Friday, March 28, 2025

காலவெளியைக் கடக்கும் கதைகள்


தேவகாந்தனின் ‘சகுனியின் சிரம்’ தொகுப்பை முன்வைத்த பார்வை

- சு. குணேஸ்வரன்

 

'நிதானமாக என்ஜினை பகுதி பகுதியாகக் கழற்றி வைப்பதுபோல, தன் நடத்தையின் கூறுகளை கழற்றிவைத்து, தன் வாழ்வைப் பாதித்த புள்ளியை அவர் அடையாளம் காணமுனைந்தார்.' - இது 'சகுனியின் சிரம்' கதைப்பிரதியில் பாத்திரம் ஒன்றைப் பற்றிய தேவகாந்தனின் கூற்றாகும். இதனை ஒன்றுக்கு மேற்பட்ட பல கதைகளுக்குப் பொருத்திப் பார்க்கலாம். இத்தொகுதியில் சிவகாமி நானுன் சிதம்பரனே, தரிசனம், விடுகதை, நாகமணி, காலாதீதம், முப்பது ஆண்டுகள் பிந்திப் பெய்த மழை, விளாத்தி நிலம், சகுனியின் சிரம், யாவினும் ஆகிய கதைப்பிரதிகள் அமைந்திருக்கின்றன. காலவெளியைக் கடந்துபோன நினைவுகளை மீட்டுப்பார்த்தல், வழிவழியாக வந்த அடையாளத்தைத் தேடுதல், தமது சுயநலத்திற்காக மற்றவரைப் பலியிட்ட மனிதர்கள் குறித்த கேள்விகளை எழுப்புதல் ஆகியவற்றை சரடாகக் இக்கதைகள் கொண்டுள்ளன.

காலவெளியைக் கடந்துபோன நினைவுகளை மீட்டுப்பார்க்கும் கதைகளாக முப்பது ஆண்டுகள் பிந்திப்பெய்த மழையும்  காலாதீதமும் அமைந்துள்ளன. இவற்றை ஒருவகையில்  காமம் வற்றி வடிந்துபோன கதைகள் என்றும் கூறலாம். புகலிட வாழ்விலிருந்து இடையீடாக ஊருக்கு வந்துபோன சிவம் மற்றும் ஊரில் கணவனால் கைவிடப்பட்ட அல்லியின் கதை இங்கு சொல்லப்படுகிறது. உணர்ச்சிகள்  பொசுங்கிப்போன வாழ்வு சிவத்தினுடையது. நிராகரிக்கப்பட்ட வாழ்வு அல்லியுடையது. இருவரின் உணர்வுக் கோலங்களும் சந்தித்த தருணங்களை மெல்லிய மழைச்சாரலின் தூறலாக தேவகாந்தன் சொல்கிறார்.

சொல்லும் முறையாலும் மெல்லுணர்வுகளைத் தீண்டும் வார்த்தைகளாலும் கதை கட்டமைக்கப்பட்டுள்ளது. கதைத்தலைப்பும் கதையின் முடிவும் வாசகரிடம் கொடுப்புக்குள் சின்னச் சிரிப்பை வரவழைக்கக்கூடியன.

இளவயதில் காதலர்களாக இருந்தவர்கள், அவர்களின் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களான பின்னர் சந்திக்கின்றனர். அவளுடன் சிலவற்றை ஆசுவாசமாகக் கதைக்கவேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். அவள் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். 'கம்பஸில இருக்கேக்கையே நல்லாய் தண்ணிபோடத் துவங்கிட்டாய்தானே? என்ன வேணும் குடிக்க?' என்கிறாள். காலவெளியை மனத்தால் கடந்த அவரால் உடலால் கடக்க முடியுமா? கனவுகளையே மறந்த உடலில் நனவின் வீறு நின்றிருக்குமா? தான் இட்டிருப்பது ஒரு வேஷமென்பது அவருக்குமா புரியாது?  அவன் கூறுகிறான். 'ஏலுமெண்டா ஒரு வெறுங்கோப்பி தா, சீனி போடாமல்' இது காலாதீதத்தில் வருகின்றது.

‘முப்பது ஆண்டுகள் பிந்திப் பெய்த மழை’யிலும்,  அங்கிள் உங்களுக்கு மழை பிடிக்கும் எண்டீங்கள் இப்ப மழை பெய்யுது என்று நடுச்சாமத்தில் எழுப்பியபோது எரிச்சலுடன் அவனிடமிருந்து அலுத்த வார்த்தைகள் அறையுள்ளிருந்து வெளிக்கிட்டன. 'மழையாம் மழை... இப்ப பெய்ஞ்சென்ன, பெய்யாம விட்டென்ன?' ஒரு குழந்தையின் அழுகுரலாய் அது அவள் செவியில் ரூபம் மாறி ஒலித்தது. இரண்டு கதைகளிலும் உணர்வைத் தொற்றவைக்கக்கூடிய வார்த்தைகளை தேவகாந்தன் கொண்டு வந்திருப்பார். காலவெளியை மனத்தால் கடந்த அவர்களால் உடலால் கடக்க முடியவில்லை என்பதைத்தான் இவ்விரண்டு கதைகளும் காட்டுகின்றன.

இதேபோல் ‘விடுமுறை’ என்ற மற்றொரு கதையிலும் பால்ய வயது நினைவு மீட்டல் இருக்கிறது. சில மனிதர்களுடைய வாழ்க்கை ஒரு புதிர்போலவே அமைந்திருக்கும். சிலவேளைகளில் அவற்றுக்கு விடை காணமுடியாது. விடை தெரிய வருபோது அவர்களின் வாழ்வு இற்றுப்போனதாக ஆகிவிடுகின்றது. கடந்துபோனவை போனவைதான். அவற்றை மீளவும் நினைக்க மட்டுமே முடியும் என்று 'இனி நினைந்திரக்கமாகின்று...' என்ற சங்கப் புறப்பாடல் கூறுவதுபோல் அமைந்துவிடுகிறது.

அடையாள அழிப்பு, வழிவழியான கையளிப்புகளை மறுக்கும் செயற்பாடு ஆகியவற்றுக்கு எதிரான கருத்துக்கள் காலத்துக்குக் காலம் பலராலும் வலியுறுத்தப்படுவனதான். ஆரம்பகால வன்னிக் குடியிருப்புகள், வழிபாட்டு நடைமுறைகள் ஆகியவற்றைக் கூறுகின்ற ‘நாகமணி’, ‘தரிசனம்’ ஆகிய கதைகளை இவற்றோடு பொருத்திப் பார்க்கலாம். ஒரு வகையில் மரபு, நம்பிக்கை, தொன்மம், அடையாளம் சார்ந்தவையாக அவை அமைந்துள்ளன.

நாகமணி என்ற கதையில் பாரம்பரிய தமிழ் வைத்தியமுறை சொல்லப்படுகிறது. அக்காலத்தில் மிகத் தேவையாக இருந்த விஷகடி வைத்தியமும் அதனுடன் சார்ந்த வாழ்வுமுறைகளும் கூறப்படுகின்றன.  பாட்டன் வழியிருந்து பெற்றுக்கொண்ட கதைமரபுகள் இங்கு மீள நினைவூட்டப்படுகின்றன. நாகபாம்பு, நாகமணியைக் கக்கிவிட்டு அதன் வெளிச்சத்தில் இரைதேடும் என்பது பற்றிய கதை இங்கு சொல்லப்படுகிறது.

அதிஷ்டமாக நாகமணி ஒன்று கிடைத்தால் என்னவெல்லாம் செய்யலாம். எப்பொழுதும் நிறைவேறாத, நிறைவேற்ற முடியாத விரும்பங்களுடன் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத்துடன் வாழ்க்கையோட்டுபவர்களுக்கு எழக்கூடிய நியாயமான ஆசைதான். 'இரண்டு மனைவியரும், நான்கு பிள்ளைகளும் வாழ்ந்துகொள்ள ஒரு பெரிய வீடு;  வேண்டிய அணி மணிகள்;  மீதியில்  கொஞ்சத்தை சொந்தங்களுக்கு  உதவலாம்; இன்னும் கொஞ்சத்தை ஊருக்கும் உதவமுடியும்..' கிட்டத்தட்ட சோமசுந்தரப் புலவரின் 'பவளக்கொடி' பாடல் போலத்தான். மிக எளிய வாழ்வு வாழும் மாந்தர்களின் விருப்பங்கள்தான் இவை. அந்த ஆசைகள் நிறைவேறினவா என்பதுதான் கதை.

‘தரிசனத்தில்’ வன்னிப் பெருநிலப் பரப்பில் இடம்பெற்ற குடியேற்றங்கள், விளைநிலங்களின் பயனாக இடம்பெற்ற கிராமிய வழிபாடு பற்றிக் கூறப்படுகிறது. இங்கு மக்களின் வழிவழியான வழிபாட்டு மரபு சொல்லப்படுகிறது. காடுகள் திருத்தப்பட்டு பயிர் செய்வதற்கு ஏற்ற நிலங்கள் ஆக்கப்படுகின்றன. படையலை ஏற்க வன்னித் தெய்வம் நாகத்தில் ஊர்ந்து வந்ததை பக்தர்கள் கண்ட காட்சியாக விரிகிறது கதை. நம்பிக்கையும் வழிபாடும் மக்களின் தொன்மையான வாழ்வும் வழிவழி வந்ததற்கு அடையாளம் இதுபோன்ற கதைகள்தான்.

இன்றைய நிலையில் இக்கதைகளை வேறொரு விதமாகப் புரிந்து கொள்ள வழிவகுக்கிறார் தேவகாந்தன். இந்த நிலங்கள் எமது மக்களின் பூர்வீகமானவை. அந்நிலங்கள் மக்களின் ஆட்சியுரிமைக்கு உரியவை, அங்கு மக்கள் தங்களுக்குரிய பண்பாட்டு மரபுகளுடன் வாழ்ந்தவர் - களென்ற சமூக இயங்கியல் சொல்லப்படுகிறது.

அதிகாரத்தில் இருப்பவர்களின் அநுசரனையோடு அந்த நிலங்களைக் கைப்பற்றுவது மட்டுமன்றி வழிவழியான நம்பிக்கைகளையும் மறுத்து புதிய அடையாளங்களை உருவாக்குபவர்களிடம் கேள்வி கேட்பனவாக இக்கதைகளை வாசிப்புக்கு உட்படுத்த முடியும்.

'சொற்கள் சுருண்டு சுருண்டு காற்றிலேறி கோயிற் சூழலெங்கும் அலைந்து திரிந்தன.' 'உலையேறிய வளந்தடுப்புகளில் தீயின் மஞ்சள் கிரணங்கள் விசிறத் தொடங்கின.' முதலான எடுத்துரைப்புகள் ஈடுபாட்டுடனான வாசிப்பைத் தூண்டக்கூடியன.

தமது சுயநலத்திற்காக மற்றவரைப் பலியிட்ட மனிதர்கள் குறித்த கேள்விகளை எழுப்பக்கூடிய கதைகளையும் தேவகாந்தன் இத்தொகுப்பில் தந்திருக்கிறார். ஒருவருடைய வாழ்வின் திசைமாற்றம் என்பது அவரால் ஏற்படுத்தப்படுவதல்ல. உறவாடிக் கொண்டிருக்கும் சமூக மாந்தர்களாலும் ஏற்படுத்தப்படுவனவே என்பதை ‘சிவகாமி நானுன் சிதம்பரனே’, ‘விளாத்திநிலம்’ ஆகியன காட்டுகின்றன. சூழலியல் வாழ்வியல் நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவித்தாலும் நெடுமூச்சு விடக்கூடிய சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது மனிதன் நிம்மதியடைகின்றான். அந்த நிம்மதியும் குலைக்கப்படும்போது பல்வேறு கட்டுக்களால் மனிதன் இறுகிப் போகின்றான். மனிதர்களை விட்டு எல்லையில்லாத் தூரத்திற்கு ஒரு பரதேசிபோல சஞ்சாரம் செய்கிறான். அவ்வாறான ஒரு பாத்திரவார்ப்பாக பரமகுரு டெய்சி வாழ்வை ‘சிவகாமி நானுன் சிதம்பரனே’ கதையில் தேவகாந்தன் காட்டுகிறார்.

டெய்சியின் உறவினர் மற்றும் மாமியாரால் படிப்படியாக வலிந்து திணிக்கப்பட்ட ஆலோசனைகள் டெய்சி பரமகுரு குடும்பவாழ்வைச் சிதைகின்றன. பரமகுருவுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும்போது அவன் அதிலிருந்து விலகிவிடுகிறான்.  டெய்சிக்கும் அந்த வாழ்வு நெருக்கடியைக் கொடுக்கிறது. அதிலிருந்து தப்பிக் கொள்வதற்கு ஓர் உபாயமாக தனது வேலையைக் காரணங் காட்டுகிறார் பரமகுரு. புலம்பெயர்ந்த குடும்ப உறவுகளில் ஏற்படுகின்ற இவ்வாறான நுண்மையான சிக்கல்களை தமிழ்ச் சிறுகதையுலகுக்குள் புதிய சூழலியல் வாழ்வியல் அனுபவங்கள் ஊடாகக் கொண்டு வருகிறார் தேவகாந்தன்.

விளாத்திமரம் என்ற கதையும் வண்ணக்கிளி என்ற பெண்ணின் வாழ்வு பலியிடப்பட்ட கதையைச் சொல்கிறது. வண்ணக்கிளிக்கு தகப்பன் யாரென்று தெரியாது. அடிக்கடி வந்துபோகும் மனிதர்கள். அவளின் தாயும் ஒருநாள் காணாமற் போகிறாள். அதேபோல் தமக்கையும் காணாமற் போகிறாள். இவற்றுக்கு இடையில் தனித்த வாழ்க்கை வண்ணக்கிளிக்கு என்றாகிறது. அவள் கணவன் கிழமைக்கு ஒருமுறையாக வந்தவன் பின்னர் மாதத்திற்கு ஒருமுறையாக வந்துபோகும் தருணங்கள் ஆகிவிடுகின்றன. ஒரு புயலோடு புயலாக அவள் வீடு சிதைந்து விடுகிறது. வண்ணக்கிளியும்கூட காணாமற் போய்விடுகின்றாள். வண்ணக்கிளிகளை இந்த வெக்கை நிறைந்த விளாத்தி நிலங்கள் உற்பத்தி செய்து கொண்டுதான் இருக்கின்றன என்று சொல்வார் தேவகாந்தன்.

தமது சுயநலங்களுக்காக மற்றவர்கள் வாழ்வைச் சிதைக்கின்ற காரியங்களை இந்த மனிதர்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை இதுபோன்ற கதைகள் கூறுகின்றன. இதே கதைக்கூறுகளைக் கொண்டமைந்தாலும் தொன்மமும் நவீன சொல்முறையும் கொண்ட ‘சகுனியின் சிரம்’, ‘யாவினும்’ ஆகியவற்றையும் இந்த உணர்வுநிலையில் நோக்கலாம்.

மகாபாரதக் கதைக்கூறுகளை மீளவும் மீளவும் தன் கதையில் கொண்டு வருவதில் மிகுந்த விருப்புடையவர் தேவகாந்தன். நாங்கள் அறிந்த சகுனியைப் பார்க்கும் கோணம் இது. பகடையாட்டத்திலும் சூதுபுனைதலிலும் பேர் பெற்றவன் சகுனி. அவன் முகம் மனித முகமாகவன்றி உலக மாயையின் ரூபமாக அவனுள் விஸ்வரூபித்தது. காந்தாரி சகுனியை நோக்கிக் கூறுவாள் 'எல்லாம் நீ ஏற்கனவே அறிந்தாய். இருந்தும் ஏன் மறைத்தாயென நானறியேன்.' சகுனி தன் பேராசைக்கு சகோதரியைப் பகடைக்காயாக்கினானா என்பதை இக்கதை பேசுகிறது.

தொகுப்பில், ‘யாவினும்’ என்ற அரங்காடற் பிரதி ஒன்று அமைந்துள்ளது. ஓவியத்தை வரைந்த ஓவியனுக்கும் அவனது உதவியாளனுக்கும் இடையிலான உரையாடற் பிரதி அது, சிலுவையில் மரித்த யேசுவை கன்னிமேரி மடியில் ஏந்தி வைத்திருக்கும் 'பியெதா' சிற்பத்தில்கூட மைக்கல் ஏஞ்சலோ தோற்றுப்போன இடமுண்டு. ஆனால் நான் வரைந்த பெண்கள் ஓவியம் வெற்றி பெற்றுள்ளது என்று உரையாடிக்கொண்டிருக்கும்போது ஓவியத்திலிருக்கும் பெண்கள் உயிர்த்து வந்து தங்களுக்குரிய முழுமையான விடுதலையை நீங்கள் வரைந்த ஓவியத்தில் தரவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர். இவ்வாறான உரையாடல் ஊடாக இந்த அரங்காடற் பிரதியை அமைத்திருப்பார்.

பெண்களுக்கு ஓவியத்தில் கூட முழுமையான விடுதலையை கொடுக்க முடியாதவர்களாக இருக்கும் நீங்கள் எவ்வாறு மனிதர்களுக்கு உண்மையான விடுதலையைக் கொடுப்பீர்கள் என்றவாறான வினாவை எழுப்புவதாக இப்பிரதியை எனது வாசிப்பில் புரிந்து கொள்ளமுடிகிறது.  மிகையதார்த்தவாத (Surrealism)  கோட்பாட்டின் சில கூறுகளை இப்பிரதி கொண்டிருப்பதும் உரையாடலுக்கு வழிவகுக்கத்தக்கதாக அமைந்திருக்கிறது.

இலங்கைத் தமிழ்ப் படைப்புலகு தந்த முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர் தேவகாந்தன். தமிழகத்தில் வாழ்ந்தபோது ‘கனவுச்சிறை’ என்ற மகாநாவலைத் தந்தவர். ஈழம் தமிழகம் புகலிடம் என்ற வாழ்வியற் சூழலிலே இனவுணர்வின் பின்னரான தமிழர்களின் வாழ்வு அலைக்கழிக்கப்பட்டிருந்தது. அந்த அலைக்கழிவை மட்டுமல்லால் வேறு பல படைப்புக்களையும் தந்தவர். தொன்மம், வரலாறு, புராணிகம், சமகால வாழ்வு என்ற பல்வேறு கோணங்களில் அவரது படைப்புலகம் விரிந்துள்ளமையை அவரது புனைவுகளை வாசிப்போர் உணர்வர். சகுனியின் சிரம் கதைத்தொகுதியானது கடந்துபோன, சிதைந்துபோன, மறுதலிக்கப்பட்ட வாழ்வின் பல்வேறு சிக்கல்களைக் காட்டும் கதைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. அவருக்கேயுரிய தனித்துவமான கதைமொழி மிக ஆழமான உணர்வுகளை வாசகர்களிடையே தொற்றவைக்கக்கூடியனவாக உள்ளன. மீளவும் மீளவும் ஒரே நேர்கோட்டுப் பாணியில் அல்லாது புதிய உத்திகளையும் தனது கதைகளில் கொண்டு வருபவர். வாசிக்கவும் விவாதிக்கவும் தமிழ் இலக்கியத்திற்கு செழுமையூட்டக்கூடியதாகவும் தேவகாந்தனின் எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன என்று கூறலாம்.

நன்றி : தவிர, இதழ் 6, 2025.

---