- சு. குணேஸ்வரன்
ஏவாளின் புன்னகைக்குள் ஒளிந்திருப்பது உண்மையில் புன்னகையே அல்ல, அனலாய்த் தெறிக்கும் வார்த்தைகள் என்பதை ஈழக்கவியின் இக்கவிதைத் தொகுப்பைப் படிப்போர் நிச்சயம் புரிந்து கொள்வர். 'இன்றைச் சூழலின் நெருக்கடிகளும், நெருக்கடிகளிலே அமிழ்ந்துபோய்விடாத திமிறல்களும் உணர்வுகளும் எதிர்வினை கொள்கிற ஒரு சமூகத் தேவையை நமக்குத் தந்திருக்கின்றன.' (கவிதையெனும் மொழி) என்கிறார் தி.சு நடராசன். அவ்வாறான ஒரு திமிறலையும் எதிர்வினையையும் இக்கவிதைத் தொகுப்பில் அவதானிக்கமுடிகிறது.
2015 இல் வெளிவந்த 'ஏவாளின் புன்னகை' அப்போதைய சமகாலப் போக்கைக் காட்டி நிற்கின்றது. ஒரு படைப்பு என்பது அதன் சமகாலத் தன்மையாலும் படைப்பாளியின் அகப்புற அனுபவங்களாலும் கட்டமைவதை பலரும் அறிவர். அந்த அடிப்படையில் அதிகார வர்க்கத்தினரின் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடுகளையும் போலிமுகங்களையும் கேள்வி கேட்பனவாக இத்தொகுப்பின் கணிசமான கவிதைகள் அடங்கியுள்ளன. இயற்கை, அன்பு, காதல், மானிடநேயம் ஆகியவற்றையும் இத்தொகுப்புக் கொண்டிருந் தாலுங்கூட அதன் சமூகப் பார்வையால் கவனத்திற்குரியதாக அமைகின்றது.
இயற்கை மீதான ஈடுபாடும் அதனைத் தன்னுணர்வுக் கவிதைகளில் ஏற்றிவிடும் கவித்துவமும் ஈழக்கவிக்கு மிக நன்றாகக் கைவந்து விடுகிறது. 'கண்களுக்கு இனிப்பு ஊட்ட', 'கவிதையான கவிதைகள்' முதலானவற்றில் இயற்கையை கவித்துவமாக இணைத்து விடுகின்ற அம்சத்தினைக் கண்டுகொள்ள முடிகிறது.
'மின்னலாய்ச் சிரித்த வானம்
மறைத்து வைத்திருந்த கவிதைகளைக்
கொட்டத் தொடங்கியது.'
என்ற வரிகளை இங்கு எடுத்துக் காட்டலாம். மற்றுமோர் இடத்தில்
'வைகறைக் கூதலைத் துரத்த
வெயில் பால் அருந்தியவாறு
பனியில் முகம் கழுவிக் கொண்டிருக்கும்
பூக்களோடு பேசிக் கொண்டிருந்தோம்.'
என்று நவீன கவிதையின் உத்திகளோடு அழகாகச் சொல்லுவார்.
காதல், அன்பு முதலான கவிதைகள் உள்ளத்தை வருடியதுபோன்ற உணர்வினை ஏற்படுத்துகின்றன. தொகுப்பின் இறுதியாக உள்ள தொடர்கவிதையிலும் இந்த உணர்வினைத் தரிசிக்க முடிகின்றது. தாயை இழந்த பின்பும் அந்த அன்பின் ஈரம் ஆறாத நிலைமைகளை
'நேற்று
உம்மாவின் அடக்கஸ்தலத்திற்குப் போனேன்
அங்கு ஒரு மரம்
அந்த மரத்திலுள்ள ஒவ்வொரு இலையும்
உம்மாவின் விழிகளாய்ப் பேசின
உம்மாவின் பாசமொழியை சொல்ல
ஏது வரிவடிவம்.'
கவிஞரைப் பெரிதும் அலைக்கழிக்கும் செயல்கள் கவிதைகளாக இங்கு பதிவாகியுள்ளன. அதிகாரத்தின் ஊடாக மக்களை அவலங்களுக்கு உள்ளாக்குபவர் களையும் போலி முகங்களுடன் பொய்யான வார்த்தைகளை உதிர்ப்போரையும் விஷம், சாத்தான், எமன், பேய்கள், ஊத்தை வார்த்தை முதலான சொற்களின் ஊடாக சில கவிதைகளில் மீள மீள எடுத்துக் காட்டுவார். இவ்வார்த்தைகளை உதிர்க்க நாங்கள் விரும்புவதில்லை. ஆனால் அவற்றைக் கவிதைகளில் கவிஞர் கொண்டு வரவேண்டியதன் அவசியத்தை வாசகர் நன்கு புரிந்து கொள்வர்.
'பறந்து பழகிய ஒரு பறவையின் இறகுகளில்
தீ மூட்டுதல்போல
நடுக்கடலில் ஒரு கப்பல்
தலைகீழாய் கவிழ்தல்போல
எல்லாம் எரிந்து
ஒரு பிடி சாம்பலோடு இருக்கிறேன்.'
என்று மானிட வாழ்வின் அலைக்கழிவினால் ஏற்பட்ட இழப்பினையும் நினைவுபடுத்துவார்.
வானப்பூனை, நினைவுமழை, மனச்சிற்றெறும்புகள், நிலாப்பால், கற்பனை விமானம், கண்ணென்ற கடல்; முதலான சொற்சேர்க்கைகள் புதிய அர்த்தத்தைத் தருவனவாக அமைந்துள்ளன. இவ்வாறான எளிமையான வார்த்தைகளில் இருப்பன எளிய மாந்தர்களின் அர்த்தம் பொதிந்த வாழ்வு அவலமாகிச் சிதைந்து போன வாழ்வின் வலிகளே.
'இரவு ஒரு கறுப்பு ஆட்டுக்குட்டியாய்
துள்ளித் துள்ளி ஓடிக் கொண்டிருந்தது.'
என்று மிக அழகியலுணர்வோடு கவிதை சொல்பவருக்குள் இவ்வளவு கோபமும் இருக்குமா? என்ற கேள்வி எழுவது நியாயமானதுதான். அதற்கு அவரே விடை கூறுவதுபோல் 'கோபம்' என்று தலைப்பிட்ட கவிதையிலே பதிவு செய்கிறார்.
'இரவு முழுக்க நிலவு சொன்னது
என் கோபத்தைக் குறைக்குமாறு
நான் சொன்னேன்
பிழைகளால் மட்டுமே
பிழைப்பு நடத்துபவர்களைக் காணும்போது
கோபம் தானாகவே பத்திவிடுகிறதே.'
விஷம்கொண்ட பாம்புகளைகளைக் கண்டு ஒதுங்குவதுபோல சில மனிதர்களைக் கண்டு ஒதுங்கவேண்டியுள்ளது. ஏனெனில் அவர்கள் கோடி பாம்புகளால் ஆனவர்களாக கவிஞருக்குத் தெரிகின்றனர்.
மற்றவர்களின் உணர்வுகளை விற்று தங்கள் சுயநல ஆசைகளைத் தீர்த்துக் கொள்பவர்கள் தங்களை மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்வதற்கு அருகதையற்றவர்கள் என்பதை பல கவிதைகளில் வெளிப்படையாகவே பேசிவிடுகிறார். இவர்கள் மீதான கோபம் இரட்டிப்பாகிவிடுகின்ற சந்தர்ப்பங்களில் வார்த்தைகளும் மிகக் கடுமையானவையாக அமைந்துவிடுகின்றன. 'ரோஷ நரம்பை எடுத்தல்' என்ற கவிதையின் தலைப்பே மிக ஆக்ரோசமானதாக இருக்கின்றது. 'வாயால் சேறு பூசுதல்' என்ற கவிதையில்
'அரவங்களாய் இருந்த பொய்கள்
மாணிக்கங்களைக் கக்கின
வீடு முழுக்க வாக்குறுதிகளால் நிறைந்தன.'
சமகாலப் போக்கு, பொய்மையையும் போலியையும் தோலுரித்தல், அதிகாரத்தின் கைகளில் சிக்கி அவலப்படும் மாந்தரின் எண்ணங்களை வெளிப்படுத்துதல், அன்பிலும் காதலிலும் அகமகிழ்தல், இயற்கையின் மோகத்தில் லயித்தல் முதலான அம்சங்களைக் கவிதைகளின் பாடுபொருள்களாகக் கொண்டு எளிமையும் ஆழ்ந்த உணர்வும் கொண்ட வார்த்தைகள் அமையப்பெற்று நவீன கவிதையின் அழகியலோடு வெளிவந்துள்ள ஈழக்கவியின் 'ஏவாளின் புன்னகை' ஈழத்துக் கவிதை வரலாற்றில் பேசப்படவேண்டிய தொகுப்பாகவே இருக்கும் எனலாம்.
ஜீவநதி 261, ஏ.எச்.எம் நவாஸ் சிறப்பிதழ், 2025.