ஒரு மரணமும் சில மனிதர்களும், இளவேனில் மீண்டும் வரும் சிறுகதைத் தொகுப்புகளை ஆதாரமாகக் கொண்ட ஓர் ஆரம்ப வாசிப்பு
----------சு. குணேஸ்வரன்
தாட்சாயணி 90 களில் இருந்து எழுதி வருகின்றார். இவரின் ஒரு மரணமும் சில மனிதர்களும், இளவேனில் மீண்டும் வரும் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை ஆதாரமாகக் கொண்டு பெண் பற்றிய சித்திரிப்பினை இக்கட்டுரை நோக்க முயல்கின்றது.
இரண்டு தொகுப்புகளிலும் 24 சிறுகதைகள் உள்ளடங்கியுள்ளன. எனினும் நுண்மையாக நோக்கும் பொருட்டு பெண் பற்றிய கதைகள் மாத்திரம் இங்கு கருத்திற் கொள்ளப்படுகின்றன.
தாட்சாயணியின் கதைகளானது 90 களின் பின்னர் மக்கள் எதிர்கொண்ட போர்க்கால வாழ்வின் நெருக்கடிகளைப் பதிவு செய்கின்றன. போரின் ஊடான மக்களின் வாழ்வு அவர்களுக்கு உடல் உளரீதியாக எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதனை இவரின் அதிகமான சிறுகதைகள் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன. இதற்கூடாகவே பெண் என்ற நிலையில்; இந்தச் சமூகத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் தாட்சாயணி மிக நுண்மையாகப் பதிவு செய்துள்ளார்.
ஒரு மரணமும் சில மனிதர்களும் தொகுப்பிலுள்ள ‘சோதனைகள்> மழை> பெண்> தீ விளிம்பு’ ஆகிய நான்கு கதைகளும் இளவேனில் மீண்டும் வரும் தொகுப்பிலுள்ள ‘ஒரு புல்லாங்குழல் ஊமையானது> அந்தப் பத்து நிமிடங்கள்> அவளும் இவளும்> சலனம்> கண்ணீர்ப்பூக்கள்> மழையில் உதிர்ந்த மலர்> அவள் கண்ணகி இல்லை> இளவேனில் மீண்டும் வரும்’ ஆகிய எட்டுக் கதைகளும் இக்கட்டுரைக்கு ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றன.
சமூகத்தின் பல நிலைகளில் உள்ள பெண்களை தனது கதைகளின் பாத்திரங்களாக தாட்சாயணி நிறுத்துகின்றார். பத்து வயதுச் சிறுமி முதல் பாட்டி வரை பெண்கள் என்ற நிலையில் அவர்கள் எதிர்கொள்ளும் பல நெருக்கடிகளைப் பேசும் பாத்திரங்களாக அவர்கள் உலாவருகின்றனர்.
தாட்சாயணி தன் கதைகளில் முன்நிறுத்தும் பெண்களின் ஒடுக்கு முறையாளர்களாக மூன்று பிரிவினரை இனங்காண முடிகின்றது.
1. குடும்பம் மற்றும் சமூகத்தின் பல படிநிலைகளில் உள்ள ஆண்கள்
2. அதிகாரமும் ஆதிக்க வலுவுமுள்ள ஆண்கள்
3. சமூகத்தின் பல படிநிலைகளில் உள்ள ஆண்கள் தவிர்ந்த ஏனையவர்கள்
இங்கு முதலாவதாகக் குறிப்பிட்ட ஆண்களில் விடலைப் பையன்> பல்கலைக்கழக மாணவர்கள்> வாலிபன்> தகப்பன் நிலையில் உள்ளோர்> அலுவலக வேலை செய்யும் ஆண்கள்> காதலனாக உருவெடுக்கும் ஆண்கள்> மற்றும் முதிய நிலையில் உள்ள ஆண்கள் (அவள் கண்ணகி இல்லை என்ற சிறுகதையில் கலியாணப் புறோக்கராக வருபவரும் ஆணாதிக்கப் பிரதிநிதியாகவே சித்தாpக்கப்படுகி;றார்) ஆகியோரைக் குறிப்பிடலாம்.
இரண்டாவது நிலையில் உள்ளவர்களுக்கு அதிகாரமும் ஆதிக்க வலுவும் உள்ள ஆண்களைக் குறிப்பிடலாம். இவர்களுக்கு முதல் உதாரணமாக வரக்கூடியவர்கள் ஆயுதம் தாங்கிய அதிகார வலுவுள்ளவர்கள்> மற்றும் குடும்பத்தில் அதிகார வலுவுள்ள ஆண்கள்> பணம் படைத்தோர் (மழையில் உதிர்ந்த மலர் கதையில் சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தும் கடைக்காரன் பணக்காரனாகச் சித்தாpக்கப்படல்)
மூன்றாவது நிலையில் உள்ளவர்களுக்கு எமது சமூக அமைப்பிலுள்ள ஆண்கள் தவிர்ந்த மற்றெல்லோரையும் குறிப்பிடலாம். இவர்களில் அம்மா ஸ்தானத்திலுள்ள பெண்கள்> மாமிமார்கள்> சகோதாpகள்> முக்கியமானவர்கள்.
தாட்சாயணி முன்நிறுத்தும் பெண்கள் எவ்வாறானவர்கள் என்று நோக்கும்போது பெண்ணின் பல நிலையில் உள்ளவர்களும் இவரது கதைகளில் சிக்கலை எதிர்கொள்பவர்களாக வருகின்றனர்.
1. ஸ்கொலசிப் எடுக்கவிருக்கும் பத்து வயதுச் சிறுமி (மழையில் உதிர்ந்த மலர்)
2. பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள் (ஒரு புல்லாங்குழல் ஊமையானது> அந்தப் பத்து நிமிடங்கள்> தீ விளிம்பு)
3. தொழில் புரியும் இளம் பெண்கள் (அவளும் இவளும்> கண்ணீர்ப்பூக்கள்> சலனம்> பிஞ்சுமனம்)
4. காதலித்;து ஏமாற்றப்பட்ட இளம்பெண்கள் (ஒரு புல்லாங்குழல் ஊமையானது> சலனம்> இளவேனில் மீண்டும் வரும்)
5. திருமண வாழ்வில் உள்ள குடும்பப் பெண் (அவளும் இவளும்)
6. கணவனை இழந்த பெண்கள் (கண்ணீர்ப் பூக்கள்> வெளியில் வாழ்தல்)
7. வயது முதிர்ந்த தாய் (மழை)
இந்தப் பெண்களின் பிரச்சனைகளைப் பின்வரும் வகைப்பாட்டுக்குள் அடக்க முடியும்.
காதலித்து ஏமாற்றப்பட்ட பெண்கள்> காதலித்து விட்டுச் சீதனத்தைக் காரணமாகக் காட்டி வேறு பெண்ணைத் திருமணம் செய்யும் ஆண்களால் கைவிடப்பட்ட பெண்கள்> பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டு மனம் பேதலித்த பெண்> ஆணால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி> ஆதிக்கக் கரங்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு மனம் பேதலித்த மற்றும் கொலை செய்யப்பட்ட பெண்கள்> குடும்ப வாழ்வில் கணவனை இழந்த பெண்> குடும்ப வாழ்வில் கணவனைத் தொலைத்து விட்டுச் சமூகத்தின் வசைக்கு ஆளான பெண்> பிரச்சனையால் கணவனை இழந்த (காணாமற்போன) பெண்> விரும்பியவனை மணம் முடித்தும் கூட ஆணின் வசைக்கு ஆட்படும் பெண்> என்றவாறு இக்கதைகளில் வரும் பெண்களின் பிரச்சனைகளை வகுத்துக் கொள்ள முடியும்.
வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் பெண்கள் பற்றிய கதைகளில் ‘மழையில் உதிர்ந்த மலர்;’ ‘மழை’ ஆகிய இரண்டு கதைகளை எடுத்துக் காட்டலாம்.
மழையில் உதிர்ந்த மலர் என்ற சிறுகதையில் குடிகாரத் தகப்பனையும் நான்கு சகோதரிகளையும் நோய்வாய்ப்பட்ட தாயையையும் கொண்ட குடும்பத்திலிருந்து பத்து வயதுச் சிறுமியின் பாத்திரத்தை தாட்சாயணி எம்முன் நிறுத்துகிறார்.
தகப்பன் எந்தச் சிந்தனையும் இல்லாது குடித்துவிட்டுத் தாயை அடித்து உதைத்து வரும் குடும்பத்தில் இந்தச் சிறுமி குடும்ப பாரத்தைச் சுமக்கின்றாள். ஒருமுறை தாய்க்கு ஏற்பட்ட உடற்சுகயீனம் காரணமாக 5 ரூபா காசுடன் பனடோல் வாங்குவதற்கு மழையில் நனைந்து கொண்டு கடைக்குச் செல்லும் சிறுமி சந்தர்ப்பவசத்தால் அந்தக் கடைக்காரனால் ஏமாற்றப்பட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றாள். மயக்கம் தெளிந்த சிறுமிக்கு தனக்கு ஏதோ நடந்து விட்டது தெரிகின்றது.
இரண்டும் கெட்டான் வயதில் ஒன்றும் புரியாமல் தன்னிடம் எதையோ இழந்துவிட்ட அந்தச் சிறுமியை அவள் அலங்கோலமாய்க் கட்டிலில் கிடக்கும் கோலத்தை அவன் சிகரட் குடித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்.
சுpகரட் மணம் அவள் நாசியை நன்றாகவே தாக்கிற்று தடிமனாயிருந்த போதும் கூட கைகள் தன்பாட்டில் உரசிக் கொள்ளக் கையில் இறுக்கிக் கொண்டிருந்த ஐந்து ரூபாய் குற்றி கீழே விழுந்தது அந்தச் சத்தத்தில் திடீரென்று உருவப்பட்ட அவள் சட்டென்று நிமிர்ந்தாள். அவன் பார்வைக்குள் விழுந்தாள். ஒன்றும் பேசாமல் எழுந்தாள் நடந்ததெல்லாம் ஏதோ தப்பான விஷயங்கள் தானென்று விளங்கின.
து}ரத்தில் அப்பா வந்து கொண்டிருந்தார் வெறியில் தள்ளாடும் நடை ‘இந்த அப்பா செத்துப் போனால் தான் என்ன?’ குரூரமான ஒரு ஆசை.. ……இன்னும் எத்தனை புயல்களுக்கிடையில் அவள் பூவாய் உதிர்வாளோ?
இந்தக் கதையைப் போல் சமகாலத்தில் எழுதி வரும் நிருபா> சுமதி ரூபன் ஆகியோரின் சிறுகதைகளையும் இதற்கு இணையாகக் காட்ட முடியும்.
இதேபோல் ஆதிக்கக்கரங்களால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு மனம் பேதலித்த நிலையில் உள்ள பெண்ணை ‘மழை’ என்ற இன்னொரு சிறுகதையில் ஆசிரியர் சித்திரிக்கிறார்.
‘மழை’ அடிப்படையில் ஒரு குறியீட்டுக் கதை. செம்மையான மொழிநடை இக்கதைக்கு வலுவாக உள்ளது. ஒரு பெண் ஆதிக்கக் கரங்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு சாகும் நிலையில் விட்டுச் செல்லப்படுகின்றாள். வயது முதிர்ந்த பேத்தியின் பாதுகாப்புடன் உயிர்மீள்கிறாள். காலஓட்டத்தில் மனம் பேதலித்த நிலையில் அவள் பஸ் ஸ்ராண்டுகளில் அலைவதாகச் சித்திரிக்கப்படுகிறாள்.
…பலாமரங்களுக்கிடையே அவளை விழுத்தி சதிராடிற்று மழை. பெரிய பெரிய கரும்பூத மேகங்கள் திரள்களாக மோதி அவளை மிதித்துச் சிதைத்தன. இவள் கைகளைக் கட்டிற்று மழை…இவள் குரல்வளை இறுக்கிற்று மழை… இவள் மானம் பறித்துச் கெக்கலித்தது மழை..
‘எடியேய்> என்ரை செல்லம் எங்கையடி போட்டாய்..’ அடிநெஞ்சிலிருந்து அழுகை தெறிக்கும் குரலில் ஒரு பதைபதைப்பு.
இங்கு மழை கதையில் வரும் ‘எடியேய்> என்ரை செல்லம் எங்கையடி போட்டாய்..’ என்ற ஆச்சியின் இந்த உருக்கமாக குரல் படிப்போரை மனம் நெகிழச் செய்யும்.
உண்மையில் இந்தக் கதையைப் படிப்பவர்களுக்கு தாட்சாயணி காட்டியதுபோல் எத்தனையோ பெண்களை உதாரணம் காட்டக்கூடியதாக இருக்கும். இதற்கெல்லாம் காரணமாக> நாங்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட காலங்கள் குற்றவாளியாக எங்கள் முன் நிற்பதனை நாமே உணரக்கூடியதாக இருக்கும்.
இந்தக் காலங்கள் பெண்களைப் பைத்தியமாக்கி விட்டிருக்கின்றன. ஆதிக்கக் கரங்களின் கைகள் எங்கெங்கு பெண்களின் மேல் விழுகின்றதோ அங்கெல்லாம் பெண் எதிர்க்க முடியாமல் பைத்தியமாகின்றாள். இதேபோல் ஒரு புல்லாங்குழல் ஊமையானது என்ற மற்றும் ஒரு சிறுகதையிலும் மனம் பேதலித்து வெறும் ஜடமாகத் திரியும் பெண்ணை தாட்சாயணி சித்திரிக்கிறார்.
ஒரு மரணமும் சில மனிதர்களும் என்ற தொகுப்பிலேயே வித்தியாசமான கதை சொல்லும் அனுபவமாக நான் ‘மழை’ யைக் கருதுகிறேன். மழை என்ற குறியீடு கதையின் தொடக்கம் முதல் முடிவு வரை வளர்த்துச் செல்லப்பட்டதா என்பது இக்கதையைப் பொறுத்தவரையில் ஒரு மயக்கம் உள்ளது. மற்றும்படி தாட்சாயணி தன் கதைசொல்லும் நடையில் மேலுமொரு உத்தியை இங்கு முயன்று பார்த்துள்ளார் என்றே கூறல் வேண்டும். இந்த முறை நல்லபடியாக எதிர்காலத்தில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். நவீன கதை சொல்லல் உத்தியில் கவிதை போலவே மொழியைக் கையாண்டிருக்கிறார். இக்கதையின் பலமாகக்கூட மொழியே மேலோங்கி நிற்கிறது.
கதைக்கருவைப் பொறுத்தவரை மழை என்ற கதைக்கு மிக அருகில் வரக்கூடிய இன்னொரு கதையே ‘தீ விளிம்பு’ ஆகும். இங்கும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி வீட்டுக்குத் திரும்புகிறாள் இடையில் காணாமற்போகிறாள்.
சமூகத்தின் வசைக்கு ஆளாகி மனம் பேதலித்த பெண்ணையும் அந்தச் சுவடுகளோடு உலாவரும் பெண்களையும் இவரின் கதைகளின் இன்னொரு அம்சமாகச் சுட்ட முடியும். ‘ஒரு புல்லாங்குழல் ஊமையானது’ என்ற கதையானது பலவிதமான கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் பல்கலைக்கழகத்துக்குள் நுழையும் ராதா என்ற பெண்ணைச் சித்திரிக்கிறது.
இயல்பிலேயே அமைதியும் பயந்த சுபாவமும் உள்ள ராதா மருத்துவத்துறைக்குத் தெரிவாகிப் பல்கலைக்கழகம் நுழைகின்றாள் அங்கு சில மாணவர்களால் பகிடிவதைக்கு ஆளாகி பலவித மன உழைச்சல்களை எதிர்கொள்கிறாள். ராதா சிறுமியாக இருக்கும்போது தாய் இறந்துவிட தகப்பன் இரண்டாந் தாரமாக இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்கிறார். ராதா தன் ஊரிலேயே கண்ணன் என்ற முறை மச்சானைக் காதலித்த நிலையில் பல்கலைக்கழகம் செல்கிறாள். இந்தத் தகவல்கள் எல்லாம் எப்படியோ பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்யும் மாணவர்களுக்குக் கிடைத்துவிட இவற்றைச் சாட்டாக வைத்து பலவித கதைகளை இம்மாணவர்கள் இவளிடம் பகிடிவதைக் காலத்தில் மனம் நோகுமாறு கேட்பது இவளைப் பாதிக்கின்றது.
‘அப்பனுக்கேத்த மகள்தானை> அப்பன் ரெண்டாவதா ஒண்டைக் கட்டிப்போட்டான். மகள் இன்னும் எத்தனை பேரை..’
‘அதுசரி அப்பன் தான் போய் பொம்பிளை பாத்தவனோ…இல்லாட்டி நீயும் கூடப்போய்ப் பார்த்து நீதான் செய்து வைச்சனியோ?’
இதேபோல் மேலும் பல தாக்கங்களினூடாக இவற்றை நினைத்து நினைத்து மனம் பேதலித்துப் போகிறாள். இறுதியில் கண்ணனின் தாய் தன் மகனை லண்டனில் வேறு ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கிறாள். ராதா அப்படியே ஜடமாக உலாவருகிறாள்.
இச்சிறுகதையில் ராதா மீதான பல்கலைக்கழக மாணவர்களின் கேலிப்பேச்சு> இவள் பற்றிய சமூகத்தின் பார்வை> இவளைக் காதலித்தவன் ஏற்றுக்கொள்ளாத ஏமாற்றம் எல்லாம் ஒன்றாய்த் திரண்டு விடுகின்றமையை காணமுடியும். இவையெல்லாம் சமகால மனித மனங்களின் நிலையை எடுத்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன.
‘சோதனைகள்’ என்ற கதை ஒரு பெண் அனுபவிக்கின்ற சொல்லமுடியாத அசெளகரியங்களைக் கூறுகின்றது. சோதனைச் சாவடியில் பெண் அனுபவிக்கின்ற சொல்லமுடியாத துன்பங்கள் என்று தான் கூறவேண்டும். ஒருபுறம் ஆண்களால் படுகின்ற வேதனைகள் போதாதென்று மறுபுறம் அம்பலத்தில் நின்று கொண்டு எதிர்த்துப் பேசமுடியாமல் எதுவும் கூறமுடியாத நிலை என்று வருகின்றபோது அந்தப்பெண் செத்துவிடலாம் என்று கூட நினைக்கிறாள்.
‘அவள் கண்ணகி இல்லை’ என்ற கதை வெளிநாட்டு மாப்பிள்ளையை மணம் முடித்துச் செல்லும் பெண்ணின் நிலைபற்றிக் கூறுகின்றது. பெண்பிள்ளை என்றாலே எங்காவது கட்டிக் கொடுத்துவிட்டால் தங்கள் சுமை குறைந்து விடும் என்று எண்ணும் பெற்றோர் மத்தியிலிருந்து வருகின்ற இக்கதையில், செவ்வந்தி A/L எடுத்தவுடன் லண்டன் மாப்பிளைக்குக் கலியாணம் செய்து கொடுக்கப்படுகி;றாள். மாப்பிள்ளை வந்து தடல்புடலாக கலியாணம் செய்து கூட்டிப் போகின்றான்.
இவளுக்கு இப்போ அவன்தான் உலகம். அவன்தான் தெரிந்த ஒருவன் என்றாகிவிடுகிறது. லண்டனுக்குச் சென்றதும் அவனுக்கு ஒரு வெள்ளைக்கார மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது உடனேயே செவ்வந்திக்குத் தெரியவருகிறது. அங்கு செவ்வந்தியை வெள்ளைக்கார மனைவிக்குத் தமது வேலைக்காரி என்று அவன் கூறிவைக்கின்றான்.
She is sevvanthy, our servent. Cylon girl. உடை மாற்றிவிட்டு வந்தவன் அவளுடைய இறுகிய மெளனம் கண்களைக் குத்த வேறுபுறம் பார்த்தபடி சொன்னான். ‘I am sorry sevvanthy ’ அம்மா அப்பாவைக்கு நான் ஜென்னியைச் செய்தது தெரியாது. அவையளுக்காகத்தான் உம்மைச் செய்தனான்…’
என்று இவளைக் கல்யாணம் செய்ததற்குக் ஒரு குருட்டுக் காரணம் கற்பிக்கின்றான். இந்நிலை எமது சமூகத்தில் எல்லோருக்கும் தெரிந்ததுதான். பல திருமணங்கள் இவ்வாறு நடைபெற்றும் உள்ளன. இதனைத் தாட்சாயணி தன் கதைகளுக்குக் கருவாகக் கொள்வதிலிருந்து எமது சமூகத்தில் பெண்கள் என்றாலே சுமையாகக் கருதுகின்ற மாயையில் என்ன நடந்தாலும் பின்னர் சமாளித்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டு விடுவதனை உணரக் கூடியதாக உள்ளது. இதுவே எமது சமூகத்தின் துயரமாகிப் போனமையும் ஏற்றுக் கொள்ளமுடியாத உண்மையாகும்.
இந்தக் கதையுடன் இணைத்து வேறும் சில கதைகளைக் கருத்திற் கொள்ள முடியும். அவற்றை காதல்> திருமணம்> மற்றும் ஏமாற்றமான குடும்ப வாழ்வு சார்ந்தன என்ற பகுப்பினுள் அடக்க முடியும்.
‘சலனம்’ என்ற சிறுகதையில் வரும் பாலினி சித்திரன் என்ற வாலிபனால் காதலித்து ஏமாற்றப்பட்ட பின்னர் திருமணத்தைப் பற்றியே எண்ணாமல் தன் தங்கைமாருக்காக வாழும் நிலையை தாட்சாயணி எடுத்துக் காட்டுகின்றார். சித்திரன் பெற்றோருக்குக் கட்டுப்பட்டு பாலினிக்கு எதுவும் சொல்லாமற் கொள்ளாமல் வெளிநாடு சென்று விடுகின்றான்.
பெண்கள் என்றாலே ஆண்களை வளைத்துப் போடுபவர்கள் என்ற எதிர்பார்ப்பு சமூகச்சார்ந்த ஒரு கருத்தாக இருப்பதனை அவனின் பெற்றோர் மூலம் அறிகின்றாள். தான் விரும்பிய வாழ்வு தனக்குக் கிடைக்கவில்லை. இனியென்ன என்ற எண்ணத்துடன் வாழ்கிறாள்.
‘அவளும் இவளும்’ என்ற சிறுகதையில் சித்திரா நீலவேணி என்ற இரண்டு பெண்கள் வருகின்றனர். சித்ரா தன்னில் காதல் கொண்டவனின் காதலைத் (சாதிப்பிரச்சனை காரணமாக) தன் சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்பதற்காக விருப்பம் இருந்தும் நிராகரிக்கின்றாள். ஆசிரியத் தொழில் கிடைத்தது. வேறு திருமணம் பற்றியே சிந்திக்க அவளுக்கு மனம் இடங்கொடுக்காததால் அப்படியே வாழ முடிவு செய்கிறாள்.
அதேநேரம் சித்திராவின் தோழியாகிய நீலவேணி பெற்றோருக்குக் கட்டுப்படாமல் தான் விரும்பியவனுடன் ஓடிவந்து திருமணம் செய்கிறாள். கால ஓட்டத்தில் நீலவேணியின் பெற்றோர் வந்து போனாலும் பெரிய ஒட்டுறவைக் காட்டிக்கொள்ளவில்லை. இக்கதையில் எல்லோரையும் உதறிவிட்டுத் தன் இஷ்டம் போல் வந்தபடியால் சமூகத்திற்கு வாழ்ந்து காட்டவேண்டும் என்ற ஓர்மம் நீலவேணியிடம் இருக்கின்;றது. ஆனால் குடும்பத்தில் சந்தோசமற்ற வாழ்வே அவளுக்குக் கிடைக்கிறது. இதனை சித்ராவுக்குக்கூட சொல்லாமல் வெளியே காட்டிக் கொள்ளாமல் தான் சந்தோசமாக இருப்பதாகக் கூறுகிறாள்.
இந்த இரண்டு பெண்களின் உணர்வுகளையும் தாட்சாயணி எதிரும் புதிருமாக இக்கதையில் எடுத்துக் காட்டுகிறார்.
‘இளவேனில் மீண்டும் வரும்’ என்ற சிறுகதையில் வெண்ணிலா என்ற பெண்@ சங்கர் என்பவனைக் காதலிக்கின்றாள். திருமணம் என்று வரும்போது சங்கர் தன் பெற்றோர் தன்னைப் படிப்பித்த செலவு மற்றும் சீதனம் வேண்டும் என்ற காரணங்களைக் காட்டி வெண்ணிலாவை ஏமாற்றிவிட்டுப் பெற்றோர் பார்த்து வைத்த வேறு பெண்ணைத் திருமணம் செய்து வாழ்கிறான்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய நரேந்திரன் என்பவன் (இவன் சங்கரின் நண்பன்) இவற்றை அறிகிறான். வெண்ணிலா ‘தன்னுடைய காதல் உண்மைக்காதல் எப்படி நான் வேறு ஒருவரைத் திருமணம் செய்ய முடியும்’ என்ற மனப்போராட்டத்துடன் வாழ்கிறாள். ஆனால் நரேந்திரனின் கருத்துக்கள் வெண்ணிலாவைப் புரிந்து கொண்ட தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. இதனால் வெண்ணிலா நரேந்திரனைத் திருமணம் செய்யச் சம்மதம் தெரிவிக்கிறாள்.
இவ்வாறாக> அவள் கண்ணகி இல்லை> சலனம்> அவளும் இவளும்> இளவேனில் மீண்டும் வரும் ஆகிய நான்கு கதைகளையும் திருமணம்> மற்றும் காதல் சார்ந்த வகைப்பாட்டுக்குள் அடக்க முடியும்.
தாட்சாயணியின் இந்தக் கதைகளின் பலமாக நான் கருதுவது சமகால ஈழத் தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் யதார்த்தமாகப் பதிவு பெறுவதைத்தான். இந்நிலை, கதைகள் பற்றிய நம்பகத் தன்மையை சாதாரண வாசிப்புள்ள வாசகர் மட்டத்திற்கும் எடுத்துச் செல்கின்றது. இது மிக முக்கியமானது.
கதை சொல்லலில் இலாவகமான ஒரு நடையை தாட்சாயணி கையாள்கிறார். கதைகள் வாசகரை கதையோடு ஒன்றச் செய்கின்றன. கதையைப் படிக்கும் போது இது நாம் கேள்விப் பட்ட கதையாக இருக்கிறதே என நினைத்து கதிரையின் விளிம்பில் இருந்து படித்து விட முடிகிறது. அதனுள்ளும் கதை நகர்வில் காட்டுகின்ற ஆர்வம் அதிகமும் பாத்திர உரையாடலுக்கு ஊடாகவே வெளிப்படுகின்றது. தாட்சாயணியின் கதைகளில் ஒப்பீட்டளவில் இது அதிகம். (இதில் வேறுபட்ட கருத்தும் உள்ளது) அவ்வாறு வெளிப்படும் போது கதையோட்டத்துடன் மிக நெருக்கமாக வர முடிவதும் இந்தக் கதைகளின் சிறப்பு எனலாம்.
அடுத்து பெண்கள் பற்றிய இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்பு எப்படியிருக்கிறது என்பதனை பல கதைகளில் வெளிப்படுத்தி விடுகின்றார். இடப்பெயர்வின் காரணமாக கணவன் வன்னியில் குண்டடிபட்டுத் தனித்துப் போக அவனைத் தேடித் தனது உறவினர் ஒருவருடன் செல்லும் பெண்ணை (வெளியில் வாழ்தல்) அவனுடன் ஓடிப்போய்விட்டதாக கதைகட்டி அவளின் குழந்தையின் காதில் விழும்படி கதைக்கும் சனங்கள் பற்றிய சித்திரிப்பு இவற்றுக்கு இன்னோர் எடுத்துக்காட்டாகும். இதேபோல் பெண் பற்றிய கதைகள் மட்டுமல்லாமல் இவரின் வேறு கதைகளிலும் இந்தப் பண்பினைக் காணமுடியும்.
இந்தக் கதைகளில் எல்லாம் பெண்களின் மீது தமது அதிகாரத்தையும் அடக்குமுறையையும் பிரயோகிப்பவர்களாகவே ஆண்கள் சித்தரிக்கப்படுகின்றனர். அதே நேரம் பெண் அந்த அடக்குமுறையினுள் இருந்து வெளியே வரமுடியாதவளாக> அதிகமும் மற்றவர்களுக்காகத் தன்னைத் தியாகம் செய்பவளாக இருப்பதனை எடுத்துக் காட்டுகின்றார்.
ஆனால் எல்லா நிலைகளிலும் பெண் அவ்வாறு அடங்கி;ப் போகின்றவளாக இல்லாமல் தன்னைப் பற்றிச் சிந்திப்பவளாகவும் இருக்கின்றாள். திருமணம்தான் என் வாழ்வைச் சமப்படுத்துமானால் எனக்குத் திருமணமே தேவையில்லை என வாழ்கின்ற பெண்ணை
‘உன் வரைக்கும் ஒரு கல்யாணம் என் உள்ளத்தை சமப்படுத்தி விடும் என்று யோசிக்கிறாயோ?’
என்று கேட்பதாக ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்றார். அதே நேரம் சூழலைப் புரிந்து கொண்டு மிகப் புத்திசாலித்தனமாகச் செயற்படும் பெண்களையும் நிலைநிறுத்துகின்றார். அவள் கண்ணகி இல்லை என்ற கதையில் வரும் பெண் பாத்;திரம் அற்புதமான சித்திரிப்பு.
இவ்வாறாக தாட்சாயணி பெண் சார்ந்த கதைகளில் பெண்கள் இந்தச் சமூகத்தில் எதிர்நோக்குகின்ற அடக்குமுறைகளையும் துயரங்களையும் யதார்த்தமாகச் சித்திரிக்கின்றார். இவற்றை ஒரு பெண் படைப்பாளியாலேயே பதிவு செய்ய முடியும் என்பதற்கு இந்தக் கதைகள் ஆதாரமாகத் திகழ்கின்றன.
90 களின் பின்னரான ஈழத்து இலக்கியப் போக்கில் முக்கியமான ஒரு பெண் படைப்பாளியை அடையாளங் காட்டுவனவாகவே இந்த இரண்டு தொகுப்புகளும் அமைந்துள்ளன. புதிய களங்களையும் புதிய கதைகளையும் புதிய உத்திகளையும் நோக்கி தாட்சாயணி தொடர்ந்தும் பயணிக்க வேண்டும். அப்போது வடிவச் செழுமையும் பெண்களின் உணர்வுநிலைகளை மேலும் ஆழமாகப் பதிவுசெய்யும் பெண்மொழியுடன் கூடிய கதைகளும் உருவாகுவதற்கு வாய்ப்பு ஏற்படும். அந்த எல்லைகளை நோக்கி தாட்சாயணி நகரும் போது எங்கள் தமிழ் அனுபவங்கள் உலகப் படைப்புகளுக்குச் சென்று சேரும் ஒரு வாய்ப்பையும் வழங்கக்கூடும்.
நன்றி :- ஜீவநதி இரண்டாம் ஆண்டு நிறைவு மலர்> வைகாசி ஆனி 2009> பதிவுகள் இணைய இதழ்.
No comments:
Post a Comment