- சு. குணேஸ்வரன்
அறிமுகம்
புலம்பெயர்ந்தோரின் தமிழ்ப்படைப்புக்களில் ‘அந்நியமாதல்’ என்ற உணர்வுநிலை புனைவிலக்கியங்களிலும் ஆற்றுகைக் கலைகளிலும் கருப்பொருளாக எடுத்தாளப்பட்டு வருகின்றது. 80 களின் பின்னர் இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து இனவுணர்வுச் சூழல்களின் தாக்கத்தால் புலம்பெயர்ந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அவுஸ்திரேலியா மற்றும் கனடாவிலும் பெருமளவான தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் படைப்புக்களில் அந்நியமாதல் உணர்வுநிலை தொடர்ச்சியான பேசுபொருளாகியுள்ளது.
குறிப்பாக; தனிமை, அந்நியமாதல் ஆகிய இரண்டு பதங்களும் இலக்கியத்தில் எடுத்தாளப்படுகின்றன. சமூகத்தால் தனித்துவிடப்பட்டோர் பல்வேறுவிதமான உள - உடல் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதனால் அவர்கள் பாரதூரமான விளைவுகளையும்கூட எதிர்கொள்கின்றனர். யுத்தத்தாலும் குடும்பங்களின் பிரிவாலும், சூழலாலும் தனித்து விடப்பட்டவர்களின் கதைகள் இவ்வாறு அதிகமாக இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த உணர்வு நிலையை தமிழ்ச்சூழல் தொடர்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அசோகமித்திரனின் ‘ஆகாயத்தாமரை’ நாவல், மற்றும் நா. சுந்தரலிங்கத்தின் ‘அபசுரம்’ என்ற அபத்த நாடகம் ஆகியவை சில உதாரணங்கள். இவை குறித்து ஏற்கெனவே தமிழ்ச்சூழலில் உரையாடல்கள் நிகழ்ந்துள்ளன.
இந்தவகையில் ‘திசோ’ என்ற கவிஞரின் தலைப்பில்லாத கவிதையும் புகலிடத்திலிருந்து ஆரம்பகாலப் படைப்புக்களைத் தந்த பார்த்திபனின் ‘தீவுமனிதன்’ சிறுகதையும் இந்த ஆய்வில் கவனத்திற்குட்படுத்தப்படுகின்றன.
“உளவியற் கோளாறுகள், பதற்றம், வேதனை, ஆளுமை நசிவு, தனிமை, நிரானுகூலங்கள், மதிப்பீடுகளின் வீழ்ச்சி, ஆகிய அனைத்தும் அந்நியமாதல் என்ற கூரையின் கீழ் ஒதுங்கிக் கொள்கின்றன.” (எஸ். வி ராஜதுரை,1979, அந்நியமாதல், ப. 2)
என்று அந்நியமாதல் குறித்து எஸ்.வி. ராஜதுரை வரையறை செய்கிறார். வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகள், இயந்திரமயமான உலகில் மனித உறவுகள் இரண்டாம் பட்சமாகி மனிதர்கள் இயந்திரங்களுடன் அல்லாடிக்கொண்டிருக்கும் காலங்கள், யுத்தங்கள், அவை ஏற்படுத்துகின்ற அகதி வாழ்க்கை இவ்வாறானவை அந்நியமாதல் உணர்வு நிலையை ஏற்படுத்துவனவாக கருதமுடிகிறது. இவை சர்ரியலிசப் படைப்புக்களுடன் மிக நெருக்கமாக வருவதனையும் படைப்புக்களின் ஊடாகக் கண்டுகொள்ளமுடியும். குறிப்பாக இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர்தான் சர்ரியலிசப் படைப்புக்கள் தோற்றம் பெற்றதாக கருதப்படுகிறது. புதுக்கவிதைகளும் அதி நவீன வாழ்வுப் பின்னணிக்கு ஊடாக ‘கனவுக்கும் நிஜத்துக்கும் இடையிலான’ இவ் உணர்வை உள்வாங்குகின்றன.
“சர்ரியலிசம் முதல் உலகப் போருக்குப் பின் பிரான்சில் தோன்றியது. போருக்குப் பின் முதிர்ந்து விட்ட முதலாளித்துவ முரண்பாடுகளின் விளைவான கருத்துக்களே இக்கொள்கையின் அடிப்படை. இது பிராய்ட்டின் அகவயக் கொள்கையின் மீது அமைந்தது. பயங்கரக் கனவுகள், உருவெளித் தோற்றங்கள் பயங்கர மனோவிகாரங்கள் என்பன இக்கொள்கையின் இலக்கியக் கருக்களாகும்.” (பேராசிரியர் நா. வானமாமலை, 1999, புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும், ப.15)
என்று சர்ரியலிசம் கொண்டுவருகின்ற படைப்புக்குறித்து கருதப்படுகிறது. இந்த அடிப்படையில் இரண்டு படைப்புக்களும் வெளிப்படுத்துகின்ற உள்ளடக்கத்தினையும் அவற்றின் சிறப்பம்சங்களையும் நோக்கலாம்.
‘திசோ’ வின் கவிதையில் அந்நியமாதல்
“பகலில் வேலை
தேடிய கால்கள்
‘பழிக்குப்பழி’ என
வலித்தன …
வெறித்த சுவர்கள்
அதே முகமென
அலுப்புடன்
முறைத்தன…
எனது நம்பிக்கை
நப்பாசையில்
‘முயற்சி’ என
முனகியது…
கடிதங்கள் ‘எனை பிரி’
என ஒதுங்கிக் கிடந்தன.
அதே கட்டில் “வந்து விட்டாயா?”
என ஏளனம் செய்தது…
மேலும் இல்லாத கண்ணீர்த்துளி
‘ஆழ்ந்த அநுதாபம்’ என
கீழ் விழுந்தது
ஆம்…
மீண்டும் நான் உறங்கப் பார்க்கிறேன்.”
(திசோ,1991, தலைப்பிடாத கவிதை, சங்கமம், 14)
இக் கவிதை விரக்தியுடனும் ஏமாற்றத்துடனும் தனிமையில் வாடும் ஒர் இளைஞனின் அந்நியமயப்பட்ட உணர்வு நிலையினை எடுத்துக் காட்டுகின்றது.
சுவர், கடிதங்கள், கட்டில் கவிஞரைப் பார்த்துப் பேசுவதாகவும்; கால்கள், நம்பிக்கை, கண்ணீர் என்பன அவரை அறியாமலே செயற்படுவதும் கவிஞன் தன்னிலிருந்தும் சூழலிலிருந்தும் எவ்வளவு தூரம் தனித்துப் போய்விட்டார் என்பதும் இக்கவிதையில் வெளிப்படுகின்றது.
அறிவியலிலும் தொழில்சார் துறைகளிலும் மிக முன்னேற்றமடைந்த மேற்குலக நாடுகளில் எல்லாமே பண்டமாக மாறிவிடக்கூடிய சூழலில் அந்நியமாதலின் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கும்.
“கனவுக்கும் நிஜத்திற்கும் இடைப்பட்ட அல்லது இரண்டும் கலந்த ஒரு சர்ரியல் (surreal) தன்மையைக் கொண்டிருக்கிறது. ஒரு இரவில் பசி, விரக்தி, ஏமாற்றம், குற்றஉணர்வு, என்பவற்றால் பீடிக்கப்பட்ட நித்திரையற்ற ஒரு தமிழ் இளைஞன் மறுநாள் பகல் முழுவதும் உணவும் தொழிலும் தேடிக் களைத்து இறுதியில், திரும்பவும் இன்னொரு தூக்கமற்ற இரவை எதிர்நோக்கி வீடு திரும்புவதே இக்கவிதையின் சுழல்போக்கான அமைப்பு. இவ் அபத்த உணர்வை தாக்கத்துடன் வெளிக்கொணர்வதற்கு உதவுவது இக்கவிதையின் மொழிநடை” (சுரேஷ் கனகராஜா, 1998, “ஈழத்துத் தமிழ்க்கவிதையின் அடுத்த கட்ட வளர்ச்சி”, இன்னுமொரு காலடி, ப37)
என்று சுரேஷ் கனகராஜா குறிப்பிடுவது மிகுந்த அவதானத்திற்குரியது. முற்றிலும் மாறுபட்ட சமூக பண்பாட்டுச் சூழலும், வித்தியாசமான வாழ்வநுபவங்களும் இவ்வுணர்வு நிலைக்குக் காரணங்களாக அமைகின்றன. அந்நியமாதல் (alienation) உணர்வு ஏற்கெனவே மேற்குலகில் பேசப்பட்டு வந்த ஒரு கோட்பாடாகும். இது தமிழ்க் கவிதைகளில் மனித வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்குப் பின்னர் அதிகம் பேசப்படுகிறது. குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழருக்கு ஏற்பட்டிருக்கும் வித்தியாசமான வாழ்வுலகும் மேலைத்தேய இலக்கியப் பரீட்சயமும் இவை புலம்பெயர் கவிதைகளில் அதிகம் பதிவுபெறுவதற்கு காரணமாகியுள்ளன.
“இந்த அபத்த உணர்வு தாக்கத்துடன் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் இடம்பெறுவதற்கு காரணம் நாளாந்த வாழ்க்கை மேற்குலகின் சமூக, பொருளாதார நிலைமைகளால் பெருமளவு பாதிக்கப்பட்டிருத்தலாகும். மேலும் இவ் எழுத்தாளர்கள் மேற்கத்தைய இலக்கியத்தில் இடம்பெறும் அபத்த சிந்தனைகளாலும் கலை வடிவங்களாலும் பாதிக்கப்பட்டு இவ்வுணர்வினைச் சித்திரிப்பதில் பரிச்சயமும் பெற்றிருக்கலாம்” (சுரேஷ் கனகராஜா, இன்னுமொரு காலடி, ப 37)
புலம்பெயர் கவிதைகளின் பெருட்பரப்பு பற்றியும் அதன் அடுத்த கட்ட பாய்ச்சல் எவ்வாறாக அமையும் என்பது பற்றியும் சிந்திப்பதற்கு இவ் உணர்வு உள்வாங்கல் அடிப்படையாக அமைவதைப் பார்க்கும்போது, இதுவரை வெளிவந்த மேலும் சில கவிதைகளை இவ்விடத்தில் குறித்துக்காட்டலாம்.
1. கொய்யனின் ‘கீறிப்பிளக்கப்படும் உணர்வுகள்’
2. வ.ஐ.ச.ஜெயபாலனின் மக்பை பறவையுடன் உரையாடல் நிகழ்த்தும் ‘இலையுதிர்
கால நினைவுகள்- 89’
3. தம்பாவின் ‘எங்கும் மானிடம்’
4. சேரனின் ‘எலும்புக் கூடுகளின் ஊர்வலம்’
5. கி.பி.அரவிந்தனின் ‘வளரும் கனாக்கள் துயிலாத நாள்’
மேலும் கற்சுறா, தேவிகணேசன், சுகன், சித்தார்த்த சே’குவேரா (ரமணிதரன்), ஆழியாள், றஞ்சினி ஆகியோரின் கவிதைகளிலும் இவ்வுணர்வுநிலை பேசப்படுகிறது. இக் கவிதைகள் தரும் அனுபவங்கள் எமக்குப் புதியவை. இவற்றை நாம் எதிர் கொள்வதற்குமுன் எமது பாரம்பரிய தமிழ்ப் பண்பாட்டு வாழ்வுக்கும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் சூழல் அமைவுக்கும் இடையிலான இடைவெளியைப் புரிந்து கொள்ளுதல் மிக அவசியமாகும்.
பார்த்திபனின் ‘தீவுமனிதன்’ சிறுகதையில் அந்நியமாதல்
ஜேர்மனியில் வாழும் பார்த்திபன் இலங்கையிலிருந்து 1983 இன் பின்னர் புலம்பெயர்ந்து எழுதத்தொடங்கிய ஆரம்பகாலப் படைப்பாளிகளில் ஒருவர். இவர் எழுதிய ‘தீவுமனிதன்’ என்ற சிறுகதை ஒரு மனிதனின் தனிமையுணர்வினை பிரதான கருப்பொருளாக எடுத்தாள்கிறது.
புலம்பெயர் படைப்புக்களின் உள்ளடக்கத்தில் தனிமையுணர்வினை எழுதுதலும் ஒரு வகைப்பாடாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இச்சிறுகதை தனிமையை மட்டும் பேசவந்தாலும் அதற்குள்ளே முன்வைக்கப்படும் கதைச் சம்பவங்கள் ஊடாக மேலும் பல விடயங்களை ஆழமாக நோக்கமுடியும். ஒருவன் தனிமையை நாடுவதற்கும் அவன் சமூக ஊடாட்டத்திலிருந்து விலகியிருப்பதற்கும் இந்தச் சமூக மாந்தர்களின் செயற்பாடுகளே காரணங்களாக அமைந்துள்ளன என்பதை இக்கதை சுட்டிக்காட்டுகின்றது.
கதையின் அமைப்பைப் பொறுத்தவரையில் ஆரம்பம் மற்றும் முடிவு தவிர்த்து நான்கு தனித்தனிச் சம்பவங்களின் ஊடாக கதை நகர்த்தப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். குறித்த பிரதான பாத்திரம் தொடர்புபடும் சம்பவங்கள், அதன் அனுபவங்கள் தனிமையை நாடுவதற்கு காரணங்களாக அமைந்துள்ளன.
1. சிறுவன் தாயகத்தில் வாழும்போது உறவினரின் சுடுவார்த்தைகளால் தனித்துப்
போதல்.
2. புலம்பெயர்ந்து வாழும்போது கூடஇருந்த நண்பன் வேறு நாட்டுக்கு குடும்பமாகச் சென்றுவிட தனித்துப் போதல்
3. ஒரு பெண்ணின் நட்புக் கிடைத்தும் இறுதியில் தனித்துப் போதல் (அவள் வேறு
ஒருவனைத் திருமணம் செய்தல்)
4. புகலிடத்தில் ஒரு குடும்பத்தினரின் நட்புக் கிடைத்தும் இறுதியில் அவர்களாகவே தவிர்த்து விடுவதால் தனித்துப் போதல்.
ஆகிய நான்கு கட்டங்கள் ஊடாக இக்கதை நகர்த்தப்படுகிறது. இங்கு முக்கியமாக இந்தத் தனிமை சிறுவனாக இருக்கும்போது அவனுக்கு சூழ இருப்பவர்களால் ஏற்படுத்தப்படுவதாக கதையில் கூறப்படுகிறது. நமது சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சமூகக் கொடுமைகள் பல உள்ளன. அவற்றுள் சாதியமும் வர்க்கமும் முக்கியமானவை. மற்றவரை குலத்தின் அடிப்படையிலோ அல்லது அந்தஸ்தின் அடிப்படையிலோ இழிவுபடுத்தி துன்பப்படுத்திப் பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடையும் மனித மனம் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருப்பது ஒரு சாபக்கேடாக உள்ளது. அந்தச் சாபக்கேடுதான் கதாபாத்திரம் இளம் பராயத்திலேயே தனிமையை நாடிச் செல்வதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.
“அப்போது நான் சின்னப்பிள்ளை
வெளியே போய் என்னைப் போலிருக்கும் மற்றவர்களுடன் சேர்ந்து கள்ளன் பொலிஸ் விளையாடினேன். போளை அடித்தேன். கோவில்கட்டித் தேர் இழுத்தேன். இலந்தைப் பழம் பொறுக்கினேன். பிள்ளையார் பந்து எறிந்தேன்.
அவர்களைப் பெற்றோர் எனக்கும் அவர்களுடன் சேர்த்து அன்பு காட்டி உபசரிப்புச் செய்தனர். அவர்கள் வாசலில் நான் தினமும் வரம் கேட்டேன்.
எனக்கும் சில விசயங்கள் பிடிபடும்வரை எல்லாம் உண்மையென்றுதான் நம்பினேன்.
எனது ஏக்கத்தை வைத்து பெரிசுகள் வேடிக்கை பார்ப்பதை உணர எனக்கு நீண்டகாலம் பிடிக்கவில்லை.
எங்கள் தோட்டப்பயிரை மட்டும் வெள்ளாடு மேய்ந்ததாக கதையளந்தார்கள். எங்கள் தோட்டத்திற்கு மட்டும் வேலியில்லையென்று சொல்லிச் சிரித்தார்கள்.
நான் கூசிக் குறுகிப் போனேன்.
இது அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
என்னைப் பிளந்து, கதை பிடுங்கி, தங்களுக்குத் தீனி தேடுவதற்காக என்னை அணைத்து தங்கள் கூட்டுக்குள் எடுத்து வைத்துக் கொண்டு அந்தச் சமூகப் பிராணிகள் ஓங்கி ஊளையிட்டன.
நான் சிதைந்து போனேன்.” (பார்த்திபன், ‘தீவுமனிதன்’)
இந்தச் சம்பவத்திற்குப் பின்னர்தான் அவன் தனக்கு தனித்தீவாக தனது வீட்டின் ஒரு அறையை எடுத்துக்கொண்டு வானத்தைப் பார்ப்பதும் தனியே இருப்பதுமாக தனது பொழுதைக் கழிக்கிறான்.
“பழைய சாமான்கள் போட்டு வைத்திருந்த சின்ன அறைக்குள் எனது கட்டிலைப் போட்டுக்கொண்டேன். கதவைச் சாத்தினேன். இரண்டு யன்னல்களில் ஒன்றைப் பூட்டி ஒன்றைத் திறந்து வைத்தேன். எனது தீவு தயார்” (தீவுமனிதன்)
பின்னர் புலம்பெயர்ந்து சென்றதன் பின்னர் தனிமை தன்னைத் தொடர அனுமதிக்கமாட்டேன். புதிய மனிதர்களையும் புதிய வாழ்வையும் தன்னால் நெருங்கமுடியும் என்று எண்ணுகிறான். இந்நிலையில் அவனுக்கு ஒரு நண்பன் கிடைக்கிறான். அந்த நண்பனுக்கு திருமணமாகி குழந்தை பிறக்கிறது. அந்தக் குடும்பத்தின் அன்பில் நனைகிறான்.
“எனக்குக் குழந்தைகள் பிடிக்கும். மிகவும் மிகவும் பிடிக்கும். குழந்தைகள் உலகத்தில் வாழ எனக்கு இன்னும் பிடிக்கும்.
குழந்தையை எனது முதுகில் ஏற்றி யானையாக்கினேன். அதுக்குச் சிரிப்புக் காட்ட குரங்கானேன். அடி வாங்கினேன். மூத்திரத்தால் நனைந்தேன். அது ஓடி வந்து என்னில் தாவி ஏறும்போது எனக்கு எல்லாம் மறந்து போனது.
என்ன இனிமையான உலகம். அதிசயங்கள் என்னெவெல்லாம் கொட்டிக் கிடக்கின்றன.” (தீவுமனிதன்)
என்று புகலிடத்தில் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தில் அந்த நண்பன் குடும்பமாக வேறு நாட்டுக்குச் சென்றுவிட தனிமைப்பட்டு விடுகிறான். இந்நிலையில்தான்
“இவர்களுக்குத் தெரியுமா எனது தீவைப் பற்றி… அதன் தனிமை பற்றி… அதன் கொடுமை பற்றி… நான் எவ்வளவு கடுமையாகப் போராடி மிகவும் கஷ்டப்பட்டு எனது தீவிலிருந்து தப்பி வந்திருக்கிறேன். இப்போது மீண்டும் அங்கே கொண்டுபோய் விடப்போகிறார்கள். எனது உணர்வுகளுக்கு மொழியில்லை என்பதால்தான் அது யாருக்கும் கேட்கவில்லையா? (தீவுமனிதன்)
“நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்டது எனது தீவு. ஒரு செற்றி, ஒரு கசற்றெக்கோடர், ஒரு புத்தக அலுமாரி, ஒரு யன்னல் இவை மட்டும்தான் இப்போது என்னோடு.” (தீவுமனிதன்)
என்று எழுதுகிறார். இந்நிலையில் மூன்றாவதாக மற்றொரு சம்பவம் நடைபெறுகிறது. இந்த அனுபவங்களுக்குப் பின்பு இனி நான் யாரிடமும் ஏமாறக்கூடாது. யாரிடமும் அன்பு செலுத்தக்கூடாது. மிக அவதானமாக இருக்கவேண்டும் என்று கதாபாத்திரம் எண்ணுகிறது. இந்நிலையில் முதல்முதல் ஒரு பெண்ணின் அன்பு கிடைக்கிறது. ஆனால் அவள் இன்னொருவனைத் திருமணம் செய்துகொண்டு இவனுக்கு வந்து அறிவுரை கூறுகிறாள்.
இதன் பின்னர் மீளவும் தற்செயலாக ஒரு குடும்பத்தினரின் நட்பு கிடைக்கிறது. அந்த நட்பு அவனின் இழந்துபோன காலங்களை மீளவும் கொண்டு வந்து சேர்க்கின்றது. மீளவும் மனிதர்கள், மீளவும் குழந்தைகளின் குதூகலம் கிடைத்துவிடவே இனி எனக்கு தனிமை இல்லை. நான் தனித்தவன் இல்லை. என்னைச் சுற்றி மனிதர்கள் இருக்கிறார்கள் என்று மகிழ்ச்சிடைகிறான். ஆனால் ஒருநாள் அவர்கள்
“எங்களுக்கு ஒன்றுமில்லை. ஆனால் நீ வந்து போவதை தெருவில் கிடக்கிற கண்கள் கவனித்து வாய்கள் தவறாகப் பேசலாம். அதனால்…. என்று அவன் சொன்னபோது நான் திரும்ப துண்டு துண்டாய் உடைந்து போனேன்” (தீவுமனிதன்)
அவன் மனிதர்களுடன் கொண்டிருந்த தொடர்பு அறுந்து போய்விடுகிறது. அதன் பின்னர் நிரந்தரமாகவே யதார்த்த உலகில் இருந்து விடுபட்டு தனது தனித்த தீவுக்குப் போய்விடுகிறான்.
இது தனிமையுடன் மட்டும் சம்மந்தப்பட்டதாக அல்லாமல் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வின் இன்னொரு பக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது. இங்கு தனிமை என்பது அவனால் ஏற்படுத்தப்பட்டதல்ல என்பதும்கூட வெளிப்படுத்தப்படுகிறது. அது சகமனிதர்களாலேயே ஏற்படுத்தப்படுகிறது.
இங்கு மேலும் குறிப்பிடக்கூடிய அம்சம் இச்சிறுகதையின் மொழி மற்றும் அதன் கதையோட்டம். பொதுவாகவே பார்த்திபனின் கதைமொழி மிக எளிமையானது. சிக்கலில்லாதது. அது ஈழத்திற்கேயுரிய தனித்துவத்துடன் வெளிப்படக்கூடியது. இச்சிறுகதையிலும் அது வெளிப்படுகிறது.
தவிரவும் கதையோட்டத்தில் இருக்கும் சூழல் பற்றிய வர்ணனையும் குறிப்பிடக்கூடியதாகும். சிறுவனாக தாயகத்தில் வாழ்ந்தபோது அந்த நிலம், வீட்டு அறையின் நிலை ஆகியவற்றைக் குறித்துக்காட்டுவதிலும் வானத்தையும் மேகத்தையும் அதன் அழகையும் எடுத்துக்காட்டுவதிலிருந்தும் யாருமே வந்துபோகாத தனித்த அறையை ஒரு தீவாக உருவகிப்பதுமாகிய சம்பவங்களை இச்சிறுகதையில் மிகக் கட்டிறுக்கமான மொழியில் கூறுகிறார்.
“அழகான வானம். நீல நிறம் அதன் கீழாக வெண் பஞ்சு மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன. அந்த மேகங்கள் சில நேரங்களில் சில உருவங்களாக மாறும்.”
“எனக்கு ஆகாயம் பிடித்தது. அதன் நீலம் மிகவும் பிடித்தது. ரசித்துப் பார்த்தேன். பார்த்துக்கொண்டேயிருந்தேன். பள்ளிக்கூடம் போய் வந்து மிச்ச நேரங்களில் எனது தீவுக்குள் வந்து பார்த்துக்கொண்டிருப்பேன். வெளியே எங்கும் போவதில்லை. யாரையும் சந்திப்பதில்லை. எனக்குத்தான் எனது தீவு இருக்கிறதே” (பார்த்திபன், 2001, “தீவு மனிதன்”, கண்ணில் தெரியுது வானம்)
முடிவுரை
எமது மரபின்படி ‘தனித்திருத்தல்’ என்பது அதிகம் இல்லை. சங்க இலக்கியங்களும் கூட தலைவன் வேறு புலத்திற்கு தொழில் நிமிர்த்தம் சென்றாலும் குறிப்பிட்ட பருவ காலத்திற்கு இடையில் திரும்பி வருவேன் என்று வாக்களித்துவிட்டே செல்கிறான். பாலைநில ஒழுக்கமும் தலைவனுடன் தலைவி உடன்செல்லலையே குறிப்பிடுகின்றது. எமது மரபின்படி திருமணம் முடித்த பெண்@ கணவன் வெளியூர் சென்றவிடத்து அவளின் தாய் தகப்பன் வீட்டில் தங்குகிறாள். ஆரம்பத்தில் இருந்த தாய்வழிச் சமூக அமைப்பும், கூட்டுக்குடும்ப அமைப்புக்களும் கூட எப்போதும் தனித்திருத்தலை விரும்பியனவாக இல்லை.
கூட்டுக்குடும்பம் பின்னர் உடைந்து கருக்குடும்பமாகியபோதும், எமது உறவுமுறைகளும் ஊடாட்டமும் பாரம்பரிய சடங்குகளிலும், விழாக்களிலுமே நீடித்திருந்தன. இது ஈழத்தில் இடம்பெற்ற உள்நாட்டு இடப்பெயர்வுகளுடன் மேலும் மாற்றமுறத் தொடங்குகிறது.
ஆனால் தற்கால வாழ்வு முற்றிலும் மாறிவிட்டது. காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. கூடவே மனிதனும் சேர்ந்து ஓடவேண்டியவனாகவே உள்ளான். அதுவும் வளர்ச்சியடைந்த மேற்குஐரோப்பிய சமூகத்தில் மனிதன் இயந்திரமாகி விடுகின்றான். இன்றைய உலகமயமாக்கல் இதனை இன்னமும் வேகமாக்கியிருக்கின்றது. உலகமயமாக்கல்; ‘கலாசாரத்தை’ பண்டமாகப் பார்க்கத் தொடங்கி விட்டதால் மனித உறவுகளும் உணர்வுகளும் பின்தள்ளப்படுகின்றன. இந்த வாழ்வுக்குள் அமிழ்ந்து போகின்ற நிலையைத்தான் மேற்குறித்த இரண்டு படைப்புக்களும் எடுத்துக்காட்டுகின்றன.
மேலே எடுத்துக் காட்டப்பட்ட கவிதையினையும் இப்பின்னணியிலேதான் நோக்கமுடியும். இக்கவிதையினை மேலைத்தேய சமூகத்தில் உள்ள அபத்த உணர்வுக்கு ஒப்பானதாக சுரேஷ் கனகராஜா கருதுகிறார்.
“இக் கவிதையில் புதிய உணர்வுகள், மனோநிலைகள் இடம்பெறுவதும் இதனால் கவிதை அமைப்பிலும், மொழிநடையிலும் மாற்றங்கள் ஏற்படுவதும் கவனிக்கப்பட வேண்டியவை. உதாரணமாக, அந்நியமயப்படுத்தலைப் பற்றி (alienation) கால்மார்க்ஸ் முதல் ஜான்போல் சார்த் வரை பலரால் பேசப்பட்டு நவீன கைத்தொழில் மயப்பட்ட நாடுகளில் அனுபவிக்கப்படும் அபத்த உணர்வு விசேஷமானது, பிரத்தியேகமானது. தமிழ் இலக்கியத்திலும் அபத்தம் இடம்பெற்றிருந்தாலும் எமது சமூக பண்பாட்டு நிலைமைகள் மேலை நாட்டு இலக்கியத்தில் பேசப்படும் அபத்தத்திற்கு இடம் கொடா என்றே கூறவேண்டும். எனவே இவ்வுணர்வு சிலவேளைகளில் வலிந்து புகுத்தப்பட்டதாக எம் இலக்கியத்தில் தென்படுவதுண்டு. ‘அபசுரம்’ போன்ற நாடகங்களில் இடம்பெறும் அபத்தம் எமது கலாசார நிலைமைகளுக்கேற்ப மாற்றமடைந்ததாக நல்ல தீர்வுடன் முடிவடைகிறது. ஆனால் மேற்குலகில் பேசப்படும் அபத்தம் கடவுள் இயற்கை, பிற மனிதர், அயற்சமூகம் என்பவற்றில் இருந்து முற்றாக பிரிவுபட்ட மனிதனின் (ஏன் தனக்குள்ளேயே பிளவடைந்து நிற்கும் மனிதனின்) ஒரு அநாதரவான நிலையை கொண்டிருக்கும். இந்தத் தன்மை இதே தாக்கத்துடன் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்திலேயே முதன்முதல் தமிழில் இடம்பெறுகிறது.” (சுரேஷ்கனகராஜா, 1999, “ஈழத்தமிழர் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் கவிதை வடிவம் பற்றிய சில சிந்தனைகள்”, பண்பாடு, மலர் 9, ப 18)
இந்த நிலையிலேயே இதுபோன்ற கவிதைகள் உணர்வு உள்வாங்கலில் புதிய ஒரு பரிணாமத்தை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் ஏற்கெனவே இருந்தான கவிதை வடிவத்திலேயே இப்பொருட்பரப்புக்கள் உள்வாங்கப்படுகின்றன.
எனவே இரண்டு படைப்புக்களும் மனிதர்களிடமிருந்து மனிதர்கள் அந்நியமாதலையே குறிக்கின்றன. ஒருவருக்கு மனிதர்கள் மட்டுமல்லாமல் சூழலும்கூட அந்நியப்படுகிறது. மற்றவருக்கு மனிதர்களும் அவர்களின் உணர்வுகளும் வேண்டாதவையாக மாற சூழலும் தனிமையும் மட்டுமே விருப்புக்குரியவையாக மாறுகின்றன. இதிலிருந்து தனிமனிதன் ஒருவனின் தனிமைக்கும், அவன் மற்றவர்களிடமிருந்து அந்நியமாகி இருப்பதற்கும் மனிதர்களின் செயற்பாடுகளே காரணங்களா அமைந்திருக்கின்றன என்று கருதமுடிகிறது. உலகம் இயந்திரத்திற்குள் மூழ்கிப்போனதால் மனிதர்களின் உணர்வுகள் கவனிப்பாரற்றுப் போகின்றன. இந்நிலையில் மனிதர்களை நோக்கி, மனித உணர்வுகளை நோக்கி, மானிடவியற்கல்வியை நோக்கி மனிதர்கள் நகரவேண்டிய தேவையினை இப்படைப்புக்கள் வலியுறுத்தி நிற்கின்றன.
(நன்றி : ‘ஞானம்’ ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் - சிறப்பிதழ் 2014 டிசம்பர்)
--