கலாநிதி சு. குணேஸ்வரன்
அறிமுகம்
கிராமத்தின்
மிக முதிர்ந்த வயதுடைய பெரியவர்களைக் காணும்போதெல்லாம் அவர்களுடைய அன்றைய உணவுப் பழக்கவழக்கங்களும்
உளவடுவற்ற வாழ்வியல் அம்சங்களும் ஆரோக்கியமான வாழ்க்கையைக் கொடுத்திருக்கின்றன என்று எண்ணத்தோன்றுகிறது. அது
உண்மைதான் போலும். ஒரு தலைமுறை, ஓடித் திரிந்து வளர்கின்ற பருவத்தில் யுத்தமும் சேர்ந்து
வளர்ந்ததால் ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இச்சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாமல்
குந்தவையின் கதைகள் நினைவுக்கு வருகின்றன.
தமிழ்ச் சமூகத்தின் சிதைந்துபோன வாழ்வையும் உளநெருக்குவாரங்களையும்
குந்தவையின் அதிகமான கதைகள் பதிவு செய்திருக்கின்றன. “தமிழ்ச் சமூகத்தை ஆட்டிப் படைக்கும்
அவலங்கள், அவசரங்கள், விசனங்கள், விக்கினங்கள், துக்கங்கள், துயரங்கள் ஆகியவற்றிலிருந்து
தம்மை அந்நியப்படுத்திக் கொள்ளாமல் அதில் வாழும் ஒரு உயிர்ப்புள்ள சாட்சியாக கதைகளை
நகர்த்துகின்றார். ஈழத்தின் சமகால அவலங்களை, அவற்றின் குறியீடுகளை அல்ல. அவற்றின் பல்வகைத்தான
கொடூர அழிபாடுகளை அவர் கதைகள் பதிவு செய்கின்றன. உலகப் போர்களுக்குப் பின்னர், போர்க்கால
அவலங்களும், அழிவுகளும் இடப்பெயர்வுகளும் இந்தக் கதைகளிலேதான் மிகுந்த அவதானிப்புடன்
சித்திரிக்கப்பட்டுள்ளன.” (யோகம் இருக்கிறது, முன்னீடு) என்று எஸ்.பொ கூறுவதில் மிகையில்லையென்பதை
குந்தவையின் சிறுகதைகளை ஒருசேரப் படிப்பவர்கள் உணர்ந்து கொள்ளமுடியும்.
குந்தவை தனது 22ஆவது வயதில் ‘சிறுமை கண்டு பொங்குவாய்’
என்ற முதற்சிறுகதையை ஆனந்தவிகடனில் (1963) எழுதினார். இம் முத்திரைக்கதையுடனே எழுத்துலகத்திற்கு
அறிமுகமானார். கல்கி, ஆனந்தவிகடன், குமுதம், கலைமகள் என்று இவரின் வாசிப்புப் பழக்கம்
தொடர்ந்திருக்கிறது. குந்தவை என்ற புனைபெயரைப் பூண்டதற்கு பொன்னியின் செல்வன்தான் காரணம்
எனக் கூறும்போது, “வரலாற்றில் எப்படியோ தெரியாது. ஆனால் கல்கி; சோழச் சக்கரவர்த்தி, முதன் மந்திரி எல்லோரும் ஆலோசனைக்கு
அணுகும் ஒரு ஆளுமை நிறைந்த அதேநேரம் அமைதியான பாத்திரமாகக் ‘குந்தவை’யைப் படைத்துள்ளனர். விகடனுக்கு என ஒரு கதை எழுதிவிட்டு
புனைபெயரைத் தேடிய பொழுது இப்பெயரே என் முதல் தெரிவாயிற்று” (2007, கலைமுகம் நேர்காணல்)
என்று தன் புனைபெயருக்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் “வீரகேசரி சிறுவர் மலரில் ஒரு குட்டி நீதிக்கதை
நான் எழுதியது வெளிவந்தது. அதுதான் என் முதல் ஆக்கமாயிருக்கலாம். தொடர்ந்து பத்திரிகை
சிறுவர் மலருக்கு அவ்வப்பொழுது எழுதியுள்ளேன். தினகரனின் உருவகக் கதைப் போட்டிக்கு
நான் அனுப்பியது போட்டிக் கதைகள் பிரசுரித்து முடிந்தபின் தனியாக வெளிவந்தது. அந்தக்
காலத்தில் தினசரி தினகரனின் இரண்டாம் பக்கத்தில் கடைசி இரண்டு ‘கொலம்’கள் நீள, இளங்கீரனின்
‘நீதியே நீ கேள்’ போன்ற தொடர்கதைகள் பிரசுரமாகி வந்தன. யாழ்ப்பாண மண் வாசனை, யாழ்ப்பாணச்
சூழல், யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் இவற்றைப் படிக்கையில், இதுவரை கல்கியை ஒத்த சஞ்சிகைகளிலேயே
மூழ்கி இருந்த எனக்கு ஒரு வித சந்தோஷம் ஏற்பட்டது.” எனவும் “யாழ் இளம் எழுத்தாளர் சங்கம்
நடத்திய சிறுகதைப் போட்டியில் என் கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது.” என்றும் மேற்படி
நேர்காணலில் குந்தவை குறிப்பிட்டதன் ஊடாக தமிழகச் சஞ்சிகைகளோடு ஈழத்துப் பத்திரிகை
சஞ்சிகைகளை வாசித்த பழக்கமும் பயிற்சியுமே இலக்கிய ஈடுபாட்டுக்குக் காரணமாயின என்பதை
அறிந்து கொள்ள முடிகின்றது.
குந்தவையின் இயற்பெயர் சடாட்சரதேவி.
14.03.1941 இல் பிறந்தவர். பெற்றோர் இராசரத்தினம்
இலட்சுமிப்பிள்ளை. தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டவர். பேரனார்
சி.வீரகத்திப்பிள்ளை. திரைகடல் ஒடித் திரவியம் தேடியவர். பெருவள்ளல். அவர் தாபித்த
பாடசாலையே தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் ஆகும்.
குந்தவை தனது ஆரம்பக்கல்வியை யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை
மகாவித்தியாலயத்திலும் இடைநிலைக்கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் கற்றார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றார். வவுனியா மாவட்டச் செயலகத்தில் திட்டமிடல் பயிற்சியாளராகவும்
அதனைத் தொடர்ந்து புத்தளத்திலும் (முந்தல்) யா/உடுப்பிட்டி
மகளிர் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றி, 1990 ஆம் ஆண்டு விசேட சுயவிருப்பு ஓய்வுத்திட்டத்தின்கீழ்
பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இவரின் சிறுகதைகள் தமிழ்ச்சூழலில் வெளியாகியுள்ளன. ஆனந்த விகடன், கணையாழி, சுவர், உயிர் எழுத்து, ழகரம்,
கனவு, சுதந்திரன், ஈழச்சுடர், அலை, இளங்கதிர், சரிநிகர், சக்தி, மூன்றாவது மனிதன்,
மல்லிகை, ஜீவநதி, தரிசனம், மகுடம், கலைமுகம் முதலான இதழ்களில் மட்டுமல்லாமல் வேறு பல
இதழ்களிலும் சில கதைகள் மீள மீளப் பிரசுரமாகியுள்ளன. இவை தவிர, கூட்டுத் தொகுப்புக்கள்
சிலவற்றில் இவரின் கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இறுதியாக 2022 ஆம் ஆண்டு வெளியாகிய ‘திரைகடல் தந்த திரவியம்’ என்ற பன்னாட்டுத் தமிழ்ச்
சிறுகதைகள் தொகுப்பில் ‘பாதுகை’ என்ற சிறுகதை சேர்க்கப்பட்டுள்ளது.
குந்தவையின் ‘பெயர்வு’ என்ற சிறுகதை ஏ.ஜே கனகரட்னாவினால்
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழகத்தில் வெளிவந்தது. இச்சிறுகதையை இலண்டன் அவைக்காற்றுக்
கலைக்கழகத்திற்கு உடாக பாலேந்திரா நாடகமாக மேடையேற்றினார். குந்தவையின் ‘திருவோடு’
என்ற மற்றொரு சிறுகதையை வின்சென்ட் சவுந்தரம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இவரது முதற்சிறுகதைத் தொகுப்பு ‘யோகம் இருக்கிறது’
2012 ஆம் ஆண்டு சென்னை மித்ர பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இரண்டாவது தொகுப்பு ‘ஆறாத
காயங்கள்’ 2016 இல் பொ. புவனேந்திர ஐயர் அவர்களால் (தொண்டைமானாறு செல்லையா ஐயர் கலாசார
மண்டப வெளியீடு) வெளியிடப்பட்டது.
பருத்தித்துறைப் பிரதேச செயலகம், வடமராட்சி வலயக்
கல்வி அலுவலகம், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகிய அரச திணைக்களங்கள் இவரது
எழுத்துப் பணியைப் பாராட்டிக் கௌரவித்துள்ளன. 2008 ஆம் ஆண்டு ‘வடமாகாண ஆளுநர் விருது’
வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
குந்தவை எழுதிய 35 கதைகளில் ‘யோகம் இருக்கிறது’
தொகுப்பில் 13 கதைகளும் ‘ஆறாத காயங்கள்’ தொகுப்பில் 9 கதைகளும் உள்ளன. ஏனையவை பத்திரிகை
சஞ்சிகைகளில் வெளிவந்தவை. ஆனால் தொகுப்பு வடிவம் பெறாதவை.
நீண்ட கால வாழ்வில் இவர் எழுதியவை மிகச் சொற்பம்.
“தமிழகத்தில் மறைந்த சர்வாகன் போன்று ஈழத்து இலக்கிய உலகில் குறைந்த எண்ணிக்கையில்
சிறுகதைகள் படைத்திருக்கும் குந்தவை, தேர்ந்த வாசகர்கள் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பதற்கு
அவருடைய கதைகளின் கருவும் படைப்பு மொழியும்தான் காரணம்” என்று முருகபூபதி குறிப்பிடுகிறார்.
அக்கதைகளை மீள மீள வாசிக்கும்போது பல்வேறு உணர்வுத் தொற்றுதல்களை அவை ஏற்படுத்தக்கூடியன.
கதைகளின்
பயணவழி
குந்தவை 60களில் எழுத வந்த படைப்பாளி. பேராதனைப்
பல்கலைக்கழகம் உருவாக்கிய எழுத்தாளர்களின் வரிசையில் வைத்து நோக்கத்தக்கவர். 1964 இல்
கலா பரமேஸ்வரனைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு ‘காலத்தின் குரல்கள்’ என்ற சிறுகதைத்தொகுப்பு
பல்கலை வெளியீடாக வெளிவந்தது. க. பரராஜசிங்கம், குந்தவை, எம்.ஏ. சுக்ரி, செம்பியன்
செல்வன், க. நவசோதி, செல்வ பத்மநாதன், செங்கை ஆழியான், சபா ஜெயராசா, கலா பரமேஸ்வரன்
ஆகிய ஒன்பது எழுத்தாளர்களின் சிறுகதைகள் அதில் வந்துள்ளன.
“1960 - 1964 காலகட்டத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில்
கருக்கட்டிய புனைகதைத் துறையின் முயற்சி இன்று ஈழத்து இலக்கியத்தின் அறுவடைகளாக மாறிவிட்டன.
அக்காலகட்டத்தின் வீறுகொண்ட எழுத்தாளர்கள் போன்ற ஒரு படைப்பாளிக் கூட்டம் அதன் பின்னர்
உருவாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது” என்று செங்கையாழியான் ஈழத்து முன்னோடிச் சிறுகதைத்
தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுகின்றார்.
குந்தவையின் எழுத்துக்களை மூன்று காலகட்டங்களாக
வகுத்து நோக்கமுடியும். பல்கலைக்கழக வாழ்வுடன் தொடங்கிய முதலாவது காலகட்டத்தில் எழுதப்பட்ட
கதைகள் அதிகமும் மனிதர்களின் அநீதியான செயற்பாடுகள் மீது கேள்வியெழுப்பும் யதார்த்தபூர்வமான
கதைகளாக அமைந்துள்ளன. இக்காலத்திலேயே சிறுமை கண்டு பொங்குவாய் (1963 ஆனந்தவிகடன்),
மனிதத்துவம் (1964 காலத்தின் குரல்கள்), மீட்சி (1965 சுதந்திரன்), கும்பனித்தெரு முகாம்
(1965 ஈழச்சுடர்), குறுக்கீடு (1966 இளங்கதிர்), மாயை (1967 சுதந்திரன்) ஆகிய கதைகளை
எழுதியுள்ளார்.
ஒளிப்படம் : சாந்தன் சாந்தகுணம்
பின்னர் ஒரு நீண்ட இடைவெளி இருந்துள்ளது. ‘Field work’
(1981 அலை), யோகம் இருக்கிறது (1981 கணையாழி), புழுக்கம் (1983 சுவர்) ஆகிய கதைகளை
80 களில் எழுதியுள்ளார். இக்காலகட்ட எழுத்துக்கள்
தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்படாமைக்கு போர்க்கால வாழ்க்கைச் சூழலும் காரணமாக
இருந்திருக்கலாம்.
மூன்றாவது காலகட்டத்தில் எழுதப்பட்ட கதைகள்தான்
அதிகமும் வாசகர்களிடம் சென்று சேர்ந்தன. இக்காலத்திலே வல்லைவெளி, இணக்கம், இறுக்கம்,
கனவு, இடமாற்றத்துக்காய், வீடுநோக்கி, இரக்கம் (இக்கதைகளை 1990 – 2002 ற்குள் எழுதியிருக்கலாம்)
பெயர்வு (1998 கணையாழி), திருவோடு (1999 சரிநிகர்), பயன்படல் (2002 மூன்றாவது மனிதன்),
நாடும் நம் மக்களும் (2005 மல்லிகை), சொல்லமாட்டாளா (2007 ஜீவநதி), ஆநிரைகள் (2009
ஜீவநதி), காலிழப்பும் பின்பும் (2010 ஜீவநதி), நீட்சி (2011 ஜீவநதி), கோழிக்கறி
(2012 தரிசனம்), ஊழியமும் ஊதியமும் (2012 ஜீவநதி), பாதுகை (2013 மகுடம்), இரும்பிடை நீர் (2014 உயிர்
எழுத்து), புகை நடுவில் (2016 ழகரம்), அரசியும் முத்துமாலையும் (2016), கருமை
(2017 ஜீவநதி), ஒரு நாள் கழிந்தது (2018 ஜீவநதி), திராட்சை (2019 ஜீவநதி), பழைய கணக்கு (2019 கலைமுகம்), தாய்மை (2020 ஜீவநதி)
முதலான 26 சிறுகதைகளைத் தொடர்ந்து எழுதியுள்ளார்.
குந்தவையின் வெளிவந்த இரண்டு தொகுப்புக் கதைகளும்
இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய காலம் முதல் நான்காம் கட்டப் போர் முடியும்வரையான
காலப்பகுதியில் மக்களின் வாழ்வில் ஏற்பட்ட வாழ்க்கை நெருக்கடிகளையும் இழப்புக்களையும்
அனுபவங்களையும் கூறுகின்றன.
“கதை எழுதவேண்டும் என்ற உந்துதலை புறச்சூழலும்
நாட்டின் நடப்பு நிகழ்வுகளுமே ஏற்படுத்துகின்றன. பேரினவாதம் தலைதூக்கியாடும் எம் நாட்டில்
மனத்தைச் சலனப்படுத்தி சஞ்சலப்படுத்தும் நிகழ்வுகள் பல. நான் அனேகமாக அவற்றை வைத்தே
கதைகள் எழுத விரும்புகிறேன்.” (ஊடறு நேர்காணல்) என்று குறிப்பிடும் குந்தவையின் அதிகமான
கதைகள் சாதாரண மனிதர்களைப் பற்றிய கதைகள். போரின் பின்னர் சிதைந்துபோன மனிதர்களையும்
அவர்களின் வாழ்வையும் கூறும் கதைகள். இவற்றை அடிப்படையாகக் கொண்டு குந்தவையின் சிறுகதைகளைப்
பின்வருமாறு வகைப்படுத்தி நோக்கமுடியும்.
1. சமூக விமர்சனம்
2. யுத்தமும் சிதைவும்
3. பெண்களும் வாழ்வும்
4. தனிமனித உணர்வு
1.சமூக
விமர்சனம்
1960 களுக்குப் பின்னரான ஈழத்துச் சிறுகதைகளில்
சமூக பொருளாதார அரசியல் பண்பாட்டு மாற்றங்களை உள்வாங்கி தேசியம், சாதியம், வர்க்கம்
தொடர்பான பல்வேறு சிந்தனையுடைய எழுத்துக்கள் வெளிவந்த காலப்பகுதியில் சிறுகதைத் துறைக்குள்
நுழைந்தவர் குந்தவை.
சிறுமை கண்டு பொங்குவாய், மனிதத்துவம், கும்பனித்தெரு
முகாம், மீட்சி ஆகிய கதைகள் ஊடாக ஏமாற்றுக்காரர்களையும் அவர்களின் போலி முகங்களையும்
வெளிப்படுத்தும் கருத்தியற் பின்புலத்தில் தொடர்ச்சியாகச் சில கதைகளை எழுதியுள்ளார்.
ஒருவரின் உயர்வுக்குப் பின்னால் நிச்சயமாக அர்ப்பணிப்பும்
உழைப்பும் இருக்கும். ஆனால் குறுக்கு வழியில் புகழ்பெற விரும்புவோரும் இந்தச் சமூகத்தில்
இருக்கத்தான் செய்கிறார்கள். உயர்கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருடனான திருமண
உறவையே முறித்துவிட்டு வருகின்ற பெண்ணை ‘சிறுமை கண்டு பொங்குவாய்’ என்ற கதையில் குந்தவை
காட்டுவார். தமிழ் அறிஞர் ஒருவரின் ஆய்வை, அவர் இறந்தபின்னர் தான் பயன்படுத்தி உயர்பட்டம்
பெற்ற ஒரு விரிவுரையாளரின் வஞ்சகமான ஏமாற்றுவேலையை வெளிக்காட்டும் கதையாக அமைந்துள்ளது.
‘புலமைத் திருட்டு’ என்று இதனைக் கூறலாம். 1963 இல் எழுதப்பட்ட அக்கதை இன்றைய காலத்திற்கும்
பொருந்துகிறது. இந்தக் கதை தொடர்பாக கலைமுகம் நேர்காணலிலும் பதிவு செய்துள்ளார்.
“கடுமையாக நோயுற்றிருந்த அவர் தம் நோயையும் பொருட்படுத்தாது
ஆராய்ச்சி செய்து சொல்ல, நீங்கள் எழுதி வந்தீர்கள். புத்தகம் முடிந்த சில நாட்களில்
அவர் காலமாகவே அவர் மனைவியாரின் நன் மதிப்பைப் பெற்ற நீங்கள் துக்கம் விசாரிக்கும்
சாக்கில் ஒரு நாள் அந்தக் கையெழுத்து நூலை வீட்டிற்கு எடுத்து வந்துவிட்டீர்கள். அந்தப்
புத்தகத்தையே நீங்கள் பி.ஏச்.டி பட்டம் பெறப் பயன்படுத்தினீர்கள். கேவலம் தற்பெருமைக்காக
பட்டம் பதவிக்காக இப்படி ஒரு பச்சையான துரோகத்தை ‘தமிழ் தமிழ்’ என கூறித்திரியும் நீங்களே
செய்திருக்கின்றீர்கள் என்பதை அறிந்த பின் நான் எப்படி அதை மறந்து மறைத்து உங்களோடு
வாழ முடியும்.” (சிறுமை கண்டு பொங்குவாய்) என்று வினாவெழுப்புகிறார். அறியாமற் செய்த
பிழையென்று அவளால் அதை ஒதுக்கி விடமுடியவில்லை. மற்றவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த
ஒருவரோடு எவ்வாறு வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வது என்பதையே “சிறுமை கண்டு பொங்குவாய்’
உணர்த்துகிறது.
குந்தவையுடன் சு.குணேஸ்வரனும்
ஒளிப்படக் கலைஞர் சாந்தன் சாந்தகுணமும்
‘மனிதத்துவம்’ என்ற கதையில் கடலுக்குச் சென்ற கந்தையன்
கடலில் தத்தளித்த இருவரை மீட்டு வருகிறான். இவ்வாறானவர்களைச் சட்டவிரோதத் தொழிலில்
ஈடுபடுத்தி அவர்களின் உழைப்பை உறிஞ்சும் முதலாளி ஒருவர், தனக்கு அவர்களால் எந்த நன்மையும்
கிடைக்கப்போவதில்லை எனத் தெரிந்ததும் இரவோடு இரவாகப் பொலிஸில் பிடித்துக் கொடுக்கிறார்.
“வேலை பெற்றுக் கொடுப்பதற்காக பெருந்தொகையான முன் பணத்தை அவர்களின் சம்பளத்திலிருந்து
எடுத்துக் கொண்டபின் சம்பளம் கொடுத்தே வேலை வாங்கப்படவேண்டும் என்ற நிலை அடைந்ததும்
அவர்கள் பொலிஸில் ஒப்படைக்கப்படுவார்கள்.” (மனிதத்துவம்) இங்கு மனிதத்துவ உதவி செய்த
கந்தையனும் கைது செய்யப்படுகின்றான்.
தமிழ்நாட்டிலிருந்து ஏமாற்றி அழைத்து வரப்பட்ட
மக்கள் படுகின்ற துயரங்களையும் அவர்களைச் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் என்று கூறி
உழைப்பு உறிஞ்சப்படுவதையும் ‘கும்பனித்தெரு முகாம்’ கதை காட்டுகிறது.
இலங்கையில் வசிக்கும் சட்டவிரோதக் குடியேற்ற வாசிகள்
எனக் கருதப்படுவோரை அடைத்து வைத்திருக்கும் இடமே ‘கும்பனித்தெரு முகாம்’ ஆகும். இந்தியாவிலிருந்து வந்து கடையொன்றில் வேலை செய்து
பொலிஸில் பிடித்துக் கொடுக்கப்பட்டு தமிழகத்திற்கு அனுப்பப்படுவதற்காக முகாமில் அடைந்து
கிடக்கும் கண்ணுச்சாமியும் மறுபுறம் சிங்களப் பெண்ணைத் திருமணம் செய்து மலையகத்தில்
வாழ்ந்த மாரிமுத்துவும் (பிறப்பால் இந்தியத் தமிழன்) கும்பனித்தெரு முகாமில் அடைத்து
வைக்கப்பட்டுள்ளனர். இருவேறு சம்பவங்களின் பின்னால் இருப்பவர்கள் முதலாளிமாரும் ஏமாற்றுக்காரர்களும்தான்.
குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்து உழைப்பு உறிஞ்சப்பட்டு துரும்பான இந்தியத் தொழிலாளர்கள்
பற்றிய கதைகளாக அவை அமைந்துள்ளன. 1964,1965 இல் எழுதப்பட்ட இக்கதைகளில் முகாம்வாழ்வு,
உணவு என்பன இறுதி யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொண்டவை போலவே அமைந்துள்ளன.
இக்கதைகளின் ஊடாகவும் மக்களின் பாடுகளைப் பதிவு செய்கிறார்.
சாதாரண உழைக்கும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைக்
கண்டுகொள்ளாமல் நடைமுறை யதார்த்தத்தை உணராமல், தமது கட்சிப் பிரசாரங்களை மேற்கொள்ளும்
நண்பர்களிடமிருந்தும் கட்சியிலிருந்தும் விலகும் நபர்கள் பயமுறுத்தப்படுதல், எச்சரிக்கை
செய்யப்படுதல் என்பவற்றை எடுத்துக்காட்டும் கதையே ‘மீட்சி’ ஆகும். இவற்றை சமூக நோக்கங்கருதி
எழுதப்பட்ட கதைகளெனக் கூறலாம்.
“குந்தவையின் கதைகளின் உள்ளார்ந்த அடிப்படை மனித
மன அவசங்கள் என்று சொல்லலாமா? இலஞ்சம் வாங்கியதனால் வேலை இழந்த அரச அதிகாரியின் தவிப்பும்,
பழைய நண்பனைச் சந்திக்கும்போது மீண்டும் வேலை கிடைக்கும் என்று துளிர்க்கும் நம்பிக்கையும்
‘யோகம் இருக்கிறது’ கதையில் இடம் பெறுகிறது. சும்மா இருந்து ஊதியம் பெறும் ஊழியர்களின்
மன நெருடல்களை, உயர்குடிப்பிறப்புகளென போலிப் பெருமிதம் காட்டும் பெண்கள், மனித மனங்களது
இன உணர்வுகள், தனது பெண்களுக்கு இன்னும் திருமணமாகவில்லையே என்ற தாயின் ஏக்கங்கள் என்று
மனித மன அவசங்களை மனித மனப்போராட்டங்கள் என்பவற்றையே இவரது கதைகள் சித்திரிக்கின்றன.(அறிமுகங்கள்,
விமர்சனங்கள், குறிப்புகள்) என்று குப்பிழான் ஐ. சண்முகன் எழுதியுள்ளார்.
இலஞ்சக் குற்றாச்சாட்டில் வேலையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட
ஒருவனின் உள்ளத்து உணர்வுகளை ‘யோகம் இருக்கிறது’ பேசுகிறது. அவன் கூனிக் குறுகி விடுகிறான்.
ஒரு நூலகத்திற்குக்கூட செல்லத் தயங்குகிறான். பார்வையாலும் பேச்சாலும் தன்னை மற்றவர்கள்
ஏளனம் செய்வதாக மனம்வெதும்புகிறான். இவ்வாறான மனநிலையைச் சொல்லும்போது அவனின் நண்பன்
ஒருவனின் சந்திப்பின் பின்னர் இப்பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம்
என எண்ணுகிறான். இதுதான் அவனின் யோகம். அதுவே தொகுப்பின் தலைப்பாகவும் இருக்கிறது.
‘Field work’
என்ற கதை அலுவலகங்களில் வேலை செய்வோர் ஏனோதானோ என பணியாற்றுவதையும் பணம் பெறுவதற்குப்
பொய்யான அறிக்கைகளைத் தயாரித்து வழங்குவதையும் மிகச்சில பாத்திரங்கள் ஊடாகச் சொல்லுகின்றது. விவசாயிகள் கடனுதவி பெற வருகின்றபோது பெற்றுக்கொண்ட
கடனைத்திருப்பிச் செலுத்தினாற்தான் அது சாத்தியம் என கூறுகிறார்கள். அவர்கள் பெற்ற
கடனைத் திருப்பிச் செலுத்தாமல் பொய் சொல்லுகிறார்கள் என்று கூறுவதும் அலுவலகத்தில்
வேலை செய்வோர் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி பணம் பெறுவதும் சரியாகத்தான் இருக்கிறது.
இங்கும் மனிதர்களின் நேர்மையற்ற செயல்களை எள்ளி நகைக்கின்றார் குந்தவை.
“இவரது எழுத்தில் பயின்று வரும் புத்தம் புதிய
சொற்கள் யதார்த்தத்தை வழிய விடும் அவற்றின் இயல்பு என்பன படித்த மாத்திரத்தில் பெரிதும்
கவர்கின்றன. படைப்புக்களுக்கு ஒரு மெல்லிய திரையாக, போர்வையாக மனோரதியக் கசிவு, அழகுக்கு
அழகு சேர்ப்பதை நாம் அறிவோம். ஜெயகாந்தனும் ஜானகிராமனும் ஜெயமோகனும் இவ்வகையில் சமர்த்தர்கள்.
இந்த ரசத் துளிர்ப்பு எதுவுமில்லாமல் புதுமைப் பித்தனைப் போல் கறாராக யதார்த்தத்தை
இறுக்கமாகப் பற்றி நிற்பது குந்தவையின் பெரிய பலம்” (குந்தவையின் யதார்த்தமும் புனைவும்,
ஜீவநதி 2016) என்று க. சட்டநாதன் குறிப்பிடுகின்றார்.
பூப்புனித நீராட்டு விழாச் சடங்கு ஒன்றை வைத்துக்கொண்டு
நம்மவர்கள் காட்டுகின்ற பகட்டு நாடகத்தை எள்ளலுக்குட்படுத்துவதே ‘திருவோடு’. திருவோடு
என்பது பிச்சைப் பாத்திரம். வெளிநாட்டில் கஷ்டப்பட்டு ஒருவர் உழைக்க, அவர் உழைப்பில்
ஊதாரித்தனமும் பகட்டு வாழ்வும் வாழுகின்ற குடும்பங்களை இக்கதையில் காட்டுவார். அரசின்
உதவிப்பணத்தில் வாழ்க்கையோட்டுவோர் மற்றவர்களுக்குக் காட்டும் போலிமுகத்தையும் திருவோடு
நகைப்புக்குள்ளாக்குகிறது.
“இலங்கையில் போர் தந்த துயரம் புலம்பெயர் வாழ்க்கையின்
பண்பாட்டுச் சிக்கல் என எல்லாவற்றையும் இந்த கதைகள் வழியாகப் பெண்கள் பக்கம் நின்று
குந்தவை பார்க்கிறார். ஆனால், இதையெல்லாம் பெருங்கோபத்துடன் வெளிப்படுத்தவில்லை. மேலும்
ஒரு சார்பாகப் புரட்சிக்கும் அழைப்பு விடுக்கவில்லை. பெண்களின் அன்றாடச் செய்கைகளுக்குள்
புகுந்து அது நிகழ்த்திய மாற்றம் என்ற ரீதியில் அதை அவர்களின் பார்வையில் சொல்ல முயல்கிறார்.
விசேசமான இந்த அம்சம் மற்ற எழுத்தாளர்களிடமிருந்தும் அவரை தனித்துவப்படுத்துகின்றது.”
(மே 6 2018 தி.இந்து) இக்கூற்றுக்கு ஆதாரமாகவே திருவோடு, புழுக்கம், ஊழியமும் ஊதியமும்
முதலான கதைகள் அமைந்திருக்கின்றன.
2.யுத்தத்தின்
சிதைவு
80களிலிருந்து தொடர்ந்த யுத்தத்தினாலும் முள்ளிவாய்க்கால்
இறுதிப்போரினாலும் சிதைந்துபோன மக்களின் வாழ்வை பல சிறுகதைகளில் எழுதியுள்ளார். இரண்டு
காலகட்டக் கதைகளுக்கு இடையிலான கதைசொல்லும் முறையிலும் கூட வித்தியாசத்தை வாசகர் உணர
முடியும்.
‘யோகம்
இருக்கிறது’ வெளிவந்து 13 வருடங்களுக்குப் பின்னர் ‘ஆறாத காயங்கள்’ தொகுதி வெளிவந்தது.
ஆறாத காயங்கள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் அனைத்தும் இறுதியுத்தத்திற்குப் பின்னர்
எழுதப்பட்டவை. யுத்தப் பிரதேசத்திற்கு வெளியே வாழ்ந்தவர் குந்தவை. இக்காலத்தில் அவர்
தனது வெளிப் போக்குவரத்துகளைக் குறைத்துக் கொண்டு விட்டார். இக்கதைகள் அதிகமும் அவரின்
வாசிப்பு அனுபவங்களையும் மிக அரிதாகக்கிடைத்த புற அனுபவங்களையும் கொண்டு எழுதப்பட்டவை. எனினும் அவற்றில் இருக்கும் கதை நேர்த்தியும் கதை
சொல்லுவதற்கான நோக்கமும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுவன. சில கதைகள் மனதை நெகிழச் செய்வன.
“இக்கதைகள் பெரும்பாலானவற்றில் இலங்கை அரசுக்கும்
விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான தொடர்ந்த போரில் நிர்மூலமாகிவிட்ட சமூகத்தின் இடிபாடுகளிடையே
வாழும் மக்களின் அன்றாட நிலையை, கோபக்கனல் வீசாது, உணர்ச்சிகளை எழுப்பாது, சொற்களாகவே
வந்து விழும் வர்ணனைகள் இல்லாது, போர் விட்டுச் செல்லும் மனக்காயங்களையும் பொருள் சேதத்தையும்
வேரறுபட்ட வாழ்க்கையும் நம் அனுபவத்திற்குள்ளாக்குகின்றன. இடைவிடாத போரின் அகோரங்களையும்
நிலை குலைந்த வாழ்க்கையையும் 15-20 வருடங்களாகத் தொடர்ந்து அனுபவிக்கும்போது அதன் வேதனையும்,
பயங்கரமும் சாதாரண வாழ்க்கையின் குணம்பெற்று இயல்பாகி விடுகின்றன.” (வெங்கட்சாமிநாதன்,
தொடரும் உரையாடல்) என்று யோகம் இருக்கிறது தொகுப்பை அடிப்படையாக வைத்து வெங்கட்சாமிநாதன்
எழுதியிருப்பார். அக்கூற்று பின்னர் வந்த கதைகளுக்கும் பொருந்துகிறது.
இறுக்கம், வல்லைவெளி, பெயர்வு, வீடு நோக்கி முதலான
கதைகளின் மையச்சரடு யுத்தத்தினால் மக்களின் சிதைவை வெளிப்படுத்துவதாகும். யுத்தகாலத்தில்
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் வாழ்க்கையின் அடிப்படை இயல்புகள்கூட
ஆட்டங்கண்டு விடுகின்றன.
யாழ்ப்பாணப் பயணத்திற்கு வல்லைவெளியில் நிற்கும்
ஒர் இளம்பெண்ணின் பார்வையூடாகச் சூழலை மிக அநாயாசமாகக் கொண்டு வருவதன் மூலம் ‘வல்லைவெளி’
கதையை நகர்த்துகின்றார். போகிற போக்கில் சூழலைப் படம்பிடித்துக் காட்டுவார். இதனை இறுக்கம்,
வல்லைவெளி இரண்டு கதைகளிலும் அவதானிக்கலாம். இதனாலேயே “எழுத்துக்கும் வாழ்க்கைக்கும்
உள்ள இடைவெளிகளை அகற்றிக் கொண்டு சமகால ஈழத்து நிகழ்ச்சிகளின் ஊடாக வாசகனைப் பயணிக்க
வைப்பதன் மூலம் புதிய அநுபவத்தை ஏற்படுத்துதல் குந்தவையின் கலை வெற்றியாகும்.” (யோகம்
இருக்கிறது, முன்னீடு) என்று எஸ்.பொ குறிப்பிடுகிறார்.
“இந்திய ஆமி இங்கிருந்த காலத்தில் இதே வீதியால்
இருபத்தியெட்டு டாங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாய்ப் போனதை சன்னதி கோயிலடியிலுள்ள ஒரு மடத்தின்
பின்னால் நின்று எண்ணியிருக்கிறாள். இரண்டு வருடங்களுக்கு முன் இலங்கை ஆமி, ஊர்ப்;
பகுதிக்கு வந்தபொழுது அவர்கள் கொண்டு வந்த டாங்கிகளை எண்ணிப் பார்க்கமுடியாமல் ஊரிலுள்ள
எல்லோருடனும் அவளும் இடம்பெயர்ந்து வேறெங்கோ சென்று விட்டாள். கோயிலடி மடத்தில்கூட
இருக்காது.
இராணுவ லொறிகள், டாங்கிகள். வேறென்ன கனரகங்கள்,
இந்த வீதியால் சென்றிருக்குமெனச் சிந்தனை ஓடியது. புல்டோஸர்கள், ட்ரங்குகள், இராணுவ
ஜீப்புகள்…
சரித்திர நாவல்களில் எழுதுவார்களே.. இது ராஜராஜ
சோழனின் படைகள் சென்ற பாதை ராஜேந்திர சோழனின் படைகள் சென்ற பாதை என்று அந்த மாதிரி,
தானும் நினைப்பதாகத் தோன்றிய பொழுது கொஞ்சம் சிரிப்பு வந்தது.
யாழ்ப்பாண இராச்சியத்தின் சரித்திரத்தில் அப்படி
யாரும் பெரிய படையெடுத்துச் சென்றதாகத் தெரியவில்லை. நாடு பிடிக்க வந்த போர்;த்துக்கீசரை,
இப்பகுதியிலிருந்த கரையார்களின் தலைவன் ஒருவன் படை திரட்டி எதிர்க்க முயன்றதாய் சரித்திரப்
புத்தகத்தில் ஒரு வரி மட்டும் படித்திருக்கிறாள். ஒருவேளை அந்தக் கரையார் இராசாவின்
படை இந்த வழியாகப் போயிருக்கக்கூடும்.
முன்பு கொள்ளிவாய்ப் பிசாசுகளும் இரவில் இந்த உப்புவெளியில்
உலாவித் திரியுமாம். இந்தக் கரையார் ராசாவின் படைகள் கொள்ளிவாய் பிசாசுகள் இவற்றை எல்லாம்
விட இப்பொழுது இப்பகுதி எவ்வளவற்றையோ பார்த்துவிட்டதாகத் தோன்றியது.” (வல்லைவெளி)
இடப்பெயர்வுக்குப் பின்னர் வீடு திரும்புகிறார்.
எங்கும் சிதிலத்தின் அடையாளத்தைக் காணுகிறார். வீட்டின் நிலையை அப்படியே கண்முன் கொண்டு
வருவார். ஓர் அணிற்குஞ்சை வைத்துக்கொண்டு எழுதுகின்ற வரிகள் அக்கால அரசியற் சூழலை இளைஞர்களுடன்
ஒப்பிட்டு நோக்க முடிகிறது. “அணில் அவர்களை நின்று பார்த்துவிட்டு தாவி ஓடி விட்டது.
‘ஒண்டட்டையும் பிடிபடாமை அது நல்லாயிருக்கோணும்’ என நினைத்துக் கொண்டு முற்றத்தை ‘டா’னாப்
படச் சுற்றியிருந்த குசினியையும் சாப்பாட்டறையையும் பார்க்கப் போனாள். குசினிக்குள்
புகைபோக்கி அப்படியே பொலபொலத்துச் சரிந்து கிடந்தது. சாப்பாட்டறைச் சுவரில் ஒரு பெரிய
ஓட்டை இருந்தது. கீழே கற்களும் சீமெந்துத் துண்டகளும் குவிந்து கிடந்தன.” (வீடுநோக்கி)
நாற்சார் வீட்டுச்சூழல், அதன் சுவர்கள், ஓடுகள்
- கண்ணாடிகள் சிதைவுற்றுக் கிடத்தல், தாய் தந்தையர் நினைவு, தாய் கதை சொல்லுதல் ஆகியவற்றை
காட்சிரூபங்களாகச் சொல்லிக்கொண்டே செல்கிறார்.
இவரின் ‘பெயர்வு’ சிறுகதை பலராலும் எடுத்துக்காட்டப்பட்டதாகும்.
90களின் அகதிகளாக மக்கள் இடம்பெயர்ந்த கஷ்டதையும் குழந்தைகளின் பசியையும் சொல்கின்ற
கதை அது. போர் முடிந்து ஊருக்குத் திரும்பிய மக்கள் சொந்த ஊர்களுக்குப் போகமுடியாமல்
தடுக்கப்பட்டு அனுபவித்த வலிகளையும் சொல்வது. அவ்வாறு அலைக்கழிந்த காலங்களை இதில் பதிவு
செய்கிறார்.
“கடல் எதிரே கருமையாய், கெட்டியாய் தெரிந்தது.
கடலிலிருந்து எழுந்தது மாதிரியான வானம் மேலே கவிந்து கிடந்தது. தேய்நிலாக் காலத்து
லேசான வெளிச்சத்தில் சாம்பல் கலந்த மேகம் நடு வானமெங்கும் பரவித் தெரிந்தது. மேவாயை
நிமிர்த்தி அதையே பார்க்கையில் அது தாழத் தொங்கி அசையாது கண்ணை நிறைத்தது. இந்த வானக்
கருமைப் பின்னணியில் ஒரு ஹெலிகாப்டர் சிவப்பும் மஞ்சளுமாய் சீறிக்கொண்டு மேலே வந்தால்
எப்படியிருக்குமென கற்பனை ஓடியது.” (பெயர்வு) என்ற வர்ணனைகூட சூழலுக்கு ஏற்றாற்போல்
மனம் நினைப்பதை மிக இயல்பாகச் சொல்வார்.
“உண்மையின் ஆராதனை, கதைக்கு எடுத்துக்கொள்ளப்படும்
பாடுபொருளில் மட்டுமன்றி, அதனைச் சொல்லக் கலைஞன் தேர்ந்தெடுக்கும் உருவத்திலும் அந்த
உண்மையின் நீட்சியை கொண்டு வருதல் சாத்தியமா? குந்தவை, இத்தொகுதியில் உள்ள கதைகள் பலவற்றிலே
அதனைச் சாத்தியம் என்று சாதிக்கிறார். நிகழ்ச்சிகளைக் கதையாகப் பின்னுவதில் இழையோட
விடும் பாணியும், அதனை நகர்த்துவதற்குக் கையாளும் மொழிநடையும் அவருக்குக் கைகொடுத்து
உதவுகின்றன. பயமுறுத்தாத வசனநடையைப் பயிலுகின்றார். அந்த வசனநடையில் அவர் கையாளும்
சொற்கள் புதிய வீரியத்ததுடன் காலூன்றி நிற்கின்றன.” (எஸ்.பொ)
நீட்சி, காலை இழந்தபின் ஆகிய கதைகளும் முன்னைய
கதைகள் போலவே இறுதி யுத்தத்திற்குப் பின்னர் மக்களின் சிதைந்த வாழ்க்கையைக் கூறுவன.
“றோட்டால் ஒரு மோட்டார் சைக்கிள் போனது. தொடர்ந்து
அடுத்தடுத்து இரு சைக்கிள்கள் போயின. சைக்கிள் பெடல்களை உழக்கும் கால்களே கண்களில்
நிறைத்துக் கொண்டு தெரிந்து இழுபட்டு மறைந்தன. அவனின் கைகள், அவனையறியாமலே மொண்ணையாகிவி;ட்ட
முழங்கால்களையும் அவற்றைச் சுற்றி நீண்டிருந்த தகர உருளைகளையும் தடவிக் கொடுத்தன.”
(காலை இழந்தபின்)
யுத்தத்தில் தன் கால்களை இழந்துபோனவன் தன் பிளாஸ்ரிக்
கால்களைத் தடவிக்கொண்டு கண்முன்னே சுருண்டுபோன உறவுகளைக் கண்களில் தேக்கிக் கொண்டு
எதிர்காலம் பற்றிய திசையிழந்து பேதலித்து நிற்கின்றான். தன் சின்ன மகன் துண்டம் துண்டமாகச்
சிதறக் கண்டவன், முழங்காலுக்குக் கீழே இரண்டு கால்களை தானும் இழந்த நிலையில் செயற்கைக்
காலுடன் வாழவேண்டிய அவலத்தை எண்ணிப் பார்க்கிறான். மிஞ்சி நிற்பன உடல்வாதையும் திசையிழந்த வாழ்வும் மட்டுமே!
நொந்துபோன சமூகத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி
வளத்தைச் சூறையாடிச் செல்லும் மனிதர்களின் கதையாக ‘இரும்பிடை நீர்’ அமைந்துள்ளது. முகாம்
வாழ்வு, நீருக்கு அந்தரப்படுதல் ஆகியவற்றின் மத்தியில்; கிணற்றில் நீர் அள்ளுவதற்கு
அமைக்கப்பட்ட ‘இரும்புக்கேடரை’ வெட்டியெடுத்துச் செல்கிறார்கள். சுயநலமான மனிதர்களின்
நீதியற்ற இச்செயலை என்னவென்று சொல்வது? யாரிடம் முறையிடுவது? இதைத்தான் மனித மனங்களின்
வீழ்ச்சி என்று சொல்லத் தோன்றுகிறது.
‘நீட்சி’யில் பலரின் கதைகள் சொல்லப்படுகின்றன.
“குந்தவையின் சிறுகதை நீட்சியைப் படித்ததும் சில நிமிடங்கள் ஆழ்ந்த மௌனத்தில் கரைந்தேன்.
அச்சிறுகதை எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே அந்த மௌனம்.”
என்று முருகபூபதி இக்கதை தனக்குள் ஏற்படுத்திய பாதிப்புக் குறித்து எழுதியுள்ளார்.
பாடசாலை ஆசிரியர் ஒருவரின் பார்வையில் சொல்லப்படுகின்ற கதை இது. போருக்குப் பின் மனிதர்களின்
உளச்சிதைவைச் சொல்லுகிறது. பாடசாலை மாணவன் ஒருவன் திடீரென வகுப்பிலிருந்து எழுந்து
வெளியே செல்கிறான். ஷெல் தாக்குதலில் தந்தையை இழந்த காட்சி அவன் கண்முன் வருகிறது.
“சண்டை நாள்களில் கஞ்சி வாங்க எண்டு லொறிக்கு முன்னாலை வந்து நிண்ட சனங்களுக்கு, இவன்ரை
தகப்பன் லொறியில் ஏறி நிண்டு கஞ்சி வார்த்துக் கொண்டிருந்தாராம். அப்ப ஷெல் அடியில்
அவற்றை கழுத்து தெறிச்சுப் போச்சாம். கஞ்சி வரும் வரை காத்திருந்த இவன்ரை தாயும் இவனும்
ஏதோ பறக்கிறதைப் பார்த்தார்களாம். ‘என்ன பறக்குது பார்’ எண்டு சொல்லிப் பார்த்தார்களாம்.
பிறகுதான் தெரிஞ்சுதாம் அது அவன்ரை தகப்பன்ரை தலை எண்டு” (நீட்சி)
இறுதியுத்தம் பற்றி இதுபோல எத்தனையே அவலமான கதைகளை
யுத்தப் பிரதேசத்திற்கு வெளியில் இருந்த மக்கள் அறிந்திருக்கிறார்கள். அக்கதைகளைக்
கேட்டு மனம் பேதலித்திருக்கிறார்கள். அந்தச் சிறுவனின் ஆற்றாமையைக் கட்டுப்படுத்த அதிபரும்
ஆசிரியர்களும் எடுக்கும் பிரயத்தனம் சொல்லப்படுகிறது. இதேபோன்ற நிலைமையுடைய மகனை வைத்திருக்கும்
இன்னொரு ஆசிரியரின் கதையும் இங்கு இணைத்துச் சொல்லப்படுகிறது. பெண் ஆசிரியர்களுக்கு
போக்குவரத்தில் ஏற்படும் நெருக்கீடுகள், வன்னிப்பிரதேசப் பாடசாலைகள் மற்றும் பிள்ளைகளின்
நிலைமை ஆகியனவும் யுத்தத்திற்குப் பின்னர் சிதைந்துபோன வாழ்க்கையைக் கண்முன் கொண்டு
வருகின்றன.
இறுதி யுத்தத்தின் பின்னர் காணாமலாக்கப்பட்ட பல
பிள்ளைகளின் கதையைச் சொல்வது பாதுகை. அவளின் ஒரேயொரு மகன் கண் முன்னாலேயே அழைத்துச்
செல்லப்பட்டவன். மகன் வருவான் வருவான் என எதிர்பார்த்து தாயின் உள்ளம் பேதலிக்கிறது.
எதுவும் செய்யமுடியாத நிலையில் மகனின் நினைவுகளோடு அவள் உறக்கத்துக்குச் செல்கின்றபோது,
“அரிக்கேன் லாம்புத் திரியைக் குறைத்து வைத்துவிட்டு
பாயை அவள் சுவரோரம் இழுத்துப் போடுவது தெரிந்தது. பின் போய் அந்தச் செருப்புகளை கையிலெடுத்துக்
கொண்டு திரும்பி வந்தாள். இடுப்புச் சேலையைத் தளர்த்தி கொய்யகச் சுருக்குகளை வெளியே
எடுத்து அவற்றில் செருப்புகளைப் பொதித்துச் சுருட்டி உள் பாவாடைக்குள் செருகி வயிற்றுக்கு
நேரே இறக்கினாள். அவற்றை அணைத்துப் பிடித்தபடி படுத்துக் கொண்டாள்.” (பாதுகை)
குந்தவையின் ‘பாதுகை’ சிறுகதையை அடிப்படையாகக்
கொண்டு ஈழத்து இயக்குனர் மதிசுதா ‘பாதுகை’ என்ற குறும்படத்தை எடுத்திருப்பார். அதற்குத்
திரைக்கதையை எழுதி இயக்கி அக்குறும்படத்திலும் நடித்திருப்பார். குறும்படத்தில் வரும்
காட்சிகளும் உரையாடலும் உணர்வுபூர்வமான நடிப்பும் குந்தவையின் சிறுகதையை வெகுஜனப் பார்வைக்கு
நகர்த்தியுள்ளன என்று கூறலாம்.
‘கனவு’ என்ற கதை வெங்காயப் பயிர் செய்யும் இளைஞன்
தனது குடும்பத்தாரின் கடன்களைத் தீர்ப்பதற்காகவும் தங்கைமாரைக் கரைசேர்க்கவும் வெளிநாடு செல்வதே வழியென
எண்ணுகிறான். கொழும்பு மற்றும் புத்தளத்தில் வாழும் தமிழர் நிலையை இணக்கம், இரக்கம்
ஆகிய கதைகள் காட்டுகின்றன. இணக்கத்திலும் பயன்படலிலும் வருகின்ற சூழலியல் வர்ணனையும்
மனிதர்களின் செயற்பாடுகளும் அக்கால அரசியற் சூழலை நன்கு புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கின்றன.
மாடுகளை விரட்டும் மனிதர்கள், மனிதர்களை விரட்டும் அதிகாரம்; குறியீடாகக் கொண்டு எழுதப்பட்ட
இக்கதையும் கவனத்திற்குரியது.
குந்தவை எழுதிய போர்க்காலக் கதைகள், இழப்பும் வேதனையும்
ரணமும் நிறைந்த வாழ்வை மிக அடக்கமான மொழியில் அலங்காரமில்லாமல் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துவன.
ஒரு காலகட்ட வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுவன.
3.பெண்களும்
வாழ்வும்
“பெண்கள் இன்று அநேகமாக எல்லாத் துறைகளிலும்
நுழைந்து பிரகாசித்தாலும் சம உரிமை என்பது எட்டாத தூரத்தில்தான் உள்ளது. ஒடுக்குதல்
என்பது ஆணாதிக்கத்திலிருந்து சில சமயங்களில் வெளிப்படத்தான் செய்கிறது” (ஊடறு நேர்காணல்)
என்று குறிப்பிடும் குந்தவை; போரால் மட்டுமல்லாமல் வறுமை, தனிமை, விரக்தி, அதிகாரம்
ஆகியவற்றாலும் உள்ளும் புறமும் அமுங்கிப்போன மனங்களையும் காட்டுகிறார்.
‘ஊழியமும் ஊதியமும்’
மிக நேர்த்தியான எழுதப்பட்ட மாதிரிச் சிறுகதையாகவே இளைய சமூகத்திற்கு அறிமுகப்படுத்தக்கூடியது.
ஒரு பெண் எதிர்கொள்ளும் உடல் - உள வாதைகள் இக்கதையில் வெளிப்படுகின்றன. வைத்தியசாலையில்
பராமரிப்புப் பணி செய்யும் இளம்பெண்ணின் ஒருநாட்பொழுதை விடிகாலை முதல் மாலைவரை அனுபவித்து
உணர்ந்து எழுதியதுபோல் உள்ளது. கதையின் இறுதியில் வருகின்ற காட்சி மனத்தில் ஆற்றாமையை
வெளிப்படுத்துகின்றது.
“ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களை
கூட இருந்து கவனித்துக் கொள்ள அவர்களின் உறவினர்களால் இயலாத நிலையில் இந்த நலன்புரி
நிறுவனம் தன் பணியாளர்களைக் கொடுத்து உதவுகிறது. ஒரு பகல் பொழுதிற்கு ஐந்நூறு ரூபாய்
அவ் உறவினர்களிடமிருந்து வாங்கி அவற்றில் நூறு ரூபாய்களை தன் நிர்வாகச் செலவிற்காகப்
பிடித்துக் கொண்டு பணி செய்தோருக்கு நானூறு ரூபாய்களைக் கொடுக்கிறது.
பிரதீபா மனத்திற்குள் கணக்குப் போடத் தொடங்கினாள்.
இப்பொழுது கையில் இருப்பது முந்நூற்றிப் பத்து ரூபாய். போன உடனே பெரியக்காவிடம் காலையில்
வாங்கிய நூறு ரூபாவைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். மீதி இருநூற்றிப் பத்து ரூபாய்.
நாளைக்குத் திரும்ப பஸ்ஸிற்கு அக்காவிடம் காசு கேட்க முடியாது. போக – ஒரு வழிப்பயணத்திற்காவது
காசை அறுபது ரூபாவை எடுத்து வைத்துவிட வேண்டும். இன்றையப் போல கன்ரீன் செலவு ஒன்று
ஏற்பட்டால் அதற்கொரு முப்பது ரூபாய். மொத்தம் தொண்ணூறு ரூபாய். மீதி இருப்பது நூற்றி
இருபது ரூபாhய். ஒரு சோப்கேஸ் வாங்கவேண்டும். அல்லாவிட்டால் சோப் கைப்பையை பழுதாக்கிவிடும்.
அதற்கு ஒரு இருபது ரூபாய். மிஞ்சுவது நூறு ரூபாய்.
பிரதீபா அன்று எத்தனை தரம் சோப் போட்டு கை கழுவினோம்
என எண்ணிப் பார்த்துக் கொண்டாள்.
அதிகாலையில் எழுந்து தனக்கு சாப்பாடு கட்டித் தருவதற்காக
புட்டுக்கு மாக் குழைத்த பெரிய அக்காவை நினைத்துக் கொண்டாள். வழக்கத்திற்கு மாறாக வெள்ளன
எழும்பி தனக்கு உருளைக்கிழங்கு சீவிப் பெரித்துத் தந்த சின்னக்காவை நினைத்துக் கொண்டாள்.
பாதி இருட்டில் தன்னோடு பஸ் நிறுத்தம் வரை வந்த அண்ணனை நினைத்துக் கொண்டாள். கையிலிருக்கும்
நூறுகளில் மிஞ்சி நிற்கப் போகும் ஒரே ஒரு தாளைப் பார்த்துக் கொண்டாள். மனம் கசந்து
போய்விட்டது.” (ஊழியமும் ஊதியமும்)
சாதாரண மக்களின் உழைப்பு எவ்வாறு சுரண்டப்படுகிறது
என்பதற்கு இக்கதை சாட்சியாக அமைந்திருக்கிறது. இதனாலேயே “குந்தவையின் அடங்கிய குரலும்
அமைதியும் நிதானமும் விசேசமானவை. அவரது எழுத்தும் அலங்காரங்களோ, உரத்த குரலோ ஆவேச உணர்வோ
அற்றது. இவர் எழுத்தைப் படிக்கும்போது ஒன்றிரண்டு காட்சிகள் என் மனதில் வந்துபோகும்.” (தொடரும் உரையாடல்) என்று வெங்கட்சாமிநாதன் குறிப்பிடுகின்றார்.
பெண்களைப் பற்றிய தாழ்வான எண்ணங்களைத்தான் சில
ஆண்கள் கொண்டிருக்கிறார்கள். பெண் என்றால் எதிர்த்துப் பேசக்கூடாது. வினா எழுப்பக்கூடாது.
கருத்துக் கூறக்கூடாது என்ற பொதுமையான எண்ணமும் அவர்களிடம் இருக்கிறது. ஒருவரின் மனத்தைப்
புண்படுத்தாமல் குத்திக் குதறாமல் பேசக்கூடிய தன்மை இவர்களிடம் இல்லையா? இவர்கள் எப்போதும்
கருமை படர்ந்தவர்கள்தானா? என்பதே குந்தவையின் வினாவாக இருக்கிறது. இதனை ‘கருமை’ கதையில்
காணலாம்.
பெண்கள் அறிவு சார்ந்து ஈடுபடும் துறைகளைக்கூட
சிலர் ஏளனமாக நோக்குவதை ‘சொல்லமாட்டாளா’ என்ற
சிறுகதையில் வெளிப்படுத்துவார். இக்கதை பொதுவாகவே பெண்கள்மீது ஆண்கள் செலுத்தும் அதிகாரத்தைச் சொல்கிறது. ‘கருமை’
சிறுகதையில் வருகின்ற மூன்று ஆண்களுமே பெண்களை இழித்துப் பேசுவோராக இருக்கிறார்கள்.
இப்படியான மன அழுக்குகளைச் சுமந்த இவர்களை நேரில் தரிசிப்பதுகூட மன அயர்ச்சியைத் தந்துவிடும்
என்கிறார் குந்தவை.
‘இடமாற்றத்துக்காய்’ என்ற கதை, வரப்போகும் கணவனின்
இசைவிற்கு ஏற்ப நடக்க வேண்டிய ஒரு பெண்ணைப்பற்றிக் கூறுகிறது. வேலையில் இடமாற்றம் ஒன்றைப்
பெற்று யாழ்ப்பாணம் வந்தாலே திருமணம் நடைபெறும் என்ற நிலை பெண்ணுக்கு ஏற்படுகிறது.
அதற்காக கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்குமாக அலைக்கிறாள். அதிகாரம் மிக்கவர்களைச்
சந்திக்கிறாள்.
“அந்த பீ.ஏ, எம்பியை கொழும்புக்குக் காரிலே அனுப்பிப் போட்டு, நாங்கள் இரவு ரெயிலில் போகலாமெண்டார்.
சரி எண்டுதான் சொன்னன். யோகம் ரீச்சரும் என்னோட வாறன் எண்டு சொன்னா. திடீரென அவன் குரலில்
ஆத்திரம் பீறிட்டது. அண்டு பின்னேரம் போன் பண்ணிச் சொல்லுகிறார். ஒருத்தரையும் கூட
கூட்டிக் கொண்டு வர வேண்டாமாம். நான் மட்டும் தனிய வரவேணுமாம்”
இவ்வாறு கூறப்படுவதன் அர்த்தம்தான் என்ன? ஆண்களின்
வக்கிரப்புத்தியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இக்கதை. இறுதியில் இடமாற்றமே வேண்டாம்
என்று இருந்து விடுகிறாள்.
‘தாய்மை’ என்ற கதையில் இடியப்பம் அவித்து விற்று
காலம் ஓட்டும் கனகவள்ளி என்ற பாத்திரத்தைக் குந்தவை கண்முன் கொண்டுவருகிறார். பெண் தனித்துவிட்டால் அவள் எதிர்கொள்ளவேண்டிய மனக்கலக்கத்தையும்
வாழ்க்கைப் பாடுகளையும் இக்கதைக்கு ஊடாகக்
காட்டுகிறார். கணவன், பிரச்சினைக் காலத்தில் இராணுவத்தினரால் பொலிகண்டியில்
கட்டிடம் ஒன்றினுள் பல ஆண்களோடு அடைத்துவைத்து குண்டுவீசிக் கொல்லப்பட்டவர்களில் ஒருவன்.
பிள்ளைகளும் இல்லாத நிலையில் அவள் தனித்துப் போகிறாள். அயல்வீட்டுப் பிள்ளை பாடசாலையில் மயங்கி விழுந்து
வீட்டுக்கு அனுப்பப்பட்டபோது அப்பிள்ளையின் தாயார் வைத்தியசாலை சென்றபடியால் தாய் வரும்வரை
அந்தப்பிள்ளைக்குப் பாதுகாப்பாக இருந்து உணவு கொடுத்து காத்திருக்கிறாள். அப்போது அவள்
தன்னை ஒரு தாயாக உணர்கிறாள். மிக மென்மையான உணர்வுகளைக் கலந்து எழுதப்பட்ட கதை இது.
ரயில் பயணமொன்றில் பெண்களின் செயற்பாடுகளைப் பார்த்து
இவர்கள் செய்வது சரிதானா என்று வினா எழுப்பும் கதையாக அமைவதே ‘மாயை’ ஆகும். மாயை பெண்
சார்ந்த கதையெனினும் இளமைக் கோலத்தில் தறிகெட்டு அலைபவர்களை எள்ளி நகைப்பதாக அமைந்துள்ளது.
‘புழுக்கம்’ என்ற சிறுகதையை ஒரு பண்பாட்டுக் கதை
என்று கூறலாம். அதிகமான பாத்திரங்கள். சில பாத்திரங்கள்தான் கதைத் தொடர்ச்சியில் பயணிக்கின்றன.
ஒரு நாவலாகவே எழுதப்படவேண்டிய கதையாகத் தெரிகிறது. இச்சிறுகதையில் பெண்கள் சிலர் கூடியிருந்து
திருமண நிகழ்வு ஒன்றுக்கு பலகாரம் சுடுகின்றனர். குந்தவையின் கதைகளிலேயே உரையாடல் வடிவிலேயே
நகர்த்தப்பட்ட கதை இது. அருமையான நடை. குறிப்பாக வடமாட்சி வழக்குச் சொற்கள் லயமிடுவதை
இச்சிறுகதையில் அறியலாம்.
“நாகம்மாக்கா இந்த பாணி பதமோ எண்டு பாருங்கோ”
என்று அடுப்போடு நின்ற சுகிர்தம் கூப்பிடுவது கேட்டது.
உள்ளே போய் ஒரு சருவச் சட்டியில்தண்ணீர் எடுத்துக்
கொண்டு அடுப்பருகே போனாள் சுகிர்தம். கையிலிருந்த அகப்பையை வாங்கி பாணியைக் கிளறினாள்.
அகப்பையை மேலே தூக்கிய பொழுது அகப்பைக்கும் சட்டிக்கும் இடையில் கம்பியாய் பாணியில்
விழுந்து இழுபட்டது. அகப்பையோடு அதனை சருவச் சட்டிக்குக் போட்டு நீருக்குள் கை விட்டு
தொட்டுப் பார்த்தாள்.
பார்த்த உடன் ‘இறக்கு இறக்கு நல்ல பதம் விட்டா
முறுகப் போகுது’ என்று பரபரத்தாள்.
கொதிக்கும் பாணியை பயற்றம்மாவிற்குள் ஊற்றி அவளே
பயற்றம் உருண்டைகளாகப் பிடித்துப் போட பெண்கள் வட்டமொன்று அவளைச் சுற்றி அமர்ந்தது.
கொதிக்கக் கொதிக்க மாத்திரள்களைக் கிள்ளியெடுத்து
உள்ளங் கைகளில் வைத்து மூடி மூடித் திறந்தார்கள்.
‘சில பேர் முறுக்குக்குப் பயத்தம் பணியாரத்துக்கெல்லாம்
மஞ்சள் பொடி எண்டெல்லாம் சேர்க்கிறவை.
‘இந்த முறுக்குகளுக்கொல்லாம் சீனிப்பாணி போடுறதுதான்.
ஏலம் கறுவா என்று ஒண்டும் தேவையில்லை. அப்பிடி அதுகள் போடுறது எண்டாலும் பிழைச்சுப்
போடும். அண்டைக்கும் தங்கமணி வீட்டுக் கலியாண வீட்டிலையும் பணியாரத்துக்கு ஏலம், கறுவா,
மஞ்சள்தூள், வனிலா எண்டெல்லாம் போட்டிச்சினம் முறுக்குக்கு. ஆனா பிறகு எண்ணெயுக்க போட்ட உடனை அப்பிடியே உதிந்து போய் சப்பளிஞ்சு போச்சு’
‘அப்பிடியோ? பிறகு?’
‘பிறகு என்ன? பிறகு என்னவோ, மா எல்லாம் போட்டு
சரிக்கட்டப் பார்த்திச்சினம். ஆனா முறுக்கு பிறகும் அவ்வளவு வடிவா வரேல்ல’
‘தட்டிலை வைக்கிற பணியாரமெல்லே?’ (புழுக்கம்)
அதிகமும் உரையாடல் வடிவிலே எழுதப்பட்ட இக்கதையில்
வரும் கிராம மக்களின் இயல்பான உரையாடலுக்கு ஊடாக ஆண்பிள்ளைகளைப் பெற்றவர்களின் எண்ணம்,
பெண்பிள்ளைகளைப் பெற்றவர்களின் மனக்கலக்கம், ஆகியன ஒரு பண்பாட்டுச் செயற்பாட்டின் ஊடாகப்
பதிவாக்கப்பட்டுள்ளது. எண்ணெய்ச்சட்டி வைத்தல், கரைசேர்த்தல் முதலான கிராமிய புழங்கு
சொற்களும் கதையோடு இயல்பாக நடைபோடுவதை அறியலாம்.
“இந்தக் காலத்திலை ஒரு குடும்பத்துக்கு ஒரு பொடியன்
இருந்தாலே காணும். அவன் படிச்சா என்ன, படிக்காட்டா என்ன, வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டா
உழைச்சுக் கொண்டு வந்திடுவான் சகோதரங்களையும் கரை சேர்த்துப் போடுவன்;.” பலகையிலிருந்து பயிற்றம் உருண்டைக்கு மா அளப்பதை
பார்த்துக் கொண்டிருந்த நாகுவிற்கு ஏதோ ஆற்றாமை. குபிரென்று எழுந்து நெஞ்செல்லாம் ஓடி
அடைத்தது. கைக்கு எட்டும் தூரத்தில் கிடந்த விசிறியை எட்டி எடுத்து விசிறிக் கொண்டாள்.
வெளியே வந்து முற்றத்தைப் பார்க்க இறங்கி நின்று
கொண்டாள். பங்குனி மாதம் மதியம் திரும்பி வெகு நேரம் சென்றும் புழுக்கம் குறையவில்லை.
குசினி ஓட்டிற்கு மேலாகத் தெரிந்த வேப்ப மரத்தின் ஒரு இலை கூட அசையவில்லை. (புழுக்கம்)
இக்கதையின் நுண்மையான அவதானிப்பு மனிதர்களின் குணவியல்புகளை
காட்டுவது மட்டுமல்லாமல் அதை இயற்கையுடன் இணைத்துப் பார்க்கும் விதமும் ஆகும். அதை
குந்தவை மிக நேர்த்தியாகக் கொண்டு வந்திருப்பார்.
புழுக்கம் என்பது வெறுமனே சூழலால் ஏற்படுத்தப்படும் புழுக்கம் மட்டுமல்ல. பெண்களின்
மனப்புழுக்கமும்தான். “அப்பனே முருகா என்ரை வீட்டிலை எண்ணெய்ச் சட்டி வைக்க எப்ப விடப்போறாய்?”
என்று கதையை மிக அழகாக முடிப்பார். இக்கதையை பெண்கள் சார்ந்த கதையாகப் பார்க்கின்ற
அதேவேளையில் இதில் வருகின்ற காட்சி வர்ணனைகளும் அது செல்லப்பட்ட விதமும் புழுக்கத்தை
ஒரு பண்பாட்டுப் பதிவு சார்ந்த கதையாகவும் மாற்றிவிடுகிறது. இது குந்தவையின் எழுத்துக்குக்
கிடைத்த வெற்றி என்று கூறலாம்.
4.தனிமனித
உணர்வு
முதுமைப்பருவத்தில் தனிமையில் வாழும் ஒருவரின்
மனஓட்டத்தை அவரின் தனிமைத்துயர் சார்ந்த கதையான ‘பழைய கணக்கு’ வெளிப்படுத்துகிறது.
இந்த மலைகள் எல்லாம் ஏறி இறங்கிய கால்கள் நீண்டதூரம் நடந்து சென்றே பஸ் ஏறிய கால்கள்
பாடசாலைக்கு நடந்து சென்ற கால்கள் உடுப்பிட்டி வல்வெட்டித்துறை தொண்டைமானாறு என சுற்றிச்சுற்றி
நடைபோட்ட கால்கள் இன்று சில அடிகள் எடுத்து வைக்கவே வலியெடுக்கின்றன. என்று முதுமைப்பருவத்தின்
இயலாமையைக் கூறுகின்றது.
“விழிப்புக் கண்டபோது விடிந்து கொண்டு வருவது
தெரி;ந்தது. வலது முழங்காலின் பின்னாலுள்ள வலி தன்னை உணர்த்திக் கொண்டிருந்தது. எழுந்திருக்க
வேண்டும். வலது காலை தரையில் ஊன்றி எழுந்து நிற்கும்போது அந்த வலி கணுக்கால் வரை ஓடியிருக்கும்.
இடது காலின் நகர்த்தலுக்கு ஏற்ப வலது காலையும் தரையோடு ஒட்டியபடி நகர்த்த வேணும். அருகிலிருந்த
மேசையைப் பிடித்தபடி கதவை மெதுவாகத் திறந்து கைத்தடியைத் தேடி எடுக்க வேண்டும். இந்தக்
கஷ்டங்களை மறந்து இன்னும் சிறிது நேரம் படுக்கையில் படுக்க வேண்டும் போலிருந்தது. கண்ணை
மூடிக் கொண்டபோது மேடும் பள்ளமுமாய் இருந்த நிலத்தில் விழுந்தெழும்பி ஓடுவதுபோல் ஒரு
காட்சி வந்தது…… அவள் கட்டிலில் முதுகுச் சட்டத்தைப் பிடித்துக் கொண்டு மெதுவாகக் காலை
நகர்த்திக் கொண்டு கதவருகே போனாள். வெளியே கீழே விழுந்து கிடந்த கைத்தடியை மெல்லத்
தூக்கி எறிந்து நடக்கையில் ஏழெட்டு வருட கடைசி வாழ்க்கையில் கைத்தடியுடன் நடந்த தமிழ்ப்பேராசான்
நினைவுக்கு வந்தார்.” (பழைய கணக்கு)
இப்படியெல்லாம் நடந்த கால்கள் இன்று வீட்டுக்குள்ளே
முடங்கிக் கிடக்கின்றன. என்று பழைய கணக்குகள்… பழைய கணக்குகள்தான்! அவற்றைப் புதிய
வரவுகளாக்க முடியாது என்று எழுதுகிறார். ஒரு வகையில் குந்தவை இக்கதையில் தன்னையே பிரதிசெய்கிறார்
என்று கூறலாம்.
ஒளிப்படம் : சாந்தன் சாந்தகுணம்
‘ஒரு நாள் கழிந்தது’ என்ற தலைப்பில் புதுமைப்பித்தன்
முதல் வேறு சில எழுத்தாளர்களும் எழுதியுள்ளனர். சொந்தக் கிராமங்களை விடுவிக்குமாறு
கோரி முகாம்களில் வாழும் மக்களின் ஒரு நாளில்
நடைபெறும் சம்பவங்களை வைத்து இச்சிறுகதையை எழுதியிருப்பார்.
கண்ணில் ஏற்பட்ட பிரச்சினையை காட்டுவதற்கு வைத்தியசாலை
சென்ற மனிதர்களை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கதை. நோயாளியின் அவஸ்தையைப்
பற்றி சிறிதும் யோசிக்காமல் அவர்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பாடம் எடுத்தலும்
யாழ் நகர வர்ணணையும் மிக விலாவாரியாகச் சொல்லப்படுகின்றன. அக்காலகட்ட யாழ்ப்பாணத்தை
தனது எழுத்துக்களில் ஒரு புகைப்படக் கலைஞன் போல இக் கதையில் கொண்டுவருவார்.
பொருட்கள் வாங்க வெளியே சென்றவர் வீடு திரும்பும்போது
தவற விட்ட ஒரு பொருள் பற்றி யோசிக்கிறார். அதன் பின்னணியில் நடக்கும் கதையே ‘திராட்சை’.
ஒருவரில் நாங்கள் குற்றம் காண்பதற்குப் பதிலாக அந்தக் குற்றம் நடைபெறாமல் எப்படித்
தவிர்க்கலாம் என்று சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது என்பதையே ‘திராட்சை’ சொல்கிறது.
இவை தவிர ‘புகைநடுவில்’ என்ற கதை பல்கலைக்கழகத்தில்
எதிரெதிர் கருத்துநிலையில் இருந்தவர்களின் பிற்கால மனநிலையைக் காட்டுவதாகும். பணியில்
முறைகேடாகச் செயற்பட்டபடியால் வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டவன், முன்னாள் பல்கலைக்கழக
நண்பனிடம் உதவிகேட்டு வந்திருக்கிறான். இக்கதையை யோகம் இருக்கிறது கதையுடன் இணைத்துப்
பார்க்கமுடியும் என்று எண்ணுகிறேன்.
வித்தியாசமான வடிவத்தில் எழுதப்பட்ட கதைகளெனில்
அவை குறுக்கீடு, ஆநிரைகள், அரசியின் முத்துமாலை ஆகியனவாகும். குறுக்கீடு என்ற கதையில்
சொல்லவரும் விடயத்தைப் பூடகமாகக் குறிப்பிடுவார். மொழி இயல்பான நிலையில் இருந்து மிக
இறுக்கமாக வந்திருக்கிறது. ஆநிரைகள் சிறந்ததொரு குறியீட்டுக் கதையாக அமைந்துள்ளது.
ஆநிரைகள் - மேய்ப்பர்கள்; படைகள் - வழிநடத்துபவர்கள்
என்ற இரண்டு நிலைகளையும் காட்டுவார். மாடுகள்தான் பாவம் என்பார். கோபம், எள்ளல், விமர்சனம்
முதலானவை இக்கதையில் வெளிப்படும். அரசியின் முத்துமாலை உருவகக் கதையாக அமைந்துள்ளது.
தொகுப்பு
கதைக்கரு, கதை சொல்லும் நேர்த்தி, புலக்காட்சி
அனுபவம், அது எடுத்துரைக்கும் மொழி சார்ந்து குந்தவையின் கதைகள் அவரின் எழுத்து வல்லபத்தை
நிலை நிறுத்தக் கூடியவையாக அமைந்திருக்கின்றன.
60 களில் எழுத வந்த குந்தவை, யதார்த்தத்தை மிகக்
கராராகப் பற்றிப் பிடித்தவர். இதனை அவர் ஆரம்பகாலத்தில் எழுதிய ஆறு கதைகளிலும் கண்டு
கொள்ளலாம். சொல்லவந்த விடயத்தை அல்லது சம்பவத்தை சிதைவுபடாமல் விபரிப்பது குந்தவைக்கு
கைவந்த கலையாக இருந்திருக்கிறது. அவற்றில் இருக்கும் சமூக விமர்சனமும் எள்ளலும் அவரின்
தனித்துவமான எழுத்துச் செல்நெறியாக இருந்துள்ளது.
90களின் பின்னர் எழுதப்பட்ட
கதைகள், அக்காலகட்ட பொதுஓட்டத்தில் இயல்பாக இணைகின்றன. போர், மக்களின் வாழ்வில் எத்தனைய
சிதைவுகளை ஏற்படுத்தின என்பதை அகமும் புறமும் வெளிப்படும் வகையில் பல கதைகளில் எழுதியுள்ளார்.
போரில் ஈடுபடும் இருசாராரையும் விமர்சிப்பது குந்தவையின் நோக்கம் அல்ல. ஆனால் போகிற
போக்கில் ஒரு பெருங்காற்று மரக்கொப்பை முறித்து விழுத்திவிட்டுச் செல்வதுபோல சமூகத்தின்
பொதுப்புத்தியை கதையின் போக்கிற்கு ஏற்றாற்போல் சொல்லிவிடுவார். அந்தக் கூற்றுக்கள்
வாசகர் மனதில் நியாயமான கூற்றுக்களாகவும் தென்படும்.
குந்தவையின் கதைகளில் காணப்படும் தனித்துவமான பண்புகளில்
முதன்மையானது கதை சொல்லும் நேர்த்தி. இது குந்தவைக்கே உரிய தனிப்பாணியாக பல கதைகளில்
வெளிப்படுகின்றது. திருவோடு, பயன்படல், யோகம் இருக்கிறது முதலான கதைகளைச் சொல்கின்றபோது
இயல்பாகவே சமூகத்தின் பல தரப்பட்ட மனிதர்களின் இயல்புக்கு மாறான செயற்பாடுகளை எள்ளல்
செய்வார். எள்ளல் என்பது கேலி செய்வது அல்ல. அதுவும்கூட சித்தர் பாடல்கள்போலவே எதிர்ப்பின்
வடிவம்தான். ஈழத்தில் எஸ்.பொ, அ. முத்துலிங்கம், சாந்தன், ஷோபாசக்தி, கலாமோகன், சயந்தன்,
தெய்வீகன் முதலானவர்களின் எழுத்துக்களில் இந்த நடையைக் காணலாம்.
களம் சார்ந்த புலக்காட்சியை வெளிப்படுத்துவது குந்தவை
கதைகளின் மிகப் பலமான அம்சமாகக் கருதலாம். கதை வாசிப்போரை புதுமைப்பித்தன் போலவே கதைகளுடன்
கூடவே அழைத்துச் செல்லும் பாங்கு மொழியூடாகச் சிறப்பாக வெளிப்படக்கூடியது. சில கதைகளில்
புதிது புதிதாக பாத்திரங்களை உருவாக்கிவிட்டுச் சென்று கொண்டேயிருப்பார். சிலம்பில்
கோவலன் கண்ணகியை மதுரைக்கு கால்நடையாக அழைத்துச் செல்லும்போது அவன் செல்லும் இடங்களில்
எல்லாம் காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பதை இளங்கோவடிகள் கூறுவதுபோலவே. குந்தவையும் புலக்காட்சி
வர்ணனையூடாக சொல்லிக்கொண்டே செல்வார். இந்த அம்சங்களை வல்லைவெளி, இணக்கம், பயன்படல்,
பெயர்வு, புழுக்கம், கோழிக்கறி முதலானவற்றில் கண்டுகொள்ளலாம்.
அழகான மொழிநடை அவருக்கு வாலாயமாகவுள்ளது. கதைமொழியைக்
கையாளுகின்ற வேளைகளில் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கை மிக அநாயாசமாக பாத்திரங்கள் ஊடாகக்
நெஞ்சுக்கு நெருக்கமாக நகர்த்துவதை அவதானிக்கலாம். அந்த மொழியின் ஊடாகவே வாழ்வையும்
உணர்வையும் வரலாற்றையும் பண்பாட்டையும் இணைத்துவிடுகிறார் குந்தவை.
தன்னுடைய முதுமைப் பருவத்திலும் தொடர்ச்சியாக எழுதி
வரும் குந்தவையின் கதைகள் இந்த மண்ணின் கதைகள். இந்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றிய
கதைகள். உயிரோட்டமும் சம்பவ விபரிப்பும் எளிமையான மொழியும் கொண்டவை. இக்கதைகள் சகமனிதர்கள்மீது
நாம் கொள்ளவேண்டிய பரிவை, ஆதரவை, மற்றவரின் துன்பத்தை உணர்ந்து கொள்ளவேண்டிய மனநிலையை
வேண்டி நிற்பவை. மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கும் குந்தவையின் எழுத்துக்கள்
வாசிக்கப்படவேண்டும். அவை நாம் கடந்து வந்த காலங்கள் பற்றிய பதிவுகளாக அமைபவை. ஈழத்து
இலக்கியத்திற்கு வளமூட்டக்கூடியவை. ஈழத்துப் புனைகதை வரலாறெழுதுகைக்கு படிகளாகக் கூடியவை.
ஜீவநதி குந்தவை சிறப்பிதழ்,
இதழ் 183, ஐப்பசி 2022