவந்த
‘மனிதம்’ 1987 இல் இருந்து 30 இதழ்கள் வரை வெளிவந்தது காத்திரமான விமர்சன பூர்வமான
அரசியல் கட்டுரைகள் மட்டுமன்றி கலை இலக்கியங்கள் குறித்த படைப்புக்களும் இதில் வெளிவந்தன.
மௌனம், உரைமொழிவு,
பனிமலர், சஞ்சீவி, பறை, கூர் ஆகியனவும் சிற்றிதழுக்குரிய கட்டமைப்புடன் விரிவான விமர்சனக்
கட்டுரைகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் புனைவெழுத்துக்களையும் வெளிக் கொண்டு வந்துள்ளன.
புலம்பெயர்ந்தவர்கள்
மத்தியிலிருந்து முதலில் வெளிவந்த ‘தமிழ்முரசு’ இதழும் ஆரம்பத்தில் அரசியல் இதழாகத்தான்
தன்னை வெளிக்காட்டியிருந்தது. இது 1981 நவம்பரில் இருந்து 72 இதழ்கள் வரை வெளியாகியுள்ளது.
ஈழத்து இனமுரண்பாடு, விடுதலைப் போராட்டம் மாத்திரமன்றி ஒடுக்குமுறைக்குள்ளான ஏனைய நாடுகளின்
விடுதலைப் போராட்டங்கள் குறித்த கட்டுரைகளையும் உள்ளடக்கியிருந்தது.
‘இரவல் தூண்டில்’ அதிகமும்
இலங்கை அரசியல் குறித்த விடயங்களையும் பத்திரிகையில் வெளிவந்த தாயகம் தொடர்பான தகவல்களையும்
தாங்கி வெளிவந்தது. ஆக்கங்கள் கையெழுத்தில் எழுதப்பட்டும் பத்திரிகைச் செய்திகள் கத்தரிக்கப்பட்டும்
ஒளிப்படப்பிரதியாக வெளிவந்தது. இதே அமைப்பில் நெதர்லாந்தில் இருந்து ‘தமிழ்ஒளி’ ‘செய்திக்
கதிர்’ ஆகியனவும் வெளிவந்தன.
‘சமர்’ பிரான்சிலிருந்து
ரயாகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இதழாகும். அரசியல்சார்ந்த கட்டுரைகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்து அரசியல் தத்துவார்த்த புரட்சிகர விமர்சன ஏடாக 2002 வரை 32 இதழ்கள் வந்துள்ளது.
இது தவிர ‘அரசியல் பொருளாதார கலாசார இதழாக’ வெளிவந்த ‘புதுமை’ சஞ்சிகையும் நீண்ட காலம்
தொடர்ச்சியாக வெளிவந்தது.
‘உயிர்ப்பு’ 1993 இல்
இருந்து வெளிவந்தது. அதிகமும் அரசியல் இதழாகவே தன்னை வடிவமைத்துக் கொண்டது. தேசியவாதம்,
இலங்கையில் தேசங்களின் உருவாக்கம், மார்க்சியம் முதலான விடயதானங்களையும் அதிகம் கவனத்தில்
குவித்தது. பிரான்சில் இருந்து சபாலிங்கத்தின் முயற்சியில் எரிமலையும் உமாகாந்தனின்
முயற்சியில் தமிழ்முரசும் வெளிவந்தன. இவ்விதழ்கள் அதிகமும் அரசியல் சார்ந்த கட்டுரைகளைத்
தாங்கி வெளிவந்தன.
அரசியற் கட்டுரைகள்
மட்டுமன்றி கோட்பாடு சார்ந்த காத்திரமான கட்டுரைகளையும் கொண்டனவாக கனடாவில் இருந்து
வெளிவந்த ‘அறிதுயில்’, ‘வியூகம்’ ஆகியன அமைந்துள்ளன. தேசியவாதம், பெண்ணியம், விடுதலைப் போராட்டம், ஈழத்து
வளங்கள் ஆகியன குறித்து இவ்விதழ்கள் அமைந்துள்ளன.
பெண்கள் சார்ந்து வெளிவந்த
இதழ்களைப் பொறுத்தவரையில் சக்தி, கண், ஊதா, நமது குரல் ஆகிய சஞ்சிகைகளைக் குறிப்பிடலாம்.
தமிழ்ச்சூழலில் பெண்களின் படைப்புக்களை ஒன்று சேர்க்கவும் பெண்களின் பிரச்சினைகளுக்குக்
குரல் கொடுக்கவும் இவ்விதழ்கள் பங்காற்றியுள்ளன.
“15 வருடங்களுக்கு
முன்னர் மேற்கு ஐரோப்பாவில் பல மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட சஞ்சிகைகள் வெளிவந்தன.
அவற்றில் பெண்களும் எழுதினார்கள். அநேகமான சஞ்சிகைகளில் பெண்களாலும் ஆண்களாலும் பெண்ணியக்
கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. விவாதிக்கப்பட்டன. பிரான்சிலிருந்து ‘கண்’ என்ற பெண்கள்
சஞ்சிகை முதலில் கொண்டு வரப்பட்டது. இது பெண்களை ஆசிரியர் குழுவாகக் கொண்டிருந்தது.
தொடர்ந்து ஊதா, பெண்கள் சந்திப்பு மலர், சக்தி போன்ற பெண்களால் உருவாக்கப்பட்ட சஞ்சிகைகளும்
இன்னும் ‘மறையாத மறுபாதி’, ‘புது உலகம் எமை நோக்கி’, ‘ஊடறு’ போன்ற தொகுப்புக்களும்
வெளிவந்தன. புகலிட வாழ்வு, பெண்ணியம், விளிம்புநிலை மாந்தர்கள், தமிழ் அரசியல் குறித்த
படைப்புக்கள் தாங்கிய தொகுப்புக்களாக இவை தம்மை இனங்காட்டின.” (றஞ்சி, உயிர்நிழல்,
இதழ் 22)
‘கண்’ பிரான்சில் இருந்து
1986-1990 வரை 13 இதழ்கள்வரை வெளிவந்த இதழாகும். இதில் பெண்விடுதலை மற்றும் பெண்களுக்குப்
பயனளிக்கக்கூடிய கட்டுரைகளுடன் படைப்புக்களும் வெளிவந்தன. இது பெண்விடுதலையை முன்னிறுத்தி
பிரான்சில் இருந்து வெளிவந்த ஒரேயோரு சஞ்சிகை எனக் கருதப்படுகிறது. இவற்றைவிட பெண்கள்
சந்திப்பு மலர்களும் பல்வேறு இணையத் தளங்களும் பெண்களின் படைப்புக்களுக்கு களம் அமைத்தன.
எனினும் ஏனைய இதழ்களிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாகவே இருந்துள்ளது.
ஈழத்து இலக்கியப் புலத்தில்கூட
மிகவும் நலிந்து போன துறையாக இருப்பது சிறுவர் இலக்கியம் சார்ந்த துறையாகும். ஜேர்மனியில்
இருந்து 1990 இல் ‘மண்’ என்ற சஞ்சிகை வெளிவந்தது. ஒரு வருடம் கையெழுத்துச் சஞ்சிகையாகவும்
பின்னர் 23 வருடம் அச்சிதழாகவும் வெளிவந்தது. இந்த இதழ் அதிகமான சிறுவர்களைச் சென்றடைந்ததாகக்
குறிப்பிடப்படுகிறது. இதேபோல் பிரான்சில் இருந்து ‘பரிசு’ என்ற இதழ் 1999 இல் இருந்து
பத்மா இளங்கோவனை ஆசியராகக் கொண்டு வெளிவந்தது.
லண்டனிலிருந்து வெளிவந்த ‘தேம்ஸ்’, ஜேர்மனியிலிருந்து வெளிவந்த ‘சிறுவர் அமுதம்’ அவுஸ்திரேலியாவிலிருந்து
வெளிவந்த ‘பாரதி சிறுவர் இதழ்’ ஆகியன சிறுவருக்காக வெளிவந்தன. கலைச் செயற்பாடுகளில்
நாடக முயற்சிகள் சிறுவருக்கான ஒலி ஒளிப்பேழைகள் அதிகம் வெளிவருவதாக அறியமுடிகிறது.
ஆனால் சஞ்சிகை முயற்சியைப் பொறுத்தவரையில் இத்துறை மேலும் வளர்த்தெடுக்க வேண்டிய நிலையில்
உள்ளது.
ஆன்மீக இதழ்களைப் பொறுத்தவரையில்
நெதர்லாந்தில் இருந்து 1988 இல் வெளிவந்த ‘சமநீதி’ இதழில் மதசார்பு, சமநீதி, சமூக சீர்திருத்தம்
முதலான கருத்துக்கள் உள்ளடங்கியிருந்தன. இது இரண்டு இதழ்களுடன் நின்றுவிட்டது. ஆத்மஜோதி,
அன்புநெறி, ஆலயமணி ஆகியனவும் மேற்குறித்த ஆன்மீக
இதழ்களாக கனடாவில் இருந்து வெளிவந்தன. ‘கலசம்’ லண்டன் சைவமுன்னேற்றச் சங்கத்தின் வெளியீடாக
1993 இல் இருந்து வெளிவருகிறது. இதுவரை 102 இதழ்கள் வெளியாகியுள்ளன. சமயம் சார்ந்த
காத்திரமான கட்டுரைகளைக் கொண்டமைந்துள்ளது.
மொழி சமயம் சார்ந்து பிரான்சில் இருந்து ‘கதிர்’ இதழும் வெளிவந்தது. ஆலயங்கள்
சார்ந்து சஞ்சிகைகளும் ஆண்டு மலர்களும் வெளிவருகின்றன.
பல்சுவை இதழ்கள் என்ற
வகைப்பாட்டுக்குள் அதிகமும் கலை இலக்கியம் பண்பாடு மட்டுமன்றி பொழுதுபோக்கு அம்சங்களுக்குரிய
விடயதானங்களையும் உள்ளடக்கிய சில இதழ்களையும் கருத்திற் கொள்ளமுடியும்.
பெரியோரிடத்தும் இளையோரிடத்தும்
வாசிப்பைப் பரவலாக்கும் பொருட்டு பொழுதுபோக்கு விடயங்களையும் உள்ளடக்கி வேறு பல இதழ்களும்
வந்துள்ளன. வெகுஜன வாசிப்பை ஊக்குவிக்கும் பொருட்டு ‘உலகத் தமிழோசை’, ‘உலகத் தமிழ்’
ஆகிய இதழ்களைக் குறிப்பிட முடியும். வெற்றிமணி வெளியீடாக வந்த கலை கலைசார இதழாகிய
‘அபிநயா’, ‘ஓவியா’ ஆகியவற்றையும் குறிப்பிடலாம். தமிழ்ப்பண்பாடு சார்ந்து கனடாவில்
இருந்து ‘உலகத் தமிழர் குரல்’ வெளிவந்தது. டெனிஸ் – தமிழர் தோழமை ஒன்றியத்தின் ஊடாக
டென்மார்க்கிலிருந்து வெளிவந்த ‘செய்திக் கோவை’ 12 இதழ்கள் பார்க்கக்கிடைத்த வகையில்
அதிகமும் இருமொழித் தொடர்பூடகமாகப் படைப்புக்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இலண்டனில்
இருந்து ‘தமிழ் உலகம்’ என்ற இதழ் சிறுகதை, தொடர்கதை, நாடகம், அரங்கியல், முதலான இலக்கியப்
பக்கங்களுடன் பல்சுவை அம்சங்களையும் உள்ளடக்கி வெளியாகியது.
ஆரம்பத்தில் புகலிடச்சூழலில்
அமைப்பாகச் சேர்ந்து செயற்படமுடியாத நிலையிலே தமது கருத்துக்களையும் எதிர்காலச் செயற்பாடுகளையும்
பகிர்ந்து கொள்வதற்காகவே புகலிடத்தில் இத்தனை இதழ்களை உருவாக்கியுள்ளனரெனக் கருதமுடிகிறது.
இதனாலேயே சஞ்சிகைகள் மிக அதிகமாக வெளிவந்த 90களை ‘புகலிட இலக்கியத்தின் பொற்காலம்’
என்று கலைச்செல்வன் குறிப்பிடுகிறார். ஆனால் 95 இன் பிற்பாடு இந்த நிலை மெல்ல மாற்றமடைகிறது.
“முக்கியமாக சபாலிங்கம் கொலை நிகழ்த்திய அச்சுறுத்தல், ஈழத்து நிலைமைகள் குறித்து,
அரசியல் அபிப்பிராயம், கருத்துச் சொல்வதை அச்சுறுத்தியது. பலரை சுயதணிக்கை செய்ய வைத்தது.
பலர் எழுதுவதையே விட்டுவிட்டனர். சிலர் சஞ்சிகைகளையே விட்டுவிட்டனர். இந்நிலைமையானது
இறுதியில் நமது அரசியலில் பிரக்ஞை கொள்ளாத நிலைமையை உருவாக்கியது.இறுதியில் பெரிதும்
ஈழத்து அரசியல் நிலைமை போன்றன தவிர்க்கப்பட்டு எப்போதாவது இடையிடையே நோகாமல் சொல்லும்
போக்கே காணப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. விடுபட்டுப்போன இந்த வெற்றிடத்தை நிரப்பியது
உலகமயமாதல், பின்நவீனத்துவம் போன்றவையாகும்.” (கலைச்செல்வனின் பிரதிகள், ப 246) மேற்படி
இந்த நெருக்கடி நிலையிலேயே இதன் அடுத்த கட்டமாக இணையவெளியில் படைப்புக்களைக் கொண்டுவரும்
நிலை ஏற்படுகிறது. (இது தொடர்பில் “இலத்திரனியற் சூழலில் புகலிடச் சிற்றிதழ்கள்” -
சு. குணேஸ்வரன், புனைவும் புதிதும் 2012 என்ற நூலில் வாசிக்கலாம்)
இதழ்களின்
இன்றைய நிலை
புகலிடத்திலிருந்து
வெளிவந்த பெரும்பாலான இதழ்கள் பல்வேறு காரணங்களால் நின்றுவிட்ட பிறகு தற்போது சில இதழ்களே
வெளிவருகின்றன. காலம், ஆக்காட்டி, சிறுகதை மஞ்சரி, இலக்கிய வெளி. காவோலை. தமிழோசை.
இளவேனில். எதிரொலி. கலசம் முதலான சில இதழ்களே தற்காலத்தில் வெளிவருகின்றன. முதலில்
அச்சிதழ்களாக வெளிவந்தவை பின்னர் இணைய இதழ்களாக (e-journals/ e-
zines) வந்தன.
பதிவுகள், தாய்வீடு, நடு, ஊடறு, காற்றுவெளி, தமிழ் ஓர்தேர்ஸ், அக்கினிக்குஞ்சு, தமிழ்முரசு,
தேசம்.கொம், அகழ் முதலான இணையத் தளங்களிலும்
(website)
புலம்பெயர்ந்தவர்கள்
தொடர்ந்து எழுதி வருகின்றனர். இவை தவிர எழுத்தாளர்கள் தமது இணையத்தளங்களிலும் வலைப்பதிவுகளிலும்
(blogspot) எழுதி வருகின்றனர்.
இதழ்களின் வருகை குறைந்தமைக்கு
பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முதன்மையாக “ஒரு சஞ்சிகையை நடத்துவதற்குப் போதிய நிதிவசதி
மட்டுமல்ல, பல்வேறு சிந்தனை கொண்ட படைப்பாளிகளின், வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவதும்
குழுநிலை அரசியலுக்கு அப்பால் தரமான வாசகர் சமூகம் ஒன்றையும் படைப்பாளிகளையும் சுதந்திரமான
சூழலில் உருவாக்கி வளர்த்துச் செல்வதும் இலகுவான காரியம் அல்ல. இன்றைய கனடிய தமிழ்ச்
சூழலில் தமிழ்ச் சஞ்சிகைகளைத் தொடர்ந்து நடத்துவது மிகச் சிரமமான காரியமாக இருப்பதற்கும்
தோன்றும் வேகத்தில் அவை நின்று போவதற்கும் இவையும் காரணங்கள் என்பதை ஒப்புக்கொண்டே
ஆகவேண்டும்” (க.நவம், ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம், ஞானம் சிறப்பிதழ் 175) என்ற கருத்து சான்றாக அமைகின்றது.
நாடுகள் வாரியாக இத்தனை
சஞ்சிகைகள் தோற்றம் பெற்றாலும் சில ஓரிரு இதழ்களுடன் தமது பயணத்தை முடித்துக் கொண்டன.
இன்னுஞ்சில இதழ்கள் தசாப்தங்கள் கடந்தும் வெளிவந்துள்ளன. இவை எல்லாவற்றுக்கும் நிதி,
விடயதானம், குறித்த கருத்தியல், வெளியிடும் அமைப்பு, தனிநபர் அர்ப்பணிப்பு ஆகியன செல்வாக்குச்
செலுத்துவதாகக் கருதலாம்.
முடிவுரை
புகலிடச்சூழலில் வெளியாகிய
சஞ்சிகைகளின் ஊடாக சில சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதை இவ்விடத்தில் மனங்கொள்ளுதல்
வேண்டும். புதிய படைப்பாளிகளை உருவாக்கியமை, ஈழப் படைப்புக்களின் தொடர்ச்சி பேணப்பட்டமை,
தமிழ்ச் சூழலுக்குப் புதிய களங்களையும் அவை தொடர்பான எழுத்துக்களையும் முன்வைத்தமை,
ஈழத்து மண்ணும் வாழ்வும் புதிய நோக்குநிலையில் பதிவு பெற்றமை, புதிய உணர்வு உள்வாங்கல்கள்
புதிய எழுத்து வடிவங்களின் ஊடாகப் பதிவு பெற்றமை,
அரசியற் செயற்பாடுகள் பெண்ணிலைவாதக் கருத்துக்கள் தலித்தியம் முதலானவை அடுத்த
கட்டத்திற்கு நகர்ந்தமை முதலானவற்றை புலம்பெயர்ந்தோரின் இதழ்களே அதிகமும் வெளியே கொண்டு வந்தன.
எனவே, வெளிவந்த இதழ்கள்
தொடர்பான விரிவான ஆய்வினை எதிர்காலத்தில் நிகழ்த்தும்போது புலம்பெயர்ந்தவர்களின் ஆரம்பகால
இலக்கியச் செயற்பாடுகளையும் ஈழத்திலக்கியத்தின் தொடர்ச்சியான போக்கையும் இனங்கண்டு
தெளிவுபடுத்த முடியும். இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இன்று வரையும் உள்ள இலக்கிய
வரலாற்று இடைவெளிகள் மீளவும் மீளவும் இந்த நூற்றாண்டிலும் தொடராமல் காப்பதற்கு இவை தொடர்பான ஆவணப் பதிவுகளும் ஆய்வு
முயற்சிகளும் வழிசமைக்கக்கூடும்.
எதிர்காலத்தில் இதழியல் சார்ந்து செய்யக்கூடிய செயற்பாடுகள் சிலவற்றை கவனத்திற் கொள்ளலாம்.
2. இதழ்கள் தொடர்பான தனித்தனி ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.
3. துறைசார்ந்து படைப்புக்களைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்தல்.
4.புலம்பெயர்ந்தவர்களின் ஆரம்பகாலப் படைப்புக்களில் வெளிப்படு கின்ற புதிய அனுபவங்களை தமிழ் இலக்கியத்தில் முன்வைத்தல்.
5. அரசியல் விமர்சனம், தமிழ் அடையாளம், படைப்புக்களின் வடிவ மாற்றம் ஆகியவற்றை இனங்கண்டு முன்வைத்தல்.
மேற்குறித்தவற்றை புலம்பெயர்ந்தோரின்
இதழியல் சார்ந்து செயற்படுத்தும்போது ஈழத்தமிழரின் புலம்பெயர் இலக்கிய முன்னெடுப்பில்
இதழ்களின் பங்கும் பணியும் மிகத் தெளிவாகப் புலப்படும் என்று கூறலாம்.
நன்றி
:ஜீவநதி, ஈழத்து இலக்கியச் சிற்றிதழ்கள் சிறப்பிதழ் 2022
---
No comments:
Post a Comment