Monday, January 24, 2022

நந்தினி சேவியர் இல்லாத ஈழத்து இலக்கிய உலகு

 சு.குணேஸ்வரன்



“அதீத கற்பனைகள், அற்புதமான மனிதர்கள் பற்றியெல்லாம் என்னால் சிந்திக்க முடிவதில்லை. எனது ஜன்னல்களைச் சாத்துவதற்கு நான் துணியமாட்டேன். எனது ஜன்னல்களை அகலத் திறந்து வைத்துள்ளேன்.” என்று கூறியவர் நந்தினி சேவியர். அவர் பேசுவதைப்போலவே எழுதியவர்; எழுதியதைப் போலவே வாழ்ந்தவர்.

தே.சேவியர் என்ற இயற்பெயர் கொண்ட நந்தினி சேவியர் 25.05.1949 இல் மட்டுவில் சாவகச்சேரியில் பிறந்தார். பெற்றோர் தேவசகாயம் றோசம்மா. தகப்பன் வழி உறவு அல்வாய், தாய் வழி உறவு மட்டுவில். திருமணம் செய்தது திருகோணமலை. தனது வாழ்நாளின் முற்பகுதியை அல்வாய்க் கிராமத்திலும் பிற்பகுதியை திருகோணமலையிலும் செலவு செய்தவர். கவிதை, சிறுகதை, நாவல், பந்தி எழுத்து, இலக்கியச் செயற்பாடு, அரசியல் சமூகச் செயற்பாடு ஆகியவற்றில் ஈடுபட்டவர்.

பாடசாலைக் காலத்தில் மட்டுவில் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திருஇருதயக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார். பின்னர் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி (1969-1970), கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் தொழிற்கல்வியைப் பெற்றார். தட்டச்சும் பயின்றார். வேலை தேடுகின்ற காலங்களில் யாழ்ப்பாண அச்சகத்தில் சிலகாலம் பணி புரிந்துள்ளார். யாழ் கஸ்தூரியார் வீதியில் இயங்கிய வானொலி திருத்தகத்தில் முகாமையாளராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் அரச திணைக்களத்தில் எழுதுவினைஞராகத் தொழில்புரிந்து 2009 இல் ஓய்வுபெற்றார். பிற்காலங்களில் வவுனியாவில் இயங்கிய அரசசார்பற்ற தொண்டு நிறுவனத்திலும் பணிபுரிந்து உள்ளார். 1974 கால அரசியற் சூழலில் வேலைக்காக அவலப்பட்ட இளைஞர்களில் ஒருவனாக இருந்தபோது பயணத்தில் முடிவில் (அலை), நீண்ட இரவுக்குப் பின் (தாயகம்) ஆகிய கதைகளை எழுதியிருந்தார். அந்த இரண்டு கதைகளிலும் வரும் பாத்திரம் தானே எனக் குறிப்பிட்டுள்ளார். அவரின் கதைகள் எளிய மனிதர்களின் பாடுகளைக் கூறுவன. நியாயத்தைக் கோருவன. வாழ்க்கையில் எதிர்கொண்ட நெருக்கடிகளை வெளிப்படுத்துவன. மானிட நேயத்தை முன்னிலைப்படுத்துவன.

 “நந்தினி சேவியரின் கதைகள் ஆயிரத்தில் ஒருவரான அற்புதத் தனியாள் ஒருவரைப் பற்றியோ, அவருடைய விசித்திர குணாதிசயங்களைப் பற்றியோ பேசிவிட்டு நிறுத்திக் கொள்ளும் தன்மையை உடையன அல்ல. கால ஓட்டத்திலே இடையீடின்றி மாறிக் கொண்டிருக்கும் வாழ்நிலைகளின் இயக்கத் திசைகளை நுணுக்கமாக நோக்குவதற்கு நமக்கு உதவி செய்யும் வல்லமை வாய்ந்த கலைக் கருவிகள் அவை. அதனாலேதான், இந்தக் கதைகளை வியக்கவைக்கும் சாதனைகளாக நாம் இனங் காண்பதில்லை. நமது அநுபவ விரிவுக்கும் வாழ்க்கை விளக்கத்துக்கும் துணைபோகும் திறன் கொண்ட – நயந்து திளைப்பதற்கு ஏற்ற ஏதுக்களை நிறையவே கொண்டுள்ள – சீரிய படைப்புகளென உணர்ந்து போற்றுகிறோம்.” என்று முருகையன் குறிப்பிடுகிறார்.

தனது 9ஆம் தரத்தில் 1966ஆம் ஆண்டு ‘சந்திரோதயம்’ என்ற கையெழுத்துப் பிரதியை தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து வெளியிட்டார். அதில் ‘சுடலைஞானம்’ என்ற கதையை எழுதினார்.


இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் சங்கம், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஆகியவற்றில் அங்கம் வகித்தவர். தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஆரம்பகாலச் செயற்பாட்டாளர்களில் ஒருவர். “பெரும் எதிர்பார்ப்போடு அல்லது பிறரது வற்புறுத்தல் காரணமாக நான் இடதுசாரி சிந்தனை வயப்படவில்லை. என்னை, சூழலின் தாக்கம் நிர்ப்பந்தமாக இடதுசாரி இயக்கத்தின் பக்கம் தள்ளிற்று” என்று கலைமுகம் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு இவரின் கதைகளே சான்றாக இருக்கின்றன. ‘கடலோரத்துக் குடிசைகள்’ என்ற சிறுகதையில்

“நீங்கள் செத்தபிறகு வாற சொர்க்கத்தைப் பற்றிப் பேசிறியள். நாங்கள் இப்ப இருக்கிற நரகத்தைப் பற்றிப் பேசிறம்… அதை மாத்தப் பாக்கிறம்.”

“மரங்களின் வேர்களினருகே கோடரிகள் போடப்பட்டுள்ளன. நற்கனி கொடாத மரங்கள் அத்தனையும் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும். இதுதான் இஞ்சையும் கெதியிலை நடக்கும்.”

என்ற உரையாடல் அவரது எழுத்தின் அரசியலை மிகத் தெளிவாகக் காட்டுகின்றது. இளமைக் காலம் முதல் சமூக நீதிக்காகக் குரல் கொடுத்துக் கொண்டேயிருந்தவர். ஆலய நுழைவுப் போரட்டங்கள் முதலான சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான செயற்பாடுகளில் பங்கெடுத்தவர். சமூகஞ் சார்ந்த பலவற்றில் பங்காளியாக இருந்திருக்கிறார்.  1966ஆம் ஆண்டு அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா மறைந்தபோது அவரின் 31ஆம் நாளில்; செல்லையாவுக்கு ஒரு நினைவு மலரை “மாணவர் வெளியீடு” (தொகுப்பாசிரியர்கள் தர்மகுலசிங்கம், திருநாவுக்கரசு, அல்வை தே. ஷேவியர்) என்ற பெயரில் வெளியிட்டார். க.பொ.த சாதாரணதர வகுப்புக்குச் செல்லமுதலே நண்பர்களுடன் உண்டியல் பணம் சேர்த்து அந்நினைவு மலரை வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1967ஆம் ஆண்டு ‘சூழ்லாம்பு’ என்ற முதற்கதையுடன் சுதந்திரன் பத்திரிகையூடாக தனது இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்தவர். நந்தினி, வ. தேவசகாயம், தாவீது கிறிஸ்ரோ, சகாய புத்திரன் ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார். ஆனாலும் ‘நந்தினி சேவியர்’ என்ற பெயரே இலக்கியக் களத்தில் நிலைபெற்றதாயிற்று.

இவருடைய எழுத்துக்கள் மல்லிகை, தாயகம், அலை, புதுசு, இதயம், ஒளி, சுட்டும்விழி, தூண்டி, கலை ஓசை, பூம்பொழில், வானொலி மஞ்சரி, வாகை, கலைமுகம், தலித், சிறுகதை மஞ்சரி, தொழிலாளி, சுதந்திரன், சிந்தாமணி, வீரகேசரி, தினகரன், தினக்குரல், ஈழமுரசு, ஈழநாடு, மாலைமுரசு ஆகிய இதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் பிரசுரமாயின.

அவர் எழுதிய கதைகள் சொற்பமானவைதான் என்றாலும் ஈழத்துப் புனைகதை இலக்கியத்தில் நின்று நிலைக்கக்கூடியவையாகவே அமைந்தன. “அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்” என்ற சிறுகதைத்தொகுப்பு தேசிய கலை இலக்கியப் பேரவையால் 1993 இல் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில் வேட்டை, அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், ஒரு பகற்பொழுது. நீண்ட இரவுக்குப் பின், பயணத்தின் முடிவில், மத்தியானத்திற்கு சற்று பின்பாக, ஆண்டவருடைய சித்தம், தொலைந்து போனவர்கள் ஆகிய எட்டுக் கதைகள் உள்ளன.

“நெல்லிமரப் பள்ளிக்கூடம்” என்ற சிறுகதைத்தொகுதி கொடகே நிறுவனத்தால் 2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில்  மேய்ப்பன், ஒற்றைத் தென்னைமரம், கடலோரத்துக் குடிசைகள், மனிதம், நெல்லிமரப் பள்ளிக்கூடம், தவனம், எதிர்வு, விருட்சம் ஆகிய எட்டுக் கதைகள் உள்ளன. இரண்டு தொகுப்புகளிலும் வந்த 16 கதைகளையும் ஏனைய கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், நேர்காணல்கள், முன்னுரைகள், நினைவுக் குறிப்புக்கள் ஆகியவற்றையும் சேர்த்து 2014இல்  விடியல் பதிப்பகம் “நந்தினி சேவியர் படைப்புகள்” என்ற திரட்டாகக் கொண்டுவந்தது.

1966 முதல் 1975 வரை எழுதியவற்றுள் 14 கதைகள் அவரின் சேகரிப்பிலிருந்து தவறிய காரணத்தால் தொகுப்பில் சேர்க்கப்படாமற் போயின. 1987 இல் இடம்பெற்ற ஒப்பிரேசன் லிபரேசன் வடமராட்சி நடவடிக்கையின்போது இச்சேகரங்களை இழந்து விட்டதாக நந்தினி சேவியர் எழுதியுள்ளார்.

நந்தினி சேவியரின் நேர்காணல்கள் அவரின் சமூக, அரசியல், இலக்கியச் செயற்பாடுகளை அறிய மிகுந்த ஆதாரங்களாக அமைந்துள்ளன. தலித், சுட்டும் விழி, கலைமுகம் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ள அந்நேர்காணல்களில் தனது இளமைக்காலம்முதல் எழுத்துத்துறையில் ஈடுபட்ட காலம் வரையான அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார்.

குறுநாவல்கள், நாவல்கள் ஆகியவற்றையும் எழுதியுள்ளார். ஆனால் அவை துரதிஷ்டமாகத் தவறிவிட்டன. ஈழநாடு இதழில் 1973-1974 இல் 56 வாரம் தொடராக வெளிவந்த ‘மேகங்கள்’ என்ற நாவலையும் அதே ஆண்டு எம்.டி குணசேன நிறுவனக் காரியாலயத்தில் சிந்தாமணி பத்திரிகைக்கென கொடுத்த ‘கடற்கரையில் தென்னை மரங்கள் நிற்கின்றன’ என்ற நாவலையும் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் தங்கப் பதக்கம் பெற்ற “ஒரு வயது போன மனிதரின் வாரிசுகள்” குறுநாவலையும் 1971 இல் பூம்பொழில் சஞ்சிகையில் வெளிவந்த ‘தெளிவு பிறக்கிறது’ குறுநாவலையும் ஈழமுரசு பத்திரிகையில் 1987இல் “வல்லையிலிருந்து வல்லிபுரம் வரை” என்ற கள ஆய்வினையும் பல்வேறு புறக்காரணிகளால் அவரால் மீட்டெடுக்க முடியவில்லை. தற்போது மேமன்கவி அவர்களின் தேடுதலில் இலங்கை அரச சுவடிகள் திணைக்களத்தில் ‘மேகங்கள்’ நாவலின் 16 அத்தியாயங்களைப் பெறமுடிந்துள்ளது. அதேபோல 1967 இல் வெளிவந்த ‘பெரியமனிதன்’ என்ற சிறுகதையும் தேடிப்பெறப்பட்டுள்ளது.

நந்தினி சேவியர் செய்த மற்றுமொரு மகத்தான பணி கொடகே நிறுவனம் 2019 ஆம் ஆண்டு வெளியிட்ட ‘பிடித்த சிறுகதை’ என்ற ஆவணத் தொகுப்பாகும். சிறுகதைத் துறையின் முதற் தலைமுறையினரில் இருந்து 600 படைப்பாளிகளைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை முகநூலில் எழுதியிருந்தார்.  அதில் தனது கவனத்தை ஈர்த்த சிறுகதைகள் பற்றிய குறிப்பையும் இணைத்துள்ளார். இது ஈழத்துச் சிறுகதைப் படைப்பாளிகள் பற்றித் தேடுவோருக்கு திசைகாட்டியாக அமையக்கூடிய தொகுப்பாகும். அவர் எழுதியவற்றுள் முதல் 200 பேரின் தகவல்கள் அந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

2012இல் மாலைமுரசு பத்திரிகையில் எழுதிய “நாடோடியின் பாடல்கள்” என்ற தொடர்பறுந்த தொடர் 12 தலைப்புகளில் வெளியாகியுள்ளன. இவை விடியல் பதிப்பகம் வெளியிட்ட தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்ற “சிறுகதை மஞ்சரி”யின் 4ஆவது இதழ் தொடக்கம் 14 ஆவது இதழ்வரையிலும் “எழுத்தின் அனுபவங்கள்” என்ற தொடர் வந்துள்ளது. (இத்தொடரை நந்தினி சேவியர் முழுமையாக எழுதி அனுப்பியுள்ளதாக சிறுகதை மஞ்சரி ஆசிரியர் நற்குணதயாளன் மூலம் அறியக் கிடைத்தது) மேற்குறித்த இரண்டு தொடர்களும் நந்தினி சேவியரின் சுயசரிதை என்று சொல்லும் வகையில் அமைந்துள்ளன.

தனக்குப் பிடித்த சில திரைப்படங்களைப் பற்றியும் முகநூலில் எழுதி வந்துள்ளார். இவ்வாறானவையும் மேலும் அவ்வப்போது எழுதிய பத்தி எழுத்துக்களும் நூல்களுக்கு எழுதிய அணிந்துரை முதலானவையும் இன்னமும் தொகுக்கப்படாமல் உள்ளன.

ஒரு நடிகராகவும் தன்னை அடையாளப் படுத்தியுள்ளார். சிங்களச் சகோதரர்களுடன் சேர்ந்து 2015 இல் ‘முகாம்’ என்ற நாடகத்திலும் நடித்துள்ளார்.

இவரின் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பு 1994இல் “சுதந்திர இலக்கிய விருது” பெற்றது. 1994இல் இத்தொகுப்பு “தமிழின்பக் கண்காட்சி விருதி”னையும் பெற்றது. நெல்லிமரப் பள்ளிக்கூடம் என்ற சிறுகதைத் தொகுப்பு 2012 இல் “கொடகே தேசிய சாகித்திய விருதி”னையும் 2012 ஆம் ஆண்டுக்குரிய “அரச இலக்கிய விருதி”னையும் 2012 இல் வடமாகாண “சிறந்த நூல் விருதி”னையும் பெற்றுக் கொண்டது.

தனது எழுத்து முயற்சிகளுக்காக 2008 ஆம் ஆண்டு “தேசிய வாசிப்புமாத எழுத்தாளர் கௌரவ விருதி”னையும் 2011 ஆம் ஆண்டு “கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதி”னையும் யாவர்க்குமாம் தமிழ் அமைப்பின் 2013 ஆம் ஆண்டுக்கான “தமிழ்விழா கௌரவ விருதி”னையும் அதே ஆண்டில் “கலாபூஷணம்” அரச விருதினையும் பெற்றுக் கொண்டார். 2014-2015 ஆம் ஆண்டுக்கான “சங்கச் சான்றோர் விருதி”னை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் வழங்கியது. 2015 ஆம் ஆண்டு கொடகே நிறுவனம் “கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கியது.

நந்தினி சேவியரின் சிறுகதைகள் பற்றி இ. முருகையன் எழுதிய கட்டுரை இலங்கை கல்வித் திணைக்களம் வெளியிட்ட தரம் 10 தமிழ்ப் பாடப்புத்தகத்தில் 2012ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. தற்போது மாணவர் பயிலும் தரம் 11 தமிழ்மொழியும் இலக்கியமும் என்ற பாடப்புத்தகத்திலும் இவரின் ‘வேட்டை’ சிறுகதையின் ஒரு பகுதி யாழ்ப்பாண மொழிவழக்கினை எடுத்துக்காட்டாகப் பயில்வதற்குச் சேர்க்கப்பட்டுள்ளது. இவை தவிர யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவி சிவயோகினி உமாகாந்தன் 2013 ஆம் ஆண்டில் தனது முதுகலைமாணிப் பட்டத்தேர்வின் ஒரு பகுதியாக நந்தினி சேவியரின் சிறுகதைகளை ஆய்வு செய்துள்ளார்.

உள்ளத்திற்கு மிக நெருக்கமானவர். உற்சாகமான செயற்பாடுகளில் முதல் வாழ்த்து அவரிடமிருந்துதான் வரும். சோர்ந்துபோன வேளைகளில் எல்லாம் நம்பிக்கையூட்டக்கூடியவர். இறுதிவரை இலக்கியப் பயணத்திலும் வாழ்க்கைப் பயணத்திலும் ஓடிக்கொண்டேயிருந்தவர். மறைவதற்கு சில நாட்களின் முன் உடல் இயலவில்லை கொஞ்சம் ஓய்வாக இருக்கப் போகிறேன் என்றார். நீண்ட ஓய்விற்குச் சென்றுவிட்டார்.

எதிர்காலத்தில் நூலாக்கம் பெறாத நந்தினி சேவியரின் படைப்புக்களைத் தேடியெடுத்துப் பதிப்பித்து ஈழத்துப் படைப்பிலக்கியத்திற்கு கொடுக்கவேண்டும். “எழுத்துகளால் வாழ்பவன் அன்றோ நான்” என்று சுந்தரராமசாமி கூறியதுபோல் நந்தினி சேவியரும் தனது எழுத்துகளால் தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் நீடித்து வாழ்வார்.

நன்றி : கலைமுகம், இதழ் 73, 2021

---